“வசன், வெளியே என்னடா பண்ற காலங்கத்தாலேயே ? உள்ளே வந்து பல்ல விளக்கி புஸ்தகத்தைக் கையில் எடுக்குறத விட்டுட்டு” தாய் கல்யாணியில் குரல்.
சட்டென எழுந்துத் தன் தாயைக் கட்டியணைத்துக் கொண்டான். காலைக்கடன்களை முடித்துவிட்டு, புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு மீள்பார்வை செய்ய அமர்ந்தான். விடுமுறையில் கொஞ்சம் ஆட்டம் போடலாம் என்று தான் நினைத்தான், ஆனால் முடியவில்லை. சிறுவயதிலிருந்தே வசன்ராஜ் எனும் பெயரைச் சுருக்கி வசன் என்றே அழைக்கப்பட்டான். தற்போது தன் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றும் வல்லமை கொண்ட எஸ்.பி.எம். தேர்வை நோக்கி வீரநடை போட்டுக் கொண்டிருந்தான்.
அவன் பயிலும் இடைநிலைப்பள்ளியின் நம்பிக்கை நட்சத்திரங்களுள் வசனும் ஒருவன். தாய் கல்யாணி கையில் காப்பியுடன் கண்ணெதிரில் வந்து நின்றாள். என்றும் இளமை தழுவும் முகம் கொண்ட தன் தாய ஏறெடுத்துப் பார்த்தான் வசன். தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பாள். ஊர்வம்பு என்ற சொல்லையே தன் அகராதியில் கண்டதில்லை. அன்பு காட்டுவதிலும் குழந்தைகள்பால் அக்கறை கொள்வதிலும் அலாதி விருப்பம்.
“டேய், ஒழுங்கா படிக்கிற வேலைய பாருடா… முன்ன மாதிரி அந்த திவ்யா பிள்ளையோட ஊர் சுத்துற வேலையெல்லாம் பார்க்காதே. உனக்காகவே உயிர கையில பிடிச்சிக்கிட்டு வாழுற என்னைக் கொஞ்சமாவது நினைச்சிப்பாரு”.
சரி என்பதற்கு அடையாளமாக தலையை ஆட்டினானே தவிர தன் வாயிலிருந்து சொல் எதுவும் உதிரவில்லை. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குமல்லவா? நெஞ்சில் நிழலாடுயது அந்த நாளின் நினைவு.
திவ்யாவுக்கும் வசனுக்கும் ஒரு வயது வித்தியாசம்தான். புதிதாக தான் பயிலும் இடைநிலைப்பள்ளிக்கு மாற்றலாகி வந்த திவ்யா, வசனின் பாலர்ப்பள்ளி தோழியாவாள். காதலும் நட்பும் ஒன்றல்ல, வேறு என்பது வாழ்வில் முதிர்ச்சியடைந்தவர்களுக்குத் தெரியும். சின்னஞ்சிறுசுகளுக்குப் புரியுமா? புரிந்தான் ஏன் காதல் எனும் கோடரியைத் தூக்கி காலில் போட்டுக்கொண்டு துடிக்கிறார்கள்! ஆங்கிலத்தில் ஏதோ ‘மங்க்கி லவ்’ என்பார்களே, அதுதான் போலும்.
திவ்யா-வசனின் காதல் காவியம் தொடர்ந்தது. விரைவு பேருந்தின் சக்கர வேகத்திற்கு இணையான காலதேவதை தன் கடமையில் கண்ணியம் காத்தாள். இதற்கிடையில் அம்மன் கோவிலில் வருடாந்திர திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அச்சமயத்தில் பள்ளி விடுமுறையாதலால் திவ்யாவும் வசனும் ஒருவரையொருவர் சந்தித்து ஒன்றரை மாதங்கள் சென்றிருந்தன. திவ்யா-வசனின் காதல் விவகாரம் ஏற்கனவே இருவரின் பெற்றோர் காதுகளுக்கு லேசாக எட்டியிருந்தது.
ஜே ஜேவென திரண்டு புற்றீசலைப் போன்றிருந்த மக்கள் கூட்டத்தின் இடையில் வசனின் இரு விழிகள் தன் இதய கள்ளியை வலை வீசிப் பிடித்தன. கண்ணால் கண்டதும் நலம் விசாரிக்க முனைய, அக்கன் பக்கத்தில் நிறைய பேர் சூழ்ந்திருந்தனர். எனவே, வசனும் திவ்யாவும் அவ்வளவாக ஆள்மாட்டமில்லாத ஒரு கடப் பகுதிக்குச் சென்றனர். அந்த கூட்டத்தில் யாரும் அவர்களைப் பொருட்படுத்தாவிடினும், மகளக் காணோமே என தேடிச் சென்ற காமாட்சியின் கண்ணில் இவர்கள் இருவரும் உரையாடும் காட்சி தென்பட்டது.
“னான் உங்கமேல உயிரையே வச்சிருக்கேன் வசன். தயவு செய்து எந்த நிலையிலும் என்னை விட்டு பிரியாதீங்க. நம்ம காதல் கடைசி வரைக்கும் ஜெயிக்கணும்”.
“ஆமா திவ்யா. என்னால உன்ன அப்பவுமே மறக்க முடியாது. நீதான் என் வாழ்க்கையில் எல்லாமே.”
திவ்யாவின் தாயான காமட்சியின் வேல்விழி பார்வை அகத்தில் நுழைந்து முள்ளாய்த் தைத்து குருதி வடியச் செய்தது. காமாட்சி ஒரு சந்தேகப் பேர்வழி. மகளின் காதல் விவகாரம் தெரியவர ஒரு ருத்ர தாண்டவமே ஆடினாள். விஷயம் ஊரெல்லாம் பரவியது. வசன், திவ்யாவின் பெற்றோர்கள் பள்ளி வாசலில் தத்தம் மக்களுக்கு நீதி கேட்டு வந்த அபலை பெற்றோராக வடிவெடுத்து நின்றனர்.
பள்ளியின் தன்முனைப்பு ஆசிரியர் சிவலிங்கம், “வணக்கம். வாங்க, உள்ளே வந்து உட்காருங்க” என்று பெற்றோரை அமரச் செய்தார். மெதுவாக தமது பேச்சை ஆரம்பித்தார். “இங்க பாருங்க திவ்யா – வசன் இரண்டு பேருமே நல்லா படிக்கிற பிள்ளைங்க. அதுவும் திவ்யா இந்த பள்ளிக்கு இரண்டு வருடத்துக்கு முன்னாலேதான் மாற்றலாகி வந்தாங்க. பெற்றோரா இருந்து பிள்ளைங்கலோட நடவடிக்கைகளை நீங்க கவனிச்சிங்களா இல்லையான்னு என்னைத் தெரியாதுங்க. ஆனால், கோவில் திருவிழாவில் இவங்க இரண்டு பேரும் தெருக்கடைக்கிட்ட சந்திச்சு பேசிக் கொண்டிருந்ததை நானும் தற்செயலைப் பார்த்ததனாலதான் இன்னிக்கு உங்கள பள்ளிக்கு கூப்பிட வேண்டிய கட்டாயம் உண்டாயிற்று. திருமதி காமாட்சி, இந்த விஷயத்தையொட்டி நீங்க வசன் மேலேதான் முழி தவறுன்னி நினைச்சு அவனை ஊர்மக்கள் மத்தியில் அவமானப்படுத்த்யிருக்கீங்க. நீங்க அப்படி நடந்துக்கிட்டதை நினைச்சா எனக்குக் கொஞ்சம் வருத்தமா இருக்கு. சரி அதை விடுங்க. இந்த விஷயம் பள்ளிக்கு வெளியில நடந்திருந்தாலும் ஓர் ஆசிரியர் என்கிற முறையில் உங்க ரெண்டு பேரோட பிள்ளைங்களையும் நல்வழிப் படுத்த வேண்டுமென நினைக்கிறேன். நான் உங்க பிள்ளைங்க விஷயத்தில் தேவயில்லாம மூக்கை நுழைக்கிறதா நெனைச்சா என்னை தயை கூர்ந்து மன்னிச்சிடுங்க. நீங்க கொஞ்சம் எடுத்துச் சொன்னா கண்டிப்பா உங்க பிள்ளைங்க கேட்பாங்க. அவங்க ரெண்டு பேருக்கும் நல்ல எதிர்காலம் இருக்கு”.
ஏறக்குறைய அரைமணி நேர உரையாடலுக்குப் பின் பள்ளி ஆசிரியரிடம் விடைபெற்றுச் சென்றனர் இருவரின் பெற்றோர்களும்.
“என்னடா சொன்னான் அந்த ஆளு?”, நண்பர்கள் சிலர் வசனிடம் வினவினர்.
“இல்ல… அது…. வந்து…”
“டேய் வசன், அந்த சிவா வாத்தியார் என்ன சொன்னாலும் கேட்காதே. அவர் ஒரு வீணப் போனவர்டா. அவருக்கெல்லாம் காதல பற்றி ஒன்னும் தெரியாதுடா. நீயும் திவ்யாவும் கடைசிவரை ஒன்னா இருக்கணும். அதுதான் எங்க ஆசை.:.
சிறுனகை பூத்து நண்பர்களிடமிருந்து விடைபெற்றான். வீட்டை அடைந்ததும் வசன் எதிர்பார்த்தது போல் தந்தை தன்னை அடிக்கவோ, தாயர் திட்டவோ இல்லை. எப்பொழுதும் போல் இருவரும் இருந்தனர். ஒரு வார மயான அமைதிக்குப் பின் ஒரு நாள் தன் தலையணைக்கு அடியில் ஒரு கடிதம் இருப்பதைக் கண்டான்.
“அன்புள்ள தவப் புதல்வனுக்குத் தாயர் எழுதிக் கொள்வது.
வசன், நாங்க உனக்கு எந்த குறையும் வச்சதில்ல. நீ எங்களுக்கு ஒரே பிள்ளை என்பதனால நீ எதைக்
கேட்டாலும் வாங்கிக் கொடுத்தோம். உனக்கு முழு சுதந்திரம் கொடுத்தோம். ஆனால், நீ கடைசியில இப்படி
நடந்துக்கேவேன்னுக் கொஞ்சம்கூட நாங்க நினச்சிப் பார்க்கல. உங்கப்பா ரொம்ப மனசு உடைஞ்சுப்
போயிடாரு. இதுக்கு அப்புறம் என்ன பண்ணப் போறியோ, உன் இஷ்டம். ஒன்னு சுய புத்தி இருக்கணும்.
இரண்டுமே இல்லன்னா என்னால ஒன்னும் பண்ண முடியாது. ஆனா, ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோ.
நீ என்ன செய்தாலும் உன் மேல நாங்க வைச்சிருக்கிற அன்பு கொஞ்சமும் குறையாது…….”
கடிதத்தைப் படித்த வசனுக்கு கண்களில் கண்ணீர் கரை புரண்டோடியது. தாய் தந்த அன்பு சேய் தருமா பின்பு? ஏன் அம்மாவும் அப்பாவும் புரிஞ்சிக்கல? காதல் தப்பில்ல; புனிதமானதுன்னு சான்றோர்கள் சொல்லியிருக்காங்க. ஏன், அம்மா அப்பாவே காதல் திருமணந்தானே செஞ்சிக்கிட்டாங்க. ஒருவேளை என்னோட காதல்ல ஏதோ தப்பு நடந்திருச்சோ? இந்த வயசில நான் காதலிச்சிருக்கக்கூடாதோ? அவங்க சொல்ற மாதிரி நான் தப்புதான் பன்றேனோ? தனக்குள்ளே முணமுணுத்துக் கொண்டான்.
“டேய் வசன், இன்னும் பத்து வருஷத்துல நான் அந்த சாலையில் நடந்து போறப்ப கிளினிக் டாக்டட் வசன், அப்படின்னு ஒரு போர்ட் மாட்டியிருக்கணும்பா. இங்கேயுள்ள குடிமக்கள் எல்லாரும் டாக்டர் வசன் ரொம்ப நல்ல வருன்னு பேசணும்பா”, அப்பா ஒரு நாள் சொல்லியிருந்தார்.
வசன், தீர்க்கமாய் ஒரு முடிவுக்கு வந்தான். இளைய பருவத்தில் குறுக்கே வரும் காதல் தொல்லைகளை வீசிவிட்டு புதியதொரு நாளைத் தொடங்கலாமென வாழ்வின் திருப்புமுனைக்கு ஓடோடி வருகையில், இடையில் ஒரு குரல் கேட்டுத் திடுக்கிட்டான்.
“வசன், அப்பாவப் பாருடா!” பதைபதைப்போடு ஓடிவர வரவேற்பு அறையில் நிதானம் இழந்து சாய்திருந்தார். அவசர அவசரமாக அண்டை வீட்டாரின் காரில் ஏற்றி மருத்துவமனைக்கு விரைந்தனர். வழியிலேயே யமதர்மன் பாசக்கயிற்றைத் தகப்பனின் கழுத்தில் வீசி கட்டியணைத்துக் கொண்டான். அம்மி மிதித்து, அருந்ததி பார்த்துத் தன் கழுத்தில் மோன்று முடிச்சு போட்டு, கரம் பிடித்த கணவை இழந்த மயக்கத்தில், கல்யாணி ஏதேதோ பிதற்றினாள்.
“டேய் வசன், உங்கப்பா உன்னைப் பத்திதான் ராத்திரி முழுசும் உட்கார்ந்து புலம்பினாரு. அப்பவே சொன்னேன். ரொம்ப உடம்ப போட்டு அலட்டிக்காம போ படுங்க; உங்களுக்கு நெஞ்சு வலி வேற இருக்குன்னு. கேட்டாதானே… பையன், பையன்னு புலம்பிக்கிட்டே இருந்தாரு. இன்னிக்கு மனுஷன் கண்ணைத் திறக்காமலேயே உயிரை விட்டுட்டாருடா”, கல்யாணி வேதனையை அடக்க முடியாமல் ஒப்பாரி வைத்தாள். இளம் பருவத்தில் தான் கொண்ட காதல் உறவால் தந்தையை இழக்கும் நிலை வரும் என் கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை. காதல் புனிதமானதுதான், ஆனால் பள்ளி பருவத்தில் வரும் காதல் ஒரு மாணவனையோ அல்லது மாணவியையோ கல்வியில் பின் தங்க செய்வதோடு, பெற்றோர்களுக்கும் தலை வலியை உண்டாக்கி குடும்பத்தில் விரிசலையும் நிம்மதியையும் இழக்கச் செய்கிறது.
காதலா? அல்லது பெற்றொரின் கனவா? என ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்கையில் தன்னை மட்டும் மகிழ்வூட்டும் காதலைக் காட்டிலும் தன்னையும் தன் பெற்றோரையும், எதிர்காலத்தையும் கல்வியையும் யோசித்தி எடுக்கும் முடிவே இறுதியானதாகும். சமையலறையில் சக்கரமாய் சுழன்று கொண்டிருந்த அம்மா, “சாப்படு ரெடி, வசன் வா சாப்பிடலாம்”, என்று குரலால் பழைய நினைவிலிருந்து மீண்டான்.
“அம்மா…”
“என்னடா?….”
“ஒன்னுமில்லம்மா” என்று புன்னகை பூத்துத் தன் அன்னையைக் கட்டியணைத்துக் கொண்டான். கல்யாணி மகனின் மனமாற்றத்தைக் கண்டு அவனைத் தழுவி உச்சி முகர்ந்தாள்.
தன் தந்தையின் மரணம் மீள முடியாத துயரத்தை விட்டுச் சென்றாலும், இனி அம்மவின் பேச்சைக் கேட்டு நடப்பது தான் தன் வாழ்க்கையின் லட்சியம் என்று மனதிற்குள்ளேயே சபதம் செய்து கொண்டான் வசன். இந்த எண்ணத்தையும் மனவுறுதியையும் அளித்த ஆண்டவனுக்கு நன்றி மலர்களச் சமர்ப்பித்தான்.