கற்பு என்பது யாதெனின்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 21, 2019
பார்வையிட்டோர்: 9,696 
 
 

மாடிப்படிகளில் வேகமாக ஏறிக் கொண்டு இருந்த ருத்ராவின் காதுகள் கேட்குமாறு பக்கத்துவீட்டுப் பெண்கள் பேசத் தொடங்கினர்..

“இங்கே பார்த்தியா.. எவ்வளவு ஸ்டைலா நடந்து போறா.. இதே நானா இருந்தா தூக்குல தொங்கி இருப்பேன்.. கொஞ்சமாவது மான மரியாதை வேணாம்.. கெட்டுப் போன அப்புறமும் எப்படி இவளாலே தலை நிமிர்ந்து நடக்க முடியுதோ..” என பேசிக் கொண்டு இருக்க நடந்துக் கொண்டு இருந்த அவளது கால்கள் தானாக நின்றது… அவர்களின் பக்கம் திரும்பி நேராகப் பேச ஆரம்பித்தாள் ருத்ரா.. .

” உங்க ஃபர்ஸ்ட் நைட்டுக்கு அப்புறம் நீங்க கெட்டு போனவங்க தானே ஏன் இன்னும் நீங்க தூக்குல தொங்காம இருக்கீங்க.. நீங்களும் கற்பை இழந்தவங்க தானே..”

” ஹே நான் என் புருஷன் கூட வாழ்ந்தேன்டி. நீயும் நானும் ஒன்னா.. நாலு பேர் கூட்டிட்டு போய் உன்னை கசக்கி எறிஞ்சு தூக்கி போட்டுட்டானுங்களா… அப்போ நீ தான்டி சீரழிச்சு போனவ.. ஒழுங்கா காலை அடக்க ஒடுக்கமா வெச்சுக்கிட்டு வீட்டுல இருந்தனா இந்த நிலைமை உனக்கு வந்து இருக்குமா?”

” எனக்கு இந்த நிலைமை வந்ததுக்கு காரணம் நான் வெளியே போனதுனாலே இல்லை பசங்களுக்கு கற்புனா என்னன்னு சொல்லிக் கொடுக்காமா வெளியே அனுப்பப்புனதுனாலே தான் வந்தது புரியுதா?”

” உங்கள் வாய்க்குலாம் பயந்து என்னாலே வெளியே போகாம இருக்க முடியாது.. ஏன்னா என்னை காப்பாத்திக்க நான் வெளியே போய் தான் ஆகணும்… உங்கள் கிட்டேலாம் நின்னு என்னாலே பேசிட்டு இருக்க முடியாது… இதோ இந்த வாய் இப்போ என் பொண்ணு வரும் போது ஏதாவது பேசுச்சுனு வெச்சுக்கோங்களேன்… அருவாள்மனையை எடுத்து இழுத்து வெச்சு அறிஞ்சுடுவேன் ஜாக்கிரதை” என்று அவர்களிடம் சொல்லிவிட்டு அவள் புயலாய் தன் வீட்டுக்குள் நுழைந்த அடுத்த பத்து நிமிடங்களில் மகள் கவலைக் கப்பிய முகத்தோடு வந்தாள் கண்களில் கலக்கத்துடன்..

” என்னடா அஞ்சலி ஏன் டல்லா இருக்கே.. ஸ்கூல்ல நிறைய ஸ்ட்ரெஸ்ஸா.. பண்ணென்டாவதுனா அப்படி தான்டா இருக்கும்.. ” என சொல்லிக் கொண்டே போக அவள் மகளோ ” அம்மா நான் சாகப் போறேன்” என்றாள்… அதைக் கேட்டவளின் கண்கள் கோபத்தில் ருத்ர தாணடவம் ஆடியது..

இப்போது தலைநிமிர்ந்து நிற்கும் ருத்ரா ஒரு காலத்தில் தலை நிமிராமல் கீழே குனிந்து நின்றவள்… அவர்கள் ஊரிலேயே அடக்க ஒடுக்கம் என்ற பெயரை மொழிப் பெயர்த்தால் ருத்ரா , என்று சொல்லும் அளவுக்கு அமைதியாய் இருப்பாள்….

சிறுவயதிலேயே கற்பு பெண்மை என அவளுக்கு போதிக்கப்பட்ட எல்லாவற்றையும் மனதில் ஏற்றிக் கொண்டு தலையை ஏற்றாமல் கீழே குனிந்தபடியே நடப்பாள்..

ஆனால் அவள் தனது பதினெட்டாவது வயதிலேயே சில மிருகங்களின் இச்சைக்கு தீக்கிரையாகினாள்..

அவளுடைய கற்பு பறிபோய்விட தன் உயிரையே பறித்துக் கொள்ள முடிவு செய்து கடையில் விஷமருந்து வாங்கப் போன பொழுது அவளை சீரழித்தவர்களில் ஒருவன் மகிழ்ச்சியாய் நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருப்பதைப் பார்த்தாள்…

அவனும் தானே தன்னுடைய கற்பை இழந்தான்.. அவன் முகத்தில் எந்த வருத்தமும் இல்லையே… அவன் மட்டும் எப்படி இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறான்.. ஆனால் நான் மட்டும் ஏன் கஷ்டப்பட்டு கவலைப்பட்டு சாக வேண்டும்..

என்னுடைய கௌரவம் மானம் எல்லாம் என் உடலை சார்ந்து அல்ல மனதை சார்ந்து தானே இருக்கிறது.. மனதினால் இதுவரை நான் கற்பை இழக்கவில்லையே என யோசித்தவள் அந்த தற்கொலை முடிவை அங்கேயே மறந்துவிட்டு கையில் குச்சி மிட்டாய்யை வாங்கிக் கொண்டு வந்தாள்..

பிறகு குனிந்த தலை நிமிர்ந்தது.. சமுதாயத்தை எதிர்த்து கேள்வி கேட்டாள்.. அவள் மனதினுள் தன்னம்பிக்கை வளர்ந்தது கூடவே அஞ்சலியும் வயிற்றில் வளர்ந்தாள்.. அன்றிலிருந்து தன் குழந்தையையே தன் வாழ்க்கை என நினைத்து வாழ்ந்தவள் காதுகளில் அவள் குழந்தையின் வாயினாலே என் வாழ்க்கையை நானே பறித்து கொள்கிறேன் நான் இனி உயிர் வாழ மாட்டேன் என கேட்டால் எப்படி தாங்குவாள் அவள்…

அஞ்சலி சொன்ன செய்தியைக் கேட்டு அவள் செயலற்று நின்றது இரண்டு நிமிடம் தான்.. பின்பு நேராக தன் மகளிடம் வந்து ” நான் இப்படியா டி உன்னை வளர்த்தேன்.. தைரியமா இருக்கணும்னு சொல்லிக் கொடுத்து தானே வளர்த்தேன்.. ” என கத்த “அம்மா எனக்கு மயக்க மருந்து கொடுத்திட்டான் மா.. மயக்கம் தெளிஞ்சு பார்த்த அப்போ நான் இருந்தேன்… ஆனால் என் பெண்மை என் கிட்டே இல்லை மா… அவன் என்ன சொன்னான் தெரியுமா இதைப் பத்தி யாருக்கிட்டேயும் சொல்லக்கூடாது… அப்படி சொன்னா இந்த போட்டாவை ஃபேஸ்புக்ல போட்டுடுவேனு மிரட்டினான் மா.. நான் மயக்கத்தில இருந்த அப்போ நிர்வாணமா எடுத்த போட்டா மா அது.. அப்புறம் அவனே சொன்னான்… “நீ அப்படி உன் அம்மா கிட்டே சொன்னாலும் எனக்கு பயம் இல்லை.. ஏன்னா இரண்டு பொட்டச்சிங்க சேர்ந்து என்னை என்ன பண்ணிடுவீங்கனு” கேக்குறான் மா அவன் என அவள் விம்மி அழ அருகில் சென்ற ருத்ரா ” ஹே எழுந்திரி டி.. எவன் அவன்னு என் கிட்டே காமி… நான் உன்னை எவ்வளவு தைரியமா வளர்த்தேன்.. இப்போ எதுக்கு கண்ணீர் வடிக்கிற.. என்னை கற்பு போயிடுச்சு அவ்வளவு தானே.. அந்த பையனுக்கும் தானே கற்பு போச்சு அவன் அழுதானா??.. எழுந்துருடி அவனை ஒரு கை பார்த்துரலாம்” என ருத்ரா அவளை அழைத்துக் கொண்டு அந்த பையனைத் தேடிப் போனாள்..

அவன் ஒரு குட்டிச் சுவற்றில் அமர்ந்து புகைப்பிடித்துக் கொண்டு இருக்க அருகில் வந்த ருத்ரா மயக்கமருந்து அடங்கிய கைக்குட்டையைக் கொண்டு அவன் முகத்தை மூடினாள்.. சிறிது நேரத்திலேயே மயங்கிவிட ஒரு ஆட்டோவை நிறுத்தி அதில் அவனை ஏற்றி வீட்டிற்குக் கொண்டு சென்றாள்.. அவனின் கைரேகையை பயன்படுத்தி போன் லாக்கை எடுத்தவள் தனது மகளை நிர்வாணமாக எடுத்த போட்டாவை டெலீட் செய்தாள்.. சிறிது நேரத்திலேயே மயக்கம் தெளிந்த அவன் கண்கள் திறந்து கீழே குனிந்து பார்க்க அவன் நிர்வாணமாய் கிடந்தான்..

“என்னது என் டிரஸ் எங்கே.. ஹே அஞ்சலி என்னது டி… என்னை என்ன பண்ணி வைச்சு இருக்கீங்க.. மவளே நீ நிர்வாணமா இருக்கிற உன் போட்டாவைப் பேஸ்புக்ல போட்டுவேன்” என மிரட்ட இப்போது ருத்ரா முன்னே வந்தாள்.. அவன் போனைக் காட்டி “அந்த போட்டாவை போடுறதுக்கு முன்னாடி இந்த போட்டாவை முதலிலே உன் கையாலயே ஃபேஸ்புக்ல ஷேர் பண்ணுடா ராஜா.. ” என அவன் கை விரல்களை எடுத்தவள் அந்த போஸ்ட்டை பேஸ்புக்கில் பதிவிட்டாள்..

அவன் ஐயோ ஐயோ என கதறினான்..ஐயோ என் மானம் போச்சே இப்படி என் மானத்தை வாங்கிட்டீங்களே என அந்த புகைப்படத்தைப் பார்த்து பார்த்து கதறினான்.. அந்த போட்டாவில் அவனின் நிர்வாணப் புகைப்படத்தின் மேலே விபச்சாரன் என்று எழுதி இருந்தது… சேவை வேண்டுபவர்கள் நெருங்க வேண்டிய தொலைப்பேசி எண் என அவனது எண்ணும் போடப்பட்டு பேஸ்புக்கில் ஷேர் பண்ணிவிட்டான் அதுவும் தன் கைகளிலேயே.. தில் இருக்கிற பொண்ணுங்க மட்டும் இந்த போஸ்ட்டை லைக் பண்ணுங்க என்ற வாசகத்தோடு வேறு…

” ஐயோ என் மானம் போச்சே.. மரியாதை போச்சே” என அவன் மீண்டும் மீண்டும் நினைத்து புலம்ப ” கூடவே சேர்த்து உன் கற்பும் போச்சுணு கத்துடா.. உனக்கு வலிக்குது இல்லை இதே வலி தானே அந்த பொண்ணுக்கும் இருக்கும்.. ஏன்டா உன் உடம்பை நாலு பேர் பார்த்தா அவமானமா நினைக்குறியே இதே தானே மத்த பொண்ணுங்களுக்கும்.. ” என ருத்ரா கத்தினாள்..

” ஐயோ மன்னிச்சுடுங்கம்மா.. எனக்கு இப்போ புரியுது.. என்னாலே இனி வெளியிலே எப்படி தலைக் காட்ட முடியும்.. இதே வலி தானே அந்த பொண்ணுங்களுக்கும் ஏற்பட்டு இருக்கும்… ” என கதற ருத்ரா அவன் மீதான கயிறுகளை அவிழ்த்தாள்.. உடனேயே அவன் அருகில் இருந்த தன்னுடைய உடைகளை எடுத்து உடலை மூடியவன் அவர்கள் இருவரின் கால்களிலும் விழுந்து கதறினான்.. அருகே வந்த ருத்ரா ” நீ தப்பை உணர்ந்துட்ட.. நீ பயப்படாத.. நான் உன் போட்டாவை ஷேர் பண்ணேன்ல அது கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் தான் அந்த குரூப்பை க்ரியேட் பண்ணேன்.. நான் மட்டும் தான் அதுல மெம்பர்.. யாரும் அதை பார்க்கல.. அதுனாலே கவலைப்படாம போயிட்டு வா… இனி அந்த தப்பை பண்ணக்கூடாது” என கண்டிப்பாக சொல்ல அவன் செய்யவே மாட்டேன் என கையைக் கூப்பி நல்ல மனிதனாக வீட்டை விட்டு வெளியே வந்தான்..

ருத்ரா தன் பெண்ணிடம் திரும்பி ” இங்கே பாரு அஞ்சலி.. இது ஒரு விபத்து அவ்வளவு தான்.. இது ஒன்னும் வாழ்க்கையோட முடிவு இல்லை.. அதனாலே இதோட ஒடிஞ்சு போகாம வாழ்க்கையிலே முன்னேறனும் சரியா.. கற்பு அப்படின்றது ஒரு சொல் தானே தவிர அதுக்காக வாழ்க்கைன்ற ஒரு பொருளையே அழிக்கக்கூடாது.. கடந்து வந்துடணும்” என சொல்ல அந்த தைரியமிக்க தாயைக் கட்டிக் கொண்டாள் பெண்..

அடுத்த நாள் காலை ருத்ரா வெளியே வர மீண்டும் அந்த வேலை வெட்டி இல்லாதவர்கள் இவளைப் பற்றி பேசத் தொடங்கினார்கள்.. அதை எல்லாம் தூசி போல உதறிவிட்டு முன்னோக்கி நகர்ந்தாள் ருத்ரா.. திமிர் பிடித்த பெண் என்ற பட்ட பெயரோடு..

– நவம்பர் 2018

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *