கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுபமங்களா
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 16, 2021
பார்வையிட்டோர்: 7,564 
 
 

தேன் கூட்டிலே நெறிகிற ஈ. மாதிரி, பஸ் நிலையத்தில் ஜனக் கூட்டம்.

வருசா வருசம் சித்திரை பதினெட்டுக்கு சோலைசாமி கோயில் திருவிழா. சனம் வெள்ளமாய் பொங்கி விட்டது பொங்கி. எத்தனை பஸ் வந்து அள்ளிக் கொண்டு போனாலும் கூட்டம் குறைந்த பாடில்லே. ஒழுங்கு பண்ண ‘போலீஸ் லத்தி அடி’. அவ்வளவும் கறி திங்க வந்த கூட்டம். காரேறி, மாட்டு வண்டி கட்டி. நடையாய் நடந்து கறிக்கு ஆசைப்பட்டு வந்த சனங்கள் தான். ஒரு கிடாயா? ரெண்டு கிடாயா? முன்னூறு, நானூறு கிடாய் அறுபடும்.

சோலைசாமி, துடியான தெய்வம். மண்டைக்குத்து. வயித்துவலி மாதிரி கஷ்டங்களுக்கு ஒரு கிடாய் நேர்த்திக்கடன். கோர்ட்டு, போலீஸ் கேஸுக்கு ரெட்டைக் கிடாய். அதிலேயும் கொலைக் கேஸு விடுதலையானால் மூணு கிடாய், நாலு கிடாய்.

தலை, கால், குடல், ரத்தம் எதையும் கழிக்காமல் சமைக்கணும். ஆட்டுத் தோலைக் கூட தீயிலே வாட்டி, ரோமத்தை உரசிவிட்டு தனிக்குழம்பு வைக்கணும். யாரு வீட்டுப் பந்தியிலே யாரு போயி உட்கார்ந்தாலும் இலை போடணும். கேட்க கேட்க கறியை அள்ளி அள்ளி வைக்கணும். கோயில் தளத்திலே ஒருத்தர் பொருளை ஒருத்தர் தொடக்கூடாது. முக்கால் துட்டை எடுத்துப் பையிலே போட்டாலும் காலு, கை சுகத்தோடு ஊர் திரும்ப முடியாது. வாந்தி, பேதி, மயக்கம் வந்து சுருட்டி விடும் சுருட்டி, ஆளைக்கூட கை வச்சாலும் வச்சுறும்.

சோலைசாமி, அப்படி ஒரு துடியான தெய்வம்.

அங்கம்மா மகன் முத்துப்பாண்டிக்கு வலது கண்ணு. ‘மாறு கண்ணு’. சின்னப் பயல்தான். பன்னிரண்டு வயசு தான் இருக்கும். கூட்டாளி பயலுக, விளையாட்டுப் போக்கிலே “டேய்…. ஒன்றைக் கண்ணா” என்று அங்கம்மாவின் காது படக் கூப்பிட்டால் விளக்குமாறைத் தூக்கி விடுவாள்.

“காலிப் பயபுள்ளே, யாரைப் பாத்து ‘ஒன்றைக் கண்ணு’ன்னு சொல்றே? என் மகன் அழகேந்திரன்! உன் ஏழேழு தலைமுறை சேர்ந்தாலும்…. என் மகனோட சுருட்டை முடி அழகு பெறுமா? விளக்குமாறு பிஞ்சு போகும் பிஞ்சு….”

அப்படிப்பட்ட பாசக்காரிதான். கோயிலுக்கு வந்த இடத்திலே மகனை விரட்டி விரட்டி அடிக்க ஓடினாள். பஸ்ஸுக்கு நெறியடும் சனமெல்லாம் வேடிக்கை பார்த்தது.

‘குருட்டுப் பய புள்ளே… ஏன் வந்தே? எதுக்கு வந்தே? நான் தான் ‘வரவேண்டாம்’னு சொன்னேன்லே? ஒங்க அப்பன் வீட்டு பஸ்ஸா ஓடுது? ஓசியிலேயா ஏத்திட்டுப் போவான்? டிக்கெட்டுக்கு ரெண்டு ரூபாய் வேணுமே? நான் என்ன பண்ண? கோயிலுக்கு வந்த எடத்திலே யாருகிட்டே கடன் வாங்குறது?”

காதுகளில் தண்டட்டி தோளுக்குத் தொங்கியது. முத்துப்பாண்டி. சனங்களின் காலுக்குள்ளும் கைக்குள்ளும் கெலித்துக் கெலித்து ஓடினான். அங்கம்மாவுக்கு ஆத்திரமான ஆத்திரம். “கோணக்கண்ணுப் பயபுள்ளே… ஊருவிட்டு ஊருவந்து என்னைக் கேவலப் படுத்துது பாரேன்!” தின்ன கறி செரித்துப் போகும் அளவுக்கு கோபம். சுருக்குப் பைக்குள்ளே ரெண்டே ரெண்டு ரூபாய்தான் கெடக்கு. ஊரு போயி சேர காருக்கு ‘முழு டிக்கட்டு’ ரெண்டு ரூபாய். ஆத்தாவுக்குச் சரியாப் போச்சு. மகனுக்கு? வயசைக் குறைச்சுச் சொல்லி அரை டிக்கட்டு கேட்டாலும் ஒத்த ரூபா வேணுமே? ‘கடன் வாங்கக் கூட முகம் தெரிஞ்ச சனம் ஒண்ணும் தட்டுப் படலையே! இப்ப நான் என்ன பண்ணுவேன்?’ கை விரல்களை நெறித்தாள். முத்துப் பாண்டிக்கு வயிறு ‘கினுக், கினுக்’ எனத் தனியே ஆடியது. கறியை அள்ளி அள்ளித் திணித்து அடைத்த வயிற்றோடு எவ்வளவு நேரம் பிடிபடாமல் ஏய்ப்பான்? எசகு பிசகாய் அங்கம்மாவின் கையில் மாட்டிக் கொண்டான்.

‘வதக், வதக்’ என முதுகில் ரெண்டு போடு போட்டாள்.

“எனக்குத் தெரியாம நடந்து வந்தே இல்லே? இப்ப நடந்தே ஊரு போயிச் சேரு….. கபோதிப் பய புள்ளே …”

முத்துப்பாண்டி அலறினான்.

“கறி திங்கணும்னு வந்துட்டேன். இனிமே வரலே….” அடி பொறுக்க மாட்டாமல் குதித்தான்.

கூட்டத்தில் ஒரு பெரிய மனுசன், தடுத்து, சத்தம் போட்டார். “ஏம்மா… ஏதோ சின்னப்பய… கறி மேலே ஆசைப்பட்டு வந்துட்டான். விடுவியா…? பெத்த பிள்ளைய இந்தப் போடு போடுறே! நம்மப் போல, ஆளுக ஆடி, தீபாவளிக்குத் தான் ரெண்டு துண்டுக் கறியைப் பார்ப்போம். ஏதோ… இந்த சோலைசாமி புண்ணியத்துலே வருசம் ஒரு நாளு ஆசை தீர கறி திங்க கொடுத்து வச்சிருக்கு. அது சரீ… சின்னப் பயலைச் சொல்றியே? நீ எதுக்கு வந்தே? கறி திங்கத்தானே?”

அங்கம்மா, மகனை விட்டு விட்டாள். தலையைக் கோதினாள். முந்தானையை உருவி, மகனுடைய முகத்தைத் துடைத்து விட்டாள். ‘காருச் செலவுக்கு என்ன பண்றது? ம்…?’ அங்கம்மாவுக்கு ஒரு யோசனை தட்டுப்பட்டது. மகனை இழுத்து. காதோரம் குசுகுசுத்தாள்.

“சரித்தா”. முத்துப்பாண்டி தலை ஆட்டினான். அடி நாக்கில் எச்சில் ஊறிக் கொண்டே இருந்தது. வயிறு பிசைந்து பிசைந்து அடிவலி தெரிந்தது. எக்கி எக்கிக் கொடுத்தான். ‘எம்புட்டு கறி தின்னுட்டேன்!’

பெருநாழி பஸ் வந்தது. ஆத்தாவும் மகனும் அடித்துப் பிடித்து ஏறிவிட்டார்கள். அங்கம்மா உட்கார்ந்திருந்த இருக்கைக்கு அடியில் சுழிவாய் நுழைந்து, கால்களைச் சுருட்டிப் படுத்துக் கொண்டான். முகத்துக்கு நேராக ஆத்தாவின் கால்கள், கூட்டமான கூட்டம். கூரை மேலும் சனம். உள்ளே நிற்கும் சனத்திற்கு மூச்சுத் திணறியது. கூரை மேலிருந்த ஒன்றிரண்டு கிழடுகளுக்கு பயம். பக்கவாட்டுத் தடுப்பை கெட்டிப் பிடியாய் பிடித்துக்கொண்டு ‘திரு.திரு’ வென முழித்தபடி.. ஒப்புக்குப் பேசிக் கொண்டிருந்தார்கள். இளவட்டங்களுக்கு கும்மாளம். வெயிலும் தெரியலே… வேனலும் தெரியலே!

இடதுபக்கம் சரிந்து தரையை உரசிக்கொண்டு பஸ் கிளம்பியது. உள்ளே இருக்கும் பொண்ணுபுள்ளைகளுக்கு உசுரு கையிலே இல்லை. ‘எம்புட்டு கூட்டம்! வண்டி கவுந்தாலும் கவுந்துறுமோ’, கிடைத்த பிடிமானத்தை இறுகப் பற்றிக் கொண்டார்கள். ஆத்தாவின் காலடியில் கிடந்த முத்துப்பாண்டிக்கு வியர்த்து ஓடியது. டிரைவர், ஹாரன் அடிக்கக்கூட மதியில்லாமல் முன் ரோட்டிலேயே கண் வைத்து ஒட்டிக் கொண்டு போனார். கண்டக்டர் நெரிசலில் பிதுங்கிப் பிதுங்கி “டிக்கட் டிக்கட்…” திட்டிக் கொண்டே நகர்ந்தார்.

அங்கம்மா, காலடிச் சேலையை விஸ்தாரமாய் இறக்கி விட்டு, கால்களை அகற்றி மகனை மூடி மறைந்திருந்தாள்.

‘ஒத்த ரூவா காசு இருந்தா… இந் நேரம் எம்மகனை ஒய்யாரத்திலே உக்கார வச்சு அதிகாரம் பண்ணி இருப்பேனே. காருக்கு காசு இல்லாம காலடியிலே போட்டுப் போறது வெளியிலே தெரிஞ்சா வெக்கக்கேடுலே?’ நெஞ்சுக்குள் ‘பதக், பதக்’ என்றது.

“டிக்கட்… டிக்கட்…” முத்துப் பாண்டிக்கு மூச்சுத் திணறியது. சன்னமாய் “ஏத்தா…” என்றான்.

அங்கம்மா குனியவில்லை. வெளியே ‘பராக்கு’ பார்த்தாள். காலடியை மேலும் அகற்றினாள். சனம். ஒன்னோடு ஒன்று இடித்துக் கொண்டு திருகியது. கண்டக்டரின் காக்கிச் சட்டை வியர்வையில் கறுத்துப் போய் இருந்தது.

“ஏத்தோவ்….” ஆத்தாவின் காலைச் சுரண்டினான். அங்கம்மாவுக்கு கோபமான கோபம். முத்துப் பாண்டிக்கு வயிற்றைப் புரட்டி, வானி ஓடியது. மூணு முழ தூரத்திலே கண்டக்டர் கசங்கிக் கொண்டிருந்தார்.

“ஏத்தோவ்…” கண்கள் நிலை குத்தின.

“பேதியிலே போசு… கொஞ்ச நேரம் சத்தம் போடாமக் கெடவேன்…” உதட்டுக்குள் திட்டிக் கொண்டே சேலையைத் தளர்த்தி இறக்கினாள்.

“டிக்கட்… டிக்கட்…” மூணு முழ தூரம்.

“ஏத்தோவ்…” சுரண்டினான். “குருட்டுப் பயபுள்ளே …” பின்னங் காலால் ஓங்கி மிதித்தாள்.

‘”டிக்கட்… டிக்கட்…” ரெண்டு முழம்.

“ஏத்தோவ்வ்…”

“மறுபடி ஒரு மிதி.”

“டிக்கட்… டிக்கட்”. ஒரு முழம்.

“ஏத்தாய்ய்…” கிள்ளினான்.

மிதி, மிதி என்று மிதித்து நகட்டி விட்டாள். அப்புறம் கீழே இருந்து சத்தத்தைக் காணோம். பெருநாழி வந்தது. சனம் இறங்கியது.

“ஏப்பூ… முத்துப்பாண்டி.. எந்திரி”. மெதுவாய் கூப்பிட்டாள். சத்தத்தைக் காணோம். குனிந்து பார்த்தான்.

“ஆத்தாடீ…. இதென்னத்தா… எம்புள்ள மயங்கிக் கெடக்கு ஏப்பூ… முத்துப்பாண்டி… ராசா…” கைத்தாங்கலாய் தூக்கி நிறுத்தினாள். கண்செருகி, எச்சில் ஓடி, வியர்த்து… “அய்யா முத்துப்பாண்டி… சாமீ…” படி இறக்கினாள்.

தள்ளாடி றெங்கியதும் ‘சுப. கப்’ வென வாந்தி எடுத்தான். தின்ன கறி எல்லாம் அரையும் குறையுமாய் பீய்ச்சி அடித்தது. சனம் கூடியது. குத்துக்காலிட்டு உட்கார்ந்து, தலையில் கைவைத்துக் கொண்டு வாந்தி வாந்தியாய் எடுத்தான்.

அங்கம்மா, மகனுடைய நெஞ்சைத் தடவி, தடவிக் கொடுத்தாள். “அடி பாதகத்தி மக்கா… நான் என்ன செய்யட்டும்? என் பிள்ளைக்கு என்ன ஆச்சு?” நெஞ்சில் நெஞ்சில் அடித்துக் கொண்டு மருகினாள்.

சனம் சொல்லியது: “அங்கம்மா, வேற ஒன்னுமில்லே. கோயில் தலத்திலே, உன் மகன், தெரியாத்தனமா எதையாவது திருடி இருப்பான். தெரிஞ்சும் தெரியாம செய்திருந்தாலும்… சோலைசாமி துடியான தெய்வம். கைமேலே சோதனை காட்டுது. எதுக்கும் அடுத்த சித்திரைக்கு ‘ரெட்டைக் கிடாய் வெட்டுறேன்’னு வேண்டிக்கோ. வாந்தி நின்னு போகும்.”

அங்கம்மா, மகனைப் பார்த்தாள். வாய் ஒழுக, கண்ணீர் ஓட, ‘ஆத்தா…’ புறங்கையால் வாயைத் துடைத்தான். மகனைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு கூட்டத்தை விலக்கி நடந்தாள்.

முதுகுக்குப் பின்னால் சனம் மொசு மொசுத்தது. தோளில் கிடந்த முத்துப்பாண்டி, தலையைத் தூக்கி, ஆத்தாவின் முகம் தொட்டுத் தன் பக்கம் திருப்பி, “ஆத்தா… அந்த சோலைசாமி சத்தியமா…உன் மேலே சத்தியமா…நான் எதையும் திருடலே ஆத்தா”. ஆத்தாவின் தலையில் கைவைத்து அழுதான். மகனை, கழுத்தோடு வளைத்துச் சேர்த்து அணைத்துக் கொண்டு. ‘ணங்…. ணங்…’ எனத் தரை அதிர நடந்து போனாள்.

– டிசம்பர் 1991

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *