கருப்பு. அவள் பேரே அதுதான்.
கருப்பில் அது தனிரகம். மினுமினுத்த மைக்கா. தென்னம் பாளையின் அடிபோல்
முறுக்கேறிக் கிடந்தது உடம்பு. எங்கிருந்து அந்த ஊட்டமும் வளமையும் வந்ததோ..
நல்ல நிமிர்ந்த எடுப்பான நெஞ்சு. சேர நன்னாட்டிளம் பெண் போல… ஆண்களைக்
கட்டியாள்கிற, அயரவைக்கிற வசிய ஆளுமை.
ஊர் வெட்டியானின் பெண்டாட்டி.
அந்தக் கண்ணில் ஒரு அடங்காத்தன்மை அல்லது சவால் இருந்தாற் போல ஆண்கள்
உணர்ந்தார்கள் ஏனோ.
அவள் என்ன செய்தாள்? அவள் நடந்து போனாள்- அவ்வளவுதான். சிலும்பலான
அலட்சியமான நடை. அலட்சியம் செய்து அவள் கவனஈர்ப்பு செய்தாப்போல அவர்கள்
உணர்ந்தார்கள். மர்மக் கயிறு கொண்டு அவர்களை அவள் கட்டிப் போட்டாற்
போலிருந்தது. அவசர அவசரமாய் அதை அவிழ்க்க முயன்று முடிச்சு போட்டுக்
கொண்டவர்கள் அநேகம்.
வெட்டியான் உத்தியோகம் நிலையானது அல்ல. நிலையான வருமானம் கிடையாது
அதில். ஜாதிக்கு ஒரிடத்தில் புகைக்கிறார்கள். புதைக்கிறார்கள்… என்றாலும்
வெட்டியான் ஒருவனே.
ஊரில் யாரடா எப்படா சாவான் என அவன் ‘வெட்டி’யாய்க் காத்திருக்க முடியாது.
வயிறு இருக்கிறது. பெருத்த வயிறு. சாப்பிட எதும் கிடைக்காதோ என சந்தேகிக்கிற
நெருக்கடியில் தின்பதற்கு என அது அலைந்தது. தெருநாய் அலைச்சல். வெட்டி
அலைச்சல். இதைத்தான் தின்னுதல் என சுயதேர்வு இல்லாத வாழ்க்கை.
பசித்து, சாப்பிடவும் ஏதுமில்லாத தினங்களில் மனசின் அதிர்வுகள் அதிகரித்து
விடுகின்றன. பீடி குடித்து, தனக்கே கொள்ளி வைத்து அதை அடக்கப் பார்த்தான்
மாசானம். பற்ற வைத்துக் கொண்டதற்கும் அதற்கும் உள்ளே வயிற்றுப் பானையில்
உலை கொதிக்க ஆரம்பித்து விட்டது. அரிசி போடாத வெற்று உலை. உலைஅலை…
எட்டி எம்பி வயிற்றின் மேல்வரை நெருப்பான நாக்கினால் தேய்த்தது. அடுத்து சாராயங்
குடித்து அதை அடக்க ஆரம்பித்தான். விற்காத நாட்களில் கடனில் கிடைத்தது சரக்கு.
விற்கிற நாட்களில் போ போ என விரட்டினாலும் மாசானம் விற்கிறவனைக் கெஞ்சி
தாஜா செய்து குடிக்க வழிவகை செய்து கொள்ள வேண்டியிருந்தது.
பேருக்குப் புருசன். பெண்டாட்டி பற்றிய ஞாபகம் அவ்வப்போது வரும் என்றாலும் அவை
உடம்பு சூடு வேண்டிய இராப் பொழுதுகள்… அல்லது அவள் இடுப்பு முடியில் காசு தேடும்
நேரம். அவள்மீது அவனுக்கு அக்கறை இல்லை. அவள் சரியாகச் சாப்பிட்டாளா? அவள்
தேவை என்ன?… என்கிற கவனங்கள் கவலைகள் அவனிடம் இல்லை.
எடுபிடி வேலைகள், வயற்காட்டு வேலைகள் என கருப்பு ஊருக்குள் வந்தாள். வேலைகள்
வாங்கிக் கொண்டு பெண்கள் சற்று த-ள்-ளிநின்று சிறு சிறு காசுகளை அவள்
உள்ளங்கையில் போட்டார்கள். ஆம்பிளைகளோ வெறுக்கிற பாவனையுடனேதான்
என்றாலும், இதுசாக்கிட்டு அவள் உள்ளங்கையை, விரல்களை உரசினார்கள்.
தீக்குச்சி உரசல்.
முத்துலிங்கம் அவள் கையைப் பிடித்து காசு கொடுத்தார்.
வெற்றிலைப் பிரியர் அவர். வயிறு புடைக்கத் தின்றபின் செரிமானத்துக்கு அவர்
வெற்றிலை போட்டால், பசியை அடக்க அவள் வாயில் அதக்கிக் கொள்ள வெற்றிலை
கேட்டாள். பச்சை நரம்புகள் கொண்ட வெற்றிலை. எனினும் வாயில் எப்படி சிவப்பு
கொடுக்கிறது அது. வெற்றிலை போட்டபின் நாக்கை வெளியிழுத்து அதன் சிவப்பை
ரசிக்கிறாள் கருப்பு. அந்த நாக்கைக் கடிக்க முத்துலிங்கம் வெறி கொண்டார் அந்தக்
கணம்.
வெற்றிலைப் பழக்கம் சுடுகாடு மட்டும்.
”கொஞ்சம் வெத்தல குடுங்க சாமி…”
”வா. என் வாய்லேந்து எடுத்துக்கடி…” என்று சிரித்தார். அவள் அவரைப் பார்த்தாள்.
‘எடுத்து… கடி’ என்றார் மீண்டும் சிரிப்புடன்.
சரி, என்று அவரோடு தாம்பூலம் மாற்றிக் கொண்டாள்.
மாசானம் அதுபற்றிக் கவலைப் பட்டானா?
ஆனால் அவளிடத்தில் துட்டுச் சக்கரம் உருண்டது. நல்ல விசயம். அவனுக்கு அவளைவிட
அவள் துட்டு அவசியத் தேவை. துட்டு கேட்டு அவளை அவன் உதைத்தான். ஆண்மனிதன்
அல்ல அவன். சாண் மனிதன்.
எண்சாண் மனிதனுக்கு ஒரு சாண் வயிறு அல்லவா? அது அவனுக்கு முன்னோக்கிப்
பெருகி இருசாண் அளவில் வளர்ந்திருந்தது.
பெண்கள் இடுப்பில் தண்ணீர்ப் பானையை ஒடுக்கிக் கொள்கிறார்கள். ஆண்கள் வயிற்றில்
சாராயப் பானையைச் சுமந்து திரிகிறார்கள்.
முத்துலிங்கத்திடம் துட்டு இருந்தது. பணச் சக்கரம் பாதாளம் வரை உருளும். ஊர் மற்றும்
உறவு ஜாடைமாடையாகவும் நேரிடையாகவும் பேசி சுவாரஸ்யப்பட்டு ஆத்திரப்பட்டு
பொறமைப்பட்டு பிறகு அடங்கிப் போனார்கள்.
கருப்பு அவரது விருப்பு. விருந்து. வீட்டில் கிடைக்காத ருசி அது. அந்தக் கைப்பக்குவம்…
அசைவ ருசி… அபூர்வ மணம் வீட்டில் வாய்க்கவில்லை. முணுமுணுத்து கத்தி பிறகு
பெண்டாட்டியும் ஒதுங்கிக் கொண்டாள். நாய்ப்பிறவியே, நீ இடம் போனாலென்ன-
வலம் போனாலென்ன- மேல விழுந்து பிடுங்காத வரை நலம். நலமறிய அவா.
முதலில் கருப்பிடம் இடறி விழுந்த முத்துலிங்கம் வண்டிகட்டிப் போகையில் குடைசாயக்
கீழே விழுந்தார். அத்தோடு அவரது ஆட்டம் பாட்டங்கள், நடமாட்டங்கள் ஓய்ந்தன.
உடம்பு அவர் ஆணைகளை ஒத்துக் கொள்ள மறுத்தது. மனைவி போல. உறவுக்கார
மனிதர்கள் போல. நண்பர்கள் போல… இப்போது அவரிடம் யாரும் இல்லை. அவர்
உடம்பே அவருடன் இல்லைபோல.
அவரது ஒரு பார்வைவீச்சில் அடங்கிய மனிதர்களா இவர்கள்? இப்போது அந்த
எதிர்ப்பார்வையின் அக்னி அவரைத் திக்குமுக்காட்டியது.
அவரிடம் அக்கறை காட்ட யார் இருக்கிறார்கள்?
கருப்பு இருந்தாள் ஆறுதலாய்.
வீடு. வீட்டில் தனியறை. பிறகு திண்ணை என்று கொஞ்சம் கொஞ்சமாய் வெளியே
வந்தவர் தனியே ஊருக்கு வெளியே குடிசை அமைத்துக் கொண்டார். அவருக்குப்
பாடுபார்க்க என்று பெண்டாட்டி ஒத்துழைக்க மறுத்த காலங்கள் அவை. கடுமையான
காலங்கள். யானைக்கு அடிவழுக்கிய காலங்கள். பூனையின் காலங்கள்.
ஊரெல்லைக் குடிசை என்றாலும் முன்னைக்கு இப்போது நிம்மதியாய் இருந்தாற்
போலிருந்தது. உதவி ஒத்தாசைக்கு என கருப்பு. பணிவிடை செய்வதில் அவள் எந்தக்
குறையும் வைக்கவில்லை.
கடுமையான சளியும் இருமலுமாய் அவர் மூச்சுவிடத் திணறும்போது அவள் ஓடோடி
வந்து வெந்நீர் வைத்து வாயில் விட்டாள். நெஞ்சைத் தடவித் தந்தாள். இரவின்
குளிருக்கு அவருக்கு அவளது கதகதப்பு வேண்டித்தான் இருந்தது.
புடவையை அவிழ்த்து அவரோடு அதைப் போர்த்திக் கொண்டாள் கருப்பு.
குழந்தையல்லவா இது? வயோதிகக் குழந்தை. குனிந்து அவரைப் பார்த்து கண்
கலங்க முத்தமிட்டாள். கர்ர் புர்ர்ரென்ற மூச்சொலியுடன் அவர் உறங்க
ஆரம்பித்திருந்தார்.
ஊரெல்லையில் சிறு விதைப்பாடு என அவள் வயிற்றுக்கு ஏற்பாடுகள் செய்திருந்தார்
முத்துலிங்கம்.
”எனக்கு எதுக்குய்யா இதெல்லாம்?” என்றாள் நெகிழ்ச்சியாய்.
”எப்பவும் சோத்துக்கு நீ திண்டாடப்டாது புள்ள…” என்றார் முத்துலிங்கம். அதை முடிக்க
முடியவில்லை. சயரோக இழுப்பு அதிகரித்து இருமல் வந்து விட்டது.
பெண்டாட்டி பிள்ளைகள் யாருமே அவரை வந்து பார்க்கிறதில்லை. அவர் நல்ல
விதமாயும் அடாவடித்தனமாயும் சேர்த்த துட்டு, எராளமான துட்டு அவர்களின்
பாத்யதைக்கு இருந்தது. அது போதும், அவர் வேண்டாம் இப்போது அவர்களுக்கு.
அவரும் இப்படித்தானே அந்த நாளில் இருந்தார்… துட்டு இருக்கிறது. அவர்கள்
வேண்டாம்… என்றுதானே இருந்தார்?’ என்பது அவர்கள் கட்சி.
முத்துலிங்கம் இறந்து போனார்.
ஓவென்ற ஒப்பாரி, தனிக்குரலாய்க் கேட்கிறது குடிசையுள்ளிருந்து… தெரு நாய்
ஒன்றின் அவல ஊளைபோல.
இனி அவளுக்கு ஆதரவு என்று யார் இருக்கிறார்கள்? நினைக்க நினைக்க அழுகை,
பிரிவுத் துயரம் பெருகியது. யாரும் இல்லை… எனக்கு யாருமே இல்லை.
‘இப்பிடி என்னைத் தனிய விட்டுட்டுப் போயிட்டீரே ராசய்யா?’ என அழுது
பெருக்குகிறாள் அவள்.
துட்டி என்று அவளேதான் போய்த் தாக்கல் சொல்ல வேண்டியிருந்தது.
போய் அவர் வீட்டு வாசலில் ஓரமாய் நின்று ‘ஐயா எறந்துட்டாங்க’ என்று கூனிக்
குறுகுகிறாள் உடம்பு கூசுகிறது. பெரியவன் மாசிலாமணி வெளியே வந்தான். ‘எப்ப?’
என்றான் மாசிலாமணி.
‘காலைல…’
‘ம்’ என்றான். எதற்கோ காறித் துப்பினான். ‘போ வரேன்’.
குடிசையுள்ளே வந்தவன் அவர் கிடந்த கிடக்கையைப் பார்த்தான். பிறகு அவர்
சடலத்தைத் தாண்டி மேற்கூரைகளில் எதும் காகிதம் சிக்குகிறதா பார்த்தான்.
‘ஏண்டி? உயில் கியில்னு எதும் எழுதிக் குடுத்தாரா?’
அழுதபடி இல்லை, என்று தலையாட்டினாள்.
நிம்மதிப் பெருமூச்சு விட்டான். ‘நாங்க பாத்துக்கறோம் இனி நடக்க வேண்டியதை…
நீ போ…’ என்றான் மாசிலாமணி.
மாசானத்துக்குச் சொல்லி ஆள் போயிற்று. தகன ஏற்பாடுகள் ஆரம்பித்தன.
சாவைப் பார்த்து எத்தனை நாளாச்சி? லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு வேலைக்கு
வந்தான் அவன். சுடுகாட்டு ஓரத்தில் அவனது குடிசை. திறந்து கிடந்தது. தட்டிக்
கதவுதான். பெரிய பாதுகாப்பு மறைப்பு என்று ஒன்றும் கிடையாது. காற்று
திறந்திருக்குமோ? நாய் கீய் புகுந்திருக்குமோ?
தள்ளாடி வந்தான். உள்ளே இவள். கருப்பு உட்கார்ந்திருந்தாள்.
‘என்னாடி?’ என்று காறித் துப்பினான். அவள் பதில் சொல்லவில்லை.
‘வா, எரு அடுக்கு…’ என்றான் மாசானம்.
யாருக்காகக் காத்திருந்தார்களோ? சடலம் வர நேரமாகி விட்டது.
அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது. கூடச் சேர்ந்து அழ, அவளுக்கு ஆறுதல்
சொல்ல யாரும் இல்லை. அவளது ஆறுதலுக்கு, ஆதரவுக்கு என ஒருவர் இருந்தார்.
அவர் இறந்து விட்டார்.
‘என்னாடி யோசனை? சீக்கிரம்… இப்ப வந்துரும் பொணம்…’
பிணம்!
அவளைத் தவிர எல்லாருக்குமே அது பிணம்.
உயிரோடு இருந்தவரை, அவர் பணம்! இப்போது பிணம்!…
மனிதனாக அவரை யார் எப்போது மதித்தார்கள்?
அவளைக்கூட இந்த உலகம் மனுஷியாகக் கணக்குப் போட்டதா என்ன? உடம்பு,
மதமதர்த்த உடம்பு. முத்துலிங்கத்தின் ‘நிழல்’ இல்லையென்றால் அவளை ஆளுக்கு
ஆள் சதைகொத்திப் பறவையாய்க் குத்திக் கிழித்திருப்பார்கள்…
இனி?…
பயமாய் இருந்தது. தன்னைப்போல கண்கசிந்தது. ஈரப்பானை.
முத்துலிங்கத்தின் சடலத்தை எருவில் இட்டபோது அழுகை தாள முடியவில்லை. து¡ர
நின்றுதான் அவளுக்கு அதைப் பார்க்க வாய்த்தது.
யாருமே அவருக்காக அழவில்லை. நேற்று கடைசிக் கட்டத் துடிப்புடன் அவள் மடியில்
கிடந்த உடம்பு அது. அந்த விரிந்த கண். வெறித்த கடைசிப் பார்வை… இன்னும் மனசில்
கிடந்தது அது. மறக்காது.
திகுதிகுவென அவர் நெஞ்சுமேல் எரிகிறது கொள்ளி. சிதை நெருப்பு.
அங்கிருந்தே மண்ணில் விழுந்து வணங்கினாள்.
குறை எதுவும் வைக்காமல் சிறு வயலை ஒதுக்கிக் கொடுத்து விட்டுப் போனார்
முத்துலிங்கம். ஹா, என்று பெருமூச்சு விடுகிறாள். சிதை எரிந்து கொண்டிருக்கிறது.
வயிறு பசித்தது அவளுக்கு.
நியதிகள் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.
வாய்க்கரிசி போட்டு விட்டுப்போன மிச்ச அரிசியை எடுத்துக் கொண்டு குடிசைக்குள்
வந்தாள். சொந்தமும் ஜனமும் அவருக்கு வாய்க்கரிசி போட்டார்கள். இதோ என்
வாய்க்கு அவரது மிச்ச அரிசி…
தண்ணி வைத்து அடுப்பு பற்ற வைக்கத் தீப்பெட்டி தேடினாள். கிடைக்கவில்லை.
பசித்தது அவளுக்கு. சரி என்று சிதையில் இருந்து நெருப்பை எடுத்துப் பற்ற
வைக்கிறாள்.
செத்தும் நீதாய்யா என்னைக் காப்பாத்தறே… என வாயார வாழ்த்தினாள்.
யார் உனக்காக அழுதாலும் அழாட்டியும் நான் அழறேய்யா… நீ செத்துப்போனா என்ன?
என்னிக்கும் எனக்கு ஆதரவு நீதான்…
ம், என்கிறாப்போல முத்துலிங்கத்தின் உடம்பு சிதையில் இருந்து எலும்புக்கூடாய்
எழுந்து கொண்டது.
ஹா… எனத் தள்ளாடி எழுந்து வந்தான் மாசானம். ஆத்திரத்துடன் கம்பால் அதை
அடித்துப் படுக்க வைத்தான். டாய் திருட்டு நாயே… என் பெண்டாட்டிய
அபகரிச்சிக்கிட்ட நாயே… குடிபோதை. கோபம். மாசானம் ஓங்கி ஓங்கி அடித்துப்
பிணத்தைப் படுக்க வைக்கிறான்.
அவளுக்கு உடம்பெல்லாம் வலித்தது. ஐயோ ஐயோ… என மனம் பதறியது.
காலையில் சுத்தமாய் எலும்பு மிச்சமில்லாமல் எரிந்திருந்தார் முத்துலிங்கம். சற்று தள்ளி
அயர்ந்து கிடந்தான் மாசானம்.
குங்குமம் அழிந்து வெளியே வருகிறாள் கருப்பு. மற்ற பெண்களுக்கு குங்குமம் பாதுகாப்பு
என்கிறார்கள். இதோ என் குங்குமம்…
அவள் சிதைச் சாம்பலைத் திருநீறாய் நெற்றியில் அணிந்து கொண்டாள்.