கருப்பட்டிச் சிப்பம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 18, 2020
பார்வையிட்டோர்: 4,467 
 
 

(இதற்கு முந்தைய ‘கமலா சித்தி’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது).

ஐந்து மகள்களில் முதல் இரண்டு மகள்களுக்கு கல்யாணத்தை அடுத்தடுத்து முடித்துவிட்ட வேணுகோபால், மூன்றாவது மகளின் கல்யாண விஷயமாகத்தான் திம்மராஜபுரத்திற்கு வந்து இறங்கி இருந்தார்.

எர்ணாகுளம், கோட்டயம், திருச்சூர் இல்லை என்றால் பாலக்காடு பக்கம் இல்லாத மாப்பிள்ளைகளா எங்கேயோ திருநெல்வேலியில் இருக்கும் திம்மராஜபுரம் என்ற புழுதிக்காட்டில் கிடைத்துவிடப் போகிறான்? ஆமாம் என்பதுதான் திம்மராஜபுர சமூகத்தினரின் ஒட்டு மொத்த பதில். அவர்களால் எதை மாற்றினாலும் இதை மாற்ற முடியாது.

பஞ்சாப் ஜலந்தரில் சிக்கரி வியாபாரத்தில் ஈடுபட்டு காலம் காலமாய் அங்கேயே இருந்து கொண்டிருப்பார் திம்மராஜபுரத்தை பூர்விகமாகக் கொண்ட ஒருவர். இன்னொருத்தர் மகாராஷ்டிரா லாத்தூரில் குடும்பத்தோடு குடியேறி உளுந்து வியாபாரம் செய்து கொண்டிருப்பார். இப்படியே கான்பூர், குண்டூர் என்று இந்தியா பூராவும் முப்பது வருடம் நாற்பது வருடம் என்று வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தாலும் – வீட்டில் மகளுக்கு மாப்பிளை பார்க்க வேண்டும் என்றாலோ இல்லை மகனுக்கு பெண் பார்க்க வேண்டும் என்றாலோ; அவர்களின் மெக்கா, ஜெருசலம், திருப்பதி எல்லாம் திம்மராஜபுரம்தான்.

இது திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சி, எர்ணாகுளம் வரை மலையாள மழையில் நனைந்துபோய் கிடக்கும் திம்மராஜபுரம்காரர்களுக்கு மட்டும் எப்படிப் பொருந்தாமல் போய்விடும்? அந்தப் பொருத்தத்தில்தான் வேணுகோபால் அவருடைய மூன்றாவது மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்ய திம்மராஜபுரத்திற்கு வந்து இறங்கியது.

வேணுகோபால் ஒரு பாலிஸி வைத்திருந்தார். அவரின் ஐந்து மகள்களுக்கும் டாக்டருக்குப் படித்த பையன்களையே பார்த்துக் கட்டிக் கொடுப்பது என்று. வேறு எந்தப் படிப்பு படித்தவன் வந்து தலைகீழாக நின்று பெண் கேட்டாலும் அவனுக்குக் கொடுப்பதில்லை. கலெக்டரே வந்து பெண் கேட்டாலும் சரி, அந்த ஆசாமி வேணுகோபாலுக்கு மாப்பிள்ளையாகி விடமுடியாது. அதென்னமோ வேணுகோபாலுக்கு டாக்டர் படிப்பின் மேல் அவ்வளவு ஒரு மரியாதை.

முதல் இரண்டு மகள்களுக்கும் அவர் டாக்டர் பையன்களைத்தான் பார்த்துக் கட்டிக் கொடுத்திருந்தார். இல்லாத ஏழைக் குடும்பத்தில் இருந்து கடனை கிடனை வாங்கிக் கஷ்டப்பட்டு படித்து வந்த டாக்டர் பையன்களைத்தான் தேடி தேடிப் பிடித்தார். காரும் பங்களாவும் வைத்துக் கொண்டிருக்கும் பெரிய பணக்கார டாக்டர் வீட்டுப் பையன்களை அவர் திரும்பியும் பார்ப்பது கிடையாது.

வேணுகோபாலுக்குத் தெரியும் பணக்கார வீட்டுப் பையன்கள் டாக்டருக்குப் படித்துவிட்டால் கிட்டத்தட்ட சினிமா நடிகை மாதிரியான லெவலில் ரொம்ப அழகான பெண்ணை மட்டும்தான் ஏறிட்டுப் பார்ப்பார்கள். அழகு இல்லாத பெண்களெல்லாம் பணவசதி இல்லாத படிப்பு இல்லாத அப்பாவிப் பையன்களுக்குத்தான்! அப்படி இருக்கும்போது அழகு என்றால் வீசை என்ன விலை என்று கேட்கிற, கருப்பட்டிச் சிப்பம் போல் இருக்கும் வேணுகோபாலின் மகள்களைக் கட்டிக்கொள்ள எந்தப் பணக்கார வீட்டுப் பையன் முன் வருவான்? இந்தியா பூராவும் கிளைகள் வைத்து வியாபாரம் செய்து கொண்டிருக்கும் வேணுகோபாலுக்குத் தெரியாதா இது? பெரிய பணக்கார வீட்டுப் பையன்களின் பக்கம் அதனால் அவர் தலை வைத்துக்கூடப் படுப்பதில்லை.

பணவசதி இல்லாத ஏழைக் குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு படித்த டாக்டருக்கு மட்டும் அழகான பெண்ணைப் பார்த்து கட்டிக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை இருக்காதா என்ன? கண்டிப்பாக இருக்கும். இருக்காமல் எங்கே போகும்? ஆனால் வீட்டு நிலைமை அந்த ஆசைக்கு குறுக்கே நிற்கும். அழகான பெண் என்பதைவிட பணவசதி நிறைந்த மாமனார் அப்போது முக்கியமாகத் தெரிவார். அந்த மாமனார் வேணுகோபாலாக இருந்தால் ரொம்பச் சந்தோஷப்பட வேண்டிய விஷயம். அந்த மாதிரி ராஜபோகமாகக் கவனித்து விடுவார் கவனித்து…

பெண்ணுக்கு முன்னூறு பவுன் தங்க நகை; மாப்பிள்ளைக்கு எட்டு வைர மோதிரங்கள்; டாலரில் வைரங்கள் பதித்த பத்துப் பவுன் தங்கச் சங்கலி; உலகத்திலேயே விலை கூடிய ரிஸ்ட் வாட்ச்; இதற்கும் மேல் முப்பது கிலோ வெள்ளிப் பாத்திரங்கள்; கட்டில்,பீரோ, சோபா…. இது தவிர பத்துபேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு தேவையான அளவு சமையலறைப் பாத்திரம் பண்டங்கள்; இவை அனைத்தையும் வைத்துக் கொள்ளும் படியான ஒரு வீடு. வீட்டின் முன்னால் மாப்பிள்ளை எந்தக் கார் வேண்டும் என்று கேட்கிறாரோ, அந்தக் கார். பிறகு என்ன பிறகு?

கல்யாணமான மறுநாளே வேணுகோபாலின் மகள் அவளின் திருமண வாழ்க்கையை எல்லா வசதிகளோடும் ‘ஜாம் ஜாம்’ என்று சமையல் அறையில் சமைக்கத் தொடங்குவதில் இருந்து ஆரம்பித்து விடலாம். அந்த மாதிரி அத்தனையையும் கன கச்சிதமாக செய்து கொடுத்துவிடுவார் வேணுகோபால்.

இத்தனை செய்து கொடுத்தாலும், இது அவருடைய ஒரு பக்கம்தான்.

அவரின் மற்றொரு பக்கம் டாக்டர் மாப்பிள்ளைக்கு எல்லா வசதிகளோடும் ஒரு ஹாஸ்பிடல் வைத்துக் கொடுப்பது. அவ்விதம் ஹாஸ்பிடல் வைத்துக் கொடுப்பதில் மட்டும் வேணுகோபால் ஒரு கண்டிப்பான நிபந்தனையை வைத்திருந்தார். அதாவது, ஹாஸ்பிடலை கேரளாவில் இருக்கும் ஏதாவது ஒரு ஊரில்தான் வைத்துக் கொடுப்பார். அதை அவருடைய மாப்பிள்ளை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். முடியாது என்று சொல்லிவிடக் கூடாது.

வேணுகோபாலுக்கு மலையாள மண் மீது அவ்வளவு பெரிய நன்றிக்கடன் உண்டு. கையில் காலணா இல்லாமல் பிழைக்க வந்த பூமி இல்லையா கேரளம்? வந்தவருக்கு வாரி வாரிக் கொடுத்த தேசம் இல்லையா மலையாளம்? அதனால் அவருடைய வீட்டு மாப்பிள்ளை கேரளத்தில்தான் ‘ப்ராக்டீஸ்’ பண்ண வேண்டும்.

வேணுகோபாலின் முதல் இரண்டு மாப்பிள்ளைகளும் அதே மாதிரி கேராளாவில் ஹாஸ்பிடல் வைத்தே ‘ப்ராக்டீஸ்’ பண்ணிக் கொண்டிருந்தார்கள். முதல் மாப்பிள்ளையின் ஹாஸ்பிடல் செங்கனாச்சேரியில்; இரண்டாவது மாப்பிள்ளையின் ஹாஸ்பிடல் கண்ணனூரில். இந்த இரண்டு இடங்களிலும் மருமகன்களின் ஹாஸ்பிடல்கள் ‘ப்ராக்டீஸ்’ சக்கைப்போடு போட்டன. ஊரில் வேறு டாக்டர்களே இல்லையா என்று கேட்கிற மாதிரிதான் அந்த இரண்டு பேரின் ஹாஸ்பிடல்களிலும் கூட்டம் திரண்டு கிடந்தது.

திருப்பதியில் ஏழு மலையானைத் தரிசிக்க பணம் கொடுத்து டிக்கெட் வாங்கும்போது எத்தனை மணிக்கு தரிசனம் கிடைக்கும் என்பதைக் குறிப்பிட்டு கையில் ஒரு டோக்கனைத் திணித்து விடுகிற மாதிரி வேணுகோபாலின் இரண்டு மருமகன்களின் ஹாஸ்பிடல்களிலும் காலை ஆறு மணிக்கே டோக்கன் கொடுத்து விடுவார்கள்.

அந்த வரிசையில்; அதில் சொல்லி இருக்கும் நேரத்தில்தான் டாக்டரைப் பார்க்க வேண்டும்; பார்க்கவும் முடியும். ஆனால் ஒரு முக்கியமான வித்தியாசம்.

பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிக்கொண்டு போனாலும், அரை நிமிடம்கூட ஏழு மலையானை நன்கு தரிசிக்க முடியாமல் கோயில் சேவகர்கள் பக்தர்களைக் கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக ‘ஜரகண்டி ஜரகண்டி’ என்று விரட்டித் தள்ளுவார்கள். வேணுகோபாலின் மருமகன்களின் ஹாஸ்பிடல்களில் அது கிடையவே கிடையாது. ஆற அமர நோயாளிகள் ரொம்ப ரொம்ப நிதானமாக சோதிக்கப் படுவார்கள்.

வந்தவர்களின் நோய்கள் மட்டும் உடனே அவசர அவசரமாக இடத்தைக் காலி செய்துவிட்டு ஓடிவிடும்! அப்புறம் செங்கனாச்சேரியிலும், கண்ணனூரிலும் பணம் வந்து கொட்டாமல் பின் என்ன செய்யும்?

திருப்பதி உண்டியல்தான்…!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *