கனவு காணுங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 23, 2019
பார்வையிட்டோர்: 7,161 
 

எப்போதுமில்லாத சந்தோசத்துடன் திரு பள்ளிக்கூடம் விட்டு வந்து கொண்டிருந்தான். கையில் வைத்திருந்ததை தொட்டு தொட்டு பார்த்து குதூகலித்தான்.நடையை வேகமாக போட்டான். தாத்தா சுந்தரத்தை பார்த்து முதல் வேலையாக இதைச் சொல்ல வேண்டும். யாருக்கும் கிடைக்காதது தனக்கு கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தான். திரும்பவும் கையில் வைத்திருந்த கொய்யா கன்றைத் தொட்டு பார்த்தான். பாவூரின் பள்ளிக்கூடத்தில் யாரோ அரசியல் கட்சியின் பொதுச்செயலாளருக்கு பிறந்த நாளாம். எப்படா கெடைக்கும்னு காத்திருந்து பெற்றது. ஆனால் அவர்களோ இந்தியா ஒளிர்கிறது நாமனைவரும் வளர்ச்சியை நோக்கி கனவு காண வேண்டும் நமது கலாம் அய்யா கூட சொல்லியிருக்காகல்ல அது போல கனவு காணுங்கள். நம் நாட்டில்தான் நிறைய வளங்கள் உள்ளன அதனையெல்லாம் வைத்து நம் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல நீங்கள் நன்றாக படித்து உழைக்க வேண்டும். என்று உண்மையான வளர்ச்சி எது என்று உணராமலேயே உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். திருவோ எப்படா முடிப்பாங்க அதைப் பெறலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தான். ஒரு வழியாக சக்கரைப் பொங்கலுடன் கொய்யாச் செடி கிடைத்தது திருவுக்கு மட்டும்தான். மற்ற கூட்டாளிகளுக்கு மரக்கன்றுதான் கிடைத்தது . இவனுக்கோ கொய்யா மரக்கன்று. நடந்து வரும் போதே கனவில் மிதந்தான். தான் நட்டு வைத்த கன்னு காய்த்து குலுங்குவதாகவும் அதை கால் சட்டைப் பையில் வைத்து பள்ளி இடைவேளையில் அந்த மணியைப் பார்க்க வச்சு தின்பதாக கனவு நீண்டது. ‘குமராவுக்கு கா கடி கடிச்சு கொடுக்கனும்’ என்றும் நினைத்தான்.

வீடு வந்ததும் தாத்தாவைத் தேடினான்.

“தாத்தா..,”

“தாத்தா…” கூவியழைத்தான்

திருவின் தாத்தா சுந்தரம் அந்த ஊரின் மிராசுதார். இயற்கை விவசாயம் செய்பவர். பாலையான அவ்வூரை பசுமையாக்கியவர். வயலும் தோப்பும் வளமாக இருந்தார். ரோட்டோரமாக தெற்கு பார்த்த வயல். பெரிய கிணறும் அருகிலேயே தண்ணீர் தொட்டியும் உள்ளது.

கூப்பிட்டுக் கொண்டே வந்தான்

“தாத்தா., இங்கனதான் ஒக்காந்திருக்கியா…எவ்வளவு சத்தம் போட்டேன். காதில் விழலயா?”.

கயித்துக் கட்டிலில் உட்கார்ந்து நிலைகுத்திய பார்வையுடன் சோகம் அப்பிக் கிடந்த முகத்தை மறைத்துக்கொண்டு ஆழ்ந்த சிந்தனையிலிருந்து மீண்டார் சுந்தரம்.

தான் கொண்டு வந்த கொய்யா கன்றை நடுவதற்கு இடம் காட்டச் சொல்லி நச்சரித்தான்.

“தாத்தா சொல்லு தாத்தா, எங்கன வைக்க இத? அப்டியே கள கொத்தை எடுத்து தா எனக்கு எட்டாது. சீக்கிரம் வா தாத்தா…குழி தோண்டனுமுல” என்று ஆர்வத்தில் பர பரத்தான்.

அவனின் பிடிவாத குணத்தால் தாத்தாவின் சோகம் லேசாக மறைந்தது. தண்ணீர் தொட்டிக்கருகிலேயே குழி தோண்டி பாத்தி அமைத்து கொடுத்தார். அப்படி இருந்தால்தான் திருவால் இலகுவாக தண்ணி தூக்கி செடிக்கு ஊத்த முடியும். அதனாலதான் அதனை அவனது கைக்கு எட்டும் உயரத்தில் அமைத்துக் கொடுத்தார்.

தாத்தாவும் பேரனும் கன்று நடுவதை பார்த்த மங்கலத்தாத்தா தண்ணீர் குடத்துடன் வந்தாள். மகிழ்ச்சி இரட்டிப்பானது. சுந்தரத்தின் கவலை ரேகை வெளித் தெரியா வண்ணம் மறைத்துக் கொண்டு தனது அப்பாவோடு சின்ன வயதில் நட்ட மரங்களை நினைத்துப் பார்த்தார். இன்று ஊர் முழுதும் பச்சை பசேலென்று இருப்பதற்கு காரணம், அன்று அவர்கள் நட்ட மரக்கன்றுகள்தான் என்பதை நினைவுக் கூர்ந்தார். அவரது அப்பாவுடன் பனைகள்தான் இன்றும் ஆத்துக்கரையில் நின்று நொங்கு, பனம் பழங்கள் எல்லாம் தந்து கொண்டுள்ளன. அவரது அப்பா ஆள் போட்டு டவுனுக்கு போற வழியெங்கும் இரு மருங்கும் நட்டவைகள்தான் இன்று நிழல் குடைகளாக குகைகள் போல மிகவும் அழகாக இருக்கின்றன.

சுந்தரத்திற்கு பிடித்ததே இப்போது முருகேசு டீக்கடையில் வைத்திருக்கும் அந்த பூவரசு மரம்தான். அது காட்டு பூவரசு. அது வெறும் மரம் மட்டுமல்ல, பலரது நினைவுகளின் கூடு. எப்படி எண்ணிப் பார்த்தாலும் அதில் கிறுக்கி இருக்கும் பெயர்கள் ஒரு அறுபது அல்லது எழுபது ஜோடி பெயர்கள் தாங்கி நிற்கும் மரத்தின் அருகில்தான் பஞ்சாயத்தாரிடம் கெஞ்சி கடையை போட்டிருந்தான் முருகேசு. மொத்த ஊர் ஜனங்களும் சங்கமிக்கும் இடம் அது. இப்போதும் பேருந்துக்கு காத்திருக்கும் இளந்தாரிகள் பெயர்களை செதுக்கி கொண்டுதான் இருக்கிறார்கள். மேலத்தெரு பஞ்சாயத்துக்கு சென்ற சுந்தரம் முருகேசு டீக்கடையிலதான் பேப்பர் படித்தார். அன்றிலிருந்து அவர் வீட்டிலிருப்பவர்களுடன் சரியாக பேசுவதில்லை கவலை தோய்ந்த முகத்துடனே காணப்பட்டார்.

சுந்தரத்தின் அப்பா ஒரு நாற்று. பத்து மைல் தூரத்திலிருக்கும் பழஞ்சூரிலிருந்து பிழைப்புத் தேடி இங்கு வந்த போது அவருக்கு பத்து வயதிருக்கும். இந்த ஐம்பதாண்டு காலத்தில் இடம் வாங்கி அதை தோப்பாக்கியும் வயலாகவும் வைத்து விவசாயம் செய்து வந்தவர்கள். ஏனோ சுந்தரத்தின் அப்பாவிற்கு அந்த முதலில் வாங்கிய நிலத்தின் மீது அளவு கடந்த பாசம். அதில் வாங்கும் போதே கிணறு இருந்தது அதனை அகழ்ந்தும் தூரெடுத்தும் பெரிதாக்கினார்கள். இப்போ தண்ணீர்த் தொட்டி கட்டி, மோட்டார் போட்டு அதிலிருந்துதான் பக்கத்து வயலுக்கும் கூட தண்ணீர் பாய்கின்றது. அந் நிலத்தின் மண்ணை குழைத்துத்தான் அவுங்க அப்பத்தா சுந்தரத்திற்கு ஊட்டி விட்டாளென சொல்லி பெருமை கொள்வார் சுந்தரம். உண்மைதான். “இந்த மனுசனுக்கு உசிரு போகலன்னா இந்த மண்ண கரச்சு ஊத்தனும்” என்று சொல்லும் மங்கலத்தாத்தா. நிலம் தின்று வளரும் ஒரு மிருகம்தான் மனிதனும். உயிர்க்கொடியும் நிலக்கொடியும் பின்னிப் பிணைந்துதான் உள்ளது. உலகின் அனைத்து உரிமைக்குரல்களிலும் இந்த மண்ணின் வாசனையும், ஒலிக்குறிப்புகளும் இருந்து கொண்டேதான் வந்துள்ளது.

“டேய் என்னடா தெரியும் உங்களுக்கு நெலத்த பத்தி, அது என் உசிருடா, பாலையா கெடந்த நெலத்த செரச்சு வளப்படுத்துனது நாங்கடா. குந்துனாப்புல வந்து தூக்கிட்டு போகப் பாக்கிறீயளா. செருப்படிதான்டா.”

அய்யய்யோ…அய்யய்யோ என் ஒடல வெட்டி ஓனாய்க்குல போடுறாய்ங்க…காப்பாத்துங்க அய்யா காப்பாத்துங்க…அந்த வேட்டை ஓநாய்கல அடித்து விரட்டுங்க…ஆ…ஆ…அ…என் வயிற்றில் வந்து குதறி தொப்புள் கொடியை அறுக்குது பாருங்கய்யா…பாருங்கய்யா…அய்யா யாருமே கேட்க ஆளில்லையா….என் மரத்தயெல்லாம் எரிச்சு கரிக்கட்டயா ஆக்கிபுட்டானுங்களே….”

“என்னங்க… என்னங்க… என்னா ஒரே பினாத்துறிங்க”

“இந்தாங்க… எழுந்துறீங்க, தண்ணிய குடிங்க காப்பித்தண்ணி ஏதும் போட்டுத்தரவா” நிதானத்திற்கு வந்த சுந்தரம். தண்ணிய வாங்கி குடித்தார். தொண்டைக்குழி அசைவிலேயே புதைந்தது அவரின் சோகம்.

எல்லாம் அந்த பேப்பரை படிச்சதிலிருந்து இந்த மனுசன் மொகமே சரியில்ல” என மங்கலம் அங்கலாய்த்தாள்.

திரு முன்பெல்லாம் பள்ளி விட்டு வந்தால் தாத்தாவுடன்தான் பேசிக்கொண்டிருப்பான். அவர் மரம் பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் சொல்வதை கேட்டு விட்டு பள்ளியில போய் கூட்டாளிகளிடம் கதையடிப்பான்.

“டேய் ராமா ஒனக்கு தெரியுமா?”

“ஒரு மரம் ஒரு வருசத்துக்கு நமக்கு நானூறு கோடி ரூபாய்க்கு காத்து தருதான்டா” எங்க தாத்தா சொன்னிச்சுடா

“ஆமான்டா நாம மரத்த நெறைய நட்டாதான் மழ வருமான்டா

இயற்கையோட ஒட்டி வாழனுமான்டா இல்லாட்டி புயலும் வெயிலும்தான் அதிகமா வருமான்டா”

இந்த மாதிரி நிறைய விபரங்கள் சுந்தரம் தாத்தாவிடம் கேட்டு வந்து சொல்லுவதால் அவனது ஆசிரியரிடமும் நல்ல பேர்.ஆனால் இப்ப எல்லாம் அவனுக்கு அந்த கொய்யா கன்னு நெனப்புதான். தூங்கி எந்திரிச்சதும் அதுக்கு தண்ணி ஊத்திவிட்டு வளர்ச்சியை அளந்து பார்ப்பான். தன் கூட்டாளிகளை அழைத்து வந்து அது கொழுந்து விட்டதை காண்பித்தான். தாத்தாவுக்கோ பேரனின் கனவுகள் கலைந்திடுமோ என்ற ஏக்கம். இருந்தும், திரு விடாது கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுவார். இருவருக்குமே சலிக்கவில்லை.

எப்ப தாத்தா செடி பெருசாகும்?
எப்ப தாத்தா பூ பூக்கும்?
எப்ப தாத்தா காய்க்கும்?
எப்ப பழுக்கும்?
இனிக்குமா?
எத்தன காய்க்கும்?
ஒனக்கு எத்தன வேனும்?
அம்மாக்கு
கருப்ப சாமிக்கு
குமராவுக்கு
தம்பிக்கு எல்லாருக்கும் எத்தன கொடுப்பது என மனதிற்குள் திட்டம் தீட்டி வைத்தான். தாத்தாவிடமும் அந்த பட்டியலை ஒப்பித்தான்.

தாத்தாவும் அவனுக்கு சீனிக் கொய்யாவின் பலன்களாக நிறைய சொன்னார். அதுவும் நாட்டுக் கொய்யாவின் ரோஸ் வண்ணத்தையும் அது தீர்க்கும் நோயைப் பற்றியும் சொன்னவைகள் சில அவனுக்கு புரியவில்லையென்றாலும் அந்த ரோஸ் வண்ணத்தை பஞ்சு மிட்டாயின் வண்ணத்துடன் ஒப்பிட்டுக் கொண்டான் அதனால் அவன் மனதிற்குள் ஒரு இனிப்புச் சுவையும் வாசமும் பரவியது. இப்படியாக கனவுகளும் கேள்விகளும் வளர்ந்தன. கனவுகள் காண்பதும் அதனைத் தேடி பெறுவதிலும், சில நேரம் அதனை பெறமுடியாமல் சூழல் அழுத்துவதும்தானே வாழ்க்கை. அது பற்றியும், பாவூருக்கு வரவிருக்கும் ஆபத்து பற்றியும் ஏதுமறியாமல் தனது கொய்யா பழ கனவுடன் தினமும் சிறகடித்தான் திரு.

பள்ளியிலும் கொய்யா புராணம் ஓயவில்லை

ஏய் குமரா ஒனக்கு காக்கடி கடிச்சு தாரேன்
மணிப்பயல
பாக்க வச்சி திங்கனுமுண்டா
என சதா கொய்யா கனவிலேயே மிதந்தான். அதனால கணக்கு டீச்சரிடம் கிள்ளு வாங்கினான். அதுவும் அந்த குண்டம்மா தொடையிலதான் கிள்ளும். கையிலும் சதைப்பகுதியை நெருடும். அந்த வலியெல்லாம் பெரிசா இல்ல அவனுக்கு கவனம் முழுதும் கொய்யாவை பற்றியே இருந்ததால். தேர்வில் கூட சரியா மார்க் எடுக்கலன்னு திருவின் அப்பா “எல்லாம் நீங்க கொடுக்கிற செல்லம்” என சுந்தரத்தை கடிந்து கொண்டார்.

அன்றும் அது போலவே கொய்யா கன்னு பெரிசா வளர்ந்ததை கூட்டாளிகளுக்கு காண்பிக்க அழைத்து வந்தான். வரும் போதே யார் யாருக்கு எத்தன கொய்யா பழம் வேனும் என்றும். ஒரு பழம் ஒரு ரூபாய் என்று விலையும் வைத்து பேசிக் கொண்டே வீட்டிற்கு போகாமலேயே கிணத்தடிக்கு போனதும் அதிர்ச்சியானான்.

அங்கே பெரிய நீண்ட குழி தோண்டியிருந்தது. நிறைய பெரிய கருத்த குழாய்கள் கிடந்தன. பெரிய பெரிய மஞ்சள் நிற வாகனங்கள் நீளமான கைகளை வைத்துக் கொண்டு அசைந்து கொண்டிருந்தன. கொய்யா கன்னை காணாது தவித்து. அழுது.கோபத்துடனும் தாத்தாவை அழைத்துக்கொண்டே வீட்டிற்கு வந்தால் ஓரே கூட்டம். புரியாது விழித்தான்.

கெயில் கேஸ் நிறுவனம் அவனின் கொய்யா கனவையும் தாத்தாவையும் காவு வாங்கியிருந்தது. பூவரசு மரத்தின் வேரோடிய வளர்ச்சிப் பாதைகள் அறுந்து கிடந்தன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *