கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 16, 2022
பார்வையிட்டோர்: 5,737 
 
 

காலை ஆறு மணி. எங்கள் சமையலறையில் நான். எனது பார்வை வெளியே. வளவில் கொல்லை. நீள்சதுர வடிவில் கூம்பிய புல்தரை. அந்தலையில் பழம்பெரும் எலுமிச்சை. அதற்கப்பால் சாய்ந்தெழும் சூரியன். புல்பூண்டுகளைத் தொடுத்து அடர்ந்து படர்ந்த சிலந்திவலை. காலை வெயிலில் ஒளிரும் அதன் வெண்மை. பூமி சுழல, கதிரவன் மேலெழும் அந்த ஒருசில நொடிகளில் ஒரு கேடயம்போல் எங்கள் புல்தரை பளிச்சிடும். நான் ஒருகணம் மெய்மறப்பேன் – மறுகணம் அது வெறும் பச்சைப் புல்லாய் மாறிவிடும். எனது அன்றாடக் கனவும் அடியோடு கலைந்துவிடும்.

இதனை ஏற்கெனவே நான் பார்த்தது எங்கே? எப்பொழுது? எனது வாழ்க்கையில் இழையோடும் எண்ணிறந்த நினைவுகளுள் இங்கே குமுறியெழுந்தது எது? என்று நான் யோசிக்கிறேன். யோசிக்கவே, நான் கணப்பொழுது நடமாடிய கனவுலகு மறைந்து, நனவுலகு தோன்றும். ஆ! எனது புல்லு வெட்டியைச் சீக்கிரமே பழுதுபார்ப்பிக்க வேண்டும் என்று எனக்குள்ளே முணுமுணுப்பேன். பெலிசியா புல்லை வெட்டச் சொல்லப் போகிறாள். ஒன்றைச் செய்யச் சொல்லி என்னை அவள் நச்சரிப்பதற்குள் அதனைச் செய்து முடித்துவிட வேண்டும் என்பதே எனது நெடுநாளைய ஆசை.

புல்லை வெட்டினான் தாமன்

புல்லிலே வீழ்ந்தான்

வெட்டியால் வெட்டினான் தாமன்

வெட்டுண்டு வீழ்ந்தான்…

அது அன்றூ மாவெல் எழுதிய புல்லு வெட்டிய தாமன் என்ற கவிதை. போகட்டும். இப்பொழுது கவிதையைப் பற்றி நான் நினைத்தும் பார்க்கக்கூடாது.

இந்த வீட்டில் முதலில் எழுந்து உடுத்துப்படுத்து நிற்பது நான்தான். அப்பொழுது மாடிக் குளியலறையில் பெலிசியா நடமாடுவது கேட்கும். எங்கள் மகன் ஒரே கிடைதான். அவனை விஞ்சிய தூங்குமூஞ்சி எவனும் பிறந்திருப்பானோ என்று நான் வியப்பதுண்டு. நாங்கள் அவனைக் கொஞ்சம் பிந்தித்தான் எழுப்புவோம். அவன் வெகுண்டெழுந்து சிடுசிடுப்பான் – அவன் எங்களை எழுப்ப, நாங்கள் அல்லவோ வெகுண்டெழுந்து சிடுசிடுக்க வேண்டும்? ஓ, மறந்துவிட்டேன். அவனுடைய பெயர் காரத். அந்தப் பெயர் எனக்குப் பிடிக்கவில்லை. அது எனது மாமாவின் பெயர்!

‘எட்வேட், அச்சாப் பிள்ளை, எனக்கொரு தேத்தண்ணி போட்டுத் தருவீங்களா?’ என்று எனது இல்லத்தரசி தனது இனிய குரலில் அன்புக் கட்டளை இடுவாள்.

இந்த நகரம் எனக்குப் பிடிக்கவே இல்லை. அப்பாவும் அம்மாவும் வருவார்கள். காரை நிறுத்துவார்கள். அப்பா காரை விட்டிறங்குவார். நின்ற இடத்தில் நின்று ஓடுவார். பெருமூச்செறிந்து பயிற்சி செய்வார். அவருக்கு வாயு பறியும். அதனால் ஓசோன் மண்டலத்தில் பிராணவாயு மூலகங்கள் பெருகுவதாக அம்மா பொருமுவா. நான் தர்மசங்கடப்பட்டு, அப்பால் நகர்வேன். சுண்டெலிச் சாம்பல் நிறமான கடல், கூழாங்கல் மணல்வெளி, அலைதாங்கி, பகட்டுப் பூச்சுகளுடன் கூடிய வீடுகள், விடுதிகள் அனைத்தையும் சீர்தூக்கிப் பார்ப்பேன். உலாமேடை எங்கும் அலைமோதும் மக்கள். அலைநுரைகள் கால்வருட நடைபயிலும் ஆட்கள். அனைவரையும்; ஊடுருவிப் பார்ப்பேன். இந்த நகர வாழ்வு நிறைவுதரும் அறிகுறியோ, ஆறுதல் தரும் அறிகுறியோ அவர்களுடைய முகங்களில் தென்படுகிறதா என்று துழாவிப் பார்ப்பேன். ஜேம்ஸ் ஜொயிசின் மொழியில் சொல்வதாயின், அவர்களுடைய அன்றாடக் கனவு ஓரளவேனும் நனவாகும் அறிகுறியைக் கண்டாலே போதும் என்ற எண்ணத்துடன் அவர்களைத் துருவித் துருவிப் பார்ப்பேன். அத்தகைய அறிகுறி எதுவும் எனது கண்களுக்குத் தென்படாது. எனது தெம்பும் குன்றிவிடும்.

எங்கள் (பெலிசியாவின்) வொல்வோ காரில் நான் ஏறுவேன். பெலிசியா என்னைக் கொஞ்சுவாள். நான் திரும்பவும் ஒரு தகுந்த ஊடகத் துறைஞனாய் மாறி, எனது இச்சைப்படி கட்டுரை எழுதி, ‘கைநிறையச் சம்பாதிப்பது’ அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவளுடைய அகராதியில் ‘சம்பாதிப்பது’ என்றால் ‘கைநிறையச் சம்பாதிப்பது’ என்பதே கருத்து. நான் கவிதையைக் கைவிட்டது அவளுக்குப் பரமானந்தம். அதை வெளியே காட்டமாட்டாள். நான் மூன்று கிழமைகளாகப் பாடுபட்டு ‘தற்கால ஆங்கிலக் கவிதையில் புகைவண்டியின் சாயல்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி சக்கரம் என்ற சஞ்சிகைக்கு அனுப்பினேன். அவர்கள் எனது கட்டுரையின் ஆறு பிரதிகளை எனக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்தார்கள். அதை அவள் தகுந்த கைமாறாகக் கருதவில்லை. அதற்கு நான் கூலி வாங்காததை அவளால் நம்பவே முடியவில்லை. அதை ஒரு பிழைப்பென்றே அவள் கருதவில்லை. ‘நீ ஒரு வங்கியில் வேலை செய்கிறாய். நான் ஓராண்டு முழுவதும் உழைப்பதைவிட நீ அங்கே ஆறு – இல்லை – எட்டு மடங்கு அதிகம் உழைக்கிறாய். ஆகவே எனக்கு விருப்பமானதை நான் ஏன் செய்யக்கூடாது?’ என்று அவளிடம் கேட்கவேண்டும் போலிருந்தது. பெலிசியாவின் வைப்பாட்டன் என்றவகையில் நான் மானம்கெட்ட வாழ்க்கைதான் நடத்தி வந்தேன். எனினும் எனது நெஞ்சில் இன்னும் கொஞ்ச மானம் எஞ்சியிருந்தது. அவள் எனக்குப் பசப்புவார்த்தை கூறி ஏவியதன் பேரில் சக்கரம் ஆசிரியர் பிலிப்பருடன் தொடர்புகொண்டேன். அவர் எனது கட்டுரைக்குக் கூலிதரச் சம்மதித்து என்னை வியக்கவைத்தார். ஆதலால் நான் பெலிசியாவைக் கொஞ்சி விடைபெற்று, காரை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். சிட்டர் என்ற சஞ்சிகைக்கு விளையாட்டு வீராங்கனைகளின் புதிய தலைமுறை – ‘விளையாட்டுக் குட்டிகள்’ – பற்றி ஒரு கட்டுரை எழுதுவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காகப் புறப்பட்டேன். அது அந்தச் சஞ்சிகைக்கு நான் எழுதும் மூன்றாவது கட்டுரை. முதலாவது தடைதாண்டிப் பாயும் குட்டி, அடுத்தது சைக்கிளோடும் குட்டி, இப்பொழுது உயரம் பாயும் குட்டி.

என்னை ஓர் இளைஞர் விடுதியில் அல்லது கிறீஸ்தவ இளைஞர் விடுதியில் தங்கும்படி அம்மா வலியுறுத்தினா. நான் மறுத்துவிட்டேன். படுத்தெழும்ப ஒரு அறை கிடைத்தால் போதும் என்று நான் அடம்பிடித்தேன். அம்மாவுக்கு விட்டுக்கொடாததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அது ஒரு வெதுப்பகத்துக்கு மேல் இருக்கும் அறை. அம்மா அந்த அறையில் நின்றுகொண்டு சுற்றிவர வேவுபார்த்தா. அடிப்பலகைகளை ஊடறுத்து, சுடுபாண் மணம் கிளம்பியது. அம்மாவுக்கு நம்பிக்கை பிறந்தது. நானும் அப்பாவும் சாமான் சண்டிகளை மேலே கடத்தினோம்: பயணப்பைகள், இசைத்தட்டுப் பெட்டிகள், ஒலிபெருக்கிகள்… சாளரத்துக்கு வெளியே வளவுத் தோட்டம். அம்மா சாளரத்தடியில் நின்றுகொண்டு வெளியே எட்டிப்பார்த்து மரங்களையும் செடிகளையும் இனம்பிரித்தா: மஞ்சள்மலர்ச் செடி, புன்னை, அத்தி, எலுமிச்சை…

‘அசோக மரம்’ என்றார் அப்பா.

‘இல்லை, எலுமிச்சை’ என்று அடித்துச் சொன்னா அம்மா. அவர்கள் என்னைச் சுதந்திரமாக இருக்கவிடத் தயங்கி, கொஞ்ச நேரம் இழுத்தடித்தார்கள். ஆனால் நான் முகத்தைக் கடுகடுப்பாய் வைத்துக்கொண்டேன். தேநீர் குடிப்போமா அல்லது உலாவப்போய் வருவோமா என்று கேட்பதில்லை என்ற தீர்மானத்தைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்தேன். அவர்களை விரட்டியடிப்பதற்கு அந்த உபாயமே கைகொடுத்தது.

அம்மா என்னைக் கொஞ்சி விடைபெற்றா.

‘வரட்டே, எட்வேட் குஞ்சு! கடும்பிடியாகப் படிக்கவேண்டாம்.’

‘இல்லை, கடும்பிடியாகத்தான் படிக்கவேண்டும். அதற்காகத்தான் இந்த ஏற்பாடு’ என்று அப்பா குறுக்கிட்டார்.

அவர்கள் போன கையோடு நான் சுருட்டி வைத்திருந்த படங்களை எடுத்துத் தூக்கினேன். பிளாஸ்திக் போர்வைக்குள் தடிப்புநிற மேனி பிதுங்கும் பெண், சிவப்புச் சால்வையுடன் தோன்றும் அறிஸ்டைட் புறுவன்ட் இரண்டும் நினைவுக்கு வருகின்றன. பிறகு தவறணையைத் தேடித் திரிந்தேன். காண்வாலிஸ் தவறணையில் ஒரு பைந்து பியர் குடித்தேன். மூன்று சிகரட்டுகளை ஊதித் தள்ளிவிட்டுத் திரும்பவும் அந்த விசாரத்தில் மூழ்கினேன்: பள்ளிப் பரீட்சையைத்தான் சொல்லுகிறேன். எல்லோர் கண்களுக்கும் கெட்டிக்காரனாகத் தெரிந்த நான், நான் அறிந்து தெளிந்து சிறந்து விளங்கிய வரலாற்றுப் பாடத்தில் தேறத் தவறியது ஏன்?

அது தென் கரையோரத்துக்கும் இலண்டனுக்கும் சரிநடுவில் பரந்து விரிந்த நகரம். அங்கேதான் உயரம் பாயும் குட்டி வாழ்ந்து வந்தாள். நான் பல தடவைகள் அந்த நகரத்தைக் கடந்தும் ஊடறுத்தும் போயிருக்கிறேன். கெற்விக் விமான நிலையத்தை அணுகும் ஜெற்-விமானங்கள் அந்த இடத்துக்கு மேலாகத் தாழப் பறக்கும். அந்த இடம் எனக்குப் பிடிக்கவே இல்லை. ஆனால் அதற்கு ஜெற்-விமானங்கள் மட்டும்தான் காரணம் என்று சொல்வதற்கில்லை அங்கே எல்லாமே புதுமையாய்த் தெரியும். எங்கு பார்த்தாலும் அந்த நகரத்தைத் திட்டமிட்டவரின் ஒருபடித்தான கைவண்ணம் புலப்படும். சிறைப்பட்ட மரக் கன்றுகள், திட்டமிட்டு அமைத்த சுற்றுவட்ட வீதிகள், மிதமிஞ்சிய வீதி அடையாளங்கள், நேர்த்தியாக மரங்கள் நாட்டிய வீதியோரங்கள்… புதியதே மோசம். புதுமையானது அதைவிட மோசம். அங்கே ஒரு வரலாற்றுப் புகழ்வாய்ந்த நிலையம் இருக்கிறது. ஆனால் நான் என்றுமே அதனை அடைய முடியவில்லை ஆதலால் சசெக்ஸ் நகரத்திலேயே நான்காவது உயரமான கோபுரத்தைக் கொண்ட தேவாலயம், நோர்மானியர் கட்டிய கோட்டையின் சிதைவுகள், ஜோர்ஜ் மன்னர் காலத்து வடிசாலை எல்லாவற்றையும் நான் கற்பனைசெய்தே பார்க்க வேண்டியுள்ளது. அந்த நகரத்தைச் சூழும் வீதி என்னை வெறெங்கும் விலகவிடாது நேரே கால்பந்தாட்டத் திடலுக்கும் விளையாட்டு வளவுக்குமே இட்டுச்செல்லும். அங்கேதான் நான் யூலியானா லியூகோவிற்சைச் சந்தித்து, அவள் பயிற்சி செய்வதைப் பார்க்;கப் போகிறேன்.

அது மாணவர்களைப் பரீட்சைக்கு ஆயத்தப்படுத்தும் நிலையம் – பாடம் திணிக்கும் நிலையம். பரீட்சையில் ஏமாந்தவர்களால் அது நிரம்பி வழிந்தது. பரீட்சையில் தோற்ற மாணவர்கள் எல்லோரும் தமது தோல்வியை ஈடுசெய்வதற்காக அங்கு வந்தவர்கள் என்பது புரிந்தது. எனது வரலாற்று ஆசிரியரின் பெயர் திருமதி பிரான்சிலர். எதற்கும் மசியாத பெண்மணி.

‘எந்தப் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்தாய்?’ என்று கேட்டார்.

‘ஒக்ஸ்போர்ட்’ என்று சொன்னேன்.

‘என்ன படிக்க விரும்புகிறாய்?’

‘வரலாறு’.

‘புகுமுகப் பரீட்சையில் நீ சறுக்கிய வரலாற்றைச் சொல்லு பார்ப்போம்!’

‘ஏக்கத்தால் நிலைகுலைந்து போனேன். மூன்று மணித்தியாலங்களாக ஒரு சொல்லுமே எழுதவில்லை. வினாத்தாளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.’

‘ஒரு சொல்லும் எழுதாமல்?’

‘ஒரு கீறும் போடாமல்’ என்று சொன்னேன். அவர் கண்ணைக் கூசி என்னைப் பார்த்த பார்வையில் ஐயுறவு புலப்பட்டது. ஆதலால் 1815ம் ஆண்டில் இயற்றப்பட்ட தானியச் சட்டத்தைப் பற்றி ஒரு கட்டுரை எழுதும் பணியில் அவர் என்னைச் சிக்கித் திணற வைக்க முடிவுசெய்தார். ‘எங்கே, உனது கெட்டித்தனத்தைப் பார்ப்போம்’ என்று அறைகூவல் விடுத்தார்.

கட்டடத்துக்கு வெளியே சிறைப்பட்ட ஒரு மரக்கன்றில் சாய்ந்துகொண்டு புகைத்த ஒரு சிகரட் எனக்குத் தெம்பூட்டியது. அப்புறம் அந்தக் கட்டுரையை எழுதும் நோக்குடன் அறைக்குத் திரும்பினேன். அப்பொழுதுதான் அந்தப் பெண்ணைக் கண்டேன்.

தசைநார் புடைத்து முறுக்கேறிய ஒருவன் அங்கே நிற்கிறான். வெள்ளைக் காற்சட்டையும் இறுக்கமான வெள்ளை அரைக் கைச்சட்டையும் அணிந்திருக்கிறான். ஒரு கடதாசித் தட்டிலிருந்து எதையோ வாசிக்கிறான். ஓட்டப் பயிற்சி உடை அணிந்த விளையாட்டு வீரர்கள் சிலர் புல்லில் இருந்தபடி அதனைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் விளையாட்டுத் திடலின் குறுக்காக அவர்களை நோக்கி நடக்கிறேன். ‘நான் யூலியானா லியூகோவிற்சைத் தேடி வந்திருக்கிறேன்’ என்று சொல்லுகிறேன். அவன் என்னை ஏறெடுத்தும் பாராது தொடர்ந்து பேசுகிறான் – சாப்பாடு, சூட்டுச்சத்து, புரதச்சத்து, மாச்சத்து, இனிப்புச்சத்து…பற்றி எல்லாம் பேசுகிறான்.

‘மன்னிக்க வேண்டும்’ என்று குறுக்கிடுகிறேன்;.

‘குறுக்கிடாமல் இருக்க முடியாதா?’ ஈற்றில் என்னை வெறுப்புடன் ஏறெடுத்துப் பார்த்துக் கேட்கிறான்.

‘சிட்டர் சஞ்சிகைக்காக யூலியானா லியூகோவிற்சைப் பேட்டிகாண வந்திருக்கிறேன்’ என்று சொல்லுகிறேன். சொன்னவுடன் அவன் குழையத் தொடங்குகிறான். இருவரும் அப்பால் நகர்கிறோம். அவன் தன்னை அறிமுகம் செய்கிறான்.

‘எனது பெயர் டேல் ஓடென். யூலியானாவுக்கும் கழகத்தில் இருக்கும் மற்றவர்களுக்கும் பயிற்சியளிப்பது நான்தான்.’

‘நீங்கள் டபிள்யூ. எச். குடும்பத்தவரா?’

‘யார் அந்த டபிள்யூ.எச்.?’

இப்பொழுது கவிதையைப் பற்றி நான் நினைத்தும் பார்க்கக்கூடாது.

‘போகட்டும். எங்கே யூலியானா?’

‘அவளுக்குச் சாடையான தடிமல். வீட்டுக்கு அனுப்பிவிட்டேன்.’

நான் எனது அறைக்கதவைத் திறந்தேன். அப்பொழுது அவள் மேலே இருக்கும் அறையிலிருந்து கீழே இறங்கி வந்தாள். படிக்கட்டு வழியே மெத்தக் கவனமாக, தொக்குத் தொக்குகென்று அடியெடுத்து வைத்தாள். விழுந்துவிடுவாளோ என்று பயந்தபடி, தனது குதி உயர்ந்த காலணியில் கண்வைத்தபடி, ஒரு கிழண்டிய ஆளைப்போல் கூனிக் குறுகியபடி, இளம்பொன் கீற்றுப் போன்ற கூந்தல் முகத்தில் கவிந்தபடி, ஓர் ஓரமாய் இறங்கி வந்தாள். அவளுடைய இடது முழங்காலில் ஒரு காய்ந்த வடு தெரிந்தது. அவள் பாதுகாப்பாகக் கீழ்மட்டத்தை அடைந்தவுடன் நிமிர்ந்து நின்று இண்டு கைகளாலும் தனது கூந்தலை நெற்றிக்கு மேலாகக் கோதிவிட்டாள். எனக்கு ஒரு நொடியில் தசைநார் புடைத்து முறுக்கேறியது. வாய் பிளந்து, மூச்சு வாங்கியது.

‘ம்’ என்று முனகி முறுவலித்தேன்.

‘நீங்கள் கிட்டடியில் குடிபுகுந்தவரா?’ என்று கேட்டாள்.

‘ஓம்.’

‘சரி. வருகிறேன்.’

அப்புறம் தானியச் சட்டத்தைப் பற்றி எதையாவது எழுதித் தொலைக்கலாம் என்ற நம்பிக்கையுடன் படுக்கையில் குந்தினேன். அவளுடைய காய்ந்த வடுவில் என் மனம் சாய்ந்தபடியால், ஒரு மணித்தியாலமாகத் தெண்டித்தும், என்னால் ஒன்றுமே எழுத முடியவில்லை.

தியூடர் விடுதியிலிருந்து பெலிசியாவை அழைத்து யூலியானாவின் நிலைவரத்தைத் தெரிவிக்கிறேன். இவ்வளவு தூரம் காரைச் செலுத்திக்கொண்டு ஒக்ஸ்போர்ட்டுக்கு வந்து, அடுத்த நாள் மீண்டும் காரைச் செலுத்திக்கொண்டு இங்கு திரும்பி வருவதில் அர்த்தமில்லை என்பதை விளக்குகிறேன். ‘நாளைக்குத் திம்மல் வீட்டில் எங்களுக்குச் சாப்பாடு. மறக்க வேண்டாம்’ என்று பெலிசியா நினைவூட்டுகிறாள். நான் மறந்துவிட்டேன். இல்லை, மறக்க விரும்பினேன். ‘ஆகப்பிந்தி வரக்கூடாது’ என்று பெலிசியா மிருதுவாக எச்சரிக்கிறாள். நான் தொலைபேசியை வைத்தபிறகுதான் மகன் காரத்தைப் பற்றி விசாரிக்கத் தவறியதை உணர்கிறேன்.

விளையாட்டுத் திடலிலிருந்து ஒரு மைல் தள்ளி, நகரத்தைச் சூழும் வீதிக்கு அப்பால் தியூடர் விடுதி அமைந்துள்ளது. நகரத்தின் ஏனைய கட்டடங்களைப் போலவே தியூடர் விடுதியும் ஒரு புதுமைவாய்ந்த நவீன விடுதி. அங்கே ஓர் உடற்பயிற்சிக் கூடம், ஒரு சிறிய நீச்சல் தடாகம், ஒரு குட்டிக் குழிப்பந்தாட்டத் திடல், போர்ட்குலிஸ் என்ற பெயர் கொண்ட ஒரு குதம், எஸ்கற்சியன் என்ற பெயர் கொண்ட ஓர் உணவகம் எல்லாம் அமைந்துள்ளன. எனது அறையில் வைத்து எவருக்கும் தெரியாமல் காட்சிக்குக் காட்சி காசு கட்டிச் சிற்றின்ப வெறியூட்டும் திரைப்படங்களைப் பார்க்கும் வசதியும் உண்டு. விடுதிப் புறத்தை விட்டே நான் வெளியேறத் தேவையில்லை.

திருமதி பிரான்சிலர் பாமஸ்டனின் இரண்டாவது அரசாங்கம், 1859-1865, பற்றி எழுதப்பணித்த இன்னொரு பயங்கரமான கட்டுரையை நான் எழுதத் தெண்டித்தேன். அப்பொழுது அந்தப் பெண் வந்து எனது கதவில் தட்டினாள். ஒரு பிளக்கை மாற்ற வேண்டும். அதற்கு ஒரு ஸ்குறூட்றைவர் இரவல் கிடைக்குமா என்று கேட்டாள். அதற்குரிய ஸ்குறூட்றைவர் என்னிடம் இல்லை. அதனால் சற்று சங்கடப்பட்டேன். ஆனால் என்னிடம் ஒரு பன்முனை வில்லுக்கத்தி இருக்கவே செய்தது. அதில் ஒரு ஸ்குறூட்றைவர் முனையும் இருந்தது. அந்த வில்லுக்கத்தியை அவளிடம் இரவல்கொடுத்து மகிழ்ந்தேன். அவள் தனது பிளக்கை மாற்ற எடுக்கும் நேரத்தைப் பயன்படுத்தி எனது அறையைக் கூட்டித் துடைத்தேன். கேற்றிலைத் தூக்கி அடுப்பில் வைத்தேன். பிளாஸ்திக் போர்வைக்குள் தடிப்புநிற மேனி பிதுங்கும் பெண்ணின் படத்தைக் கழற்றிச் சுருட்டி வைத்தேன்.

‘மிக்க நன்றி’ என்று சொல்லி அவள் வில்லுக்கத்தியைத் திருப்பித் தந்தாள்.

‘ஒரு கோப்பி குடிக்கலாமே…’ என்று இழுத்தேன். அவள் ஒரு நொடி யோசித்துவிட்டு ‘ஓம், அதுக்கென்ன? குடிக்கலாமே’ என்றாள்.

அவளுடைய பெயர் இவோனி. ஒரு தாதியாக வர விரும்பினாள். அதற்குப் படிப்பதற்காக ஒரு பந்தயப் பதிவகத்தில் காசாளராக வேலைசெய்து காசு சேமிக்கத் தெண்டித்தாள். அவள் மூன்று வெல்லக் கட்டிகளை எடுத்தாள். அவளுடைய காதலன் பெயர் தோனி. அவளுடைய இடது முழங்காலில் காய்ந்த வடு – அவளுடைய சொந்தக் கவசம் – மறைந்துவிட்டது. அவள் பிறந்த ஊர் பெட்போர்ட். நான் ஒரு சிகரட்டை எடுத்து நீட்டினேன். அவள் வேண்டாம் என்றாள். அவள் மென்தல் மட்டுமே புகைப்பவள். சின்னஞ்சிறிய கண், வாய், மூக்கு… பிதுங்கிய உதடுகள். கவர்ச்சியும் வன்மமும் அலைபாயும் முகம். அவள் பொருமுவதா, கோபிப்பதா என்று தடுமாறுவதுபோல் தெரிந்தது. அவளுக்கும் அந்த நகரம் பிடிக்கவில்லை. ஆனால் இலண்டனைவிட அங்கே வாழ்க்கைச் செலவு குறைவு. அவளுடைய இளம்பொன் கீற்றுக் கூந்தல் நீண்டு திரண்டிருந்தது. அவள் என்னைப் பற்றி ஒன்றுமே கேட்கவில்லை. எனது பெயரை அவளுக்கு எப்படித் தெரிவிப்பது என்று தெரியாது திண்டாடினேன்.

விளையாட்டரங்குக்கு காலை 7 மணிக்கே, வந்துவிடவேண்டும் என்று டேல் ஓடென் அறிவுறுத்தியிருந்தான். அவன் அறிவுறுத்தியவாறே நான் வந்து சேருகிறேன். முதல்நாள் இரவு சாப்பாட்டுக்குப் பிறகு சக்கரம் சஞ்சிகைக்காக ‘எலிசபெத் பிஷொப்பின் கவிதையில் ஆசையின் அசாத்தியம்’ என்ற கட்டுரையை எழுதுவதற்காக போர்ட்குலிஸ் குதத்திலிருந்து எலிசபெத் பிஷொப்பின் கவிதைகளை வாசித்து வாசித்து மூன்று முறை பிறண்டி குடித்து முற்றிலும் விடியாத முகத்துடன் வந்து சேருகிறேன். முதன்முதல் வந்துசேர்வது நான்தான். விளையாட்டரங்கு பூட்டியிருக்கிறது. சற்று எரிச்சலடைகிறேன். அருகிலிருக்கும் தரிப்பிடத்தில் ஒரு பஸ் வந்து நிற்கிறது. ஓர் உயர்ந்த பெண் இறங்குகிறாள். எனது உயரம் 5 அடி 11 அங்குலம் சரி, சரி, 5 அடி 10 அங்குலம். அவள் என்னை விட 2 அங்குலம் உயரம் என்று அடித்துச் சொல்லலாம். அவளுடைய கையில் ஒரு கடுநீலப் பை தொங்குகிறது. அவள் என்னை நோக்கி வருகிறாள். முழுநீளக் காற்சட்டை. இளஞ்சிவப்பு நிறமும் பைகள் பலவும் கொண்ட இறுக்கமான புறச்சட்டை. சிலாவிய இனத்தவருக்கே உரிய உரத்த முகம். முகத்தின் பின்புறம் வாரி, குதிரை வால் போல் தொங்கவிடப்பட்ட கருங்கூந்தல்.

வரிசை திறம்பிய வெள்ளைப் பற்களைக் காட்டிப் புன்னகை புரிகிறாள்.

‘ஓ, டேல் இன்னும் வரவில்லையா? அந்த ஆள் பிந்தி வருவதுதான் வாடிக்கை.’

எனக்கு மூச்சு வாங்குகிறது. ‘நீ யூலியானா தானே?’ என்று கேட்கிறேன்.

நான் கதவைத் திறந்தேன். ‘எட்வேட், நீங்கள் கார் ஓடுவீங்களா?’ என்று இவோனி கேட்டாள் எனது பெயரை அவளுக்கு எவன் சொன்னான்?

‘ஓம், ஏன்?’

‘ஒரு பெரிய உதவி செய்ய வேண்டும்.’

இவோனி கார்த் திறப்பைத் தந்தாள். வெதுப்பகத்துக்கு வெளியே ஓர் இளஞ்சிவப்பு போர்ட் பியெஸ்டா கார் நின்றது.

‘இது உனது காரா?’

‘தோனியின் கார். அவன் ஒரு மணித்தியாலத்துக்கு முன்னரே வந்திருக்க வேண்டும்’ என்று அவள் உறுமியது விசித்திரமாக இருந்தது. அவளுடைய ஆவேசத்தை என்னால் அவதானிக்காமல் இருக்க முடியவில்லை.

‘தோனியா?’

‘வம்புக்குட்டி!’

இவோனி காருக்குள் வைத்து ஒரு மெந்தல் சிகரட்டை எடுத்து நீட்டினாள். நான் வேண்டாம் என்றேன். அவள் புகையை ஊதி முன்கண்ணாடியில் கோலமிட்டாள்.

‘மெத்தப் பெரிய உதவி, எட்வேட். உண்மையில் இது ஒரு முக்கியமான உதவியும் கூட. அது உங்களுக்கே புரியும்?’

அவளுக்கு உதவுவதில் நான் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தேன். இவோனியுடன் அவளுடைய காதலனின் காருக்குள் இருக்கும் கிளுகிளுப்பில் நான் திளைத்தேன் என்பதே உண்மை! (14ம் நூற்றாண்டில் மங்கிய ஆங்கிலேயக் குடிமை) பற்றி எழுதிய கட்டுரையைப் பாதியில் வீசிவிட்டுப் புறப்பட்டது எனக்கு மகிழ்ச்சியையே தந்தது. அப்புறம் காரின் முன்புற வெளிச்சத்தை ஏற்றும் தறுவாயில் இவோனியின் ஒல்லி வெள்ளைத் தொடைகள் என்னைச் சுண்டி இழுத்தன. அவளுடைய டெனிம் அரைப்பாவாடையின் கீழ்விளிம்பு அந்தளவுக்கு உயர்ந்திருந்தது.

‘நாங்கள் எங்கே போகிறோம்?’ என்று கேட்டேன்.

‘கென்ற். அப்புறம் கெற்விக் விமான நிலையம்’ என்றாள் இவோனி.

யூலியானா ஒருசில தடவைகள் ஐம்பது மீட்டர் ஓட்டம் ஓடிப் பழகிய பிறகு தனது ஆடைகளைக் களைகிறாள். நானும் டேலும் அவளையே பார்க்கிறோம். அந்த இளந்தளிர் குனிந்து நிமிரும் எழிலை நான் அள்ளிப் பருகும் வேளையில் (உடற்பயிற்சி, கையுந்தல், கால்வைப்பு பற்றி) டேல் பிதற்றுவது என் காதில் அரைக்கரைவாசி விழுகிறது. எல் கிறெக்கோ அல்லது கிளிமிற்றி போல மெத்த அளவான, ஆனால் சற்று நீளமான உடல்வாகு… இந்த வர்ணனை எனக்குப் பிடிக்கிறது. கிளிமிற்றியின் பிறந்தமேனியை நவீன விளையாட்டு வீராங்கனையின் சிறந்தமேனியாகப் பார்க்க விரும்புவோர் யூலியானாவைப் பாருங்கள் என்று எனது கட்டுரையை ஆரம்பிக்கலாமா என்று யோசிக்கிறேன். அப்பொழுது யூலியானாவின் ஒல்லி வெள்ளைத் தொடைகளிலும் கைகளிலும் மணிக்கட்டுகளிலும் விரல்களிலும் எனது பார்வை பதிகிறது. இய்ந்து கவ்வும் சேர்க்கைத் துணியிலமைந்த அரையங்கிக்கும் மேலங்கிக்கும் உள்ளிருந்து புடைக்கும் அவளுடைய இடுப்பெலும்புகளிலும், விலா எலும்புக் கூட்டினுள் சப்பளியும் சின்னஞ்சிறிய மார்பகங்களிலும் எனது பார்வை விழுகிறது. அப்பொழுது ஈகான் சீலியின் பிறந்தமேனியை… என்று மாற்றிக் கட்டுரையை ஆரம்பிக்கலாமா என்று யோசிக்கிறேன்.

உயரம் பாய்வதற்கான குறுக்குச் சட்டத்தை டேல் எனது உயரத்துக்கு உயர்த்துவது போல் தெரிகிறது. யூலியானா பாய்ந்தோடி வருவதற்கு அடிக்கணக்கு எடுக்கிறாள். தனது குதிரைவால் கூந்தலை இறுக்குகிறாள். அன்றைய தினம் தான் பாயும் முதலாவது பாய்ச்சலில் புலனைச் செலுத்தி முன்னும் பின்னும் சாயத் தொடங்குகிறாள். டேல் ஓர் உடற்பயிற்சி ஆசிரியரைப் போல் வள்! வள்! என்று கத்துகிறான் (‘பக்கம் சாய்!’ ‘கால் ஊன்று!’ ‘எஃறிப் பாய்!’). அவள் நிலத்தை நோக்கி ஒரு வில்லினைப் போல் வளைந்து துள்ளி ஓடி எஃறிப் பாய்ந்து பறந்து புரண்டு குறுக்குச் சட்டத்துக்கு மேலாகக் கைகளையும் தலையையும் வீசி, கால்களை நீட்டி அந்தக் காற்றடைத்த மெத்தையில் போய் விழுகிறாள். அந்தப் பறவை பின்புறமாய் பறந்து விழ (ஏங்கும்) மெத்தையோ மூச்சுவிடத் திணறுவது போல் தெரிகிறது.

வெற்றிகரமாய்ப் பாய்ந்தும் (பயின்றவாறு பாயாததால்) எரிச்சலுடன் பின்வாங்கி மெத்தையை விட்டு இறங்குகிறாள். தான் அணிந்திருக்கும் அரையங்கியின் தையல்விளிம்பை ஒரு விரலால் தனது பிட்டப் பிளவிற்கு வெளியே இழுத்துவிடுகிறாள்.

‘மண்ணாங்கட்டி! வெறும் மண்ணாங்கட்டி!’ என்று டேல் யூலியானாவைப் பார்த்துக் கத்துகிறான்.

ஒரு நாட்டுப்புறத்து வீதிக்கு அப்பால் இருக்கும் ஒரு சுற்றுலாக் களத்தில் காரை நிறுத்தச் சொன்னாள் இவோனி. நானும் அவளும் காருக்குள். எங்களைச் சுற்றி இருளில் மூழ்கும் கென்ற் புலம். அவள் தொடர்ந்து புகைத்துக்கொண்டே இருந்தாள். வானலைகளில் தனக்குப் பிடித்த நிலையத்தை நாடி றேடியோவைத் திருகினாள். இந்தக் காலத்து ஆடலுடன் கூடிய பாட்டுகள் அவளுக்குப் பிடித்ததாகத் தெரியவில்லை. எரிச்சலுடன் பின்வாங்கி றேடியோவை நிறுத்தினாள்.

‘நாங்கள் என்ன அலுவலுக்காக இந்தப் பக்கம் வந்திருக்கிறோம்?’ என்று கேட்டேன்.

‘ஒரு ஆளுக்காகக் காவல் இருக்கிறோம்.’

‘ஓ, நீ கார் ஓட மாட்டாயோ?’

‘ஓடக்கூடாது. அளவுமீறிக் குடித்து அகப்பட்டுக் கொண்டேன்.’

‘ம்’

அவள் என்னைப் பார்த்து ‘நீங்கள் அந்தக் கல்லூரியில் என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டாள்.

‘பரீட்சைக்கு ஆயத்தம் செய்யும் நிலையத்தையா கேட்கிறாய்? அங்கே வரலாறு படிக்கிறேன். உயர்தரப் பரீட்சையில் கோட்டை விட்டுவிட்டேன். திரும்பவும் பரீட்சை எழுதப்போகிறேன்.’

‘வரலாற்றறிஞராய் வரும் எண்ணமோ?’

அதை எண்ணிப் பார்த்துவிட்டு ‘இல்லை’ என்றேன்.

‘அப்படி என்றால், வரலாறு படிக்கும் காரணம்?’

‘வரலாறு எனக்குக் கைவந்த கலை.’

‘அதில்தானே கோட்டை விட்டீர்கள்?’

அது நியாயமான கேள்விதான். அப்புறம் யாரோ ஒருவன் காரின் பின் கதவைத் திறந்து உள்ளே பாய்ந்தான்.

டேல் என்னையும் யூலியானாவையும் தனியே நிற்க விடவில்லை.

‘பிரித்தானிய தேசிய சாதனைப் புள்ளியை எட்டுவதற்கு அவள் இன்னும் இரண்டு சென்டிமீட்டர் உயரம்தான் பாயவேண்டும். அடுத்த பந்தயத்தில் அதை அவள் எட்டிவிடுவாள்… அப்படித்தானே யூலியானா?’

‘எனது முழுத் திறமையையும் காட்டுவேன், டேல்.’

‘அப்படிச் சொல்லடி என் செல்லக் கண்டு… ஓசிலோ, இதோ வருகிறேன்’

யூலியானா ஓடுதடத்தில் அமர்ந்து தனது ஓட்டக் காலணிக்கு முடிச்சப் போடுகிறாள். எழுந்து நிமிர்ந்து நிற்கிறாள். குதிரைவால் முடிச்சை அவிழ்த்து தனது பளபளக்கும் கருங்கூந்தலைக் குலைத்துவிடுகிறாள். அவளுடைய இயல்பான, அப்பழுக்கற்ற அங்க அசைவுகள் என்னை ஆட்கொள்ளுகின்றன. ஒருபடியாக டேல் எங்களைத் தனியே நிற்கவிட்டு தடைதாண்டி ஓடுவோர் சிலருடன் பேசுவதற்குப் போகிறான்.

‘இரவுச் சாப்பாட்டுக்கு வரலாமே’ என்று அவளிடம் கேட்கிறேன். அவளுடைய பார்வை ஏனோ ஒருகணம் டேல்மீது பட்டுத் தெறிக்கிறது.

‘வருவேனோ தெரியாது’ என்கிறாள்.

‘நான் தியூடர் விடுதியில்தான் தங்கியிருக்கிறேன். ஆளிலும் ஆட்டத்திலும் புலனைச் செலுத்திக் கட்டுரை எழுதினால்தான் சிட்டர் சஞ்சிகைக்குப் பிடிக்கும். நானே காரில் வந்து ஏற்றி வருவேன். அப்புறம் ஒரு கூலிக்காரில் ஏற்றி அனுப்புவேன்’ என்று ஆசைவார்த்தை கூறித் தூண்டினேன்.

‘சரி, இரவு சந்திப்போம், சூலி ஐயா.’

‘ஏன்? எட்வேட் என்று சொல்லலாமே!’

இருக்கையில் இருந்தபடியே பின்புறம் திரும்பிக் காருக்குள் நுழைந்த கட்டையனை ஏற இறங்கப் பார்த்தேன்.

அவன் என்னை முழுசிப்பார்த்து, வெகுண்டெழுந்து ‘யாரடி இந்த இழவு விழுந்தவன்?’ என்று அதட்டினான்.

‘அந்த வம்புக்குட்டி, தோனி, வரவேயில்லை. இது எட்வேட்.’

‘ஓ…’ அவன் கோபம் தணிந்து முறுவலித்தான். ‘மெத்தப் பெரிய உதவி, எட்வேட். நான்தான் தோமி.’

‘தோமிதான் என்னுடைய முதலாளி’ என்று சொல்லிச் சிரித்தாள் இவோனி. அது இயல்பான, அப்பழுக்கற்ற, திடீர்ச் சிரிப்பு. தோமியின் செய்கைக்கு முழுவிளக்கமளித்து என்னை முற்றிலும் திருப்திப்படுத்தியதாகக் காட்டும் சிரிப்பு.

‘இனி நாங்கள் புறப்படுவது நல்லது. அந்த விமானம் இன்னும் இரண்டு மணித்தியாலங்களில் புறப்பட்டுவிடும்’ என்றான் தோமி.

யூலியானாவின் ஒப்பனை ஏதோ ஒரு வகையில் அவளை மேலும் இளமைபடக் காட்டுவது எனக்கு நூதனமாய் இருக்கிறது. அவளுடைய அணிமணியும் குதிபதிந்த காலணியும் அவளை என்னைவிட நாலு அங்குலம் உயர்த்திக் காட்டுகின்றன. ஒரு வாழையின் உடல்வாகு கொண்ட அந்த வாலையுடன் எஸ்கற்சியன் உணவகத்துள் நுழைவது போன்ற ஒரு விநோதமான, நூதனமான அனுபவம் எனக்கு இதுவரை வாய்த்ததில்லை. அதிலிருந்து விடுபடும் மனநிலையில் எனக்குப் பசிக்கவே இல்லை. பெரிய பாடுபட்டு எனது மாட்டிறைச்சித் துண்டில் அரைவாசியைச் சாப்பிட்டு முடிக்கிறேன். தவிர்க்கமுடியாத காரணத்தால் திம்மல் வீட்டுச் சாப்பாட்டுக்கு என்னால் வரமுடியாத நிலைமை ஏற்படப்போகிறது என்று அறிவித்தபொழுது பெலிசியா என்மீது எரிந்து விழுந்தது என்னை ஓர் உலுக்கு உலுக்கிவிடுகிறது. நான் குடிக்கவே விரும்புகிறேன். யூலியானா குடிப்பதில்லை. ஆகவே ஒரு முழுப் போத்தல் வைனையும் நானே குடித்து முடிக்கிறேன்.

உயரம் பாய்வதைப் பற்றி நான் ஒரு கேள்வியும் கேட்காதபடியால், எனது எழுத்துக்களைப் பற்றி யூலியானா பல கேள்விகள் கேட்கிறாள். நான் முதன்முதல் எழுதி வெளியிட்ட நோயுடல் அமைப்பு என்ற நாவலைப் பற்றியும், பல வருடங்களாகியும் எழுதி முடிக்காத மெக்சிக்கோவின் பூர்வ குடிகள் என்ற இரண்டாவது நாவலைப் பற்றியும் அவளிடம் சொல்லுகிறேன். அவற்றைவிடக் கவிதையைப் பற்றி எழுதுவதே எனக்கு மிகவும் பிடிக்கும் என்று நான் சொன்னவுடன், அவளுடைய முகத்துக்கு அதுவரை மெருகூட்டிய தன்னடக்கம் கலைகிறது. முதல் தடவையாக அவளுடைய முகம் மலர்கிறது. எனது கவித்துவ அனுபவத்தை அறிவதில் அவளுக்கு ஏற்படும் வேட்கையின் தூய்மை அவளுடைய பார்வையில் மிளிர்கிறது. தனக்குக் கவிதை என்றால் கொள்ளை ஆசை என்கிறாள். நான் அவளுடைய கண்களை ஊடுருவிப் பார்த்து, எனக்கும் கவிதை என்றால் கொள்ளை ஆசை என்கிறேன். அப்புறம் இருவரும் மூச்சுப் பேச்சில்லாமல் இருக்கிறோம். நாங்கள் வயது வந்தவர்கள். இத்தகைய சூழ்நிலையில் எங்களிடையே ஒரு வெளி விழவே செய்யும். அதனை மீறி நான் அவளுடன் உடலுறவு கொள்ள விழைவது அவளுக்குப் புரிகிறது. ஒரு காவல்துறைஞன் அவளைப் பின்புறமாய் அணுகி, அவளுடைய தோளைத் தனது வைரக் கரத்தால் பற்றுகின்ற உணர்வு அவளுக்கு ஏற்படுகிறது. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படக்கூடும் என்பதை அவள் அதுவரை சற்றும் சிந்தித்துப் பார்த்ததில்லை. முகம் சிவந்து, தலை குனிந்து அந்த இறைச்சி உண்டியில் ஒரு துண்டை வெட்டி எடுக்கிறாள். அவள் தனது நீண்ட விரல்களை மடக்கி அந்தக் கத்தியையும் முள்ளுக் கரண்டியையும் அழுத்திப் பிடிக்கும் பாங்கும், அவளுடைய மணிக்கட்டில் புடைக்கும் எலும்பும்…எனக்குத் திடீரென அழவேண்டும் போலிருக்கிறது. நான் முணுமுணுக்கிறேன்:

நான் புல்லு அரிகிறேன்

யூலி மெல்ல வருகிறாள்

உள்ளம் புல்லாய்ச் சாய்கிறது

கள்ளி மெல்ல அரிகிறாள்…

‘புரியவில்லை.’

‘அது அன்றூ மாவெலின் புல்லரி பாடல். போகட்டும். உனக்கு எத்தனை வயது?’

‘ஆ… பத்தொன்பது.’

எனக்கு இரட்டி மடங்கு வயது. நான் அவளுடைய தகப்பனுக்குச் சரி!

நானும் இவோனியும் கெற்விக் விமான நிலையத்து கோப்பி;க் கடையில் இருந்தபடி, தோமியும் அவன் மனைவி ஐறினியும் வாக்குவாதப்படுவதைப் பார்த்தோம். அப்பொழுது நேரம் இரவு 11.45. மஜோக்கா-பலுமா விமானம் மூன்று மணித்தியாலம் தாமதித்துப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

‘அது ஐறினியின் விமானம். எங்களுக்கு கொஞ்சம் அவகாசம் கிடைக்கும்’ என்றாள் இவோனி.

குடிமையைப் பற்றிக் கட்டுரை எழுதவேண்டும் என்பது உள்ளத்தை உறுத்தியது. அடுத்தநாள் காலை 9 மணியளவில் அது தயாராய் இருக்க வேண்டும். ‘நான் போவதற்கு யோசிக்கிறேன்’ என்றேன்.

‘நாங்கள் தோமியைத் திரும்பக் கொண்டுபோய் விடவேண்டுமே…’

‘எங்கே?’

‘சிறையில்தான்… யோசிக்க வேண்டாம். அது கட்டுப்பாடற்ற சிறை. அவன் 7 மணிக்கு முன்னரே திரும்பிப் போய்விட்டால், அவன் வெளியேறிய சங்கதி அவர்களுக்குத் தெரியவராது.’

‘சரி.’

இவோனி என் முகத்தைப் பார்த்தாள். ஒரு கைதி தற்காலிகமாவேனும் தப்பிச்செல்வதற்கு உதவியும் ஒத்தாசையும் புரியும் திட்டத்துடன் நான் வாழ்ந்து வரவில்லை என்பது அவளுக்குப் புரிந்தது. அதனால், தோமி ஒரு சிறிய கையாடலுக்காகவே சிறையிருக்கிறான் என்றும், அது எவரையுமே பாதிக்காத குற்றம் என்றும் அவள் எனக்கு விளங்கப்படுத்தினாள்.

கெற்விக் பக்கம் வந்த நோக்கம் என்னவென்று கேட்டேன். தோமியின் பழைய கூட்டாளியுடன் தங்கியிருப்பதற்காக ஐறினி ஸ்பெயினுக்குப் போகிறாள். ஐறினி இங்கே நின்று தனது பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டும் என்பதால் தோமி அவளை ஸ்பெயினுக்குப் போகவிடாது தடுப்பதற்குப் பாடுபட்டான். அதில் நேரம் போய்விட்டது. நள்ளிரவு கெற்விக் பக்கம் பறந்துவந்த காரணம் அதுதான் என்றாள் இவோனி.

‘பிள்ளைகளா?’

‘அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள்.’

தோமியும் ஐறினியும் தேநீர்க் கடைப் பக்கம் வந்தார்கள். ஐறினி எனக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டாள். ஒரு தளதளப்பான பெண். விபரம் தெரிந்தவள் என்பது கண்ணில் தெரிந்தது. ஸ்பெயின் நாட்டு வெயிலுக்கு ஏற்றவிதமாக வெட்டிக் குறைத்த உடுப்பு. ஆனால் கண்ணைப் பறிக்கும் நிறம். தோமி, இவோனியுடன் ஏதோ தனியே பேசவேண்டும் என்று சொல்லி அவளை அப்பால் கொண்டு சென்றான். நானும் ஐறினியும் தனியே விடப்பட்டோம். அவளுக்கு ஒரு கோப்பி வாங்கிக் கொடுத்தேன். ஒரு சிகரட்டையும் எடுத்து நீட்டினேன். வாங்கிக்கொண்டாள்.

‘விமானம் புறப்படத் தாமதமாகும் என்று கேள்விப்பட்டேன்’ என்றேன்.

‘கூலி விமானம் அல்லவா?’

‘பயங்கரம்.’

ஐறினி என்னைக் கூர்ந்து பார்த்து ‘அப்புறம், நீங்களும் இவோனியும்…?’ என்று இழுத்தாள்.

‘இல்லை. இல்லை, நான் அவளுடைய அறைக்குக் கீழறையில் தங்கியிருக்கிறேன்.’

ஐறினி புகையை உறிஞ்சியபொழுது அவளுடைய மேலுதடு குறுகி ஆழமாய்ப் பிளவுண்டது. அவள் தனது (கட்டைக் கைப்) புறச்சட்டையின் கழுத்து மடிப்பை ஐதாக்கினாள். மார்பகங்களின் இடுக்கைச் சரிப்படுத்தினாள். ஒரு தோட்டைக் கழற்றி மறுபடி அணிந்தாள். அன்று மாலை எனக்கு ஏற்பட்ட அந்த விநோதமான, விசித்திரமான அனுபவம் மேலும் மோசமடையும் வாய்ப்பை எண்ணி ஏங்கினேன்.

‘மஜோக்காவுக்குப் போயிருக்கிறீர்களா, ஸ்டீபன்?’

‘எட்வேட்.’

‘எட்வேட்.

‘இல்லை, பாசலூனாவுக்குப் போயிருக்கிறேன்.’

‘நான் பாசலூனாவுக்குப் போனதில்லை. நீங்கள் லாஸ் பாமாசுக்குப் போயிருக்கிறீர்களா?’

‘ஆ, கனேறித் தீவுகளுக்கா?’

‘ஓம், போயிருக்கிறீர்களா?’

‘இல்லை.’

மஜோக்கா விமான சேவை இரத்தான சேதியுடன் தோமியும் இவோனியும் திரும்பி வந்தார்கள். ஐறினி அதனை நம்பவில்லை. இரத்தான சேதி கையோடு அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் கருமபீடத்துக்குப் போய் அதனை உறுதிப்படுத்துவதற்குத் தன்னுடன் வரும்படி அவள் என்னை வற்புறுத்தினாள். விமான சேவை இரத்தானது உண்மையே. பிரான்சில் விமானக் கட்டுப்பாட்டாளர்கள் வேலைநிறுத்தத்தில் குதித்திருக்கிறார்கள். அதனால் பல ஐரோப்பிய விமான சேவைகள் பாதிக்கப்பட்டுவிட்டன. ஐறினியின் கண்கள் குளமாகின. தோமியின் முகத்தில் கிளர்ந்த புன்னகையை அவனால் மறைக்க முடியவில்லை. நான் பீதியடைந்தேன்.

‘இப்படித்தான் எனக்கு நடக்கிறது, எட்வேட். நான் ஒருபொழுதும் சந்தோஷமாக இருக்கமுடியாது. இனிமேல் எனது பிரச்சனை எல்லாம் தீரப்போகிறது, நான் சந்தோஷமாக இருக்கப்போகிறேன் என்று நினைக்கும் பொழுதெல்லாம் இப்படித்தான் நடக்கிறது.’

‘அது உன்னுடைய விதியோ தெரியவில்லை. என்றாலும் பிள்ளைகளை யோசித்துப்பார். நீ போகக்கூடாது என்பதுதான் விதியோ தெரியவில்லை.’

நான் சொல்லியதை அவள் யோசித்துப் பார்த்தாள். கைமொழியினால் தனது கண்ணீரைத் துடைத்தாள். எனது கையைப் பிடித்து அழுத்தினாள். அவளுடைய நீண்ட நகங்கள் எனது உள்ளங்கையைத் தீண்டின.

‘நன்றி, எட்வேட். மெய்யாகத்தான் சொல்லுகிறேன். நன்றி.’

தியூடர் விடுதியின் வாயில் கூடத்தில் நானும் யூலியானாவும் அவளுடைய கூலிக்காரை எதிர்பார்த்துக்கொண்டு நிற்கிறோம். அவள் நழுவப் போகிறாள். எனக்கு சுதி பிறக்கிறது. நான் பீதி அடைகிறேன். அவளைக் கைநழுவ விடக்கூடாது!

‘யூலியானா, நீ எனது அறைக்கு வந்தால் அந்தக் கவிதையைக் காட்டுவேன்.’

‘எந்தக் கவிதையை?’

‘யூலியானா கவிதையை.’

‘நான் திரும்பிப் போவதுதான் நல்லது.’

‘நான் உன்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுத விரும்புகிறேன், உனது வாழ்க்கை வரலாற்றை எழுத விரும்புகிறேன், யூலியானா.’

‘ஆ, கார் வந்துவிட்டது.’

நான் அவளைக் கொஞ்சுவதற்கு ஆசைப்படுகிறேன். அதற்கு நான் எக்கி நின்று கழுத்தை நீட்டவேண்டும் என்பது புரிகிறது. நான் அடியெடுத்து அவளை நெருங்குகிறேன். அவளுக்கு நாடி ஒடுங்குகிறது. கவிதையில் ஆசையின் அசாத்தியம்… திடீரென யூலியானாவின் உயரத்துடன் எனது உயரத்தை ஒப்பிட்டு வெட்கப்படுகிறேன். அவள் அங்கே நின்று எச்சரிக்கையுடனும், ஐயறவுடனும் என்னைப் பார்க்கிறாள். அவள் அதிருப்தியுடன் பார்க்கிறாளோ, நான் எதையோ கெடுத்துவிட்டேனோ என்று ஏங்குகிறேன். நான் விருந்தோம்பியதற்கு அவள் நன்றி கூறுகிறாள். தியூடர் விடுதி முகப்புக் கதவின் தடித்த கண்ணாடியின் ஊடாக அவள் புறப்படுவதைப் பார்க்கிறேன். அவள் கூலிக்காரினுள் குனிந்து நுழையும்பொழுது என்னைப் பார்த்துக் கடைசித் தடவையாகக் கையசைத்து விறுக்கென விடைபெறுகிறாள்.

வெதுப்பகத்துக்கு வெளியே காரை நிறுத்தியபொழுது நேரம் அதிகாலை.

‘இப்படி ஒரு பொழுது! ஐறினி போகாமல் நிற்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அவளுக்கு என்ன சொன்னீர்கள்?’

‘எனக்கே தெரியாது’ என்று சொன்னேன். தோமியும் ஐறினியும் ஏதோ கதைத்தார்கள். ஐறினி ஒரு கூலிக்காரைப் பிடித்துக்கொண்டு தாய் வீட்டுக்குத் திரும்பிப் போனாள். அவள் தனது பிள்ளைகளை அங்கேதான் விட்டு வந்திருந்தாள். சிறைக்குத் திரும்பிப் போகும்பொழுது தோமி சிந்தனையில் ஆழ்ந்தான். நான் ஐரினியுடன் கதைத்த சங்கதியைச் சொல்லும்படி திரும்பத் திரும்பக் கேட்டான். என்னைத் தோளில் தட்டி நன்றி தெரிவித்து, இவோனியைக் கொஞ்சி விடைபெற்று, காரிலிருந்து நழுவி இருளில் மறைந்தான்.

‘வயலுக்கு அப்பால்தான் சிறை இருக்கிறது. கைதிகள் முழு நேரமும் இப்படி வந்து போவதாகத் தோமி சொல்லுகிறான்’ என்றாள் இவோனி.

‘இந்தச் சிறையில் காவல்காரர்கள் இல்லையா?’ என்று கேட்டேன்.

‘இருக்கிறார்கள்தான். ஆனால் கைதிகளில் அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை. அதனால்தான் இதைக் கட்டுப்பாடற்ற சிறை என்கிறார்கள்.’

நான் இவோனியைப் பின்தொடர்ந்து படிக்கட்டில் ஏறினேன். அவளுடைய முழங்கால் மடிப்பில் மங்கலாய்ப் புடைக்கும் நீல நாளங்களைப் பார்த்தேன். எனக்கு சுதி பிறக்கிறது. வேறெதிலும் புலன் செல்லவில்லை. கையை நீட்டி அவளுடைய பின்னங்காலில் பிதுங்கும் தசையைத் தடவ விரும்பினேன்.

மேல்மட்டத்தில் நின்று காற்சட்டைப் பையுக்குள் கைவிட்டுத் துழாவித் திறப்பை எடுத்தேன்.

‘கோப்பி கீப்பி ஏதாவது குடிக்கப் போகிறாயா?’ என்று கேட்டேன். அவள் அதற்கு உடன்படுவதாக, நான் எனது ஒடுங்கிய படுக்கையில் அவளுடைய வயிற்றோடு வயிறுவைத்துப் படுப்பதாக, அவளுடைய மேனியை முகர்ந்து நுகர்வதாக, அவளுடைய தடித்த கருங்கூந்தல் எனது மார்பின் குறுக்கே படர்வதாக எனக்கு ஒரு சபலம் ஏற்பட்டது.

‘வேண்டாம், எட்வேட். நான் கொஞ்சம் நித்திரை கொள்ளப் போகிறேன். மூன்று மணித்தியாலத்தில் வேலைக்குப் போகவேண்டும்’ என்றாள் இவோனி. ஒரு கைப்பொம்மையைப் போல் தொம்மென அமர்ந்தாள். ஒருகணம் தாமதித்தாள். மிகவும் சோர்வடைந்திருப்பதாக நடித்தாள். உளைவெடுத்து முறுவலித்தாள். ஒரு முத்தத்தை ஊதிவிட்டாள். ஊதிவிடும் முத்தம் தோன்றிமறைவதை எண்ணிப் பார்த்தேன். அதைவிட மோசமான வெற்றுப்பதர் வேறெதுவும் இருக்கமுடியாது.

‘மெத்தப் பெரிய உதவி, எட்வேட். பிறகு சந்திக்கிறேன், சந்திக்கக்கூடும்.’

டேல் பேசும் தொனியும், பேச்சின் மறைபொருளும் எனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லுகிறேன்.

‘எனக்கும் உன்னைப் பிடிக்கவில்லை. அவ்வளவுதான்’ என்கிறான் அவன்.

நாங்கள் ஊர்திக்களத்தில் நிற்கிறோம். நான் செலுத்திவந்த வொல்வோ காரின் பின்புறத்தில் சாய்ந்துகொண்டு அவனைத் திரும்பிப் பார்க்கிறேன். அவன் என் நெஞ்சில் விரல் புதைத்துக் கேட்கிறான்:

‘நீ அவளை உனது அறைக்கு வரச்சொல்லிக் கேட்டாயா?’

‘உரையாடலைத் தொடர்வதற்கு.’

‘வக்கிரம் பிடித்த வடுகு.’

அவனுடைய முகத்தில் குத்த முயல்கிறேன். அவன் கையை ஓங்குகிறான். எனது குத்து அவனுடைய தோளில் வலுவாக விழுகிறது. அவன் எனது கைகளுக்கு இரட்டைப்பூட்டுப் போட்டு, என்னைச் செயலிழக்கச்செய்து, எனது காதுக்குள் சீறி, கெட்டவார்த்தை பேசி, அச்சுறுத்திய வேகம் என்னை வியக்க வைக்கிறது. அவன் என்னை உலுக்கித் தள்ளிய வேகத்தில் நான் ஒரு புதருக்குள் போய் விழுகிறேன். சுள்ளிகள் முறிகின்றன.

‘உனது சஞ்சிகை ஆசிரியருக்கு அறிவித்து உன்னை என்ன செய்கிறேன் பார்… வக்கிரம் பிடித்த வடுகு.’

‘ஒழுங்காக வாழப் பழகடா!’ என்று கத்துகிறேன். அவன் சிரித்துப் பரிகசித்துவிட்டு அப்பால் போகிறான். என் விரல்களை மடக்கிப் பார்க்கிறேன். கை நோகிறது. நான் ஒழுங்காக வாழப் பழகவேண்டும்!

சாமான் சண்டி அரக்குப்படும் சத்தமும் படிக்கட்டில் ஆட்கள் ஏறி இறங்கும் சத்தமும் தொடர்ந்து வந்து எரிச்சலூட்டின. பொறுக்க முடியாது கதவைத் திறந்து வெளியே பார்த்தேன். இவோனி யாரோ ஒருவனுடன் தனது அறையிலிருந்து வருவதைக் கண்டேன். அவளுடைய கையில் ஒரு பயணப்பெட்டி. அவனுடைய கையில் ஒரு கடதாசிப் பெட்டி.

‘ஓ, ஒரு கை தரவா?’ என்று வியப்புடன் வினவினேன்.

‘ஐயோ, வேண்டாம். கேட்டதே போதும். நாங்களே பார்த்துக் கொள்வோம். இதுதான் தோனி.’

தோனி கடதாசிப் பெட்டிக்கு மேலாகத் தலை அசைத்து ‘ஈ’ என்று இளித்தான்.

திடீரென நினைவு திரும்பவே ‘இடம் மாறுவது போல் தெரிகிறதே’ என்று இழுத்தேன்.

‘ஓம். பென்சன்சுக்குப் போகிறேன்.’

‘காண்வால்? கடவுளே, நான் காண்வால் போனதே கிடையாது.’

‘எங்களை வந்து சந்திக்கலாமே!’ என்றாள் இவோனி.

அவள் ஐந்து நிமிடம் கழித்து மேலே ஏறிவந்து எனது அறைக் கதவைத் தட்டினாள்.

‘உங்களிடம் சொல்ல மறந்துவிட்டேன். ஐறினி நேற்று பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு மஜோக்காவுக்குப் போய்விட்டாள்.’

‘கடவுளே!’

‘பிள்ளைகளைக் காட்டுவதற்குத்தான் கூட்டிக்கொண்டு போகிறாள்.’

அவள் சொல்லிய சேதியை நான் புரிந்துகொள்ளத் தெண்டித்தேன். நான் அந்த சம்பவத்துக்கு ஏதோ ஒருவகையில் காரணகர்த்தாவாக இருந்து விட்டேனோ என்று ஏங்கினேன்.

‘தோமி என்ன பாடு?’

‘கொஞ்சம் மனமுடைந்து போயிருக்கிறான். அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. இல்லவே இல்லை.’

‘ஓம், ஓம்.’

நானும் இவோனியும் எனது அறைக்குள் அமைதியாக நின்று, இருவரும் அலைந்து திரிந்த இரவுப்பொழுதை எண்ணிப் பார்த்தோம். ஒருவரை ஒருவர் உற்றுப் பார்த்தோம். நான் எனது விரல்களை மடக்கிப் பார்த்தேன்.

‘எனது புதிய விலாச அட்டையை அனுப்பி வைக்கிறேன்’ என்றாள் இவோனி மிருதுவாக. அவள் அனுப்ப மறக்கமாட்டாள் என்பது எனக்குத் தெரியும். இருந்தும் ‘மறக்க வேண்டாம்’ என்றேன்.

அவள் அடியெடுத்து வைத்து அணுகிவந்து எனது தலையைத் தனது கைகளில் ஏந்தி ஆழமாய் முத்தமிட்டாள். எங்கள் பற்கள் சற்றே அராவிக்கொண்டன. அவள் நாக்கு என் வாய்க்குள் நுழைந்து, நுழைந்து துழாவியது. ஆனால், நான் அவளைக் கட்டி அணைப்பதற்குள் வெளிப்பட்ட ஒரு கெட்ட புன்னகையை அரைகுறையாய் அடக்கிக்கொண்டே அவள் அறையிலிருந்து நழுவிவிட்டாள். அவளைக் கீழே கூப்பிடுவதற்காகத் தெருவில் நின்ற பியெஸ்டா காரின் ஹாரனை அழுத்தி ஓசை எழுப்பிக் கொண்டிருந்தான் தோனி. அவள் படிக்கட்டு வழியே குதித்தோடும் ஓசை எனது காதில் விழுந்தது.

எனது மேசையருகில் அமர்ந்து, என்னை நான் தேற்றிக்கொள்ளத் தெண்டித்தேன். இவோனியையும், அவள் என்னைக் கொஞ்சிய விதத்தையும் சிந்தித்துப் பார்த்தேன். அது என்றுமே என்னால் மறக்கமுடியாத அனுபவம் என்பதை, என்னை ஒரு மனிதனாய் உருமாற்றி வரையறுத்த நிகழ்வுகளில் ஒன்று என்பதை, எனது வாழ்க்கையில் இழையோடும் நினைவுக் கோவையில் ஒரு முக்கிய தொடுப்புமுனை என்பதை உணர்ந்தேன். சாளரத்துக்கு வெளியே எட்டிப் பார்த்தேன். சாய்ந்தெழும் பகலவனின் காலைக் கதிர் இரண்டு வீடுகளுக்கு இடையே ஒடுங்கி, கொல்லையின் அந்தலையில் வீற்றிருக்கும் எலுமிச்சையின் உச்சிக் கிளைகளை வருடி, கோடையில் கவிந்த தூசினால் இளைத்த அதன் இலைகளைப் பசுமைநிற நாணயங்களாய் மிளிரவும், மரத்தை இளமைபெயரவும் செய்து, வசந்தத்தின் வரவை எனக்கு நினைவூட்டியது.

பிற்பகல் மூன்று மணி. மிருதுவான பகல்பொழுது. இளந்தென்றல் வீசுகிறது, நீல வானத்தில் முகில்கள் விரைகின்றன. நான் வீடு திரும்புகிறேன். அது வெறிச்சோடிக் கிடக்கிறது. பெலிசியா, காரத்தை வண்டியில் இருத்தித் தள்ளிக்கொண்டு போயிருப்பாள். அவள் திரும்பி வந்ததும் ஒரு பூகம்பம் வெடிப்பது நிச்சயம். ஆகவே ஒரு மதுக்கிண்ணத்தை எடுத்து, இரண்டு அங்குல உயரத்துக்கு வொட்காவை ஊற்றி, உறைநீர்க் கட்டிகளை இட்டு நிரப்பி, வரப்போகும் பூகம்பத்தை எதிர்கொள்ளத் தயாராகிறேன்.

நான் மதுக்கிண்ணத்தை முத்தமிடுந்தோறும் எனது உதடுகள் சிறுகச்சிறுக மரக்கின்றன. சாளரத்துக்கு வெளியே எட்டிப் பார்க்கிறேன். முகில்கள் நகர்கின்றன. சாயும் மாலைக் கதிர் திடீரென அடுத்த வீட்டு முகட்டைக் கடந்து, கொல்லையின் அந்தலையில் வீற்றிருக்கும் பழம்பெரும் எலுமிச்சையின் உச்சிக் கிளைகளை வருடி, கோடையில் கவிந்த தூசினால் இளைத்த எலுமிச்சை மரத்தை இளமைபெயரவும், அதன் இலைகளைப் பசுமைநிற நாணயங்களாய் மிளிரவும் செய்து வசந்தத்தின் வரவை எனக்கு நினைவூட்டுகிறது.

– 2002-05-01, William Boyd, Fascination, The New Yorker, March 4, 2002, p.73-79 – தமிழாக்கம்: மணி வேலுப்பிள்ளை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *