நான் இங்கு நலமே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 9,322 
 

அன்புள்ள பானுமதிக்கு,

என் கையெழுத்து உனக்கு நினைவு இருக்குதா… எனக்கு கிட்டத்தட்ட மறந்தே போயிடுச்சு. இப்போதைக்கு என் நினைவில் இருக்கறதெல்லாம் கம்ப்யூட்டரின் கீ போர்டும் திரையில் ஒளிரும் எழுத்துருக்களும்தான்! சொன்னால் நம்ப மாட்டே… சில நேரங்களில் ‘ஞு’ எழுதுவது எப்படி என்பதில் குழப்பமே வந்துடுது.

புதுப் பேனா வாங்கினதும் எழுதிப் பார்க்கும் ஆவலில் எழுதுவோமே… அதுபோலத்தான் புதிதாக வாங்கிய டைரியில் எழுதிப் பார்க்கும் ஆசையில் உட்கார்ந்தேன். கை தானாகவே அன்புள்ள பானுமதிக்கு என்று உன் பெயரை எழுதிவிட்டது. அதனால், உனக்கே எழுதிவிடலாம் என்று ஆரம்பித்து விட்டேன்.

எனக்குள்ளே இன்னமும் உன் பெயர் முதல் வரிசையில் இருப்பதை உணர்ந்தபோது ஆச்சரியமாக இருக்கிறது. இத்தனைக்கும் முந்தைய கணம்வரையில் உன் நினைவே எனக்குள் இல்லை. ஆனால், எழுத உட்கார்ந்ததும் உன் பெயர் வந்து உட்கார்ந்து கொண்டது.

இதற்கு முன் உனக்குக் கடிதம் எழுதியது ‘சத்யமூர்த்தி கல்யாணத்துக்கு வருகிறாயா?’ என்ற விவரம் கேட்பதற்காகத்தான்… இன்னும் சொல்லப் போனால், நான் கடிதம் என்று ஒன்றை எழுதியதே கடைசியாக அப்போதுதான். உனக்கு நான் எழுதிய மிகச் சுருக்கமான கடிதமும் அதுவாகத்தான் இருக்க முடியும். நாம் கடைசியாக சந்தித்துக் கொண்டதும் அவனுடைய கல்யாணத்தில்தானே…

அப்போது லேசாக மேடிட்டிருந்த வயிற்றோடு உன்னைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது. ‘சுப்புலட்சுமி பவன்’ ஹோட்டலில் ரெண்டு இட்லி, ஒரு காபி, அரை தம்ளர் தண்ணீருக்கு மேல் ஓரு சொட்டு உன் தொண்டையில் இறங்காது. அதுக்கு மேல சாப்பிட்டா வயிறு உப்பலாத் தெரியும் என்று காரணம் சொல்வே. அதை உன்னிடம் சொன்ன போது, ‘இப்போ அந்த அளவுகூட சாப்பிட முடியலை. உடனே வாந்தி வந்திடுது’னு சிரிச்சுட்டே பதில் சொன்னே! அன்னிக்கு சத்யமூர்த்தி கல்யாணத்தில கூட நீ எதுவும் சாப்பிடலை உனக்கு ரொம்ப பிடிச்ச பால் பாயசம் உட்பட!

இப்பவும் ஊருக்குப் போகும்போதெல்லாம் அம்மா, உன்னைப் பத்தி கேட்டுருவாங்க… அதிலேயும் ‘ஏண்டா… அந்த புள்ளை பால் பாயசத்துக்கு வீங்கிப் போய் தான் அலையுதா?’னு ஒருதடவையாவது கேட்டுருவாங்க… நீ என் வீட்டுக்கு வந்திருந்தப்போ தாகத்துக்குத் தண்ணி குடிக்கிற மாதிரி பால் பாயசம் குடிச்சிட்டு திரிஞ்சதை அம்மா அப்படியே ஞாபகத்தில வச்சிருக்காங்க பானு. யாராவது எங்க வீட்டு ஸ்டோர் ரூம் நிலைப்படியில் தலையை முட்டிகிட்டா உடனே உன் நினைப்பு வந்திடும்.

‘உன்னை மாதிரித்தான் அந்த பானு புள்ளையும் மடார்னு இடிச்சுகிட்டு நின்னது.. ஒரு செகண்டு எனக்கு பொறி கலங்கிப் போச்சு… தட்டித் தடவிக் கொடுத்து கடிபட்டு ரத்தங் கசிஞ்ச உதட்டுல தேங்காய் எண்ணெய் போட்டு விட்டேன். ஆனாலும் அந்த புள்ள கலங்கிப் போய் நின்னது என் கண்ணுக்குள்ளேயே இருக்கு!’னு பத்து நிமிஷத்துக்காவது உனக்கு புரையேறும் அளவுக்கு புராணம் பாடிட்டுத்தான் ஓய்வாங்க.

நீ வந்துட்டுப் போன ஒரே வாரத்துல ஸ்டோர் ரூம் நிலைப்படியை உயர்த்துறதுக்கு வேலையை ஆரம்பிச்சுட்டாங்க… இப்போ என் பொண்டாட்டி எகிறிக் குதிச்சாக் கூட இடிக்காத அளவுக்கு உசரமா இருக்கு வீட்டு நிலைப்படி. ஆனா, அதுக்குப் பிறகு நீ என் வீட்டுக்கு வரவே இல்லை… கல்யாண பத்திரிக்கையை கூட தபாலில் தான் அனுப்பி வச்சே!

நாலு வருஷம் ஆகிப்போச்சுல உனக்கு கல்யாணமாகி..? அந்தப் பத்திரிகை எனக்குள்ளே அப்படியே நினைவில் இருக்கு. உன் கையெழுத்தில் பிங்க் நிறமையில் அழகா எழுதி அதையே அச்சடிச்ச பத்திரிகை… உன்னைப் போலவே மெல்லிசான குரலில் எதிரே உட்கார்ந்து கண்ணை உருட்டி தலையை ஆட்டி ஆட்டி பேசுறது போலவே உன் கல்யாணச் சேதியைச் சொன்னது அந்தப் பத்திரிகை.

எப்படியிருக்கிறார் உன் நாகராஜன்..? கல்யாணமான புதிதில் ஒரு முறை உங்களை சந்திச்சப்போ கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது… உனக்குள் இருந்தவனுக்கும் நாகராஜனுக்கும் ஏகமாக வித்தியாசங்கள் தெரிந்தன. ஆனால், உன் முகத்தில் இருந்த சிரிப்பைப் பார்த்தபோது நாகராஜன் உனக்குள்ளே வந்துட்டார்னு புரிஞ்சது. அவருடைய புருவங்களுக்கு இடையே தெரிஞ்ச லேசான திருநீறு பளிச்சுனு கண்ணைப் புடிச்சு இழுத்தது. உன் நெத்தி வகிட்டில்கூட குங்குமம்..!

நாம் எல்லோரும் ஒருமுறை நெல்லையப்பர் கோயிலுக்குப் போனபோது வெளியே இருந்த கடையில் விஷ்ணு அவனுடைய அம்மாவுக்கும், அக்காவுக்கும் மஞ்சள் கயிறு வாங்கினான். என்னடா இது கேட்டப்போ, ‘சுமங்கலிகளுக்கு தாலிக்கயிறுதான் கொடுக்கணும் கோயில் பிரசாதமா’னு அவன் சொல்ல, ‘தாலிங்கறது அடிமையின் சின்னம்’னு நீ பேச ஆரம்பிக்க, அப்பா… கோயில் யானையே தெறிச்சு ஓடுற அளவுக்கு ரெண்டு பேருக்கும் என்னா விவாதம்..!

எனக்கு விஷ்ணு பேசுறது தப்பா தோணலைன்னாலும் உன்னைப் பார்க்கும்போது பிரமிப்பா இருந்தது. உன்னோட பிரத்யேக அடையாளமான மென்மையான குரலைக் காணலை… ஏதோ காந்திமதி அம்மாளே விஸ்வரூபம் எடுத்து நின்ன மாதிரி கோயில் பிரகாரத்துல பெண் சுதந்திரம் பத்தி நீ பேசுனது இன்னமும் எனக்குள்ளே ஒலிச்சுகிட்டுதான் இருக்கு. இன்னிக்கும் அவ எல்லார்கிட்டேயும் பெருமையாச் சொல்லுவா, ‘என் வீட்டுக்காரர் என் விஷயத்தில் முழு சுதந்திரம் கொடுத்துருக்கார்’னு!

விஷ்ணுவை இப்போ சமீபத்தில் நீ பார்த்தியா? ஒரு நாள் வேறு ஒரு வேலையா பாளையங்கோட்டை போனபோது அவன் கடைக்கு போனேன். அவங்கப்பா இருந்த இடத்தில் அவரை மாதிரியே உட்கார்ந்திருந்தான். ‘ஏ.சி பண்ணிய கடை… உள்ளுக்குள்ளேயே படி வெச்சு மேல் மாடியில் வைர நகைக்கு தனி செக்ஷன்’னு கடையை ஏகத்துக்கு பெரிசு பண்ணியிருக்கிறான்.

ஒருதடவை நீயும் நானும் பாளை மார்க்கெட்டுக்குப் பக்கத்துல பருத்திப்பால் குடிச்சுட்டு அப்படியே அவன் கடைக்கு போனபோது ஒரு முத்து மோதிரம் வாங்கினோமே… இன்னும் அது உன்னிடம் இருக்கா… முத்து மோதிரம் பார்க்கலாம்னு விசாரிச்சப்போ, ‘நல்ல விளைஞ்ச முத்து’னு அவங்கப்பா கல்லாவுக்கு பின்னால் இருந்த இரும்பு கஜானாவைத் திறந்து எடுத்து தந்தாரே… ரொம்ப நாள் அந்த மோதிரத்தை நீ போடவேயில்லை நானும் உன்னிடம் அது பற்றி கேட்கலை ஆனால் அந்த வருஷம் பொறந்த நாள் அன்னிக்கு புது டிரஸ்ஸோடு அதையும் போட்டுக்கொண்டு வந்தே… அதுக்குப் பிறகும் நீ அந்த மோதிரத்தைப் போட்டு நான் பார்க்கலை..!

டிசம்பர் பதினெட்டு இல்ல… உன் பிறந்த நாள்! ச்சே… இந்தமுறையும் பதினைஞ்சுநாள் கழிச்சு லேட்டா நினைவுக்கு வருது பாரு… அப்பவே ஒருதடவை ஊருக்காக பதினெட்டாம் தேதி கொண்டாடிட்டு, என் ஞாபக மறதிக்கு மரியாதை கொடுத்து எனக்காக முப்பதாம் தேதி ஒருதடவை கேக் வெட்டுனியே..!

இந்த வருஷம் மிஸ் பண்ணாம வாழ்த்து அனுப்பறேன் பாரு… இப்பவே டைரியில் குறிச்சு வெச்சுக்கறேன்! ஆனா, அன்புங்கறது மனசுல குறிச்சு வெச்சுக்கற விஷயம், டைரியில் குறிச்சுக்கறதுக்கு நான் ஆளில்லைனு அதுக்கும் வியாக்கியானம் பேசுவே!

வேறென்ன விசேஷங்கள்..?

இப்படிக்கு,
சந்துரு

– 11-02-09

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *