கதாசிரியர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 13, 2022
பார்வையிட்டோர்: 3,219 
 

ரங்கசாமிக்கு தூக்கம் வர மறுத்தது.தந்தை சிறுவயதிலேயே இறந்து போனதால் தோட்டத்தை கவனிக்க வேண்டிய நிலையில் பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட வேண்டிய பரிதாபம்.ஆனால் படிப்பின் மேல் கொள்ளைப்பிரியம்.பகல் பொழுதில் ஏரோட்டுவது,பாத்தி கட்டுவது,நீர் பாய்ச்சுவது,குப்பை இறைப்பது,மாடு மேய்ப்பது,பால் கறப்பது என வேலை நெம்பெடுக்கும்.இடுப்பு சில சமயம் புண்ணாக வலிக்கும்.உறவுகள் வீடுகளுக்கு கூட போய் ஒரு நாள் தங்க முடியாது.’மாட்டுக்கு யார் தண்ணி காட்டுவது?தீண் யார் போடுவது?’என அம்மா சொல்லா விட்டாலும் அவனே தனக்குள் கேள்விகளைக்கேட்டு சமாதானமாகி விடுவான்.

சனிக்கிழமை தோட்டத்தில் விளைந்ததை விற்க சந்தைக்கு போனால் பத்துக்கு மேற்பட்ட வார இதழ்களை வாங்கிவருபவன், இரவு இரண்டு மணிவரை அரிக்கன் லைட் புகை கட்டி எழுத்துக்கள் தெரியாத வரை முகத்தை பக்கமாக வைத்து படிப்பான்.பின் கழட்டி கண்ணாடியை துடைத்துப்போட்டு மீண்டும் படிப்பான்.கல்கி,ஜெயகாந்தன்,புதுமை பித்தன்,அகிலன்,பார்த்தசாரதி,சாண்டில்யன்,தமிழ் வாணன்,ராஜேஷ்குமார் போன்றோர் எழுதிய சிறுகதைகள் தவிர கேள்வி பதில்,கட்டுரைகள்,கவிதைகள்,வாசகர் விமர்சனங்கள் என வரி விளம்பரங்களை கூட வரி விடாமல் படித்துவிடுவான்.

‘மற்றவர்களைப்போல நாமும் ஏன் கதாசிரியர் ஆகக்கூடாது?’என்ற ஆசை மேலோங்கியது.பத்திரிக்கைகளில் உள்ள முகவரிக்கு சில கதைகளை எழுதி அனுப்புவான்.’இந்த வாரம் தம் கதை வந்திருக்குமோ?’என வாரம் தவறாமல் பத்திரிக்கைகளை வாங்குவான்.பிரசுரமாகவில்லை என்றால் வருந்துவான்.’சென்னைக்கே சென்று பத்திரிக்கை அலுவலகத்தில் நேரில் பார்த்துக் கொடுத்தால் என்ன?’என யோசிப்பான்.’முடியாது.அம்மா தனியாக இருந்து கஷ்டப்படுவாள்’என நினைத்து அந்த முயற்ச்சியை கைவிட்டு விடுவான்!

“என்னடா கண்ணு,கண்ணெல்லாஞ்செவந்து கெடக்குது?ராவு தூக்கமில்லையா?இத்தன பொம்பளைக படம்போட்ட புத்தகத்த வாங்கி வெச்சிருக்கான்,கண்ணால ஆச வந்திருக்கும்னு நா முந்தாநேத்தே ஒங்கம்மாகிட்ட சொல்லிப்போட்டனாக்கும்”என தாயின் தாய் பேச,”போங்கம்மிச்சி,நான் கதை எழுதோனும்னு ஆசைப்பட்டு தான் வாங்கினேன்.”என சினுங்கலான வெட்கத்துடன் பேசுவான் ரங்கசாமி!

“ரங்கசாமி,இங்க வா சாமி “என அம்மா அழைத்த போது, “யாரு எனக்கு ரங்கசாமின்னு பேரு வச்சது?சித்தி பசங்களுக்கு மட்டும் ரவி,ரமேஷ்னு நீதான் வச்சியாமா?எனக்கு மட்டும் எதுக்கு…?”என முடிப்பதற்குள் “வாய மூடு,சாமி குத்தமாயிடும். பிறந்தப்ப ராஜேஷ்னு தான் வச்சேன்.மூணு வயசுல ஒனக்கு ரொம்ப முடியாம போச்சு.பாடமடிக்க போன பக்கம் காரமடை ரங்கநாதன நெனைச்சு ரங்கசாமின்னு பேரு வச்சுப்போட்டா சரியாயிடும்னாங்க.சரியாச்சு.இப்பென்னதுக்கு,இத்தன நாளுக்கப்பறங்கேக்கறே?”என தாய் ராஜாமணி கேட்க, “அதொன்னுமில்ல.நான் எழுதுன கதை குமுதத்துல வந்திருக்கு.இத பாரு”என காட்ட, “என்னடாது எழுதியவர் ரமி போட்டிருக்கு?பேர மாத்திப்போட்டயாக்கு?”என கேட்க,”இதுக்கு பேரு புனைப்பேரு.இப்படி பேரு வச்தாத்தான் படிப்பாங்க.உலகம் பூராவும் போற பத்திரிக்கை”என கூறும்போது முகம் மகிழ்ச்சியில் முற்றிலும் மலர்ந்த தாமைரையானது!

“அது சரி வெடிய வெடிய தூங்காம கண்ணு செவக்க எழுதுனியே பணம் எவ்வளவு வந்துச்சு?”என தாய் மாமன் கேட்ட போது மலர்ந்த தாமரை முகம் அக்னி நட்சத்திர வெயில் பட்டது போல் வாடியது.

“அக்கா இப்படியெல்லாம் கதை,கதைன்னு திரிஞ்சான்னா எம் பொண்ணு ராணியக்கொடுக்க மாட்டேன்.நானும் பாக்கறேன்.நாலு மாசமா மாடு பாலுங்கொறைஞ்சு போச்சு.ராத்திரில கதை புத்தகம் படிச்சவன்,இப்ப தண்ணி கட்ற காட்டுக்குள்ள வாழை மரத்துல புத்தகத்தை சொருகி வச்சுட்டு படிக்கிறான்.தண்ணி பக்கத்து தோட்டத்து வாழைக்கு பொலியத்தாண்டி பாஞ்சிட்டிருக்குது.” என மாமன் கூறியபோது, அவர் சொல்வதில் நடைமுறை நியாயம் இருப்பதாக பட்டது!

எவ்வளவு அறிவும்,திறமையும் இருந்தாலும் பணத்துக்கு கீழ் தான் எல்லாம் என உணர்ந்து கொண்டான்!

“என்னக்கா போனவாரம் குறைஞ்ச பாலு இந்த வார ரொம்பமே அதிகமாகுது?தேங்கா புண்ணாக்கு ஏதாவது போடறீங்களா…? சரி,சரி வந்த விசயத்த சொல்லவே மறந்துட்டேன். நாளைக்கு நல்ல நாளு.எம்பட வீட்டுக்கு ராணியப்பொண்ணு பாக்க வாங்க.பொருத்தம் பாத்துட்டேன்.பத்துக்கு ஒம்பது பொருத்தம் இருக்குன்னு நம்ம குடும்ப சோசியரே சொல்லிட்டாரு”என மாமன் அவரது சகோதரியான தன் தாயிடம் கூறிச்செல்ல,நல்ல செய்தி கேட்ட மகிழ்ச்சியில் ரங்கசாமியை நோக்கி வந்த தாய்,தனக்கு பிறந்த குழந்தையை செவிலியர் கொடுக்கும் போது பெற்றெடுத்த தாய் வாங்கி ஆசையாக எடுத்து உச்சி முகர்வது போல், ரமி என்ற ரங்கசாமியான தன் இருபத்தைந்து வயதுள்ள மகனின் உச்சியில் முத்தமிட்டு, “நீ நல்லாருக்கோணும்”என வாழ்த்தி, தன் மகனுடன் சேர்ந்து தானும் மகிழ்ந்தாள் தாய் ராஜாமணி!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *