கண்ணு பட போகுது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 2, 2014
பார்வையிட்டோர்: 10,183 
 
 

‘நான் ஒரு வாரத்துல திரும்பி வந்துருவேன் கண்ணு. உன்னோட போட்டிக்கு இன்னும் 2 மாசம் இருக்கு. ஏன் இப்படி அலுத்துக்கிற ??’

அப்பாவை அழுகையுடன் பார்த்துக் கொண்டு நின்றாள் குமுதா.

‘ நீங்க ஊருக்கு போய்ட்டா என்ன யாரு ப்ராக்டிசுக்கு கூட்டிகிட்டு போவாங்க.? நான் ஒரு வாரம் போகலீனா கோச் கண்டபடி திட்டுவாறு .’

‘இவ்ளோதானா விஷயம். நான் கூட நீ என்னவோ என்ன பிரிஞ்சு இருக்க முடியாதுன்னு தான் அழுவுறியோனு நெனைச்சுட்டேன் கண்ணு.’ சிரித்தபடி சொன்ன மாதவன்.கொஞ்ச நேரம் மகளையே பார்த்துக் கொண்டு நின்றார்.

‘சரி. நான் உன் மாமன் கிட்ட சொல்லிட்டு போறேன். அவன் தினமும் காலைல மாலைல உன்ன கூட்டிகிட்டு போவான். சரியா??’

‘ஐயோ அப்பா.மாமா வேண்டாம். பொட்டப்புள்ளைக்கு எதுக்குடி ஓட்டமும் ஆட்டமும்னு கேட்டு மண்டை மேலே குட்டுவாரு.’ இன்னும் அதிகமாக அழுதாள் குமுதா .

‘இல்லமா நான் சொல்லிட்டு போனா என் பேச்சத் தட்ட மாட்டான். நீ கவலைப் படாத.’ சொல்லிவிட்டு மகளை பார்த்தார்.
அவள் கண்களில் ஒரு அவநம்பிக்கை.
‘ இதப் பாரு கண்ணு. உங்க பள்ளிகூடத்திலேயே நீ மட்டும் தான் மாநில அளவுல தடகள போட்டிக்கு செலக்ட் ஆகி இருக்க. எத்தன பேருக்கு இது மாதிரி வாய்ப்பு கெடைக்கும்.?? இது எவ்ளோ முக்கியம்னு எனக்குத் தெரியும் கவலைப் படாத.ப்ராக்டிஸ் மிஸ் அவாது.’

கொஞ்சம் புன்னகைத்தபடி வந்த குமுதா மாதவன் கழுத்தைக் கட்டி அணைத்து கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தாள் .

‘ஏழு கழுத வயசாகுது இன்னமும் அப்பன் கழுத்தக் கட்டிக்கிட்டு என்ன கொஞ்சல்?’ சொல்லிக்கொண்டே கையில் இருந்த காய்கறி பையை கீழே வைத்து விட்டு உக்கார்ந்தாள் ராஜம்.

’14 வயசு ஏழு கழுத வயசுன்னா உன் வயசுக்கு நீ எத்தன கழுதம்மா??’ குமுதா குறும்பாகச் சொன்னதைக் கேட்டு மாதவன் சிரித்தார்.

‘ இது ஏற்கனவே என்னை மதிக்காது . இன்னும் நீங்க அவ கூட சேர்ந்து சிரிங்க. வெளங்கிடும் . பொம்பள புள்ளை மாதிரியா இருக்குது இது. எப்ப பாத்தாலும் ஷீ, பாண்டு போட்டுக்கிட்டு ஆம்பள புள்ளைகளோட சுத்திகிட்டு திரியுது. என் பேச்சு இந்த வீட்ல என்னிக்கி எடுபட்டிருக்கு’

புலம்பிக் கொண்டே உள்ள போனவளை பார்க்க எரிச்சல் வந்தது குமுதாவிற்க்கு.

‘ அப்பா ! என்னிக்காவது எதாவது ஒரு நல்ல வார்த்த வருதா என்னப் பத்தி. எப்போதும் குத்தம். அவங்கவங்க பொண்ணு படிப்பு விளையாட்டு எல்லாத்துலேயும் முதல் வந்தா தல மேலத் தூக்கி வெச்சு கொண்டாடுவாங்க.. இங்க தான் இந்த ஏச்சும் பேச்சும் . அப்பா அவங்க என்ன நிஜமாவே பெத்தாங்கள எல்லா நீங்க என்ன எங்கிருந்தாவது தூக்கிட்டு வந்துடீங்களா ??’

‘குமுதா . அவ கிராமத்துல வளர்ந்தவ. உங்க தாத்தா அவள எட்டாவது படிக்கும் போது பள்ளிகொடத்துலேர்ந்து நிறுத்திடாறு .வெளி உலகம் தெரியாம வளந்தவ. உன் மேல பிரியம் இல்லாமய நீ காலைல ஓடப் போகும் போது முட்டை ஒடச்சு பால் கலந்துத் தரா? அவ சுத்த சைவம். எனக்காகக் கூட முட்டை தொடாதவ இப்போ உனக்காக செய்றான்னா… நீ கொஞ்சம் விட்டுக் குடு. எதுத்து பேசாத. நான் ஊருக்குபோயிட்டு வர வரை சண்ட போடாத.’

‘அப்போ நீங்க வந்த பிறகு சண்டை போடலாம்ல?’ குமுதாவின் பேச்சு அவருக்கு சிரிப்பைத் தந்தது.

அடுத்த நாள் மாதவன் கிளம்பி விட்டார்.

மாலை பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வந்தவள்., டிபன் சாப்பிட்டுவிட்டு மாமாவிற்காக காத்திருந்தாள் .

‘ அம்மா ரொம்ப நேரம் ஆகுது. இன்னிக்கி வீட்டு பாடம் வேற அதிகம் அம்மா. மாமவுக்கு போன் பண்ணு. வந்து கூடிப் போக சொல்லு.சீக்கிரம் போனாத் தானே சீக்கிரம் வர முடியும்??’

அவள் பேச்சை லட்சியமே செய்யவில்லை ராஜம்.

‘ என் தம்பி என்ன நீங்க ஏவி வெச்ச ஆளா?? அவனுக்கு பொழப்பு இல்ல. எல்லாம் வருவான். ஒரு பத்து நிமிஷம் தாமதமா போன ஒண்ணும் குடிமுழுகிப் போகாது. புலம்பற நேரத்துக்கு புஸ்தகம் எடுத்து வீட்டு பாடம் முடி’.

வந்தக் கோபத்தை அடக்கிக் கொண்டு படிக்க உக்கார்ந்தாள் குமுத. பாடத்தில் புத்தி ஓடவில்லை. வாசலையே விழி நோட்டம் இட்டுக் கொண்டு இருந்தது .

வாசலில் பைக் வந்து நிற்கும் சத்தம் கேட்ட.து .

பையை எடுத்து வைத்து விட்டு வேகமாக ஓடினாள் .

‘ஏய் .என்ன அவசரம்?? அவன் உள்ள வந்து ஒரு வாய் காபியாவது குடிக்கட்டும் ‘ அம்மாவின் வார்த்தைகளைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை அவள்.. வாசலிலேயே மாமனை மடக்கி ஏறிக் கொண்டு பறந்து விட்டாள் .

போகிற வழியில் மாமா ஆரம்பித்தார். ‘ உங்கம்மா ரொம்ப கவலைப்படரா. உனக்கு ஏன் புரிய மாட்டேங்குது?? நீ நல்லாப் படிக்கிற இப்போ ஓட்டப்பந்தயத்ல முதல் வந்ததுக்கு உனக்கு பரிசுக் குடுத்து பேப்பர்ல எல்லாம் உன் பேரு வந்துச்சு எல்லாம் சந்தோசம் தான்.ஆனா நாலு பேர் கண்ணு பட்டா திருஷ்டி ஆகிப் போகும்.அம்மா அதுக்குத் தான் கவலப் படறா . உங்கப்பாவுக்கு இதெல்லாம் நம்பிக்க கெடையாது. அவ சொன்னாலும் கேக்க மாட்டாரு . பேசாம படிப்போட நிறுத்தக் கூடாத?? எதுக்கு இந்த வேலையெல்லாம்??’

விளையாட்டு மைதானம் வந்து விட்டது. மாமாவிற்கு எந்த பதிலும் சொல்லவில்லை .
‘மாமா 6 மணிக்கு வந்துருங்க’. சொல்லிவிட்டு
திரும்பிப் பார்க்காமல் ஒரே ஓட்டம் தான்.

ரெண்டு மூன்று நாட்கள் இப்படியே கழிந்தது. அப்பா திரும்பி வரும் வரை வாயைத் திறப்பதில்லை என்ற வைராகியத்தில் இருந்தாள் குமுதா . மாமா தினமும் எதாவது புலம்பிக் கொண்டே கொண்டு விட்டு கொண்டு போனார். அவருக்கு அக்கா புருஷனிடம் மரியாதை அதிகம். ஆனால் பெண் குழந்தையை வளர்க்க தெரியவில்லை என்ற அபிப்ராயமும் உண்டு.

‘கால் டவுசரும் அரை டவுசரும் போட்டுக்கிட்டு முன்ன பின்ன தெரியாத ஆம்பிளைங்க முன்னாடி விளையாடுது. நம்ம பொண்ணு தங்கம் தான். ஆனா வரவன் போறவன் பார்வை எல்லாம் உரசிகிட்டு போகுதே.பாக்கிறவேன் எல்லாம் யோக்கியமா பார்கிறானா. கல்லடி பட்டாலும் கண்ணடி ப் பட கூடாது. உன் புருஷனுக்கு ஏன் தான் இதெல்லாம் புரிய மாட்டேங்குதோ?? கேட்டா பி.டி . உஷாக்கு அப்புறம் என் பொண்ணு மாதிரி யாரும் கிடையாதுன்னு பெரும பேசறாரு.’

அக்காவின் மனக்லேசத்தை அதிகரிக்கிறோம் என்பது உணராமல் பேசிக் கொண்டே இருப்பார்.

அப்பா நாளைக்கு வந்து விடுவார்.குமுதாவிற்க்கு உள்ளூர சந்தோசம். இன்னிக்கி தான் கடைசி இந்த மாமா கூட வண்டிலப் போற வேலை. ப்ராக்டிஸ் முடிந்து வந்துக் கொண்டு இருந்தனர். மாமா வழக்கம் போல் பெண்கள் வழியில் செய்ய வேண்டிய கடமைகள், வாழ வேண்டிய விதம் பற்றி எதோ சொல்லிக் கொண்டே வந்தார்.

குமுதா பதில் ஏதும் சொல்லவில்லை. அவள் மௌனம் கொஞ்சம் எரிச்சல் மூட்டியது.
‘ஏ பொண்ணு. நானும் கிளி பிள்ளைக்கு சொல்ற மாதிரி தினமும் சொல்றேன் என்ன ஒண்ணும் பேச மாட்டேன்க்ர’ என்றபடி திரும்பி அவளைப பார்க்க முயன்றார். அவ்வளவுதான் நிலை தடுமாறி பைக் சரிந்தது. குமுதா சட்டென்று வலது கையை கீழே ஊன்றினாள் .’படக்’ என்று எலும்பு முறிந்த சத்தம் அவளுக்கே கேட்டது. மயக்கமாகி விழுந்தாள் .

கண் திறந்த போது ஆஸ்பத்ரியில் இருந்தாள். பக்கத்தில் அழுதபடி அம்மா. அப்பா டாக்டரிட ம் ஏதோ பேசிக் கொண்டு இருந்தார். வலது கையை அசைக்க முடியவில்லை. மாமாவைக் காணும்.

‘ அம்மா மாமாக்கு என்ன ஆச்சு ? அவரு எங்க??’

அம்மா இவள் கண் முழித்ததை பார்த்து கிட்டே வந்து ‘என்னம்மா வலிக்குதா? மாமாக்கு ஒண்ணும் இல்லை சின்ன சிராய்ப்புத் தான். உனக்குத் தான் கைல எலும்பு முறிஞ்சுப் போச்சு. ஒரு மாசம் ரெஸ்ட்ல இருக்கணும்னு டாக்டர் சொல்லிட்டாரு . இதுக்குத் தான் சொன்னேன். இதெல்லாம் வேண்டாம் பேசாம அடங்கிக் கெடன்னு. அப்பாவும் பொண்ணும் கேட்டீங்களா? இப்போ யாரு அவஸ்தை படறது.?? ஒருத்தர் கண்ணு மாதிரி ஒருத்தர் கண்ணு கெடையாது. என்ன இந்த பொண்ணு இப்படி எல்லாத்துலேயும் நல்லா இருக்கேன்னு நாலு பேத்து கண்ணுப் பட்டுத் தான் இப்படி ஆயிடுச்சு. இனிமே எல்லாத்தியும் மூட்டைக் கட்டி வை.’ மறுபடி புலம்ப தொடங்கினாள் .

ஆயாசமாக இருந்தது குமுதாவிற்கு . உலகம் எங்கோ போய்க் கொண்டு இருக்கிறது. இன்னமும் இப்படிப் பேசி பெண்களை முன்னே வர விடமால் பெண்களே தடையாக இருப்பது நிஜமாகவே அச்சம் தருகிறது.
இன்னும் எதுக்கெல்லாம் போராடணும் . பெத்தவள்.. அவளுக்கே புரியவில்லை என்றால் யாரிடம் புரிந்து கொள்ள கேட்க முடியும்?? தனக்கு கிடைக்காதது தன் பெண்ணிற்கு கிடைக்கும் போது சந்தோஷப் பட வேண்டாமா??

5 நாட்களில் வீட்டிற்கு வந்தாச்சு. தடகள போட்டிப் பற்றி வீட்டில் யாரும் பேசவில்லை. அப்பாவும் தான்.
அப்பாவின் மௌனம் தான் குமுதாவிற்க்கு இன்னும் வருத்தம் குடுத்தது. அவரும் இதை எல்லாம் நம்புகிறாரா ?? இனிமேல் இவ்ளோ தானா??

‘ஏங்க பள்ளிகூடத்துல போய் அவளுக்கு இது மாதிரி ஆகிப் போச்சு அதுனால இந்த ஓட்டபந்தயம் எல்லாம் வேணாம்னு சொல்லி எழுதிக் குடுத்துட்டு வந்துடுங்க. அடுத்த வாரம் அனுப்பினா போதும் . கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும். அதுக்கு மேல லீவே போட்டா பாடம் எல்லாம் போய்டும். எழுத முடியலைனாலும் பாடமாவது கவனிக்கலாம்ல ?”

‘அம்மா அடுத்த மாசம் தான் போட்டி. எனக்கு கைல தானே அடி. கால் நல்லாத் தானே இருக்கு . ஓட முடியும்மா என்னால.’

குமுதாவிற்க்கு துக்கம் அடைத்தது.

‘வாயை மூடு. கொஞ்சம் விட்டா ரொம்ப ஆடுற. நாளைக்கு ஒருத்தன் வீட்ல போய் வாழ வேண்டிய பொண்ணு கையை காலை ஓடச்சுகிட்டா ?? ஊர் கண்ணெல்லாம் இப்போவே உன் மேலத் தான் இருக்கு.போதும் நீ ஓடுன ஓட்டம் எல்லாம்.’ கண்ணை உருட்டி கத்தும் ராஜம் பார்த்து மிரண்டு விட்டாள் குமுதா.

‘ அமாம் குமுதா .உங்கம்மா சொல்றது தான் சரி. ராஜம். நான் பள்ளிகூடத்துக்குப் போய் பேசாம tc வாங்கிட்டு வரேன். இனிமே இவ படிக்க வேண்டாம்.’

இப்போது ராஜத்திற்கு குழப்பம். என்ன சொல்கிறார் இவர். இந்த வயசுல படிப்ப நிறுத்தி என்ன செய்றது??

‘ ஆமா ராஜம். படிச்சு நல்ல மார்க் வாங்கி முன்னுக்கு வந்தா அப்போவும் இந்த ஊர் கண்ணு படும். நல்ல துணி மணி போட வேண்டாம். ஏன்னா அத பார்த்த ஊரு அட இவ்ளோ அழகா இருக்குதே இந்த பொண்ணுன்னு நெனச்சா அப்போவும் கண்ணு படும். கல்யாணம் காட்சி பண்ண வேண்டாம். நல்ல மாப்பிள்ளை வந்து இவளுக்கு நல்ல வாழ்கை வந்தா அப்போவும் கண்ணு படும். பேசாம இவள இப்படியே பூட்டி வெச்சு நம்ம மட்டும் அழகு பாக்கலாம்.’

சொல்லி விட்டு மாதவன் வெளியே போய் விட்டார்.

ராஜத்திற்கு எதோ புரிந்த மாதிரி இருந்தது.

கொஞ்ச நேரம் நிசப்தம் .

‘ குமுதா . உன்னோட ஷூ பிஞ்சு போச்சுன்னு சொன்னியே நான் போய் தெச்சுட்டு வரேன். நீ இந்த பாலக் குடிச்சுட்டு வீட்ட பாத்துக்க.’

சொல்லி விட்டு போகும் ராஜத்தை சந்தோஷமாக பார்த்தாள் குமுதா .

– டிசம்பர் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *