கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தேவி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 4, 2023
பார்வையிட்டோர்: 4,924 
 

(2001ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 11-12 | அத்தியாயம் 13

அத்தியாயம்-13

“யாரது?” ஏகாம்பரம்.அவர் அருகில் சென்றார்.

“மிஸ்டர் ஏகாம்பரம்…?”

”யெஸ்…நான் தான்!'” என்பவருக்கு நெற்றி முடிச்சிட்டது. ‘இவரை எங்கோ பார்த்திருக்கிறோமே!’

“சார்… என் பேர் கோபாலன்… நான் பாதர் சாலமன்கிட்டேர்ந்து… சார்… உங்களை இதற்கு முன்னாடி சந்திச்சிருக்கேன்!” என்றார் அவர் முகத்தை ஆராய்ந்தபடி.

”நானும்… உங்களை ஏற்கனவே சந்திச்சிருக்கேன்! ஆனா… எங்கேன்னு தான் தெரியலே”

கோபாலனுக்கு நினைவிற்கு வந்து விட்டது.

“சார்… நீங்க ஏகாம்பரம் தானே? கல்லிடைக்குறிச்சி ஏகாம்பரம்!”

“அட ஆமாம்!”

”சார்…என்னைத் தெரியலியா? செங்கல்பட்டு கோபாலன்…உங்கப் பொண்ணு சுசீலாவை…!”

“மைகாட்! அந்த கோபாலனா நீங்க? ஆளே அடையாளம் தெரியலே சார்! உக்காருங்க…நல்லாயிருக்கிங்களா?” ஏகாம்பரம் அவர் கையைப் பற்றி சோபாவில் அமர வைத்தார்.

கோபாலன் நிலைகுலைந்துப் போனார். ‘நாம் ஒரு கணக்குப் போட்டால்… கடவுள் எவ்வளவு அழகாக ஒரு கணக்குப் போடுகிறார்? இவர் பெற்ற பெண்ணை உயிரோடிருக்கும்போதே.. இறந்துவிட்டாள் என்று பொய் சொன்னேன். ஆனால், கடவுள் இன்று அந்த குழந்தையை பெற்றவர்களிடமே அல்லவா சேர்த்து வைத்திருக்கிறான்? ரேகா எங்கோ?’ சுற்றிலும் கண்களை ஓடவிட்டார்.

“சார்… ரேகா எங்கே?”

அவர் ரேகாவைப் பற்றி கேட்டதும் அனைவர் முகத்திலும் அதிர்ச்சி.

“ரேகாவா? நீங்க ஏன் அவளைப் பத்தி கேக்கறீங்க?”

“சார்… என்னை மன்னிச்சிடுங்க… இந்த பாவியை மன்னிச்சிடுங்க!” என்று துண்டால் வாயைப் பொத்திக் கொண்டு அழ ஆரம்பித்தார். அனைவருக்கும் வியப்பு கூடியது.

“என்ன சார் சொல்றீங்கா எதுக்காக அழறீங்க?” கோபாலன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

“எனக்கு மன்னிப்பே இவ்லே சார்! உங்க பொண்ணு சுசீலா உயிரோடு இருக்கும்போதே… செத்துப்போய்ட்டான்னு அநியாயமா பொய் சொன்ன பாவி நான்!”

“எ… என்னது ? என் பொண்ணு சுசீலா உயிரோட இருக்காளா?”

“நிஜமாதான் சொல்றீங்களா?”

“இப்ப எங்கேயிருக்கா?”

அனைவருக்கும் புது ரத்தம் பாய்ந்தது.

“ஆமாங்க! சுசீலா இன்னும் உயிரோட தான் இருக்கா! அதுவும் உங்களோட…இங்கே தான் இருக்கிறா?”

“என்ன சொல்றீங்க? இங்கே…எங்களோடயா? எங்கே?”

“உங்க பொண்ணு சுசீலா என் பொண்ணா வளர்த்தப்ப பேரை ரேகான்னு மாத்திட்டேன்!”

“எ…எ…ன்….ன?”

“ஆமாங்க.. நடந்ததெல்லாம் ஒண்ணு விடாம சொல்லிடறேன்!”

கோபாலன் எல்லாவற்றையும் சொன்னார்.


அன்னை தெரசா மகளிர் காப்பகத்தை நோக்கி மூன்று கார்கள் சென்றன.

பாதர் சாலமனிடம் போனில் தொடர்பு கொண்ட போது ரேகா அங்கு வந்திருப்பது தெரிந்ததும் அனைவரும் புறப்பட்டனர்.

ஒரு காரிவ் ஏகாம்பரம் குடும்பத்தினர் அனைவரும் இருந்தனர்.

அம்பிகா அழுதுக் கொண்டே வந்தாள்.

“என் குழந்தைன்னு தெரியாம எப்படியெல்லாம் பேசிட்டேன்? கடவுளே! “

“அவளை நான் தான் ரொம்ப மோசமா பேசிட்டேன் அம்பிகா!”

“என் தங்கைய இந்த கையால தானே அடிச்சு விரட்டினேன்?” வேதனையுடன் கையை ஒங்கி கார் கதவில் அடித்தான் தினேஷ்!

“நாம யாரும் வேணுமின்னே அவளை திட்டலே…வருத்தப்படாதீங்க!” கனகா ஆறுதலாய் சொன்னாள்.

“இல்லே அண்ணி நான் தான் அக்காவை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்’ விக்கி விக்கி அழுதாள் சுபத்ரா.

இன்னொரு காரில் திருவேங்கடம் குடும்பத்தினர் பயணித்தனர்.

அர்விந்த் தான் காரை ஓட்டினான்.

“ரேகா.. கடவுளால் கூட நம்மை பிரிக்க முடியாது. இனி யாராலும் நம்மை பிரிக்க முடியாது” உற்சாகமாய் காரை ஒட்டி, கொண்டிருந்தான்.

அடுத்த காரில் கோபாலன்.

நம்பிக்கை எல்லாம் இழந்து சோர்ந்து காணப்பட்டார்.

‘புஷ்பா… ரேகா நமக்கு மறுபடி கிடைப்பாள்ங்கற நம்பிக்கை எனக்கில்லேம்மா!”


சுற்றி அனைவரும் அமர்ந்திருக்க நடுவில் ரேகா அமர்ந்திருந்தாள்.

அவள் முகத்தில் என்றும் இல்லாத நிம்மதி இப்போது குடிகொண்டிருந்தது.

“ரொம்ப சந்தோஷமாயிருக்கு! நான் அனாதையல்ல. எனக்கும் அப்பா, அம்மா, அண்ணன், தங்கைன்னு பாரம்பரியமான குடும்பம் இருக்குன்னு நினைக்கறப்ப ரொம் ரொம்ப சந்தோஷமாயிருக்கு!”

“சுசீ… என் வாயால உன்னை கண்டபடி திட்டிட்டேனம்மா!” அம்பிகா அழ ஆரம்பித்தாள்.

“அடடா.. நான் தான் சொன்னேனே. அதைப்பத்தி பேசக்கூடாது. போன நிமிஷம் வரை நடந்த கசப்பை எல்லாம்.மறந்திடணும்னு” ரேகா செல்லமாய் அதட்டினாள்.

“நீயும் ஏகாம்பரத்தோட பொண்ணுதான்னு தெரிஞ்சுட்ட பிறகு..அர்விந்த் விருப்பப்படி உன்னை அவனுக்கே கல்யாணம் பண்ணி வச்சிடணும்னு நாங்க முடிவு பண்ணிட்டோம் ரேகா!” என்றார் திருவேங்கடம்.

சுபத்ராவை தவிர அனைவர் முகத்திலும் சந்தோஷமே!

“ஸாரி… எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லே!” என்றாள் ரேகா.

“ரே..கா!” தேள் கொட்டியதுப் போலிருந்தது அந்த வார்த்தை அர்விந்துக்கு.

ரேகா அவன் முகம் பார்த்து பேச இதயம் வலித்தது. அந்த வலியை முகத்தில் காட்டாதபடி சிரமப்பட்டு மறைத்தாள்.

“உங்களுக்கும். எனக்கும் சரிவர அறிமுகம் கூட இல்லாத நிலையில் நமக்குள் காதல், கல்யாணம்ங்கறதெல்லாம் சரிப்பட்டு வராது. எனக்கு அப்படிப்பட்ட எண்ணமேயில்லை. சுபியை உங்களுக்கு பல வருஷங்களாக தெரியும். உங்க மேல் அவளுக்கு நிறைய அன்பிருக்கு! தன்னுடைய உயிரையே மாய்ச்சி கொள்கிற அளவுக்கு காதல் இருக்கு! இந்த உலகத்துல என் தங்கச்சியை விடவும் நல்ல மனைவி நிச்சயமாய் உங்களுக்கு கிடைக்கமாட்டா”

“ரேகா!”

“என் மேல உங்களுக்கு அன்பிருப்பது நிஜம்னா…அந்த அன்புக்கு மரியாதை கொடுத்து என் வேண்டுகோளுக்கு செவி சாய்ப்பீங்கன்னு நம்பறேன்!” என்றாள் வெடித்துக் கொண்டு வந்த அழுகையை கட்டுப்படுத்தி!

அர்விந்த் அவளையே வேதனை பொங்க பார்த்தபடி “சரி” என்றான்.

சுபத்ராவுக்குள் குப்பென ரோஜா மலர்ந்தது. அக்காவை நன்றியுடன் நோக்கினாள்.

“சரி.. மீதியை வீட்லே போய் பேசிக்கலாம்….புறப்படலாம் வா!” என்று ரேகாவின் கையை பற்றினாள் அம்பிகா.

“எந்த வீட்டுக்கும்மா?”

“நம்ம வீட்டுக்குதான்!”

“ஸாரிம்மா..என் வீடு அதுவல்ல!”

”சு…சீ..லா!”

“இந்த பேருக்கூட என்னுடையதல்ல!”

“என்னடி சொல்றே?” அம்பிகா பயத்துடன் மகளைப் பார்த்தாள்,

”என்னைப் பெத்தது நீங்களா இருக்கலாம். சொல்லிக் காட்டறேன்னு தயவு பண்ணி தப்பா நினைச்சிடாதீங்க! நீங்க அடிச்சிருந்தா.. வலியோட மறந்திருக்கலாம். ஆனா, சூடு போட்டிருக்கீங்களே! அந்த தழும்பு மறையலியேம்மா”

“சுசிலா!”

”காக்காக் கூட தன் குஞ்சுகளை கஷ்டப்பட்டு காப்பாத்துது! ரோட்ல கிடக்கிற அனாதை குழந்தைகளைக் கூட சோத்துக்கு வக்கில்லேன்னாக் கூட எடுத்து வளர்க்கிற எத்தனையோ ஏழைகள் இருக்கவே செய்யறாங்க! ஆனா, உங்க பணத்தேவைக்காக என்னை வித்துட்டீங்களேப்பா! அந்த வடு மறையலேப்பா! உங்களை உங்கப்பா இதே மாதிரி பணத்துக்கு வித்திருந்தா.. உங்க மனக என்ன பாடுபடும்?”

”கண்ணே… என்னை மன்னிச்சிடும்மா! அப்பா தெரிஞ்சோ, தெரியாமலோ செஞ்ச தப்பும்மா அது!” ஏகாம்பரம் மகளின் கையைப் பற்றி கெஞ்சினார்.

“பணம் கொடுத்து வாங்கின குழந்தையை இந்தப்பா.. நல்லாவே வளர்த்தார். நல்ல கல்வியை கொடுத்தார். பெத்த குழந்தையையே விலைக்கு விக்கிறப்ப… வாங்கின குழந்தையை அனாதைன்னு சொல்லி ஆஸ்ரமத்துல சேர்த்தது பெரிய தப்பா எனக்குத் தெரியலேப்பா”

கோபாலன் தலைநிமிர்ந்து பார்த்தார். ஏகாம்பரம் தலை கவிழ்ந்தார்.

“நாம எல்லாரும் ஒண்ணு சேர்ந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்! அம்மா.. உங்களுக்காவது ஒரு பிள்ளையும், பொண்ணும், மருமகள் பேரக்குழந்தைன்னு உண்டு! ஆனா, இந்தப்பாவுக்கு அம்மாவைத்தவிர வேற யாரும் இல்லேம்மா! ரெண்டு தங்கச்சிகளும் இறந்துப் போய்ட்டாங்க! பொண்ணுங்களை இழந்த ஒரு தாயோட மனவேதனை உனக்கு நல்லாவேத் தெரியுமில்லையா? இப்பதாம்மா என்னோட அன்பு இவங்களுக்கு அவசியம் தேவை!”

“சு…சீ…லா” அம்பிகாவின் கண்கள் கலங்கியது.

“அழக்கூடாதும்மா! சுசிலா ரேகாவாய்ட்டாம்மா!. அவளால மறுபடி சுசீலாவா ஆக முடியாது.”

“சுசீ… என்ன முடிவு இது?” தினேஷ் தங்கையின் தலையை ஆறுதலாய் வருடினான்.

“நிதானமா யோசிச்சுப் பாருங்கண்ணா.. நான் எடுத்த முடிவுல உள்ள நியாயம் புரியும்”

“நான் இனி உங்கிட்டே சண்டை போட மாட்டேன்க்கா. ப்ளீஸ் எங்களோட வந்துடேன்!” என்றாள் கெஞ்சலாக சுபத்ரா!

“நான் எங்கே போய்டப் போகிறேன்? இதோ இருக்கிற செங்கல்பட்டுக்கு தானே? வாரத்துக்கு ஒருமுறை வந்து பார்க்க மாட்டேனா என்ன?”

“ஏம்மா.. பெத்தவங்களைவிட உன்னை வளர்த்தவங்க முக்கியமா போய்ட்டாங்களா? இந்த தாயோட கண்ணீர் உன்னை கரைக்கலியா சுசிலா?”

ரேகா அம்பிகாவின் கைகளைப் பற்றி கன்னத்தில் வைத்து அழுத்திக்கொண்டான்.

”அம்மா… நீ என்னை தப்பா புரிஞ்சிட்டிருக்கே! நான் காயப்பட்டிருக்கேன். அது நிஜம். ஆனா, அதுக்காக பழிவாங்கறேன்னு நீங்க நினைச்சீங்கன்னா அது தப்பும்மா! விவரம் புரியறதுக்கு முன்னாடியே உங்களை விட்டு நான் பிரிஞ்சாச்சு. எனக்கு விவரம் புரியறப்ப… என் அப்பா அம்மாவா இருந்தது இவங்கதானே? சந்தர்ப்ப சூழ்நிலைகள் நான் இந்த ஆஸ்ரமத்துக்கு வந்துட்டேன். நன்றியை மறக்கக் கூடாது இல்லையா? ஏழுவருஷமா அன்பை கொட்டி வளர்த்ததை மட்டும் மறக்காம்…மற்றதெல்லாம் மறந்துட்டேன்.

பாதர் எங்களை நல்ல விதமா வளர்த்தார். உரிமைக்காக போராடறதை விட விசுவாசத்திற்காக போராடுன்னு சொல்லி சொல்லி வளர்த்தார். அது என் ரத்தத்துலே கலந்திடுச்சும்மா!

உதாசீனம்ங்கறது மனசுக்கு எவ்வளவு வேதனையைத் தரும்ங்கறதை நான் சின்ன வயசிலேர்ந்தே அனுபவிச்சேன். அந்த வேதனையை சுபி அனுபவிக்கக் கூடாது. நிச்சயதார்த்தம் வரைக்கும் வந்துட்ட ஒரு கல்யாணம் நின்னுபோனா அந்தப் பொண்ணோட எதிர்காலம் கேள்விக்குறியாய்டும்.

எல்லாம் இப்ப நல்லபடி முடித்தாலும்… என்னை பார்க்கும் போதெல்லாம் இதுக்கெல்லாம் காரணம் அக்கா தானே என்கிற வேதனை சுபிக்கு ஏற்படும். ஏன்னா… நானும் பெண்தானே? சுபியோட மனசு எனக்கும் புரியும். அப்படியொரு தர்ம சங்கடம் என்னால ஏற்பட வேண்டாம். நமக்குள்ளே ஒரு மரியாதையான இடைவெளி இருக்கறது நல்லது!”

”உனக்கொரு கல்யாணம் பண்ணி சீரும் சிறப்புமா வாழ வைக்கிற கடமை எங்களுக்கிருக்கு சுசீலா!” குரல் நைந்து போய் வந்தது ஏகாம்பரத்திற்கு.

“அந்தக் கடமை இவருக்கும் இருக்கு! இந்த விஷயத்திலே நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து எனக்கொரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தித் தருவீங்கன்ற நம்பிக்கை எனக்குண்டு! இதிலே எனக்குன்னு தனிப்பட்ட எந்த விருப்பு வெறுப்புக்கும் இடமில்லே! நீங்க யாரைக் கொண்டு வந்து நிறுத்தினாலும் அவர் கையால் மாலை வாங்கிக்கத் தயாராயிருக்கேன். தயவு செய்து என்னை இந்தப்பாவோட் போக அனுமதியுங்கப்பா?”

ஏகாம்பரம் செய்வதறியாது கண்கலங்க… கோபாலன் உச்ச மகிழ்ச்சியோடு ரேகாவின் தலையில் முத்தமிட்டார்.

“என் பொண்ணு மறுபடி எனக்கு கிடைச்சிட்டா!”

சிறிது நேரம் கனத்த மவுனம் அங்கே நிலவியது.


கார் செங்கல்பட்டு நோக்கி செல்ல தயாராயிருந்தது.

“சுபியோட கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடியே வந்துடுவேன். என் தங்கை கல்யாணத்துக்கு நான் தான் ஓடியாடி வேலை செய்வேன்” சிரித்தபடி சொன்னாலும், ரேகா அரவிந்தின் முகத்தை பார்ப்பதை தவிர்த்தாள்.

அவன் முகத்தை பார்த்தால் எங்கே தான் உடைந்து விடுவோமோ என்று பயமாயிருந்தது.

‘அரவிந்த்… என் இதயத்திலும் உங்களுக்கு இடமிருந்தது. நான் அனாதை என்ற காரணத்திற்காக என் காதலை வெளிப்படுத்த தயங்கினேன். இப்போது என் சுற்றத்தாருக்காக என் மனகக்குள்ளேயே சமாதி கட்டி வீட்டேன். என்னை மன்னிச்சிடுங்க அரவிந்த்!’ துளிர்த்த கண்ணிரை சிரமப்பட்டு உள்ளிழுத்து கொண்டாள்… காதலைப் போலவே!

“சுசி….நீ ரேகாவாயிருந்தாலும்… எப்பவும் எங்களுக்கு சுசிலா தான்! எங்கப் பொண்ணு உயிரோட இருக்கிறான்ற சந்தோஷம் போதும். அப்பப்ப… இத்த அம்மாவையும் அப்பாவையும் வந்து பார்த்திட்டிரும்மா!”

“என்னப்பா நீங்க? மறத்திடுவேனா? நான் இந்த பூமிவிலே கால் பதிக்க காரணமாயிருந்த பிரம்மாக்கள் நீங்கதானே? அடிக்கடி வருவேன்ப்பா! அம்மா வரட்டுமா? சுபி… வரட்டுமா? சமர்த்தாயிரு! அண்ணா, அண்ணி.. வர்றேன்!” என்றவள் அர்விந்திடம் கண்களால் விடைபெற்றாள்.

கார் புறப்பட்டது.

பதினேழு வருடத்திற்கு முன்பு…கதறியழுதபடி சென்ற சுசிலா.. இன்று கைகூப்பி விடை பெற்றாள்.

தங்கையை காப்பாற்ற உருண்டு புரண்டு அழுத தினேஷ். ரேகாவாய் மாறிய தங்கையை நெருங்க முடியாமல் கையாலாகாதவனாய் நெஞ்சு பொரும நின்றிருந்தான்.

புழுதியை கிளப்பிக் கொண்டு கார் புறப்பட்டது. புழுதி படலத்தில் கார்… நின்றிருந்தவர்களின் கண்களிலிருந்து மறைந்தது.

காரின் சீட்டில் சாய்ந்துக் கொண்ட ரேகாவின் கண்களில் தன்னை மீறி கண்ணீர் வெளிப்பட்டது.

தன்னை பெற்றவர்கள் மீதும் பாசம் இல்லாமலில்லை.

ரேகாவை பொறுத்தவரை…விழி இரண்டானாலும் பார்வை ஒன்றுதான்!

“அப்பா…சீக்கிரம் போங்க… அம்மா காத்திருப்பாங்க!” என்றாள்.

கோபாலனுக்குள் புதிய ரத்தம் பாய காரின் வேகத்தை உற்சாகமாய் அதிகப்படுத்தினார்.

(முற்றும்)

– தேவியின் பெண்மணி, பிப்ரவரி 2001

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *