“அமுதா நம்ம வனஜாவோட அப்பா, நேற்று இரவு நெஞ்சுவலியில் இறந்துவிட்டாராம். நாளை காலை பத்து மணிக்கு அடக்கம் எடுக்காங்களாம், உன் நாத்தனார் அகல்யாவுக்கு, வனஜா தோழிதானே அதனால் அவளுக்கும் சொல்லிடு”
“வள்ளி என்ன சொல்றே நல்லாதானே இருந்தார், எப்படி நெஞ்சுவலி வந்தது”
“அவருக்கு குடிக்கும் பழக்கம் இருக்கு இல்லையா, நேற்று இரவு நண்பர்களோடு சேர்ந்து குடித்துவிட்டு, எல்லோரும் இரவு மட்டன் பிரியாணி சாப்பிட்டு இருக்காங்க போல, வயதானவர் இல்லையா, அதான் நெஞ்சுவலி வந்திருக்கு”
“அப்படி என்னதான் இருக்கோ இந்த குடியில், எல்லோரும் குடித்துவிட்டு, இப்படி உயிரை விடுறாங்களோ தெரியவில்லை, சரி நான் சொல்லிடறேன். இரண்டு பேரும் சின்ன வயதிலிருந்தே தோழிகள் இல்லையா”
அமுதா தன் கைபேசியில் அகல்யாவை அழைத்தாள், “என்ன அண்ணி காலையிலேயே கூப்பிட்டு இருக்கீங்க, எப்பவும் இரவுதான் கூப்பிடுவீங்க”
“அகல்யா உன் தோழி வனஜா அப்பா, நேற்று இரவு குடித்துவிட்டு, மட்டன் பிரியாணி சாப்பிட்டு வந்து படுத்திருக்கார், தூக்கத்திலேயே நெஞ்சுவலி வந்து இறந்துட்டார், நாளைக்கு காலையில்தான் அடக்கம் எடுக்காங்களாம், உன்னிடம் இப்பவே சொன்னால்தானே, நீ வேலை முடித்து வர சரியாயிருக்கும், அதானால்தான் கூப்பிட்டேன்”
“ஐயோ! எத்தனை முறை வனஜா சண்டை போட்டு இருப்பாள், இந்த குடியை விட சொல்லி, இந்த மாமா கேட்கவே இல்லை இப்போ பாருங்க, அதானாலயே உயிரையே விட்டுட்டார், அப்படி ஏன்தான் எல்லோரும் இந்த குடியை கட்டிக்கிட்டு அலையுறாங்களோ”
“அண்ணி எனக்கு நாளைக்கு விடுமுறை எடுக்க முடியாது, நான் இன்னைக்கு சாயங்காலமே வரேன், நான் வந்த பிறகு, நாம சேர்ந்தே போகலாம்” என்றாள்.
“சரி அகல்யா நான் போகல, நீ வந்த பிறகே போகலாம், வள்ளியும் வரேன் என்று சொன்னாள், அவளையும் கூட்டிக் கொண்டு போகலாம்” என்று சொல்லிவிட்டு கைபேசியை துண்டித்தாள்.
சாயங்காலம் அகல்யா வந்ததும், அமுதாவும் வள்ளியும் சேர்ந்து துக்கம் விசாரிக்க, வனஜா வீட்டிற்கு சென்றனர், அகல்யாவைக் கண்டதும் வனஜா கதறினாள், அவள் தங்கை, அம்மா என்று எல்லோரும் கதறினார்கள், இதைப் பார்த்து அமுதாவும் வள்ளியும் சேர்ந்து அழுதார்கள்.
அகல்யா முகத்தில் சோகம் மட்டும் நிறைந்திருந்தது, ஆனால் அவள் கண்களில் கண்ணீர் இல்லை, வனஜாவுக்கு அவள் வீட்டில் எல்லோருக்கும் ஆறுதல் கூறிவிட்டு, மூவரும் ஒரு இடம் பார்த்து அமர்ந்துக் கொண்டனர்.
உறவுகள் எல்லாம் ஒவ்வொருத்தராக வர, வனஜாவும் அவள் குடும்பமும் எல்லோரையும் பார்த்து பார்த்து அழுதுக் கொண்டே இருந்தார்கள், அதைக் கண்டு அமுதாவும் வள்ளியும் அழுதார்கள், ஆனால் அகல்யா, வனஜாவுக்கு ஆறுதல் மட்டும் சொல்லிக் கொண்டே இருந்தாள், அவள் கண்களில் கண்ணீர் என்பதே இல்லை, அவள் சுபாவம் அப்படி அவ்வளவு எளிதில் எதற்கும் கண்ணீர் சிந்தமாட்டாள்.
அமுதாவுக்கும் வள்ளிக்கும் இடையில் அகல்யா இருந்ததால், அவளையே கவனித்துக் கொண்டிருந்த வள்ளி, அமுதாவிடம் மெதுவாக, “இத்தனை பேர் அழுவதை பார்த்தும், அகல்யா கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் வரலையே” என்று கேட்க,
அகல்யா வள்ளியை பார்த்து முறைக்க, அமுதா மெதுவாக வள்ளியிடம், “அது உனக்கு தெரியாதா?, அதை நாங்க எப்பவோ கண்டுபிடிச்சிட்டோம்” என்று சொல்ல, அகல்யாவும் வள்ளியும் என்ன என்பது போல் அவளையே பார்த்தனர்.
“அதை ஏன் கேட்கிறே, நாங்களும் இப்படிதான் பலமுறை, அவளை கவனித்தோம், அதற்கு பிறகுதான் தெரிந்து கொண்டோம்”
இருவரும் பெரிய குழப்பத்துடன் அவளை மீண்டும் பார்க்க, “அண்ணி என்ன உளறுகிறாள், நமக்கு தெரியாமல் நம்மிடம் என்ன கண்டுபிடித்தாள்” என்று யோசிக்க, வள்ளியோ, “இவளுக்கு உடம்புல ஏதோ பிரச்சினை இருக்கோ” என்று யோசித்து அமுதாவிடம், “என்ன என்று சொல்லு” என்றாள்.
அமுதா மெதுவாக, “அது கடவுள் இவளை படைக்கும் போது, இவள் கண்ணில், கண்ணீர் தொட்டியை படைக்க மறந்துவிட்டார், அதனால்தான் இவள் மனதிலும் முகத்திலும் சோகம் நிறைய இருந்தாலும், கண்ணில் கண்ணீர் வராது” என்று தன் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு சொன்னாள்.
அகல்யா தன் அண்ணியை பார்த்து முறைக்க, வள்ளி அவள் என்னமோ ஏதோ என்று நினைத்து, ஆனால் அமுதா இப்படி சொல்வதை கேட்டதும், அமுதாவைப் பார்த்து, “அப்படியா” என்று பரிதாபமாக கேட்க, அவளும் ஆமா என்று பரிதாபமாக சொல்ல,
வள்ளியால் அங்கே சிரிக்கவும் முடியாமல், சிரிப்பை அடக்க முடியாமல், தன் புடவை முந்தானையை எடுத்து, முகத்தை நன்றாக மூடிக் கொண்டு குலுங்கி குலுங்கி சிரிக்க, அருகில் இருந்த பாட்டி வள்ளி அழறாள் என்று நினைத்து, வள்ளியை கட்டிப் பிடித்து, ஓவென்று ஒப்பாரி வைக்க, அதைப் பார்த்த அருகில் இருந்த இன்னும் இருவரும் வள்ளியை பிடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்தார்கள்.
அகல்யா உடனே அமுதாவையும் வள்ளியையும் வெளியில் அழைத்துக் கொண்டு வந்து அவர்களிடம், “ஒருவருக்கு கண்ணீர் வரவில்லை என்பதற்காக, அவர்கள் கல் மனது படைத்தவர்கள் என்று அர்த்தமில்லை, வேதனைகளை தாங்கக் கூடிய மனது அவர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது, அதைக் கண்ணீர் மூலம் காட்ட வேண்டிய அவசியமில்லை. எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணம் கூட உங்களுக்கு இல்லையா?”
“தன் கணவனை இழந்த வேதனையில் மனைவியும், தன் தந்தையை இழந்த வேதனையில் பிள்ளைகளும் உறவுகளும் இருக்கும், இந்த நிலையில் இப்படி கேலி செய்து விளையாடுகிறீர்களே, அவர்களின் வேதனையில் பங்கெடுக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, இந்த மாதிரி அநாகரிகமாக நடந்து கொள்ளாமல் இருங்கள், நமக்கும் இந்த மாதிரி நிலைமை ஒரு நாள் வரும் அதைப் புரிந்துக் கொள்ளுங்கள்” என்று தன் தோழி வனஜாவின் அருகில் அமர்ந்து கொண்டாள்.