கண்ணாடித் திரை

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 7,423 
 

அந்த மண்ணில் காலை வைத்ததும், இனம்புரியாத ஓர் உணர்வு ஏற்படுவதை உணர்ந்தான் ஜெகன். தனது இருபத்தெட்டாவது பிறந்த நாளுக்குக் குலதெய்வக் கோவிலில் சாமி கும்பிட வந்திருந்தான்.

ஜெகனுக்கு சிறு வயதிலிருந்தே இங்கு வருவதென்றால் கொண்டாட்டம்தான். இத்தனைக்கும் வறண்ட பூமி இது. ஆனாலும், போட்டி போட்டுக் கொண்டு மிதி வண்டி ஓட்டிய தருணங்கள், எப்பவாவது பெய்யும் மழையினால் ஏற்படும் மண்வாசம், வானொலியில் ஒலிச்சித்திரம் கேட்கும் அக்கா, அத்தை, மாமா என ஒரே கூட்டம்.

கண்ணாடித் திரைபன்னிரெண்டு வயசாகும்போது அப்பா சென்னைக்குக் கூட்டிட்டுப் போய்விட்டார். தச்சு வேலை. ஏதோ வருமானம் போதுமானதாக இருந்தது. அப்புறம் மெல்ல, மெல்ல வசதி வந்து சொந்த வீடு, இன்ஜினியரிங் படிப்பு, இதோ இப்போது நல்ல கம்பெனியில் வேலை. வருடத்துக்கொரு முறை வர முடியாட்டியும், எப்போதெல்லாம் நேரம் கிடைக்குதோ, இந்த ஊருக்கு வந்துடுவான்.

டர்… டர்…ன்னு வந்த மோட்டார் சத்தம் அவன் நினைவைக் கலைத்தது. திரும்பிப் பார்த்தவன் உரக்கவே கத்தினான்.

“”முருகேசன் அண்ணே…” ஆனால் அதற்குள் வண்டி புள்ளியாய்த் தெரிந்தது.

இவர் கொஞ்சம் நெருங்கிய சொந்தம்தான். பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படி. இவருக்கு கட்டிக் கொடுத்த பெண்ணும் ஓரளவுக்கு இவனுக்குச் சொந்தம்தான். நல்ல அழகு, சிவப்பு

நிறம். நல்ல குணமும் கூட. ஆனால் தலையெழுத்துதான் சரியில்லை. ஏற்கெனவே முருகேசன் அண்ணனுக்கு ஒரு தொடுப்பு இருந்திருக்கு. சும்மா சொல்லக் கூடாது. இந்த அண்ணியைக் கட்டிக்க மாட்டேன் என்றுதான் அந்த அண்ணன் சொல்லியிருக்காரு. ஆனால், எல்லாரும் சேர்ந்துதான், சொந்தம் போகக் கூடாதுன்னு கட்டி வெச்சுட்டாங்க. அவரை சைக்கோன்னு கூடச் சொல்லலாம். அந்த அண்ணியிடம் பாசமாக இருக்கமாட்டார்.

அந்த காலத்திலேயே இன்ஜினியரிங் முடிச்சு, ஊர்ப்பக்கம் நல்லா சம்பாதிச்சுட்டார். நகையெல்லாம் போட்டு ஏதாவது ஒரு விசேஷத்துக்கு கூட்டிட்டுப் போவாரு. வீட்டு வாசல் படியை மிதித்தவுடன் கழுத்திலே ஒரு மஞ்சள் கயிறைத் தவிர வேறு எதுவும் இருக்காது. எல்லாவற்றையும் கழற்றிக் கொடுத்துடணும். தாம்பத்யத்திலே கூட வலியப் போய் அவருக்குச் சேவை செய்யணும். இல்லாட்டி, நான் சலிச்சுப் போய்ட்டேனா என்ற குத்தல் கேள்வி. எந்தப் பெண்ணுதான் வலிய போவா? அங்கலாய்ப்புடன் இதைப்பற்றி அம்மா ஒரு நாள் பேசியதை, அரசல் புரசலாகக் கேட்ட ஜெகன் அதிர்ந்துதான் போனான்.

பாவம் அந்த அண்ணி. என்ன பண்ண முடியும்? அவங்க அப்பா, அம்மா எதுவும் மாப்பிள்ளையை கேட்க முடியவில்லை. அது கிராமம். வாழாவெட்டியா அனுப்பி வெச்சுட்டா அசிங்கம். அதோட, கடைசி வரை யாரு பார்த்துக்கிறது? அண்ணனுங்களே பெத்தவங்களை விட்டுட்டு, அடுத்த ஊரிலேயே செட்டில் ஆகிட்டாங்க. உண்மையிலேயே நடைபிண வாழ்க்கைதான்.

வெயில் சுள்ளென்று முகத்தில் பட்டவுடன் தலையைச் சிலுப்பிக் கொண்டான். யோசனையிலேயே நடந்து வந்தவன் கால்கள் தானாக கோயிலின் வாயிலில் நின்றது.

பழமாத்துக்காரர் இவனைப் பார்த்தவுடன் தன் காவிப் பற்களைக் காட்டினார்.

“”வா தம்பி… வீட்டிலே எல்லாரும் செüக்யமா?”

“”நல்லாயிருக்காங்க. எனக்குப் பிறந்த நாளு அதான் அம்மா சாமி கும்பிட்டு வரச் சொன்னாங்க”

“”தெரியும். தெரியும்… அம்மா போனிலே பேசினாங்க. பொண்ணுப் பார்த்துக்கிட்டு இருக்கேன். நல்ல பொண்ணா இருந்தா சொல்லுன்னு என்கிட்டேயும் சொன்னாங்க. நீதான் நம்ம ஊரு பக்கமா இருக்கிற பொண்ணு கேட்டியாமே?”

சிரித்துக் கொண்டான் ஜெகன். உண்மைதான். இப்பவெல்லாம் ஊரு பக்கமும், பொண்ணுங்க நல்லா படிச்சு, நல்ல வேலையிலேயே இருக்காங்க. ஆனாலும் அவங்க முகத்துல இருக்கிற அந்த கிராமியத்தனம், வரம்பு மீறக் கூடாதுங்கிற எச்சரிக்கை, அனுசரிச்சுக்கிட்டுப் போற பண்பு எப்பவும் மாறாது. அதான் ஜெகன் ஊரு பக்கமே பொண்ணு பாக்கச் சொல்லிட்டான்.

“”சரி ஐயா… பக்கத்துல, குளத்துல கை, கால் கழுவிட்டு வரேன். நீங்க பூஜைக்கு ரெடி பண்ணுங்க”

“”சரி, சரி, வாங்க” என்றவாறே பழமாத்துக்காரர் வேலையை ஆரம்பிச்சுட்டார்.

புத்துணர்ச்சியோடு ஜெகன் வந்தபோது, எல்லாம் ரெடியாக இருந்தது. பூஜை முடிந்து, சிறிதுநேரம் ஆலமர நிழலில் உட்கார்ந்தான் ஜெகன்.

“”சரி தம்பி, நான் கிளம்பறேன். இன்னைக்கே ஊருக்குப் போறீங்களா?” – பழமாத்துக்காரர்.

“”ஆமா ஐயா.. நம்ம முருகேசன் அண்ணனைப் பார்த்துட்டு இரவு பஸ்ஸýக்குக் கிளம்புறேன்”

“”சந்தோஷம் தம்பி… வீட்டிலே கேட்டேன்னு சொல்லுங்க” என்று கிளம்பிவிட்டார் பழமாத்துக்காரர்.

அவனும் சிறிது நேரம் அமர்ந்து ஓய்வெடுத்தான். பக்கத்துல இருக்கிற ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு, பழைய நண்பர்களைச் சந்தித்து விடை பெற்றுக் கொண்ட போது, சூரியன் மறையத் தொடங்கியிருந்தான்.

அம்மா வேறு சொல்லியனுப்பினாங்க. முருகேசன் அண்ணனைப் பார்த்துட்டு போயிடலாம். அவரின் வீட்டை நோக்கி நடந்தான். தூரத்தில் இருந்து பார்த்தபோதே குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பது தெரிந்தது.

அருகில் சென்று பார்த்தபோது, முருகேசன் அண்ணன் ஜாடையில் ஆண் குழந்தை ஒன்று அவரின் இரண்டு பெண் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தது.

வீட்டின் கேட்டைத் திறந்ததும், “”அம்மா யாரோ வந்திருக்காங்க” என்று குழந்தைகள் கத்திக் கொண்டே உள்ளே ஓடினார்கள்.

எட்டிப் பார்த்த வைதேகி, “”வாங்க தம்பி” என்றாள்.

“”எப்படி இருக்கீங்க அண்ணி… ” என்று வாய்தான் கேட்டதேயொழிய அவளைப் பார்த்ததுமே தெரிந்து கொண்டான்.

முகம் கறுத்து, கவலையில் ஒடுங்கிப் போயிருந்தாள்.

“”அம்மா செüக்யமா?” வைதேகி.

“”நல்லாயிருக்காங்க அண்ணி”

“”சரி தம்பி, அந்த ரூம்ல குளிச்சு ரெடியாகுங்க. நான் டிபன் பண்றேன். இருந்துட்டுப் போகலாம்ல”

“”இல்ல அண்ணி. கோவிலுக்குத்தான் வந்தேன். ராத்திரி பஸ். அண்ணன் எப்ப வருவாங்க?”

“”வர்ற நேரம்தான். நீங்க ரெடியாகுங்க”

ஜெகன் குளித்து, உடை மாற்றிக் கொண்டு டைனிங் டேபிளில் உட்காரும் போது மணி ஏழானது.

மணக்க மணக்க இட்லி சாம்பாரும், இட்லியும், வதக்குச் சட்னியும் அரைத்திருந்தாள் வைதேகி.

எப்பவோ அம்மா பேசும்போது, தனக்குப் பிடிக்கும் என்று சொன்னதை மறக்காமல் செய்த வைதேகியிடம் திரும்பவும் கேட்டான் ஜெகன்.

“”எட்டு மணிக்குப் பஸ். இப்போ கிளம்பினாத்தான் சரியாயிருக்கும். அண்ணே வந்துருவாருல்ல”

“”இல்ல தம்பி. இரண்டு நாளாகுமாம். போன் பண்ணினாரு” என்று வெறித்தபடியே கூறினாள்.

“”அண்ணி அந்தக் குழந்தை?”

“”அவரோடதுதான்” என்றவள் தட்டில் மேலும் இரண்டு இட்லிகளை வைத்தாள்.

ஜெகனுக்குத்தான் உள்ளே இறங்கவில்லை. எப்படி இவளால் முடியுது? பார்த்துப் பார்த்து பழகிவிட்டதோ? தன் கணவனுக்கு இன்னொரு மனைவி, குழந்தை, போதாதற்கு அடுத்த ஊரில் ஒன்று இருப்பதாகச் சேதி.

எதுவும் பேச இயலாதவனாய், சாப்பிட்டு விட்டு அவளிடம் விடைபெற்றுக் கொண்டான்.

நாட்கள் ஓடின. சென்னையின் இயந்திர வாழ்க்கையில், மற்ற நினைவுகள் மறந்துபோனது.

தங்கக் கீற்றுகளாய், தன் மீது விழுந்த சூரிய ஒளியை உதாசீனப்படுத்திக் கொண்டு, படுக்கையில் புரண்டான் ஜெகன்.

எப்போ, எப்படி இது நடந்தது? என்று அம்மா சற்று உரக்கவே தொலைபேசியில் யாரிடமோ பேசிக் கொண்டிருப்பது காதில் விழ சட்டென்று எழுந்தான்.

“”என்னம்மா… என்னாச்சு?”

தொலைபேசியை வைத்தவள், கண்களில் நீரை அணைகட்டிக் கொண்டு தழுதழுத்த குரலில் கூறினாள்:

“”முருகேசனுக்கு ராத்திரி நெஞ்சுவலியாம். உயிர் பிரிஞ்சிருச்சாம். பாவிப் பய, ஆடினானே ஓரே ஆட்டமா. பத்தாதுக்கு சர்க்கரை, கொழுப்புன்னு நோய் வேற. இப்படி அல்பாயுசுல போய்ட்டானே…”

செத்தவனைவிட வைதேகியின் முகம்தான் அவனுக்குக் கண்முன் நின்றது.

அடுத்து என்ன செய்யப் போகிறாள்?

“”நான் கிளம்பறேன்டா.. நீ முடிந்தால் வா. இல்லேன்னா காரியத்துக்கு வந்துடுப்பா”

ஜெகனுக்கு அலுவலகத்தில் விடுமுறை கிடைக்காததால், பதினாறாவது நாள் காரியத்துக்குத்தான் செல்ல முடிந்தது.

வீட்டில் நுழைந்ததும் வைதேகியைப் பார்த்தான். அவள் முகத்தில் எவ்வித சலனமும் காட்டவில்லை.

ஒருவழியாக கருமாதி முடிந்து சொத்துப் பிரச்னை வந்தது. முருகேசனின் இரண்டாவது மனைவியும், மூன்றாவதும் வீட்டில் வளைய வந்தார்கள். யாரும் ஒன்றும் கேட்கவுமில்லை. பேசவுமில்லை.

முருகேசனுக்கு எங்கெங்கு சொத்து இருக்கு? என்று பேச்சை ஆரம்பித்தார் வெங்கடாசலம் சித்தப்பா.

சொத்து பத்திரம், வங்கிப் புத்தகம் ஆகியவற்றைக் கொண்டு வந்தான் முருகேசனின் காரியதரிசி.

இரண்டும், மூன்றும் ஆவலுடன் பார்க்க, சலசலப்பு ஏற்பட்டது.

“”நான் கொஞ்சம் பேசலாமா?” – வைதேகி.

“”எனக்குன்னு உள்ள பங்கை அனாதை ஆசிரமத்துக்குக் கொடுத்துடுங்க”

“”என்ன சொல்றே? சொத்து உன்னோடது. அதிலே என்ன பங்கு வேண்டிக் கிடக்கு? அதுவும் அனாதை ஆசிரமத்துக்கு?” தன் மகளின் எதிர்காலத்தை நினைத்துக் கலங்கியவராய் வெகுண்டெழுந்தார், வைதேகியின் அப்பா.

“”பொறுமையா இருங்க அப்பா… அவங்க இரண்டு பேரும் அவரோட குடும்பம் நடத்தியிருக்காங்க. அந்த உரிமையில அவங்களுக்கு கொடுக்கத்தான் வேணும்”

“”ஆனால் நீ ரெண்டு பொட்டப் புள்ளைகளை வெச்சிருக்க” என்று இடையில் புகுந்தார் வெங்கடாசலம்.

“”இருக்கட்டுமே மாமா. நீங்கல்லாம் இருக்கீங்கல்ல.. பணம், காசு கொடுக்க வேண்டாம். உறுதுணையா இருங்க. அது போதும்”

“”முட்டாள் மாதிரி பேசாதே…” வைதேகியின் அண்ணன் கோபமாகக் கத்தினான்.

நிதானமாகத் திரும்பி அவரைப் பார்த்தாள் வைதேகி.

“”இந்தக் கோபத்தை அவர் முன்னாடி என் வாழ்க்கைக்காகக் காட்டியிருக்கலாமே அண்ணே! அவர் கிட்ட பணம், பதவி இருக்கலாம். ஆனால், உனக்கு உரிமை இருக்குண்ணே? ஏன், என் தங்கச்சி வாழ்க்கையை கெடுக்கறீங்க? என்று அவரைக் கேட்டிருக்கலாம். நியாயம் கெடைச்சிருக்குமே. கேட்டா, உன் வீட்டுக்கு என்னைப் பிள்ளையோட அனுப்பிச்சுட்டா என்ன பண்றதுன்னுதானே கேட்கல. அவ்வளவு சுயநலமா உனக்கு?”

“”இந்தக் காலத்துல, அவங்கவங்க வாழ்க்கையை அவங்கவங்கதான் பார்த்துக்கணும்” தலை கவிழ்ந்து கொண்டு கூறியவரை உற்றுப் பார்த்தாள் வைதேகி.

“”ஆனால்… இன்னும் உறவுகள் இருக்கு. அதுல உண்மையும், அன்பும் நிரம்பி இருக்கு. இதை யாராலும் மறுக்க முடியாது. உன்னை தப்பு செய்துட்டே என்று சுட்டிக் காட்டலை. இனிமே ஒதுங்காதேன்னுதான் கேட்டுக்கிறேன்”

“”இப்ப என்னதாம்மா சொல்றே?” அப்பா சற்றே தழுதழுக்கத் தொடங்கினார்.

“”ஏதோ படிச்சிருக்கேன். டெய்லரிங் தெரியும். என் சுய சம்பாத்தியத்துல என்னோட குழந்தைகளைப் படிக்க வெச்சு, ஒழுக்கத்தோட வாழ வைக்கணும். இதுதான் இப்போதைக்கு என்னோட குறிக்கோள். அவர் கிட்ட நான் பட்ட அவமானம், வேதனை எல்லாத்தையும் இந்த சமுதாயத்துக்காகத் தாங்கிக்கிட்டேன். இந்த நிலைமை இனி நீடிக்கக் கூடாது. இந்த மாதிரி சமுதாயச் சிக்கல்களில் இருக்கிற ஒரு முடிச்சை நான் அவிழ்க்கிறேனே” என்று கூறியவளின் கண்களில் தெரிந்த தீர்க்கம், அதற்கு மேல் யாரையும் பேச விடாமல் சிந்திக்க வைத்தது.

“”கிரேட் அண்ணி” என்று ஜெகனின் வாய் அவனையறியாமல் முணுமுணுத்தது.

– மது (அக்டோபர் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *