கண்ணம்மா!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 25, 2022
பார்வையிட்டோர்: 3,511 
 

“ஏண்டி,ஏட்டக்கீழ வச்சுப்போட்டு ஊட்டக்கூட்ட மாட்டியாக்கும்?”என்று அதட்டிய அம்மாவை மிரட்சியுடன் பார்த்து விட்டு,துடைப்பத்தைக்கையிலெடுத்தாள் நான்காம் வகுப்பில் படிக்கும் ஒன்பது வயது நிரம்பிய ஏழைப்பெண் கண்ணம்மா.

“ஏண்டி கண்ணு,அடி உன்னத்தான்,அடுப்புல இருக்கிற சோத்தக்கிளறி உடு.பத்தாமயே பத்துன வாசமடிக்கும் கூப்பன் அரிசி சோறு.வேற பத்திப்போச்சுன்னா வாயில வைக்க முடியாது.இந்தக்கிரகம் வேற அழுது தொலைக்குது.இரு பாலைக்கொடுத்துட்டு வாரேன்” என்று சலித்துக்கொண்ட படி குழந்தைக்கு பாலூட்டினாள் கண்ணம்மாவின் தாய் செல்லாள்.

தாயின் பேச்சைத்தட்ட முடியவில்லை கண்ணம்மாவுக்கு.

கண்ணம்மா பிறந்த பின் தன் கணவனுடன் ஆறு மாதம் மட்டுமே குடும்பம் நடத்தியிருப்பாள் அவள் தாய்.பக்கத்துக்குடிசையில் நான்கைப்பெற்றவளைத்துணைக்கு அழைத்துக்கொண்டு காணாமல் போய்விட்டான் கணவன்!

கணவனின் செயலால் கலங்கவில்லை செல்லாள். ‘ஏழைக்குடும்பங்களில் அடிக்கடி நிகழ்வது தானே இது’என எண்ணி தன்னைச்சாந்தப்படுத்திக்கொண்டாள்.

கூலி வேலை செய்து தனி ஆளாக குழந்தையை வளர்த்தாள். காட்டில் வேலை செய்யும் போது அங்குள்ள மரங்களில் உள்ள கிளைகளில் ஒன்றில் குழந்தையை தொட்டில் கட்டிப்போட்டு விடுவாள்.

ஏழு வருடங்களுக்கு பின் காணாமல் போன கணவன் கண்முன் வந்து நின்ற போது அவன் முகத்தில் காரித்துப்பினாள் செல்லாள்.

அவன் அவள் துப்பிய எச்சிலைத்துடைத்து நாக்கில் வைத்தபடி

“இனிப்பா இருக்குதடி” என்றபோது மனம் இரங்கினாள். பலன் இப்போது கைக்குழந்தை.

மூட்டை தூக்குவது கண்ணம்மாவின் தந்தையின் வேலை.கிடைக்கும் வருமானத்தில் சரக்கைக்கவுத்தி விட்டு,கையில் காசில்லாமல் வருவான்.சில சமயம் வீட்டில் பெண் குழந்தை இருப்பதை மறந்து போதையில் பொட்டுத்துணி கூட இல்லாமல் கிடப்பான்.

“போன சனியன் போயே தொலைஞ்சிருக்கலாம்.விதி ஆரை உட்டுச்சு?”என புலம்பியபடி நடந்ததை எண்ணி வேதனைப்படுவாள் கண்ணம்மாளின் தாய்.

“என்னடி செல்லா… வந்த புருசன சேத்துட்டு இப்ப மரம் மரமா தொட்டல் கட்ட அழையறே…?கொழந்த கெடைக்காதவங்க மரத்த சுத்தரத பாத்திருக்கோம்.நீ பெத்துட்டு சுத்தறே..?எனக்கூறும் சக வேலையாளை முறைத்துப்பார்த்து விட்டு “எரிற தீயில எண்ணையக்கவுக்காதடி”என்பாள் சலிப்புடன்.

“அக்கா வவுத்தப்பாத்தா மறுபடியும் இருக்கும் போல…” என்றாள் ஒரு சிறுமி!

“ச்சீ…வாய மூடடி.உம்பட வயசுக்கு நீ பேசற பேச்சா இது…?” மகளைக்கண்டிப்பது போல் கண்டிப்பாள்.

நான்காம் வகுப்பில் நன்றாகப்படித்துக்கொண்டிருந்த கண்ணம்மாவுக்கு இது போதாத காலம் போல.

“இத பாருடி கண்ணு. கொழந்தைய வேலக்காட்டுக்கு எடுத்துட்டு போயி என்னால வேல பாக்க முடியல.அழுகுதுன்னு வேலய உட்டுப்போட்டு போனா மேஸ்திரி சத்தம் போடறாரு.நீ ஒன்னும் பள்ளிக்கொடம் போக வேண்டாம்.கொழந்தையப்பாத்துட்டு ஊட்லயே இரு” என்றாள் உறுதியாக.

இதைக்கேட்ட கண்ணம்மா அழ ஆரம்பித்து விட்டாள்.தன் தாயின் காலைக்கட்டியபடி கெஞ்சினாள்.

மனதில் மகள் மேல் பாசம் இருந்த போதிலும் சூழ்நிலை விரக்தியால் உதறித்தள்ளினாள். கண்ணம்மா புரண்டு அழ சக்தியின்றி சுருண்டு போனாள்.

பக்கத்து குடிசை வீடுகளிலிருந்து பள்ளிக்கூடம் செல்லும் சக சிறுமிகளை ஏக்கத்துடன் பார்க்கும் போது துக்கம் கண்ணம்மாவுக்கு தொண்டையை அடைக்கும்.

இந்த சோதனை போதாதென்று ஒரு முறை அவள் அம்மாவுக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டு விட மேஸ்திரி வந்து “உன்னால முடியாட்டி உன் பொண்ணையாவது வேலைக்கு அனுப்பி வை”என்று அதட்டி விட்டுப்போனார்.

“அட்வான்ஸ் வாங்கிட்டு போகாம இருக்க முடியுமா?களை புடுங்கற வேலைதான்.தூக்குப்போசில கூப்பன் அரிசி சோறு இருக்கு.எடுத்துட்டு போ.”என அவள் தாய் கட்டளையிடுவது போல் கூறுவதை மறுக்கமுடியவில்லை சிறுமி கண்ணம்மாவால்.

குறுக்கு புண்ணாக வலித்தது.முடியாமல் உட்கார்ந்து கொண்டாள்.

“தபாரு கண்ணு .இப்படி நீ பட்டற போட்டு உக்காந்துட்டீன்னா உம்பட வேலைய உங்கப்பனா வந்து செய்வான்…?எந்திரிச்சு புடுங்கு.முடியலீன்னா ஊட்டுக்கு தூக்கு போசிய தூக்கீட்டு நடையக்கட்டு. “என மேஸ்திரி சிறிது கூட இரக்கமில்லாமல் கூற ,தாங்க முடியாத வேதனையுடன் வேலை செய்தாள்.

அன்று இரவு கண்ணம்மாவுக்கு காய்ச்சல் வந்து விட துடித்துப்போனாள் அவள் தாய் செல்லாள்.

“இந்தக்கேடு கெட்டவன் மட்டும் ஒழுங்கா ரெண்டு காசு ஊட்டுக்கு கொண்டு வந்திருந்தா இந்தப்பிஞ்சை வேலைக்கு அனுப்பியிருப்பனா..?”பேசி விட்டு அழுதாள் செல்லாள்.

விடிய விடிய ஒத்தடம் கொடுத்தும் காய்ச்சல் விட்டபாடில்லை.காலையில் கைக்குழந்தையையும் தூக்கிக்கொண்டு,இருந்த பத்து ரூபாயையும் சுருக்குப்பையில் போட்டுக்கொண்டு,சந்தைக்கு நெல்லு மூட்டை கொண்டு செல்லும் மாட்டு வண்டியில் ,கண்ணம்மாவை உட்கார வைத்து தான் நடந்து அருகிலுள்ள நகரத்து அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தாள்.

“டோக்கன் வாங்கீட்டு அதோ அந்த வேப்பமரத்தடில போய் உட்கார்.டாக்டர் வந்தா கூப்பிடறேன்.பத்து ரூபா இருந்தா கொடுத்துட்டு போ”என்றாள் நர்ஸ்.

“கவர்மெண்ட் ஆஸ்பத்திரில பணங்கேக்கறீங்க..?” என செல்லாள் கேட்டாள்.

“சத்தமில்லாம கொடுத்துட்டு போ.இல்லேன்னா கடைசி டோக்கனா வச்சிடுவேன்”என்று நர்ஸ் கூற இருந்த பத்து ரூபாயையும் கொடுத்து விட்டு மரத்தடிக்கு கண்ணம்மாவை அழைத்துச்சென்றாள்.

மதியம் ஒரு மணி ஆகியும் டாக்டர் வரவில்லை.கண்ணம்மா காய்ச்சலால் துடித்தாள்.சக நோயாளிகளால் பார்த்து பரிதாபப்பட மட்டுமே முடிந்தது.

காலையில் கஞ்சி ஏதும் குடிக்காததால் பசி வயிற்றைக்கிள்ளியது.மாலை மணி நான்கும் ஆனது.டாக்டர் வரவில்லை.காத்திருந்த நோயாளிகளுக்கு சில மாத்திரைகளைக்கொடுத்து அடுத்த நாள் வரும்படி கூறி அனுப்பி வைத்தாள் நர்ஸ்.

கண்ணம்மாவால் கண்களைக்கூட விழிக்க முடியவில்லை.இப்போது “அம்மா…அம்மா…” என அனத்தினாள்.

“என்னம்மா.காய்ச்சல் இப்படிக்கொதிக்குது..?இவங்களை நம்பினா வேலையாகாது.தனியார் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போ.”என்று சக நோயாளி கூறிவிட்டுப்போக, கைக்குழந்தையை இடுப்பிலும்,கண்ணம்மாவை தோளிலும் தூக்கி சுமந்தபடி தனியார் மருத்துவமனை நோக்கிச்சென்றாள் செல்லாள்.

அங்கேயும் நர்ஸ் “பணம் எவ்வளவு கொண்டு வந்திருக்கே?” என விசாரித்ததில் துவண்டு போனாள்.

“எம்பட கிட்ட இப்ப எதுவுமே இல்லே.நாளைக்கு கந்து வட்டிக்கு கடன வாங்கியாவது கொண்டாந்து கொடுத்திடறேன்.எம்மவளைக்காப்பாத்துங்க” காலைப்பிடிக்காத குறையாகக்கெஞ்சினாள்.தனியார் மருத்துவமனை சட்ட திட்டங்களுக்கேற்ப்ப தமது பணியை செய்ய வேண்டிய நிலையிலிருந்த நர்ஸ் “போ போ” என விரட்டி விட்டாள்.

மனமும், உடலும் சோர்ந்து போய் வெளியேறியவளை எதிரே வந்த டாக்டர் விசாரித்தார்.

“ஏம்மா வந்துட்டு வைத்தியம் பார்க்காம போறீங்க…?” என கேட்டது தான் தாமதம் கதறி அழுது விட்டாள் செல்லாள்.

நர்ஸை அழைத்து திட்டிவிட்டு கண்ணம்மாவை கையைப்பிடித்து தாங்கியவாறு உள்ளே அழைத்துச்சென்று சிகிச்சையளித்தார்.

சிகிச்சை முடிந்து தன் பாக்கெட்டிலிருந்த பணத்தைக்கொடுத்து”இத பாரும்மா கண்ணம்மாவுக்கு காய்ச்சல் சரியாகிற வரைக்கும் நீ வேலைக்கு போகாம இருக்கவும்,மருந்து மாத்திரை வாங்கவும் இந்தப்பணத்த நீ வச்சுக்க”என டாக்டர் கொடுக்க பணத்தைப்பெற்றுக்கொண்டாள் செல்லாள்.

டாக்டரின் முகத்தையே சற்று நேரம் உற்றுப்பார்த்தாள் கண்ணம்மாள்.

“நானும் உங்கள மாதிரி டாக்டராக முடியுங்களா?” என்று கேட்டாள் காய்ச்சலால் ஒட்டிப்போன உதடுகளை விடுவித்து.

இதைக்கேட்டு உற்ச்சாகமான டாக்டர் சாம்பசிவம், “ஓ…முடியுமே…இப்ப நீ எந்த வகுப்பு படிக்கிறே…?”ன கேட்டார்.

“நாலாவது.ஆனா கொஞ்ச நாளா கொழந்தைய பாத்துக்கனம்னு அம்மா என்ன‌ பள்ளிக்கொடம் போக வேணான்னுடுச்சு.”என்றாள் கவலையுடன் கண்ணம்மாள்.

டாக்டர் அவள் தாயை உஷ்ணமாகப்பார்க்க அவள் தலை குனிந்தாள்.

“நீ டாக்டராகி நிறைய சம்பாதிக்கணம்னு ஆசைப்படறியா?”

“இல்லீங்க. எங்கள மாதிரி இல்லாத ஏழைங்களுக்கு உங்கள மாதிரி இலவசமா ஊசி போடலாம்னு தானுங்க”

இதைக்கேட்ட டாக்டர் ‘அந்தப்பிஞ்சு மனதில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை போல’ தானும் சிறுவயதில் பாதிக்கப்பட்டதை உணர்ச்சி பொங்க நினைவு படுத்திப்பார்த்துக்கொண்டார்.

“உன்னை டாக்டருக்கு படிக்க வைக்க எத்தனை செலவானாலும் அதை நானே ஏத்துக்கறேன்”என்று டாக்டர் உறுதி கூற காய்ச்சலை மறந்து கண்ணம்மா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.

அடுத்த நூற்றாண்டிற்கும் ஓர் அன்னை தெரசா கண்ணம்மா வடிவத்தில் கிடைத்து விட்டார் என்பதை எண்ணி மகிழ்ந்தவராய் அடுத்த நோயாளிக்கு சிகிச்சையளிக்க அழைத்தார் முப்பது வயது இளைஞரான டாக்டர் சாம்பசிவம்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *