கடைசி வார்த்தை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 5, 2023
பார்வையிட்டோர்: 2,243 
 
 

சென்னையில் கீரிம்ஸ் ரோடிலுள்ள ஒரு தனியார்  ஆஸ்பத்திரியில் ஐசியுவில் ஒரு தனி அறையில் நான் படுத்திருந்தேன். வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இடையே என் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறதென்று டாக்டர் சொல்லி விட்டார்.

என் மனைவி நர்மதா  என்னைப் பார்த்தாள். “என்னை யாரோ கிட் நாப் பண்ணி இங்கே அடைச்சு வைச்சுட்டாங்க” என்று கூறி  என் முகத்திலிருந்த கவசத்தை எடுக்க முயற்சி செய்தேன். என் மனைவி பதறிப் போய், “வேண்டாம் எடுக்காதீங்க”. என்று என் கையைப் பிடித்துத் தடுத்தாள். நான் சும்மா இருந்தேன். அவள் வெளியே சென்றாள்.

பிறகு என்  அத்தை பையன் சீனு. “எப்படி இருக்கே” என்று என் அருகில் வந்தான். அவனிடமும் முன்பு என் மனைவியிடம் கூறியது போல் ”என்னை கிட் நாப் பண்ணி இந்த அறையில் வைச்சுருக்காங்க”. என்றேன். அவன் சிரித்தான். ”டேக் கேர். நீ நல்லாயிடுவே. சீக்கிரம் டிஸ்சார்ஜ் ஆயிடுவே” என்று சொல்லி விட்டு நகர்ந்தான்.

என் பேர் ரகுராமன்.. நான் அறுபதை நெருங்கிக் கொண்டிருக்கிறேன்… நர்மதா என் மேல் உயிரை வைத்திருக்கிறாள். எனக்கு. இரண்டு பசங்க.  பெண் சாருமதி.  பையன் திவாகர். நான் தாம்பரத்தில் மளிகை கடை வைத்திருக்கேன்.. கடை ரொம்ப பெரியது. ஹோல் சேல் கடை. எப்பவும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். என் மகன் திவாகரும் என்னுடன் கடையைப் பார்த்துக் கொள்கிறான்.நான் மிகவும் கண்டிப்பானவன். எனக்கு எல்லாம் ஒழுங்காக இருக்கணும். பண விஷயத்தில் ரொம்பவும் கறார். ஒரு பைசா யாருக்கும் கொடுக்க மாட்டேன். கோவிலில் தட்டில் போடுவதானாலும் ஐந்து ரூபாய்க்கு மேல் போட மாட்டேன். அளவுக்கு அதிகமாய் கோபம் வரும். என் மனைவிக்கு  எப்போதும் என்னிடம் பயம் உண்டு. பெண்ணும் பையனும் கேட்கவே வேண்டாம். என்னைப் பார்த்தாலே நடுங்குவாங்க. அடிக்கடி சிடுசிடுப்பேன். என் மனைவி எப்படியோ கஷ்டப்பட்டு என்னைச் சமாளிப்பாள். ”காபி போடட்டுமா” என்று கேட்டால் என்னை ஏன் கேட்கிறாய்? என்று கத்துவேன். என்னைக் கேட்காமல் போட்டு வந்தால் ”என்னை ஏன் கேட்கலைனு கத்துவேன்”. அவள் ஒரு வைர நெக்லஸ் வேணும்னு கேட்டாள்.. உன் மூஞ்சுக்கு  எதுக்கு வைர நெக்லஸ்? என்று அவள் கோரிக்கையை நிராகரித்து விட்டேன். ”அப்பா ஒரு சிடுமூஞ்சி, முன்கோபி” என்று என் பசங்கள் என்னைத் மறைமுகமாகத் திட்டுவார்கள்.

திவாகருக்கு இப்போது வயசு முப்பத்து எட்டு. பத்து வருடத்துக்கு முன்பே  கல்யாணம் பண்ணி வைச்சுட்டேன். அவனுடைய ஒரே ஒரு பெண் குழந்தை கல்பனாவுக்கு வயசு ஏழாகிறது. திவாகர்  என்னுடன் அடிக்கடி சண்டை போடறான். எனக்கு தனியா கடை வைச்சு கொடுத்துடுங்க; எனக்குச் சொத்தை பிரிச்சு கொடுத்துடுங்க என்கிறான். அவனால் என் நிம்மதி போய் விட்டது.. 

சாருமதி இஞ்சினியரிங் படித்து முடித்ததும் நல்ல வேலை கிடைத்தது. என்ன பிரயோசனம் . தெலுங்கு பேசும் பையனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் டெல்லிக்குப் போய் விட்டாள்.  ”உனக்கு ஒரு பைசா கூட கொடுக்க மாட்டேன்”  என்று கண்டிப்புடன் சொல்லி விட்டேன். அவள் மேல் எனக்கு இருந்த கோபம் தணியவே இல்லை.

எனக்கு நுரையீரல் பிரச்சனை உண்டு. மூச்சு விடுவது கஷ்டமாகி திடீரென்று நிலைமை மிகவும் மோசமாய் போய் விட்டது. அப்போலோ ஆஸ்பத்திரி வந்து அட்மிட் ஆனேன். எல்லா டெஸ்ட்டையும் எடுத்தார்கள். மூச்சு விடுவதற்குச் சிரமப் பட்டேன் என்பதால் என்னை ஐசியுவில் வைத்திருக்கிறார்கள். இன்னும் எவ்வளவு நாட்கள் இங்கு இருக்க வேண்டுமோ தெரியலை.

கண்ணாடிக் கதவுக்கு அப்பால் என் பெண் சாருமதி என்னையே பார்ப்பது தெரிந்தது. அவள் பயத்துடன் கதவைத் திறந்து உள்ளே நுழைந்து என் அருகில் வந்து நின்று .  மெளனமாக என்னைப் பார்த்தாள். இரு கைகூப்பிக் கும்பிட்டாள்.. அவள் டெல்லியிலிருந்து வந்திருக்க வேண்டும்.

திவாகர்  உள்ளே வந்தான்.. என் அருகில் வந்து என்னை உற்றுப் பார்த்தான்.”என்னைக் கட்டி வைச்சிருக்காங்க” என்று அவனிடம் சொன்னேன். அவன் சிரித்தான். ”உங்களுக்குக் குணம் ஆகணும் இல்லையா? அதனால் தான் கட்டி வைச்சிருக்காங்க. டாக்டர் உங்களுக்கு நல்லது தான் செய்வார்  அப்பா” என்றான்.

நர்ஸ் என் அருகில்  வந்தாள். மாத்திரையை எனக்குக் கொடுத்து விட்டு அங்கு  வைக்கப் பட்டிருந்த ரிப்போர்ட்டை எடுத்து எதோ எழுதி வைத்து விட்டுச் சென்றாள்.

அன்று இரவு சந்தடி ஓய்ந்து அமைதியாக இருந்தது. இரவு சுமார் பன்னிரண்டு மணி இருக்கும்., மூச்சு முட்டுவது போல் உணர்ந்தேன்..  ஆ ! இதென்ன என் ஆவி உடலை விட்டு வெளியே வந்து விட்டது.. காற்றில் மிதந்து சென்றேன்.  என் மனைவி எங்கே இருக்கிறாள் என்று விசிட்டர் அறைக்கு வந்தேன். அங்கே நாற்காலியில் அமர்ந்து  என் பெண்ணும் மனைவியும் பேசிக்கொண்டிருந்தார்கள். நான் பக்கத்திலிருந்தும். காற்றோடு  மறைந்திருந்ததால் அவர்களால்; என்னைப்  பார்க்க முடியலை…என்னம்மா அப்பா போயிடுவார் போல இருக்கே என்றாள் என் பெண்.

”சரியாச் சொன்னாய். எனக்கும் அப்படித்தான் தோன்றது. அவர் என்னைத் தினமும் கடும் சொல்லால் வதைக்கிறார்.. நான் நிம்மதியாக இல்லை. உன்னிடம் மட்டும் சொல்றேன். அவர் போனால் கூட பரவாயில்லை…” என்றாள் என் தர்ம பத்தினி.

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. என் மேல் உயிரை வைத்திருக்கிறாள் என்று நான் நினைத்த மனைவியே நான் போனால் பரவாயில்லை என்று சொல்கிறாளே., என்ன  கொடுமை!  என்று வருந்தினேன்..

என் மகன் எங்கே என்று பார்த்தேன். சற்று தள்ளி அவன் மனைவியிடம் குசுகுசுன்னு பேசிக்கொண்டிருந்தான்.

அவன் அருகில் போய் அவன் என்ன பேசுகிறான் என்று கவனித்தேன்.

“நிலைமை சீரியஸ். எந்தத் தருணத்திலும்  உயிர் போயிடும்னு டாக்டர் சொல்லிட்டார். அப்பா கொஞ்ச நேரத்திலே…கடையும் வீடும் எனக்குத்தான்“ என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

“அடப்பாவி, என்னுடைய சொத்து உனக்குத்தான். அதுக்காக நான் சீக்கிரம் இந்த உலகத்தை விட்டு ஓடிப் போகணும்னு ஆசை படறியே” என்று நினைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றேன்.

நான் திரும்பி முன்பு படுத்திருந்த ஐசியூ அறைக்குள் சென்றேன். அங்கே டாக்டர்,  என் உடம்புக்கு அருகில் நின்று, ”ஆள் போயிட்டார் போலிருக்குன்னு” சொல்லிப் பரபரப்புடன் நெஞ்சில் ஸ்ட்தெஸ்கோப்பை வைத்து பரிசோதனை செய்து கொண்டிருந்தார். பக்கத்தில் நின்றிருந்த  நர்ஸ் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆவி வடிவில் இருந்த நான் விர்ரென்று உடம்பில் புகுந்து கொண்டேன். உடம்பை லேசாக அசைத்து கண்களை மெதுவாகத் திறந்தேன். டாக்டருக்கு ஆச்சரியம். ”இவருக்கு உயிர் வந்துடுச்சு.. பிழைச்சுட்டார்” என்று டாக்டர் உரத்த குரலில் கத்தினார்.

“இதயம் நின்று விட்டதுனு நினைத்தேன்.. பிழைத்துக் கொண்டாரே. அற்புதம்தான்  நடந்திருக்கு! என்னால் நம்ப முடியலை” என்றார் டாக்டர் .

”நான் கூட அவர் போயிட்டாருன்னு நினைச்சேன் டாக்டர்” என்றாள் நர்ஸ்.

நான் உயிர் பிழைத்ததில் என் மனைவி , மகன் மற்ற எல்லாருக்கும் வியப்பும் திகைப்பும்.

”நீங்க  பிழைச்சுட்டீங்க. நான் ரொம்ப பயந்துடேன்” என்றாள் என் மனைவி.

உலகமே ஒரு நாடக மேடை. அதில் நாம் எல்லாரும் நடிகர்கள் என்று யாரோ சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள் என்று நினைத்தேன்.

”நான் பிழைத்ததுக்கு முக்கிய காரணம் எல்லாம் வல்ல ஈசனின் கருணையே ஆகும்.” என்றேன். அவளிடம் என் உயிர் உடம்பிலிருந்து வெளியே போய் விட்டு மீண்டும் உடலுக்குள் திரும்பி வந்ததைச் சொல்ல எனக்கு விருப்பமில்லை. அவள் பேசியதைக் கேட்டேனென்று சொன்னால் நம்ப மாட்டாள்..கண்டிப்பாக. எதற்கு அவளுக்குத் தர்ம சங்கடத்தைக் கொடுக்க வேண்டும் என்று சும்மா இருந்து விட்டேன்.

என்னைப் பார்க்க வந்தான்  என் ஆருயிர் தோழன் மணி. அவன் அநாதை பிணங்களை அடக்கம் செய்யும் கைங்கர்யத்தைச் செய்து கொண்டிருக்கிறான். அவனிடம், ” மணி, உன்னிடம் மட்டும் சொல்கிறேன். என் உடம்பிலிருந்து உயிர் தனியே பிரிந்து கொஞ்ச நேரம் வெளியே போய் மீண்டும் வந்து உடலோடு ஐக்கியமாகி விட்டது. இந்நேரம் என் உயிர் போயிருக்கும். ஆனால் பிழைத்து விட்டேன்.  எல்லாம் கடவுளின் செயல்” என்று சொன்னேன்.

அவர் நான் சொன்னதை நம்பவில்லை. ”யாரிடமும் சொல்லாதே. நம்ப மாட்டாங்க. கனவு கண்டாய் என்று சொல்வார்கள்” என்று சொல்லி விட்டுப் போய் விட்டான்.

இரண்டு நாள் ஆஸ்பத்திரியிலிருந்து விட்டு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்து விட்டேன். வேளா வேளைக்கு நர்மதா மருந்து மாத்திரைகளைக் கொடுத்து வந்தாள்.

மனிதனுடைய மனம் சிந்தனை எல்லாம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி மாறும். நான் ஆழ்ந்து சிந்தித்தேன். பொருள் இல்லாற்கு இவ்வுலகம் இல்லை என்று பணத்தின் மீது அதீத பற்று வைத்திருந்தேன். என்னுடைய உயிர் மீண்டு வந்த அனுபவத்துக்குப் பிறகு எனக்குப் பணத்தின் மீதிருந்த நாட்டம் முற்றிலும் குறைந்தது. பணத்தை விட மனைவி, மகன், மகள், உற்றார், உறவினர், நண்பர்கள் எல்லாரிடமும்  காட்டும் அன்பு மிகப் பெரியது என்பதை உணர்ந்தேன்.  

ஒரு நாள்  மணி மீண்டும்  என்னைப் பார்க்க வந்தான்.

“ஏன் சோகமாய் இருக்கிறாய்?” என்று கேட்டான்.

”எனக்கு மட்டும் ஏன் வாழ்க்கை துன்பம் மிகுந்து இருக்கிறது என்று தெரியலை.?” என்றேன்.

”இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. இன்பம் குறைந்தால் துன்பம். துன்பம் குறைந்தால் இன்பம். மாறி மாறி வரும். ஆனால் எதுவுமே நிலையானது அல்ல.”

”என்னிடம் யாரும் அன்பாக இல்லை. மகன் , மனைவி, மகள் எல்லாம் என்னை வெறுக்கிறார்கள்.”

”நீ எப்போதும் எல்லாரிடத்திலும் கண்டிப்பானவனாக இருந்து விட்டாய். நாம் பிறரிடம் அன்பாய் இருந்ததால் நம்மிடம் பிறர் அன்பாய் இருப்பார்கள். உன்னை யாரும் வெறுக்க வில்லை. நீயாகவே அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறாய்.”

”நான் பிறரிடம் அன்பாக நடக்கவில்லை என்று சொல்கிறாயா?”

”என்ன சொல்றது…. நம் மனம் அழகானதாக  இருந்ததால் காணும் காட்சிகளும் அழகானதாக இருக்கும் என்றார் சாக்ரடீஸ். ஆனால் மனம் குப்பையாக இருந்ததால்…..”

அவன் போய் விட்டான். அவன் சொல்லிய வார்த்தைகள் என் மனதை விட்டு அகலவில்லை. நான் என் அறுபது வருட வாழ்க்கையில் செய்யத் தவறியது எது என்று யோசித்தேன். உறவுகளிடம் அன்பைச் செலுத்தாமலே காலத்தைக் கழித்து விட்டேன். இனிமேல் அப்படி இருக்கக் கூடாதென்று முடிவு செய்தேன். என் மனத்திலே இருந்தது அறியாமைதான்.. இவ்வளவு காலம் சுயநலமாக இருந்து விட்டேன்.  தவறு என்னுடையதுதான் என்பதை உணர்ந்தேன்.

சுயநலத்தை விட்டு விட்டேன். பொருள்களில் மேல் இருக்கும் பற்றை குறைத்துக் கொண்டேன்.  தினந்தோறும் கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவேன். கோவில் வாசலில் அமர்ந்திருக்கும் பிச்சைகார்களுக்கு தர்மம் செய்வேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் பக்கத்துத் தெருவில் இருக்கும் வள்ளலார் சபைக்குச் சென்று அருட்பெருஞ்சோதி அகவல் படித்துவிட்டு  வருவேன்.

என் தங்கை ஒரு ஆட்டோகாரனைக் காதலித்து கல்யாணம் செய்து கொண்டாள். அதனால் அவளுடன் பேசாமல் வெறுப்புடன் இருக்கிறேன். அவளுடன் பேசிவிட வேண்டும் என்று எண்ணினேன்.

உயில் விஷயமாக அட்வகேட்டை பார்க்கப் போனேன். அப்போது அங்கு எனக்கு காபி கொண்டு வைத்தது என் தங்கை. என்னைப் பார்த்ததும் திகைத்து, ”ரகுராமா எப்படி இருக்கே? நர்மதா செளக்கியமா?” என்றாள்.  அவளிடம் மன்னிப்பு கேட்டேன். அங்கு சமையல்காரியாக வேலை செய்கிறாளாம். என்னோடு சிறிது நேரம் பேசினாள்.. மனம் உறுதியாக இருந்தால் சூழ்நிலைகளும் நமக்கு சாதகமாக அமைகின்றன.

நண்பன் மணியோடு சேர்ந்து அநாதை பிணங்களை அடக்கம் செய்ய உதவி செய்வேன்.. திவாகர் அதற்கு   ஆட்சேபனை செய்தான். ”வயசான காலத்தில் வீட்டிலே இருந்து ஓய்வு எடுக்கிறதை விட்டுட்டு எதுக்கு நீங்க அலையணும். வீட்டிலேயே சும்மா இருங்க.” என்றான்.

ஒருவன் ஓர் உயர் பாதையில் பயணிக்க முடிவு செய்யும் அந்தக் கணமே அவனுக்கு இடையூறுகள் ஆரம்பித்து விடுகின்றன. அன்புத் தொல்லையால் நான் தளரவில்லை ; என் தீர்மானத்திலிருந்து விலகவில்லை.

நம்மால் முடிந்த வரை பிறருக்கு உதவி புரிவது, நம்மால் முடிந்த சேவையை செய்வது போன்றவற்றால் மனசுக்கு மகத்தான ஆற்றல் கிடைத்தது..

நர்மதா கேட்ட வைர நெக்லசை வாங்கிக் கொடுத்தேன். அவள் அதை எதிர்பார்க்கவில்லை. திகைத்துப் போனாள்.

ஒரு நாள் அவளுக்கு திடீரென்று கண் பார்வை  மங்க ஆரம்பித்தது.. கண் டாக்டரிடம் போய் காண்பித்ததில், கண்ணில்  கேட்டராக்ட், உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றார்.  அறுவை சிகிச்சை இரண்டு கண்களில் செய்த பிறகு ஒரு மாதம் சமையல் செய்வது, மனைவியின் கண்களுக்கு மருந்து போடுவது, புத்தகங்களை வாசித்துக் காட்டுவது போன்ற உதவிகளைச் செய்தேன். என் அன்பைக் கண்டு அவள் மிகவும் நெகிழ்ந்து போனாள். உங்களை மிகவும் சிரமப் படுத்திக்கொண்டிருக்கிறேன் என்றாள்.

”உனக்குப் பணி விடை செய்வது என் கடமை” என்றேன்..

அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

நர்மதா நிரம்பவும்  தெய்வ பக்தி மிகுந்தவள் . இப்போது கூட அவள் பூஜை அறையில் அமர்ந்து திருப்புகழைப் பாடிக் கொண்டிருக்கிறாள்..

”எனக்கு நர்மதாவைப் போல் ஆழ்ந்த பக்தி கிடையாது. சிறிது நேரம் இறைவனிடம் பிரார்த்திப்பேன்.. அவ்வளவுதான்…”

அவள்  மனம் எவ்வளவு புண்பட்டிருந்தால் நான் மேல் உலகம் போனால் நிம்மதியாய் இருக்கலாமென்று நினைத்திருப்பாள்.. அவளிடம் மென்மையாக நடந்து கொண்டிருக்கலாம். எப்போதும் அவளிடம் கோபப்படுவேன். ஒரு மிருகத்தைப் போல நடந்து கொண்டிருக்கிறேன். என்று சிந்தித்துக் கொண்டிருக்கும்போது நர்மதா ஒரு தம்பளிரில் ஹார்லிக்சை போட்டு எடுத்துக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தாள்.

நான் ஹார்லிக்சை பருகி விட்டு, ”நர்மதா உட்கார். உன்னிடம் மனம் விட்டுப் பேச வேண்டும்.”

“அப்படியா, என்ன விஷயம்?”

”உன்னைப் பலமுறை கடுமையான வார்த்தைகளால் மனம் நோகச் செய்திருக்கிறேன். கோபத்துடன் கத்தியிருக்கிறேன்: மிருகம் போல் நடந்திருக்கிறேன். உன் அருமையை உணராமல் இருந்து விட்டேன். என்னை மன்னித்து விடு” என்று அவள் கைகளைப் பற்றிக் கொண்டேன்.

அவள் திகைத்து நின்றாள்.

”மன்னிப்பு போன்ற பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க.  நீங்க சொன்னதை எதுவும் நான் பொருட்படுதலை. உண்மையை சொல்லணும்னா உங்க கோபக் குணத்துக்கு நான் பழக்கப் பட்டு விட்டேன்.  மரண வாசலை மிதிச்சிட்டு வந்திருக்கீங்க.. மாத்திரை மருந்து சாப்பிட்டு உடம்பை ஆரோக்கியமா வைத்திருங்கள்.. நீண்ட ஆயுளோடு நூறு வயசு வரைக்கும் இருங்கோ. அதுதான் என் ஆசை.”என்றாள்.

”சாருமதியை வீட்டுக்கு வர சொல்.. அவள் காதலை ஏற்றுக் கொள்ளாமல் அவளை வீட்டுக்குள் சேர்க்காமலிருந்தேன். நான் செய்தது தவறு என்று உணர்ந்தேன். அவளைப் பார்க்க வேண்டுமென்று ஆசையாய் இருக்கிறது. அவளுக்குக் கொடுக்க வேண்டிய நகைகளைக் கொடுத்து விடலாம். நர்மதா என்னை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

”நீங்கள் சொல்வது நிஜமா? என்னாலே நம்பவே முடியவில்லை.”

”ஆமாம். என்ன இருந்தாலும் சாரு நம்ம பெண் இல்லையா? அவளிடம் எதற்கு வெறுப்பைக் காண்பித்துக் கொண்டு…”

நான்  சொன்னது போலவே சாருமதியிடம் தங்க நகைகளைக் கொடுத்தேன்.. சாருவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

உயில் எழுதி எல்லாச் சொத்துகளையும் மனைவி  மகன் மகளுக்கு பிரித்துக் கொடுத்து விட்டேன். அதுவும் திவாகருக்குக்  கடையை எழுதி வைத்ததால் அவனுக்குப்  பரம திருப்தி.

ஒரு நாள் மாலை  என் அறைக்கு அருகே, என் மனைவி திவாகரிடம் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது

”அப்பா  அன்பானவராக மாறிட்டார். என்னாலே நம்ப முடியலை” என்றான் திவாகர்.

“அவர் மாறுவது சாத்தியமில்லை என்று நினைத்திருந்தேன்..ஆஸ்பத்திரியிலிருந்து வந்ததிலிருந்து இந்த மாற்றம். அதிசியம்தான்!” என்றாள் என் மனைவி.

“இங்கே வாங்களேன்” என்று அழைத்து, “எனக்கு நெஞ்சு வலிக்கிறது. நான் அதிக நேரம்  வாழ மாட்டேன். நான் சொல்லப் போவதை எப்போதும் பின் பற்றுங்கள். என் கடைசி வார்த்தை…அன்பே வாழ்க்கை” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே என் தலை சாய்ந்தது. உடனே என் ஆத்மா உடலை விட்டு பிரிந்து வான் நோக்கிச் சென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *