கடைசி இரவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 4, 2015
பார்வையிட்டோர்: 9,344 
 

கூர்மையான விசில் சப்தம் மீண்டும் காதுகளை மோதியது. அதிர்ந்து விழிக்கச் செய்த ஒலி திடுக்கிட்டு எழசெய்து சினத்தைக் கிளறிக்கொடிருந்தது.

அண்டை வீட்டு படுக்கையறை வெளிச்சம் கண்ணாடி சன்னலையும் , திரையின் சிறிய திறப்பையும் தேடி ஊடுருவி உள்ளே நுழைந்திருந்தது. கண்கள் மீண்டும் மூடித், துயிலுக்குள் ஒன்றிணைவதென்பது சிரமமான காரியம். தூக்கத்தைக் கலைத்து, மூளையின் இயக்கத்தை முடுக்கிவிட்ட சப்தம், இமைகளை மூட வெகு நேரத்தை எடுத்துக்கொள்ளும். பக்கவாட்டிலும் அந்நாந்தும், குப்புறப் புரண்டும் , தலையணையை புரட்டியும், மடித்தும் தலையைப் புதைக்கும் பிரயத்தனங்கள், அனைத்தும் உறக்கத்தின் கரிசன அரவணைபபுக்குள் அடங்க மறுத்தது.

அண்டை வீட்டின் நிலை சரியாகும் வரை வெளியே காற்றாட நடக்கலாமா என்று மனம் அழைத்தது. பின்னிரவைத் தாண்டிய பொழுதில் காற்று சிலு சிலுவென வீசும். காற்றின் ஈரச் சில்லிடல் உவகையை உண்டு பண்ணும். நடந்துவிட்டு வந்து படுத்தால் உடலைத் தூக்கம் தழுவிக்கொள்ளலாம்.

கால்கள் அதற்கு ஒப்பவில்லை. கட்டில் சுகம் படுக்கையில் கட்டிப்போடவே முனைந்தது. படுத்துறங்கிய சுகம் எஞ்சியிருந்தது உடலில். விட்டத்தை நோக்கிக் கண்களை மூடியபடி கால் கைகளை பரத்தி நீட்டி, பிராணயாமம் செய்தால் துக்கம் வரலாம். அதற்கும் முயன்று கொண்டிருந்தேன்.

மணி என்ன இருக்கும்? என்று அலசியது மனம். உத்தேசமாய் இரண்டைத் தாண்டியிருக்கலாம். கடிகாரத்தைப் பார்க்கவேண்டியதில்லை, உறக்கக்களைப்பை வைத்தே குத்துமதிப்பாய் நேரத்தை சொல்லிவிடமுடியும். சில நிமிடங்கள்தான் முன் பின் இருக்கலாம்.

உறக்கத்தால் தன்னிலை இழந்தவனை கூர்முனை தாங்கித் தாக்கி குலுக்கிக் கலைக்கும் கொடுமையை எரிச்சல் என்ற ஒற்றை வார்த்தையில் விவரித்துவிட முடியாது.

அண்டை வீட்டார் நாய்கள் சில சமயம் தன் காதுகளில் விழும் விநோத விஷில் ஒலியால் குரைக்க ஆரம்பித்துவிடுகின்றன. தான் சரியாகக் காவல் காக்கிறேன் என்ற பிரகடனத்தை அடுத்த உணவுக்கான அச்சாரமாகவேஎஜமானனிடம் பூடகமாக அறிவிக்கும் குரைத்தல் அது. நாய்கள் அறிமுகமில்லாதவர்கள் வரவை நோக்கிக் குரைப்பது இப்போதெல்லாம் இல்லாமல் ஆகியிருக்கிறது. இந்த அகால வேளையின் விஷில் சப்தமும் பின்னாளில் அதற்குப் பழகிப் போகலாம்.

மீண்டும் விழிகள் ஒய்ந்து இமைகள் மூடும் நேரத்தில் கிழவியின் விஷில் சப்தம் வந்து மோதுகிறது. முன்னிலும் உரக்க! நோய்மையிலும், முதுமையிலும் மூச்சுக்காற்றில் சக்தி சன்னமாய்த் தேய்ந்திருக்கிறது. ஆனாலும் முயற்சியை கைவிடாமல் தன் முழு பலத்தையும் பாவித்து ஊதுகிறாள். ஒலி மகனை அசைத்துவிடவில்லை.

விஷிலின் மீது நம்பிக்கையற்று ,“ஆ……சாய்,’’ என்று குரலெழுப்புகிறாள். அந்த ஒடுங்கிய குரல் வலியின் பிரதியை எங்களுக்கும் சேர்த்தே அனுப்புகிறது. களைப்பில் தோய்ந்து மங்கிய குரல். அவன் எழுந்திருப்பதாய்த் தெரியவில்லை. மீண்டும் விஷில் ஒலி. அவன் அழைப்பைக் கேட்ட அறிகுறியைக் காணாது மீண்டும் “ஆ….சாய்’ என்று விளிக்கிறாள். மாறி மாறி இரு வியூகங்களையும் கையாள்வதை அவள் கைவிடவில்லை. சிரமப்பரிகார அவசரமாய் இருக்கலாம். உடல் தன்னிச்சையாய் ஈரமாகி சொத சொதத்துப் போயிருக்காலம்.

ஆ சாயின் மங்கிய காதுகளை இடைவிடாத அழைப்பு ஊடுருவி உசுப்பிவிடுகிறது.

ஊமை மகன் கோபத்தோடு கூச்சலிட ஆரம்பித்துவிடுறான்.

அவன் முழு ஊமையல்ல. அவனுக்கு நெருங்கியவர்களுக்கு அவன் மொழி புரியும். செவிகளும் சரியாக கேட்காத காரணத்தால்தான் அவன் ஊமையானான். முழுமையாகக் கேட்காது என்றில்லை. ஒரு பத்து விகிதமே கேட்கும். கேட்ட அளவுக்கு மட்டுமே வாயும் பேசுகிறது. அவனுக்குச் சரியாகக் கேட்கவும், பேசவும் இயலாது என்பதால் ஊமை என்றே கருணையின்றிய அக்கம் பக்கத்தாருக்கு அறிமுகமாகி இருக்கிறான். அவனை வாய்விட்டு அழைத்தால் கேட்காது என்பதற்காகவே அவனின் அண்ணன் அம்மாவுக்கு விஷில் வாங்கிக்கொடுத்திருந்தான். அதுதான் அவள் இருக்கும் இடத்திலிருந்து அவனை அழைக்க உதவிக்கொண்டிருந்தது.

ஒலி தீட்டப்பட்டு, விரைந்து பாயும் அம்பு போல அவனை அழைக்கும் நேரத்தில், அதனைக் கடுமையாக எதிர்கொள்வான். அவனின் கண நேர நிம்மதிக்கு உலை வைக்கும் அவ்வொலி அவனுள் அடங்காத உக்கிர சினத்தைக் கிளர்த்திவிடும். பெருங்கூச்சல் போட்டுக் கொண்டே அம்மாவின் அறைக்குள் நுழைவான். என்ன பேசுகிறான் என்று புரியவில்லையென்றாலும் கோபத்தில் கனன்று இரையும் சொற்களுக்குள் அவனின் எரிச்சல் புதைந்தே வெளிப்பட்டது.

அவளை அருகில் நெருங்க அவன் குரல் ஓங்கும். அவளை நிமிர்த்தி உடகார வைக்கும்போது ஒரு அதட்டல். அவளை தூக்கி இடம் மாற்றும் போது வெறுப்பை உமிழும் சொற்கள். அவளின் நனைந்து சொதசொத்த படுக்கை விரிப்பை மாற்றும் போது அவளை அடிக்கும் சப்தம். அவளின் பேம்பசை மாற்றும்போது வார்த்தைகள் சீறிக் குதறும். அவள் அடிக்கடி உணவு, தண்ணீர் கேட்டு ஓசை எழுப்பும் போது உண்டாகும் அவஸ்தையை அவன் அதிரக் கத்திய படியேதான் பணிவிடையைச் செய்யத் துங்குவான் . செய்து முடிக்கும் வரை தீச்சொல் ஓயாது ஒலித்தபடி இருக்கும். வெறுப்பை உமிழும்போது கரிசன வார்த்தகளா வரும்?

அவன் மொழி புரியவில்லை என்றாலும், அந்த அகால வேளையின் சூழலும், அதிர ஒலித்த குரலும், அதன் பொருளை தன்னிச்சையாவே மொழியாக்கம் செய்துவிடுகிறது. அப்போது உள்மனதில் வலி நிலைகொள்ளும்.

இவற்றை எல்லாவற்றையும் அவள் இயலாமையின் அழுகையால் நிரப்பிவிடுவாள். பெருங் குரலெடுத்த ஓலமும், விசும்பலும், புலம்பலும், எங்கள் அறைக்குள் நுழைந்து நெடுநேரம் சூழ்ந்திருக்கும்.

அவளைக் காலன் காத்திருந்து உடன் கொண்டு போகவிருப்பதுபோன்ற அந்தகாரத்தில் அச்சக்குரல் அது. சம்பந்தப்படாத எங்களையும் இம்சைக்குள்ளாக்கும் அந்த ஓலம்.. அதனை எப்படி எதிர்கொள்வது? அதனிலிருந்து எப்படி விடுபடுவது? மனதளவில் சம்பந்தப்படாமல் இருப்பது? என்பதற்கு எங்களிடம் எந்த பதிலும் இல்லை. ஒரு மௌனக் கோபத்தோடு அதனைக் கடந்து வந்துகொண்டிருந்தோம். வேறு உபாயம் கண்ணுக்கெட்டிய தூரம் தென்டவில்லை.

அண்டை வீட்டருக்கு இவர்கள் சண்டையிடும் ஓசை தொந்தரவைத் தருமே என்ற கரிசனமே கடுகளவுகூட இருப்பதில்லை. நோயில் வீழ்ந்து துடிக்கும் வேதனையும், இடைவிடாது பணிவிடை செய்யும் மகனின் எரிச்சலும் எங்களை இருப்பை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை போலும்.

அவன் அம்மா நிரந்தரமாக உடற் செயலிழந்து போனவள். அவளுக்குப் பணிவிடை செய்வதே வேலையற்று வீட்டில் முடங்கிப்போன மகனின் முக்கியப் பணி. அவள் அடிக்கடி ஊதும் விஷில் அவன் கோபத்தைத் திரண்டெழ செய்துகொண்டிருந்தது. இரவும் பகலும் ஓயாது ஒலிக்கச்செய்து சலனத்தை கொஞ்சமும் கரிசனமின்றி உடைத்தெறியும் அந்த அசுர ஒலி வேறென்னதான் செய்யும்? அவனைத் தூங்க விடாமல் விரட்டும் அந்தப் பேயொலி எவ்வகையில் அவனுக்கு நிம்மதியை உண்டாக்கும்? இதனின்றும் அவன் ஏங்கும் சுய விடுதலைக்கு எதிராளியாய் குறுக்கே நிற்கும் அச்சப்ததின் மீது கருணை பிறந்திட சாத்தியாமா என்ன? அவனின் உல்லாசப் பொழுதுகள் காவு கொடுக்கப்பட்டு அவனும் கூண்டுப்பறவியாய் நிரந்தரமாய் அடைபட்டுப் போனான்.

அவனின் கோபம் நியாயத்தின் பக்கம்தான் இருக்கிறது என்றாலும் வீட்டுக்குள் இன்னொரு அசையாப் பொருள் போல முடங்கிப்போன தாயின் மீது கரிசனம் பிறக்கவே செய்கிறது நமக்கு. மனம் சமநிலைக்கு வந்தபோது அவள் மீதான பச்சாதாபம் பிறக்கிறது.

அவள் நடமாடிய காலத்தில் அவள் கால்கள் சக்கரமாகி உருண்டன.

நண்பர்கள் வீட்டுக்குப் போய் மாஹ்ஜோங் விளையாடுவது, தன் இல்லத்திலும் நண்பர்களோடு சதா சூது ஆடித்திளைப்பது, காலையில் உடற்பயிற்சிக்குப் போவது, விருந்துக்குச் செல்வது, அவளே முன்னின்று ஏற்பாடு செய்வது , நடைப் பயிற்சிக்குப் போவது , என அவளின் இயக்கம் ஓயாமல் நிகழ்ந்துகொண்டே இருந்தது.

மெல்லிய காற்று இதமாய் இழையாய் இழையாய்ப் புகுந்து களிப்பூட்டிய தருணம் பார்த்துதான், ஒரு குரூர சந்தர்ப்பத்தில் புயல்போல வந்த மாரடைப்பு அவளை வீழ்த்தி நிரந்தரமாய் கால்களின் நடனத்தை நிறுத்திவிட்டது. மாஹ்ஜோங் தாய்க்கட்டைகளால் கலகலத்த வீடு காலம் ஆடிய சூதாட்டத்தில் கலையிழக்கச் செய்திருந்தது.

சக்கரமாக சுழன்ற அவளைச், சக்கரங்களையே முழுதும் சார்ந்து இருக்கவேண்டிய துர்க்கனவாகிப் போனது.

அவளின் மூத்த மகன் இதனால் வீட்டில் தங்குவதில்லை. இரவில் நண்பர் வீடுதான் அவன் அடைக்களமாகும் இடம். எல்லாத் தொல்லைகளையும் சின்னவனான வாய்ப்பேசாதவனிடம் ஒப்படைத்து , வேலை முடிந்து பகலில் மட்டும் முகம் காட்டிவிட்டு மறைந்துவிடுவான். சம்பாதிப்பதை வீட்டுச் செலவுக்கும் , மருந்து வாங்கவும், கார் வீட்டுக் கடன் கட்ட மட்டுமே உதவியது. இரவெல்லாம் அம்மாவின் தொல்லையைத் தாங்க முடியாமல்தான் அவன் தன் சொந்த வீட்டையே துறந்திருந்தான்.

அவனிடம் ஆச்சாயின் கருணையற்ற கூச்சலையும், அவளைத் துன்புறுத்தலையும் பூகாரிடவேண்டுமென்று ஒரு தருணத்துக்கு எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது , ஒரு மாலை வேளையில் அவனைச் சந்திக்க நேர்ந்தது.

“உங்க தம்பி நள்ளிரவு நேரத்தில் கூச்சலிடுகிறான். தூக்கம் கெடுகிறது. கொஞ்சம் அவனிடம் சொல்லுங்கள்,: என்றேன்.

“அவன் மேல தப்பில்லை, அம்மாவின் தொல்லையைத் தாங்க முடியாமல்தான் அவன் சத்தம் போடுறான், என்ன செய்வது எறே எனக்குப் புலனாகவில்லை. அம்மாவின் நிலைமை அப்படி!” என்றான். சின்னவனின் துன்புறுத்தலைப் பெரியவன் மௌனமாய் அங்கீகரிக்கிறான் என்றே எண்ணத் தோன்றியது. அவனும் உடனிருந்த செய்ய வேண்டியதை அவன் தம்பி மட்டுமே செய்கிறான் என்ற குற்றமனதின் பிரதிபலிப்பு அது.

இநதச் சிக்கலுக்கு எப்படி முடிவுகட்டுவதென்ற நம்பிக்கையற்ற பதில் அது. வீட்டில் இல்லாமல் நண்பர் வீட்டுக்குள் அடைக்கலம் தேடும் அவன் நிலை என்னை இப்படிச் சிந்திக்க வைத்திருக்கலாம். இந்த நிலையில் அவனால் சுயமாய் வாழ்க்கை அமைத்துக்கொள்ள முடியவில்லை. அம்மாவின் நோய்மையின் இடையூறை புது மனைவி பொறுத்துக்கொள்வாளா? இன்னொரு பிரச்னையை வலிந்து வாங்கி மடியாலா கட்டிக்கொள்வார்கள்?

தம்பி அவளை அடிப்பதுகூட அவனுக்குத் தெரிந்தே இருக்கிறது. தீராத தொல்லைகள் யாரையும் சினம் கொள்ளவைக்கும். தன் கோபத்துக்கு வடிகாலாக அவ்வாறு செய்வது நல்லதல்ல என்றாலும், இடைவிடாது தொல்லையால் , சினம் ஏறிய மனம் சுயநிலை மறந்து தண்டித்துவிடுகிறது. பின்னாளில் அதுவே பழகிவிடுவதுதான் கொடுமை.

அவள் இயக்கமற்று பெருக்கிக் கூட்டிய குப்பையாய் குமிந்து முடங்கிப் போனதிலிருந்து, வீட்டுக்கு அடிக்கொருதரம் வந்த உறவுப் புறாக்கள் மையமிடுவதில்லை.

சிங்கப்பூரிலிருக்கும் மகள் குடும்பம் ஓய்வெடுக்க பிள்ளைகளின் விடுமறை நாட்களில் இந்த வீட்டுகுத்தான் வந்து போய்க்கொண்டிருந்தது. அப்போது வீடு கொண்டாட்டக் கலையில் முகிழ்ந்திருக்கும். பேரப்பிள்ளைகள் வீட்டைச் சுற்றி ஓடி ஆடி களிக்கும் ஓசை நிறைந்திருக்கும்.

இந்தச் சூறாவலிக்குப் பிறகு சிங்கப்பூர் உறவு துண்டித்துக்கொண்டது. பணம் வேண்டுமானால் தருகிறேன். அம்மாவை எங்கள் வீட்டில் வைத்துப் பார்க்க முடியாது என்று கைவிரித்து விட்டனர். இங்கே வந்தால் மீண்டும் இந்தப் பிரச்னை தலையில் விழும் என்பதால் தூரமே நின்றுவிட்டது பிள்ளை உறவு.

பினாங்கிலுருந்து ஓய்வெடுக்க வரும் இன்னொரு பெண் பிள்ளையும் கைவிரித்துவிட்டாள். அம்மா என்ற தொப்புள்கொடி தொடர்புதான் அவள் நோயில் வீழ்ந்த பரிதாபத்தில் கொஞ்ச நாள் வைத்துப் பார்த்தாள். ஆனால் அம்மாவின் இடைவிடாத இம்சையால் அவளை முதியோர் இல்லத்தில் விட்டுவிடலாம் என்ற ஆலோசனையோடு மீண்டும் தாயின் வீட்டுக்கே கொண்டு வந்துவிட்டாள்.

அம்மா சக்கர நாற்காலியில் உட்கார்ந்தபடியே உடைந்து சிதறினாள். என்னால் முடிஞ்சா நானே என்னப் பார்த்துக்க மாட்டேனா? என் கால்கள் இயங்கினால் நான் உங்களை நம்பியிருப்பேனா?” என்று முறையிட்டுச் செறுமினாள்.

“என்னம்மா எல்லாருக்கும் குடும்பம் வேலைன்னு இருக்கே! இதுல உன்னைப் பாத்துக்க முடியுமா. நீ போய் அங்க இரு, ஒரு ஆள் விட்டு ஒருத்தர் தெனைக்கும் உன்ன பாக்க வருவோம்.” என்றனர். பிள்ளைகள் அனைவரின் ஒருமித்த குரலின் வலிமையை எதிர்த்து அவள் மன்றாடல் எடுபடவில்லை. பெற்ற பிள்ளைகளே இப்படி முடிவெடுத்துதான் அவளை உள்ளூர ரத்தம் கசியச் செய்தது.

அவள் விருப்பதுக்கு எதிராக முதியோர் இல்லத்தில் விடப்பட்டாள்.

அவளை விட்ட மூன்றே நாளில் மகனுக்கு அங்கிருந்து அழைப்பு வந்தது.

“உங்கம்மா இங்க இருக்கமாடேங்கிறாங்க. வீட்டுக்கே போனும்னு பிடிவாதமா இருக்காங்க. எவ்வளவோ சொல்லிப் பாத்திட்டோம். அவங்க கேக்குறதா இல்ல. சாப்பிட மாட்டேங்கிறாங்க. மருந்து எடுத்துக்க மாட்டேங்கிறாங்க . ஏதாவது ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிடுமோன்னு எங்களுக்கு பயமா இருக்கு? தயவு செஞ்சி வந்து கூட்டிட்டு போய்டுங்க.”

வேறு வழியில்லை. அந்தக் கதவும் மூடிக்கொண்டது. திறந்திருக்கும் கடைசி கதவு அவன் வீடுதான். கவனிக்கக் கூடிய ஒரே ஆள் தம்பிதான். என்று முடிவாகிப்போனது.

முழுவதுமாய் தன் பாதுகாப்புக்கு வந்த அம்மாவை அவனாலும் பார்த்துக்கொள்ள முடியவில்லை. அடிக்கொருதரம் வரும் அழைப்பு அவனை வீட்டுக்குள்ளேயே கட்டிப்போட்டது.

ஒருநாள் அவன் தாயின் இடையறா தொல்லையிலிருந்து சுய விடுதலை வேண்டிக் காணாமற்போய்விட்டான்.

அம்மாவைப் பார்ப்பதா? ஓடிப்பனவனைத் தேடுவதா? வேலைக்குப் போவதா? என்ற மும்புறமும் மூண்டெரிந்த நெருப்பிலிருந்து தப்பித்து வெளியே வர முடியவில்லை .

ஒருவகையாய் அங்குமிங்கும் அலைந்து அவனைத் தேடிக் கண்டபிடித்தாயிற்று. “நான் வரேன், ஆனால் அவளை என்னால் பார்த்துக்க முடியாது,” என்று ஒரு நிபந்தனை விதித்தான்.

“சரி வா நான் ஏற்பாடு செய்கிறேன். கொஞ்ச நாளைக்கு பொறுத்துக்கொள், ஒரு வேலக்காரி தேடலாம்,” என்று ஆசுவாசப் படுத்தி அவனை இணங்க வைத்தாயிற்று.

அவளைப் பார்த்துக்கொள்ள வேலைக்கு ஆள் தேடுவது பெரும் சிரமமாயிற்று. அப்படியே கிடைத்தாலும் கொஞ்ச நாள் பார்த்துவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் வேலையை விட்டுப்போனவர்கள் கதை நீண்டுகொண்டே போனது.

சின்னவனின் தொல்லை அதிகமாயிற்று.” என்னால் அம்மாவைப் பார்த்துக்கொள்ள முடியாது . நான் சொல்லாம கொள்ளாமல் எங்கியாவது ஓடிப் போயிடுவேன் . நாற்றம் என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை, நான் ஓடிப்போய்டுவேன், ” என்ற பயமுறுத்திக்கொண்டே இருந்தான். அவனின் பழைய கண்மறைவு கலவறமூட்டியது.

அவளின் இல்லாமைக்கு காத்திருக்கும் அவலம் குரூர மனதில் தோன்றி மறைந்துகொண்டே இருந்தது.

“நான் ஓடிப் போய்டுவேன்… அம்மாவின் நாற்றம் சகித்துக்கொள்ளமுடியல ,” என்ற தம்பியின் குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. வேலைக்கு ஆள் தேடி அலைந்தும் கிடைக்கவில்லை. கிடைத்தாலும் நிலைக்கவில்லை. சொந்த வீட்டில் தங்க முடியவில்லை. தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியவில்லை.அவன் மனம் கலைந்து கலைந்து குழம்பியது. சிகிரெட்டை மாறி மாறி ஊதினான். நிலைகொள்ளாதவனாய் அங்குமிங்கும் நடந்தான்.

அவனால் இதற்கு ஒரு தீர்வை காணமுடியவில்லை.

ஒரு நள்ளிரவுக்குப் பின் வழக்கமாகன விஷில் ஒலிக்கத் துவங்கியது. ஆ….சாய் என்ற அழைப்புக் குரல் அடுத்து கேட்டது. மீண்டும் விஷில் சப்தம். இம்முறை மேலும் உரக்க. தன் சக்திக்கு மீறிய ஒலி அது. அவள் சுவாசப்பை மூச்சுக்காற்றால் நிரப்பிக்கொள்ளாத ஒலி. இன்னொருமுறை ஆ…சாய் என்றாள். தொடர்ந்து அழுகையும் விசும்பலும் இரவை கனக்கச்செய்தது. தொய்வும், ஏக்கமும், எதிர்பார்ப்பும் நிறைந்த, விஷில் ஒலித்தது. அந்தக் கூர்மையான விஷில் ஒலி மௌன இரவை கலைத்து வியாபித்தது. ஒலி வியாபிக்கும் ஒவ்வொரு முறையும் அதன் தேய்மானத்தை உணர முடிந்தது.

அவளின் கேவல் ஒலி இருளை ஊடுருவி நின்றது. ஊர் உறங்கும் நிசப்தத்தின் மோனத்தைக் கிளறியது.

வழக்கத்துக்கு மாறாக, அந்த இரவு விஷிலின் ஓசையும், ஆச்சாய் என்ற அழைப்பும் நீண்ட நேரம் கேட்டுக்கொண்டே இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *