கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 15, 2012
பார்வையிட்டோர்: 11,413 
 
 

இரண்டு நாட்களாகவே அந்தக் கருப்புப் பூனை இரவில் நான் உறங்கிக்கொண்டு இருந்த அறைக்கு வந்துகொண்டு இருந்தது. இருட்டில் தொப்பென்ற சப்தத்தில் கனவு கலைந்து நான் திடுக்கிட்டு கண் விழிப்பேன். காலடியில் மெத்தென்று பூனை இடறும். இன்னதென்று புரியாத கலவரத்தில் சுவரில் துழாவி விளக்கைப் போடுவேன். வெளிச்சம் பழகுவதற்குள் பூனை கட்டிலுக்கடியே போயிருக்கும். பயத்தில் வியர்க்கும். ஒரு சந்தேகத்தில் கட்டிலுக்கடியே குனிந்து பார்ப்பேன். அந்தக் கருப்புப் பூனை தரையோடு தரையாய் படுத்திருக்கும்.

‘‘மியாவ்.’’

இரவு பூராவும் ஒரு நாள் பூனை கத்திக்கொண்டே இருந்தது. அடுத்த நாள் காலை என் அறைக்கு பெருக்கப் போன சௌம்யா கையில் துடைப்பத்துடன் சிரித்துக்கொண்டே வந்தாள்.

‘‘கங்கிராட்ஸ்!’’

‘‘என்ன?’’

‘‘நீங்க அப்பா ஆயிட்டேள்.’’

‘‘அதான் ஏற்கெனவே ரெண்டு குட்டி போட்டாச்சே. இப்ப அதுக்கென்ன?’’

‘‘ரெண்டில்லே, மூணு. ரூம்லே கட்டிலுக்கடியிலே அந்தக் கருப்புப் பூனை புதுசா மூணு குட்டி போட்டி ருக்கு.’’

‘‘எப்போ?’’

‘‘யார் கண்டா? துடைப்பத்தோட நுழையறேன். அந்தக் கருப்புப் பூனை உர்ருனு சீர்றது. என்னடான்னு குனிஞ்சு பார்த்தா குட்டியூண்டு குட்டி யூண்டா மூணு குட்டி’’ & சௌம்யா சிலிர்த்துக்கொண்டாள்.

‘‘அப்புறம்?’’

‘‘அப்புறம் என்ன விழுப்புரம். கதையா சொல்றேன்? எனக்குப் பயமா யிடுத்து. கதவை இழுத்து மூடிட்டு ஓடி வந்துட்டேன்.’’

‘‘என் மூக்குக் கண்ணாடி வேணுமே?’’

‘‘நீங்க தைர்ய புருஷர். தாராளமா போய் எடுத்துக்கோங்கோ.’’

‘‘டேய் சுந்தர்.’’

‘‘ஐயோ! அவன் வேணாம், குழந்தை’’ & சௌம்யா, தாய்ப் பூனை போலவே சீறினாள். சின்மயாவோ சுந்தரைவிடச் சிறியவள்.

மூக்குக் கண்ணாடி இல்லாமல் இரண்டு நாட்கள் உலகம் மங்கலாக இருந்தது. அடுத்த நாள் திங்கள்கிழமை. அலுவலகம் உண்டு. கண்ணாடி இல் லாமல் எனக்கு பஸ் நம்பர் தெரியாது.

நெஞ்சம் படபடக்க என் அறைக் கதவை மெள்ளத் திறந்தேன். பெரிய டர்க்கி டவலை ஒரு பாதுகாப்புக்கு என் கையில் வைத்திருந்தேன். நான் பயந்ததற்கு மாறாக என்னைப் பார்த் ததும் அந்தக் கருப்புப் பூனை மிரண்டு ஜன்னல் வழியாக வெளியே குதித்து ஓடிவிட்டது. கட்டிலுக்கடியில் ஆர்வ மாகக் குனிந்து பார்த்தேன். தட்டு முட்டுச் சாமான்களிடையே உள் ளங்கை அளவு இடத்தில் மூன்று பூனைக் குட்டிகள் சுருண்டு படுத்திருந் தன. சாம்பல் நிறம் ஒரு குட்டி, கருஞ்சாந்து நிறம் ஒரு குட்டி, பாம்பின் நிறம் ஒரு குட்டி.

மூக்குக் கண்ணாடி அணிந்ததில் மூன்றும் பளிச்சென்று தெரிந்தது. சௌம்யாவைக் கூப்பிட்டேன். சுந்தரும் சின்மயாவும் கூடவே வந்துவிட்டார்கள்.

‘‘உஷ்!’’

குட்டிகள் தூங்கட்டும் என்று சத்தம் போடாமல் பார்த்துக்கொண்டு இருந் தோம். ஐந்து நிமிடம் பார்த்ததில், ஆபீஸ§க்கு அரை மணி நேர லேட் ஆனால் என்ன? அலுவலகத்தின் கணினி தேவதைகளிடம் எச்சில் ஒழுக சுவா ரஸ்யமாகச் சொல்வதற்கு ஒரு விஷயம் கிடைத்துவிட்டதே. வீட்டில் பூனைக் குட்டிகளும் அலுவலகத்தில் நல்லுறவும் இனி வளர்ந்தபடியே இருக்கும். உள்ளுக்குள் சிரித்தபடி வீடு திரும்பி னேன். சௌம்யா வாசல் படியில் பேய் அறைந்த மாதிரி வெளிறிப்போய் நின்றிருந்தாள்.

‘‘என்ன?’’

‘‘ப்ச்’’ & சௌம்யா கண் கலங்கி முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

‘‘யாருக்கென்ன?’’

சௌம்யா உதடு துடிக்க என்னைப் பார்த்தாள். நான் வந்தது தெரிந்து குழந் தைகள் மௌனமாய் வந்து நின் றார்கள்.

‘‘என்னடி?’’

‘‘பூனை…’’

‘‘பூனைக்கென்ன?’’

‘‘அந்த கருப்புப் பூனை செத்துப்போயி டுத்து. யாரோ பைக் கடங்காரன் அடிச்சுட்டுப் போயிட்டான்.’’

‘‘ஐயையோ எங்கே?’’

‘‘கரெக்டா நம்ம வீட்டு வாசல்ல. தாயி சொன்னா. ஓடிப் போய் பார்த்தேன். வாய்கிட்டே ஒரே ஒரு கோடு ரத்தம், அவ்வளவுதான்!’’

‘‘த்சு.’’

‘‘குழந்தைகள் ஸ்கூல் விட்டு வர்றதுக்குள்ளே குப்பைக்காரி கிட்டே பத்து ரூபா குடுத்து எடுத் துண்டு போகச் சொல்லிட்டேன்.’’

‘‘ஓ!’’

ஆகக்கூடி ஜன்னலில் மிரண்டு குதித்து ஓடியதுதான் அந்தக் கருப்புப் பூனையை நான் கடைசி யாகக் கண்ட காட்சி.

‘‘அப்போ குட்டிங்க?’’

‘‘அது இருக்கு. பசியிலே கியா கியான்னு கத்திண்டு.’’

வழக்கமாக ருசித்துச் சாப் பிடும் டிபன் வேண்டியிருக்க வில்லை. குழந்தைகள் விளை யாடப் போகவில்லை. சௌம்யா, பூக்காரியிடம் பூ வேண்டாம் எனச் சொல்லிவிட்டாள். கவிந்த சோகம் போல உலகை இருள் சூழ்ந்தது. கட்டிலுக் கடியே குட்டிகளின் சத்தம் ஈனஸ்வரமாக ஒலித்தது.

நான் சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பினேன். ஒரு இங்க் ஃபில்லர் இருந்தால் என்னால் அந்தக் குட்டிகளின் பசியை ஆற்றிவிட முடியும். ஆனால் காலம் மாறிவிட்டது. பெட்டிக்கடைகளில் முன் போல் இங்க் ஃபில்லர்கள் கிடைப்பதில்லை.

‘‘ஜெல் பேனா இருக்கு. தரட்டுங்களா?’’

மெடிக்கல் ஷாப்பில் பஞ்சு வாங்கினேன். சௌம்யா, பாக்கெட் பால் காய்ச்சித் தந்தாள். சற்று நேரம் சூடு ஆறட்டும் என்று மின்விசிறி போட்டேன். ஒரு தகப்பன்சாமி போல நான் பாலூட்டும் வைபவத்தைக் காண, சௌம்யாவும் குழந்தைகளும் என்னைப் பின்தொடர்ந்தார்கள்.

குட்டிகள் இன்னும் கண் திறக்கவில்லை. கை நடுங்க, சாம்பல் நிறப் பூனையைத் தூக்கினேன்.

குட்டிப் பூனை எனக்கு அடங்கியது. என்னையே அந்த நிமிடத்தின் மேய்ப்பனாக ஏற்றுக்கொண்டது. பதிலுக்கு நான் அந்தப் பூனையை என் உள்ளங்கையில் தாங்கினேன். நான் அதன் ரட்சகன் ஆனேன். ஆறிய பாலில் பஞ்சை நனைத்து வாயில் பிழிந் தேன். என் கிருபை உனக்குப் போதும்.

சௌம்யாவும் குழந்தைகளும் என்னையே பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அந்தக் குட்டிப் பூனைகள் மூன்றும் இதற்குள் என் உடல் சூட்டில் பாதுகாப்பாக கண்ணயர்ந்து விட்டன.

‘‘சாப்பிட வர்றேளா?’’

‘‘வேண்டாம்.’’

அந்தக் குட்டிகள் மூன்றும் இவ்வாறு எங்கள் குடும்பத்தில் பிரவேசித்தன. அமல், விமல், கமல் என்று சின்மயா அவற்றுக்கு ஞானஸ்நானம் செய்து வைத்தாள். பழைய ஸ்கூட்டர் டயரில் ஒரு மெத்தை தயார் செய்தான் சுந்தர். சௌம்யா கூடுதலாக தன் பாதுகாப்பு வளையத்தில் அந்தப் பூனைகளையும் கொண்டுவந்தாள். கட்டிலுக்கடியே அவை கண் திறந்தபோது, அறையில் மடித்துக்கட்டிய லுங்கியுடன் நான்தான் நின்றிருந்தேன். கடவுளின் விஸ்வரூபம்.

‘‘வாருங்கள் என் குட்டிகளே. நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நானே உமக்கு வழியும், ஜீவனுமாய் இருக்கிறேன்.’’

குட்டிகள் என்னைப் பற்றிய பயமின்றி வளர்ந்தன. பல்வேறு அலுவல்களுக்கிடையே அவற் றைப் போஷிப்பது என் தர்மம் ஆயிற்று. மழைக் காலம் வந்தது. புறநகர் வீட்டில் தண்ணீர் புகுந்தபோது மூன்று நாட்கள் எங்களுடன் அந்தப் பூனைக் குட்டிகளும் மொட்டை மாடி யில் வாசம் செய்தன. அத் தனை மழையிலும் எப்போதும் அவற்றுக்குக் காய்ந்த மூலை கிடைக்கச் செய்தேன். குளிர் காலம் தொடர்ந்தது. சௌம்யா என் ஜானவாசக் கோட்டை எடுத்து பூனைகளை மூடினாள். வெயில் காலத்திலோ அவற் றின் தாகத்துக்குத் தண்ணீர் வைத்தாள்.

வீட்டில் இப்போதெல்லாம் நேரம் போவதே தெரியவில்லை. காலடியில் பஞ்சு உருண்டைகள் மிதிபட்டுவிடாமல் பார்த்து நடப்பதற்கே ஒரு கவனம் வேண்டியிருந்தது. பட்ஜெட்டில் பால் பாக்கெட் கூடியது. குறுகிய காலத்திலேயே அந்தப் பூனைகள் கட்டில், சோபா என அனைத்திலும் ஏறி இறங்கின. வெளியே புறப்படும்போது பூனைகள் எதிர்ப்பட்டால் நற்சகுனம் என்று ஆகிப் போனது.

சின்மயா, பூனையின் துணையைக் கொண்டு தனியே இருக்கப் பழகினாள். சுந்தர் அவற்றுடன் ஓடி விளையாடி ஒரு சுற்று இளைத்தான். சௌம்யா, தாய்மையின் கருணையில் ஒளிர்ந்தாள். பூனைகள் வளர்க்கும் வீடு என்று எங்கள் வீட்டுக்கு புதிய அடையாளம்.

பூனைகள் வளர்ப்பின் அடுத்த அத்தி யாயத்தில் முதன்முறையாக ஓரிரு பிரச்னை கள் துவங்கின. அமல், ஒரு நாள் வீட்டில் குற்றுயிராக ஒரு அரணையைக் கடித்துக் கொணர்ந்தான். விமல், தோட்டத்துப் பசுமையில் தேடி வரவேற்பறை சோபாவின் கீழ் ஓணான் ஒன்றை சிரச்சேதம் செய்தி ருந்தான். பக்கத்து வீட்டில் கிளி வளர்ப்பதால் ஜன்னல்களை மூடிக்கொண்டார்கள். வீட்டில் பூனைகளை வளர்க்கவே கூடாது. தரித்திரம் வரும் என்று வந்து போன நண்பர்கள் அக்கறையாகச் சொன்னார்கள். அவர்களுக்கு வாழ்வில் எடுத்ததற்கெல்லாம் பயம். வீட்டில் காளி, நரசிம்மர் படம் இருந் தால் ஆகாது. சஞ்சீவி மலையைத் தூக்கும் ஹனுமார் படம் கூடாது என்று எதைப் பார்த்தாலும் பயந்து சாவார்கள். சினிமாக் களில் அந்தக் கருப்புப் பூனை பணக்கார வீட்டில்தானே வருகிறது? தவிரவும் ஜேம்ஸ் பாண்ட் படங்களின் வில்லன்கள் முழங் கையில் வைத்து ஆசையில் தடவுவது பூனை களைத்தானே?

அண்ணன் வீட்டில் அஞ்ஞாத வாசம் முடிந்து எங்கள் வீட்டுக்கு நாடாறு மாதம் இருக்க வந்த என் அம்மா, பூனைகளின் ஒரே ஒரு முடிகூட நம்மால் விழலா காது என்றும், அப்படி விழ நேர்ந்தால் அது கொடிய பாவம் என்றும் அதற்குப் பரிகாரமாக தங்கத்தில் ஒரு பூனை செய்து யாராவது பிராமணருக்குத் தானம் கொடுக்க வேண்டும் என்று சொன்னாள். ‘‘அது ஏன் பிராமணாளுக்குக் குடுக்கணும்? வேற யாருக்காவது குடுத்தா பாவம் போகாதா?’’

‘‘போடா. தெரிஞ்சதைச் சொன்னேன். பெரியவா சொல்லுவா.’’

‘‘மியாவ்.’’

அம்மாவின் கால்களில் உரசி பூனையன்று சரஸமாடியது. கூச்சத்தில் அம்மா கத்தியதை சின்மயாவும் சுந்தரும் சுற்றி வந்து கைத் தட்டி ரசித்தார்கள். சௌம்யா சிரிக்காமல் புத்தர் போல் அம்மாவுக்கு காபி வைத்துப் போனாள்.

வீட்டுக்கு அம்மா வந்து விளையாட்டு போல் ஒரு மாதம் ஆனது. சின்மயாவுக்கு திடீரென்று இரவு நேரங்களில் அடிக்கடி உடல்நலம் சரியில் லாமல் கஷ்டப்பட்டாள். வந்திருப்பது மூச்சுத்திணறல் என்று அம்மா கண்டுபிடித் தாள். குழந்தை சுவாசத்தில் எலும்புக்கூடு தெரிந்து மறைந்தது. மூச்சுக் காற்றில் பிசிறடித்து விசிலடித்தது. சின்மயா தினந்தோறும் இரவுகளில் செத்துச் செத்துப்பிழைத்தாள்.

‘‘வீட்ல பெட் அனிமல்ஸ் ஏதாவது வளர்க்கறீங்களா?’’

‘‘டாக்டர்?’’

‘‘நாய், பூனை இப்பிடி ஏதாவது?’’

‘‘மூணு பூனைங்க இருக்கு டாக்டர்.’’

‘‘அமல், விமல், கமல்’’ என்று பெயர்களை சின்மயா பலவீனமாகச் சொன்னாள்.

‘‘அப்ப அதுதான். பெட்ஸ் அலர்ஜி!’’

‘‘அதுக்கு என்ன பண்ணணும்?’’

‘‘அலர்ஜின்னு பொதுவா சொன் னேன். அதேசமயம் இது ஆஸ்துமால போய் முடியும். ஸ்டீராய்ட்ஸ் குடுத்து கன்ட்ரோல் பண்ணலாம். ஆனா அதுல கெடுதலான பின்விளைவுகள் ஜாஸ்தி.’’

‘‘ஓ!’’

‘‘சுருக்கமா பெத்த பாசமா, வளர்த்த பாசமான்னு நீங்க முடிவெடுக்க வேண்டிய நேரம். குழந்தைக்கு பூனை ஆகாது. குழந்தை உடம்பு சரியாகணும்னா வீட்ல பூனைகள் கூடாது.’’

வீட்டுக்குத் திரும்பும் வழியில் யாரும் யாருடனும் பேசவில்லை. டாக்டரிடம் போய் வந்த விவரம் பற்றி அம்மா கேட்டாள். இத்தனை நாட்கள் பழகியதில் அவளுக்கும் பூனைகள் பிடித்துவிட்டன. அவை இல்லாமல் வீடு வெறிச்சென்றுதான் இருக்கும் என்பதை ஒப்புக்கொண் டாள். சின்மயாவுக்குக் கோபம் வந்து விட்டது. தனக்கு எது வந்தாலும் தான் பூனைகளை பிரியப் போவ தில்லை என அழுதுகொண்டே அறி வித்தாள். சுந்தர் அதை ஆமோதித்தான். வீடு நெடு நேரம் அமைதியாக இருந்தது.

‘‘மியாவ்’’ & பூனைகள் வரப்போகும் துயரம் தெரியாமல் உற்சாகக் குர லெழுப்பி சௌம்யாவை சுற்றிச் சுற்றி வந்தன. இரவு ஒன்பது மணிக்கு எப்போதும் போல் சௌம்யா பூனை களுக்குப் பால் வைத்து அவை குடிப் பதையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.

வீட்டின் கடவுள் என்ற முறையில் என் பொறுப்பு இதில் கூடுதலாக இருந்தது. சின்மயா என் மகள். அவளை நானே படைத்தேன். நடுவே கொஞ்சம் நாட்கள் நான் பூனை களுக்குக் கடவுளாக இருந்திருக்கலாம். ஆனால் வெள்ளம், சுனாமியென்று தன்னை நம்புகிற எத்தனை பேரை கடவுள் கைவிட்டிருக்கிறார்?

சின்மயாவின் ஆரோக்கியமே முதல் முக்கியம்.

பதினோரு மணிக்கு கூர்க்கா ராம் லால் வந்தான்.

சுந்தரும் சின்மயாவும் தூங்கிவிட் டார்கள். அம்மா, ‘‘இந்தக் கண்ராவி எல்லாம் நான் பார்க்க வேண்டாம்’’ என உள்ளே போய் ஜன்னல் வழி யாகப் பார்த்துக்கொண்டு இருந்தாள். பூனைகளுக்கான கடவுளின் திக்குத் தெரியாத காட்டில் திசைகளும் தெரியாமல் விட்டுவிடுகிற திட்டம்.

சௌம்யா நான் சொல்லியிருந்தபடி கையில் சாக்கு எடுத்து வந்தாள். ராம் லால் சாக்கை அகலமாகப் பிடித்துக் கொண்டான். அமல், விமல், கமல் என்று ஒவ்வொன்றாக பூனைகளைப் பிடித்து சாக்குக்குள் போட்டேன். ராம்லால் அவசரமாக சணலில் சாக்கைக் கட்டினான்.

‘‘சிட்லபாக்கம் சுடுகாடு தெரியுமா?’’

‘‘மாலும் ஸாப்.’’

‘‘அதைத் தாண்டி விட்டுடு.’’

ராம்லால் இருட்டில் பல் தெரிய பணத்தை வாங்கிக்கொண்டான். சொன்னதற்கு தலையாட்டி மூட் டையை எடுத்துக்கொண்டான். சௌம்யா என் தோளில் சாய்ந்து விம்மினாள். மூட்டை ஆவேசமாக நெளிந்தது. ராம்லால் தெரு முனை திரும்பும் வரை இருட்டில் வீட்டு வாசலில் அசையாமல் அப்படியே நின்றிருந்தோம்.

எல்லாம் கடவுள் செயல்!

– 28th பெப்ரவரி 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *