கடவுள் வந்தார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 17, 2016
பார்வையிட்டோர்: 6,467 
 

சென்னை தியாகராயநகர்.

திங்கட்கிழமை கிழமை காலை, பதிப்பகம் கிளம்பும் அவசரத்தில் குளித்துவிட்டு ஈரத்துண்டுடன் பூஜையறையில் நுழைந்து அங்கிருந்த சுவாமி படங்களின் மத்தியில் சஷ்டிக்கவசம் சொல்ல ஆரம்பித்தார் கேசவன். இது அவருக்கு தினசரி வாடிக்கைதான்.

மனிதர் பாவம் கடந்த இருபது வருடங்களாக ஒரே பதிப்பகத்தில் புரூப் ரீடராக அதே சொற்ப சம்பளத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார். ஏகத்துக்கும் அப்பாவியானவர். மூக்கை பிடித்தால் வாயினால் சுவாசிக்கத் தோணாது. தான் உண்டு தன் பதிப்பக வேலை உண்டு, கோவில்கள், பூஜைகள் புனஸ்காரங்கள் உண்டு என்று சத் விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு அமைதியாக இருப்பவர். தி.நகர் முட்டுச் சந்து ஒன்றில் அறநூறு ரூபாய் வாடகையில் மனைவி மகளுடன் குடியிருப்பவர்.

ஒரே பெண் நப்பின்னையை பி.காம் வரை படிக்க வைத்தார். அவள் பார்ப்பதற்கு லட்சணமாக இருப்பாள். கேசவனின் ஒரே வேண்டுதல் அவளுக்கு ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதுதான். அதற்காக தினமும் பகவான் நாமத்தை விடாமல் சொல்லிக் கொண்டிருந்தார்.

அன்றும் அப்படி பூஜையறையில் பகவான் நாமத்தை உரத்து சொல்லிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு கடவுளின் புகைப்படம் அசைந்து கொடுத்தது. கேசவன் சற்று பயந்தாலும் மனப்பிரமையாக இருக்கும் என அந்த அசைவை ஒதுக்கிவிட்டு மேலும் சஷ்டிக் கவசத்தை தொடர்ந்தார்.

அடுத்த நொடியில் அசைந்து கொடுத்த கடவுளின் படம் உயிர்த்தெழுந்து வெளியே வர, கேசவன் விக்கித்துப் போனார்.

“நீ…நீ…நீங்க” என்று வார்த்தைகள் வெளிவராது கடவுளைப் பார்த்து பயந்தார்.

கடவுள், “உஷ்…” என்று தன் உதட்டில் ஆட்காட்டி விரலை வைத்து கேசவனை அமைதிப் படுத்தினார்.

“…………………”

“நான் நேரில் வந்ததை யாரிடமும் உளறிக் கொட்டாத. உன்னுடைய நேர்மையையும் பக்தியையும் பார்த்துதான் நான் நேரில் வந்தேன். நப்பின்னைக்கு இன்றிலிருந்து ஒன்பது மாதத்திற்குள் அதாவது 270 நாட்களுக்குள் நல்லபடியாக திருமணம் நடக்கும். கவலைப் படாதே. இத பார், தினமும் இந்த வெண்கல மணியடித்து பூஜை செய்கிறாயே, இந்த மணியின் உள் நாக்கை உனக்கு எத்தனை ஆயிரங்கள் பணம் வேண்டுமோ அதை மனதில் நினைத்துக்கொண்டு தடவினால் அத்தனை ஆயிரங்கள் கொட்டும். உன் மகளின் திருமணத்திற்காக இந்த மணியைத் தடவி, தடவி ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாக அடுத்த ஒன்பது மாதங்கள் பத்து கோடி வரை நீ எடுத்துக் கொள்ளலாம்.”

“………….!?”

ஆனால் அந்த பத்துக் கோடியையும் உன் மகளின் திருமணத்திற்காக மட்டுமே நீ உபயோகிக்க முடியும். திருமணத்தை காரணம் காட்டி அனைத்தையும் நீ செலவழிக்கலாம். சொத்து வாங்குவதோ, அல்லது வேறு ஒருவருக்கு கொடுத்து வைப்பதோ நடக்காது. நீ பத்து கோடியையும் திருமணம் என்கிற காரணம்காட்டி தாம் தூம்னு செலவழி….நான் குறுக்கிட மாட்டேன். ஆனால் திருமணம் நடந்த அடுத்தநாள் கட்டு சாதக்கூடை வைத்து சம்பந்திகளை நீ ஊருக்கு அனுப்பி வைக்கும் வரையில்தான் இந்தப் பத்துகோடி உனக்கு கிடைக்கும். அதற்கு அடுத்த நாள் நீ மணியைத் தடவினால் ஒரு பைசாகூட வராது. நீ பத்து கோடிக்கும் குறைவாக செலவழித்தால் மிச்சமுள்ள பணம் என்னிடம் திரும்பி வந்துவிடும். சரியா?”

“யார் மாப்பிள்ளை? அவன நான் எப்படி கண்டுபிடிக்கிறது…?”

“எல்லாம் உன்னை மீறி தானாக நடக்கும், நான் நடத்தி வைப்பேன். பணச் செலவு மட்டும் உன்னுடைய ரசனை…புரியுதா? சரி சரி எனக்கு நேரமாச்சு நான் மடிப்பாக்கம் நரசிம்மனைப் போய் பார்க்கணும்.”

கடவுள் மறைந்து விட்டார்.

கேசவன் உடனே, பத்தாயிரம் வேண்டும் என்று நினைத்துக்கொண்டு அந்த மணியின் நாக்கைத் தடவ, என்ன ஆச்சரியம்? பத்து ஆயிரம் ரூபாய் புத்தம் புது நோட்டுக்கள் கொட்டியது. கேசவன் எடுத்து வைத்துக் கொண்டார்.

அடுத்து மடிப்பாக்க அபார்ட்மென்ட்டில் பூஜை செய்து கொண்டிருந்த நரசிம்மன் வீட்டிற்கு சென்றார். நரசிம்மனின் ஒரே பெண் தீபிகா திருமணத்திற்கு தயாராக இருந்தாள். பி.ஈ ஆர்க்கிடேக்ட் படித்திருந்தாள். அவளது வித்தியாசமான கட்டிடக் கலை அதிரடிகள் பெரிய வரவேற்பைப் பெற்றன. கெட்டிக்காரி.

கேசவன்போல் ஏழ்மையில் இல்லாமல் நரசிம்மன் சற்று வளப்பமாக இருப்பவர். சொந்த அபார்ட்மென்ட், டிசையர் கார் என்று வசதியாகத்தான் இருக்கிறார். நேர்மையாக அறம் சார்ந்த வாழ்க்கை வாழ்ந்துகொண்டு பகவான் நாமத்தை தினமும் சொல்லி வருபவர். கடவுளுக்கு அவர்மேல் ஒரு கரிசனம் உண்டு.

பூஜையறையில் இருந்த நரசிம்மன் முன் தோன்றினார். அவரும் கடவுளைப் பார்த்து பயந்தார். தினமும் தன்னை வணங்கும் நல்ல மனிதர்களிடம் நேரில் தோன்றினால் மட்டும் ஏன் பயப்படுகிறார்கள் என்பது கடவுளுக்குப் புரியவில்லை.

கேசவனிடம் சொன்னதையே நரசிம்மனிடமும் சொல்லி தீபிகாவின் திருமணம் அடுத்த ஒன்பது மாதங்களில் நல்லபடியாக நடக்கும் என்று சொல்லி மறைந்தார்.

வாவ்…பத்து கோடி. நரசிம்மன் உற்சாகமானார்.

ஜனவரி 18ம் தேதி நப்பின்னைக்கு கல்யாணம்; அதே ஜனவரி 18ம் தேதி தீபிகாவிற்கும் கல்யாணம் என்பது கடவுளின் அனுக்கிரகத்தால் முடிவாயிற்று.

மகளின் கல்யாணத்திற்காக கேசவன் தி.நகர் மக்கள் தொகை நெரிசலில் அவதிப்படும் ரங்கநாதன் தெரு சரவணா கல்யாண மண்டபத்தை இரண்டு நாட்களுக்கு வாடகைக்கு எடுத்துக் கொண்டார். இரண்டு நாட்களுக்கு இருபதாயிரம் வாடகையாம். வெண்கல மணியின் நாக்கைத் தேய்த்து பத்தாயிரம் அட்வான்ஸ் கொடுத்தார்.

பதிப்பகத்தின் ஓனர் கல்யாண பத்திரிக்கைகளை ஓசியில் அடித்துத்தர சம்மதிக்கவே கேசவன் குஷியானார். ஓனர் மட்டமான ஒரு டிசைனில் குறைந்த செலவில் பத்திரிகை அடித்துக் கொடுத்தார். மாப்பிள்ளை பெண்ணுக்கு மட்டும் புதிதாக துணி வாங்கினார்.

உறவினர்கள் அனைவரும் திரண்டு ரயிலில் வந்தனர். கேசவன் வீட்டிலேயே தரையில் படுத்து உருண்டனர். ஊர்க்கதை பேசி திருமணம் முடிந்தவுடன் கிளம்பிச் சென்றனர்.

கேசவனுக்கு மொத்த கல்யாணச் செலவே ஒரு லட்சத்து இருபதாயிரம்தான் ஆனது. கடவுளுக்கு நன்றி சொன்னார்.

நரசிம்மன் சமத்து சாமர்த்தியம் மிக்கவர். கல்யாண நாள் குறித்தவுடனேயே அட்வான்ஸ் கொடுத்து சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஷெராட்டன் ஹோட்டலில் கல்யாணம் நடத்த மிகப்பெரிய ஏ.ஸி. ஹாலும், அதே ஹோட்டலில் நான்கு நாட்களுக்கு 150 டபுள் ரூம்களும் புக் பண்ணினார். மாப்பிள்ளை அழைப்பு முடிந்தவுடன் பூல் சைடில் டின்னர் என்று முடிவெடுத்தார். சென்னையில் உள்ள அனைத்து பென்ஸ், ஆடி, பி.எம்.டபிள்யூ வாடகைக் கார்களை நான்கு நாட்களுக்கு, முன்பணம் கொடுத்து ஏற்பாடு செய்து கொண்டார்.

கல்யாண பத்திரிக்கைகளை கோல்டன் கலரில் அமர்க்களமாக அடித்தார். அதில் 18ம் தேதி கல்யாணத்திற்கு 15 தேதியிலிருந்தே உறவினர்களை அழைத்திருந்தார். பத்திரிக்கையின் இரண்டாவது பக்கத்தில்

ஜனவரி 15 ஆண்களுக்கு பட்டு வேஷ்டி சட்டை; பெண்களுக்கு பட்டுப் புடவை வாங்குவதற்கான
ஷாப்பிங் தினம்; அவைகளை கண்டிப்பாக திருமண தினத்தன்று அணிய வேண்டும்.

ஜனவரி 16 மெகந்தி போட்டுக் கொள்ளலாம். பியூட்டி பார்லர் சென்று வரலாம்.

ஜனவரி 17 மாப்பிள்ளை அழைப்பு – ஷெராட்டன்
ஜனவரி 18 திருமணம் – ஷெராட்டன் கிங்ஸ்லி ஹால்
ஜனவரி 19 கட்டுச் சாதம் கட்டி தந்து ஏர்போர்ட்டில் அனைவருக்கும் டிராப்.

என்று அச்சடிக்கப் பட்டிருந்தது.

திருமணத்துக்கு வரும் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் போக வர விமான டிக்கெட்டுகள் எடுத்து அனுப்பினார் நரசிம்மன். ஏர்போர்ட்டில் அவர்களை வரவேற்க அழகிய பெண்களை வாடகைக்கு ஏற்பாடு செய்திருந்தார். அவர்களை ஹோட்டலுக்கு அழைத்து வர உயர்ரக கார்கள் காத்திருந்தன.

அனைத்து வசதிகளையும் மேற்பார்வையிட ஒரு ஏஜென்ஸி வைத்துக் கொண்டார்.

பதினெட்டாம் தேதி தீபிகாவின் திருமணம் ஷெராட்டனில் அமர்க்களமாக நடந்தது. உறவினர்களும், நண்பர்களும் சொக்கிப் போனார்கள்.

நரசிம்மன் செய்த செலவு ஏழு கோடியே முப்பத்தேழு லட்சத்து அறுபதாயிரம். கடவுளுக்கு கணக்கு காண்பிக்க தன்னுடைய லேப்டாப்பில் எக்ஸெல்ஷீட் தயாராக வைத்திருந்தார். அதில்,

கல்யாணப் பத்திரிக்கை செலவு Rs.1000 x 500 பத்திரிக்கைகள் 500,000
ஹோட்டல் ஷெராட்டன் கல்யாண ஹால் 1,200,000
ஹோட்டல் ஷெராட்டன் பூல் சைட் டின்னர் 780,000
மாப்பிள்ளை அழைப்பு – ரோல்ஸ் ராய்ஸ் காரில் 500,000

ஹோட்டல் ஷெராட்டன் நான்கு நாட்களுக்கு 150 ரூம்கள் வாடகை 60,000,000
ஏஜென்ஸி செலவு 280,000
உயர் ரக கார்களுக்கான வாடகை 10,000,000
பெண்களுக்கான பட்டுப் புடவைகள்/பாவாடைகள் 200,000
ஆண்களுக்கு ரெடிமேட் உடைகள் 120,000
பெண்களுக்கு பியூட்டி பார்லர் செலவு 80,000
மாப்பிள்ளை பெண்ணுக்கு டிசைனர் வேர் 100,000

என்று விலாவாரியாக ஏழு கோடியே முப்பத்தேழு லட்சம் அறுபதாயிரத்துக்கு கணக்கு வைத்திருந்தார்.

இருபதாம் தேதி இரவு கேசவனைப் போய் கடவுள் பார்த்தார். அவருடைய செலவு வெறும் ஒரு லட்சத்து இருபதாயிரம்தான் என்று கணக்கு பார்த்ததும் கடவுள் வெகுண்டார்.

“நான்தான் பத்து கோடி அனுமதித்தேனே !”

“எதுக்கு அனாவசியமா செலவு? எல்லாத்தையும் கட்டும் செட்டுமா முடிச்சுட்டேன்…நீங்கதான் எல்லாத்தையும் ஒரு குறை இல்லாமல் நன்னா நடத்திக் கொடுத்தேளே”

கடவுள் தலையில் அடித்துக் கொண்டு மறைந்தார்.

அடுத்து மடிப்பாக்கம் நரசிம்மனிடம் சென்றபோது, அவர் கடவுளுக்கு எக்செல்ஷீட் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொடுத்தார். ஏழு கோடிக்கும்மேல் செலவு செய்த நரசிம்மனை ஆச்சரியத்துடன் பார்த்தார். அதகளமாக செலவு செய்த நரசிம்மனை கட்டிக் கொண்டு வாழ்த்து சொன்னார். மிச்சப் பணத்தை எடுத்துக்கொண்டு செல்வதாக நரசிம்மனிடம் சொன்னபோது, நரசிம்மன் “மிச்சத்த தீபிகா சீமந்தத்துக்கு வெச்சுக்கவா?” என்றார்.

கடவுள் ஒரு நமுட்டுச் சிரிப்புடன் பதில் சொல்லாமல் மறைந்தார்.

அடுத்த நாள் சொர்க்கத்தில் கடவுள்கள் மாநாடு நடந்தது. அதில் ஒவ்வொரு கடவுளும் அவர்கள் பூமி விசிட் பற்றிய அனுபவங்களைப்பற்றி பவர் பாயின்ட் பிரசன்டேஷன் கொடுத்தபோது, சென்னை வந்த கடவுள் சொன்னார்.

“தமிழ் நாட்ல ரொம்ப முட்டாள் நல்லவர்கள் அல்லது விவரம் தெரிந்த நல்லவர்கள்தான் அதிகம். கேசவன் என்கிற ஒரு அசட்டு பிராமணனை நான் சந்தித்தேன். கொஞ்சம்கூட விவஸ்தை இல்லாத, கற்பனை வளம் இல்லாத ஒரு வறட்டு ஜென்மம் அவர். கடவுளே வந்து நேரில் பணம் கொடுத்தாலும் அதை சந்தோஷமாக செலவழிக்கத் தெரியாத அடி முட்டாள்.

“அடுத்து நரசிம்மன். சாமர்த்தியமாக கற்பனை வளத்துடன் தாம் தூம் என்று காசை விசிறியடித்து தன் மகள் திருமணத்தை சிறப்பாக நடத்திக் காட்டியவர். ஏழு கோடிக்கு மேல் செலவழித்த கெட்டிக்காரர். அது மட்டுமல்லாமல் மிச்ச பணத்தை மகள் சீமந்தத்துக்கு வைத்துக் கொள்ளவா என்று என்னைக் கேட்டவர்.

“கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தில் அதிரடியாக விவேகமுடன் செயல் பட்டு முன்னுக்கு வரத் தெரியாத துடிப்பில்லாத மனிதர்களுக்கு பூவுலகில் இனி இடமில்லை. திருட வேண்டாம், பொய் சொல்ல வேண்டாம். அறம் சார்ந்த வாழ்க்கையிலும் அதிக நல்ல சந்தர்ப்பங்கள் மனிதர்களுக்கு கிடைக்கின்றன. அதை புத்திசாலித்தனத்துடன் உபயோகித்து சூட்சமத்துடன் முன்னுக்கு வரத் தெரியாதவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *