“காளி ஆத்தா பேரிலே ஆணையிட்டுச் சொல்லுறேன். அக்கரைச் சீமையிலேருந்து திரும்பியாந்ததும் உன்னைக் கட்டாயம் கண்ணாலம் கட்டிக்கிறேன், பவளக்கொடி?”
தூணுடன் தூணாகப் பிணைந்து நின்ற பவளக்கொடியின் விம்மித் தணிந்த நெஞ்சில், அவ்வார்த்தைகள் எதிரொலித்தன. கடல் கடந்து செல்லும் மாலுமிக்குக் கலங்கரை விளக்கு உறுதுணையாக அமைவதுபோல், அன்று கடல் கடந்து சென்ற நடேசன் விடுத்துச் சென்ற ஆறுதல் மொழியை நேருக்கு நேர் நின்று நேற்றுச் சொன்ன மாதிரி அவள் உணரலானாள்.
சாயங்காலம் இருக்கும். கடை அலுவல்களைச் சீர் செய்துவிட்டுப் பவளக்கொடி திரும்பினாள். அவள் காதுகளில் தன் தாய்மாமன் கண்டிச் சீமையிலிருந்து வந்திருக்கும் சேதி காற்றுவாக்கில் விழுந்தது. உடனே அவளுக்குத் தன் மச்சான் நடேசனின் நினைவும் கூடவே வந்தது. மாமனைக் கேட்டால் மச்சானைப் பற்றி ஏதாகிலும் தெரியுமே என்ற ஆவலில், ‘ஆயா, மாமன் வந்திருக்குதாமே; தெரியுமில்லே’ என்றாள் பவளக்கொடி
“அப்படியா? நீ சொல்லத்தான் எனக்குத் தெரியுது. தம்பியை விசாரிச்சா உன் மச்சானைப்பத்தி ஏதுனாச்சம் தாக்கல் கிடைக்குமே” என்று கூறியவாறு கிழவி செல்லி புறப்பட்டாள்.
பூங்கரங்களில் கன்னத்தைப் புதைத்தவண்ணமிருந்த பவளக்கொடியின் இதயத் தடாகத்திலே நீர்மட்டத்திடை தலைமறைவாக இருந்த எண்ண மலர்கள் கம்பீரமாகத் தலை தூக்கிச் சிரித்தன. அவளும் பூப்போலப் புன்னகை பூத்தாள். கடந்த நினைவுகளை மீண்டும் எண்ணிப் பார்ப்பதில்தான் எவ்வளு இன்பமிருக்கிறது.
அறந்தாங்கி பட்டுக்கோட்டை ரஸ்தாவில் அந்தச் சாயாக் கடை இருந்தது. டீ என்றால் டீ அப்படி இருக்கும். முன்பெல்லாம் அதாவது பவளக்கொடி ‘பெரியவள் ஆவதற்கு முன்னர் அவளே நேரில் நின்று சாயா பரிமாறுவாள். வாடிக்கைக்காரர்களுடன் குழந்தை போல விளையாடுவாள்; கிளிமாதிரிக் கிள்ளை மொழியைப் பாங்காக உதிர்ப்பாள்; இளம் பூஞ்சிட்டுப் போன்று சிறகடித்துப் பறப்பாள். அவள் என்றால் ஏனையோருக்கும் ஒரு அன்பு மயக்கம் ! அவள் மயக்க உரு
பவளக்கொடி அலைகடலில் சேகரிக்கப்பட்ட முத்து ஒளிபரப்பி ஒய்யாரமாய்த் திரியும் கடல் முத்து. பவளமாய் திறந்தால் முத்துக்கள் நகைக்கும்; கண் திறந்தால் வண்டுகள் ரீங்காரமிடும்; கன்னக் குழிவில் ரோஜா சிரிக்கும். அவள் காட்டு ரோஜா!
அவள் பக்குவமடைந்ததும் கடையில் மாற்றம் நிகழ்ந்தது. அவள் இப்போதெல்லாம் சாயா போட்டு நேரில் வியாபாரம் பண்ணுவது நின்றுவிட்டது. அதற்குப் பதில் அவள் உள்ளறையில் எல்லாம் தயாரித்து. ஒவ்வொரு செட்டாக வெளியே நீட்டுவாள். ஒவ்வொன்றையும் நிதானமாக வாங்கி வியாபாரம் செய்வாள் அவள் அம்மா
நடேசன் அடுத்த பத்தாவது மைலிலிருந்தவன். காளைப் பருவம் ; வயதின் பெரும் பகுதியைப் பர்மா – ரங்கூனில் கழித்தவன். ஊரின் சுற்றுச் சூழ்நிலைப் பாசி அவனைப் பற்றவில்லை.
அவன் பவளக்கொடியை முதலில் கண்டதுமே மனதை அவள் வசம் பறிகொடுத்துப் போனான். அவன் ஆணழகன்; அவள் பெண் பதுமை; அழகும் அழகும் பின்னின பூங்கொடிக்குத் தாவிப் படரக் கொழுகொம்பு கிடைத்துவிட்டால் அப்புறம் அதன் வளர்ச்சிக்கு கேட்கவும் வேண்டுமா?
இதே போன்றதொரு பொங்கல் திருநாளில் பவளக்கொடி நடேசன் முதல் காதல் சந்திப்பு நிகழ்ந்தது. அந்த வட்டாரத்தில் வழுக்கல் மர வேடிக்கை பிரமாதம். வானளாவிய கம்பமொன்று பூமியில் நடப்படருக்கும். கம்பம் பூராவும் பசை வழிந்தோடும். விரல் பட்டால் ‘சர்ரென்று வழுக்கி விட்டுவிடும். கம்பத்தின் உச்சியில் சாயத் துண்டில் பத்து ரூபாய் முடிந்திருக்கும். பரிசைத் தட்டி, மார் தட்டிக்கொள்ள அனைவர் உள்ளமும் சுவரிலடித்த பந்தாக எழும்பும். பலர் பரிசைத் தட்டக் கனவு கண்டதுடன் சரி.
கடைசியில் நடேசன் ஒருவனால் தான் சாயத் துண்டையும், பணத்தையும் கம்பத்தின் உச்சியிலிருந்து கொணரமுடிந்தது. ஆனால் கம்பத்தினூடே சார்ந்து இறங்குகையில் அவன் கால் பின்னிச் சறுக்கிவிட்டது. தொபுகடீர்’ என்று பூமியில் சாய்ந்தான்.
சுய நினைவு வரப்பெற்றதும் நடேசன் துயில் நீத்து விழிகளை மலரத் திறந்தான். அவன் ஒரு பெண்ணின் கண் காணிப்பில் இருப்பதை அறிந்தான். உடம்பில் லேசாக வலியிருந்தது; பலத்த காயமில்லை.
‘மச்சான், மச்சான்’ என்று பன்னெடு நாள் பழகிய பாவனையில் ஆதரவு செய்த பவளக்கொடியைக் கண்டதும், நடேசன் மெய்மறந்தான்; உடம்பு வேதனையை மறந்தான். உலகமே ஒரு சொப்பன சொர்க்கமாகத் திகழ்ந்தது. அதில் அந்த நங்கை கனவுக் குமரியாக மாய மோகினியெனத் தோற்றம் கொடுத்தாள். அழகின் அன்வயமன்றோ அவள் !
ஆம்; அவள் அவனுள் உருமாறினாள். அப்படியே அவனும் அவளுள் இடம் பெற்றான்.
ஆக மறு மூன்று நாட்களும் நடேசன் அவள் வீட்டில் தங்கும்படி வாய்ப்பு அவர்களை ஒன்று கூட்டியது.
“மச்சான் அன்னிக்குக் கம்பத்திலே ஒவ்வொரு அடியா முன்னே ஏறிக் கடைசியாய்ச் செயிச்சதைக் கண்டதும் எம்மா சந்தோசப் பட்டுப்பூட்டேன் தெரியுமா? ஆனா, அதே சுருக்கிலே நீங்க கீழே விழுவிங்கன்னு கனாக்கூடக் காணல்லே, இதுமட்டும் உயிரு தப்பிச்சது புண்ணியந்தான்” என்ற பவளக்கொடியின் தேறுதல் அவனை ஆறுதல் படுத்தியது. இதெல்லாம் பழைய கதை.
“பவளக்கொடி, பவளக்கொடி” சுய நினைவு பெற்ற பவளக்கொடி அலறியடித்துக்கொண்டு வந்த தன் அன்னையைக் கண்டதும், ‘என்னவோ ஏதோ’ வென்று பதைத்து விட்டாள்.
“தங்கச்சி, ஒன் மச்சான் காட்டுக் காய்ச்சலிலே செத்துப் போயி நாலைஞ்சு நாளாயிடுச்சாமே? என்று ஓலமிட்டாள் செல்லி.
‘மச்சான் எப்போது வரும்’ என்று நாட்களை யுகங்களாகக் கழித்து வந்து பவளக்கொடி இந்த எதிர்பாராத இடியைக் கேட்டதும் மனமிடிந்தாள்; பித்துப் பிடித்தவள் கணக்கில் அலறினாள். அடுத்த தருணம் அவளை ஆறுதல் படுத்த வந்த அவள் ஆயா’ விடம் அவளுக்கு ஆத்திரம் பற்றி எரிந்தது. எரிச்சல் மூண்டது, தீயின்றிப் புகையா?
நடேசனைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகும் தீர்மானத்தை ஒரு நாள் பேச்சு வாக்கில் தன் தாயிடம் பவளக்கொடி எடுத்துரைத்தாள்.
“தங்கச்சி, நடேசனை நீ கட்டிக்கிறதுக்கு அட்டியில்லை. ஆனா அதுகிட்டே பேருக்குக்கூட நாலு காசு பணம் கிடையாதாமே. நம்ப பலகாரக் கடை மிச்சத்திலே எப்படி மூணு வயிறு நிரப்ப எலும்? நீ ரோசனை செஞ்சுக்க, பவளம்”
சொல்லாமல் சொல்லிய கிழவியின் பேச்சு நடேசனுக்கு எட்டியது.
“பவளக்கொடி, எண்ணி ஒரு வருசத்துக்குள்ளே எப்பாடுபட்டும் கையிலே நாலு பத்துச் சேர்ந்திடும். கொஞ்சம் பசையுடன் திரும்பி வந்து உன்னைக் கண்ணாலம் செய்துக்கிறேன். உன் நினைவு ஒண்ணுதான் எனக்குப் பலத்தைத் தரமுடியும், பவளக்கொடி”
அவள் பவளவாய் திறந்து விடை ஈந்தாள். இச்சம்பவத்தை மீளவும் நினைவுகூர்ந்த அவள், பெற்றவளை நிந்தித்தாள். யார் யாரை நோவது? அம்பு எய்தவள் அக்கிழவி. அம்பை நோவதா? அவளைக் கோபிப்பதா? அவள் ஏங்கினாள். இங்ஙனம் அதிர்ச்சி ஏற்படும் என்று அவள் எப்படி எதிர்பார்த்திருப்பாள். பாவம்? பின்னர் நிகழவிருக்கும் நியதியின் நீதியை முன் கூட்டியே அறியும் அஷ்டசித்தி படைத்த மாமுனியா அவள்?
‘ஜம் ஜம்’ என்று சதங்கை ஒலி முன் அறிவிப்பு மொழிய வந்து நின்ற வில் வண்டியிலிருந்து மாசி மலைத்தேவன் இறங்குவதைக் கண்ட பவளக்கொடி உள்ளே சரேலெனப் பாய்ந்தாள்.
ஆயா, மாமா வந்திருக்காக’ என்ற அளவில் படபடப்புடன் கூறியதைக் கேட்ட கிழவி செல்லி ஆச்சரியம் பொங்கக் கையில் வெற்றிலைச் சம்புடத்துடன் வெளியே வந்தாள்.
“வா, தம்பி, சௌக்கியமா? ஏது இந்த வீடு தேடி அத்திபூத்தாப்பிலே, உம்; முதலிலே வெத்திலை போடு தம்பி.”
தேவன் வருகை கிழவியை மலைக்கச் செய்தது. அவன் சுற்று வட்டாரத்தில் பசையான ஆசாமி. கிழவியுடன் கூடப் பிறந்தவன். பர்மா, மலேயா, கண்டி இதெல்லாம் அவனுக்குத் தண்ணீர் பட்ட பாடு.
செல்லியும் மாசிமலையும் உடன் பிறப்பில் ஒட்டிக் கொண்டார்களே தவிர, இயற்கையில் அவர்கள் ஓட்டவில்லை. சில மனத் தாங்கல்கள் ! கடைசியில் செல்லியின் கணவன் இறந்த சடங்கில் ராசியானான் தேவன்.
“அக்கா, ஒங்கிட்ட ஒரு சேதி கேட்கலாமின்னு வந்தேன். எம் பெண்சாதி செத்து வீடே வெறிச்சோடிக்கிடக்குது, மறுபடியும் வீட்டிலே விளக்கு ஏத்தி வைக்க மனசிலே ஆசை துள்ளுது. அதுக்கு நம்ப பவளக்கொடியை எனக்குக் கொடுத்துட்டா எம்பிட்டோசீரா வச்சிருப்பேன்.”
தேவன் இப்படிப் பேசினான். கிழவிக்குத் தூக்கிவாரிப் போட்டது.
பவளம் கதவைப் படீரென்று சாத்தினாள்.
ஆக மூன்று உள்ளங்களிலிருந்தும் நீண்ட பெருமூச்சுப் புறப்பட்டது!
“என்னா அக்கா, ரொம்ம யோசனை செய்யிறே. இடம் தேடி வருகுது சீதேவி. வார கிழமை நல்ல நாள்; பரிசம் போட்டுடலாம்.”
கிழவி திரும்பவும் சிலையானாள்.
“அக்கா, என்ன பதிலே பேசல்லே. பவளக்கொடி அந்தப்பயல் நடேசனைக் கையிலே போட்டுக்கலாமின்னு நினைச்சிருக்கும். விதி யாரை விட்டுச்சு? இல்லாதபோனா அந்த அனாதைப் பய செத்திருப்பானா? ஹும்; முடிவான சொல் இது. உன் மகள் எனக்குத்தான். அதுக்கு ஏற்பாடு செஞ்சுத்தான் ஆகணும்.”
கணத்தில் வில் வண்டி பறந்தது. அதிகாரம் வரிசை செலுத்தப் பேசிச் சென்ற தம்பியின் உத்தரவைக் கேட்டுச் சொல்லி பிரமித்தாள்; சுவர் ஒண்டலில் நின்றிருந்த பவளக்கொடி வாய் விட்டுக் கதறினாள்.
அவளுக்கு அந்த ஒரு ஏச்சு அதுவும் இறந்த நடேசனைப் பற்றிய கேலி அவளை வெகுவாகத் துன்பப்படுத்தியது. ஆசை மச்சானின் அன்பு முகம் அவள் முன்தோன்றியது. அவனது ஆதரவு வார்த்தைகள் கணீரென்று ஒலித்தன. அவள் கண்ணீர் பெருக்கினாள்.
விண்ணைச் சாடியது அவள் பார்வை. கற்பனை போல எல்லையற்ற வண்ண விதானமே, நீயாகிலும் அவளுக்கு இதமொழி சொல்லாயா?
அமிர்தம் பொழிந்த நிலவைப் பார்த்தாள், நிறைமதியே, உன் சீதளக் கதிரெனச் சில வார்த்தைகளை அவளுக்குக் கூறிச் சாந்தி செய்யமாட்டாயா?
“பவளக்கொடி”
“ஆயா”
“கேட்டியா சேதியை”
“கேட்கிறது என்ன ஆயா. மாமா துப்பு இப்பல்ல புரியுது. கண்ணாலமா? எனக்கா? மச்சானை மறந்துட்டா? ஒருக்காலும் ஏலாது. காளி மேலே சாத்தியமிட்டுச் சொல்லுகிறேன். இனி மாச்சான் ஞாபகம் ஒண்டியே எனக்கு உலகம். மாமா கிட்டே, சங்கதியைச் சொல்லிப்போடு.”
“பவளம், கலங்காதே , உன் எண்ணத்துக்குக் குறுக்கே நான் எதுவும் செஞ்சிடமாட்டேன்.”
மறுமறையும் தேவன் வந்தபோது, தன் மகள் ஒப்பவில்லை என்று சொல்லியதைக் கேட்ட அவன் தீப்பறக்கப் பேசிச் சென்ற வார்த்தைகள் அவளைச் சித்திரவதை செய்தன. அவள் கொடி போலத் துவண்டு போனாள்.
“என்னா திமிரா? மாமனா அவன்? பணம் ஒண்ணு இருந்தாக்க அல்லாரையும் கொடிகட்டி ஆண்டிட முடியுமாக்கும். அவன் பணம் அவனோட. என்னை அவனுக்குக் கல்யாணம் பண்ணித் தராமப் போனா ஆளையே தூக்கிட்டுப் போயிடுவானாமே. அத்துக்குத்தான் சம்யுக்தை பிருதிவி மகாராசா காலங்கூடப் புல் முளைச்சுப் போச்சுதே”
“ஆயா, நம்ம ரெண்டுபேரும் நிலத் தெளியறத்துக்குள்ளாற மாமன் கண்ணுக்குத் தெரியாத இடத்துக்கு ஓடிப் போனாத்தான் தப்பிக்கலாம் போல, என்ன செய்யிறது? பாம்பைக் கண்டாக்க நாமதானே தள்ளிப் போகவேணும்”
பவளக்கொடி விம்மினாள்; கிழவி கண் கலங்கி நின்றாள்.
அடிமுடியின்றி எண்ணங்கள் சிதலம் பெற்றன; சிதலமடைந்தவை பின் சேகரம் பெற்றன. சராசரங்கள் ஓய்வுற்ற சாமம். உறக்கமும் விழிப்புமற்ற நிலையுடன் பவளக்கொடி புரண்டு படுத்தாள். அதே சமயம் பவளக்கொடி’ என்ற குரல் கேட்டது.
கனவு கண்டு விழிப்பவள் போலானாள் அவள். யார் குரல் அது? கதவைத் திறந்தாள். அங்கே நடேசன் நின்று கொண்டிருந்தான்
“மச்சான்”
எத்தனையோ காலம் கனவு கண்ட இன்பத்திரளை ஒரு நொடிப்போதில் அனுபவித்து விட்டது போன்ற நெடுமூச்சு இன்பப் பெருமூச்சு அவள் இதயத்தினின்றும் வெளிப்பட்டது.
பவளக்கொடி தேம்பினாள். மச்சான் இறந்ததாக மாமன் சொன்ன செய்தியை ஞாபகப்படுத்திக் கொண்ட அவளுக்கு அப்பொழுதே தேவனின் சூது புலனாயிற்று. செல்லியும் இதை உணரலானாள்.
“பவளம்!”
“மச்சான், உங்களைக் காணுவோமின்னு நினைக்கவேயில்லை.”
“என்னா சங்கதி?”
“நீங்க காயலிலே செத்துப்போனதா என் மாமன் வந்து சொன்னாரு. அதுக்கு ஒத்த மாதிரி நீங்களும் கடுதாசி கூட எழுதல்லே. இப்பத்தான் அவரு தந்திரம் விளங்குது. இப்படிப் புரளி பண்ணி என்னை அவரு கட்டிக்கிறதுக்குப் போட்ட திட்டம் இது”
“பவளக்கொடி, நான் காய்ச்சலிலே பிழைச்சது மறுபிறப்புத்தான். அதாலே காகிதம் போட வாய்க்கல்ல. ஆனா உன் மாமன் இப்படித்தான் தீவினை பண்ணுவாருன்னு தெரியாது. மாசிமலைத் தேவனுக்கு எங்கிட்டே என்ன வயித்தெரிச்சலோ? முகம் நிமிர்ந்து அவரை ஒண்ணுக்கு ரெண்டு தடவைகூடப் பார்த்ததில்லையே? ஊம்”
பவளக்கொடி புத்துயிர் பெற்றாள்; மறுவாழ்வு பெற்றாள். கன்னக் கதுப்பெழிலில் நாணம் குமிழியிட்டு மின்னியது; கருவண்டுக் கண்களில் இன்ப வேதனையிருந்தது. அவள் மார்பகம் ஒரு கணம் விம்மித் தணிந்தது.
குமுதம் மலர்ந்தது; அங்கே தண்மதி மடலவிழ்ந்திருந்தான். வண்டு கானம் இழைத்தது; அங்கே மலர்மீது காட்சி தந்தது.
பவளக்கொடி புதுமை பெற்றாள். அங்கே நடேசன் முறுவலித்து நின்றிருந்தான்!
“என்ன, நடேசன் வந்துட்டானா? வந்து என் பவளக் கொடிக்குத் தாலியும் கட்டிப்புட்டானா?” என்று கர்ஜித்தான் மாசிமலைத்தேவன்.
பண்ணையாள் கூறிய விவரம் தேவனின் ஆத்திரத்தைக் கிளறிவிட்டது. கூடப்பிறந்த அக்காளாக இருந்தும் கூடத் தனக்குப் பவளக்கொடியைத் திருமணம் முடித்து வைக்கவில்லையே என்று ஆத்திரப்பட்டான் கிழவியின் மேல். அக்குடும்பத்தை ஒழித்துவிட வேண்டுமென்ற ஒரே நோக்கமே தேவனின் மனதில் வைரம் பாய்ந்தது.
“என்ன அகங்காரம்! நேற்றுப் பிறந்த பயல், வக்கத்த அனாதைப் பயல் நடேசன் என் சொத்தைத் திருடிக்கிட்டானா? பார்க்கலாம், அவங்க ரெண்டு பேரும் எப்படி ஜோடியா இருக்காங்கண்ணு?”
அடுத்த நிமிஷம் தேவன் வெற்றிச் சிரிப்புச் சிரித்தான். மேற்கண்ட விஷ விதை அவனது வைர நெஞ்சில் சக்தியாகப் பரிணமித்தது.
மறுநாள் இரவு மூன்று நாழிகைப் பொழுது.
“ஏய்.”
“எசமான்.”
“சொல்றதைச் செம்மையாக் கேட்டுக்கணும். இன்னிக்குச் சாமத்துக்குக் கைவசமிருக்கும் சாராயப் புட்டிகள் அத்தனையையும் அப்படியே கொண்டு போய் அந்த நடேசன் குடிசையிலே வச்சிரு. மற்றபடி இந்தத் துப்பு யாருக்கும் மூச்சுக் காட்டப்புடாது. உடனே ஓடிப்போய்ப் போலீஸ்காரங்கிட்டே விசயத்தை சொல்லிக் கையோடே அழைச்சிட்டு வந்திடு. கையும் மெய்யுமாப் பிடிபட்டப்புறம் பயல் எப்படித் தப்புறான்னு காணலாம். அவன் கையிலே விலங்கிட்டாத்தான் அவன் செஞ்ச பழிக்கு என் மனசு குளிரும்.”
முறுக்கேறியிருந்து மீசையை ஒருமுறை தடவிக்கொண்டான் தேவன்; அவன் கண்கள் சிவப்பேறின.
அச்சமயம் கம்பீரமாகத் தோன்றிய நடேசனைக் கண்ட மாசி மலைத்தேவன் திகைத்தான்.
“தேவர் ஐயா, உங்களுக்கு ஏதுக்கு விணாகக் கஷ்டம் கொடுக்க வேணாமின்னுதான் நானே வலிய உங்க கிட்டே வந்திருக்கேன். என்னை இப்போ என்னா செய்ய உத்தேசம்?” என்று முழங்கினான் இளைஞன் நடேசன். அவன் குரலில் சோளம் பொரிந்தது; இடியும் மின்னலும் மின்னின.
மலைத்துவிட்ட மாசிமலை தலை நிமிர்ந்தான். அவன் மனச்சவுக்கு அவனை வளைத்து முத்தமிட்டதோ?
‘ஐயாவே, நான் ஒங்களுக்கு என்ன தீவினை செஞ்சேன்? உசிரோடேயிருக்கிறப்பவே செத்துப் போனதாச் சொன்னீங்களாம். இப்போ என்னைக் கேசிலே மாட்டி வைக்க ரோசிக்கிறீங்க. வினை விதைச்சவன் வினையறுத்துத்தான் தீரணும்.”
நடேசன் பேசினான்.
“ஐயா, என்னை அடையாளம் புரியுதா?”
“……..”
“தேவர் ஐயா, உங்களுக்கு லீலாவைத் தெரியுமா?”
“என்ன, லீலாவையா? ஆமா தம்பி” என்றான் தேவன் பதட்டம் குரலில் இழையோட.
கண்கள் நீரைச் சொரிய நின்ற நடேசனைக் கவனித்த தேவனுக்கு உலகம் சுற்றியது. அவன் எடுத்து நீட்டிய புகைப்படத்தைப் பார்த்த தேவனுக்குக் கண்முன் தெரிந்ததெல்லாம் ஆலவட்டம் சுழன்றன. அந்தப்படத்தில் மூன்று உருவங்களிருந்தன. தேவன் லீலா நடேசன், அந்த நாளில் எடுத்தது!
“நடேசா; ஆமா நீ என் மகன்” என்று அலறினான் தேவன் நடந்த சம்பங்களை எண்ணினான்.
நடேசனின் தாய் லீலா பர்மாவில் தேவன் இருக்கையில் அவனது அன்பிற்குப் பாத்திரமானவள். ஆனால் திடீரென்று கிளம்பிய உள்நாட்டுக் கலகம் அவர்களைத் திசை வேறாகப் பிரித்தது. தேவன் தாயையும் சேயையும் மறந்தான். காலம் மாற்றிவிட்டது அவனை, பின் மூண்ட பர்மா யுத்தத்தில் உயிர் தப்பிய அவர்கள் எப்படியோ காலத்தை ஒட்டினார்கள், நடேசனும் பெரியவனான். அதற்குள் அவன் அன்னையின் வாழ்வும் முடிந்தது. மரணப் படுக்கையில் தான் அவள் தன் மகனுக்கு ரகசியத்தை உணர்த்தினாள். இதை நடேசன் மனத்திலேயே புதைத்துவிட்டான். எதற்கும் ஓர் வரையறை உண்டல்லவா? தன் தாயை வஞ்சித்ததற்குத் தேவனிடம் பழிவாங்கத் துடித்தான் நடேசன். ஆனால்….?
தேவனுக்கு நடேசன் தன் மகன் என்று அதுவரை தெரியவே தெரியாது. அவன் தூண்டில் புழுவாகத் துடித்தான் ; விம்மினான். சம்பவங்கள் எத்துணை விந்தையாக உருப்பெற்றுவிட்டன?
“நடேசா”
புத்துணர்வில் மகனை அழைத்தான் மாசிமலைத்தேவன்.
கண்ணீரில் நீந்திய விழிகளை மேலுயர்த்தினான். நடேசன் சரேவென்று வெளியேறினான். தேவனும் நடேசா நடேசா என்று அரற்றிய வண்ணம் பின்தொடர்ந்தான்.
அப்போது “யார் அங்கே?” என்ற அதிகாரத் தொனி எதிரொலித்தது. வாசலில் இரண்டு போலீஸ் ஜவான்கள் நின்றிருந்தனர்.
“மிஸ்டர் 204 துரிதம் பண்ணி வீட்டைச் சோதனையிடுங்க” என்ற உத்திரவு சப் இன்ஸ்பெக்டரிடமிருந்து வந்தது.
ஒரு கேசைப்பற்றி துப்பறிய வந்த தாணாக்காரர்கள் வழியில் தேவனின் சதியை நீண்ட நேரமாக மறைவில் நின்று கேட்டிருக்கின்றார்கள். வெறும் வாயை மெல்லுபவனுக்கு அவல் கிடைத்தால் எப்படியிருக்கும்?
அவ்வீட்டினின்றும் ஆறு சாராயப் புட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. தேவன் கைது செய்யப்பட்டான். அவன் வினை அவனைச் சுட்டுவிட்டது!
முன் நிலா.
மாசி மலைத்தேவன் படுத்த படுக்கையாகிப் போனான். அவன் மனச்சாட்சி அவனை அணு அணுவாகப் பிய்த்துத்தின்றது. எலும்பும் தோலுமாகிட்டான். அவன் சொத்து முழுவதையும் நடேசனுக்கு எழுதிவைத்தான்.
“அக்கா, மகனையும் மருமகளையும் பார்க்கத்தானே ஜாமீனிலேகூட ஓடியாந்தேன். திருநாளைக்குப் போன அதுக ரெண்டும் இன்னம் திரும்பல்லியே. என்ன விசயம்?”
விளக்கு வைக்கும் நேரத்தில் கிழவிக்குக் கடிதம் ஒன்று வந்தது. நடேசனும் பவளக்கொடியும் அக்கரைச் சீமைக்குப் போய்விட்டார்கள். அந்த ‘ஜோடி’ தேவனின் கண்களில் மீண்டும் விழிக்க விரும்பவில்லை!
“அப்படீன்னா என் உயிரு இருக்கிறதுக்குள்ளே அதுங்க ரெண்டு பேரையும் கண்ணாலே காண முடியாதா? ஐயையோ! நான் படுபாவி , கொடுத்து வைக்காதவன். ஐயோ” என்று புலம்பினான் மாசி மலைத்தேவன். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.
அணையப்போகும் விளக்கு அழகாக ஒளி வீசியது!
– பூவையின் சிறுகதைகள் – முதல் பதிப்பு – டிசம்பர் 2003 – பூவை பதிப்பகம்