கடன் பட்டவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 16, 2020
பார்வையிட்டோர்: 4,189 
 
 

மாம்பலத்தில் எனக்கு அடுத்த வீடுதான் பாண்டுவின் வீடு.

அவர் எப்பவும் நகைச்சுவையாகப் பேசுவார். தவிர பேசிக் கொண்டிருக்கும்போதே ஸ்பான்டேனியஸாக ஜோக் அடித்துக்கொண்டே இருப்பார். அது ரசிக்கக்கூடிய நகைச்சுவையாகவும் அமையும்; சில சமயங்களில் கடி ஜோக்காகவும் இருக்கும். ஆனால் அவருடன் பேசும்போது என் மனசு குதூகலிக்கும். அதனாலேயே நான் அடிக்கடி அவர் வீட்டிற்குச் சென்று பேச்சுக் கொடுப்பேன். அவர் ஏஜி அலுவலகத்தில் செக்ஷன் ஆபீசர். அவரின் மனைவி அவருடைய சொந்த மாமாவின் மகள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை.

பாண்டு வீட்டிற்குச் சென்றேன். அவரின் மனைவி என்னைப் பார்த்து “வாங்க” என்றாள். அதைக் கவனித்த பாண்டு என்னிடம், “மாமா பொண்ணும் உப்புமாவும் ஒண்ணுதான்; வேறொன்றும் கிடைக்காத பட்சத்தில் நம்ம தலையில் கட்டப்படும்…” என்றார்.

“உங்களுக்கு வேற வேலை இல்லை…”

பாண்டு தொடர்ந்து, “உனக்குத் தெரியுமா? கடவுளும் மனைவியும் ஒண்ணு; நாம் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்வார்கள்… ஆனால் செய்வதை மட்டும் அவர்கள் இஷ்டத்திற்குச் செய்வார்கள்…”

அவர் மனைவி எனக்கு காப்பி கொண்டு வந்தாள்.

பாண்டு என்னிடம், ‘காப்பிக்கும் டீக்கும் என்ன வித்தியாசம்?” என்றார்.

நான் முழித்தேன்.

“காப்பி கொட்டையில் இருந்து; டீ இலையில் இருந்து…”

அவர் மனைவி சீலிங் விசிறியைச் சுழல விட்டாள். உடனே பாண்டு “புத்திமான்கள் கண்டு பிடிச்சது மின்சாரம்; பக்திமான்கள் கண்டு பிடிச்சது பிரசாதம்; நாம் கண்டு பிடிச்சது சம்சாரம்; இதற்கா சுத்தி சுத்தி வந்தோம் பிரகாரம்??’ என்றார்.

“தோல்வி வந்தால் இதயத்தில் இடம் கொடுக்காதே; வெற்றி வந்தால் தலையில் இடம் கொடுக்காதே!!” தத்துவம் பேசினார்.

நான் காப்பி குடித்து முடித்தவுடன், “ஹேர் கட்டிங் போகிறேன்…” என்று சலூனுக்கு கிளம்பியவர், “இந்த உலகத்தில் என்னையும் ஒரு மனிதனாக மதித்து பொன்னாடை போர்த்துகிற ஒரே மனிதர் சலூன் கடைக்காரர் மட்டுமே…” என்றார். சலூன் போவதற்கு முன் “டிபன் பாக்ஸில் தயிர்சாதம் இருந்தால் அது தயிர்பாத், அதுவே கொட்டிவிட்டால் சிந்துபாத்.” என்றார்.

நானும் அவருடன் வெளியே வந்தேன். செருப்பை மாட்டிக்கொண்டே, “உங்கள் மனைவியிடம் இப்போதுள்ள குறைகளைக் கண்டு வருத்தப் படாதீர்கள்… அந்தக் குறைகள் அவளிடம் இல்லாமல் இருந்தால் ஒரு நல்ல கணவன் கிடைத்திருப்பானோ என்னவோ…” என்றார்.

சென்ற வாரம் அவர் ஏஜி ஆபீசிலிருந்து ரிடையர்ட் ஆகிவிட்டார்.

அவர் ஓய்வு பெற்றது எனக்குத்தான் குஷி. அடிக்கடி அவர் வீட்டிற்கு செல்லலாமே! தினமும் போக ஆரம்பித்தேன்.

“ஆபீஸில் ஓவர்டைம் என்றால் வீட்டுக்கு லேட்டு; வீட்டில் ஓவர்டைம் என்றால் ஆபீஸுக்கு லேட்டு.. ஆசிரியரும் அன்னைதான், வகுப்பில் தாலாட்டுவதால்… அவன் ரொம்ப சாமர்த்தியசாலி, நதியில் தள்ளி விட்டாலும் வாயில் மீனோடுதான் வருவான்.. பத்திரிக்கைக்கு கதை அனுப்பினேன் திரும்பி வந்தது, கட்டுரைகள் கவிதைகள் அனுப்பினேன் திரும்பி வந்தது. சந்தா அனுப்பினேன் திரும்பி வரவேயில்லை” என்று சொல்லிச் சிரித்தார்.

ஆங்.. இன்னொன்று சொல்ல மறந்து விட்டேனே… எனக்கு மாதக் கடைசியில் கையைக் கடித்தால் பாண்டுவிடம் கடன் வாங்குவேன். பல சந்தர்ப்பங்களில் அவர் எனக்கு கடன் கொடுத்து உதவியிருக்கிறார். அப்புறம் சம்பளம் வந்ததும் திருப்பிக் கொடுப்பேன். அதனால் அவர் எனக்கு ஆபத்பாந்தவர்.

அடுத்த சனிக்கிழமை அவரைப் பார்க்கப் போயிருந்தேன். விடாமல் கடி ஜோக்ஸ் என்னிடம் சொன்னார்…

“தொப்பையைக் குறைக்க அதில் போடும் குப்பையைக் குறைக்க வேண்டும்; சுடுகாடுதானேன்னு ரொம்ப சீப்பா நினைக்காதே, அங்க போறதுக்கு அவனவன் உயிரையே கொடுக்குறான்; அவள் என்னைப் பார்த்துச் சிரித்தாள், அவள் கன்னத்தில் குழி விழுந்தது, நான் அவளைப் பார்த்துச் சிரித்தேன் என் வாழ்க்கையே குழியில் விழுந்தது. அம்மா என்றால் அன்பு; மனைவி என்றால் வம்பு. கடவுளின் சிற்பத்தைக் கல் என்று சொல்பவர்கள், பணத்தை ஒரு காகிதம் என்று சொல்வதில்லை.

அப்பா ஆயிரம் நண்பர்களுக்குச் சமம்; அம்மா ஆயிரம் அப்பாக்களுக்குச் சமம். ஒவ்வொரு முறையும் என் தாயுடன் கோயிலுக்குச் செல்லும் போதும், கோயில் சிலையிடம் காட்டிவிட்டு வருகிறேன் என் கடவுளை!! நான் குடையை மறந்து வேலைக்கு போகும் நாட்களில், மழையை வருவிப்பவன் கடவுள்… தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்று தன் பிள்ளைக்கு சொல்லிக் கொடுக்கும் தாய், கட்டிய கணவனுக்கு அதைச் சொல்லுவதில்லையே ஏன்?”

அன்னிக்கி அவர் பயங்கர மூடில் இருந்தார். என்னை அவர் வீட்டிலேயே சாப்பிடச் சொன்னார். தொடர்ந்து கடி ஜோக்ஸ் அவரே சொல்லிக் கொண்டிருந்தார்.

“உலகத்தில் தலை சிறந்த ஜோடி… செருப்பு…

குடும்பத்தில் குதிரைக்குப் பிடித்தவர் ‘கொள்ளு’ தாத்தா.

தாலி கட்டின நாடு? இத்’தாலி’.

சென்னையில் சூடான இடம் ‘சூளை’

அழுமூஞ்சி நாடு ‘சிரியா’

வாசனையான ரயில்வே ஸ்டேஷன் ‘சென்ட்’ரல்

காலே இல்லாத டேபிள் டைம் ‘டேபிள்’

கையில் இருக்கிற கை ரே’கை’

பசுமையான நாடு ‘க்ரீன்’லாந்து

வளமை எது? பஸ் ஸ்டாண்டில் பார்த்த பெண்ணின் அழகான மேனி

எல்லா மொழியும் பேசக்கூடியது எதிரொலி

வெயில்ல வெளியே வந்தா உருகிடுவாரு யாரு? பெருமாள் ‘பட்டர்’

சொத்துக்கள் நிறைந்த நாடு ‘ஆஸ்தி’ரேலியா

உட்கார முடியாத தரை? புளியோ’தரை’

பட்டுப் பூச்சியிலிருந்து எதை எடுப்பார்கள்? ‘உயிரை’

இந்திய நாட்டின் ஜனத்தொகை பெருகுவதேன்? தீப’கற்பம்’ என்பதால்

“ஐயோ பாண்டு ப்ளீஸ் நீங்க சொல்வதெல்லாம் கடி ஜோக்ஸாக இருந்தால்கூட பரவாயில்லை; ஆனா ‘விஷக்கடி’ ஜோக்ஸ்…”

அன்று அதிசயமாக பாண்டு சில கவிதைகளும் சொன்னார்:

முதலிரவில் பஞ்சு மெத்தைக் கட்டிலில் படுத்திருந்த புது மாப்பிள்ளையை கடித்தது மூட்டைப்பூச்சி அல்ல, பேன்!!

அம்மாதான் ஜாதகம் பார்த்தாள்; அம்மாதான் பெண் பார்த்தாள்; அம்மாதான் நகை நட்டு கேட்டாள்; அம்மாதான் ஆசீர்வதித்தாள்; இன்று அம்மாதான் அவள் சரியில்லை என்கிறாள்…

அவளை கோயிலில் சந்தித்தேன், அர்ச்சனை அவள் பெயருக்கு, வீட்டில் என் பெயருக்கு.

அடுத்த ஜன்மத்தில் நான் கரப்பான்பூச்சியாக பிறக்க வேண்டும்; அதற்குத்தான் என் மனைவி பயப்படுகிறாள்.

மஹால் தூண்களை எண்ணி முடித்தேன்; கணக்கில் ஒன்று கூடியது. ஒருவேளை மனைவியையும் சேர்த்து எண்ணி விட்டேனோ!?

உரசியவுடன் பற்றிக் கொள்ளும் தீக்குச்சி மனைவி.

மனைவியை தீர்க்க சுமங்கலி என வாழ்த்தினான், தான் நீண்ட நாள் வாழ.

கண்கள் கலங்கச் சிரித்தேன். பாண்டுவிடம் நாளை வருவதாகச் சொல்லி விடை பெற்றுக்கொண்டேன்.

மறுநாள் ஞாயிறு காலை. பாண்டுவின் மனைவி எனக்கு மொபைலில் போன் செய்து பதட்டத்துடன் “கண்ணன் சார்… அவருக்கு மார்பை வலிக்கிறது என்கிறார்… எனக்கு ரொம்ப பயமா இருக்கு சித்தே வாங்களேன்.” என்றாள்.

நான் பதறியடித்து ஓடினேன். ஆனால் அதற்குள் பாண்டு மரணித்துவிட்டார்.

அடுத்த ஐந்து மணி நேரத்தில் பாண்டுவின் ஒரே மகன் மதுரையில் இருந்து விரைந்து வந்தார். வீட்டின் வாசலில் புகை எரிந்தது; மூங்கில் பாடை கட்டப்பட்டது. பாண்டுவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்… அழுகை பொத்துக்கொண்டு வந்தது. நேற்று இதனால்தான் என்னிடம் கொட்டித் தீர்த்தாரா? நேற்று சிரிக்க சிரிக்கப் பேசியவர் இன்று நிரந்தர மெளனமாகி விட்டாரே! அது எப்படி? ச்சே இவ்வளவுதான் வாழ்க்கையா? எனக்கு எல்லாமே வெறுத்துப் போயிற்று.

பதிமூன்றாம் நாள் காரியம் முடிந்தது.

நான் பாண்டு மகனிடம் சென்று மெதுவான குரலில் “அப்பாவிடம் போனவாரம் இரண்டாயிரம் ரூபாய் கடன் வாங்கினேன். அதை இப்போது தங்களிடம் தந்து விடுகிறேன்..” பணத்தை எடுத்தேன்.

“அப்பாவே இல்லை என்றாகிவிட்டது… என்னிடம் கொடுக்காதீர்கள் கோயில் உண்டியலில் செலுத்திவிடுங்கள்.” என்று சொல்லி மறுத்துவிட்டார்.

வீட்டிற்கு சென்ற நான் யோசித்தேன்…

கோயில் உண்டியலில் ஏன் போட வேண்டும்? என் அருமை பாண்டுவிற்கு நான் கடன் பட்டவனாகவே இருக்க ஆசைப்பட்டேன். இரண்டாயிரம் ரூபாய் பாண்டுவிடம் நான் கடன் வாங்கியது எனக்குப் பெருமைதான் என்று எண்ணி நான் வாளாயிருந்து விட்டேன்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *