கடந்து போகாத சில அன்புகள்…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 1, 2024
பார்வையிட்டோர்: 4,859 
 
 

கோயில்பட்டியில் இருந்து மாமா வந்து இருப்பதாய் சுசீலா சொன்னதும் ஒரு நொடி மனசு அத்தனை சந்தோசப்பட்டது.

அரைநாள் விடுப்பு சொல்லிவிட்டு வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்குப் பறந்தேன். வழி நெடுக அவருடைய நினைவுகளே முழுசாய் ஆக்ரமித்துக் கொண்டு இருந்தன.

ஆண்டுகள் நினைப்பில் இல்லை… ஆனால் அந்த அன்பு மட்டும் நெஞ்சுக்குழியில் அப்படியே நிற்கிறது.

கோயில் கொடை, சப்பர தேர் பவனி, மஞ்சு விரட்டு இப்படி ஒவ்வொரு விசயமும் துளிகூட மனசை விட்டுப் அகலாமல் ஊரின் மணத்தை மனசுக்குள் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டு இருந்தது. வீட்டுக்கும் என் அலுவலகத்திற்கும் இடையே இருந்த அந்த சின்னத் தொலைவு கூட கடக்க முடியாத கனமான தூரமாகத் தோன்றியது.

கிடப்பில் அடிதங்கிப் போன நினைப்பை ஏதோவொரு கிழத்தி அகப்பையை வைத்து கிளறி எடுத்தது போல் அத்தனையும் மேல் வந்து எக்களித்தது.

கை, வண்டியைச் செலுத்தினாலும், பழைய நினைப்பு என்னைச் செலுத்திக் கொண்டு இருந்தது அது போக்கில்.

திருநெல்வேலி. ஆயிரம் தான் வாழ்க்கை பெருவட்டமும் சிறுவட்டமும் போட்டாலும், மனசு போடும் முதல்வட்டம் சொந்த மண்ணில் தான் விளைகிறது.

தோப்புக்காரன் தெருவில் இருந்தது எங்கள் வீடு. நல்ல விசாலமான வீடு. ஒரு பக்கம் சீமையோடும், மறுபக்கத்தில் மர மச்சும் இருக்கும். வீட்டில் ஜனக்கட்டு அதிகம்…

அதனாலே கவனிப்பும் அதிகம். ஆயிரம் பேர் வீட்டில் இருந்தாலும் வந்து போகும் சுருளி மாமா மேல் இருந்த மதிப்பும் அன்பும் அலாதியானது. ஆச்சிக்கும் வீட்டில் இருந்த மற்றவர்களுக்கும் அவரைக் கண்டால் அத்தனை பிடிக்காது. ஆனால் எனக்கு அவர் என்றால் அம்புட்டு உசிரு.

வீட்டில் பெரியய்யன், அத்தாச்சி, பெரியம்மை, எங்க ஐயா என்று நிறையப் பேர் கூடி இருந்த வீடு.

அம்மாவுக்கு கோவில்பட்டி பக்கம் சொந்த ஊர்… சின்ன கிராமம். வேட்டுவன் கோயிலுக்குப் போன எங்க ஆச்சி, அங்கே அம்மாவைப் பார்த்து பிடிச்சு போய் எங்க அப்பாருக்கு கட்டி வைத்ததாய் கதை சொல்லும்.

ஆனால் அம்மாவோ மச்சி வீட்டைக் காட்டி ஆச்சி தன்னை இந்த சீக்கு புடுச்ச மனுசனுக்குக் கட்டி வைத்துவிட்டதாய், அப்பப்போ சொல்லி அழும். அம்மா வீட்டுப் பக்கம் ஒண்ணும் பெரிசா வசதி வாய்ப்பு இல்லை.

ஏழெட்டு மக்கள் அவுக வீட்டில். அம்மா தான் நாலாவதோ அஞ்சாவதோ. ஒரு மரக்கா வெதப்பாட்டில் தான் அத்தனை ஜீவன்களும் வாழ்ந்தாக வேண்டும். அந்த சமயத்தில் கொட்டாரம் போன்ற வீட்டோடு ஒரு ஆளுக்கு வந்து பொண்ணு கேட்டால் எதுக்கு விசாரிக்க போகிறார்கள்?

வீட்டுக்கு வந்த மற்ற மருமக்கள், சீரு செனத்தியோட வந்ததாலோ என்னவோ, ஒண்ணுமத்த அம்மாவை ஆச்சிக்கு பிடிக்காமலே இருந்தது. அதுக்கெல்லாம் அந்த நாளில் பெருசா அலட்டிக் கொள்ள மாட்டார்கள். அம்மாவைப் பிடிக்காததாலோ என்னவோ அவுக வகையறாவில் யார் வந்தாலும் ஆச்சி முகம் கோணிக் கொள்ளும். அந்த வகையில் தான் சுருளி மாமாவைப் பார்த்தாலே ஆச்சிக்கு அம்புட்டு கோவம் வரும்.

ஆனால் எனக்கு சுருளி மாமாதான் உசிரே அந்நாளில்… அந்நாளில் என்ன, இந்நாளிலும் அவர் என்றால் அத்தனை இஷ்டம் தான்.

எப்பவும் சேக்காளியை அழைப்பது போல்

“எலே மக்கா…” என்றுதான் கூப்பிடுவார்.

மாமா, அம்மாவுக்கு கூடப் பிறந்த பிறப்பெல்லாம் இல்லை. அம்மாவின் ஐயாவும், சுருளி மாமாவின் ஐயாவும் கூடப் பிறந்தவர்கள். ஆனால் ஏதோ ஒரு தாய் வயித்துப்பிள்ளைகள் போலதான் அம்புட்டு பிரியம், இரு குடும்பத்து மக்களுக்கும் இடையில்.

சுருளி மாமா ஓங்கு தாங்காய் இருப்பார். நல்ல ஈடுதாடான உடம்பு. நிறம் கொஞ்சம் கொறவு தான். ஆனாலும் வெயிலுக்கு அந்த நெறம் தான் மினுக்கும். கர்லாக் கட்டை போல கையும் காலும் அம்புட்டு உறுதியாய் இருக்கும்.

ஊரில் மாமாவுக்கு சோலி இல்லை என்று இங்கே, திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கே அவர்கள் வயக்காட்டில் எந்த விதைப்பும் இல்லை. அதனால் ஊருக்குள் ராத்தல் பண்ணிக் கொண்டு திரியும் சுருளி மாமாவுக்கு இங்கே திருநெல்வேலியில் ஏதாச்சும் கங்காணி வேலை அம்புட்டால் அவர் சோலி கத்துக் கொண்டது மாதிரியும் இருக்கும் என்று சொல்லித்தான் அவுக ஐயா அனுப்பித்து வைத்தார்.

மாமா உடம்புக்கும், முறுக்குக்கும் கங்காணி வேலை தான் லாயக்கு. நான் அப்போதே சிரிப்பேன். ஆனால் ஆச்சிதான் அவரை மனுசனாய் மதிக்காது.

“எலே காந்திமதி, பைய பைய உன் சனத்தையெல்லாம் இங்கன கொண்டாந்து சேர்த்துறியாக்கும்? நான் செத்த பொறத்தால எல்லாரும் ஒண்ணாக்கிடலாம்னு பாக்கிதீயளா எல்லாரும்? சவட்டி போடுவேன் சவட்டி. அந்த களவாணிப்பயலை இங்கன சேர்த்துக்கவே எனக்கு மனசு ஒப்பல…” என்னதான் ஆச்சி கூவினாலும், யாரும் அதை செவியில் போட்டுக் கொள்ள மாட்டார்கள்.

மாமாவுக்கு நடையில் தான் கட்டில் போட்டு தந்து இருந்தார்கள். உள்ளுக்குள் எல்லாம் அம்புட்டு லேசாய் விடமாட்டார்கள். வெள்ளென எழுந்து குளிச்சு முடிச்சு, வயக்காட்டுக்கு அவர் போய்விட வேண்டும்.

செத்த நேரம் தாமசிச்சாலும், ஆச்சி உள்ளிருந்து அவரை முடுக்கும், வெரசாய் போகச் சொல்லி. அதுக்கு காரணம் அவர் சோலி மேல் இருந்த கரிசனம் எல்லாம் இல்லை… பொண்டு புள்ளைகள் இருந்த வீட்டில் தடிப்பயல் ரொம்ப நேரம் தாமசம் பண்ணக்கூடாது என்ற வெசனம் தான் ஆச்சிக்கு.

அம்புட்டு கட்டுப்பாடு அந்த காலங்களில். இப்போது நினைத்தால் அதெல்லாம் ஓர் அழகான கனாக்காலமாய் தான் மனசுக்குள் இருக்கிறது.

யார் எம்புட்டு மொகம் கோணினாலும், சுருளி மாமா பெருசாய் எடுத்துக்காது. தூண்டிக்காரனுக்கு மீன் மேல தான் கண்ணு என்பது கணக்காய் மாமா அமைதியாய் இருக்கும். ஆனா அம்மா தான் மாமா படுகிற பாட்டைப் பார்த்து பார்த்து மனசுக்குள்ள நோவும்.

மாமா வந்த பிறகால தான் நெல்லையப்பர் கோயில் கொடையாகட்டும், அம்மன் கோயில் திருவிழா ஆகட்டும் அங்கன சிறப்பா போய் நான் கண்டது. அதுக்கு முன்னையெல்லாம் யாரும் கொடைக்கு கூட்டி போக மாட்டாக.

எங்க வீட்டை ஓட்டிபோற வளவுல நானும் என் சேக்காளிகளும் போய் மணிக்கணக்கா நிப்போம்… எம்பள மாதிரி நெறைய பேரு நிப்போம். ரொம்ப நேரம் கழிச்சுத்தான் சப்பரத்துல சாமி வரும்… முன்ன பட்டாசு வெடிக்கும்…

அதுக்குள்ள நூறு மொறைக்கு ஆச்சி சத்தம் போட்டுரும்…

“எலே அங்கு ஏளா, நீ எப்ப வருத?”

ஆச்சிக்கு அம்புட்டு சத்தம் தொண்டைக்கட்டுல. சேக்காளிக சிரிப்பானுக.

அத்தோட விடும்னா நெனைச்சீக? ம்ஹும்… அங்கன போற வர சனத்தை எல்லாம் கூப்பிட்டு,

“ஏளா, அங்கன எங்க அங்குராசு நிக்கான்… செத்த அவனை இங்கன உள்ள நவுட்டுறீகளா? தோ இங்கத்த வளவுக்குள்ள தான் நிக்கான்னு நெனைக்கேன்” தூதுவிட்டு கூப்பிட்டுக் கொள்ளும்.

எந்த நிமிசம் சுருளி மாமா வந்திச்சோ அம்புட்டும் மாறித்தான் போச்சு. மாமா ஆச்சியை பகைச்சதில்ல… ஆச்சி எம்புட்டு ஏசினாலும் அதெல்லாம் செவி ஏத்தாது.

அப்படிப்பட்ட மாமா வந்திருக்கிறது எனக்குள் அம்புட்டு சந்தோசமாய் இருந்தது.

வண்டியை வாசலில் நிறுத்தாட்டி விட்டு உள்ளே போனேன். மாமா அம்மாவுடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார். நான் வரும் அரவம் கேட்டதும் திரும்பிப் பார்த்தார். கண்களில் அம்புட்டு பாசம்.

“எலே மக்கா… எப்பிடில இருக்க?” அவர் தொண்டைக்குழியில் இருந்து வந்த பாசகளிப்பில் நான் நெக்குருகி நின்றேன்.

“வாங்க மாமா? எப்புடி இருக்கீங்க?” பக்கத்தில் போய் நின்றேன். அவர் ஏற இறங்கப் பார்த்தார். என் தோளில் அழுந்தத் தட்டினார். பழைய பலம் இல்லை, ஆனால் பாசம் மட்டுப்படாமல் இருந்தது.

“எலே… டவுனுக்கு வந்ததும் நம்ம பேச்சை மறந்துட்டீகலோ…'” அவர் கேட்க கூச்சமாக சிரித்தேன்.

“எங்கன மாமா அதெல்லாம் மறக்கறது… ஆனா ஆபிஸ்ல அதெல்லாம் பேச முடியாதுல்ல. இருந்தாலும் இங்கன வந்ததும் தன்னப்பாட்டுல நம்ம பேச்சுத் தான் வருது…” சிரித்தேன்.

பேச்சு நெடுந்தூரம் பயணப்பட்டது. ஊர், கோயில், சேக்காளிமார்கள், பங்காளி பகையாளி என்று அம்புட்டுப் பேர் கதையும் சொல்லி முடித்தானது. ஆனாலும் நான் எதிர்பார்த்த ஒரு கதையை மட்டும் மாமா இன்னை வரைக்கும் சொல்லவே இல்லை. இனி சொல்லுமா என்றும் தெரியவில்லை.

இரவு சாப்பிட்டு முடித்தோம். மாமாவுக்கு இந்த வெக்கை ஒத்துக் கொள்ளவில்லை.”ஒரே வேக்காடா இருக்கு’ என்று வெசனப்பட்டார். இங்கன அப்படித்தான் என்று அவரைச் சமாதானப்படுத்தி மொட்டை மாடிக்கு அழைத்துப் போனேன். இந்த ஊரே அவருக்கு அத்தனை பிடித்தமானதாய் இல்லை.வாரியல் எடுத்து அந்த இடம் முழுக்க சுத்தப்படுத்தினேன். இருவரும் விரிப்பை விரித்து உட்கார்ந்தோம்.

“சொல்லு மக்கா, எல்லாம் எப்பிடி போகுது?” அன்பாய் விசாரித்தார்.

“நெல்லையப்பர் தொணை எல்லாம் நல்லபடி இருக்கு மாமா. என்னை மறந்துட்டீகளா?” என்றேன். இந்தக் கேள்வி எனக்கே அபத்தமாய்த் தான் தெரிந்தது.

“மக்கா, மக்கா’ என்று வாய்கொள்ளாமல் அழைக்கும் மாமா, வயசு வித்தியாசம் இல்லாமல் அந்தநாளில் சேர்ந்து சுத்தையில்,

“அவனுக்கு நீயென்ன பிரிமனையாவே” என்று கேட்டு ஆச்சி நைய புடைத்த கதையெல்லாம் இருக்கையிலே, இந்த கேள்வி அபத்தம் தான். ஆனாலும் மாமாவைப் பார்த்தே இருபது வருசத்துக்கு மேல் ஆகிறது.

“மாமா, ஊருல எல்லாம் சவுகரியம் தானே…?”

“என்ன கொறைவே எல்லாருக்கும்? சிறப்பா இருக்காக எல்லாரும். நாந்தேன்…” மாமா எதையோ சொல்ல நினைத்து வாய் மூடிக் கொண்டார்.

பேச்சு எங்கெங்கோ சுத்தியது. இம்புட்டு நாக்கழிச்சு மாமா எதுக்கு வந்திருக்கிறார்? என்ற யோசனை எனக்கும் இல்லாமல் இல்லை… ஆனால் எப்பிடி கேட்க முடியும்? அவரைப் பார்த்ததே சந்தோசம் தான்.

“ஏன் அங்கு, இங்கன ஆத்து மீனெல்லாம் கெடைகாதம்ல, தெரிஞ்சிருந்தா உனக்கு கெழுத்தி மீன் குழம்பாக்கி கொண்டாந்து இருப்பேன்” மாமா விசனப்பட நான் துடித்துப் போய் பார்த்தேன்… கண்களில் நீர் துளித்தது.

“இன்னும் மாமா அது எதையும் மறக்கத்தான் இல்லை…”

“என்னவே அப்படி பாக்குறவன்? எல்லாம் மறந்துட்டியாக்கும்?” சிரித்தார்.

“நீரும் மறக்கல எதையும்…” நான் கேட்க இப்போது மாமாவின் கடைவாயில் ஒரு புன்னகை பூத்தது. ஆனால் அது சந்தோசத்தில் பூத்தது போல் இல்லை. அதுக்கான காரணம் எனக்கு விளங்காமலும் இல்லை… மாமா படுத்துக் கொண்டு உச்சாணி நெலாவை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார். அந்த நெனைப்புக்கு பெறகு என்னால் அம்புட்டு இயல்பாய் இருக்க முடியவில்லை.

தாமிரபரணி கரைக்கு நித்தமும் மாமா சைக்கிள் மிதிக்கும். பின்னாடி உட்கார்ந்து வரும் என்மேல் ஒத்தைக் கண்ணும் பாதையில் ஒத்தக் கண்ணும் வீசிக் கொண்டுதான் சைக்கிள் மிதிக்கும்.

“ஏலே மக்கா, நீ தன்னபாட்டுக்கு உள்ளங்காலை உள்ளார விட்டுடாதலே… பொறத்தால. உங்க ஆச்சி என் செல்லையைத் திருப்பிப்புடும்…” முன்பக்கம் இருந்து மாமா பேசுவது காத்தோடு சண்டைபோட்டு என் செவிக்கு வந்து சேரும். பொறத்தால் இருந்து நான் மாமா வயித்தைக் கட்டிக் கொள்வேன். அவர் மேல் சின்ன வெக்காட்டு நாத்தம் கூட வீசாது. அதுதான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

தாமிரபரணி கரையைத் தாண்டிய சின்ன வளவில் வண்டியைக் கொண்டு சாத்திவிட்டு மாமா கொஞ்ச தொலைவில் உள்ள அங்கு காத்திருக்கும். எனக்கு காத்திருந்து காத்திருந்து சலிப்பு தட்டின நேரத்தில் தான், சின்னதாய் மல்லிகைப்பூ வாசனை வீசும்… அதைத் தொட்டு சின்ன சலங்கைச்சத்தம்… நானும் மாமாவைப் போல ஆவலாய் திரும்பிப் பார்ப்பேன்.

எண்ணெய் சிக்கோடு சமையல் கட்டில் அல்லாடும் அம்மாவையும், சின்னம்மா, பெரியம்மா மார்களையும் சிக்குபிடித்த தலையை அவிழ்த்து முடிய நேரமெத்த அத்தாச்சிகளையும் மட்டுமே பார்த்து பழகிய கண்களுக்கு அந்தப் பெண், தேவதையாய்த் தான் தெரிவாள்.

அவுகளைப் பார்த்ததும் மாமா முகத்தில் பூ பூக்கும். என்னை சைக்கிளில் இருத்தாட்டி விட்டு, இருவரும் ஒத்தை கல் மண்டபத்தில் கொஞ்சம் உட்கார்ந்து பேசுவார்கள். நான் அதையெல்லாம் கவனிக்க மாட்டேன். மாமா வரும்போது எனக்கு கடலை மிட்டாயும் சீனி பரிப்பியும் பொட்டலம் வாங்கி தந்திருக்கும். சைக்கிள் கேரியரில் உட்கார்ந்து முன்பக்கம் வளைவில் கால்களை பின்னிக் கொண்டு நான் தன்னப்பாட்டுக்கு சாப்பிட்டுக் கொண்டு இருப்பேன்.

மாமாவுக்கு பேச்சு பேச்சாக இருந்தாலும், நான் கீழே விழுந்துவிடுவேனோ என்ற கவனமும் இருக்கும். அடிக்கடி என்னை திரும்பி பார்த்துக் கொள்ளும். எனக்கு மாமாவிடம் அதுதான் ரொம்பப் பிடிக்கும்.

வாரத்தில் ஒரு நாளாவது அவுகளை பார்க்க மாமா வருவார், என்னையும் சேர்த்துக் கொண்டு. ஒருநாள் மாமாவிடம் விசாரித்தேன், ” மாமா, அவுக யாரு?” கையில் இருந்த பொரிவிளங்காயை கடித்தபடி. மாமாவின் கருத்த முகத்தில் வெட்கச் சிவப்பின் மினுமினுப்பு.

“ம்ம்… மக்கா யார்னு சொன்னா உனக்கு புரியுமா? உனக்கு அத்தையாக போறவீக… பேரு பாக்கியம்… நல்லாருக்காகளா?” என்னைப் பார்த்து கேட்க எனக்கு வெட்கம் வந்து அப்பிக் கொண்டது முகத்தில்.

எனக்கு அந்த பாக்கியம் அத்தையை ரொம்பப் பிடித்தது. அவுகளுக்கு ஒரு சாப்பாட்டுக் கடை இருந்தது கூட்டு ரோட்டில். சிலநேரம் அங்கேதான் மாமா என்னை அழைத்துப் போகும். மத்தியான நேரத்தில், பச்சரிசிச் சோறும், ஆத்துமீன் வெஞ்சனமும் அங்கே அம்சமாய் இருக்கும். மாமா போனால் பாக்கியம் அத்தை ஆளை அனுப்பி தாராளமாய் கவனிக்கச் சொல்லும்.

சுடச்சுட சோத்தைப் போட்டு, அதில் செக்கச் சிவந்த எண்ணெய் மிதக்கும் வெஞ்சனத்தை ஊத்தும் போதே வயிறு கியா கியான்னு கத்தும். வீட்டில் ஆளுங்க அதிகம் என்பதால், அள்ளிக்கட்டி மீன் வாங்கினாலும், வேளைக்கு ஒரு துண்டு கூட கிடைக்காது. அதனால் அடிக்கடி மாமா வைக்கும் இந்த மீன் விருந்து எனக்கு அம்புட்டு இஷ்டம்… மாமாவுக்கும் எனக்கும் தனித்தனி வட்டில் இருக்கும். ஆனாலும், மாமா தன் வட்டிலில் இருப்பதையும் எனக்கேதான் ஊட்டி விடும்.

“எலா, நல்லா சாப்பிடுலா… வளர புள்ளை இல்ல…” என்றபடி அதிகம் முள் இருக்கும் ஆத்துமீனை கையில் பிட்டு, ஒவ்வொரு முள்ளாய் உருவி வீசி, சின்ன முள்ளையும் ஆய்ந்து எடுத்து, அப்பயும் மனசு மேவாமல் கட்டை விரலால் அழுத்தி நெருடிப் பார்த்து எனக்கு ஊட்டிவிடும். காரம் கூடத்தான் இருக்கும். கோயில்பட்டி மிளகாய் போட்டு இருப்பாகளோ என்னவோ…

காரம் மிகுத்தியானதாலோ என்னவோ எனக்கு பொறைக்கு ஏறும்… மாமா பைய தலையில் தட்டி ஆசுவாசப்படுத்தி லோட்டாவில் இருந்த தண்ணீரை எடுத்து எனக்குப் புகட்டிவிடும்.

அந்த கரிசனத்தின் மரியாதையும் மதிப்பும் அதைக் கடந்து வந்த இந்த நாளில் தான் அதிகம் தெரிகிறது. இத்தனை நேசமான மனசை இப்போது பார்க்க முடியுமா இந்த உலகத்தில்?

மாமாவுக்கும் பாக்கியத்திற்கும் இருந்த சினேகிதம் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. அதற்கு சாட்சியாய் நானும் இருந்து கொண்டே தான் இருந்தேன். ஒரு நாளும் நான் இல்லாமல் மாமா பாக்கியம் அத்தையைப் பார்க்க போனதில்லை… அது ஏனோ மௌனச் சாட்சியாய் என்னை மாமா நிறுத்தி வைத்திருந்தது அந்த நாளில்… காலப் பொறப்பாடு எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டு இருந்தது. மாமாவைக் கண்டாலே பம்படத்தை ஆட்டி கோவமாய் முகம் திருப்பும் ஆச்சியின் கோவம் மட்டும் மாறவேயில்லை. பலநேரம்,

“… வக்கத்த பய.., சோத்துக்கு வீங்கின பய…” என்ற வார்த்தைகளை மாமாவின் காதுபட பேசி ஏசும் ஆச்சி. ஆனாலும் மாமா அதைக் கண்டு கொள்ளமாட்டார். அதுக்கு காரணம் பாக்கியம் அத்தை என்றுகூட எனக்கு பொறத்தால் ஒரு நாள் தெரிந்தது.

அது ஒரு வெள்ளிக் கெழமை… அது மட்டும் தான் எனக்கு நெனப்பில் இருக்கிறது… வருசம் தேதி நெனப்பில் இல்லை… வீட்டில் பெரிய பெரச்சனை… அது மாமா சம்பந்தப்பட்டது என்று எனக்கு அப்போது வெளங்கவில்லை. வீட்டில் பெரும் வாக்குவாதம். மாமா கம்பித் திண்ணையில் தலை குனிந்து உட்கார்ந்து கிடந்தார். தேவை இல்லாமல் எனக்கும் நாலு சாத்து கிடைத்தது.

“பன்னிக்குட்டியோட சேர்ந்த கன்னுக்குட்டியும் கொட்டு போகுமாம்ல. இந்த களவாணிப்பய கூட சேர்ந்து என் பேரப்புள்ளையும் கெட்டழிஞ்சு போயிட்டானுவல… இங்கனக்குள்ள இனி இந்த செத்த மூதியைப் பார்த்தேன் நான் மனுசியா இருக்கமாட்டேன்” ஆச்சியின் இரைச்சல் தெருவளைவைத் தாண்டி கேட்டது.

ஊருக்கு விசயத்தைச் சொல்லி மாமாவின் அம்மா அப்பாவும் வரவழைக்கப்பட்டு இருந்தார்கள். பாவம் அம்மாதான் இருதலைக் கொள்ளி எறும்பாய் நின்னாள்.

“என்ன காந்திமதி இதெல்லாம்? இந்த வெளங்காப்பய அங்கன கையையும் மெய்யையும் வச்சு சும்மா கெடக்க மறுக்கான்னு தான் இங்கன கங்காணி வேலைக்கு அனுப்பி வச்சோம். இங்க வந்தும் வம்படை பண்ணி நிக்கானே… இனி இவனை என்னதான் செய்ய…” மாமாவைப் பெத்த ஆச்சி அழுதது. அம்மா கையைப் பிசைந்தது. கண்ணில் கண்ணீர் மளுக்கியது அம்மாவுக்கு.

“உம்…ம்… நல்லா கேளுவே இப்ப போய். அதுவும் ஆளு அம்பு தெரியாமயில போய் கையை வச்சிருக்கான். இங்கன உங்க அண்ணாச்சிக்கு எம்புட்டு பேரு? அத்தனையும் இந்த ஒத்தை பயலால உட்கார்ந்து போச்சுவே… அவுக என்ன ஆளுக… நாம யென்னா ஆளுக…? சேருமா எல்லாம். இந்தப் பயலால ஊருக்குள்ள சண்டை சச்சரவு. சாதிப் பிரச்னை வேற. எனக்கென்ன பொழப்பத்தா கெடக்கு… இவனை இங்கன உட்கார்த்தி வச்சு வடிச்சுக் கொட்டிட்டு இத்தனையும் சமாளிக்க…”

சொளவில் கிடந்த கம்பை நேம்பிக் கொண்டே ஆச்சி பேசிய பேச்சு அத்தனையும் இன்னும் பசுமையாய் நினைப்பில் இருக்கிறது.

அதுக்கப்புறம் நிகழ்ந்தது எல்லாம் புரிந்து கொள்ளும் வயசு அன்னைக்கு எனக்கில்லை… அது புரிகிற வயசில் ஏனோ மத்தவர்களைப் போல மாமா மேல் கோவம் வரவில்லை… மாறாய் அவர் மீதான அன்புதான் அதிகப்பட்டுப் போனது.

“ஏலே இப்பிடி செஞ்சா? இங்கன எனக்கு என்ன மரியாதைன்னு நீயும் இப்பிடி செஞ்சு தொலைச்சவ? இப்பயே பொறவாசல்ல கெட்டகே… இனி இந்த வீட்டு சனம் எல்லாம் எம்மை துளிக்காசுக்கு மதியாதுக…” அம்மாவின் அழுகைதான் மாமாவை உலுக்கி இருக்க வேண்டும்.

செத்தநேரம் அங்கனயே உட்காந்து கெடந்தது. பெறவு எழுந்து நின்னு தான் நடந்துகிட்டதுக்கு எல்லார்கிட்டயும் மாப்பு கேட்டுச்சு. விடுவிடுன்னு வெளிய வந்துச்சு… சைக்கிளை எடுத்துகிட்டு எங்கேயோ கௌம்ப, நான் மாமாவைக் கூப்பிட்டேன். கண்ணுல தண்ணியோட என்னையே பார்த்துகிட்டு நின்னுச்சு.

“வேணாம் மக்கா, நீ உள்ள போ. மாமா தொலைவு போறேன்” மாமா சொன்னது பொய்யுன்னு எனக்குத் தெரியும். மாமா பாக்கியம் அத்தையை பார்க்கத்தான் போகுதுன்னு எனக்கு புரிஞ்சது. இம்புட்டு நாளில அதுதான் மாமா என்னை கைகொள்ளாம போனது. மாமா வீடு திரும்ப ரெம்ப நேரமாச்சு. அம்மாதான் பொறவாசலை பக்கத்துலயே காத்துட்டு இருந்துச்சு. எனக்கும் தூக்கம் வரல. மனசுக்குள்ள ஏதோ ஒரு அச்சம். இதால ஊருக்குள்ள ஏதும் பெரச்சனை வருமான்னும் ஒரு கவலை மனசுக்குள்ள அரிச்சது.

“என்னவே ஆச்சு…?” அம்மாவின் குரல் கேட்டது. செத்த நேரம் மாமா மௌனமாக இருப்பது தெரிந்தது. பெறகு மாமாவின் விசும்பல் சத்தம் கேட்டது. எனக்கு பரிதவிப்பாய் இருந்தது. உடனே ஓடிப்போய் மாமாவின் கால்களைக் கட்டிக் கொள்ள மனசு தவித்தது. ஆனால் எல்லாத்தையும் கேட்டுக் கொண்டு படுத்திருந்த ஆச்சி என்னை இறுக்கிக் கொண்டு தன் கைப்பிடியில் வைத்திருந்தது. என்னால் அசைய முடியவில்லை.

“சொல்லிட்டேன்கா. உனக்கு ஒரு பெரச்சனையும் வராது… போதுமா… நான் கௌம்பட்டா?”

“சுருளி விடியட்டும் போலம்ல…” அம்மா பரிதவிப்பாய் சொன்னாள்.” என் வாழ்க்கையில ஏதுக்கா விடியலும் வெளக்கும்…நான் பொறப்படறேன்…”

மாமா உள்ளே வருவது துல்லியமாய் தெரிந்தது. உறங்குவதாய் பாசங்கு செய்து கொண்டு இருந்த ஆச்சியின் காலைத் தொட்டு ஒற்றிக் கொண்டு, என் கன்னத்தில் ஒரு முத்தம் இட்டுவிட்டு மாமா வெளியே போனார். எனக்குக் கதறி அழவேண்டும் போல் இருந்தது. என் ஆருயிர் தோழன்… எனக்குள் நட்பை அறிமுகப்படுத்திய நேசமிக சிநேகிதன்… அன்று போனவர் தான் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இன்னைக்குத் தான் பார்க்கிறேன். இடையில் ஆச்சி இறந்தபோது ஒருமுறை ஊருக்கு வந்திருந்தார். அப்போது நான் கல்லூரிக்குச் சென்று கொண்டு இருந்தேன். ஆனாலும் என் மாமாவின் அன்பு துளிகூட குறையவில்லை. தூத்துக்குடியில் இருந்து வந்த சாலா எனக்கு புது அத்தையானார். அவுக கல்யாணத்துக்கு கூட ஆச்சி யாரையும் அனுப்பவில்லை. அம்மா மட்டும் தான் போய் வந்தது. அம்மா தான் சொன்னது சாலா அத்தை அழகாகவே இல்லை என்று. எனக்கு முகம் பார்க்காமலே அந்த சாலா அத்தையைப் பிடிக்காமல் போனது. எனக்கு அந்த பாக்கியத்தையே மாமா ஏன் கட்டிக் கொள்ளவில்லை என்று அழுகையாக வந்தது. எப்பயாச்சும் தாமிரபரணி கரையோரம் போகும் போது எங்கனயாச்சும் பாக்கியம் அத்தை தென்படுகிறதா என்று தேடிப் பார்க்கும் என் கண்கள். காலப்போக்கில் எல்லாம் மறந்து போனது. ஆச்சியும் தவறிப் போக, நான் படித்து முடித்து கல்யாணம் காட்சி முடித்து, சென்னைக்கு வர எல்லாம் இங்கே எந்திரத்தனமாக மாறிப் போனது. மாமா “பட் பட்’ என்று கொசு அடிக்கும் சத்தம் கேட்டுத்தான் கண் விழித்தேன். மாமா எழுந்து அமர்ந்து இருந்தார்.

“என்ன மாமா படுக்க முடியலயா?” என்றேன் சிரிப்பாக.

“ஆமாம் அங்கு… புது இடமில்ல அதுநாலு நாளுக்கு இப்படித்தேன் இருக்கும். பழகிட்டா எல்லாம் சரியாயிடும்…” மாமாவின் வார்த்தைகள் சுருக்கென தைத்தது.

“பழகினா எல்லாம் சரியாயிடுமா மாமா?” என்றேன் வருத்தமாக. மாமா நான் எதைக் கேட்குறேன் என்று புரிந்து கொண்டாரோ என்னவோ ஒரு நீண்ட பெருமூச்சைப் பிரசவித்தார்.

“அங்கு, அதுக்கு பேர்தேன் வாழ்க்கை…. மறதியும், தூக்கமும் தான் சாமி நமக்கு தந்த மாமருந்து. என்ன பல விசயங்களை மறந்தாத்தான் தூக்கமே வர்றேன்குது. எல்லாம் கடந்து போயிடும்யா” என்றார். அதில் ஆயிரம் அர்த்தம் இருந்தது.

“கடந்து போயிடும் மாமா, மறந்து போயிடுமா சொல்லுக?” அமைதியாக இருந்தார்.

“சாலாவுக்கும் எனக்கும் ஒத்தே வரலதான். மனசுக்குள்ள எனக்கு வெசனம் தான். இரண்டு புள்ளைங்களும் ஆகிருச்சு. கொஞ்சம் இடும்பு பிடிச்சவதான் அவுளும். அவுக அப்பா உப்பளக்காருங்கிற பெருமை. அப்புறம் எப்படியோ காலம் ஓடிருச்சு…” சிரித்தார்.

“ஏன் மாமா பெறகால நீங்க அவுகளைப் பார்க்கவே இல்லையா?” என்றேன் ஆவலாக.

“யாரை பாக்கியத்தையா?”

“ம்”

“இல்ல, பாக்கவும் விரும்பல. அது கண்ணியம் கெடயாதுல்ல… ஏதோ மனசுக்கு புடிச்சது பழகினோம்…. மத்தவுகளுக்கு புடிக்கல பிரிஞ்சுட்டோம். அதுக்கு பெறவாலயும் பொம்பளைப் புள்ளைய போய் பாக்கிறதும் பேசிறதும் கண்ணியம் இல்லை” மாமா சொன்னது அவர் மீதான மதிப்பை இரட்டிப்பாக்கியது.

“ஏன் மாமா, நான் ஒண்ணு கேட்டா பதில் சொல்லணும்” சிரித்தேன். மாமாவும் கூடச்சேர்ந்து சிரித்தார்.

“எலே மக்கா, இன்னைக்கு என்னவோ மாமாவை இத்தனை கேள்வி கேட்க? ஏதும் வில்லங்கம்மா?”

“இல்லயில்ல அந்தா நாள்ல அவுகளை பார்க்கப் போகும்போது என்னையும் சேர்த்துட்டு போவீகளோ, பொட்டலம் பொட்டலாம தீனி வேற வாங்கித் தருவீக. எதுக்கு நான்? கட்டிச் சோத்துல பெருச்சாளியாட்டம்?” நான் கேட்க மாமா இடி இடியென சிரித்தார்.

“அட மக்கா எம்புட்டு வெனயகாரன்டா நீ. அம்புட்டையும் நெனப்புல வச்சிட்டு மாமனை கேள்வி கேட்றியோ…” என்றபடி வாஞ்சையாய் முதுகு தடவினார்.

“அது வேற ஒண்ணுமில்லலா, அன்னைக்கு நம்ம வயசு அப்பிடி, பொம்பளைப் புள்ளையைப் பார்க்கப் போறோம், ஏதும் எக்குதப்பா நடந்துட கூடாதில்ல… அதான் சாமி சாட்சி மாதிரி உன்னை கொண்டு போனது… குழந்தையும் தெய்வமும் ஒண்ணுதாம்ல…” அவர் வெள்ளந்தியாய் சொல்ல, அவரைக் கட்டிக் கொண்டேன். அவருடைய உண்மையான நேசம் ஜெயிக்காமல் போனதில் எனக்கும் உள்ளூர பெரும் வருத்தம்தான். காலையில் எழுந்ததும் மாமா வந்திருக்கும் நோக்கம் குறித்து அம்மாவிடம் விசாரித்தேன்.

“தெரியல” என்று உதடு பிதுக்கினாள். ஆனால் ஏதோ காரணம் இருக்கத்தான் வேணும்… இல்லாவிட்டால் மாமா இத்தனை தூரம் வருகிற ஆள் இல்லை… காலையில் எழுந்ததும் மாமா என்னிடம் வந்து நின்றார்.

“அங்கு, இங்க அடையார்னு இருக்காமே… அங்க எப்படிப் போறது? பஸ்ஸு இருக்கா இல்ல ஏதும் ஆட்டோல தான் போவணுமா?” சட்டையை மாட்டிக் கெண்டே கேட்டார்.

“எதுக்கு?” என்பதுபோல் புருவம் சுருக்கிப் பார்த்தேன். மாமாவின் முகம் நொடியில் சுருங்கிப் போனது.

“இல்ல அங்கு, உன் அத்தை சாலாக்கு கொஞ்சம் முடியல. பயாப்சியோ என்னமோ சொல்றாக சோதனை, அது செஞ்சு பார்த்ததுல புத்துநோய்ன்னு வந்திடுச்சு…” பேசிக் கொண்டு இருந்த மாமா சட்டென்று உடைந்து போனார். கைத்துண்டால் வாய்பொத்தி அவர் விசும்பிய விசும்பலில் அவருக்குள் உறைந்து கிடந்த நேசம் புரிந்தது. நான் என்ன ஆறுதல் சொல்வது என்று தோணாமல் அமைதியாக நின்றேன். ஆனால் மனசுக்குள் ஒரு தடவை கூட பார்த்தே இராத அத்தையின் முகம் நிழலாய் வந்தது. எனக்கேனோ பாக்கியத்தை தவிர யாரையும் மாமாவின் அன்பிற்கு பாத்திரமானவர்களாய் பார்க்க முடியவில்லை.

“பயப்படாதீங்க மாமா…நெல்லையப்பர் துணையா இருப்பாரு. இருங்க நான் லீவு போட்டுட்டு கூட வர்றேன்…” நான் சொல்ல மாமா கைநீட்டித் தடுத்தார்.

“இல்ல மக்கா, நான் முதல்ல போய் ஒரு நடை பார்த்து எல்லாம் விசாரிச்சுட்டு வர்றேன்… அதுக்கு பொறவாலதான் அவளைக் கூட்டி வரணும். அப்போ நீ வந்தா போதும். இப்போ என்னை பஸ் ஸ்டாண்டுல இறக்கி விட்ரு. அது போதும்…” மாமா எறிக் கொள்ள வண்டியைச் செலுத்தினேன். மனசு ஏனோ பாரமாக இருந்தது. பஸ் ஸ்டாப்பிக்கிற்கு வந்தோம். மாமா எந்த பஸ் என்று விசாரித்துக் கொண்டார். இன்னும் பஸ்ûஸக் காணோம். அவரை விட்டுவிட்டுப் போக மனசு ஒப்பவில்லை.

“நீ போய்யா நான் பார்த்துக்கேறேன்… உனக்கு நேரம் ஆகுதுல…”

“இருக்கட்டும் மாமா, உங்களை இப்படி விட்டுட்டு எப்படி போக? ஏன் மாமா தனியா புறப்பிட்டு வந்திருக்கீக…புள்ளைங்க யாரானும் துணைக்கு அழைச்சுட்டு வந்திருக்கலாம்ல…” என்றேன் ஆதங்கமாக.

“எங்க மக்கா, எல்லாரும் அவுக அவுகளுக்கு சோலி இருக்கு. வயசானா சீக்கு வர்றதுதேன்னு நெனைக்காக எல்லாரும். ஆனா என்னால அப்படி இருக்க முடியுமா? அவதான் எனக்கு எல்லாமும்” சொன்ன மாமாவை வியப்பாய் பார்த்தேன். என் பார்வையின் பொருள் அவருக்கு நன்றாகப் புரிந்தது. லேசாய் புன்னகைத்தார்.

“எல்லாருக்கும் வாழ்க்கை துவக்கம் சிறப்பா இருக்கும்ணு சொல்லவெல்லாம் முடியாது மக்கா… ஆனா நாளாக ஆக எல்லாம் மாறணும். அப்பத்தான் நாம மனுசனா பொறந்ததுக்கே அர்த்தம். என்னத்தலா கொண்டு போகப் போறோம்? இருக்கும் தன்னிக்கும் ஒருத்தருக்கு ஒருத்தர் உண்மையா இருந்துட்டு போயிடணும்… இப்போ சாலாவை விட்டு என்னால இங்கன அங்கன நகர முடியல… ஆயிரம் புள்ளைங்க இருந்தாலும், ஆயுசுக்கும் உத்த உறவு இல்லையா?” மாமாவின் நா தளதளத்தது. என்னையும் அறியாமல் கண்ணீர் துளித்தது.

“ஏன் அங்கு புத்துநோய்யில இருந்து இப்பெல்லாம் காப்பாத்த முடியும்னு சொல்றாக நிசமா?” என்றார் அப்பாவியாக.

“முடியும் மாமா, பழைய மாதிரி இல்ல இப்ப.” என்றேன். அந்த பதில் அவருக்கு ஆறுதலாக இருந்திருக்கும். முகத்தில் வெளிச்சம். செத்தநேரத்திற்கு பெறகாலே அவரே சொன்னார்.

“மக்கா, எல்லாரும் பால் மாதிரி வாழணும்யா. எதுவா இருந்தாலும் உண்மையா, மத்தவுகளுக்கு உபயோகமா…பால் தயிரானாலும்… தயிர், மோரானாலும்… மோர் வெண்ணெய் நெய்னு உருவு மாறினாலும், யாருக்கோ எங்கேயோ உபயோகமாத்தேன் இருக்கும்… குணமாறி விசமகாது அங்கு. என்கூட இருந்தது பாக்கியமோ, சாலாவோ இல்ல வேற யாரோ… எல்லாருக்கும் நான் உண்மையாத் தான் இருந்திருக்கேன்… இன்னும் அப்படித்தான் இருப்பேன்…” அவர்கூறி முடிக்கவும் பஸ் வரவும் சரியாக இருக்க அவரைஏற்றி அனுப்பினேன்.

புழுதி இரைத்து பஸ் நகர்ந்தது. மனசுக்குள் இனம் தெரியாத உணர்வு… அவர்மீது, அன்பு இன்னும் வீசை வீசையாக பெருக்கெடுத்தது. அவர் மனசில் அடிநாதத்தில் இருக்கும் கரிசல் மண்ணைப் போன்ற நேசம் அவரை இன்னும் ஒவ்வொரு நொடியும் உயிர்பித்துக் கொண்டு இருப்பது புரிந்தது. இதுவரை பார்த்தே இராத சாலா அத்தையின் மீது எனக்கும் அன்பு உண்டானது தன்னாலேயே.

-ஜனவரி 2020

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *