கடச்சனேந்தல் கமலா மிகப்பெரிய ஜோதிடர். உலகின் பிரபல ஜோதிடப் பெண்களில் முதன்மையானவர். அவர் பிறந்த ஊர் மதுரைக்கும் அழகர்கோயிலுக்கும் இடைப்பட்ட சிறிய ஊர் கடச்சனேந்தல்.
அவருக்கு தற்போது வயது 90. பிறந்த ஊர்தான் கடச்சனேந்தல். அனால் சிறுவயதில் சில வருடங்கள் அங்கு இருந்ததுடன் சரி. அதன்பிறகு பெரும்பாலும் சென்னை வாசம். ஜோதிடம் கற்றுத்தேர்ந்த இருபத்தியைந்தாவது வயதிலிருந்து அமேரிக்கா, ஜெர்மனி, ப்ரான்ஸ் என்று கடந்த அறுபத்தைந்து வருடங்களாக உலகம் முழுவதும் அடிக்கடி சுற்றிக்கொண்டு இருப்பவர். உலகின் எந்த மூலையில் ஜோதிட மாநாடு நடைபெற்றாலும், கமலாவுக்கு கண்டிப்பாக அழைப்பு உண்டு.
கமலாவின் திறமையான எதிர்காலக் கணிப்பு மிகவும் பாராட்டப் படுகின்ற ஒன்று. உலகில் உள்ள மிகப் பெரிய அரசியல் தலைவர்கள்; பிரபல ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் நடிகர்கள்; விளையாட்டு வீரர்கள் என கமலாவைச் சந்தித்து தங்களது எதிர்காலக் கணிப்பை கேட்டுப் பெறுபவர்கள் அதிகம்.
பிரபலங்களால் மட்டுமே கமலாவை அணுக முடியும். ஏனென்றால் ஒருமுறை கமலாவை சந்தித்தால் குறைந்தது மூன்று லட்சம் ப்ரொபஷனல் சார்ஜ் தரவேண்டும். அந்தச் சந்திப்புக்கும், ஒரு லட்சம் முன்பணம் கட்டிவிட்டு மூன்று முதல் ஆறுமாதங்கள் காத்திருக்க வேண்டும்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி போன்றவர்கள் கமலாவின் நிரந்தரக் கஸ்டமர்களாக இருந்தவர்கள். ஒருநாளைக்கு காலை ஐந்து பேர்; மதியம் ஐந்து பேர் என மொத்தம் பத்துபேரை மட்டும்தான் கமலா சந்திப்பார். பெரும்பாலும் அனைவரையும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில்தான் சந்திப்பார்.
கமலாவின் ஜோதிடத்தில் பூசிமெழுகும் சங்கதிகளே கிடையாது. முகத்தில் அடித்தமாதிரி நடந்தவைகளை, நடக்கப் போகிறவைகளை அப்பட்டமாக சொல்லிவிடுவார். .
கமலாவின் கணிப்புகள் மிகவும் ஆராய்ச்சி பூர்வமானது; கணித சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டது; நாள், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களைக் கொண்டது.
பாஸ்கராச்சாரியார், வராகமிகிரர், ஆரியபட்டர் போன்ற பிரபலங்கள் எழுதிய ஜோஸ்யம் சம்பந்தப்பட்ட ஏகப்பட்ட ஏடுகள் கமலாவிடம் இருக்கிறது. அந்த ஏடுகளை தேவையானபோது கமலா ரெபரன்ஸ் செய்து கொள்வதால் அவரது கணிப்பு மிகத் துல்லியமாக இருக்கும். ஜோதிடத்தில் கமலா பத்மஸ்ரீ பட்டம் இந்திய ஜனாதிபதியிடமிருந்து வாங்கியவர்.
ஒருவரின் இறப்பு பற்றி கமலா நாள் குறித்து தரும் அதிசயத்தினால் அவர் புகழின் உச்சிக்கே சென்றார் என்றால் அது மிகையல்ல. மிகப் பெரிய செல்வந்தர்கள் கமலாவைச் சந்தித்துவிட்டு வந்ததும் உயில் எழுதி வைத்துவிடுவார்கள். இறப்பதற்கு முந்தைய பல நாட்களாக பயணம் எதுவும் மேற்கொள்ளாமல் குடும்பத்துடனேயே தங்கி விடுவார்கள். இன்னும்பலர் தான் செய்த பாவங்களுக்கும், அநியாயங்களுக்கும் சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பும் கேட்டுவிடுவார்கள்.
இப்படியாக சகல சக்திகளையும் படைத்த கமலா, தற்போது மூப்பினால் சென்னை அடையாறில் உள்ள தன் வீட்டில் மரணப்படுக்கையில் இருக்கிறார். அடுத்த மாதம், ஜூலை பதினைந்தாம் தேதி சனிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு தாம் இறந்துவிடுவோம் என்று கணித்தும் விட்டார் கமலா. இறப்பு குறித்து அவருக்கு வருத்தம் எதுவும் கிடையாது என்றாலும், தான் அடுத்த பிறவியில் வராக அவதாரத்தில் பன்றியாகப் பிறக்கப் போகிறோம் என்பது தெரியவந்ததும் அவருக்கு கவலை மேலோங்கியது.
அது மட்டுமல்லாமல் பன்றியாக தான் எங்கே பிறக்கப் போகிறோம் என்பதும் அவர் ஞானக் கண்ணில் தெரிந்தது. சென்னையின் பாலவாக்கம் கடற்கரையை ஒட்டி உள்ள ஒரு சேரியில் புதன்கிழமை, செப்டம்பர் பதிமூன்றாம் தேதி காலை எட்டு மணிக்கு ஒரு பன்றிக்கு மகளாகப் பிறக்கப் போகிற உண்மை அவருக்கு புலப்பட்டது.
தான் இத்தனை வருடங்களாக அடுத்தவர்களுக்கு ஜோதிடம் சொல்லி பிரபலமடைந்து என்ன பயன்? தான் பன்றியாகப் பிறக்கப் போவதை தன்னால் தடுத்து நிறுத்த முடியாதே! என்கிற கவலை கமலாவை மிகவும் வாட்டியது.
கமலா வெகுநேரம் யோசித்ததில் பளிச்சென்று ஒரு எண்ணம் தோன்றியது. அதை செயல்படுத்த உடனடியாக தன் ஓரேமகன் பார்த்திபனை அழைத்தார்.
“இதபாரு பார்த்தி, நான் சொல்வதை மிகக் கவனமாகக் கேள். நான் வருகிற ஜூலை பதினைந்தாம் தேதி, சனிக்கிழமை மரித்துப் போவேன். அதைத் தொடர்ந்து இதேவருடம் புதன்கிழமை, செப்டம்பர் பதிமூன்றாம் தேதியன்று பாலவாக்கம் சேரியில் ஒரு பன்றிக்கு குட்டியாகப் பிறந்துவிடுவேன். ஆனால் இந்தப் பன்றி வாழ்க்கை எனக்கு அறவே பிடிக்கவில்லை. அது எனக்கு ரொம்ப நாட்கள் வேண்டாம். ஆகையால் நான் பிறந்த ஒருவாரத்தில் என்னை ஒரு உலக்கையால் அடித்துக் கொன்றுவிடு மகனே.
“நீ என்னைக் கொன்றவுடன், பன்றியின் அடுத்த பிறவிக்கு நான் போய்விடுவேன். இப்பவே நம்முடைய வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் காரை எடு. என்னுடன் பாலவாக்கம் சேரிக்கு வா. என்னைப் பெற்று எடுக்கப்போகும் என் அம்மா பன்றி என்னுடன் சேர்த்து நான்கு குட்டிகளை ஈனுவாள். அவளை உனக்கு இப்பவே அடையாளம் காட்டுகிறேன். அதன் ஓனர் வீட்டையும் காட்டுகிறேன். நான் பிறந்த சில நாட்களில் நீ அங்கு வரும்போது, உன்னை அடையாளம் கண்டுகொண்டு நான் மட்டும் உன்னிடம் துள்ளி ஓடி வருவேன். என்னை உடனே அடித்துக் கொன்றுவிடு. புரிந்ததா?”
“அம்மா, நீ பன்றிக்கு அடுத்த பிறவியில் பன்றியைவிடக் கேவலமான பிறவியாகப் பிறந்து விட்டால்?”
“அப்படி நடக்காது என்று நம்புவோம் மகனே….உடனே கிளம்பு.”
அவர்கள் இருவரும் பாலவாக்கம் சேரிக்கு ரோல்ஸ் ராய்ஸில் பயணித்தார்கள்.
ஜூலை பதினைந்தாம் தேதி உலகப்புகழ் பெற்ற கடச்சனேந்தல் கமலா இயற்கை எய்தினாள். பல பிரபலங்கள் சென்னைக்கு பறந்துவந்து இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
செப்டம்பர் பதிமூன்றாம் தேதி கமலா பன்றிக்குட்டியாகப் பிறந்தாள்.
கமலாவின் மகன் பார்த்திபன் தன் அம்மாவுக்கு செய்துகொடுத்த வாக்குறுதியை செயல் படுத்த, அடுத்த சில தினங்களில் தன் சிறிய மாருதி காரில் உலக்கையை எடுத்துக்கொண்டு சென்றான்.
பன்றியின் ஓனர் வீட்டை நெருங்குகையில் இவனை அடையாளம் கண்டுகொண்ட அந்தப் பன்றிக்குட்டி இவனிடம் பதட்டத்துடன் ஓடி வந்தது.
“நில்லு, நில்லு பார்த்தி….அவசரப்படாதே, என்னை அடித்துக் கொன்றுவிடாதே. நான் வாழ வேண்டும்.”
“ஏன் என்ன ஆச்சு? உனக்கு எதற்கு இந்தக் கேவலமான பன்றி வாழ்க்கை?”
“உனக்கு வேண்டுமானால் இது மிகக் கேவலமாகத் தெரியலாம். ஆனால் எனக்கு இது மிகவும் சுகமாக இருக்கிறது. பிடித்தும் இருக்கிறது. இந்தச் சேறு, சாக்கடை, சகதி, மனிதக் கழிவுகள் இதையல்லாம் நான் அனுபவிக்க விரும்புகிறேன். பிறவி என்பது புழுவானாலும், பாம்பானாலும், பன்றியானாலும் அதுஅதுக்கு அதன் வாழ்க்கை மிக முக்கியமானது. இந்த உண்மையை நான் இப்போதுதான் உணர்ந்துகொண்டேன். அதனால் நீ திரும்பிப் போய்விடு. இனி இங்கு வராதே. உனக்கு இது இப்ப புரியாது.”
“……………………..”
“நீ என் ஒரேமகன். ஒன்று மட்டும் கடைசியாக உனக்குச் சொல்லிக் கொள்கிறேன். பிறவிகளில் மனிதப் பிறவிதான் மிக மேன்மையானது. அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிதிலும் அரிது என்று ஒளவையார் அன்றே சொன்னார். அவர் சொன்னது உண்மையான, உன்னதமான கூற்று.
“உன்னிடம் கோடி கோடியாகப் பணம் இருக்கிறது. கணக்கிலடங்கா சொத்துக்கள் இருக்கிறது. அதனால் நீ இறப்பதற்குள் நல்ல காரியங்கள், தர்மங்கள், புண்ணியங்கள் ஆகியவற்றை நிறையச் செய்துவிடு. உன் தாயார் பெயரில் ஒரு ட்ரஸ்ட் உடனே ஏற்படுத்து. அதன் மூலமாக ஏழைகளுக்கும், நலிந்தோர்க்கும் ஏகப்பட்ட உதவிகள் செய். ஏழைக் குழந்தைகளின் படிப்புச் செலவை ஏற்றுக்கொள்; அநாதை இல்லங்களை தத்து எடுத்துக்கொள்; ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்துவை. ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஐந்துகோடியை நம் ட்ரஸ்ட் மூலமாக எடுத்துச் செலவழி. சக மனிதர்களை அன்பாகவும், மரியாதையுடனும் நடத்து; நேர்மையாக இரு, தைரியமாக செயல்படு….”
“சரிம்மா, கண்டிப்பாக அப்படியே செய்கிறேன்.”
“நல்லது. சரி சரி நேரமாச்சு… அதோ என் அம்மா வருகிறாள்.”
ஓடிப்போய் தன் தாயின் மடியை முட்டியது.