கஞ்சத்தனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 8, 2020
பார்வையிட்டோர்: 5,184 
 
 

(இதற்கு முந்தைய ‘வட்டிப் பணம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது).

மச்சக்காளையிடம் வேற ஒரு சுபாவமும் பரவலாக வளர்ந்து விட்டிருந்தது. பூத்தும் மணம் பரப்பிக்கொண்டிருந்த அந்த சுபாவம், வடிகட்டின கஞ்சத்தனம்!

மனசு வந்து யாருக்கும் மச்சக்காளை ஒரு பைசா தரமாட்டார். வீட்டில் அவருடைய பிள்ளைகளுக்கு, ஒருநாளும் நல்ல உடையணிந்து கொள்கிற மாதிரி எந்த விலை உயர்ந்த துணியும் வாங்கித் தரமாட்டார். இருப்பதிலேயே ரொம்ப மட்டமான விலை குறைச்சலான துணிதான் வாங்கித் தருவார். அவர் அதைவிட மட்டமான துணியாகப் பார்த்து வாங்கிக் கொள்வார்.

அவர் காலத்தில் இலவச வேட்டி சட்டையெல்லாம் கிடையாது. இருந்திருந்தால் மச்சக்காளை முதல் ஆளாகப் போய் நின்று வரிசையில் இடம் பிடித்திருப்பார்.

மச்சக்காளையை தாரளைப் பிரபு என்றுதான் சொல்ல முடியாதே தவிர, கஞ்சப் பிரபு என்று தாராளமாகச் சொல்லலாம். ஒரு கடையில் போய் பனியனோ செருப்போ வாங்கிக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவான் கதிரேசன். மச்சக்காளை கடைகள் இருக்கும் திசையை திரும்பிப் பார்ப்பதற்குக் கூட ‘துட்டு’ கேட்கிற ஆள்! எந்தப் பொருளாக இருந்தாலும் அதை பிளாட்பார கடைகளில்தான் அதையும் நூறு தடவைகள் பேரம் பேசித்தான் வாங்குவார்.

எப்படி வட்டிக்கு கடன் கொடுப்பதற்கு அவர் அவசரமே காட்ட மாட்டாரோ; பிளாட்பாரக் கடையில் ஒரு பொருளை வாங்கிவிடுவதற்கும் அதேபோல அவசரமே படமாட்டார். வாங்கும் பொருளின் தரம் பற்றி ரொம்ப யோசிப்பார், நல்ல விலையாகக் கொடுத்து வாங்கினால் அதன் தரமும் நல்லதாக இருக்குமே என்றெல்லாம் யோசிக்க மாட்டார். எந்தக் குதிரையாக இருந்தாலும் அதை ‘கால்துட்டு’ கொடுத்துதான் வாங்குவார். ஆனால் கால்துட்டு கொடுத்து வாங்கினாலும் அது காற்றாக பறக்க வேண்டும் என்று நினைப்பார்! இதனால் கஷ்டப் படுவதெல்லாம் அவருடைய பிள்ளைகள்தான்; அதுவும் குறிப்பாக கதிரேசன்தான்.

அவனுடைய பள்ளியில் மாணவர்களை வருஷாவருஷம் தேக்கடி, வைகை அணைக்கட்டு, ராமேஸ்வரம் என்று எங்கேயாவது உல்லாசப் பயணம் கூட்டிக்கொண்டு போவார்கள். கதிரேசனை ஒரு வருஷம்கூட எந்த உல்லாசப் பயணத்திற்கும் போவதற்குப் பணம் கொடுத்தது இல்லை. வைகை அணைக்கட்டு பாளையங்கோட்டை தெப்பக் குளத்தைவிட கொஞ்சம் பெரிசு! அதைப்போய் துட்டு செலவழித்து பார்த்துவிட்டு வரணுமா என்பது மச்சக்காளையின் கேள்வி. ‘அந்தத் துட்டுக்கு வட்டிக்கணக்கு போட்டுப் பாரு அப்ப தெரியும்’ என்பது அவரது பதிலும் கூட.

கதிரேசனின் மனதிற்குள் எதிர்ப்பின் அலைகள் கடலைப் போல எழும்பும். ஆனாலும் பள்ளியில் படிக்கிற பையன் என்பதால் அவனுடைய எதிர்ப்பை வெளிப்படையாகக் காட்ட முடியவில்லை. அவனால் அப்பாவின் அத்தனை குணங்களையும் நடத்தைகளையும் நிசப்தமாக பார்த்துக்கொண்டுதான் இருக்க முடிந்தது.

மற்றொரு நிசப்தத்தில் கதிரேசன் பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு காட்சி – அடமான உத்திரவாதமாக அப்பாவிடம் கொடுத்துவிட்டுப் போகும் நகைகளையும், சொத்துப் பத்திரங்களையும் வீட்டின் வடமேற்கு மூலையில் இருக்கும் ‘சாமி ரூமில்’ பெரிய இரும்புப் பெட்டியில் அதைப் பத்திரமாக பூட்டி வைத்திருப்பார் மச்சக்காளை. மனதிற்கு தோன்றும் போதெல்லாம் அவ்வப்போது இரும்புப் பெட்டியைத்திறந்து அந்த நகைகளையும் பத்திரங்களையும் பார்த்துப் பார்த்து பரவசப் பட்டுக் கொண்டிருப்பார். அம்மாதிரி நேரங்களில் மச்சக்காளையின் கண்களில் பேராசையின் களிப்பு கண்களில் பொங்கி வழிந்து கொண்டிருக்கும்.

சில சமயங்களில் மச்சக்காளை சில அழகான நகைகளை அவருடைய பெண்டாட்டியின் கைகளிலோ கழுத்திலோ போடச்சொல்லி கொடுத்து அவளை ‘அழகு’ பார்ப்பதும் உண்டு. அவரின் மனைவியும் அந்த நகைகளை ஆசையாகப் போட்டுக்கொண்டு கண்ணாடியின் முன்நின்று அழகு வேறு பார்த்துக்கொள்வாள் அழகு.

இதையும்விட இன்னும் ரொம்ப அழகான ஒரு நடத்தையும் அந்தப் புருஷன் பெண்டாட்டியிடம் இருந்தது. ரொம்ப வேண்டப்பட்டவர்கள் வீட்டுக் கல்யாணங்களுக்குப் போகும்போது தன்னிடம் அடகு வைக்கப் பட்டிருக்கும் நகைகள் சிலவற்றை எடுத்து பெண்டாட்டியிடம் கொடுப்பார். அந்த மனுஷியும் எந்த வெட்கமும் விவஸ்தையும் இல்லாமல் அந்த நகைகளை காதிலும் மூக்கிலும் மாட்டிக்கொண்டு புருஷனுடன் கல்யாணங்களுக்குக் கிளம்பிவிடுவாள். இதற்குமேல் ஒரு மனசாட்சி இல்லாத அல்பத்தனமான காரியம் எதுவும் இருக்க முடியாது என்பது அந்தச் சின்ன வயதிலேயே கதிரேசனுக்குத் தெரிந்திருந்ததுகூட அவனுடைய பெற்றோர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது.

மச்சக்காளையின் விவேகம் இல்லாத நடத்தை இதுவென்றால், மனிதாபம் இல்லாத நடத்தை என்று சொல்வதற்கு அவரின் வேறோரு சுபாவம் உதாரணத்திற்கு சொல்வதற்கு என்றே இருக்கிறது.

ஒருசமயம் காசி என்பவர் கொஞ்சம் அதிகமான பணத்தை மச்சக்காளையிடம் இருந்து கடனாக வாங்கி இருந்தார். அதற்கு ஈடாக அவருடைய பெண்டாட்டியின் நகைகளையும், மூத்த மகளின் நகைகளையும் மச்சக்காளையிடம் கொண்டுவந்து அடகு வைத்திருந்தார். அடகு வைத்த நகைகளை ஒன்பது மாதங்களாகியும் காசியால் மீட்டுக்கொள்ள முடியவில்லை. அந்தநேரம் பார்த்து திருவண்ணாதபுரத்தில் இருந்த அவருடைய சகோதரியின் மகளுக்கு திருமணம் வந்துவிட்டது.

திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முந்தியே காசி குடும்பத்தோடு புறப்பட்டுப் போயாகவேண்டும். திருமணத்திற்குப் போகும்போது அடகு வைக்கப் பட்டிருக்கும் நகைகள் காசியின் பெண்டாட்டிக்கும் மகளுக்கும் கட்டாயம் வேண்டும். காதிலும் கழுத்திலும் நகை இல்லாமல் அவர்கள் அந்தக் கல்யாணத்திற்குப் போகமுடியாது. அப்படிப் போனால் நன்றாகவும் இருக்காது. கேட்பவர்களுக்கு பதிலும் சொல்ல முடியாது. போட்டுப் போக நகை இல்லை என்பதற்காக கல்யாணத்திற்குப் போகாமலும் இருக்க முடியாது. அது அவர்கள் வீட்டுக் கல்யாணம்.

அதனால் காசி ஒருநாள் ராத்திரியோடு ராத்திரியாக மச்சக்காளையிடம் ஓடிவந்தார். துண்டால் வியர்வையைத் துடைத்துக்கொண்டே விஷயத்தைச் சொன்னார். மூன்றே மூன்று நாட்கள் மட்டும் நகைகளை பெரிய மனது வைத்துத் தந்து உதவும்படி கேட்டுக்கொண்டார். நான்காவது நாள் பொழுது விடிகிறபோதே நகைகளைத் திரும்பக் கொண்டுவந்து மச்சக்காளையிடம் பத்திரமாக ஒப்படைத்து விடுவதாகவும் காசி ரொம்ப உறுதியாகச் சொன்னார்.

ஆனால் அவர் சொன்ன எதையும் மச்சக்காளை காதில் போட்டுக் கொள்ளவில்லை. மூன்று நிமிஷங்களுக்குக் கூட நகையைத் தர முடியாதென்று தாட்சண்யமே இல்லாமல் சொல்லிவிட்டார். ஒரு உத்தரவாதத்திற்காக ‘கடன்’ வாங்கிய பணத்தில் கால்வாசியை எடுத்து வந்து தருவதாகவும்; அதை வாங்கிக்கொண்டு நகைகளைத் தந்து உதவும்படியும் கேட்டு காசி அவருக்குத் தெரிந்த எல்லா வழியிலும் கெஞ்சிக் கேட்டுப் பார்த்துவிட்டார். ஆனால் அவரின் எந்தக் கெஞ்சலுக்கும் மச்சக்காளை அசைந்து கொடுக்கவில்லை.

கடன் வாங்கியிருக்கும் பணத்தில் நூறு ரூபாய் குறைத்துக் கொடுத்தாலும் கூட நகை எதவும் கைக்கு வராது என்று கோபமாகவும் கறாராகவும் சொல்லிவிட்டு; மேற்கொண்டு இந்த விஷயத்தில் பேச எதுவுமில்லை என்பதைச் சொல்லாமல் சொல்கிற மாதிரி மச்சக்காளை அவரின் ‘வட்டிக் கடை’யில் இருந்து எழுந்து வேகமாக வீட்டிற்குள் வந்துவிட்டார். ‘சரிதான்’ என்று அதற்காக உடனே எழுந்து காசியாலும் கிளம்பிப் போய்விட முடியுமா? ‘என்ன சாமி பண்ணுவது; எங்கே சாமி போவது?’ என்று தெரியாமல் ரொம்பநேரம் மச்சக்காளையின் யாரும் இல்லாத வட்டிக் கடையில் உட்கார்ந்திருந்து விட்டுத்தான் எழுந்து போனார்.

எழுந்து போய்விட்டாலும் காசிக்கு மனசு கேட்கவில்லை. என்ன பண்ணலாம், ஏது பண்ணலாம் என்று தூக்கம் வராமல் கிடந்து யோசித்தார்.

பிறகு மச்சக்காளையைப் பார்த்து நகைகளை கேட்டுப் பார்க்கச் சொல்லி காசி கடைசியில் அவருடைய அருமைப் பெண்டாட்டியை நேரில் அனுப்பி வைத்தார். அப்படியெல்லாம் சட்டென்று பெண்டாட்டியை இந்த மாதிரி அனுப்புகிறவர் இல்லை அவர். என்ன செய்ய? காலக் கொடுமை.

நகைகளை அடகுவைத்து கடன் வாங்கிவிட்ட பாவத்திற்கு இந்த மாதிரியெல்லாம் அவமானப்பட வேண்டியிருக்கிறது. காசியின் பெண்டாட்டிக்கும் இந்த மாதிரியெல்லாம் எந்த ஆம்பிளைகளின் முன்னால் போயும் நின்ற அனுபவமே கிடையாது.

பாவம், அந்த உத்தமி காசியை கட்டிக்கொண்ட பாவத்திற்காக அந்த கசப்பான அனுபவத்திற்கும் ஆளாக நேர்ந்தது….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *