கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 1,409 
 
 

சாருலதாவிடம் எந்த மாற்றமும் இல்லை. முன்னை விட இன்னமும் வெளுப்பாய் அழகாய்த் தெரிந்தாள்.

ஹாலில் சோபாவில் உட்கார்ந்திருந்தவளை முதலில் ‘யாரோ’ என்று நினைத்தான்.

‘யாருங்க அது’ என்றாள் அவனுடன் ஒட்டிக் கொண்டு படியிறங்கிய உமாவும்.

அப்பாவுடன் பேசிக் கொண்டிருந்தவள் திரும்பிப் பார்த்து புன்னகைத்தாள்.

‘ஹாய்’

இயல்பான புன்னகை.

அவனுக்குத்தான் வினாடி நேரப் படபடப்பு. சமாளித்துக் கொண்டு சிரித்தான்.

உமாவுக்குப் புரிந்து விட்டது. ஓ.. இவளா.. அந்த நிமிடம் அவள் மனதில் நிறைய கேள்விகள் எழுந்திருக்கும்.

சாருலதாவிடம் சொல்லிக் கொண்டு போவதா, வேண்டாமா என்ற குழப்பமே இல்லை. அவளைப் போலவே தானும் சுதந்திர புருஷன்.

‘வா.. உமா’ என்றான்.

வெளியே போனதும் உமா விசாரித்தாள்.

‘இவதானே உங்க பர்ஸ்ட் வொய்ப்’

தலையசைத்தான்.

உமாவுடன் திருமணம் நிச்சயமான மறுதினமே பர்சனலாய் சந்தித்து பேசி விட்டான்.

‘எனக்கு ஏற்கெனவே திருமணமாகி விட்டது. நான் இப்போது விவாகரத்தானவன். வேறு உபத்திரவங்கள் இல்லை. இந்த விவரங்கள் உங்கள் குடும்பத்துக்கு முன்பே தெரியும். இருந்தாலும் நீ நேரடியாய் என்னை எதுவும் கேட்க விரும்பலாம். அதனால்தான் இந்த சந்திப்பு.’

உமா எதுவும் கேட்கவில்லை. அதாவது முதல் திருமணம் பற்றி. நிறைய முன் கூட்டியே தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

இவனுடன் மற்ற செயல்கள் பற்றி கேட்டாள்.

விடை பெறும்போது மட்டும் சாருலதா பற்றி ஒரு கேள்வி.

‘அவங்க ஆர்ட்டிஸ்ட்டாமே. பெயிண்டிங்ல ஆர்வம்னு கேள்விப்பட்டேன்’

‘ஆமா.. எக்சிபிஷன்லாம் நடத்தியிருக்கா’

‘ஓ.. நம்ம வீட்டுல அவங்க வரைஞ்சது ஏதாவது இருக்கா’

யோசித்து தலையாட்டினான் மறுப்பாக.

‘ஸெபரேஷன் போது எடுத்துகிட்டு போயிட்டா’

‘ஸீ யூ’

தான் நினைத்ததை விட உமா முற்போக்கானவள் என்று புரிந்தது.

இந்தத் திருமணமாவது தான் தேடிய ஆதர்ச வாழ்க்கை தரக் கூடும் என்று எதிர்பார்த்தது அப்போதுதான்.

எட்டு மணிக்கு வீடு திரும்பியபோது சாருலதா இருந்தாள்.

இந்த முறை வேறு வழியில்லை. நின்று ஓரிரு வார்த்தைகளாவது பேசாமல் போனால் பயந்து ஓடுகிறான் என்ற பெயர் வரக் கூடும்.

‘எனக்கு ஒன்றும் பாதிப்பு இல்லை’ என்கிற தோரணையில் கால் மீது கால் வைத்து நெஞ்சு நிமிர்த்தி அமர்ந்தான்.

உமா சாருலதாவின் அருகிலேயே அமர்ந்து விட்டாள்.

அப்பாவின் முகத்தில் கூட புன்னகை கீற்று. புது மருமகளும், பழைய மருமகளும் நல்ல ஒப்புமை.

‘இன்னிக்கு நாங்க வெளியே சாப்பாடு.. வந்து உங்களுக்கு ஏதாவது’என்றாள் உமா லேசாய் திக்கிய குரலில்.

‘ஆச்சு’ என்றாள் சாரு முறுவலுடன்.

அப்பா பேசினார்.

“நானும் இன்னிக்கு என்னோட விரதத்தை மாத்திகிட்டேன். ரெண்டு ஸ்லைஸ் ப்ரெட்.. சாப்பிட்டேன். அவ டோஸ்ட் பண்ணின்டா”

“ஃப்ரிட்ஜ்ல பால் இருந்துதே”

“ம்.. ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு டம்ளர்.. சூடான பால்”

இது சாருலதா.

ஏதோ வெளியுறவு மந்திரியுடனான பேச்சு வார்த்தை போலத் தடம் பிறழாத வார்த்தைகள்.

“இப்ப எதுவும் எக்சிபிஷன் வைக்கப் போறீங்களா” என்றாள் உமா.

“என்னை நீன்னே கூப்பிடலாம் உமா”

சாரு இன்னமும் மாறவில்லை.

“என்ன கேட்டே.. எக்சிபிஷனா.. ப்ச்.. வைக்கணும். ஆனா.. எனக்கே இன்னும் ஒரு திருப்தி வரலே. என்னோட கலெக் ஷன்ல..”

“இங்கே நீங்க.. ஸ்ஸ்.. நீ வரைஞ்சது ஏதாவது இருக்கும்னு எதிர்பார்த்தேன். எதுவும் இல்ல” என்றாள் உமா.

“அப்பா..ஹால்ல ஒண்ணு இருந்ததே.. அதோ அந்த கார்னர்ல”

சாருலதா ‘அப்பா’ என்றுதான் முன்பும் அழைப்பாள். பிரிவின்போதும் பிரியாத பந்தம் என்று இருவரும் கை குலுக்கிக் கொண்டார்கள்.

சீண்டியிருந்தான் முன்பே.

‘ஆஃப்டர் ஆல்.. நீ என்னோட வாழ வந்தவ. இப்ப அது முறிஞ்சு போச்சு. அது என்ன.. என்னோட அப்பா உனக்கும் அப்பா’

‘நல்ல சிநேகிதம் எப்பவும் பட்டுப் போகாது’ என்றாள் பளிச்சென்று.

உறவு முறைகளை விட நட்பு போலப் பழகுவதில்தான் ஈடுபாடு. அதில்தான் தனி மனித சுதந்திரமும் இருக்கும். விட்டுக் கொடுத்தலும் இயல்பாய் வரும் என்பாள்.

‘என் ரூம்ல இருக்கு இப்ப’ என்றார் அப்பா, விட்டுப் போன பேச்சின் தொடர்ச்சியாய்.

‘நான் பார்க்கணும்’ என்றாள் உமா.

அவளுக்கு ‘மாமா’ என்றும் வரவில்லை. ‘அப்பா’ என்றும் கூப்பிட மனசில்லை. மையமாய் பேச்சுகள்.

‘லேட்டாயிருச்சே. இங்கேயே தங்கிடலாம்’என்றாள் உமா.

இவனைச் சுத்தமாய் உதாசீனப்படுத்திய சம்பாஷணை. அல்லது இவனால்தான் இயல்பாக ஒட்ட முடியவில்லையா.. மனசுக்குள் நமைச்சல்.

” இல்லை.. போகணும்.ரூம் போட்டிருக்கேன். போயிரலாம். ஆட்டோதான் இருக்கே”

அப்பா குறுக்கிடவில்லை. வற்புறுத்தி இருந்தால் தங்கி விடுவாளோ என்னவோ..

அப்பாவும் அவளும் நன்றாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

‘எனக்கு மட்டும் ஏன் சாத்தியமின்றிப் போனது’ என்று நினைத்தான்.

உமா அவன் தோளில் தட்டினாள்.

“கொஞ்சம் உள்ளே வாங்க”

சமையலறைக்குள் போனதும் கேட்டாள்.

“ஆமா.. நீங்க ஏன் பிரிஞ்சீங்க”

இதுவரை கேட்டிராத கேள்வி. உமாவை வெறித்தான்.

‘இருவரும் மனசொப்பி விவாகரத்து கேட்பதால்’ சுலபமாய் எந்த வித நிபந்தனைகளுமின்றிப் பிரிதல்.

“உமா.. இங்கே வாயேன்..”

சுருட்டிய கெட்டியான காகிதம். பட்டு நூல் முடிச்சு.

“ஸ்மால் ப்ரசெண்ட் ஃபார்யூ” என்றாள் சாருலதா.

உமா ஆர்வமாய்ப் பிரித்தாள்.

பார்டர் எதுவுமற்று வரையப்பட்ட படம்.ஒரு பெண்ணின் படம் என்று யூகிக்க முடிந்தது. முகம் ஒழுங்கற்று.. கண்கள், மூக்கு, உதடு எல்லாம் விட்டேத்தியாய்.. ஆனால் படத்தில் பெண்ணின் மார்பகங்கள்மட்டும் துல்லியமாய்.. மிகப் பெரிதாய்.. அவ்வளவுதான். முகமும் மார்பும்தான்.

“புரியலை” என்றாள் உமா உடனே.

“யோசி. புரியும்”

அப்பா எட்டிப் பார்த்து லேசாய் அதிர்ந்த மாதிரித் தெரிந்தது.

“ஏம்மா.. இவ்வளவு கோபமா உனக்குள்” என்றார்.

அவருக்குப் புரிந்து விட்டது போலும்.

சாருலதா ‘குட் நைட்’ சொல்லி வெளியே போனாள்.

அப்பாவும்.

அவனும் ஓவியத்தை வாங்கிப் பார்த்தான்.

‘ஒரு பொண்ணுகிட்ட வேற என்ன எதிர்பார்க்கப் போறேன்’

எப்போதோ சாருலதாவிடம் சொன்ன வாசகம் நினைவில் வந்து பளீரென்று அறைந்தது.

– பெப்ரவரி 2010

1 thought on “ஓவியம்

  1. யோசிக்க வைத்த சிறுகதை…ஒரு பெண்ணாகவும், ஓவியராகவும் என் மனதைத் தைக்கிறது… நல்ல சிந்தனை ரிஷபன் sir… உங்கள் ‘ வலி’ சிறுகதை ( பெயர் சரிதானா..?) பெண்களின் வலிகளைப் பேசும்…என்னை பாதித்த ஒரு கதை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *