“அந்த முதுமைக்காலம் பலருக்கும் ஏதாவது ஒரு வழியில் கேள்விக் குறியாக இருக்கும் இந்த நிலைக்கு எப்போது வரும் விடிவுகாலம்?”
ஒவ்வொரு நாளும் வேலைக்குச் செல்வதே ஒரு போராட்டமாய்ப் போய்க் கொண்டிருந்த எனது முப்பத்தைந்து வருட பணிக்காலம் இன்றுடன் முடிவடைந்து விட்டது.
“இன்றைய பொழுது எப்படிப் போகுமோ ?” என்று அலுவலகத்திற்குச் செல்லும் ஒவ்வொரு நாளும் வேலையால் வந்த மன அழுத்தங்களும் அது தந்த விளைவுகளும் வேலையை விரக்தியாக்கி விட, குடும்பச் சூழ்நிலைகள் அந்த வேலையிலிருந்து விடுபட விடாமல் பிடித்து வைத்திருந்தது. ஆனால் இன்று அதை வயது விடுவித்து விட்டது.
தனியார் நிறுவனம் ஒன்றில் நான் பார்த்து வந்த முப்பத்தைந்து வருட வேலையிலிருந்து இன்று மாலை ஐந்து மணியுடன் ஓய்வு பெற்று விட்டேன்.
இப்போது என் மனதிற்குள் ஏதோ ஒரு புத்துணர்ச்சி பிறந்தது போலிருந்தது.
நோயோடு போராடிக் கொண்டிருந்தாலும், தனது பேரக் குழந்தைகளைக் காலை வேளையில் பள்ளிப் பேருந்தில் அனுப்பி விடுவதும், மாலை வேளையில் அவர்களை அழைத்து வருவதும், அவர்களுக்குப் பழங்கதைகள் சொல்வதுமான வேலையைக் கவனித்து வரும் என் மனைவி நிர்மலாவிற்கு அதிலிருந்து ஓய்வு கொடுத்து விட வேண்டும்.
அந்த வேலையினை இனி நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். பேரக் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கான அனைத்தையும் செய்ய வேண்டும்.
மாலை வேளைகளில் இரண்டு பேரக் குழந்தைகளுக்கும் பாடங்களைச் சொல்லித் தர வேண்டும். அவர்களோடு சேர்ந்து விளையாட வேண்டும். அவர்களுக்கு அறிவுப் பூர்வமான வழிகாட்டும் வரலாற்றுக் கதைகள் சொல்ல வேண்டும்.
என் மனதிற்குள் புதைந்து கிடந்த எத்தனையோ ஆசைகள் எனக்குள் கற்பனைகளாய் வந்து விளையாட அந்த மகிழ்ச்சியோடு வீட்டிற்குள் நுழைந்தேன்.
கையிலிருந்த சாப்பாடு கொண்டு செல்லும் பையை வாங்கிக் கொண்ட என் மனைவி நிர்மலா அதை உள்ளே கொண்டு வைத்தபடி ” இனி மேல் இந்த பைக்கு வேலையில்லை ” என்றாள்.
குறைவான சம்பளத்தில் நான் தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த ஒரு வருடத்தில் என் அம்மா அவளோட தம்பி மகளான நிர்மலாவை எனக்கு திருமணம் செய்து வைத்து விட்டாள்.
“கை நிறைய சம்பளம் வாங்கி நல்ல நிலைக்கு வந்த பின்புதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.” என்றிருந்த எனது எண்ணம் அம்மாவின் பிfடிவாதத்தில் தளர்ந்து போய் , இருபத்து மூன்று வயதிலேயே திருமணம் செய்து கொள்ள வேண்டியதாகப் போய் விட்டது.
அடுத்தடுத்த வருடங்களில் பிறந்த பெண் குழந்தை, ஆண் குழந்தை என்று இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாகி, குறைந்த வருமானத்தில் குடும்பத்துடன் தள்ளாடினாலும் அவர்கள் இருவரையும் பட்டப்படிப்பு படிக்க வைத்து விட்டேன்.
அவர்களில் மூத்தவளான பெண்ணிற்கு, தூரத்து உறவில் சொந்தமான உறவுக்காரர் இரயில்வேயில் அதிகாரியாகப் பணிபுரிய, அவருக்கு திருமணம் செய்து கொடுத்து அவளுக்கும் தற்போது இரண்டு குழந்தைகள் என்றாகி இப்போது திருச்சியில் நன்றாக இருக்கிறாள்.
பையனுக்கும் அவனது படிப்பு முடிந்ததும் , உதவி செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக அரசுப் பணி கிடைத்ததால் அவனுக்கும் திருமணம் முடித்து இப்போது இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன.
அவனுக்குக் கடந்த ஆண்டு செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பதவி உயர்வு அளிக்கப் பட்டு தூத்துக்குடிக்குப் பணி மாற்றம் செய்யப்பட்டான். பதவி உயர்வுப் பணி மாற்றம் என்பதால் அவன் தூத்துக்குடிக்குச் செல்ல வேண்டியது கட்டாயமாகி விட்டது.
எனக்குத் தெரிந்த பலரின் குடும்பங்களில் திருமணம் முடிந்த மறுமாதம் அல்லது மறு வருடத்திற்குள் தனிக் குடித்தனம் போனவர்கள் எண்ணிக்கைதான் அதிகம். ஆனால் என் மகனோ மருமகளோ தனிக் குடித்தனத்தைப் பற்றியே பேசியது கிடையாது. தனியாகப் போக பணி மாற்ற வாய்ப்பு வந்த போதும் அதைத் தவிர்த்து விட்டு, அவன் மட்டும் தூத்துக்குடிக்குச் சென்று தனியாக இருந்து வருகிறான். வாரத்திற்fகு ஒரு முறை விடுமுறை நாட்களில் இங்கு வந்து செல்கிறான்.
அவனுடைய மனைவி மற்றும் பிள்ளைகளைக் கூட எங்கள் பாதுகாப்பிலேயே விட்டு விட்டுச் சென்றிருக்கிறான். இப்படி அவன் செய்தது வயதான காலத்தில் எங்கள் பாதுகாப்பிற்காகக் கூடவே இருக்கட்டும் என்கிற எண்ணமாகக் கூட இருக்கலாம்.
நம் குழந்தை வளர்ப்பு முறை நன்றாகயிருக்கும் போது, வயதான காலத்தில் அவர்களின் துணையோடு நம் முதுமைக் காலம் இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும்f தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இது புரியாமல்தான் பலரும் துவக்கத்தில் தங்கள் பிள்ளைகளின் வளர்ப்பைத் தவற விட்டு ஓய்வுக் காலத்தில் முதியோர் இல்லங்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
“என்னங்க, போய் முகம் கழுவிக்கிட்டு வாங்க, நான் காப்பி கலந்து கொண்டு வருகிறேன்.” என்று என் மன ஓட்டத்தைக் கலைத்து விட்டு சமையலறைக்குள் சென்றாள் என் மனைவி.
நானும் முகம் கழுவி விட்டு வந்தேன்.
மனைவி கொடுத்த காப்பியை வாங்கிக் கொண்டே அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தேன்
காலையில் ஒன்பது மணிக்கு வேலைக்குச் சென்றால் வீட்டிற்கு வருவதற்கு சில சமயம் இரவு பத்து மணி கூட ஆகிவிடும.f
எங்கள் முதலாளிக்கு பத்துபேர் பார்க்கக் கூடிய வேலைகளை நான்கு பேரை வைத்துப் பார்த்துக் கொண்டு ஆறு பேர் சம்பளத்தை மிச்சப் படுத்தி விட்டதாக கணக்குப் பார்த்து மகிழ்ச்சி அடைவார். அப்படியும் அவருக்கு முழுமையான மகிழ்ச்சி இருக்காது. இதனால் அங்கு பணிபுரிந்த பலருக்கும் எந்த வேலையும் முழுமையாக முடிக்க முடியாத நிலையும், தேவையில்லாத வேலைப் பளுவும், அதனால் வரும் மன அழுத்தங்களும் அதிகமாகி அந்த வேலையின் மீது ஒருவித வெறுப்பை ஏற்படுத்தியிருக்கும்.
இருந்தாலும் அவரவர் குடும்பத்தின் தேவைகள் அதிகமாக இருப்பதால், வேலையின் சுமைகளைத் தாங்கிக் கொண்டே ஒவ்வொரு நாளும் இந்த வேலையிலிருந்து விடுபடும் நாளை எண்ணிக் கொண்டே நாட்களைக் கடத்த வேண்டியிருக்கும்.
இப்படியே , ஒவ்வொரு நாட்களாக கடந்து எனக்கும் முப்பத்தைந்து வருடங்கள் நகர்ந்து விட்டது.
இந்த முப்பத்தைந்து வருடங்களில் உறவுக்காரர்கள், நண்பர்கள் வீட்டு விழாக்களுக்குச் செல்ல முடியாமல் நான் வாங்கிய கெட்ட பெயர்கள் அதிகம்தான். என் மனைவிதான் எல்லா விழாக்களுக்கும் சென்று வருவாள். அவளுக்கும் என் துணையில்லாமல் சென்று வருவதில் வருத்தமிருந்தாலும் இருக்கிற வேலை போய் விடக் கூடாதே என்கிற பயமும் அதிகம்.
என்னைப் போல் தனியார் நிறுவனப் பணிகளில் இருப்பவர்களுக்கு அவர்களுடைய வேலையின் மீது கட்டாயம் வெறுப்பு இருக்கத்தான் செய்யும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கும் அடிக்கடி பணி மாற்றம் போன்றவை இருக்கக் கூடும்.
எப்படியோ, நானும் இந்த வேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டேன்.
இந்த ஓய்வுக் காலத்திலாவது மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும்.
மறுநாளிலிருந்து-
விடுமுறையிலிருக்கும் பேரக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு முல்லை ஆற்றங்கரையில் விளையாட விட்டு , வாய்க்காலில் நீச்சல் கற்றுக் கொடுக்க அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. குழந்தைகளுக்குத் தண்ணீரில் விளையாடுவது என்றால் தனி மகிழ்ச்சிதான்.
அவர்களோடு இருப்பதில் எனக்கும் பழைய அலுவல்கள், மன அழுத்தங்கள் மறந்து போய் விட்டது.
எனக்குள் புதிய எண்ணங்களும், புதிய உற்சாகமும் பிறந்து முதுமைக் காலத்தின் மகிழ்ச்சியைத் துவக்கி விட்டிருந்தது.
என்னுடைய பள்ளிக் காலத்துத் தோழனாக இருந்து, எங்கள் ஊர் பஞ்சாயத்துத் தலைவராக அரசியலில் இறங்கி, சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என்று வளர்ந்து அந்த அரசியல் கட்சியின் தலைவரது திடீர் மரணத்திற்குப் பிறகு முதலமைச்சராகப் பதவியேற்று இன்று அரசியலில் அசைக்க முடியாத சக்தியாகவும், அரசியல் சாணக்கியனாகவும் கருதப்படும் தமிழகத்தின் முதலமைச்சர் சுப்பையாவின் வீட்டிற்குச் சென்று பார்த்து வர வேண்டும். அப்படியே அவர் மூலம் நம் மகனுக்கு தூத்துக்குடியிலிருந்து தேனிக்குப் பணி மாற்றம் வாங்க முயற்சிக்க வேண்டும்.
அப்படியே வருகிற வழியில் திருச்சியில் மகள் வீட்டிற்கு வந்து ஒரு வாரமாவது தங்கியிருக்க வேண்டும். விடுமுறையிலிருக்கும் அந்தப் பேரக் குழந்தைகளையும் தேனிக்கு அழைத்து வர வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு சென்னைக்கு இரயிலில் பயணமானேன்.
சென்னையில் முதலமைச்சர் சுப்பையாவின் வீட்டில் பாதுகாவலர்களின் பலத்த விசாரணைக்குப் பிறகு வீட்டிற்குள்ளே செல்ல அனுமதிக்கப் பட்டேன்.
வரவேற்பறையில் முதலமைச்சரைச் சந்திக்க வந்திருந்த அமைச்சர்கள், அதிகாரிகள் என்று பலரும் காலை ஆறு மணிக்கெல்லாம் அங்கு வந்து காத்திருந்தார்கள். அந்த வரவேற்பறையைக் கடந்து உள்ளே சென்றேன்.
அங்கே அவர் மனைவி ஜெயலட்சுமி தான் இருந்தார்.
சுப்பையா குளிக்கச் சென்றிருந்தார்.
ஜெயலட்சுமியும் ஊரிலிருக்கும் பலரையும் நலம் விசாரித்து என்னிடம் பேசிக் கொண்டிருக்க அங்கு வேலை செய்யும் பெண் ஒருவர் எனக்கு காப்பி கொண்டு வந்து கொடுத்தார்.
நானும் காப்பியைக் குடித்தபடி அவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.
குளியலறையிலிருந்து வெளியே வந்த சுப்பையா , ” என்ன பரமசிவம் ஊரில் எல்லோரும் எப்படி இருக்கிறாங்க? ” என்று விசாரித்தார்.
” எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள் ” என்று நான் சொல்லிக் கொண்டிருந்த போதே , அங்கு வந்த ஒருவர் அவரின் காதில் ஏதோ சொல்ல, ” பரமசிவம் பேசிக்கிட்டிரு இதோ வந்து விடுகிறேன் ” என்றபடி அருகிலிருந்த அறைக்குச் சென்று சட்டையை அணிந்து கொண்டு வரவேற்பறையை நோக்கிச் சென்றார்.
சுப்பையாவின் மனைவி ” அண்ணே, நீங்க குளித்து விட்டு வாங்க… சாப்பிட்டு விட்டு அப்புறம் பேசலாம் ” என்றபடி என் கையில் ஒரு துண்டைக் கொடுத்து அருகிலிருந்த குளியலறையைக் காண்பித்தாள்.
நான் ஊரிலிருந்து கொண்டு வந்திருந்த எனது பெட்டியை அருகிலிருந்த மேஜையின் மேல் வைத்து விட்டு குளியலறைக்குள் சென்றேன்.
குளித்து விட்டு வெளியே வந்து பார்த்தேன்.
முதல்வர் வரவேற்பறையில் இருந்தவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அவர் இன்னும் திரும்பி வரவில்லை.
அருகிலிருந்த அறைக்குச் சென்று நான் கொண்டு வந்திருந்த மற்றொரு உடையை மாற்றிக் கொண்டேன்.
முதல்வர் சுப்பையாவின் மனைவி என்னைச் சாப்பிட வரும்படி அழைத்தார்.
“அவர் வந்து விடட்டும். ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிடுகிறோம்.” என்றேன்.
“அவர் சில சமயம்தான் வீட்டில் சாப்பிடுவார், பெரும்பாலும் அப்படியே வெளியில் சென்று விடுவார்.”
“அவர் வரட்டும், இப்போது எனக்குப் பசியில்லை…” என்றபடி அவருடைய வரவிற்காகக் காத்திருக்கத் தொடங்கினேன்.
என்னுடைய ஒரு மணி நேர காத்திருப்பு பலனளிக்கவில்லை.
அவர் மனைவி சொன்னது போலவே வெளியில் சென்று விட்டார்.
முதல்வரின் மனைவி “நான் அப்போதே சொன்னேனில்லையா, அவருடன் சேர்ந்து சாப்பிட வேண்டுமென்று காத்திருந்தால் நாம்தான் பட்டினியாகக் கிடக்க வேண்டும்..” என்றார்.
அவர் எத்தனையோ நாட்கள் காத்திருந்து ஏமாற்றமடைந்திருக்க வேண்டும்.
நான் சாப்பிட்டு விட்டு, வெளியே சென்று உறவுக்காரர் ஒருவரைப் பார்த்து விட்டு வருவதாகக் கூறி அங்கிருந்து கிளம்பினேன்.
உறவுக்காரர் வீட்டிற்குச் சென்று அவர்களைப் பார்த்துப் பேசினேன். மதியச் சாப்பாட்டையும் அங்கேயே முடித்துக் கொண்டேன்
மாலை நேரமாகி விட்டது.
அவர்களிடம் சொல்லிவிட்டு மீண்டும் முதலமைச்சரின் வீட்டுக்குத் திரும்பினேன்.
முதலமைச்சர் இன்னும் வீட்டுக்குத் திரும்பி வரவில்லை.
சாப்பிட்டு விட்டுத் தொலைக்காட்சியில் என் கவனத்தைச் செலுத்தினேன். பெருந்தொடர் ஒன்று ஓடிக்கொண்டு இருந்தது.
அழுகையை மையமாகக் கொண்டு இருக்கும் தொடர்களையே பெண்கள் அதிகமாக விரும்புகிறார்கள் என்கிற தவறான நோக்கத்தில் தமிழ்த் தொலைக் காட்சிகள் அனைத்திலும் இது போன்ற தொடர்கள் அதிகமாக முடிவில்லாமல் தொடர்ந்து வருவதால் நான் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்க விரும்புவதில்லை.
முன்பெல்லாம் பத்திரிகைகளில் வரும் கதைகளைப் படிக்கும் போது புதுவிதமான கற்பனைகள் தோன்றும்.. அந்த கற்பனையில் புதுப்புது சிந்தனைகள் தோன்றும், வாழ்க்கைக்கு வழிகாட்டும் தகவல்கள் ஏதாவது கிடைக்கும். இப்படி கதைகள் படிப்பதில் இருக்கும் ஆர்வம் இந்தத் தொலைக்காட்சித் தொடர்களில் இருப்பதில்லை. இருந்தாலும் தொலைக்காட்சியின் ஆதிக்கம் இளைய தலைமுறையிடம் அதிகமாகப் போய் விட்டது.
முதலமைச்சர் சுப்பையாவின் மனைவி ஜெயலட்சுமி இரவு சாப்பாட்டிற்கு அழைக்க, இரண்டு தோசைகளை மட்டும் சாப்பிட்டு விட்டு முதலமைச்சர் வரவிற்காகக் காத்திருந்தேன்.
இரவு மணி பத்தாகி விட்டது.. தொலைக்காட்சி செய்திகளில் கவனத்தைச் செலுத்தினேன்.
தொலைக்காட்சி வந்த பின்பு உலகில் நடக்கும் எல்லாச் செய்திகளையும் உடனுக்குடன் நேரடியாகப் பார்க்க முடிகிறது. தொலைக்காட்சிகளில் உள்ள இந்த செய்திக் காட்சிகளைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாகத் தானிருக்கும்.
” என்ன பரமசிவம் தூங்கிட்டானா? ” என்று கேட்டபடி முதலமைச்சர் சுப்பையா வீட்டிற்குள் நுழைந்தார்.
குரல் கேட்டுத் தொலைக்காட்சியின் செய்தி பார்த்துக் கொண்டிருந்த நான் திரும்பினேன்.
அவருடைய அறைக்குள் சென்று முகம் கழுவி உடைகளெல்லாம் மாற்றி விட்டு வந்தார்.
“என்ன பரமசிவம், காலையில் பேச முடியாமல் போய் விட்டது. நம் ஊரில் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்? ”
“எல்லோரும் நல்லாயிருக்கிறார்கள்.”
“சரி, உன் வேலை எப்படி இருக்குது? ”
“பத்து நாட்களுக்கு முன்புதான் வேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டேன். இப்போதெல்லாம் என் பேரக் குழந்தைகளுடன் விளையாடுவது மட்டும்தான் என் வேலை. இப்போதுதான் மகிழ்ச்சியாய் இருக்கிறது. ”
“நீ, இப்போது உன் வேலையிலிருந்து ஓய்வு பெற்று மகிழ்ச்சியாய் இருக்கிறாய். என்னைப் பார் காலையிலிருந்து இரவு வரை ஓயாமல் ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. காலையில் வந்த உன்னிடம் பேசுவதற்குக் கூட நேரமில்லாமல் போய்விட்டது. வீட்டில் சாப்பிடக் கூட முடியாமல் , சில நேரங்களில் பட்டினியாய் இருந்து கூட பல வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.
இந்த ஓய்வில்லாத அரசியல் வாழ்க்கை, வீட்டிலுள்ளவர்களிடம் கூட பேச முடியாமல் , பேரக் குழந்தைகளைக் கூடப் பார்க்க முடியாமல், அவர்களிடம் எந்தவித ஈடுபாடும் காட்ட முடியாமல், குடும்பத்தைப் பற்றியே சிந்திக்க முடியாமல் என்னை அவர்களிடமிருந்தே தனிமைப் படுத்தி விட்டது.
இரண்டு முறை முதலமைச்சராகப் பதவி வகித்து விட்டேன். இனி அரசியலே வேண்டாமென்று இந்த அரசியலில் இருந்து ஒதுங்கி விடலாம் என்று நினைத்தேன். அதற்கும் கட்சியில் பலர் , “நீங்கள் தலைமைப் பொறுப்பில் இருக்கும் வரைதான் கட்சியே இருக்கும். நீங்கள் கட்சியிலிருந்து ஒதுங்கி விட்டால் கட்சியே இல்லாமல் போய்விடும், கட்சியிலிருந்து ஒதுங்கும் எண்ணத்தையேக் கைவிட்டு விடுங்கள் ” என்கின்றார்கள்f.
இந்த அரசியலில் மட்டும் ஓய்வுக் காலம் என்பதே இல்லை. நாம் ஒதுங்கி ஓய்வெடுக்கலாம் என்றாலும் அதற்கும் விட மாட்டார்கள். எனக்கு மரணம் மட்டும்தான் ஓய்வு அளிக்க முடியும்.. ”
– என்று சொல்லி சிரிக்க எனக்கு மிகவும் வருத்தமாகப் போய்விட்டது.
“அப்படியெல்லாம் சொல்லாதே சுப்பையா, நீ நல்லாயிருக்கனும். உன் ஆட்சியில் மக்களுக்கு எத்தனையோ நல்லதைச் செய்திருக்கிறாய் உன் பெயரை இப்போது மட்டுமில்லை, காலங்காலமாய் வருங்காலமும் சொல்லிக் கொண்டிருக்கும். ” என்றேன்.
“காலங்கள் ஒவ்வொருவரையும் சொல்லிக் கொண்டிருக்கும் என்கிற எண்ணத்தில்தான் பலரும் இது போன்ற பதவிகளுக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டு பல தவறுகளைச் செய்து முன்னால் வருகிறார்கள், வந்து கொண்டிருக்கிறார்கள். காலங்கள் நம்மைப் பற்றித் தெரிந்தவர்கள் இருக்கும் வரை மட்டும்தான் சொல்லிக் கொண்டிருக்கும். காலப்போக்கில் இதெல்லாம் மாறிவிடும். இந்த உண்மை தெரியாமல் வருங்காலப் பெயருக்காக, இப்போது இருக்கும் மகிழ்ச்சியை மட்டுமில்லாமல் அனைத்தையும் இழந்து கொண்டிருக்கிறோம்.
அரசியலில் இருப்பவர்களுக்கும் ஓய்வுக்காலம் இருக்க வேண்டும். அவர்களுக்கும் குறிப்பிட்ட வயதை ஓய்வுக்காகக் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் அவர்களும் வயதான காலத்தைப் மகிழ்ச்சியாக்கிக் கொள்ள முடியும். முதுமைக் காலம் ஒரு ஓய்வுக் காலம், அந்தக் காலத்தை குழந்தைகளைப் போல் எவ்விதப் பாகுபாடுமில்லாமல், அவரவர் விரும்புகிற வழியில் கழிக்க வேண்டும். எந்தவிதமான ஆசைகளுமில்லாமல் , ஆசைகளுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்..” என்று அவர் மனதிற்குள் இருந்ததைச் சொல்லி விட்டுத் தூங்கச் சென்றார்.
பெரிய பதவியில் இருப்பவர்களுக்கெல்லாம் அந்தப் பதவியில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்கிற விடாத ஆசை இருக்கிறது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர்களுக்குள்ளேயும் ஓய்வுக் கால ஆசை ஒளிந்து கிடக்கிறது.
ஒவ்வொரு மனிதனுக்கும் முதுமைக் காலம் ஒரு ஓய்வுக் காலம்.
அந்த முதுமைக்காலம் பலருக்கும் ஏதாவது ஒரு வழியில் கேள்விக் குறியாக இருக்கும் இந்த நிலைக்கு எப்போது வரும் விடிவுகாலம்? என்று சிந்தித்துக் கொண்டிருந்த என்னால் இப்போது தூங்க முடியவில்லை…”
– எம். எஸ்.முத்துக்கமலம் [msmuthukamalam@yahoo.co.in] – ஜனவரி 2006