கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 29, 2021
பார்வையிட்டோர்: 3,496 
 

அல்லும் பகலும் உழைத்து, அலுத்து அயர்ந்து தூக்கிக் கொண்டிருந்தான் சுப்பிரமணியம். அவனுடைய தூக்கத்தைக் கலைக்க விரும்பாமல், அவனருகே அவன் உசும்பிப் புரளும் வேளை வரை விழி பதித்து அமர்ந்திருந்தாள் இராசநாயகி.

அமைதி பொங்குகின்ற அந்த நடுநிசியில் அத்தனையும் அவனாகிக் கிடந்த சுப்பிரமணியத்துக்கும் சோறு கொடுக்கவேண்டும். மனைவியின் அந்தக் கடமையில் மனம் லயித்திருந்தவள், நீண்ட நேரப் பொறுமையை இழந்தாள். மறுகணம் அவனுடைய நெற்றியை மெல்ல நெருடினாள்.

பகல் முழுவதும் கொட்டிய மழையில் உடல் வெல வெலத்துப் போயிருந்தது. அந்த மழையையும் பொருட்படுத்தாமல் வயலில் வரம்புகளைக் கட்டினான். பொழுது படும் வேளையில் உலகம் இருட்டில் மூழ்கத் தொடங்கியது. புல்வெளியிற் கட்டியிருந்த தனது பசுக்கன்றுகள் இரண்டையும் அவிழ்த்துக் கொண்டு வீடு வந்த சேர்ந்தான் அவன். அவற்றை மாட்டு மாலிற் கட்டிவிட்டு முகங் கழுவி தன்னுடைய கஷ்டங்களிற் பாதியைக் கடவுளுடன் பகிர்ந்தான். அதன் அடையாளமாக நெற்றி முழுவதும் திருநீறு பதித்து, சோற்றுக்காக அடுக்களைக்குச் சென்றான்.

“ராசம்”

அவனுடைய அழைப்புக்கு மதிப்புக் கொடுத்து தேநீர்க் கோப்பையை ஏந்தியபடி அடுக்களையை விட்டு வெளியே வந்தாள். கொஞ்சம் வேகமாக வந்த சுப்பிரமணியத்துடன் அவள் மோதியதால் தேநீர்க் கோப்பை ‘தடால்” என்று நிலத்தில் வீழ்ந்தது. அவர்களுடைய கால்களில் ஊற்றுண்டது. அவசரப்பட்டுத் தான் வந்ததை எண்ணிய வருத்தத்தில் சிலையாகிச் சற்று நின்றாள். அதே வேளையில் காற்றிலிருந்து இறங்கிய பட்டம் போல், நிலை குலையமல் அவனுடைய கால்களைக் கைகளால் வருடி விட்டாள்.

சுடுநீர் பட்டும் உள்ளத்தைப் போல் உரமும் வலுவும் பெற்றுவிட்ட அவனுடைய உடலின் கால்களுக்கு அந்தச் சூடு பெரிதாகத் தெரியவில்லை . தான் வேதனைப்படுவதாக காட்டிக் கொண்டால் ராசத்தின் முகம் கலங்கிப் புலம்பத் தொடங்கிவிடுமே என்ற காரணம் அவனைச் செயலறச் செய்தது.

“பறுவாயல்லை நீ எழும்பிப் போய் இன்னொருக்கா ஊத்து. நான் திண்ணையிலை இருக்கிறன்.”

அதரங்கள் குவிந்து அடுக்கிக் கொண்டிருந்தன. அவன் மெல்லக் குனிந்து அவள் புயங்களைப் பற்றித் தூக்கிவிட்டான். அவள் கைகள் ஒடிந்த சிலைபோல் அவனுள் தானாகி அயர்ந்தாள்.

“ராசம் ஏன் நிக்கிறியாம்?…..’

“உம்…. சீனி இல்லை …. கடைக்குப் போயிட்டு வாறத்துக்கும்…….”

“காசில்லை ………… நீயும் நானும்தான் இருக்கிறம். சாப்பிட்டால் என்ன சாப்பிடாட்டி என்ன. உனக்கும் எனக்கும் தான் பசிக்கும். … சீனி இல்லாட்டிப் பறுவாயில்லை ….. சோத்தைப் போடு…..”

“இந்தக் குளிருக்கை சம்பலும் பச்சை அரிசிச் சோறும்……. என்ன செய்யிறது? எல்லாம் எழுத்து …….”

அவளுடைய அந்த உதடுகள் உள்ளும் புறமும் பிதுங்கத் தொடங்கின. ஒருச் சாய்ந்து கவிந்து மண்ணை முகாமிட்டிருந்த அந்த விழிகளின் கடைப்புறங்களில் கசிவு……..

“இராசம் மிளகாய் கிடக்கோ ?”

“உம்”

“மற்றச் சாமான்கள்?”

“கொஞ்சம்… கொஞ்சம்…..”

“அப்ப! நீ படலையைக் கட்டிப் போட்டு இரு. நான் இந்தா வந்திட்டன்.”

சுப்பிரமணியம் அசுர வேகத்தில் அடுக்களைக் கோடிப்பக்கமாகச் சென்றான். அவனுடைய கைகள் வீட்டு வளையில் பாய்ச் மரத்துடன் ” மண்டா” வை எடுத்தன. தோரணங்கட்டி வைக்கப் பெற்றிருந்த ஓர் உமலையும் கையோடு சுருட்டி எடுத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினான்.

ராசம் அவனுடன் தெருவரை பின் சென்று, அவனை வழியனுப்பி விட்டு, படலையை உட்புறமாகத் தெண்டி விட்டு வீட்டுக்குள் வந்தாள்.

வாசற்படியில் அடக்கமாக வந்து அமர்ந்த ராசத்தின் நினைவுகள் கடலை நோக்கி ராஜநடை போட்டுக் கொண்டிருக்கும் கணவனைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன.

“இவளை முடிச்சுப் போட்டு என்னடா செய்யப் போறாய்……. ஒரு சதத்துக்கும் வழியில்லாத பிச்சைக்காரி…….. சும்மா மேனி மினுக்கத்தைப் பார்த்துச் சாகும் வரையும் கஷ்டப்படப் போறியா?”

“எஸ்.எஸ்.ஸி. படிச்சுப் போட்டு மண்வெட்டி பிடிக்கிறியே. என்ரை அப்பன் இருந்தார் எண்டால் உன்னை இப்பிடியா வைச்சிருப்பார். அறுதலி வளத்த பிள்ளையடா நீ! அப்பிடித்தான் செய்வே.”

சுப்பிரமணியத்தின் தாயாருடைய மணவாழ்த்துக்கள். ராசத்தையும் வைத்துக் கொண்டு அவள் சொன்ன இந்த மொழிகளில் எத்தனையோ அர்த்தங்கள் இருக்கின்றன. அத்தனைக்கும் எத்தனையோ மட்டும் விளக்கங் கொடுத்துத் தாய் என்ற மதிப்போடு அவன் அமைதியாக நின்றான்.

ஆறுமாதங்களுக்கு முன்பு நடந்த இந்த நிகழ்ச்சி ராசத்தை இன்னும் என்னவெ. செய்து கொண்டிருந்தது.

தாமோதரம்பிள்ளையின் நான்கு பெண்களில் மூத்தவளாகப் பிறந்து, காணக்கூடாத கஷ்டங்களையுங் கண்டு தினமும் செத்து கொண்டிருந்த அவள் ஒரு நாள் சாக நினைத்த போது……..

“பைத்தியக்காரத் தனத்தைவிட வேறை ஒண்டுமில்லை. இந்த இருட்டிலை தன்னந்தனியனாக வந்து கிணத்துக்கை விழுற அளவுக்கு உனக்கு என்ன நடந்து போச்சு.”

மண்டைதீவு வயல்களுக்கு நடுவேயுள்ள ஆலமர விழுதுகளை அரணாகக் கொண்டு, காவல் தெய்வமாக அமர்ந்திருந்த பிள்ளையார் சிலைக்கு முன்பு, கட்டப்பெற்றிருந்த கிணற்றுள் விழுந்து, தன்னுடைய உயிரை எடுக்க எத்தனித்துத் தத்தளித்துக் கொண்டிருந்தவளின் மிடறொலி கேட்டு அந்த அவஸ்தையிலிருந்து காப்பாற்றிய வேளை, அவளைத் தன் கைகளில் தாங்கியபடி சுப்பிரமணியம் கேட்டான்.

முன் பின் முகமும், உறவுந் தெரிந்திருந்தும் முகங்கொடுத்தே பேசியிருக்காத ராசத்தை இருட்டில் முகம் பார்த்துக் கேட்டான்.

அவனிடமிருந்து தன்னை அமைதியாடு விடுவித்துக் கொண்ட அவள் விக்கி விக்கி விம்மி விம்மி அழுதாள். பிள்ளையார் சிலைக்கு முன் காற்றில் ஆடிக்கொண்டிருந்த விளக்கு அவர்களுடைய உருவத்தை மட்டும் காட்டிக் கொண்டிருந்தது.

“ஏன் அழுகிறாய்? உங்கடை குடும்பம் கட்டப்படுகிறதென்டால் நீ சாகிறதாலை அந்தக் கயிட்டத்தைத் தீர்க்க முடியுமா?…. சாவீட்டுச் செலவு மட்டும் கொஞ்சம் நகைக்கெண்டாலும் போதுமே”

“ஊரெல்லாம் அடிப்பட்ட கதை உங்களுக்கு மட்டும் தெரியாதா”?

ராசம் தன்வரையில் தவறில்லை என்பதை நிரூபிப்பதற்காக அந்த ஒரு நிகழ்ச்சியை நினைவு படுத்தினாள்.

“அதுக்கா?” சுப்பிரமணியம் சற்றுக் கடுமையாகவே கேட்டான்.

“நான் என்ன செய்யிறது? பெம்பிளை, கடவுள் என்னை ஆம்பிளைப்பிள்ளையாகப் படைச்சு இருந்தாலும் சிங்கள நாடு காணப் போய் ஒரு கடையிலையாவது நிப்பன்”

ராசம் அழுது கொண்டே சொன்னாள். “கொக்குவிலிலை சுருட்டுக் கொட்டிலிலை வேலை செய்யிறவராம். நகையும் தோட்டக் காணியும் கேட்டு செய்து வைக்கச் சொல்ல அதுக்கு…… அதுக்கு……”

“அதுக்கு …..?”

“இருக்கிற குமரைக் கடலிலை தள்ளுறதோ எண்டு சொன்னாராம்.”

“ஆரு…?”

“ஐயா”

சுப்பிரமணியத்துக்கு அதைக் கேட்க என்னவோ போலிருந்தது.

வந்த ஆவேசத்தில் எல்லோரையும் வெட்டித் துண்டம் போட வேண்டும் என்ற நெகிழ்ச்சி…… அவன் அவள் முன்பு மறுபடியும் அமைதியாகி சொன்னான்.

“உலகத்திலை மூத்த பிள்ளைக்குத் தான் நல்லாச் செய்து குடுக்கிறாங்கள். அவளுக்கு வருகிறவனைப் பார்த்துத்தான் மற்றவங்களும் நல்லவங்களாக வருவாங்கள்……. உங்கடை கதை தலைகீழாகத்தான் இருக்கு…………..! ஈரத்தைத் துடை !”

தான் உடுத்தியிருந்த சாரத்தைக் கொய்து பிழிந்து விட்டான். கிணற்றுக் கட்டின் மீது போட்டிருந்த துவாயை எடுத்து அவளிடம் நீட்டினான்.

அவள் தயங்கிக் கொண்டிருந்தாள்.

“உம்…. நான் தீர்மானித்துவிட்டேன். உனக்கு வாழ ஆசைதானே?”

அவள் இரவைப் பகலென்று நினைத்தபடி தலையை ஆட்டினாள். எரிந்து கொண்டிருந்த விளக்கில் அது தெளிவாகத் தெரிந்தது.

“இஞ்சை ! என்னைப் பார் ! என்னை……. என்னுடைய நடப்புகளை உனக்குப் பிடிக்குதா?”

“……..”

‘அட! பிடிக்குதான்னா ? வெக்கப்படுகிறியே!….. நீ சாகக் கூடாது. வாழ வேணும்! என்னால உனக்கு வாழ்வு தரமுடியும். நானும் ஒண்டிக் கட்டை தான்!”

ராசம் அடிபெயர்ந்து விழுதுகளில் தங்கிய பக்கத்து ஆலமரம் போல் “அவக்” கென்று சரிந்து அவன் இடை நிலைகளைச் சுற்றிப் படர்ந்தாள். “உண்மையாகவா சொல்லுறியள் ! உங்களைக் கேக்கலாம் எண்டு அம்மா சொன்னா….. நீங்கள் இருக்கிற இருப்புக்கு மாட்டம் எண்டு சொல்லுவியள் எண்டு ஐயா சொன்னார்.”

அவள் சிரித்து அழுது சொல்லிக் கொண்டிருந்தாள்.

சுப்பிரமணியம் தன் கால்களோடு கட்டுண்டு சாய்ந்த சுமையின் பசுமை இனக் கன்னத்தை மெல்லத் தடவி அவளை மேலே தூக்கி நிறுத்தியபடி சொன்னான்.

“நான் ஆம்பிளை”

“…”

“எனக்கு ஓரளவுக்கெண்டான்ன அறிவை என்னைப் படைச்சவன் தந்திருக்கிறான். என்னுடைய உடம்பும் மனமும் எதையுந் தாங்கும்…… ஆனால் ஒண்டு!”

அவன் திடீரென்று நிறுத்தியதும் ராசம் பீதியுடன் பார்த்தாள். அவளுடைய உள்மூச்சு அவன் கன்னத் திடல்களைச் சுட்டது.

“நீ எனக்கு மனைவியாக மட்டும் இருந்தால் போதும். அது தான் உன்னிடம் கேட்கும் சீதனம். நான் எண்டைக்கும் மனிஷன்தான். அதிலே யாருக்குமே சந்தேகம் ஏற்ப்பட்டதில்லை”

அவள் அவனை வாரி இறுக அணைத்தபடி ‘தெய்வமே!” என்று மூச்சிழுத்தாள். ராசம் கண்களின் கோடியிற் கசிந்து வந்த திவலைகளை ஒரு வித மகிழ்வோடு துடைத்தபடி நிமிர்ந்தாள். உட்புற மண் சுவரின் மேல் செத்தை” யில் சாய்ந்து விட்ட பிள்ளையாரின் படத்தைப் பார்த்தாள்.

அவளுடைய கண்கள் நன்றிப் பெருக்கோடு பார்த்தன. அதரங்கள் முணு முணுத்தன.

அவள் அடுக்களைக்குள் எழுந்து சென்று கறிக்கு வேண்டியவைற்றைத் தயார் செய்தாள். சிறிது நேரஞ் சென்றபின், மத்தியானம் சமைத்திருந்த சோற்றையும் சூடேற்றி வைத்தாள்.

அவன் வந்தான்!

“ராசம்!’

“ஓய்!”

“என்ன நித்திரை கொண்டாச்சோ”!

“நீங்கள் வராமையா?”

“அது தானே!”

“ராசம்! என்னுடைய ராசி – ராசம் எண்டு கொப்பா பேர் வைச்சாரோ என்னவோ….. எனக்கு இண்டைக்கு நல்ல உழைப்பு. மற்றவர் கையைப் பார்க்காமல் வாழுறதுக்கு வயலும் கடலும் இருக்கு. உழைப்பு எண்டு பார்த்தா வெக்கம் எண்டது இல்லை ……… ஹுய்யா !”

“பாப்பம்…. சும்மா கேலியை விட்டுப் போட்டுக் கழட்டுங்கள்!”

“எதை ?”

நடுங்கியபடி, கடல் நீரில் நனைந்த சாரத்தை உரிந்து முற்றத்தில் கிடந்த கிடுகில் போட்டான். தோளிற் கிடந்த துவாயை எடுத்து உடலைச் சுற்றிக் கொண்டான்.

அவள் குறும்பாகச் சிரித்தது அடுக்களைக்கும், வீட்டுக்கும் ஒளித் தூது செய்து கொண்டிருந்த லாம்பு வெளிச்சத்தில் நன்றாகத் தெரிந்தது.

ராசம் மீன் உமலுடன் அடுக்களைக்குள் போனாள்.

“காலமை சாப்பிட்டதுதான் அது பழஞ்சோறு. இந்த குளிருக்கை இப்படியும் ஒரு கூத்தா?”

தனக்குள் நினைத்தபடி அவற்றைப் பதப்படுத்தி அடுப்பையும் எரித்துவிட்டாள்.

சமையல் முடிந்தது!

உடலின் அலுப்பைச் சற்றுத் தணிக்க வேண்டி திண்ணையிற் கிடந்த பாயிற் சரிந்த சுப்பிரமணியம் தூக்கத்தில் நிறைந்து விட்டான்.

அந்தக் குளிர் காற்றுக்கிடையே உள்ளிருந்து வீசிய புது நினைவுடனும், தெம்புடனும் வந்தவன் ராசத்தின் வேலைக்குத் தடையாகக் கூடாது என்ற நினைப்பில் தூங்கிவிட்டான் . ராசம் அவனைச் சோற்றுக்காக எழுப்புவாள் என்பது அவனுடைய எண்ண ம்.

அவள் மறுபடியும் அவனுடைய நெற்றி மேட்டை விரல்களால் உழுது கொண்டிருந்தாள். கன்னங்கள் வழியேயும் கைகள் வளைந்தன.

வேலைகள் முடிந்ததும் முகம் கழுவி வந்த அவளுடைய கைகளிலிருந்து வந்த மணம் அமைதியான சூழலில் எதையோ நினைக்கத் தூண்டியது.

சுப்பிரமணியம் கண்களை மூடியபடி இதழ் திறந்து சிரித்தான். அவளும் சிரித்தாள் என்பதை அவன் பார்க்கவில்லை. தனது விரல்களால் மோவாயைச் சீண்டி விட்டு எழுந்துவிட்டாள்.

அவளைத் தாவிப் பிடிக்க முனைந்த போது தான் தூக்கம் முழுவதும் கலைந்தது. அவள் சமயம் பார்த்துக் கூறினாள்.

“சாப்பிட வாருங்களேன். இண்டு முழுக்கச் சிவபட்டினி .”

“உம்…… அது சரி…… ஒரு கிழைைமக்குக் கிட்ட பட்டினியாகக் கிடக்கிறியே. வலின ஆகுமோ …..”

ராசம் இரண்டு கைகளாலும் முகத்தைப் பொத்தியபடி, தலையைத் தாழ்த்தி நின்றாள். கைகளின் இடை வெளியில் அவளுடைய பற்கள் ஒளி உமிழ்ந்தன.

“சாப்பிட வாருங்கள்!”

சுப்பிரமணியம் கண்களை அடிக்கடி இமைத்தான். கண்மேற் புறங்களில் குளிரையும் கொல்லும் சூடு அதை உணர்ந்து தணியாத வேகத்தில் அவளை நோக்கி போனான்.

ராசம் அவன் படுத்திருந்த இடத்தைத் தாவிப்பிடித்தாள்.

வீசிய காற்றில் லாம்பு ஆடிக் கொண்டிருந்தது. அவனை விட்டுப் பிரிந்த சாரம் தண்ணீரில் தோய்ந்த பின் திண்ணைக் கொடியில் உலர்ந்து கொண்டிருந்தது. அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த மீன் கறி ஆறி வெம்மை காய்ந்து கொண்டிருந்தது.

வானம் வெளிறிவிட்டது! முகந்திருந்த நீரைப் பூமிக்கு வழங்கித் தனது பணியை முடித்த நிறைவில் வெண்முகில்கள் வடக்கு நோக்கி அசைந்து கொண்டிருந்தன.

மழை கொடுத்த நீரை வாவிகளும், ஏரிகளும், வயல்களிலுள்ள ஓடைகளும் கடல்களும் ஏற்றுத் தக்க அளவில் மிகுந்து நின்றன.

அந்த வளவில் உள்ள “ஓடை” மட்டும் வெய்யிலிலும் வற்றாமலும், மழையில் பெருகாமலும் காட்சி தந்தது.

“இனியாவது சாப்பிட வாருங்கள் ! வேலைக்குப் போக நேரமாச்சு.”

கண்களை உறுத்தி, கூசச் செய்கின்ற எட்டு மணி வெய்யிலுக்குக் கையால் ஒதுக்குக் கொடுத்தபடி ராசம் அழைத்தாள்.

அவன் மௌனியாகி அவள் பின்னே அடுக்களையை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.

– அங்கையன் கதைகள் (சிறுகதைத் தொகுதி), முதற்பதிப்பு: 2000, அங்கையன் பதிப்பகம், கொழும்பு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *