ஓடப் போறேன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 22, 2022
பார்வையிட்டோர்: 1,450 
 

(1968 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குப்பி விளக்கின் மங்கல் ஒளி என்னைப் பார்த்து பரிதாபமாகக் கெஞ்சியது. அதன் பார்வை என்னைவிட்டுப்பிரிந்து போகிறாயா? எனத் துடிப்பது போலிருந்தது. எனக்கு இப்போது யாரைப்பற்றியும் அக்கறையில்லை. என்னைப் பத்துமாதமும் கட்டிச்சுமந்து பெற்றுப் பாலூட்டி வளர்த்துவிட்ட என்தாயை பற்றியே எனக்கு கவலையில்லை. இது ஒரு புரட்சி என் வாழ்க்கையிலே ஒரு மாபெரும் புரட்சி! எத்தனையோ அபலைகள் கையாண்ட முறைதான் ஆனால் எனது ஊருக்கு இது புதிது. நடைபெற வேண்டிய புரட்சியேதான். அதற்கு நான்தான் முன்னோடி, அதனாலென்ன பாதகமில்லை. கோழைகள் நிறைந்த இந்தக்கேடு கெட்ட ஊரிலே நான் அசாதாரணத் துணிச்சலுடன் ஆற்றப்போகும் இக்காரியம் எத்தனை எத்தனை அபலைகளுக்கு ஆறுதலளிக்குமோ?….

ஆமாம், நான் ஓடப்போகிறேன்! திகைப்பாயிருக்கிறதா ஓடத்தான் போறேன்! இன்றிரவு என் இதய தெய்வத்துடன் ஓடத்தான் போறேன்! அடி பாதகி; பழிகாரி பத்தினி போல் வேடமிட்ட பரத்தையே! உனது பால் வெறிக்கு எமது கலாசாரத்தைக் கட்டிக் காத்து வந்த கட்டுக் கோப்பையெல்லாம் குழிதோண்டிப் புதைத்துவிட்டா கூடிக் கொண்டு ஓடப் போகிறாய்! கேடுகெட்ட கீழ் நிலை மிருகமே! உன்னை சல்லடைக் கண்களாகத் துளைத்தெறிய வேண்டுமடி! தூ நாயே! என்றெல்லாம் காறி உமிழ்கின்றீர்கள் போல் தெரிகின்றது. அதைப்பற்றிக் கவலையில்லை எனக்கு, கேளுங்கள் என் கதையை கேடுகெட்ட என் நிலையைக் கேட்டுத் தீர்ப்பளியுங்கள், மாபெரும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் இதயம் இருக்கிறதா?

அழுதுகொண்டு பிறந்தேன், நிர்வாண மேனியாய் வளர்ந்தேன், அழுக்கேறிய அரை நிர்வாண வேடுவ உடையில் வளர்ச்சி மாற்றத்தின் விளைவாகப் பூப்பெய்தினேன். அரை நிர்வாணம் ஆபத்தை விளைவிக்கும் என உணர்ந்த என் பெற்றோர் என்னை முக்கால் நிர்வாணமாக்கினர். முழு உடலையும் மறைக்கும் நிலை எப்போதோ?

எனது தந்தைக்குப் பன்னிரண்டு, அதிலே எட்டுப் பெண்களாகவும் அவைகளில் நான்கு, குமரிகளாகவும் இருந்தால் எப்படியிருக்கும்? அடர்ந்த அலை அலையான கூந்தல்கள், அச்சிலே வார்த்தெடுத்தது போன்ற அழகுமிகு உடல். ஆயிரமாயிரம் கற்பனைகளைச் சிருட்டிக்கும் அதரங்கள். அளியின் துடிப்பு நிறைந்த கயல்விழிகள், அசைந்தால் ஒரு அழகு! நடந்தால் ஒரு நடனம்! சிரித்தால் ஒரு கிறுக்கு.

இதெல்லாம் எனக்குத்தான். என் பள்ளித் தோழர்கள் சூட்டிய பகட்டு மாலையின் பவிசில் அரை நிமிடம் இறுமாந்து நின்றாலும் அடுத்த வினாடி ஆழ்ந்த பெருமூச்சொன்றைத்தான் வெளிப்படுத்துவேன்.

அரைக் குருடு முதல் அங்கங்களற்ற முடம் வரை எனக்குக் கேட்டார்கள். நான் மரக்கட்டை போல் ஏற்றுக்கொள்ளத் தயாராயிருந்தாலும் அவர்கள் என்னை ஏற்றுக் கொள்ளத் தயாராயில்லை காரணம்? நான் கிழவி என்பதல்ல, எம்மிடம் தங்கம் இல்லை என்பதே!

எனது தந்தை பகலில் வெறிபிடித்துக் கூச்சலிட்டாலும், இரவில் அவர் கண்கள் ஊற்றாகப் பெருக்கெடுக்கும். குழந்தை போல் அழுவார். தாயார் என்னைத் திட்டித் தீர்த்தாலும் இரவில் ‘இறைவா! நான் மௌத்தாகிப் பேகிறதுக்குள்ள இவளுக்கு ஒரு கல்யாணம் செய்து பார்க்கிறதுக்கு கிருபை செய் இறைவா’ எனக் கதறி அழுவாள்.

கல்லூரியில் என்னைக் கண் விழி அகற்றாமல் நோக்கிய அக்பரை எனக்குக் கேட்டார்கள். அவனோ ‘வை பத்தாயிரம்’ என்றான்.

என்னை அடைந்தால் அதுவே ‘பேரின்பம்’ என உளறிய றஹீமைக் கேட்டார்கள். ‘காணி பூமி தவிர இருபதாயிரம் வேண்டும்’ என்றான் !!

காதரை, ஜகுபரை, கபீரை, கவீலை, மௌலா இஸ்லாமான சலீமை யார் யாரையெல்லாமோ,

அத்தோடு என் தங்கைமார்கள் என்னை நேரடியாகவே தாக்கத் தொடங்கினர். இந்தக் கெழட்டுக் கொல்லேல போவா மௌத்தாக்கூடப் போவமாட்டேங்காளே! எங்கட ஆசைகள்லாம் அழிஞ்சுடும் போல இருக்கே!’

வாழ் நாளிலே கேட்டறியாத வார்த்தை , பயங்கர எதிரியின் நிலை, ஒரு மூலைக்குள் சென்று சத்தம் வராமல் குமுறிக் குமுறி அழுதேன். சத்தம் வந்தால் இன்னொரு பிரளயம் ஏற்பட்டாலும் ஏற்பட்டு விடுமே!

கடைசியில்… தீர்மானமானேன்… பயங்கர உலகை விட்டு விடை பெற்றுக்கொள்வதென்று. ஆனால் எதனை நாடுவது என்பதில் தான் எனக்குப் பிரச்சினையாக விருந்தது பொலிடோலா? ஸிலீபிங் பில்ஸா? தூக்குக்கயிறா? கடலா? நெருப்பா?….

அறிவு குறைந்த தம்பியை ரகசியமாக அழைத்தேன். ‘என்ரெக்ஸ்’ வாங்கி வரும்படி அனுப்பினேன், அதற்குக் கூலியும் கொடுத்தேன். இரண்டு சாக்லெட்’ வாங்கப்பணம்.

மாலைநேரம் மங்கிக் கொண்டிருந்தது, என் உள்ளமும் தான். ஆனால் உள்ளம் நிறைந்திருந்தது எவ்வளவு தொல்லைகள் தீர்க்கப்படப்போகின்றன!

எத்தகைய பிரச்சினை ஓயப்போகிறது !!

கல்லூரியைப் பாதியில் கைகழுவினேன். கூடியபாரங்களைச் சுமக்கலானேன். கரைந்தேன்! கரைந்தேன்! கரைந்துகொண்டேயிருக்கின்றேன். காலம் கரைந்தது. இயற்கை என்னுடன் போராட்டம் புரிந்தாலும் இரண்டொரு நரை மயிர்களுடன், என்னை விட்டுவிட்டது, எனது அழகைப் பறித்து விடவில்லை.

வயது எனக்கு முப்பத்தி ஐந்து-அரைக்கிழவி – ஆனால் ஆண் வர்க்கத்திற்கு நான் அழகு சுந்தரி, அலங்காரராணி, என்னை அணைக்கத் துடித்தன அவர்களது கைகள்: ஆனால் ஆதரிக்கத் துணிவில்லை.

என்னிடம் காதல் வலை வீசிய பல காளையர்களில் ஒருவன் ரஹ்மான், உடல் பொருள் ஆவி மூன்றையும் இழக்கத் தயாராம். கடிதம் எழுதினான். கடுமிருட்டில் – தனிமையில் – சந்திக்கத் துடித்தான். பல முறை சந்தர்ப்பத்தை அமைத்துக் கொடுத்தேன்; விலகி நின்றேன்; அணைக்கத் துடித்தான். அவனை நன்கு புரிந்துகொண்டேன் நிதானமாக உறுதியாக அவனிடம் கேட்டேன். “என்னைத் தாலி கட்டி ஏற்றுக்கொள்ள முடியுமா?”

தேள் கொட்டிய நிலைக்கு மாறினான் ரஹ்மான். தயங்கினான்! நடுங்கினான்; பலமாகச் சிந்தித்தான். புரிந்தது எனக்கு, நன்கு புரிந்தது.

அப்படியென்றால் வேறு ஆளைப்பாரும் சொற்களை அழுத்தமாக உறுதியாக வெளியிட்டேன். விருட்டென அகன்றேன். அவ்விடத்தை விட்டு… என் கற்பைக் காப்பாற்றிக்கொள்ளத்தான் உடல் பொருள் ஆவியை இழக்கலாம், தாலிதான் கட்டக்கூடாதோ?

எத்தனை பெண்களைக் கெடுத்தானோ அந்த துட்டுக்காரர் வீட்டு செல்லப்பிள்ளை. நல்ல வேளை நான் பிழைத்தேன்.

என் தங்கைகளின் அலங்காரம் என்னைப் பயங்காட்டுகிறது. காண்பவரை நிச்சயம் வெறி கொள்ள வைக்கும் தோற்றம். நாளும் பொழுதும் ஒரே அலங்காரம்.

எனக்கு நேர் இளையது என்னைக் கண்டாலே புறுபுறுக்கும், வெறுத்தொதுக்கும். கல்லூரிக் காளையொன்றுடன் தொடர்பாம். வழியமைத்துக் கொடுத்துவிட்டான் அந்த வாலிபன். ஒரு வகையில் அவள் என்னை விடக் கெட்டிக்காரியாக எனக்குப் பட்டது. நான் இந்த அரைக்கிழவி அதற்குக் குறுக்கே நிற்கிறேனாம்.

மூத்த குமரொன்றை முப்பத்தைந்து வயது வரை வீட்டில் வைத்துக்கொண்டு இளையவளுக்கு எப்படிக் கல்யாணம் நடத்த முடியும்?

லட்சாதிபதி ஹாஜியாரின் இரண்டு மனைவியரில் ஒருத்தி ஏற்கனவே ஆறடிக்குழியில் அடைக்கலம் புகுந்து விட்டாள். மற்றவளோ… ஒரு நடமாடும் ஆஸ்பத்திரி… அதன் விளைவுதான்-ஹாஜியாருக்குக் குழந்தை இல்லாததன் விளைவுதான்-சொத்தைக் கட்டி ஆள ஒரு வாரிசு இல்லாததன் விளைவுதான்,

அறுபத்தி எட்டு வயதில்கூட ஆசைத் தீயை வளர்த்தது.

அவரது சொத்துக்கு ஏகபோக அதிபதியாகலாம், பசித்தாலும் பசிக்காவிட்டாலும் புசித்து மகிழலாம், புரியானி. படகுக் காரிலே பறந்து செல்லலாம்.

இவையெல்லாம் எப்போது?

அறுபத்தி எட்டு வயது ஹாஜியாரை-இரண்டு கல்யாணம் செய்த கிழட்டு ஹாஜியாரை-கணவனாக ஏற்றுக் கொண்டால்…

பாலும் தேனும் என் வீட்டில் பெருகி ஓடுவதற்காக என் உடலைப் பணயம் வைக்க வேண்டும். தாரைவார்க்க வேண்டும்.

அது முடியாது, முடியவே முடியாது.

திட்டவட்டமாக மறுத்துவிட்டேன். சீறியெழுந்தார் தந்தை. சிந்தியபடி நின்றாள் தாய் சித்திரவதையோ அப்பப்பா!

என் இதய கீதத்தை எடுத்துரைத்தேன் என்னைப் பெற்றெடுத்த தெய்வத்திடம். அவளுக்கு ஓரளவு மகிழ்ச்சிதான்.. ஆனால் தந்தையோ… எப்படிக் கடனடைப்பேன்?’ என ஏங்கியே கரீமை வெறுத்தார்.

தங்கைமார் வெகுண்டு எழுந்தனர். தங்களது ‘சொகுசு வாழ்க்கை தவிடு பொடியாகி விடுமோவென்று. ஹாஜியார் கழுத்தை நெரித்தார், ‘கடனை அடை’ யென்று.

மத்தளத்தின் நிலை… நேற்று இரவுதான் எனக்கு நியாயமான உதை கிடைத்தது. தந்தை.. காலில் கிடந்த செருப்பைக் கழற்றி எறிந்தார். மூதேவி தரித்திரம் என்று காறி உமிழ்ந்தார். தங்கை தொண்டையில் பிடித்துக் குத்தினாள். ‘கேடுகெட்ட வே.. கிழடிக்கென்னடி காதல். ஹாஜியார முடிச்சிக்கிட்டு கவலையில்லாமே வாழாம எங்கேயோ கிடந்த அனாதை நாய்க்காகச் சாவுறியே…. இவளால் நாங்களும் எவனாவது ஒருத்தனைக் கட்டிக்கிட்டு வாழ ஏழாது போல இருக்கே’

இப்போது சொல்லுங்கள். என் நிலையை என்ன செய்ய வேண்டும் நான்? அறுபத்தெட்டு வயது ஹாஜியாரைக் கல்யாணம் செய்து விதவையாக வாழ்வதா?

தம்பி வந்தான், ஆனால் வெறுங்கையுடன் தான். அவனின் பின்னால்… ஒரு இளைஞன்… யார் அவன்?… என்னை நெருங்கினான் அவன், ஏறிட்டு நோக்கினேன் நான்.

–தற்கொலை செய்வது கோழைத்தனம். உங்களின் நிலையை உணர்கிறேன், உள்ளத்தைச் சீர்படுத்திக்கொள்ளுங்கள்….

அவனை வேண்டா வெறுப்புடன் நோக்கினேன். அட ஆண்டவனே! மௌத்தாகக்கூட விடமாட்டேன்கிறார்களே!

‘அது என் இஷ்டம் கேட்க நீங்கள் யார்?’

‘என்னைத் தெரியவில்லையா? நான்தான் கரீம். என்னோடு தானே அல் அஸ்ஹரில் படித்தீர்கள். நான் வேலைசெய்யும் கடைக்குத்தான் உங்கள் தம்பி வந்தான் என்ரெக்ஸ்’ வாங்க.’

அவனது பார்வை என்னை என்னவோ செய்தது. பலவித பார்வைகளைக் கண்டு பழக்கப்பட்டவன் நான். அவனது பார்வையிலிருந்த தூய்மையைப் புரிந்து கொண்டேன். அவன் ஒரு ஏழை, அனாதை, ஆதரவற்றவன். .

லட்சிய வெறி பிடித்த அவர்’ என்னை விரும்பி விட்டார்-என் அங்கங்களின் அழகை அள்ளி விழுங்குவதற்காக வல்ல. ஒரு அபலைக்கு வாழ்வளிக்க.

எப்படியோ என் வாழ்க்கை மலரப் போகிறது. அலையின் கோரத்தால் அடித்து செல்லப்பட்ட காகிதப் படகைக் கையிலே எடுத்துச் சூரிய ஒளியிலே சூடு காட்டிடத்திட்டமிட்டு விட்டார்.

நான் நம்பினேன் இறைவனுக்கு அடுத்ததாக.. ஆனால் இஃதென்ன?

எனது தந்தைக்கு வாரி’ வழங்கினார் ஒரு வள்ளல்’ ஹாஜியார் ஹமீது பாச்சா. அவருக்கு… வட்டிக் காசைக் கட்டக்கூட நாதியற்ற நிலையில் என் தந்தை தவிக்கையில்….

அத்தனைக்கும் மொத்தமாக என்னைக் கேட்டாராம். தானமாக அல்ல.. திருமணம் செய்து கொள்வாராம், சீரும் சிறப்பும் மேவ, எனக்குச் சிம்மாசனம்

அமைத்துத் தருவாராம்.

என் தந்தை சம்மதித்து விட்டார், ஓரளவு மகிழ்வோடு தான்.

அல்லது எனக்காக உயிர்விடத் துடித்துக்கொண்டிருப்பவருடன் ஓடி விடுவதா? அல்லது இங்கேயே தற்கொலை செய்து கொள்வதா?

அவருடன் கதைத்தேன்… ‘இன்றிரவு அவருடன் ஓடிவிடுவது’ என்று தீர்மானித்தேன்.

அவர் குறிப்பிட்ட நேரம் வந்து விட்டது. எழுந்தேன் கொல்லைப்பக்கம் சென்று கரித்துண்டொன்றைக் குதறிப் பல்லை விளக்கினேன்.

ஒரு வாரமாக உடுத்தியிருந்த அழுக்குப் புடவையைக் கலைந்துவிட்டு சுத்தமான புடவையொன்றைக் கட்டிக் கொண்டேன்.

மனம் பயங்கரமாக இடித்தது. துணிவைத் திரட்டிக் கொண்டேன்.

இன்னும் சற்று நேரத்தில் அவர் வந்து விடுவார்.

என் தங்கைகள் புலம்பியபடி புரண்டு படுத்துக் கிடந்தனர். கனவில்கூடத் திட்டுகின்றனர் போலும், கடைக்குட்டி வாயைச் சப்பினான். கனவிலே உணவருந்துகிறான் போலும்.

உம்மாவின் காலைத் தொட்டுக் கொஞ்சினேன், எழும்புக்கூட்டு வாப்பா புரண்டு புரண்டு படுத்தார்.

‘உம்மா என்னை மன்னித்து விடுங்கள்…’

இனி அவர் வந்துவிடுவார், ஒரு வேளை வராமல் இருந்து விடுவாரோ? ஏன் இந்தக் கெட்ட எண்ணம்? சீச்சீ!

நடைப் பிணமாகத் தலைவாசலுக்கு வந்தேன்.

நாளை ஊர் சிரிக்கப்போகிறது… காறி உமிழப்போகிறது.

“பத்தினி போல் வேஷம் போட்ட பரத்தை! கூட்டிக்கொண்டு ஓடிப் போனாள்!

எனக்குக் கவலையில்லை…. எனக்கு இதைப் பற்றியெல்லாம் கவலையில்லை…

– இன்ஸான் 1968, சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *