ஒற்றை நாணயம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 16, 2019
பார்வையிட்டோர்: 5,575 
 

என்னம்மா! என்ன பன்றது உனக்கு, தலைவலி எல்லாம் எப்படி இருக்கு?

பசங்க எல்லோரும் சொளக்கியமா இருக்கா, நீ கவலைப்படாதே!, நான் இருக்கேனே!,

இந்தா! இந்த பூவை வச்சுக்கோ, இன்னிக்கு வெள்ளிக்கிழமை,நீ எப்போதும் செய்வியே விளக்கு பூஜை,

இன்னிக்கு நான் பன்னினேன்,என்ன சிரிக்கிற, ஏதோ எனக்கு தெரிஞ்சதை பன்னினேன், பிரசாதமா கேசரி பிரமாதமா பன்னினேன்,

என போட்டோவில் இருக்கும் மனைவி கற்பகத்தை பார்த்து பேசிக்கொண்டிருந்தார் நாரயணன்.

இப்படி எல்லா விஷயத்தையும் அவர் படத்தைப் பார்த்து சொல்வார், அவளும் பேசப்போவதில்லை, பேசினாலும் கேட்கப்போவதுமில்லை, ஆதலால் இவரே பதிலையும் கூறி பேசிக்கொள்வார்.

ஏதோ தட்டை எடுத்தார் பேருக்கு சாப்பிட்டு ,பாத்திரம் அலம்பி வைத்துவிட்டு ஊஞ்சலில் அமர்ந்து ஆழ்ந்த யோசனையில் பின்னோக்கி வாழ்க்கையை நினைத்துப் பார்த்தார்.

கிராமத்து வீடு, வயது 17 இருக்கும் நாராயணனுக்கு, வீட்டில் ஒரே ஆண் வாரிசு இவர்தான், 2 தங்கைகள் வயது 13 மற்றும் 10 வயது, 7ம்வகுப்பும்,5ம் வகுப்பும் படித்தனர், விவசாயமே இவர்களது தொழில்,விவசாயம் பார்த்து கொண்டிருந்த அப்பா வயலில் நாகம் தீண்ட தவறிவிட்டடார் . அம்மா இருமலுடன் ஆஸ்துமா நோயாளி,விவசாயத்தை கவனிக்க படிப்பை நிறுத்தினான் 20 வயதில்.

அம்மாவிற்கு இருமலினால் புகை பகையாக இவர் சமைக்க ஆரம்பித்தார்.

தங்கைகளை நல்ல முறையில் படிக்க வைத்து குறையின்றி திருமணம் செய்து வைத்தான், அம்மா மூத்த பெண்ணின் திருமணம் கண்டாள்.

அவளும் நோய்வாய்பட்டு இறந்தாள். இவனுக்கு வந்து 32 ஆகியிருந்தது, மொத்த குடும்ப பராமரிப்பும் இவன் கையில்,இவன் ஒத்தையாகிப் போனான்.

தூரத்து சொந்தத்தில் ஒரு பெண் (30 வயது ) இருப்பதாகவும்,அவளை மணமுடிக்க இவனை வற்புறுத்தினார்கள், வேலை மீது உள்ள ஆர்வத்தால் இவனுக்கோ மணம் முடிக்க பிடிக்கவில்லை, வேண்டா வெறுப்பாக திருமணமும் முடிந்தது.

கற்பகம்,வந்ததும் இவரை எந்த வீட்டு வேலையும் செய்ய விடாமல் ,தானே கவனித்துக் கொண்டாள், இவரோ விவசாயத்தில் கவனம் செலுத்த,குடும்ப நிலை உயர வாழ்க்கை பிடித்துப்போனது முதல்முறையாக, அதன் பலனாய் ஒரு மகளும், ஒரு மகனும் இரட்டையாக பிறந்தனர்.

ஆறாம் வகுப்பு வரை மட்டுமே கிராமத்தில் படித்தனர்,

தாம் படிக்கவில்லை,அந்த குறை அவர்களுக்கு இருக்கக்கூடாது என்பதால் அவர்களை நல்ல படியாக படிக்க வைக்க, சென்னை நகரத்தில் ஜாகை வைத்தார், இவர் வழக்கம் போல் கிராமத்தில் ஒத்தையானான்.

கடமை முடித்து கற்பகம் திரும்ப கிராமத்திற்கு திரும்ப வந்தாள், இருவருக்கும் 25 வயது இருக்கும் நன்றாக படித்து முடித்து, வேலையில் அமர ஒரே வீட்டில் பெண் கொடுத்து பெண் எடுத்தனர்.

ஒரு வருடம் ஆகியிருக்கும், கற்பகத்திற்கு அடிக்கடி தலைவலி எடுக்க மகனின் அறிவுறுத்தலின் பேரில் சென்னை அப்போலோவில் காண்பித்தார், புற்றுநோய் கண்டறியப்பட்டு சிகிச்சையளித்தார்,அதை அவளால் தாங்க சக்தியில்லை,இவராலும் காப்பாற்ற இயலமால், தான் கடமையாற்றிவிட்ட திருப்தியில், தன் கணவனிடம் தங்களைக் கவனிக்க முடியவில்லையே என ஆதங்கத்தைத் தெரிவிப்பாள், தினமும்.

இவரும் அவளைத் தேற்றி, இதுவரை நீ செஞ்சது எல்லாம் நல்ல விஷயம்,நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன்,நீ கவலைப்படாதே! குழந்தைகளை நான் பார்த்துக்கிறேன் எனத் தேற்றி தேம்பி தேம்பி அழுதார். ஒரு வெள்ளிக்கிழமையில் கண் மூடினார் சுமங்கலியாக கற்பகம். மீண்டும் ஒத்தையானான்.

எந்த நேரத்தில் அப்போது கரண்டியைக் கைப்பிடித்தேனோ,தெரியலை, இன்று வரை அது ஓயலை…

கண்கள் ஓரம் கண்ணீர் கசிய ஊஞ்சல்லிருந்து இறங்கி நடந்தார்..

அன்றிலிருந்து இன்று வரை தானே சமைத்து சாப்பிட்டு வீட்டை பராமரத்து கோவில் கைங்கர்யம் என தன்னைப் பிசியாக வைத்துக்கொண்டுள்ள, நாரயணன் தாத்தாவுக்கு தற்போது வயது 77, மனைவி இறந்து 20 வருடமாகிறது. இவரின் மகன் துபாயில் வசிக்கிறார்,மகள் திருமணம் முடித்து மும்பையில் வசிக்கிறார், ஆறுதலாக வருடத்திற்கு ஒரு முறை மட்டும் அப்பா தரிசனம் செய்வார்கள்,மகன் ஒரு முறை வந்து நகர்பகுதியில் வீடு ஒன்றை கட்டிக்கொடுத்து, மாதா மாதம் செலவுக்கு பணம் அனுப்பிவைத்துக் கொண்டு இருக்கிறான்.

மற்றபடி, இவர் கடல் தாண்டி செல்வதோ, வெளியே பயணப்படுவதோ கிடையாது, காது அவ்வளவாக கேட்காது என்பது தான் இவருக்கு குறை அதுவே இவருக்கு நல்லது.

ஏனென்றால் இவர் காது படவே ஒத்தை பார்ப்பான்,செல்லா காசு என பலர் இவரைக் கிண்டலடிப்பதும் இவர் காதில் விழாததால், அவர்களிடமே தான் துக்கத்தை மறைத்து நன்றாக சிரித்து பேசி மகிழ்விப்பார், என் கூட ரயில் பயணம் செஞ்சவங்க எல்லோரும் இறங்கி போயிட்டாங்க ,நான் இன்னும் இறங்கல,எப்போ நான் இறங்கறதுன்னு தெரியல ஆனா,எப்பவும் இறங்க தாயாரா இருக்கேன்.

தனிமையாக உள்ள குறை தெரியாமல் இருக்க நாள் முழுவதும் சுற்றி சுழண்டு கொண்டே இருப்பார்,தூங்கும் போது தான் வீட்டிற்கு வருவார்,அவருடன் பேசுவதற்கு என்றே ஒரு இளைஞர் கூட்டம் இருக்கும்,அனைத்து விஷயமும் அவரிடம் ஆலோசனை கேட்பார்கள், அவரும் பொறுமையாக எடுத்துச் சொல்வார்.

அன்று,பக்கத்து வீட்டில். தன் வயது ஒத்த, இவருடன் பழகியவர் இறக்க அந்த வீட்டில் எல்லா காரியங்களையும் முறையாகச் சொல்லி செய்ய வைத்தார், மயானம் வரை போய் வந்தார்.

தனிமையே கொடுமை! அதுவும் முதுமையில் தனிமை மிக கொடுமை.

ஒரு ரூபாய் நாணயத்திற்கு தனியாக மதிப்பு இல்லை ஐம்பது, நூறு, மற்றும் ஆயிரம் கூட சேரும் போது அதன் மதிப்பு கூடும்.என எண்னினார்.

அன்று இரவு, முதன் முதலாக தனிமை அவரை பயமுறுத்தியது. கற்பகத்தின் போட்டோவை கழற்றி பக்கத்தில் வைத்துக்கொண்டு உறங்கி தனது மதிப்பு கூடியதாக உணர்ந்தார்.

இப்படி ஒத்தையாக சுண்டி விட்ட நாணயம் போல் சுழன்று சுற்றிய ஒத்தை ரூபாய் நாணயம் இன்று சுற்றுவதை நிறுத்தி, தலை விழுந்து இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *