ஒர் ஆன்மாவின் பயணம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 23, 2023
பார்வையிட்டோர்: 2,907 
 
 

சங்கர்ஜி கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி விட்டு ஓய்வு பெற்றவர். மனைவி, ஒரே பெண். பெண் கல்யாணமாகி கனடாவில் வாசம் ! அவர் ஒரு சிறந்த பேச்சாளரும் கூட. அடிக்கடி நடக்கும் பட்டி மன்றங்களில் பங்கெடுத்து பரிசுகள் பல வாங்கியிருக்கிறார்.

சந்தர்ப்பம் கிடைக்கும் போது தன் வீட்டு மொட்டை மாடியில் சொற்பொழிவாற்றுவார். அதற்காக கீற்றுப் பந்தல் அமைத்து கீழே சில இருக்கைகளும் காணப்படும். ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் அவரின் சொற்பொழிவுக்காக நானும் நண்பன் ராமும் காத்துக் கிடப்போம். இயற்கைப் பேரிடர், ஆன்மிகம், சமூக முற்போக்குச் சிந்தனை, ஹாஸ்யம்…இன்னும் பிற விஷயங்கள் பற்றி பேச்சு இருக்கும். கூடவே கலந்துரையாடலும் உண்டு. நாங்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு வெகு அழகாக பதில் சொல்லித் தீர்த்து வைப்பார். கடைசியில் ஸ்நாக்ஸ், டீ யுடன் முடியும்.

போன வாரம் பேச்சோடு பேச்சாக , “ஐயா, எனக்குத் தெரிந்து நீங்கள் எல்லா சப்ஜெக்டிலும் புகுந்து விளையாடி விட்டீர்கள். ஆனால் நீங்கள் தொடாத ‘அமானுஷ்யம்’ என்கிற விஷயம்தான் பாக்கியிருக்கு. வரும் ஞாயிற்றுக்கிழமையன்று அதை வைத்துக் கொண்டால் சுவாரஸியமாக இருக்கும்”. என நான் நைசாக கேட்க, அதற்கு அவர் ஒரு (அமானுஷ்ய) மர்மப் புன்னகையோடு தலையாட்டிவிட்டு “மூர்த்தி! அமானுஷ்யம் ஒரு த்ரில்லிங் சப்ஜெக்ட்! ரியல் இன்ட்ரெஸ்ட் இருந்தால் கேட்க நல்லாயிருக்கும். ஐ திங்க் ‘ஆன்மா’ என்பது கூட அமானுஷ்யம்தான். ஓரளவு எனக்குத் தெரியும். பார்க்கலாம்.” என்றார். கேட்ட எனக்கு பரம திருப்தி! நண்பன் ராமுக்கும் பிடித்திருந்தது, என்பது அவன் முகமே காட்டிக் கொடுத்தது.

அந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டு மணிக்கு ராம் என் வீட்டுக்கு வந்தான். வீட்டில் என் பெற்றோரிடம் சொல்லிக்கொண்டு டூ வீலரில் ராமுடன் புறப்பட்டேன்.

“நண்பா! என் மனசில ஒரு சந்தேகம். என்னன்னா, ஆன்மாவுக்கு அழிவு கிடையாதுன்னு பேசிக்கிறாங்களே! உண்மையா அது?” என ஆரம்பித்தான் ராம்.

நான் வண்டியை நிதானமாக, வெகு கவனத்துடன் ஓட்டியபடி சொன்னேன். “எல்லாரும் பேசுகிற பொதுப்படையான பேச்சு அது! ஒரு உடலில் இருந்து விடுபட்ட ஆன்மா மற்றொரு உடலில் புகுந்து கொள்ளும். அது புழு, பூச்சி , விலங்கு, பறவை ஏன் இன்னொரு மனுஷ ஜென்மமும் எடுக்க கூட ஏதுவாகிறது. செய்கின்ற பாவங்களுக்கேற்ப வெவ்வேறு வடிவங்களில் ஆன்மாவின் பயணம் தொடர்கிறது. பாவமே செய்யாமல் புண்ணியம் செய்வோரின் ஆன்மா சாந்தி அடையும். அவர்களுக்கு மறு பிறவி கிடையாது. ஆனால் அது மிகவும் அரிது!“

“ ……………“

“அதற்காகத்தான் ஒருவர் இறந்துவிட்டால் நாம் ‘மெ ஹிஸ் ஆர் ஹர் ஸோல் ரெஸ்ட் இன் பீஸ்’ ன்னு கண்டலென்ஸ் மெசேஜ்ல சொல்றோம். இல்லையா?”

“அது சரி. அப்போ நீ சொல்றத பார்க்கும் போது ஆன்மா தொடர்ந்து பயணம் செய்து கிட்டேயிருக்கும்னு தெரியறது.”

“ராம், நீயும் நானும் எதுக்கு இப்படி மண்டையைப் போட்டு உடைச்சிக்கணும்! இன்னும் கொஞ்ச நேரத்தில் சங்கர் சார் உன் சந்தேகத்தை தீர்த்து வைப்பார்! அது வரை கொஞ்சம் பொறுமையா இரு.”

வாயை மூடிக்கொண்டான். கொஞ்ச நேரம் எங்களுக்குள் (அமானுஷ்ய) அமைதி நிலவியது.

சிறிது தூரம் சென்றதும் வண்டியை நிறுத்த வேண்டிய நிலைமை! என் வண்டிக்கு முன்னால் நிறைய வண்டிகள் ஆணி அடித்தாற் போல் நின்றிருக்க ஒன்றும் புரியவில்லை.

வண்டியிலிருந்து கீழேஇறங்கினான் ராம். “சரிதான் இன்னிக்கு நாம் சங்கர்ஜியின் பேச்சைக் கேட்ட மாதிரிதான்..” சலித்துக் கொண்டான்.

ஆனால் எதிர்பக்கம் வண்டிகள் வந்து கொண்டிருந்தன. அதுவும் விரைவாக சர் சர் ரென்று பறந்து கொண்டிருந்தன.

“ராம், நாம் போகும் ரோடில் ஆக்ஸிடெண்ட் ஏதாவது நடந்திருக்கும். அதனால்தான் நம்மப் பக்கம் வண்டிகள் எல்லாம் நின்று விட்டன.” என்றபடி கைக்கடிகாரத்தில் மணி பார்த்தேன். 2.30 என்று காட்டியது, இப்போது புறப்பட்டால் கூட 15 நிமிடங்களில் சார் வீட்டை அடைந்து விட முடியும். ஆனால் டிராஃபிக் ஜாம் கிளியர் ஆகவே மணிக்கணக்கு ஆகும் போல் தெரிகிறது. எப்போது கிளியர் ஆகி எப்போது செல்வது? சோர்வு வந்து மனதை ஆட்கொண்டது,

ஒரு வழியாக கிளியராகி வண்டிகள் நகரத் தொடங்கிய போது மணி 3.15 என கைக் கடிகாரம் காட்டியது. ராம் ஏறிக்கொள்ள வண்டியைக் கிளப்பினேன். அரை கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு டாங்கர் லாரி மீடியனில் மோதி குறுக்காக நின்று கொண்டிருந்ததால் பின்னால் வந்த வண்டிகள் போக முடியாது நிலைமை! சரி செய்ய முக்கால் மணியாகி விட்டது.

சார் வீட்டை அடைந்த போது 3.30 மணியாகிவிட்டது. ஆனால் வாசலில் நிறைய டூ வீலர்கள், கார்கள் நின்று கொண்டிருக்க எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

ஒருவேளை ஆன்மா சப்ஜெக்ட் நிறைய பேர்களை ஈர்த்து வர வழைத்து விட்டதோ என்ற வியப்பு தோன்றியது.

வாசலில் ஷாமியானா பந்தல் போடப்பட்டுஅதன் கீழ் இருக்கைகளில் பலர் அமர்ந்து கொண்டிருந்தனர். அப்போதும் சார் ஒருவேளை நிகழ்ச்சியை வீட்டு வாசலில் வைத்து விட்டாரோ என்ற சந்தேகமும் என் மனதில் தோன்றியது.

ஆனால் அமர்ந்து கொண்டிருந்தவர்கள் முகங்களில் சோகம் குடி கொண்டிருக்க எனக்கு பகீர்ரென்றது. இதற்குள் ராம் அங்கிருந்த ஒருவரிடம் விசாரித்து என்ன விஷயம் என்பதை அறிந்து கொண்டு, கண் கலங்க என்னிடம் கூறினான். அதாவது 3 மணிக்கு தன் பேச்சை ஆரம்பிக்க இருந்த சங்கர்ஜி அவர்கள் நண்பகல் 12 மணிக்கு மாரடைப்பால் காலமானார் என்ற செய்திதான் அது! கேட்டதும் அதிர்ச்சியுற்றேன். எத்தனை உயர்ந்த மனிதர்! நல்ல பண்பு உள்ளவர்! காலன் இந்த நல்ல வரை இவ்வளவு சீக்கிரத்தில் அழைத்துக் கொண்டானே என்ற வேதனை என் நெஞ்சைக் கவ்வியது.

‘ஆன்மா’ வைப் பற்றி தியரேடிகலாக பேச இருந்தவர் ப்ராக்டிகலாக செய்து காட்டி விட்டது போல் உணர்வு தோன்றிட நெஞ்சு முழுக்க கனத்துப் போனது எனக்கு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *