ஒரு வேத விருட்சமும், சில விபரீத முடிவுகளும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 18, 2014
பார்வையிட்டோர்: 16,714 
 
 

நாதியற்றுத் தெருவுக்கே வந்துவிட்ட, தடம் புரண்டு போன தறுதலைச் சமூகத்தின் பெயர் சொல்ல வந்த முதல் வாரிசு போலப் போதையேறித் தள்ளாடிச் சரிந்து விழும் ஒரு பேதையாக, அப்போது ஆஷா அவன் காலடியில் கிடந்தாள். திருமண முதல் இரவன்றே கேசவன் முகம் கொடுத்து எதிர்கொள்ள நேர்ந்த மிகவும் கசப்பான ஒரு கொடிய அனுபவமாய் அது அவனை வதைத்தது. தான் வாழ்கின்ற இனியும் வாழ விரும்புகின்ற தமிழ்ப் பண்பு நிலை தவறாத, புனிதமான சத்திய வாழ்க்கையின் மாசற்ற பெருமைகளுக்கே ஒரு களங்கம் போல வந்து சேர்ந்த அவளைத் தன் மனைவியென்று ஏற்க முன் வந்த தன் இயலாமையை எண்ணி இப்போது அவன் தன்னையே நொந்து கொண்டான்.

தன்னைக் கஷ்டப்பட்டு ஆளாக்கிய அம்மாவை மனம் குளிர வைக்க வேண்டுமென்ற ஒரே ஒரு காரணத்துக்காகவே ஆஷாவை மணம் முடிக்க அவன் சம்மதித்தான். சிறு வயதிலிருந்தே, லண்டனில் பணம் காய்க்கும் மரத்தோடு மட்டுமே ஒன்றுபட்டு, அதுவே வாழ்வாக வாழ நேர்ந்ததால், அவளது சுயம் விட்டுப் போன நடத்தைகள், அசல் வெள்ளைக்காரத்தனத்தோடு, அவன் கண் முன்னாலேயே, கொடி கட்டிப் பறப்பதாய் அவன் மிகவும் மன வேதனையோடு நினைவு கூர்ந்தான். அப்படி அவளையறியாமலே உச்சத்தில் பறக்க நேர்ந்த கண்மூடித்தனமான அந்த மேலோட்டமான கொடியின் அசுரகதி சுழற்சிக்குப் பின்னால் பரிதாபகரமாக மறைந்து உயிர் விட்டுக் கிடக்கும் அவளே அறியாமல் போன, உண்மையான பெருமைகளை எண்னித் தானே தீக்குளித்துக் கருகுவதாய் இப்போது அவன் உணர்ந்தான். கறைத் தீட்டுப் படியாத ஒரு புனித உறவாக அவனுக்கு ஆஷாவுடன் ஏற்பட இருந்த ஆத்மார்த்தமான உணர்வும் உடலும் சார்ந்த இனிய அனுபவங்கள், பொருளற்றுப் போன களையிழந்த வெறும் வரட்டு நாடகமாகவே ஒப்புக்கு நடந்தேறியது.இப்படி நடந்தேறிய இன்னும் நடக்கின்ற அவன் வாழ்வோடு தவிர்க்க முடியாமலே வந்து பொருந்தி விட்ட, இந்த உயிர் மரத்து வெறுமை கொண்டிருக்கிற மனம் ஒழிந்து போன வரட்டு அனுபவங்களும் அதைத் தொடர்ந்து வரப்போகிற மிகப் பெரிய சவால் போன்றதொரு வாழ்க்கை நிலையும் தனக்கு ஏற்பட்ட ஒரு சாபமாய்த் தன்னுடனேயே முடிந்து போக வேண்டுமென்று அவன் பிராத்தனை செய்தான்.

அம்மாவோ இதையெல்லாம் கண்கூடாகக் கண்ட பிறகு, ஆஷாவை முற்று முழுதாகக் கைகழுவி விலக்கி விட வேண்டுமென்றே அவனுக்கு யோசனை கூறிய போதிலும், அவன் அதை ஏறக மறுத்து விட்டான். சுத்தமான ஒரு தமிழ் வாலிபனைத் தேடி ஆஷாவும், அவளின் குடும்பத்தாரும் வலை விரித்த போதே, அம்மாவுக்கு இது உறைத்திருக்க வேண்டும். உள்ளூரிலேயே சில சமயம் நன்கு விசாரித்து நடந்தேறுகின்ற திருமணங்களே சரி வருவதில்லை. இப்படி வரன் தேடி வெளிநாட்டிலிருந்து வருகிறவர்களைத் தீக்குளிக்க வைத்துத்தான், புடம் போட்டுப் பார்க்க பேண்டிய நிலைமையில் அம்மாதான் என்ன செய்வாள்?

பணம் காய்க்கும் மரமொன்றையே பெரிதாக நம்பி, கையில் விசா மட்டுமே கிடைதால் போதுமென்ற அவசர புத்தி அவளுக்கு. இதற்குக் கேசவனைப் பலியாக்கி விட்டு அறுத்து விடு என்று சொன்னால் முடிகிற காரியமா? அப்படி அம்மா நினைப்பதற்கு அவனது இந்தக் கல்யாணம் வெறும் விளையாட்டாக நடந்தேறிய ஒன்றல்ல!

மந்திர வேத கோஷங்கள் ஒலிக்க சத்திய நெருப்பென்ற அக்கினி சாட்சியாக, அவனுக்கும் ஆஷாவுக்குமிடையிலான அந்தத் திருமண வேள்வி நடந்தேறியதே. ஆஷாவை இப்படி இனம் கண்டபின் அவளைத் துறந்து விட வேண்டுமென்று மனதால் நினைப்பது கூடப் பாவமென்று அவன் கருதினான்.

இனியென்ன, ஆஷாவுடன் அவன் கப்பலேறக் கைக்கு விசாவும் வந்து விட்டது. ஒரு காசு மரத்தைத் தேடி, அவன் ஆஷாவுடன் சேர்ந்து லண்டனுக்குப் போவதற்காகக் கால் முளைத்து இறக்கை விரித்துக் கப்பலில் பறக்கப் போகிறான். புறப்படும் போது அம்மாவைத்தான் முகம் கொண்டு பார்க்க முடியவில்லை. இப்படிப் பறக்க எழுந்த அவனின் சிறகுகள், இடையில் கருகிப் போகாமல் நல்லபடி பிழைக்குமா என்றுதான் அவளுக்குப் புரியவில்லை. அது பற்றி , அவள் மனம் குழம்பி யோசித்துக் கொண்டிருந்த போது, அவளை ஆறுதல்படுத்தி அவன் கூறினான்.

“அம்மா! கவலையை விடுங்கோ எல்லாம் நல்லபடி நடக்கும். எனது சகவாசம் இவளையும் மாற்றும். பொறுத்திருந்து பார்ப்போம். தங்கைச்சிமாரைக் கவனமாகப் பாருங்கோ. நான் காசு அனுப்புகிறன்“

அதற்குப் பிறகு அவள் சிரித்துக் கொண்டே மனம் நிறைந்த ஆசியுடன் அவர்களை வழியனுப்பி வைத்தாள்.அப்போது அவனின் சகோதரிகளிருவரும் அவளருகே முகம் களை ஏறி நின்று கொண்டிருந்தனர். அவன் அனுப்பப் போகிற அந்தப் பணமென்ற மாய விளக்குக் கைக்கு வந்தால், அவர்களும் ஒரு நாள் இப்படித்தான் கப்பல் ஏறக்கூடும். அது விரைவில் வருமென்று அவர்கள் நம்பினார்கள். நம்பிக்கைதான் வாழ்க்கையென்றாலும் அது மெய்யாகிவிடவில்லை கேசவன் அவர்களை விட்டுப் போனபின் , அவன் மீது அவர்கள் கொண்ட அந்த நம்பிக்கைக் கவசமே அவர்களைக் காக்கும் ஒரு வரம் போலானது.

அவன் ஆவலோடு லண்டனுக்கு வந்து சேர்ந்த பிறகுதான் புரிந்தது.. இது காசு மரம் காய்க்கும் இடமல்ல. எல்லாம் ஒழிந்து போன ஒரு மொட்டை மரத்தினடியின் கீழ் தான் வந்திருப்பதாய் அவன் பெரும் மனவேதனையோடு நினைவு கூர்ந்தான் ஆஷாவை மணக்க நேர்ந்ததால் இனி இது மாறாது என்று தோன்றியது. கொழும்பில் தாய் மண்ணோடு இருந்த வரைக்கும் தான் அவன் சாகாவரப் பெருமைகளுடன் கூடிய ஒரு வேத விருட்சம் அந்த மரத்தினடியில் அப்படி வாழ்ந்த நிலையில் கவலைகளேதுமற்ற தெளிந்த நீரோடை மாதிரி அவன் வாழ்க்கை இருந்ததே!

அவன் ஏ ல் மட்டுமே படித்திருந்தாலும் கணித மூளையிருந்ததால் கொழும்பில் ஒரு சாதாரண அக்கெளண்டனாக வேலையில் சேர்ந்து படிப்படியாக முன்னேற்றம் கண்டு வந்தவன் அவன். திடீரென்று ஆஷாவின் குறுக்கிட்டால் எல்லாம் தலை கீழாக மாறிப்போனது.

அம்மாவுடனும், உடன் பிறப்புகளுடனுமான அந்த வாழ்க்கையே அவனுக்கொரு தவம் மாதிரி.அப்பா காலமான பிறகு அவர்களுக்கு எல்லாமே அவன் தான். அவர்களுகான அந்தக் கடமை வேள்வியைப் பங்கமின்றி நிறைவேற்றவே அவன் அரை மனதோடு லண்டன் வந்து சேர்ந்தான். அங்கு வந்த பிறகுதான் புரிந்தது இது வெறும் மொட்டை மரம்தானென்று ஆஷாவின் தடம் புரண்டு போன , சகதி குளித்து எழும் நடத்தைகளைப் பார்த்த பிறகே , அவனுக்கு அது ஒரு வெட்ட வெளிச் சூனிய ஞானோதயமாக மனதில் உறைத்தது அது அவனுக்கு மட்டுமே ஏற்படக்கூடிய ஒன்றாய் மனதைக் கூறு போட்டுப் பிளந்து கொண்டிருப்பதாய் அவன் வேதனை கொண்டான். அவன் எதிர்பார்த்து வந்தபடி அம்மாவுக்குப் பணம் அனுப்புவதற்கு வசதியாக ஏற்ற வேலையும் அவனுக்குக் கிடைக்கவில்லை அப்படித்தான் ஓரிரண்டு கிடைத்தாலும் அவை கூடத் தற்காலிகமானதாகவே கை நழுவிப் போய் விடுகிற நிலைமைதான்.

ஆஷா இருக்கிற நிலைமையில் அது கூட முக்கியமில்லையென்று படும் அவள் தான் தினமும் வேலைக்குப் போய் வருகிறாளே இது உல்லாசமாக அவள் பொழுதைக் கழிக்க அவளுக்காக வளர்த்த மாமன் தேடி வைத்த திரண்ட சொத்தே ஒரு தலைமுறைக்குப் போதும். இந்தத் திரண்ட சொத்தின் நடுவே அவளே குடி முழுகிப் போகிற நிலைமைதான்.

அவள் இப்படியெல்லாம் ஆட்டம் போடச் சொந்தமாகவே ஆடம்பர வீடு கார் எல்லாம் உண்டு. இருந்துமென்ன இருபது வயது கூட நிரம்பாத இந்தச் சின்னஞ்சிறு பேதைப் பெண், இப்போது வெறும் செல்லாக் காசுதான். உடல் உளுத்துப் புரையோடிச் செல்லரித்துப் போகுமளவுக்கு அவளின் குடிபோதை வெறியாட்டம் அவன் கண் முன்னாலேயே அரங்கேறிக் களை கட்டி, நிற்கும். அவள் எப்படிக் கெட்டுக் குட்டி சுவராய் போனால்தானென்ன லண்டன் மண்ணில் பணமென்ற மாய விளக்கினால், ஒளி கொண்டு பிரகாசிக்கின்ற ஒரு துருவ நட்சத்திரம் மாதிரி அவள் இருப்பதாய் உலகம் நம்புகிறதே ஆனால் அவன் அங்கே கண்டது என்ன? வெறும் மொட்டை மரம்தானென்று அவன் சொன்னால் முரண்பாடாய் யோசிக்கிற உலகம் இதை நம்புமா? அதனால் பேச்சற்ற மெளனமே சிறந்ததென்று நம்பி அவன் அந்த மொட்டை மரத்தினடியில் அதுவே தவமென்று கிடந்தான் இது கூட ஆஷாவின் மனம் திருந்திய நல்மாற்றங்களின் பொருட்டு அவன் செய்கின்ற தவம். அது கை கூடி வருமா என்று தெரியவில்லை. காலம் பதில் சொல்லுமென்று காத்திருக்கிறான். காலம் மாறுமென்று காத்திருந்த அவனுக்குத் தான் நெஞ்சு முழுக்க வலி அதன் உச்சக்கட்ட வேதனையின் சுவடு கூடப் படாத மறு துருவத்தில், இருப்பது போலவே அவளின் உயிர் விட்டுப் போன நடத்தைகளும், அதன் நிலை குலைய வைக்கிற குரூர இருளும், இந்த இருள் விடுபடாத நிலயிலேயே, மீண்டும் ஒரு நாள் அவள் அலங்கோலமாக அவனின் காலடிக்கு அவசரமாகவும் அழுகையோடும் வந்து சேர்ந்தாள். இப்படி ஒரு நாளும் அவள் வந்ததேயில்லை.

இன்று அதிசயமாக அவன் நித்திய இருப்பாக வாழ்கிற களை இழந்த அவனின் அந்த மொட்டை மரத்தினடியின் கீழ் அவளும்.. என்ன நடந்தது அவளுக்கு? அவளின் அழுகைச் சத்தம் கேட்டு , வழக்கமான மோன நிலை கலைந்து திடுக்கிட்டு விழித்து அவன் பார்த்த போது, அவள் உயிர் மரத்துப் போன வெறும் நடைப் பிணமாக நிலை குலைந்து தள்ளாடிச் சரியும் நிழற் கோலமாக எதிரே நின்று கொண்டிருந்தாள். அப்படி வந்து நிற்கிற அவளை நேர் கொண்டு பார்க்க மனம் வராமல், எங்கோ மனம் சஞ்சரித்துப் பார்த்தவாறே அவசர தொனியில் குரல் பதற அவன் கேட்டான்.

“என்ன நடந்தது ஆஷா? ஏன் அழுகிறாய் இப்ப?”

“நான் சாகப் போறன் என்ரை கதை முடிஞ்சு போச்சு. இனி எதுக்கு நான் இருக்க வேணும்?

அவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. அவள் என்ன கூறுகிறாளென்று புரியவில்லை. அவள் வழியில் மிகவும் மோசமாக ஏதோ நடந்திருக்க வேண்டுமென்று அவன் நம்பினான்.. அவள் வழியில் தவிர்க்க முடியாமல் நேர்கிற இந்தத் தவறுகள், அவளுக்கொன்றும் புதிய அனுபவங்களல்லவே. அதற்குப் போய் அவள் சாவதா? அப்படிச் சாவதை விட இப்பாவங்களிலிருந்து அவள் விடுபட்டு விடுதலையானலே போதும்/ அவன் பெரிதாக நம்பி வந்த விருட்சமும் தழைக்கும் அதை வெளிப்படையாக மனம் திறந்து பேச இதுவே கடைசித் தருணமென்று அவனுக்குப் பட்டது. அதை நினைத்து ஆவேசம் கொண்டவன் போல, அவளின் கைகளை ஸ்பரிசித்து அன்போடு தடவி விட்ட வாறே நெகிழ்ந்த குரலில் அவன் கூறினான்.

“ஆஷா! சாவு உனக்குப் புதிசில்லை எப்பவோ ஒரு நாள் நான் காணாத நாளில் நீ உன் சுயமிழந்து அடியோடு செத்துப் போனவள் தானே. இப்படிச் செத்து விட்ட உனக்கு,உயிர் கொடுக்கவே நான் இங்கு வந்து சேர்ந்த தவமெல்லாம் இப்படிக் கழிகின்ற என்னுடைய ஒவ்வொரு பொழுதும் வீணாகவே கழிந்து போனதை எண்ணி இப்ப வருத்தப்பட்டுப் பலனில்லை. நீ இனி ஒன்றும் புதிதாகச் சாக வேண்டியதில்லை எப்பவோ செத்துப் போன உன்னைப் பிழைக்க வைக்கிற மருந்தாக நானிருப்பன் தயவு செய்து அதை மறந்து விடு”

முற்றாகவே உணர்வுகள் மரத்துப் போன நிலையில், அவன் கூறுகிற அந்த வேதம் கூட அவளுக்குப் பிடிபடவில்லை. அவளின் தீராத நோய்க்குத் தெய்வீக மருந்தளிக்கிற ஒரு கடவுளாகவே அவன் இருந்து விட்டுப் போகட்டும். ஒன்று திரண்ட காசுக் குவியலே கடவுளென்று நம்பிச் சோரம் போய் விட்ட அவள் கண்களுக்கு இனிக் கடவுளாவது பூதமாவது அவன் சாட்சியாக இருக்க்ச் உயிர் விடுவதே மேல் என்று அவள் நம்பினாள். அடுத்த கணமே அவள் அங்கு நிற்கவில்லை ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து அவள் பல்கனிச் சுவரேறி உயரத்தில் இருந்து தரையில் குதித்து விழும் போது அதைத் தடுப்பதற்கு அவன் பின்னால் ஓடி வந்து தடுத்தும் பிரயோசனமிலாமல் போய் விட்டது இந்தப் பரிதாபச் சாவை எண்ணி ஊரே கூடி அழும் என்று அவனால் நம்ப முடியவில்லை.

அவளது இந்தப் பரிதாபச் சாவை நேரில் கண்ட பிறகு அதை லேசில் மறந்து போகக் கூடிய ஒரு சாதாரண சம்பவமாக எண்ணி மறந்து விட அவனால் முடியவில்லை. அவளை நல்லபடி காப்பாற்றி வாழவைக்க முடியாமல் போன, தன் இயலாமையை எண்ணி அவன் தன்னையே நொந்து கொண்டான். அவளது இந்த விபரீத மரணத்தையொட்டி பொலீஸ் விசாரணையுடன் கூடிய கெடுபிடியெல்லாம் முடிந்து அவளது தகனக் கிரியைகளைத் தானே முன்னின்று நடத்திவிட்டுச் சூனியமாகிப் போன அந்த மொட்டை மர இருப்பு நிழலை விட்டு அவன் வெளியே வர வெகு நாள் பிடித்தது.

அதன் பிறகு லண்டனில் இருக்க அவனுக்குப் பிடிக்கவில்லை. பிறந்த மண்ணே கதியென்று வெறும் கையோடு அவன் திரும்பி வந்ததில் அம்மாவுக்குப் பெரும் அதிர்ச்சிதான். அதை வெளிக்காட்டாமலே போலியாகச் சிரித்தபடி அவனை வாசலில் கண்டவுடன் அவள் கேட்ட முதல் கேள்வி இதுதான்.

“என்ன தம்பி? சொல்லாமல் கொள்ளாமல் வந்திட்டாய்? ஆஷா எங்கை,அவளையும் கூட்டி வந்திருக்கலாம் தானே”

அதற்கு அவன் கவலை மாறாமலே மனம் நிம்மதியிழந்து சோகமாகக் கூறினான்.

“அம்மா! காசு மரம் அவளை விழுங்கிப் போட்டுது என்று சொன்னால் நீங்கள் நம்ப மாட்டியள், இது தான் உண்மை. அவள் இப்படிச் செத்தொழிந்து போன பாவத்தை நேரிலே பார்க்க நேர்ந்த பாவக் கறை மட்டும் தான் ஓர் அழியாத கறையாக என்னோடு ஒட்டிக் கொண்டிருக்கு இந்தக் கறை நீங்கி அவளைக் கங்கை குளிக்க வைத்துப் புனிதமாக்கவே, விரும்பினேன் எல்லாம் வீணாய்ப் போச்சு காசு மரம் காய்க்குமென்று நம்பி ஒரு மொட்டை மரத்தைக் காண நேர்ந்த தோஷம் தான் இப்ப என்னிடம் மிஞ்சியிருக்கு. காசு மரம் தான் வழக்கமான பாஷை மனிதரெல்லாம் தேடும் இலக்கு அப்படியிருக்க இதென்ன புது வேதம் அவன் வாயிலிருந்து.

அப்படியான பிறகு அவன் தனது உயிராகவே எண்ணிப் பெரிது படுத்திய அந்த வேத விருட்சமென்ற புனித இருப்பு நிலையும் வியாபகமான அதன் தெய்வீக ஒளியும் அவன் கண்களில் படாமலே இருள் மூடி மறைந்து போயின அதன் சாசுவதப் பெருமைகள் கொண்ட நிழல் கூடப் படாத மறு துருவத்தில் இலைகள் உதிர்ந்து கருகிப் போன வெறும் மொட்டை மரமாகத் தான் எங்கள் மனிதர்களுடைய வாழ்க்கை நிழல் கொண்டு வெறிச்சோடிக்கிடப்பதை அவள் என்றுதான் அறிந்து கொள்ளப் போகிறாள்? அவள் போன்று கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று ஓடி இப்படிச் சகதி குளித்தே வாழ்ந்து பெருமையிழந்து நிற்கும் மனிதர்களப் பொறுத்தவரை மரமாவது மண்ணாவது அவன் கண்களுக்கு மட்டும் தான், வானளாவ நெடிதுயர்ந்து நிற்கும் அந்த வேத விருட்சம்.

மல்லிகை
டிசம்பர் 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *