ஒரு வார்த்தை பேச …….

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 14, 2013
பார்வையிட்டோர்: 17,084 
 
 

“அனாமிகா இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் வந்துடும்மா, அந்த பல்லாவரம் பையன் ஏழு மணிக்கு உன்னை பெண் பார்க்க வருகிறாராம் பிளீஸ்”, அப்பா ஆவுடையப்பன் கெஞ்சினார்.

வந்த ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு அப்பாவின் வேண்டுகோளுக்கு செவி சாயித்து சரி என்றாள் அனாமிகா.

செருப்பை மாட்டிக்கொண்டு வீட்டை விட்டு இறங்கி நடந்தாள். கூடவே அவள் மனசும் நடந்தது.

‘இத்துடன் பத்து ஆண்கள் பெண் பார்த்துவிட்டு போய்விட்டனர், வருபவன் எல்லாம் பகற்கொள்ளை காரர்களாகவே இருந்தனர். எல்லாம் பிடித்தும், வரதட்சணை பேச்சால் வெளி நடப்பு செய்தார்கள்.

பெண்ணை பெற்று விட்டால் என்ன அவர்கள் கேட்பதற்கெல்லாம் தலையாட்ட வேண்டுமா என்ன? பாவம் அப்பா ,அம்மா, என்னை பெற்றதற்காக எவ்வளவுதான் தாழ்ந்து போவார்கள்?

பிள்ளையைப் பெற்றுவிட்டால் கொம்பா முளைத்துவிடும்? பேசும் தோரணை, நடப்பு, எல்லாவற்றிலும் ஒரு மதர்ப்பு, திமிர். இந்த பல்லாவரம்காரன் மட்டும் மனசை பார்க்கவாப் போறான்?இவன் என்னென்ன கேட்கப்போறானோ?.

நடக்கிறப்ப நடக்கட்டும் என்றால் பெற்றவர்கள் கேட்கிறார்களா? அவர்கள் கடமையை முடிக்கவேண்டுமாம் .இவர்களால் நான் வருபவர்கள் முன் அவமானப்பட்டுக்கொண்டிருக்கிறேன், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், எந்த ஆசையும் இல்லாமல் யந்திரம் போன்று நிற்க வேண்டியுள்ளது என்று மனதுக்குள் புலம்பியபடியே அலுவலகம் வந்து சேர்ந்தாள்.

அலுவலகத்திற்குள் நுழைந்து விட்டால் போதும் மற்ற எந்த நினைவும் வராது அவளுக்கு வேலையில் ஒன்றிவிடுவாள், நேரம் போனதே தெரியவில்லை. பியூன் வந்து மேனேஜர் கூப்பிடுவதாக சொன்னபோதுதான் மணியைப் பார்த்தாள் மணி மூன்று நாற்பது. அவசரமாக எழுந்து போனாள்.

“மே ஐ கமின்?’

“எஸ் கமின் ”

“என்ன சார்?’

“நான் சொன்ன வேலையெல்லாம் முடிச்சுட்டீங்களா? நந்தா பில்டர்சுக்கு அனுப்ப வேண்டிய தபால்கள் எல்லாம் போஸ்ட் ஆயிடிச்சா?’

“எல்லாம் முடிஞ்சுடுச்சு சார், தபால்களை மணியிடம் கொடுத்து போஸ்ட் பண்ணிடறேன், சார் ஒரு ரிக்வெஸ்ட், நாலு மணிக்கு வீட்டுக்குப் போகணும் வித் யுவர் பர்மிஷன்”

“ஒ,வழக்கம் போலவா? போயிட்டு வாங்க”

அவர்கள் பேசுவதை கேட்க கேட்க அனாமிகாவிற்கு அவமானமாக இருந்தது, ஒவ்வொருமுறையும் பர்மிஷன் கேட்பதும், அடுத்தநாள் அலுவலகமே ஆவலாய் முகம் பார்ப்பதும் …ச்சே நொந்துகொண்டு புறப்பட்டாள். பெற்றவர்களுக்காக வந்து நின்றால் பிள்ளை வீட்டார்முன்.

பிள்ளை வீட்டார் ஒருவருக்கொருவர் திருப்தியுடன் புன்னகைத்துக் கொண்டனர் .சீர் வரிசைப் பற்றி பேச ஆரம்பித்தனர்: ஆவுடையப்பன் சார், ஜாதகப்பொருத்தம் ஓகே, பெண் கல்யாணத்துக்கப்புறம் வேலையை விட்டுடனும், உங்களுக்கு ஒரு பெண்தான், இந்த வீட்டையும், இதுவரை சம்பாதித்த பணத்தையும் என் பையன் பேருக்கு எழுதி வச்சுடுங்க, நகை நட்டெல்லாம் உங்க பெண்ணுக்கு என்ன போடணுமோ, அதை போட்டுடுவீங்க ன்னு தெரியும், கல்யாணத்தை விஜய சேஷ மகாலில் வச்சுருங்க ஏன்னா எங்களுக்கு பெரிய மனுஷங்க வருவாங்க ”

அனாமிகாவிற்கு ரத்தம் கொதித்தது ,,பெற்றவர்கள் கண்களாலேயே அமைதியாய் இருக்க கெஞ்சினர்

அலமேலுவும் ,ஆவுடையப்பனும் விழி பிதுங்கி நின்றனர் ,ஆனாலும் பெண்ணுக்கு திருமணம் நடக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் .

“பெண்ணையே உங்களுக்குத்தரும்போது சொத்தை பற்றியென்ன? எங்களுக்குப்பின்னால் இந்த வீடு அவளுக்குத்தானே?”

அலமேலு சாதாரணமாய் சொன்னாள் .

“அலுவலகத்தில் பல ஆண்களோடு வேலை பார்த்த பெண் ,அவளை கல்யாணம் பண்ணிக்கிரதுன்னா சாதாரணமா? எங்க சொந்தக்காரங்க வேலைக்குப்போற பெண்ணை கல்யாணமே பண்ணிக்கமாட்டாங்க, உங்க பெண் கொஞ்சம் முன்ன பின்னே இருந்தாலும் பெரிய மனசு பண்ணி நாங்க பண்ணிக்கிறோம் அதுக்கே நீங்க நாங்க கேட்காமலேயே நிறைய சீர் செய்யணும்’.

இதைக்கேட்டதும் வெகுண்டாள் அனாமிகா ,ஆனாலும் அடக்கிக்கொண்டு “நான் ஒரு வார்த்தை பேச அனுமதிப்பீங்களா” என்று கேட்டாள். பையனின் தந்தை “தாராளமா பேசும்மா” என்றார்

“பிளீஸ் கேட் அவுட்’ என்றால் அனாமிகா பிள்ளை வீட்டாரைப்பார்த்து.
“ஒ இத்தனை அதிகப்படியா? நல்ல வேலை தப்பிச்சோம், வாங்க போகலாம்” என்றால் பிள்ளையின் அம்மா

அவர்கள் போனதும் அலமேலு “என்னடி இது, ஒரு வார்த்தை பேசனுமுன்னு சொல்லிட்டு இப்படி எடுத்து எரிஞ்சு பேசிடியே” என்று கேட்டாள்.

‘அம்மா, வரவனெல்லாம் சொத்தை மட்டும்தான் விரும்பறான், என்னை புரிந்துகொள்ள முடியாதவர்களால் என்னை வாழவைக்க முடியும்னு நான் நினைக்கலை, நீங்க கொடுத்த கல்வி இருக்கு, அந்த கல்வியால கிடைச்ச வேலை இருக்கு. அது உங்களுக்குப் பின்னாலேயும் என்னை வாழவைக்கும்னு நம்பிக்கை இருக்கு. இந்த துணியை விடவா பெரிய துணை எனக்கு கிடைக்கப்போகுது? ஊருக்காக கவலைப்பட்டு என்னை கண்ணீர் கடலில் தள்ளிடாதீங்க, இனிமே திருமண பேச்சே வேண்டாம் அது தானா நடந்தா நடக்கட்டும் இல்லேன்னாலும் கவலை இல்லே, என் படிப்பும் வேலையும் மட்டும் போதும்” வைராக்கியமாய் பேசினாள் அனாமிகா .

தினமலர் பெண்கள்மலர் 15-10-2005

பெயர்: சரஸ்வதி ராஜேந்திரன் புனை பெயர்: மன்னை சதிரா ஊர்: மன்னார்குடி இந்த வலைப்பூவில் எனது சின்ன சிறுகதைகள் வலம் வரப்போகிறது நிண்ட தூரம் நடந்தாலும் பரவாயில்லை என்று குறிப்பிட்ட இடம் தேடிப்போய் காபி குடிப்பார்கள் சிலர். காரணம், அந்த காப்பி இன் தரத்திற்காக. காப்பிஇன் மனம் மனதை மகிழ்விக்கும் சுவை நாக்கில் நிற்கும், அதே போல் இந்த வலைப்பூவில் வலம் வரும் சின்ன சிறுகதைகளில் தரம், மனம், சுவை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *