(2000ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-5 | அத்தியாயம்-6
ஊட்டி கான்வென்ட்டை அடைந்து மேலாளரை சந்தித்து விஷயத்தைக் கூறினான் மாணிக்கத்தின் மெய்க்காவலன். அங்கிருந்த சிஸ்டர் ஒருவரைக் கூப்பிட்டு, பாபுவை அழைத்து வரும்படி உத்தரவிட்டார் மேலாளர்.
சிறிது நேரத்தில் பாபு, அங்கு வந்தான். தேவகி வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் தாம் இருப்பதாக அறிமுகப் படுத்திக்கொண்ட மெய்க்காவலன். “தம்பீ, உன் அம்மாவுக்கு உடம்புக்குச் சரியில்லே, உன்னை உடனே கூட்டி வரச் சொன்னாங்க!” – என்று கூறி தேவகியின் கடிதத்தை பாபு விடம் தந்தான்.
கடிதத்தை வாங்கிப்படித்து முடித்த பாபு, அழ ஆரம்பித்தான். ‘அம்மா… அம்மா’ என்று சொல்லிக் கொண்டே, மேலாளரின் முகத்தைப் பார்த்தான்.
“போயிட்டு வா பாபு” என்று அவர்கூறி, தேவகியின் கடிதத்தை வாங்கி வைத்துக் கொண்டு அவனை அனுப்பி வைத்தார். கான்வென்ட் வாசலில் நின்ற இம்பாலா காரைப் பார்த்த பாபுவுக்கு வியப்பாக இருந்தது. தயக்கத்துடன் அந்தக் காரில் ஏறி அவன் பின்சீட்டில் உட்கார்ந்தான். கார் புறப்பட்டது.
ஊட்டியிலிருந்தே, படுவேகமாக வந்தது அந்தக் கார். மேட்டுப்பாளையம் வரையில் சாலையின் அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தாலும் ‘அம்மாவுக்கு என்னவோ ஏதோ’ என்று பாபுவின் மனம் அடித்துக் கொள்ளத்தான் செய்தது.
மேட்டுப்பாளையம் நகர எல்லையைத் தாண்டி, காட்டுப் பாதைக்குள் கார் போகும்போது பாபு கேட்டான்.
”ஊரைத் தாண்டிப் போறோமே?”
காரை ஓட்டிக்கொண்டிருந்த மெய்க்காவலன், “உங்க அம்மா இப்போ ஒரு பங்களாவில் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்காங்க… அங்கேதான் போறோம்!”- என்றான் பாபுவைத் திரும்பிப் பாராமலே.
பாபுவுக்கு குழப்பமாக இருந்தது. ஆனாலும், மேட்டுப்பாளையம் நகரை விட்டுக் கார் செல்லும் பாதைகளைக் கவனமாகப் பார்த்துக் கொண்டே வந்தான்.
திடீர் என்று காரின் வேகம் குறைந்தது. சாலையின் எதிர் திசையைப் பார்த்தான் பாபு. சாலையின் குறுக்கே செடி, கொடிகள் நிறைந்த ஒரு மலை இருந்தது. அந்த மலையைத் தாண்டிச் செல்ல முடியாது என்று அறிந்த பாபு, பக்கவாட்டில் பாதைகள் இருக்கின்றனவா என்று பார்த்தான், இல்லை.
“பாதை மாறி வந்துட்டோமா?” என்று பாபு கேட்டான்.
அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமலே காரை நிறுத்திய மெய்க்காவலன், காரின் ஹாரனை அழுத்தி மூன்று முறை ஒலி எழுப்பினான். உடனே அந்த மலை இரண்டாகப் பிளந்தது. கார் உள்ளே நுழைந்ததும் மீண்டும் மலை இணைந்து கொண்டது.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த பாபுவுக்கு பயம் ஏற்பட்டது. எல்லாம் ஒரே மர்மமாக இருப்பதாகத் தோன்றியது. பேசாமல் கலவரத்துடன் காரில் உட்கார்ந்திருந்தான்.
மாணிக்கத்தின் மர்ம மாளிகைக்குள் கார் நுழைந்து, தேவகி இருக்கும் அறையின் வாசலில் நின்றது.
பாபுவை அழைத்துக் கொண்டு தேவகியின் அறைக்குள் சென்ற மெய்க் காவலன், அவனை அங்கே விட்டுவிட்டுத் திரும்பிவிட்டான்.
கட்டிலில் சோர்வுடன் உட்கார்ந்திருந்த தேவகியைப் பார்த்ததும் ஓடிச்சென்று “அம்மா!” என்று கூவியவாறு கட்டிக் கொண்டான் பாபு. அவளும் அவனைச் சேர்த்து அணைத்துக் கொண்டு அழுதாள்.
அந்தச் சமயத்தில் அங்கு மாணிக்கம் வந்தான். பாபுவைப் பார்த்ததும் அவன் புன்னகைத்தான்.
“இப்பத்தான் வந்தியா தம்பி?” என்று பரிவுடன் கேட்டான்.
மாணிக்கத்தையும், அந்த மாளிகையையும் பார்க்கவே பாபுவுக்கு பயமாக இருந்தது. எனவே மாணிக்கத்தின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் பயத்துடன் தலையை மட்டும் ஆட்டினான்.
“வெரிகுட்!” என்ற மாணிக்கம், இரண்டு முறை கைதட்டினான். இரண்டு பணிப்பெண்கள் வந்தனர். “பாபுவை எந்தக் குறையும் இல்லாமே கவனிக்கணும்!” என்று உத்தரவிட்டான். பிறகு அந்த அறையை விட்டு வெளியேறி விட்டான்.
தன்னைக் கட்டிப்பிடித்தபடி பயத்துடன் உட்கார்ந்திருந்த பாபுவின் காதோடு காதாக தேவகி பேசினாள்:
“பாபு, பயப்படாதே! இப்போ நான் சொல்றதை கவனமாக் கேளு!”
தலையை ஆட்டினான் பாபு.
“இப்போ வந்துட்டுப் போனானே… இவன் மாணிக்கம். ரகு மாமா பேரைச் சொல்லி என்னை ஏமாத்தி இங்கே கொண்டுவந்து பூட்டி வச்சிருக்கான்!
“இவன் பெரிய கடத்தல்காரன், கொலைகாரன் கொள்ளைக்காரன்… என்னை இம்சைப்படுத்தி, தனக்கு மனைவியா இருக்கனும்னு சொல்றான்”.
-இதைக் கேட்டு பாபு துடித்தான். தேவகி தொடர்ந்தாள்:
“குரங்குக்கு பயந்து புலிகிட்ட மாட்டிக்கிட்ட மாதிரி, ராதாவுக்கு பயந்துவந்து இவன் கிட்ட சிக்கியிருக்கிறோம்… நீ எப்படியாவது இங்கிருந்து தப்பிப் போகணும். ரகுமாமா விடுதலையாகி வந்துட்டாராம். அவரைப் பார்த்து விஷயத்தை சொல்லணும், போலீசுக்கும் தகவல் சொல்லணும்”
“அம்மா…!’ என்றான் பாபு, மெதுவாக.
“மாணிக்கத்தோட ஆளுங்களுக்கு தெரியாம ஜாக்ரதையா போகணும், தெரிஞ்சா ஆபத்து!”
தலையை ஆட்டினான் பாபு!
தேவகியின் அறையை விட்டு வெளியே வந்த பாபு, அந்த மர்ம மாளிகையின் மற்றப் பகுதிகளையும் வேடிக்கையாகச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு அறையும், அங்கிருந்த ஆட்களும், அங்கு நடந்த வேலைகளும் அவனுக்கு ஆச்சரியமாகவும், குழப்பமாகவும், மர்மமாகவும் தெரிந்தன.
மாணிக்கத்தின் அறைவாசலை அவன் அடைந்து, ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தான். உள்ளே ஒரு கட்டிலில் மாணிக்கம் உட்கார்ந்து மது அருந்திக் கொண்டிருந்தான். அவன் மடியில் அரை நிர்வாணப் பெண் ஒருத்தி விழுந்து கிடந்தாள்.
மாணிக்கத்தின் அறையில் மர்மமான பல கருவிகள் இருப்பதை பாபு பார்த்தான். அப்போது. அந்த அறையிலிருந்த ‘ஒயர்லெஸ்’சில் குரல் கேட்டது.
“பாஸ்! நம்ம மாளிகையை நோக்கி, சந்தேகத்துக்குரிய ஒரு போலீஸ் ஜீப் வந்து கொண்டிருக்கிறது”
இதைக் கேட்ட மாணிக்கம்; எழுந்து சென்று, அந்த ‘ஓயர் லெஸ்’ மூலமாகவே, “அந்த ஜீப்பின் டயரைச் சுட்டு மலையில் உருட்டுங்கடா!” என்று கர்ஜித்தான்.
பிறகு, அறையின் இன்னொரு பகுதியிலிருந்த டெலிவிஷன் போன்ற பெட்டிமுன் வந்து நின்று பார்த்தான்.
மாணிக்கத்தின் மர்மமாளிகையை நோக்கி வந்த போலீஸ் ஜீப், சுடப்பட்டு மலையில் உருண்டு விழுந்து எரிந்து நொறுங்குவது, அந்த பெட்டியில் தெரிந்தது. அதைப் பார்த்து வெற்றிச் சிரிப்பு சிரித்தான் மாணிக்கம்.
‘ஓயர்லெஸில்’ ஒலித்த குரலையும், அதற்கு மாணிக்கம் பதில் சொல்லி உத்தரவிட்டதையும் கேட்டு, பிறகு ஒரு ஜீப் சுட்டு உருட்டப்பட்டதையும் டெலிவிஷன் போன்ற பெட்டியில் பார்த்த பாபுவுக்கு உடல் நடுங்கியது. வேகமாகத் தேவகியின் அறைக்குத் திரும்பிவிட்டான்.
தனது ஓவியக் கூடத்துச் சுவர்களில், ‘தேவகி தேவகி’ என்று வரிசையாக, பித்தனைப் போல் எழுதிக் கொண்டிருந்தான் ரகு.
தனது ஸ்டுடியோவிலிருந்து ரகுவின் ஓவியக்கூடத் துக்கு வந்த ராதா, “தேவகி என்ன பெரிய பத்தினியா அவளை நெனச்சு இப்படி உருகுறே?” என்றான் கிண்டலாக. அதைக் கேட்டு ராதாவை வெறித்துப் பார்த்தான் ரகு. “அவ பத்தினி இல்லேன்னு உனக்குத் தெரியுமா?” என்றான் சற்று கோபமாக.
“கட்டினவனைத் தவிர மற்றவனை நினைச்சாலே ஒருத்தி பத்தினியில்லே!…ஆனா கட்டினவன் போனப் புறம் தேவகி ரெண்டு பேரை…?”
ராதா முடிக்கவில்லை. ‘நிறுத்து!’ என்று அலறினான் ரகு.
“ஆத்திரப்படாதே… இந்தா இந்தப் படங்களைப் பார்!” – ரகுவை நோக்கி இரண்டு போட்டோக்களை எறிந்தான் ராதா.
கீழே விழுந்த போட்டோக்களை எடுத்துப் பார்த்தான் ரகு. அவனும், தேவகியும் தழுவி நிற்கும் படம் ஒன்று. மாணிக்கமும் தேவகியும் நிற்கும் படம் ஒன்று. படத்தைப் பார்த்துவிட்டு ரகு,
“இந்தப்படங்களை வெளியே காட்டி, தேவகிக்கு கெட்ட பெயர் உண்டாக்காதே ராதா;’ ‘- என்றான்!
“அப்படீன்னா.. எனக்குப் பணம் வேணும்!”
பேரம் பேசினான் ராதா.
“பணம் தராட்டி…?” கோபத்தடன் எழுந்தான் ரகு!
“இந்தப்படத்தை நூற்றுக்கணக்கிலே பிரிண்ட் போட்டு ஊர்லே இருக்கிற சுவர்பூரா ஒட்டிடுவேன்!” – ராதா. சொல்லிமுடித்ததும் அவன் மீது பாய்ந்து தாக்கினான் ரகு. ராதாவும் எதிர்த்துத் தாக்கினான்! அவர்கள் போட்ட சண்டையில் அந்த ஓவியக்கூடமே சின்னாபின்னமாகி விட்டது. ராதாவை அடித்து வீழ்த்தி விட்டு ‘தேவகி தேவகி’ என்று கூவிய படியே வெறிபிடித்தவனைப் போல வெளியே ஓடினான் ரகு! அப்போது ஓவியக் கூடத்துக்குள் பதறியபடி ஓடி வந்தாள் கீதா.
தனது கணவன் உடம்பில் தூசி தட்டிக் கொண்டு நின்றதைப் பார்த்த கீதா “என்னங்க நடந்தது?” என்றாள் பதட்டத்துடன்.
கீதாவைப் பார்த்த ராதா, “நீ எப்போ வந்தே…?” என்று கேட்டான்.
“இப்போத்தான்.. ரகு வெளியே ஓடும் போது வந்தேன்!”
கீதா இப்படிக் கூறியதும், ராதா சுதாரித்துக் கொண்டான்.
“இந்த தேவகி, எனக்காகத்தான் வீட்டை விட்டுட்டுப் போயிருக்கா. ரகுகிட்ட ஓவியக் கூடத்துக்கு வாடகை கேட்டேன். தரமுடியாதுன்னான். நாலு உதை விட்டு, ‘போடா நாயே வெளியே’ன்னு அடிச்சி விரட்டினேன்!”
-என்று பொய் சொன்னான் ராதா. தன் கணவனின் பராக்கிரமத்தை எண்ணிப் பூரித்து நின்றாள் கீதா. அந்த வீடு முழுவதும் அவளுக்கே சொந்தமாகிவிட்டது போல ஒரு உணர்வு. “அத்தான்” என்று ஆசையோடு ராதா மீது சாய்ந்தாள்.
தேவகியின் அறை!
பாபுவை அழைத்து மெதுவாகப் பேசுகிறாள் தேவகி!
“பாபு, உன்னை எப்படியாவது, மாணிக்கத்தோட, டவுனுக்கு அனுப்பறேன்… நீ அவன்கூடப் போயி அவன்கிட்டே இருந்து தப்பிச்சிப் போயிடு. ரகுவுக்கும், போலீசுக்கும் தகவல் சொல்லு!” –
தேவகி கூறியதைக் கேட்டு பாபு மகிழ்ச்சி அடைந்தான். அறைக்கு வெளியே காலடியோசை கேட்டது. “பாபு… அவன் வர்றான். நீ இந்தப் பக்கமா வெளியே போயிடு!” அவசரப்படுத்தினாள் தேவகி. அறையை விட்டு வெளியேறினான் பாபு.
அவள் எதிர்பார்த்தது போலவே; அறைக்குள் மாணிக்கம் நுழைந்தான்,
“என்ன தேவகி…எப்படி இருக்கே?”
-என்று கேட்டபடி, கட்டிலில் அவள் அருகில் உட்கார்ந்தான் மாணிக்கம். அவள் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து கொண்டாள்.
இதைப்பார்த்து லோசாகச் சிரித்த மாணிக்கம் “பரவாயில்லே, என்னை கட்டிலில் உட்கார அனுமதிக்கிற அளவுக்கு உன் மனசு மாறியிருக்கு!” என்று கூறி மேலும் சிரித்தான்.
“தேவகி! நான் டவுனுக்குப் போறேன் – ஏதாவது வேணுமா?” மாணிக்கம் கேட்டான்.
சிறிது நேரம் யோசித்த தேவகி, பிறகு தயக்கத்துடன் சொன்னாள்.
“ஊட்டியிலே இருந்து வர்றப்போ, பாபு எல்லா ட்ரெஸ்சையும் அங்கேயே விட்டுட்டு வந்துட்டான்…!”
“அவனுக்கு ட்ரெஸ் வேணுமா? ஒரு ஜவுளிக் கடையையே கொண்டு வந்துடறேன்..!” – மாணிக்கம் இப்படிச் சொன்னதும் தேவகிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தன் திட்டம் நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கை பிறந்தது.
லேசாகச் சிரித்துக்கொண்டே, ”ஜவுளிக் கடை வேண்டாம்! நாலு செட் வாங்கி வாங்க அது போதும்!” என்றாள். தன்னிடம் சிக்கியதிலிருந்து தேவகி சிரிப்பதை இப்போதுதான் முதன் முதலாகப் பார்த்தான் மாணிக்கம். அவனுக்கு மகிழ்ச்சி தாள முடியவில்லை;
“தேவகி! நீ இப்படி சிரிக்கணும்னு நான் எத்தனை நாளா காத்திருந்தேன்… பாபு வந்ததிலே இருந்து உன் மனம் மாறிவருது… இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா பாபுவை எப்பவோ கூட்டி வந்திருப்பேன்!” என்றான். அதைக் கேட்டு மேலும் சிரித்த தேவகி, “பாபுவையும் அழைச்சிட்டுப் போங்க.. உடம்புக்கு அளவா துணி எடுக்க வசதியா இருக்கும்!'” என்றாள்!
“சேச்சே… அவனையெல்லாம் அழைச்சிட்டுப் போகக் கூடாது. அளவென்ன அளவு… இருக்கிற அளவுலே எல்லாம் நாலு நாலு செட் எடுத்தா போகுது!” – என்று சொல்லிக் கிளம்பினான் மாணிக்கம்.
பாபுவை டவுனுக்கு அனுப்பத் தாம் போட்ட திட்டம் தோல்வி கண்டுவிட்டதே என்று வருந்தினாள் தேவகி. மாணிக்கமும், தேவகியும் பேசிக்கொண்டிருந்ததை, அந்த அறைக்கு வெளியே நின்று கேட்டுக்கொண்டிருந்த பாபு, தேவகியின் அறையிலிருந்து மாணிக்கம் வெளியேறும்போதே வேகமாக ஓடினான், ஏதோ ஒரு திட்டத்துடன்.
மர்ம மாளிகையிலிருந்து புறப்பட்ட மாணிக்கத்தின் ‘இம்பாலா’ கார், மலைப் பாதையில் வளைந்தும், நெளிந்தும் சென்றுகொண்டிருந்தது. மாணிக்கத்தின் மெய்க்காவலன், காரை ஓட்டிக்கொண்டிருந்தான். அந்தக் காரின் ‘டிக்’ கில் யாருக்கும் தெரியாமல் ஒளிந்து கொண்டிருந்தான் பாபு!
பின் சீட்டில் உட்கார்ந்திருந்த மாணிக்கம், “அந்தப்பய பாபுவை கவனிச்சிக்கிட்டுத் தானே இருக்கீங்க?” என்றான்.
“ஆமாம்…… பாஸ்! தனியாகவே ஒருத்தனை அதுக்கு நியமிச்சிருக்கேன்!’ என்றான் மெய்க்காவலன்.
“பயலைப்பார்த்தா கொஞ்சம் சுட்டிப் பயலா இருக்கான்… அவன் கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்…!” – எச்சரித்தான் மாணிக்கம்.
“அவன் என்னங்க… சின்னப்பய?” – அலட்சியமாகக் கூறினான் மெய்க்காவலன்.
சிறிது தூரம் கார் சென்றது. மாணிக்கம் என்ன நினைத்தானோ. காருக்குளளேயே பொருத்தப்பட்டிருந்த வயர்லெஸ்சில், “யார்.. முத்துவா? அந்தச் சின்னப்பையன் பாபுவை… கவனமா கண்காணிக்கனும்!”- என்று உத்தரவிட்டான்.
”சரி பாஸ்!” – என்று மறுமுனையிலிருந்து பதில் வருகிறது. மேட்டுப்பாளையம் கடைவீதியில் கார் நுழைந்து ஆடம்பரமான ஒரு துணிக்கடையின் முன் நிற்கிறது. காரிலிருந்து இறங்கிய மாணிக்கம், அந்தக் கடைக்குள் நுழைகிறான். காரை ஓட்டிவந்த மெய்க்காவலன் காருக்கு முன்பகுதியில் காரில் சாய்ந்தபடியே, ரோட்டில் போய்க்கொண்டிருந்த இரு இளம்பெண்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறான்.
அந்தச் சமயத்தில் காரின் ‘டிக்’கைத் திறந்து கொண்டு மெதுவாக இறங்கி, சத்தமில்லாமல் ‘டிக்’கை மூடிவிட்டு இருளில் பதுங்கிப் பதுங்கி நடந்தான் பாபு.
இருளான பகுதிக்கு வந்து விட்ட பாபு. ரகுவைத் தேடி, தனது பழைய வீட்டை நோக்கித் தலை தெறிக்க ஓடினான். வீட்டுக்கு ஓடி வரும் வழியில் ஒரு சுவரில் தேவகி – பாபு தேவகி – பாபு என்று வரிசையாக எழுதப்பட்டிருப்பதைக் கண்டு திகைத்தான். அந்த எழுத்துக்களைத் தொடர்ந்து வேகமாக ஓடிக் கொண்டிருந்தான் பாபு.
அந்த நீண்ட சுவரின் மறு முனைக்கு சென்ற பாபு, அங்கு யாரோ சுவரில் எழுதிக் கொண்டிருப்பதைக் கண்டு, கிட்ட நெருங்கினான்.
“ரகுமாமா!'” – அவனையறியாமலேயே கூவி விட்டான்.
சுவரில் எழுதிக்கொண்டிருந்த ரகு, இந்தக்குரல் கேட்டுத் திரும்பிப்பார்த்தான்.
“பாபு!” என்று கத்தியவாறு ஓடி வந்து பாபுவை அணைத்தான்.
“மாமா..உடனே புறப்படுங்க அம்மாவுக்கு ஆபத்து!” பரபரத்தான் பாபு.
“என்ன பாபு?” பதை பதைத்தான் ரகு.
மாணிக்கத்தைப் பற்றியும், அவன் தொழில், ஆட்கள், மர்ம மாளிகைபற்றியும் ரகுவிடம் கூறிய பாபு, தாம் தப்பி வந்த விதத்தைப் பற்றியும் கூறினான்.
அதன்பின் அந்த இடத்திலிருந்து இருவரும் வேகமாக ஓடி வந்தார்கள். மாணிக்கம் காரை நிறுத்திய இடத்தை அவர்கள் அடைந்ததும். இருளில் தயங்கி நின்று அந்த ‘இம்பாலா’ காரைப் பார்த்தனர்.
காரின் பக்கவாட்டில் மாணிக்கத்தின் மெய்க்காவலன் நின்றிருந்தான். அவன் கண்ணில் படாமல் காரின் ‘டிக்’ கில் ஏறி ஒளிவது முடியாத காரியமாகப் பட்டது. ரகுவுக்கு ஒரு யோசனை – பளிச்சென்று தோன்றியது.
“பாபு… அந்த ஆளுக்கு உன்னைத் தெரியுமா?” – என்று மெதுவாகக் கேட்டான் ரகு.
“தெரியும் மாமா…! அவன்தான் என்னை ஊட்டியிலே வந்து கூப்பிட்டு வந்தவன்!”
“சபாஷ்! நீ இப்போ என்ன பண்றே. அவன் கண்ணில் தெரியும்படி கொஞ்சம் தூரத்துலே நில்லு… உன்னைப் பார்த்ததும் அவன், ‘நிற்கிறது நீதானா’ன்னு பார்க்க வருவான். அந்த நேரத்திலே நான் ‘டிக்’கிற் குள்ளே ஒளிஞ்சுக்கறேன்… அவன் கண்ணில் படாம நீ ஓடிப்போயிடு!” – ரகு கூறிய யோசனையைக் கேட்டதும் பாபுவுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. ரகுவின் கையில் ஒரு முத்தமிட்டுவிட்டு இருளில் ஓடினான்.
காருக்கு எதிரே சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்தான் பாபு! அவன் எதிர்பார்த்து போலவே – ரோட்டில் சென்றுக்கொண்டிருந்த பெண்களை அந்தப்பக்கமும் இந்தப் பக்கமும் பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்த மெய்க்காவலன் பாபுவைப் பார்த்து விட்டான்.
தன்னை மெய்க்காவலன் பார்க்கிறான் என்பதை அறிந்து கொண்ட பாபுவும், அவனையே பார்த்தான். பாபு இருக்கும் இடத்தை நோக்கி மெதுவாக நடந்தான். அவன் தன்னை நோக்கி வருவதைப் பார்த்த பாபுவும் கொஞ்சம் பின்னால் நடந்தான். மெய்க்காவலனும் அவனைத் தொடர்ந்து சென்றான்.
இருளில் மறைந்து நின்ற ரகு, இந்தச் சமயத்தில் இம்பாலா காரை அடைந்து – ‘டிக்’ கைத் திறந்து உள்ளே படுத்து ‘டிக்’கை மூடிக்கொண்டான்.
ரகு. ‘டிக்’கிற்குள் ஒளிந்து கொண்டான் என்றறிந்த பாபு, வேகமாக ஓடி ஒரு சந்துக்குள் நுழைந்து மறைந்து விட்டான்.
ஏதோ ஒரு சந்தேகத்துடன் காருக்குத் திரும்பி வந்தான் மெய்க்காவலன். அப்போது, துணிக்கடைக்குள்ளிருந்து ஐந்தாறு பார்சல்களைத் தனது இருகைகளிலும் அள்ளிக்கொண்டு காரை நோக்கி வந்தான் மாணிக்கம்.
ஓடிச் சென்று அந்த துணிப் பார்சல்களை வாங்கிக் கொண்ட மெய்க்காவலன், தயக்கத்துடன், “இந்தப் பக்கம் ஒரு பையன் போனான் அவன் நம்ம பாபு மாதிரியே இருந்தான்!” என்றான்.
அதைக் கேட்ட மாணிக்கம் சிரித்தான்.
“நம்ம ஆட்கள் அவ்வளவு ஏமாளிகளா? நம்ம கிட்ட இருந்து ஆனானப்பட்ட ஆட்களாலேயே தப்ப முடியலேன்னா… இந்தச் சின்னப்பய தப்பி விடுவானா?” என்றான் மாணிக்கம்.
“அவனை மாதிரியே இருந்தது!” என்றான் மெய்க் காவலன் மீண்டும்.
“அவனை மாதிரி வேற எவனாவது இருக்கும்!” என்றான் மாணிக்கம்!
துணிப்பார்சல்களை வைப்பதற்காக ‘டிக்’ கைத் திறக்கப்போனான் மெய்க்காவலன். ‘டிக்’ மீது அவன் கை வைத்தபோது. அவனை மாணிக்கம் அழைத்தான்.
“துணிப்பார்சல்களை பின் சீட்டில் என் பக்கத்திலேயே வை!” என்று சொல்லிக் காருக்குள் ஏறி உட்கார்ந்தான். அவனுக்குப் பக்கத்தில் பார்சல்களை அடுக்கிவைத்த மெய்க்காவலன் முன்பக்கம் வந்து ஏறி காரை ஓட்டினான்.
நகர எல்லையைத்தாண்டி மலைப்பாதையில் கார் போய்க்கொண்டிருந்தது.
“நான் பார்த்தது அந்த பாபுதான்னு எனக்கு இன்னும் சந்தேகமா இருக்கு பாஸ்?” என்றான் மெய்க் காவலன்,
“சந்தேகப்பட வேண்டியவைகளைத் தவிர மற்ற எல்லாவற்றையுமே நீ சந்தேகப்படுவே!” – என்று அலட்சியமாகக் கூறினான் மாணிக்கம்.
அப்படி அவன் சொன்னானே ஒழிய, அவனுக்கும் இப்போது கொஞ்சம் சந்தேகம் ஏற்பட்டது.
உடனே காருக்குள் இருந்த ‘ஒயர்லெஸ்’ மூலம் தன்னுடைய அந்தரங்கச் செயலாளனிடம், “பாபு அங்கே இருக்கிறானா…பார்த்துச் சொல்!” என்றான்.
சிறிது நேரத்தில், காருக்குள்ளிருந்த ‘ஒயர்லெஸி’ல் குரல் கேட்டது.
“எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தோம். பாபுவைக் காணோம் பாஸ்!”
“நான் சந்தேகப்பட்டது சரியா இருக்கும் போலிருக்கே பாஸ்!” என்றான் மெய்க்காவலன்.
தனது அந்தரங்கச் செயலாளன் கூறியதைக் கேட்டதும் மாணிக்கத்துக்கு சந்தேகம் வலுத்தது.
“நான் அப்படி நம்பலே.. எதற்கும் அங்கு போய்ப் பார்க்கலாம்!” என்றான் மாணிக்கம். ஆனாலும் சந்தேகமும், குழப்பமும் அவனிடம் காணப்பட்டன.
மர்ம மாளிகையை அடைந்து, கார் நின்றது. கோபக் கனல் தெறிக்கக் கீழே இறங்கினான் மாணிக்கம்.
மாணிக்கத்தின் வரவை எதிர்பார்த்து நின்றிருந்தனர், அவனது அந்தரங்கச் செயலாளனும், மற்றவர்களும்.
“நல்லா, எல்லா இடத்திலேயும் தேடிப் பார்த்தீங்களா?” இரைந்தான் மாணிக்கம்.
“பார்த்தோம் பாஸ்… அவனைக் காணோம்!” என்றான் அந்தரங்கச் செயலாளன்.
பற்களை ‘நற நற’ என்று கடித்த மாணிக்கம் “பாபுவைக் கண்காணிச்சது யார்?” என்று கத்தினான்.
கூட்டத்திலிருந்த ஒருவன், மாணிக்கத்தின் முன் பணிவாக வந்து, “நான்தான் பாஸ்! எவ்வளவோ ஜாக்ரதையாத்தான் இருந்தேன்…!” என்றான் பரிதாபமாக. அவன் குரலும், உடலும் நடுங்கின.
“ஒரு சின்னப் பொடியன்கிட்ட ஏமாந்தியா” என்று கேட்ட மாணிக்கம், துப்பாக்கியை எடுத்தான்.
டூமில்.
அடுத்த கணம் அந்த மனிதன் சுருண்டு விழுந்தான்.
துப்பாக்கியைத் தனது பாக்கெட்டுக்குள் வைத்தபடியே, “எல்லாரும் போயி தேடுங்கடா!” என்று கத்தினான். ஒருவர் கூடப்பாக்கியில்லாமல் நாலா திசைக்கும் பறந்தனர். தேவகியின் அறைக்குச் சென்றான் மாணிக்கம்.
தன்னை நோக்கி மாணிக்கம் கோபத்துடன் வருவதை அறிந்த தேவகி, ‘பாபு தப்பிவிட்டான் போலிருக்கிறது’ என்று தனக்குத்தானே நினைத்துக்கொண்டாள். அப்படி நினைக்கும் போதே அவளுக்கு ஒரு தெம்பும், உற்சாகமும் பிறந்தது.
தேவகியை நெருங்கிய மாணிக்கம், அவளைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு பலமாகச் சிரித்தான். அடுத்து. “பாபுவை எங்கே அனுப்பியிருக்கே? என்ன சொல்லி அனுப்பியிருக்கே?” என்றான் கடுமையாக.
இதைக் கேட்டு பலமாகச் சிரித்தாள் தேவகி.
“உன் கூட்டத்திலேயிருந்து அவன் தப்பிவிட்டானா… அவ்வளவு பெரிய ஆளா அவன்?” கிண்டலாகக் கேட்டாள் தேவகி.
“ஏய்! என்னைப் பத்தி உனக்குத் தெரியும்… உனக்கு உயிர் வேணுமின்னா உள்ளதைச் சொல்!” உறுமினான் மாணிக்கம்.
மீண்டும் சிரித்த தேவகி, “அந்த ஆசை என்னை விட்டு எப்போதோ போய்விட்டது மாணிக்கம்!” என்றாள் நிதானமாக.
“இப்படியெல்லாம் கேட்டா நீ சொல்ல மாட்டே!’ என்று சொன்ன மாணிக்கம், பாய்ந்து சென்று இடது கையால் தேவகியின் கூந்தலைப்பிடித்து உலுக்கி, வலது கையால் அவளது கன்னத்தில் அறையப் போன சமயம்-
மாணிக்கத்தின் மீது பாய்ந்தான் ரகு!
தனியாகப் போய் கீழே விழுந்த மாணிக்கம், ரகுவைப் பார்த்ததும் திடுக்கிட்டான்.
“ஓ… திட்டம் போட்டே எல்லாம் நடக் குதா?” என்று கேட்டவாறே எழுந்தான். அவனை நோக்கி வந்தான் ரகு.
“துரோகி … நண்பனா நடிச்சி என்னை மோசம் பண்ணிட்டியே….!” உறுமினான் ரகு!
“நான்தான் நடிக்கிறேன், அதை நம்பி நீ ஏன் மோசம் போனே? மோசம் போனது உன் தப்பு!” அலட்சியமாகக் கூறினான் மாணிக்கம்.
“அதுக்குப் பழிவாங்கத்தானே வந்திருக்கேன்!” என்றான் ரகு!
“என்ன செய்வே?”
“ஊருக்கு பெரிய மனுஷனா காட்டிக்கிட்டு, உள்ளே இவ்வளவு அக்கிரமம் செய்றதை அம்பலப்படுத்துவேன்!”
“பைத்தியக்காரத்தனம், என்னைப்பத்தி வெளியே நீ என்ன சொன்னாலும் எவனுமே நம்ப மாட்டான். கடத்தல் செய்தேன்னு என்னைப் புடிச்சாங்களே. என்னாச்சு?'”
மாணிக்கத்திடம் மேலும் நெருங்கினான் ரகு! “அப்படியே நில்!” துப்பாக்கியை ரகுவின் நெஞ்சை நோக்கி நீட்டினான் மாணிக்கம்.
திடுக்கிட்டு நின்ற ரகு, சாமர்த்தியமாக காலால் துப்பாக்கியைத் தட்டிவிட்டு மாணிக்கத்தின் மீது பாய்ந்தான். இருவரும் கட்டிப் புரண்டு சண்டை போட்டார்கள். பரபரப்படைந்த தேவகி, மாணிக்கத்தால் பழி வாங்கப்பட்ட பணிப் பெண்களிடம் ஏதோ காதோடு காதாகக் கூறினாள். அந்தப் பெண்கள் நாலா திசைகளிலும் ஓடினர். அங்கிருந்த டெலிவிஷன், ஒயர்லெஸ் ஆகியவற்றை உடைத்து நொறுக்கினாள் ஒருத்தி.
துப்பாக்கி, வெடிகுண்டு முதலிய ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த அறையை வெளிப் பக்கமாக நன்கு பூட்டினாள் மற்றொருத்தி.
மாணிக்கத்தின் அடியாட்கள் தங்கியிருந்த ஒரு மர்ம அறையை வெளிப்பக்கமாகப் பூட்டி. அவர்கள் வெளியே வராமல் தடுத்தாள் இன்னொருத்தி!
தேவகியின் அறையில் மாணிக்கத்துடன் அவனது ஆட்கள் சிலரும் சேர்ந்து ரகுவோடு மோதினார்கள். அத்தனை பேருக்கும் சாமர்த்தியமாக ஈடுகொடுத்துப் போராடிக் கொண்டிருந்தான் ரகு. தேவகியும், மற்ற பணிப்பெண்களும் பத்திரமான ஒரு இடத்தில் இருந்து இந்தச் சண்டையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
மாணிக்கத்தின் மர்ம மாளிகையில் சண்டை நடந்து கொண்டிருந்த அந்தச் சமயத்தில், மாளிகையை நோக்கி மலைப் பாதையில் அதிவேகமாக மூன்று போலீஸ் லாரிகள் வந்து கொண்டிருந்தன. அந்த லாரிகளுக்கு முன்னால் ஒரு போலீஸ் ஜீப் வந்து கொண்டிருந்தது. அந்த ஜீப்பில் உட்கார்ந்து கொண்டிருந்த பாபுதான் வழி காட்டிக் கொண்டு வந்தான்.
மலைச்சாலையின் குறுக்கே அந்த மலை வழி மறித்தது. ஜீப்பும், லாரிகளும் நின்றன.
“என்ன தம்பி, இனிமே பாதை இல்லியே” என்று பாபுவிடம் கேட்டார். பக்கத்தில் உட்கார்ந்திருந்த போலீஸ் அதிகாரி.
பாபுவுக்கும் ‘திக்’ என்றாகிவிட்டது. எதிரே தெரிந்த மலையைப் பார்த்தான். பிறகு, பக்கவாட்டில் பாதை இருக்கிறதா என்று பார்த்தான். ஒன்றையும் காணோம் சிறிது நேரம் பதட்டத்தில் இருந்த பாபுவுக்கு ‘பளிச்’ என்று ஹாரன் நினைவு வந்தது. டிரைவருக்கு அருகில் நகர்ந்து அவனே மூன்று முறை ஹாரனை அடித்தான்.
அடுத்த வினாடி எதிரே இருந்த மலை இரண்டாகப் பிளந்து வழிவிட்டது. போலீஸ் ஜீப்பும், லாரிகளும் உள்ளே நுழைந்தன.
மாணிக்கத்தின் ஆட்களோடு ரகு மரணப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது போலீசார் அங்கு புகுந்தனர். போலீசாரும், மாணிக்கத்தின் ஆட்களும் துப்பாக்கிச் சண்டையிட்டனர். அந்தத் தரப்பிலும், இந்தத் தரப்பிலும் சிலர் பிணமாகி விழுந்தனர்.
போலீசாருடன் வந்த பாபு, தனது அம்மாவைத் தேடிக்கொண்டிருந்தான். சண்டை நடந்த இடத்திலிருந்து வெளியேறிய மாணிக்கம், தேவகி இருக்கும் இடத்தை நெருங்கினான், தேவகியைச் சுடுவதற்கு அவன் குறி வைத்ததை பாபு பார்த்து விடவே, சற்றும் தாமதிக்காமல் ஒரே பாய்ச்சலில் தேவகி மீது பாய்ந்து, அவளும் அவனும் சேர்ந்து விழுகிறார்கள். மாணிக்கத்தின் குறி தவறியது. மீண்டும் அவன் குறிவைப்பதற்குள் போலீசார் வந்து அவனைப் பிடித்து விட்டனர்.
மாணிக்கத்தையும். அவனது ஆட்களையும் கைது செய்து லாரிகளில் ஏற்றிச் சென்றனர் போலீசார். ரகுவும் தேவகியும் ஒருவரையொருவர் கட்டிப் பிடித்து ஆனந்தக்கண்ணீர்விட, அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றான் பாபு.
பாபு. தங்களைப் பார்க்கிறான் என்று அறிந்த ரகுவும், தேவகியும் ‘டக்’ என்று விலகி நின்று நாணத்துடன் சிரித்தனர்.
பிரபல கடத்தல் மன்னன் மாணிக்கம் பிடிபட்டதும், அவன் நடத்திய தனி ராஜ்யம் அம்பலப்படுத்தப் பட்டதும் பற்றிய செய்தி நாடு முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு, பத்திரிகைகளில், பத்திபத்தியாகச் செய்திகள் வெளியிடப்பட்டன.
மாணிக்கத்தையும் அவன் கும்பலையும் பிடித்துக் கொடுத்து, கடத்தல் கூட்டத்தின் மர்ம மாளிகையைக் கண்டுபிடிக்கவும் உதவிய ரகு, தேவகி, பாபு மூவரது படங்களும் பத்திரிகைகளில் வெளியாகின.
இந்த வீரச் செயலுக்காக இந்த மூவருக்கும் பாராட்டு விழா நடத்தவும், பரிசு வழங்கவும் போலீஸ் துறை ஏற்பாடு செய்தது.
விழா நாள்!
நகரின் முக்கிய பிரமுகர்கள் எல்லாம் திரண்டிருந்தனர். போலீஸ் அதிகாரிகள் ஒருவர் கூடத் தவறாமல் வந்து கூடியிருந்தனர். ரகு, தேவகி, பாபு மூவரும் ஒரு சோபாவில் விழா மேடையில் உட்கார்ந்திருந்தனர்.
அப்போது, சற்று தூரத்தில் ராதா வந்து கொண்டிருந்தான். ரகு, தேவகி, பாபு, மூவரும் ஒரே சோபாவில் அமர்ந்திருந்ததைப் பார்க்கப்பார்க்க அவன வயிறு எரிந்தது. ‘இவர்களுக்குப் பாராட்டு நடக்கும் இந்த நேரத்தில் இவர்களை அவமானப் படுத்த வேண்டும்’ என்று திட்டமிட்டான்.
விழாத் தலைவர் வந்ததும், விழா ஆரம்பமானது. பேசிய பெரியவர்கள் எல்லாம் தேவகியின் சாதுர்யத்தையும், ரகுவின் வீரத்தையும், பாபுவின் சாமர்த்தியத்தையும் வெகுவாகப் பாராட்டிப் பேசினார்கள். இறுதியில் அரசின் சின்னம் பொறிக்கப்பட்ட மூன்று கணையாழிகள் அவர்களுக்குப் பரிசாக வழங்கப்பட்டன.
போலீஸ் துறையின் சார்பில் ஒருவர் நன்றியுரையாற்றிக் கொண்டிருந்தபோது, மேடை அருகே வந்தான் ராதா… மெதுவாக பாபுவை அழைத்தான்.
கீழே இறங்கி வந்த பாபுவிடம், தன் கையிலிருந்த இரு படங்களைக் காட்டினான். அதை வாங்கிப் பார்த்தான் பாபு.
ரகுவும், தேவகியும் தழுவிய நிலையில் ஒரு படம் – தேவகியும், மாணிக்கமும் நின்ற நிலையில் ஒரு படம்.
“உன் அம்மாவோட யோக்யதையைப் பார்த்தியா?” – என்றான் ராதா.
“இதுக்கு என்ன இப்போ?” என்றான் பாபு.
“என்னவா? இந்தப் படத்தை இப்போ… இந்தக் கூட்டத்திலே காட்டப்போறேன்..” என்று கூறிச் சிரித்த ராதா, “இதோபார் ‘நெகடிவ்’ களும் இருக்கு!” என்றான் விஷமமாக.
ராதா சிரித்ததைவிடப் பலமாக பாபுவும் சிரித்தான்.
அவன் சிரித்ததைப் பார்த்த ராதா பயந்து விட்டான்.
“போட்டோக்கார மாமா… விவரம் தெரியாமப் பேசறீங்களே? இந்தப் படத்தை வச்சி நீங்க எங்கம்மாவை பிளாக்மெயில் பண்ற விஷயத்தை இப்பவே போலீஸ் ஆபீசர்கிட்டே நான் சொல்லப் போறேன். நீங்க உள்ளே போகப்போறீங்க!” – என்றான் பாபு.
இதைக்கேட்ட ராதா உண்மையிலேயே பயந்து விட்டான். “சேச்சே…… நான் சும்மா சொன்னேன்!” என்று குழைந்தான்.
“அந்த ‘நெகடிவ்’களை இப்படிக் கொடுங்க!” கையை நீட்டினான். பாபு.
ராதா தயங்கினான்!
“நான் நல்லபடியா கேட்டா கொடுக்க மாட்டீங்க… அவங்க வந்து உதைச்சா கொடுப்பீங்க…!” எனக் கூறிப் போலீசாரைக் கையைக் காட்டினான் பாபு!
அடுத்த கணம் நெகடிவ்களைப் பாபுவிடம் கொடுத்தான் ராதா.
நெகடிவ்களையும், படங்களையும் துண்டு துண்டாகக் கிழித்தான் பாபு. அதை ரகுவும், தேவகியும் பார்த்து ஒருவருக்கொருவர் சிரித்துக் கொண்டனர். ராதாவின் முகத்தில் அசடு வழிந்தது.
“போட்டோகார மாமா… ரொம்ப அலட்டிக்காதீங்க… ரகுதான் எனக்கு இனி அப்பா…” என்றான் பாபு. அவன் இப்படிச் சொன்னது தேவகியின் காதிலும், ரகுவின் காதிலும் விழுந்தது. ஒருவரையொருவர் உணர்ச்சிப் பெருக்குடன் பார்த்துக் கொண்டு, பாபுவையும் ராதாவையுமே, கவனித்தனர்.
“உங்கம்மா ஒரு முண்டச்சி! அவளுக்கு எப்படி கல்யாணம்?” – என்றான் ராதா எரிச்சலுடன்.
“கோடானு கோடிப் பேரால் கொண்டாடப் படுகிற நபிகள் நாயகம், கதீஜா அம்மையார் என்ற விதவையைத்தானே கல்யாணம் செய்துக்கிட்டார்?” – கம்பீரமாகக் கேட்டான் பாபு.
வாயடைத்து நின்றான் ராதா.
விழா முடிந்து ரகு, தேவகி, பாபு மூவரும் தங்களது பழைய வீட்டுக்கு வரும் போது இரவு மணி எட்டு.
வீட்டுக்குள் நுழைந்து கூடத்தில் மூவரும் வந்து அமர்ந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் ஏதும் பேசாமலே சிறிது நேரம் இருந்தனர்
‘ரகு-தேவகி’ படத்தைப் பார்த்த நினைவு பாபுவைக் குழப்பிக் கொண்டிருந்தது.
தங்களது காதல் விவகாரம் பாபுவுக்குத் தெரிந்து விட்டதே என்ற எண்ணம் ரகுவையும், தேவகியையும் குடைந்து கொண்டிருந்தது.
பாபு தன்னை ‘அப்பா’ என்று கூறியதை எண்ணி ரகு மகிழ்ச்சியடைந்ததைப் போலவே, விதவைகள் மறுமணத்தைப் பற்றி பாபு கூறியதை எண்ணி தேவகியும் மகிழ்ச்சியடைந்தாள்.
திடீர் என்று, தன் கையிலிருந்த காகிதப் பொட்டலம் ஒன்றை தேவகிக்கும், ரகுவுக்கும் இடையில் வைத்தான் பாபு. அதை எடுத்து ஆவலுடன் பிரித்தாள் தேவகி; ஆர்வத்துடன் பார்த்தான் ரகு.
கிழிக்கப்பட்ட போட்டோ. நெகடிவ் ஆகியவற்றின் துண்டுகள் அதில் இருந்தன.
உணர்ச்சிப் பெருக்கில் கண்களில் நீர் மல்க “பாபு” என்று கூவினான் ரகு!
“அப்பா!” என்ற படியே அவன் மீது சாய்ந்தான் பாபு!
பாபுவின் இந்த வார்த்தையைக் கேட்ட தேவகியும், ரகுவும் பரவசத்தில் கண்களை மூடிக்கொண்டனர். அவர்களது கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் கொட்டியது. ரகுவையும், தேவகியையும் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு பாபு நடக்க, ஒன்றும் புரியாமல் அவனுடன் நடந்தனர் ரகுவும், தேவகியும்.
சுவரில் திவாகரின் சிரித்த முகத்துடன் கூடிய பெரிய படம் இருந்தது. அந்தப் படத்துக்குப் பெரிய மாலை ஒன்று அணிவிக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தின் கீழ் வந்து மூவரும் நின்றனர். ரகுவையும், தேவகியையும் மாறி மாறிப்பார்த்தான் பாபு.
உடனே, ரகுவும், தேவகியும் திவாகரின் படத்துக்குக் கீழே தரையில் ஒன்றாக விழுந்து வணங்கினார்கள். அப்போது பலமாகக் காற்று வீசி – திவாகரின் படத்தை அசைத்தது. படத்திலிருந்த மாலை கீழே குனிந்து வணங்கிக் கொண்டிருந்த தேவகியின் கழுத்திலும், ரகுவின் கழுத்திலும் சேர்த்து விழுந்தது.
திடுக்கிட்டுத் தலை நிமிர்ந்த ரகுவும், தேவகியும் திவாகர் படத்திலிருந்த மாலை, தங்கள் கழுத்தில் கிடப்பதைக் கண்டு, திவாகரின் படத்தைக் கையெடுத்துக் கும்பிட்டனர்!
இதைப்பார்த்துக்கொண்டிருந்த பாபுவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.
ரகு, பலகணியின் கதவுகளைத் திறந்தான். பன்னீர் மரம் பூத்துக் குலுங்கியிருந்தது. அந்தப் பூக்கள், ரகு குத்தி வைத்த பிளாஸ்டிக் பூக்கள் அல்ல, உண்மையான பூக்கள்!
(இன்ப முடிவு)
– ஒரு மரம் பூத்தது (நாவல்), முதற்பதிப்பு: 2000, பாரதி பதிப்பகம், சென்னை.