ஒரு மரம் பூத்தது

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 2, 2024
பார்வையிட்டோர்: 1,793 
 
 

(2000ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6

இம்பாலா போய்க் கொண்டிருந்தது. மாணிக்கம் காரை ஒட்டினான். முன் சீட்டில் அவனருகில் அமர்ந்திருந்தாள் விஜயா. 

ராதா கொடுத்த படங்களையும், நெகடிவ்களையும் சுக்கு நூறாகக் கிழித்து எறிந்து கொண்டிருந்தன அவளது கைகள். எல்லாவற்றையும் கிழித்துப் போட்ட பின் அவள் மனதில் ஒரு நிம்மதி. 

“தேவகி, எப்படி நம்ம நாடகம்?” என்று கேட்டுச் சிரித்தான் மாணிக்கம். 

“ரொம்ப நன்றிங்க!” என்றாள் விஜயா வேடத்திலிருந்த தேவகி. 

கார் போய்க் கொண்டே இருந்தது. தன் வீட்டுக்குத் திரும்ப வேண்டிய பாதையில் திரும்பாமல், வேறுபாதையில் கார் போவதை அறிந்த தேவகி. 

“என்னாங்க…வீடு இந்தப் பக்கம் இருக்கு!’ என்றாள். 

“பரவாயில்லே…. என் வீட்டுக்கு வந்து ஒரு காபி சாப்பிட்டுவிட்டுப் போ!” என்றபடி காரை வேகமாக ஓட்டினான் மாணிக்கம். 

நீண்ட நேரம் சென்ற கார், ஒரு காட்டுப் பாதையில் நுழைகிறது. சுற்றி வளைத்துச் செல்லும் அந்தப்  பாதை தேவகிக்கு ஒரு மர்மமாகத் தெரிகிறது. அவளது மனதில் லேசான பயம் ஏற்படுகிறது. திடீரென்று ஒரு இடத்தில் கார் நிற்கிறது. எதிரே ஒரு மலை இருக்கிறது. அந்த மலையின் மேற்பகுதி முழுவதும் செடிகள் முளைத்தும், கொடிகள் படர்ந்தும் இருக்கின்றன. 

காரை நிறுத்திய மாணிக்கம் மூன்று முறை ‘ஹாரன்’ அடிக்கிறான். ‘கட கட’ என்ற ஓசையுடன் எதிரே இருந்த மலை இரண்டாகப் பிரிந்து வழி விடுகிறது. இதைக் கண்ட தேவகியின் உடல் நடுங்க ஆரம்பித்தது. “பயப்படாதே!” என்று அவளது தோளில் தட்டிய மாணிக்கம், அந்த மர்மப் பாதையில் காரை ஓட்டினான். கார் உள்ளே நுழைந்ததும், மீண்டும் அந்த மர்மப் பாதை மூடிக்கொண்டது. 

உள்ளே, மர்ம மாளிகை ஒன்று. அதன் வாசலில் ‘இம்பாலா’ நின்றது. கீழே இறங்கிய மாணிக்கம், முன்பக்கக் கதவைத் திறந்து விட்டு, “இறங்கு தேவகி!” என்று சொல்லிக் கையை நீட்டினான். அவன் கைகளைப் பிடிக்காமலே காரிலிருந்து பயத்துடன் இறங்கினாள் தேவகி. குரூரமாகச் சிரித்தபடியே முன்னால் அவன் நடக்க, அத்துவானக்காட்டில் விடப்பட்ட அறியாக்குழந்தை போல அவன் பின்னால் செல்கிறாள் தேவகி. 

அந்தக் மர்ம மாளிகைக்குள் செல்லச் செல்ல அனைத்தும் மர்மமாக இருந்தது தேவகிக்கு. அதிலிருந்த ஆடம்பரமான ஒரு அறைக்குள் தேவகியுடன் நுழைந்த மாணிக்கம், “உட்கார்”! என்று ஒரு வெல்வெட் சோபாவைக் காட்ட, அதில் அவள் தயக்கத்துடனும், பயத்துடனும் உட்கார்ந்தாள். எதிரே.. மிகப்பெரிய கட்டில் ஒன்று வேலைப்பாடுகளுடன் கிடந்தது. அதில் வெளி நாட்டு மெத்தை, ஐந்தாறு தலையணைகள், இத்யாதி. 

அந்த அறையை, கலக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் தேவகி. 

ஒரு பொத்தானை மாணிக்கம் அழுத்த, அடுத்த நிமிடமே இரு டம்ளர்களில் மதுவை எடுத்து வந்தான் ஒரு பணியாள். ஒன்றை அவன் எடுத்துக் கொண்டு இன்னொன்றைத் தேவகியிடம் நீட்டினான் மாணிக்கம். “என்னது?” என்று மிரண்டாள் அவள். “கவலையை நீக்கும் காயகல்பம். வெளிநாட்டு மது!” என்றான் அவன். 

“எனக்குப் பழக்கமில்லே வேண்டாம்…!” பயத்தால் அவள் குரல் கம்மியிருந்தது. 

“பழகாததை யெல்லாம் பழகிக்கிற நேரம் இது…!” என்று கூறியபடியே மீண்டும் ஒரு பொத்தானை அழுத்தினான் மாணிக்கம். அடுத்த நிமிடத்தில் ஒரு டம்ளரில் பழச்சாறுடன் வந்தாள் ஒரு பணிப்பெண். அதை எடுத்து தேவகியிடம் நீட்டிய மாணிக்கம்.. “ஆரஞ்சு ஜூஸ்… சாப்பிடு!” என்றான். அவள் வாங்கிக் கொண்டாள். 

பழச்சாறைக் குடித்துக் கொண்டே அந்த அறையை மிரட்சியுடன் பார்த்தாள் தேவகி. அவள் பழச்சாறு சாப்பிட்டு முடிந்ததும், “என்ன இந்த ரூமை அப்படிப் பார்க்கிறே… இது நம்ம பெட்ரூம்!” என்றான் மாணிக்கம். 

அதைக் கேட்டுப் பதறிப் போன தேவகி, “நம்ம பெட்ரூமா?” என்று கத்தினாள். 

“ஆமா… நம்ம பெட் ரூம்தான். இனிமே நீ வேற. நான் வேற இல்லே…!” கொடூரமாகச் சிரித்தான் மாணிக்கம். 

“என்னை ஏமாத்திட்டீங்க!” என்று சொல்லி வேகமாக எழுந்தாள் அவள். 

“ஏமாத்தலே…ரகு கிட்டே இருந்து என்கிட்டே மாத்தறேன்…!” 

“அது நடக்காது…!” 

“நான் நினைத்ததை முடித்தே தீருவேன்… நிதானத்தை இழக்காம யோசி!” 

“ஒரு பெண்ணின் கஷ்டத்தைப் பயன்படுத்தி அவளது கற்பைச் சூறையாடறது.. கேவலமில்லையா…?” பொரிந்தாள் தேவகி. 

“நான் பெண்கள் கஷ்டப்படறதைச் சகிக்க மாட்டேன். அதனாலதான் இப்போகூட உன்னை கசக்கி நுகர்வதற்கு நான் விரும்பலே… யோசிப்பதற்கு நேரம் எடுத்துக்கோ… அதுவரை உனக்கு இங்கே மகாராணிபோல உபச்சாரம் நடக்கும்!” 

கம்பீரமாக எழுந்த மாணிக்கம். தேவகியை நெருங்கி வந்து நின்று, “இது ஒரு தனி உலகம்… இங்கே யாருக்கும் எந்தக் குறையும் இருக்காது… வா… அதை வந்து பார்!” என்று அவளை அழைக்கிறான். அந்த அறையை விட்டுப்போனால் போதுமென்றிருந்த தேவகி, அவன் பின்னால் செல்கிறாள். 

ஒரு அறைக்குள் நுழைந்தபடியே, “இது எங்கள் கலைக்கூடம்!” என்றான் மாணிக்கம். 

கால் ஆடை, அரை ஆடைகளுடன் ஆண்களும், பெண்களுமாக கட்டிப்பிடித்து ஆடிக்கொண்டிருந்தனர். அத்தனை பேருமேநிதானத்தில் இல்லை என்பதை, அவர்கள் அப்போது நடந்துகொண்ட ஆபாசமான நடத்தைகளின் மூலம் அறிந்தாள் தேவகி. 

இன்னார்க்கு இன்னார் என்று இல்லாமல் எவனும் எவளுடனும் இணைந்து கும்மாளமிட்டனர். இந்தக் காட்சிகளையெல்லாம் கண்ட தேவகிக்கு வயிற்றைக் குமட்டியது. 

“இங்கே உட்கார்” என்று கூறி தேவகியை ஒரு இடத்தில் உட்கார வைத்த மாணிக்கம், அந்த ஆட்டத்தில் கலந்துகொள்ளப் போனான். திக்பிரமை பிடித்தவள்போல தேவகி உட்கார்ந்திருந்தாள். 

ஆடிக்கொண்டிருந்த கூட்டத்துக்குள் நுழைந்த மாணிக்கம், ஒரு நிமிடத்துக்கு ஒரு பெண் என்ற கணக்கில், அங்கிருந்த எல்லாப் பெண்களுடனும் கட்டிப் பிடித்து களிநடனமாடினான். இந்தக் காட்சிகளைக் கண்டு கொண்டிருந்த தேவகி, அங்கிருந்து தப்புவதற்கு வழி இல்லாமல் நெருப்பில் விழுந்த புழுப்போல துடித்துக் கொண்டிருந்தாள். 


மந்திரவாதி கொலை வழக்கில் தீர்ப்புச் சொல்ல வேண்டிய நாள். நீதி மன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் சோகமே உருவாக ரகு நின்றுகொண்டிருந்தான். தனக்குத் தண்டனை கிடைக்குமே என்பதால் அவன் கவலை கொண்டிருக்கவில்லை. ‘தேவகியையும், பாபுவையும் அனாதைகளாக விட்டு விடுவோமோ’ என்று எண்ணித்தான் சஞ்சலப் பட்டான். நீதிபதி வந்து ஆசனத்தில் அமர்ந்ததும் கோர்ட்டில் ஒரே அமைதி. மந்திரவாதி கொலை வழக்கில் தனது தீர்ப்பை அவர் படித்தார். 

மந்திரவாதியை ரகு தான் கொன்றான் என்பது சந்தேகமற நிருபிக்கப் படாததால் ரகுவை விடுதலை செய்வதாக அவர் கூறினார். 

ரகு வியப்படைந்தான். 

“சிறையிலிருந்து ரகு தப்பியோடிய குற்றச்சாட்டை கவனமாக பரிசீலித்ததில், ஒரு சிறுவனின் உயிரை காப்பாற்றும் உயரிய நோக்கத்துக்காகவே அந்தத்தவறை ரகு செய்திருக்கிறான் என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே ரகுவை விடுதலை செய்கிறேன்” என்று தன் தீர்ப்பை வழங்கினார் நீதிபதி. 

இருகரங்களையும் கூப்பி, தலைவணங்கி நீதிபதிக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, ஏதோ ஒரு புதிய உலகத்துக்குள் காலடி வைப்பவனைப் போல நீதிமன்றத்தை விட்டு உற்சாகமாக வெளியேறினான் ரகு! 


மேட்டுப்பாளையத்தை ரகு அடையும் போது இரவு ஏழு மணியாகிவிட்டது. தேவகியைக் காண வேண்டும் என்ற ஆர்வம் நெஞ்சில் அலை மோதிக் கொண்டிருக்க. வேக வேகமாக நடந்தான் அவன். தேவகி கொடுத்திருந்த புதிய விலாசத்தை விசாரித்து அதை அவன் அடையும்போது மணி எட்டு! 

அந்த வீட்டு வாசலில் நின்ற ரகு, வீட்டையே பார்த்தான். கீழே வீடு வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது,  மேலே மாடிப்பகுதியில் ஜன்னல்கள் திறந்திருந்தன. தயக்கத்துடன் மாடியில் ஏறினான் ரகு. 

“சார்… சார்…!” என்று குரல் கொடுத்தான், மாடிப் பகுதி வாசலில் நின்றவாறே. 

சிறிது நேரத்தில் ஒரு பெண் வந்து எட்டிப் பார்த்து, “யார் நீங்க?” என்றாள். 

“இங்கே… தேவகீன்னு…?” – ரகு விசாரித்தான். அவனை மேலும் கீழுமாகப் பார்த்த அந்தப் பெண், “ஒண்டிக் கட்டையா இருந்தாளே.. அவளா?'” என்றாள். 

“ஆமா…!” என்றான், ரகு உற்சாகமாக.. 

அவனை ஒரு மாதிரியாகப் பார்த்துச் சிரித்த அந்தப் பெண், “ஒரு வாரத்துக்கு முன்னாடி எவனோ ஒரு பணக்காரன் காரில் வந்தான். நல்லா சிங்காரிச்சிகிட்டு அவன்கூடப் போனா அதுக்கப்புறம் வரலே… அவள மாதிரி ஆளுகளுக்கு ஒரு வீடு மட்டும் இருக்காதுப்பா… பணம் கொடுக்கறவங்க வீடெல்லாம் அவளுக வீடுதான்-!” என்று கூறிவிட்டு, உள்ளே சென்று ‘படார்’ என்று கதவை மூடிக்கொண்டாள். அந்த அடி தனது முகத்தில் விழுந்ததாகவே நினைத்துக்கொண்ட ரகு, துவண்டுபோய் கீழே இறங்கினான். 

ரகுவின் மனவேகம் மேலும் அதிகரித்தது. அங்கிருந்து தேவகியின் பழைய வீட்டுக்கு ஓட்டமும் நடையுமாக வந்தான். அந்த வீடும் பூட்டிக் கிடந்தது. கீழே ராதாவின் போட்டோ ஸ்டுடியோவும் பூட்டிக் கிடந்தது. ஏற்கனவே பூட்டப்பட்டிருந்த தனது ஓவியக் கூடத்தையும் பார்க்கிறான் ரகு. பின்பு, அங்கு நிற்க மனமில்லாமல் ராதாவின் வீட்டை நோக்கி ஓடுகிறான். 


இரவு மணி ஒன்பது ! 

தனது வீட்டுத் தாழ்வாரத்தில் படுத்துக் கொண்டு தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான் ராதா. எப்படித் தூக்கம் வரும்? 

மாணிக்கத்திடம் போலி நகைகளை வாங்கியதிலிருந்து, அவனுக்கும் கீதாவுக்கும் தகராறு. கைக்கு எட்டியதை வாய்க்கு எட்டவிடாமல் பண்ணிவிட்டதாக, ராதாவைக் கீதா திட்ட, ‘நீ தானே நகைகளை எடுத்துக் கொண்டாய். நான் பணமாகத் தானே கேட்டேன், உன்னால் தான் காரியம் கெட்டது’ என்று இவன் அவள் மீது குற்றம்சாட்ட, இருவருக்குமிடையில் தகராறு மூண்டு கடந்த ஒருவாரகாலமாக அவன் தாழ்வாரத்தில் தான் படுத்துக் கொண்டிருக்கிறான். 

“ஏங்க…!” என்ற கீதாவின் குரல் கேட்டு படுக்கையிலிருந்து எழுந்தான் ராதா. 

“போனால் போவுது. உள்ளே வாங்க!” குழைந்து கூறினாள்,கீதா. 

அவ்வளவு சொன்னதுதான் தாமதம். எழுந்து உள்ளே ஓடி, படுக்கையறையில் கட்டிலில் விழுந்தான் ராதா. வெளிக்கதவைப் பூட்டிக் கொண்டு கீதாவும் அங்கு வந்தாள். 

அவள், தலை நிறைய மல்லிகைப்பூவைச் சூடியிருந்தாள். முகத்தில் பவுடர் போட்டு ‘கமகம’ என்று வந்து கட்டிலில் அவன் அருகே உட்கார்ந்தாள். 

“ஏ…அப்பா…ஒரு வாரமாச்சு!” என்றபடி அவளது கையை எடுத்து விரல்களில் நெட்டி ஓடித்தான் ராதா. 

“எனக்கே பாவமா இருந்திச்சி.. அதனால் தான்…!” என்றாள் கீதா, அவனது சேட்டைகளில் லயித்தவளாக! 

உண்மையில் அவன் மீது இரக்கப்பட்டு அவள் இன்று இடம் தரவில்லை! படுக்கையறையில் அவன் செய்யும் சேட்டைகளும், குறும்புகளும் அவளுக்கு மிகவும் பிடிக்கும். அதைக் கடந்த ஒரு வார காலமாக இழந்திருந்தது அவளுக்கே சரிப்பட்டு வரவில்லை. தன்னருகே அமர்ந்திருந்த கிதாவை அப்படியே இழுத்து சாய்த்த ராதா. “அணைக் கட்டுமா?” என்றான். 

”ஊம்?…” என்றாள் கீதா. கோபமாக!

“விளக்கை… விளக்கை!” என்றான் ராதா.

இருவரும் ‘கல கல’ வெனச் சிரித்தனர். 

“தெரியுது, தெரியுது! இருங்க நானே போயி அணைச்சிட்டு வர்றேன்!” என்று கூறி எழுந்து சென்றாள் கீதா. 

அவள் விளக்கு ஸ்விட்சில் கைவைத்த போது, ‘டொக் டொக்’ என்று யாரோ கதவைத் தட்டுவது கேட்டது. தொடர்ந்து ‘ராதா ராதா’ என்ற குரலும் ஒலித்தது. “இது என்னடா… சிவ பூஜையில கரடி…!” என்று சலித்துக் கொண்டவாறே தனது ஆடைகளை சரி செய்துகொண்டு வந்து கதவைத் திறந்தான் ராதா. 

எதிரே ரகு நிற்பதைக் கண்டதும், அவன் திடுக்கிட்டு விட்டான். 

“என்ன ராதா அப்படிப் பார்க்கிறே… நான் விடுதலையாகிட்டேன்…!” ரகு சொன்னான். 

“அப்படியா.. சந்தோஷம்.. வா உள்ளே!” என்றான் ராதா. 

இருவரும் உள்ளே வந்து கூடத்தில் அமர்ந்தனர். 

“ராதா …! தேவகி எங்கே இருக்கா?” அடக்க மாட்டாமல் கேட்டான் ரகு. 

“எனக்கே தெரியலேப்பா… பாபுவை ஊட்டி கான்வெண்டலே சேர்த்துட்டு, அவளும் வேற வீடு பார்த்துட்டுப் போனா…அப்புறம்…” ராதா நிறுத்தினான். 

“அப்புறம். என்ன நடந்தது?”

“அதை எப்படி என் வாயால சொல்றது…?”

“ராதா…என்னைத் தவிக்க விடாதே… எதா இருந்தாலும் பரவாயில்லே… சும்மா சொல்லு…!” ரகு கெஞ்சினான் 

“ரகு… நான் சொல்றனேன்னு தப்பா நினைக்காதே… அவ உன்னை கைவிட்டுட்டாப்பா!” 

அவன் கூறியதைக் கேட்ட ரகு, “ராதா” என்று அலறினான். 

“ஆமாப்பா… யாரோ ஒரு பணக்காரன்கூட அவ அடிக்கடி சுத்தறா… நானே ரெண்டு தடவை என் கண்ணால பார்த்தேன்…!” 

“ஆள் எப்படி இருப்பான்?”

“இதோ…இப்படி!” 

-ரகுவிடம் ஒரு போட்டோவைத் தருகிறான் ராதா. அதை வாங்கிப் பார்த்த ரகு, ‘மாணிக்கம்!’ என்கிறான். அவனுடன் இருப்பது…? ரகு குழம்புகிறான்: 

“இந்த ஆளு உன்னிடம் வந்தானா?” ரகு கேட்டான். 

“இல்லே… இந்தப் படத்தை வேற ஒரு இடத்துலே… இவங்களுக்கே தெரியாம எடுத்தேன்…!” பச்சையாகப் புளுகினான் ராதா. 

“ராதா… இந்தப் படத்துல இருக்கிறவன் மாணிக்கம். இந்தப் பெண், அவனோட மனைவி விஜயா… தேவகியோட சகோதரி! தேவகியும் இவளும் இரட்டைப் பிறவிகள்…!’ ரகு விளக்கினான். 

“இல்லே… அதெல்லாம் நாடகம்! அந்தப் படத்தை நல்லா பார். இவ்வளவு நகைகள், உயர்ந்த ஆடைகள், அணிந்து உதட்டுச் சாயம் பூசியிருக்கிற அந்தப் பெண், பூ வச்சிருக்காளா தலையிலே? பொட்டு வச்சிருக்காளா நெற்றியிலே? பட்டையா விபூதி பூசியிருக்காளே பார்த்தியா. கணவன் இருக்கிற ஒரு பெண் இப்படி இருப்பாளா?” புது சந்தேகத்தைக் கிளப்பினான் ராதா. ராதா அப்படிச் சொன்னதும், படத்திலிருந்த பெண்ணை உற்றுப்பார்த்தான் ரகு. 

திடீர் என்று அவன் கண்கள் அகல விரிந்தன. அந்தப் பெண்ணின் வலது கன்னத்தில், காதுக்குக் கீழே இருந்த மச்சம் அவன் கண்ணில் பட்டது. தேவகிக்கு அந்த இடத்தில் அப்படி ஒரு மச்சம் உண்டு. 

அதை ரகுவே பார்த்திருக்கிறான். அவனது மனம் மேலும் குழம்பியது. 

தேவகி புதிதாகக்குடியேறிய வீட்டுப் பெண் சொன்னது, ராதா சொன்னது, படத்திலிருக்கும் பெண் அவ்வளவு அலங்காரம் செய்தும் பூ, பொட்டு இல்லாமல் இருந்தது, அந்த மச்சம், எல்லாமாகச் சேர்ந்து படத்தில் மாணிக்கத்துடன் இருக்கும் பெண் தேவகி தான் என் அவனை முடிவு செய்ய வைத்தது. 

படத்தைப் பார்த்துக் கொண்டே இருந்த ரகுவின் கண்கள் கலங்கின. 

“என்ன ரகு… பணம் ஏதாவது வச்சிருக்கியா…என் பிஸினஸ் ரொம்ப ‘டல்’ ஆயிடுச்சி!” என்றான் ராதா. 

“இந்தா!” என்று தன்னிடமிருந்த பணத்தை எடுத்துக் கொஞ்சம் தந்த ரகு, 

“படத்தை வச்சே உன் பிஸினஸை நடத்தலாம்னு நினைக்காதே.. அது ரொம்ப நாளைக்கு ஓடாது!” என்று இரண்டு பொருள்பட – அதாவது ராதாவின் பிளாக்மெயில் வேலையைக் குத்திக்காட்டி – கூறிவிட்டு வெளியேறினான். ‘ஓ…தேவகி! என்னை ஏமாற்றிவிட்டாயா?’ என்று அவன் மனம் ஓலமிட்டது. 


மாணிக்கத்தின் மர்ம மாளிகையில் ஒருபகுதி. சற்று இருட்டாக இருந்த அந்த இடத்தில் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. மாணிக்கத்தின் ஆட்கள் ஏதேதோ பெட்டிகளை அந்த லாரியில் ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வேலையைப் பார்வையிட்டுக் கொண்டு நின்றான் மாணிக்கம். 

17ஆம் எண் குறிக்கப்பட்ட பெட்டியை ஒருவன் தூக்கி வந்தபோது, அவனைத் தடுத்தான் மாணிக்கம்! 

“டேய்…… இந்தப் பெட்டியை இறக்கு!” -மாணிக்கம் உத்தரவிட்டதும், அந்தப் பெட்டி இறக்கப் பட்டது 

பெட்டியின் அருகே சென்று பார்த்தான மாணிக்கம். பக்கவாட்டில் ‘கோல்ட்’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. பெட்டியின் மேற்பகுதியில் ஏராளமான துவாரங்கள் இருந்தன. 

“இந்தப் பெட்டியைத் திறங்க!”- கர்ஜித்தான் மாணிக்கம்! ஓடிவந்த பணியாட்கள் இருவர் அந்தப் பெட்டியைத் திறந்தனர். 

பெட்டிக்குள்ளிருந்து எழுந்து நின்றாள் தேவகி. 

அவளைப் பார்த்துச் சிரித்தான் மாணிக்கம். 

“நீ தங்கம்தான்! ஆனால் பெட்டியில் இருக்கக் கூடாது, என் கட்டிலில் இருக்க வேண்டும்!” என்றான்! 

பிடிப்பட்டு விட்டோமே… என்ற திகிலோடு தரையைப் பார்த்தபடி பேசாமல் இருந்தாள் தேவகி. 

“பொருட்களைக் கடத்தி வருவதும், கடத்திச் செல்வதும் எங்களுக்குத் தொழில். கடத்தி வரப்பட்ட பொருள் நீ! ஆனால் கடத்திச் செல்லப் பட வேண்டிய பொருள் அல்ல!” என்று கூறி செல்லமாக தேவகியின் கன்னத்தில் தட்டிய மாணிக்கம், வெறிபிடித்தவன் போல “நானே கடத்தல் மன்னன். என்னிடமே கடத்தலா?” என்று கத்தினான். 

அவனது சத்தத்தைக் கேட்டு, அத்தனை பேரும் வாயடைத்து நின்றனர். அமைதி, அமைதி, ஒரே அமைதி! 

தன் இடுப்பிலிருந்த துப்பாக்கியை எடுத்து, வானத்தை நோக்கி ஒருமுறை சுடுகிறான் மாணிக்கம். அத்தனை பேருடைய கண்களும் அவனையே நோக்குகின்றன. 

வலது கையில் துப்பாக்கியை ஏந்தி, இடது கையால் தேவகியைச் சுட்டிக் காட்டி, “இந்தப் பெண் தப்பிச் செல்வதற்கு உதவி செய்தவர்கள் மரியாதையாகக் கையைத் தூக்குங்கள்!” என்று ஆணையிட்டான் மாணிக்கம். எதிரே இருந்த கூட்டத்தினர், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு, மவுனமாக இருக்கின்றனர்.

“யாரும் எனக்கு உதவி செய்யவில்லை,தானே தான் முயன்றேன்!” 

அந்த அமைதியைக் கலைத்தது தேவகியின் குரல். 

அவளைத் திரும்பிப் பார்த்த மாணிக்கம். “இதை எந்த முட்டாளிடமாவது போய்ச் சொல்!’ என்று மிகவும் அலட்சியமாகக் கூறிவிட்டு, மீண்டும் தன் கூட்டத்தை நோக்கி, 

“இவள் தப்புவதற்கு உதவி செய்தவர்கள் கையைத் தூக்காவிட்டால் உங்கள் எல்லோரையுமே சுட்டுக் கொல்வேன்!” என்று கத்துகிறான். 

கூட்டத்தில் சிலர் நடுங்கினர். மாணிக்கம். எதையுமே பொருட்படுத்தமாட்டான் என்றும் எத்தனை பேரைக் கொல்லவும் தயங்கமாட்டான் என்றும் அவர்களுக்குத் தெரியும். 

திடீர் என்று கூட்டத்தில் இரண்டு கைகள் மேலே உயர்ந்தன. அதைக் கண்டு, “சபாஷ்!” என்ற மாணிக்கம், “கையைத் தூக்கிய கனவான்கள் கொஞ்சம் என் முன்னால் வந்து மற்றவர்களுக்கும் உங்களது முகத்தைக் காட்டலாமே!” என்றான் எகத்தாளமாக. கூட்டத்தை விலக்கிக்கொண்டு இரண்டுபெண்கள் வந்து மாணிக்கத்தின் முன்நின்றனர். 

அடுத்த கணம் ‘டுமீல் டுமீல்’ என்று அந்தப் பெண்கள் மீது துப்பாக்கிக் குண்டுகள் பாய்கின்றன; அவர்கள் அலறிச் சாய்கின்றனர். 

இதைக் கண்ட தேவகி, அந்தப் பெண்களின் மீது விழுந்து அழுகிறாள். வெறிபிடித்தவள் போல எழுந்து நின்று. “ரத்த வெறி பிடித்த மிருகமா நீ?” என்று கேட்கிறாள். 

அதைக் கேட்டு பலமாகச் சிரித்தான் மாணிக்கம்!

“என்னை மட்டும் ஏன் விட்டு வைக்கிறே…என்னையும் சுடு!” மாணிக்கத்துக்கு எதிரே வந்து நின்றாள் தேவகி. 

“தொட்டு ரசிக்க வேண்டிய மேனியைச் சுட்டுப் பொசுக்கலாமா?” கிண்டலாகக் கேட்கிறான் அவன். 

“உப்புத் தின்றவன் தண்ணி குடிச்சித் தான் ஆகணும்; தப்புச் செய்றவன் தண்டனை அடைஞ்சே தீரணும்!” – ஆவேசத்துடன் கூறினாள் தேவகி. 

“தப்பு… தண்டனை! நான் செய்ததப்புக்களிலேயே… ரொம்ப ரொம்ப சின்னத் தப்பு இது தான்…!” என்று கூறிச்சிரித்தான் மாணிக்கம். 

“ஆண்டவன் இதை யெல்லாம் பார்த்துக்கிட்டு தானிருப்பான்…!” என்று தேவகி சொல்லவும், “டேய்… இந்தக் கழுதைய இழுத்திட்டுப் போய் பூட்டுங்கடா!” என்று உத்தரவிட்டான் மாணிக்கம். 

உடனே இரண்டு பேர் வந்து தேவகியைத் தர தரவென்று இழுத்துப் போய் அவள் இருந்த அறைக்குள் தள்ளி வெளிப்பக்கமாகக் கதவைப் பூட்டிச் சென்றனர். 

கட்டிலில் வந்து விழுந்த தேவகி குலுங்கிக் குலுங்கி அழுதாள். ‘ரகு பாபு, ரகு…… பாபு’ என்று அரற்றிக்கொண்டே அழுதாள். 

அப்போது, அந்த அறையின் இன்னொரு வாசல் வழியாக நாலைந்து பெண்கள் தேவகியிடம் வந்தனர். 

“இதைச் சாப்பிடுங்கம்மா!”…என்றாள் ஒருத்தி, அவள் கையில் உணவு வகைகள் இருந்தன. 

“இதைக் குடியுங்கம்மா!” என்றாள் இன்னொருத்தி – அவள் கையில் பாலும், பழரசமும் இருந்தது. 

“இதை உடுத்திக்கிங்கம்மா…!” என்றாள் மற்றொருத்தி – அவள் கையில் பட்டாடைகள் இருந்தன. “இதைப் போட்டுக்கங்கம்மா” என்றாள் வேறொருத்தி – அவள் கையில் விலை உயர்ந்த நகைகள் இருந்தன. அவர்களை ஒவ்வொருத்தியாகப் பார்த்த, தேவகி, 

“உங்ககிட்டே எல்லாமே இருக்கு – மானத்தைத் தவிர!” என்றாள்! 

இதைக் கேட்டு, அந்தப் பெண்கள் தலை குனிந்தனர். 

“இப்படிப் பொழைப்பு பொழைக்கறதுக்கு வெட்கமாயில்லே?” தேவகி கேட்டாள். 

அந்தப் பெண்களில் ஒருத்தி, தேவகியை நெருங்கி வந்து, அவளைக் கையெடுத்துக் கும்பிட்டாள். பின் கூறினாள்: 

“எங்களை தப்பா நினைக்காதீங்கம்மா… மாணிக்கத்திடம் நாங்க ஏமாந்தவங்க. எங்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொருவிதமா ஏமாற்றி இங்கே கொண்டு வந்தான். எங்கள் எல்லோரையுமே இவன் கெடுத்திட்டான். கெட்டுப்போனதுக்கு அப்புறம் வேலைக்காரிகளா ஆயிட்டோம்… இவனை எப்படியும் போலீஸ்லே பிடிச்சிக் கொடுக்கறதுக்காகத்தான் நாங்க இந்த நாய்ப் பிழைப்பைப் பிழைக்கிறோம்… எங்களோட லட்சியம் ஈடேற இன்னும் நாள் வரலே…!” 

அந்தப் பெண்ணின் கண்களில் இருந்து நீர் கொட்டியது. அவள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தாள். அங்கிருந்த மற்றப் பெண்களும்கூட ஏறத்தாழ அதே நிலையில் தான் இருந்தனர். 

“இங்கே இருக்கிற மர்ம வாசல்கள், கருவிகள் சுவிட்சுகள் முதலியவற்றைப் பெரும்பாலும் நாங்கள் தெரிந்து வைத்திருக்கிறோம். நமக்கு ஏதாவது ஒரு நல்ல துணை இருந்தால் நாம் தப்பிவிடலாம்!” – ஆடைகளை ஏந்தி நின்ற பெண் கூறினாள். 

அந்தப் பெண்களைத் திட்டியதற்காக வருத்தம் தெரிவித்தாள் – தேவகி. அவளது சிந்தனை சுழன்றது. இந்தப் பெண்களின் உதவியுடன் தப்புவதற்கு என்ன செய்யலாம் என்று அவள் யோசிக்கத் தொடங்கினாள். 


தனது ஓவியக் கூடத்தில் அலங்கோலமாகக் கிடந்தான் ரகு! சவரம் செய்யப்படாத முகம், எண்ணையையும், சீப்பையும் சந்திக்காத தலை, அழுக்கான ஆடைகள் – இவற்றுடன் ஒன்றுமே விரிக்காமல் வெறும் தரையில் படுத்துக் கிடந்தான் அவன். 

அழுது அழுது அவன் முகமே வீங்கிப் போயிருந்தது. தேவகி கெட்டுப் போனவள் என்று நினைப்பான் – அவன் மனதில் ஆத்திரம் பொங்கும்! அடுத்த கணமே, சேச்சே… அப்படி இருக்காது, இதில் ஏதோ சூது இருக்கிறது, என்று நினைப்பான் – அந்த ஆத்திரம் அடங்கும். 

தேவகி நல்லவளா, கெட்டவளா? – அவனால் தீர்மானிக்க முடியவில்லை. 

அவள், தனக்கு துரோகம் செய்துவிட்டாளா?- இந்தக் கேள்விக்கு ‘ஆம்’ என்றும் அவனால் பதில்சொல்ல முடியவில்லை; ‘இல்லை’ என்றும் கூறமுடியவில்லை. 

விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் அவன் திணறிக்கொண்டிருந்தான். 

சுவரில், அவன் வரைந்து மாட்டிய படத்தைப் பார்த்தான். முன்பு அதே படத்தைப் பார்த்த போது, அந்தப் படத்தில் இருப்பது தேவகிபோலவும், அவள் தன்னைப்பார்த்தே சிரிப்பது போலவும் அவனுக்குத் தெரிந்தது. 

இப்போது அதே படம் அவனுக்கு ஒரு கணம் தேவகியாகவும், அடுத்த கணம் ஒரு பூதகியாகவும் மாறி மாறித் தோற்றமளித்தது. 


மாணிக்கத்தின் மர்ம மாளிகையில் ஒருதனி அறையில் அடைக்கப்பட்டிருந்த தேவகி, மனம் குழம்பிப் போயிருந்தாள். பாபு இங்கு இருந்தால், அவனை எப்படி யாவது வெளியே அனுப்பி, போலீசுக்குத் தகவல் கொடுத்து, ஏதாவது ஏற்பாடு செய்யலாமே’ என்று எண்ணியது அவள் மனம். 

‘கிறீச்’ என்ற ஓசை கேட்டுத் திரும்பினாள் தேவகி. தன் அறைக் கதவைத்தள்ளிக் கொண்டு மாணிக்கம் வருவதையும், அவன் வந்ததும் கதவு தானாகவே மூடிக் கொண்டதையும் பார்த்தாள். 

தேவகியை நெருங்கிய மாணிக்கம் அவளது தோளைத் தொட்டான். அவள் உதறிவிட்டாள். 

“தேவகி… இன்னும் அப்படியேதான் இருக்கிறாயா?” – நிதானமாகக் கேட்டான் அவன். 

அவள் பேசாமல் இருந்தாள். 

“ஏன் வீணா அடம் பிடிக்கிறே? அதனால் என்ன ஆகும்னு நினைக்கிறே? நிச்சயமா உன்னால இங்கிருந்து தப்பிப் போக முடியாது!” 

அவனை அவள் நிமிர்ந்து பார்த்தாள். 

“உன்னை கட்டாயப் படுத்தி காரியத்தை முடிக்க எனக்குத் தெரியாம இல்லே, அது வேண்டான்னு பார்க்கிறேன். அவ்வளவுதான்… நீயா மனது மாறி நான் சொல்றபடி இருந்தா… இந்தக் கூட்டத்துக்கு நீதான் தலைவி: இந்த ராஜியத்துக்கு நீதான் மகாராணி.. என்ன சொல்றே?” – மீண்டும் அவள் தோளை உலுக்கினான் மாணிக்கம் 

சிறிது நேரம் பேசாதிருந்த தேவகி, பிறகுமெல்லக்கூறினாள்.  

“எனக்கு ஒரு மகன் இருக்கான்னு உனக்குத் தெரியுமில்லே…?”

“ஆமா… தெரியுமே பாபு! ஊட்டி கான்வெண்ட்லே இருக்கான்!” 

“இப்போ நான் இருக்கிற இடம் அவனுக்குத் தெரியாது. அவனை இங்கே கூட்டிவா… அவனைச் சமாதானப் படுத்தி – அப்புறமா உன்னோட வாழறது பற்றி முடிவு செய்யலாம்!” – தன் நிலையிலிருந்து தேவகி கொஞ்சம் இறங்கி வருவதாகத் தோன்றியது மாணிக்கத்துக்கு. 

“சபாஷ்! இப்போது தான் புத்திசாலி. பாபுவை நான் அனுப்புற ஆளோட வரச்சொல்லி நீயே உன்கைப் பட ஒரு லெட்டர் கொடு!” – உற்சாகமாகக் கூறினான் மாணிக்கம். 

தேவகியும், கடிதம் எழுதிக் கொடுத்தாள். அதை வாங்கிய மாணிக்கம், தன் மெய்க்காவலனை அழைத்து அந்தக் கடிதத்தை அவனிடம் தந்து, “இம்பாலாவை எடு, இப்பவே புறப்படு, இந்த லெட்டரை கொண்டு போய் ஊட்டி கான்வெண்ட்லே பாபு கிட்டே கொடு, உடனே அழைச்சிட்டு வா!” என்று அடுக்கடுக்காக உத்தரவிட்டான். 

என்ன சந்தேகப்பட்டானோ தெரியவில்லை. தேவகியின் கடிதத்தைத் தனது மெய்க்காவலனிடமிருந்து திரும்பவும் வாங்கிப் படித்தான்: 

அன்புள்ள பாபுவுக்கு, 

அம்மாவின் வாழ்த்துகள்! எனக்கு மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறது. உன்னைப் பார்க்கவேண்டுமென்று ஆசையாக இருக்கிறது. எனவே இந்தக் கடிதம் கொண்டு வருபவருடன் புறப்பட்டு வரவும். இரண்டு நாளில் திரும்பி விடலாம். 

அன்புள்ள அம்மா. 
தேவகி. 

கடிதத்தைப் படித்து முடித்த மாணிக்கத்தின் முகம் மலர்ந்தது. 

“வேறு ஏதாவது எழுதியனுப்புனியோன்னு நெனைச்சேன், ஐயாம் சாரி!” என்று கூறியபடியே கடிதத்தை மெய்க்காவலனிடம் தந்தான் மாணிக்கம். மெய்க்காவலன் புறப்பட்டான். போகிறபோக்கில், ”உனக்கு ஒரு குட் நியூஸ்! ரகு விடுதலையாகி வந்துட்டான்!” என்றான். அது கேட்டு, மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டாள் தேவகி! 

– தொடரும்…

– ஒரு மரம் பூத்தது (நாவல்), முதற்பதிப்பு: 2000, பாரதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *