ஒரு பாவத்தின் பலி!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 11, 2021
பார்வையிட்டோர்: 2,942 
 

கிறிஸ்துராசா கண் விழித்துக் கிடந்தான்.

“எப்போது விடியும்?”

நெற்றியில் வலது கையை மடித்துப் போட்டு கால்களைச் சுதந்திரமாக நீட்டி எறிந்து கொண்டு நீட்டி நிமிர்ந்த கோலத்தில் அந்த இருள் கப்பிய சிறு முகட்டை வெறித்தவாறு கிடந்தான். நீண்டபொழுது அவ்வாறு தான் கிடக்கின்றான். அவனது இருதயத்தோடு இருள்தான் பேசுகிறது.

அவனுக்குப் பக்கத்தில், அவனுடலை ஒட்டினாற் போல் மரியா சோர்ந்து போய், மறுபக்கம் சரிந்து, ஒருக்களித்துப் படுத்துக் கிடக்கின்றாள். அவனுக்காக, அவள் இப்படி இரவுகளில் களைத்துப் போய்க் கிடப்பது பழகிப் போச்சு. கண்களை மூடியவாறு கிடந்தாள் அவள்.

அந்த அறையின் மூலையில், அவர்கள் இரவு படுக்கைக்குச் சென்றபோது, மரியா ஏற்றிவைத்த குப்பி விளக்கு எண்ணெய் உறிஞ்சி மங்கி நூர்ந்து போகிறது.

இனிவிளக்குத் தேவையில்லை, அந்தக் குருட்டு இருட்டில், அவன் தலையைத் திருப்பி பக்கத்தில் தன்னோடு முட்டிக்கிடக்கும் மரியாவைச் சற்று நேரம் பார்த்து விட்டு மீண்டும் முகட்டை நோக்கியவாறு கிடந்தான்.

நெஞ்சு மூச்சோடு ஏறி இறங்கியது.

எப்போது விடியும்?.

அவன் சோர்வில் கண்களை மூடிமூடித்திறந்து கொண்டான். இருட்டுப் போகவில்லை. அந்த வீட்டின் மேற்குப் புறமாக, அமைந்துள்ள புனித லூசியா மாதா கோவிலில் உதய காலப் பூசைக்காக முதலாம் மணி அடித்து ஓய்கிறது. ஓ! விடிந்து வருகிறது.

இன்று பெரிய வியாழக்கிழமை!

அபாய பயம்

யேசுகிறிஸ்து வானவர் இவ்வுலகத்தில் உள்ள சகல மனிதர்களின் பாவங்களு க்காகவும், நாளை சிலுவையில் அறையுண்டு மரிக்கப் போகிறார்.

அவன் கண்களை இறுகத்துடைத்து விட்டுக் கிடந்தான். அந்த மணியோசை காதினுள்ளே இரைந்து முடியும் தறுவாயில், ஏதோ ஒரு பயம் அவனை உலுக்கியது. நெற்றியில் போட்டிருந்த வலது கையால், நெற்றியிலும் , தோள்களிலும் நெஞ்சிலும் தொட்டு சிலுவை அடையாளம் போட்டுக் கொண்டான்.

தொலைவில் இருந்து ஒரு சேவல் குரல் இழுத்துக் கூவியது. மரியா அவனை நோக்கித் திரும்பி அவனுடைய வெறும் மார்பில் கையை உரிமையோடு வைத்து, அவனின் மார்புப் பரப்பில் கிடக்கும் மயிர்களைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அவன் நிமிர்ந்து கிடந்த நிலையில் முகட்டைப் பாத்தவாறு அவளுடைய கலைந்த கூந்தலை வருடி விட்டான். மரியா இன்னுமின்னும் நெருங்கி அவனை அணைத்தவாறு.

விடிந்து போகுதேயுங்கோ என ஏக்கம் கரகரத்த தொனியில் கூறினாள்.

விடியத்தானே வேணும்.

“விடிஞ்சா, நீங்கள் என்னை விட்டுட்டுப் போய்விடுவீங்களே?

போகாதேயுங்கோ!”

“ம், நல்லாயிருக்கு, இங்கையிருக்க முடியுமா?”

அவனின் கேள்வி, மரியாவின் மன மென்மையைத் தாக்கி நோகச் செய்தது. அவள் பேசாமல் கிடந்தாள். அவளுக்கு உள்ளே நெஞ்சு கனத்துக் கொள்கிறது. அவனுக்கும்தான், உங்களுக்குக் களைப்பாயில்லையா? மரியா அவனுடைய தலைமுடியைக் கோதி விட்டாள்.

“உனக்கு? உனக்கும் களைப்பாயிருக்கும் தானே?”

“இல்லை, எனக்கு நீங்களெண்டால்….”

“ம் – அப்படியா?”

“ஓ!” மௌனம்; மௌனத்தின் நீடிப்பில் இருவர் மூச்சுக்களும் பேசுமாப்போல.

“என்னங்கோ, இந்தச் சந்தோசம் எனக்கு நீடிக்குமா?” மரியாவின் பயம் கொண்ட ஏக்கம்.

“ம் ஏன்? – நீடிக்கும்!”

கிறிஸ்துவுக்கு வார்த்தைகள் சரியாக வருகுதில்லை, நிசப்த நீடிப்பின் உள்ளடக்கம் யோசனைகள்! யோசனைகள்.

“என்ன நித்திரையா கொள்றீங்கள்?” அவனுடைய மூக்கைப் பிடித்து அசைத்தாள் மரியா.

“ம் என்ன – இல்லை”

“ஒண்டுமில்லை” என்றவன் சரிந்து அவளை அள்ளி அணைத்து நெற்றியில் முத்தமிட்டான்.

“என்னைப் பற்றியா யோசிக்கிறீங்க?”

“ஓம்”

மரியா தன் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள். சிரிப்பு முடிய அவன் காதுக்குள் முகம் இட்டுக் கேட்டாள்.

“எப்பவுங்கோ கலியாணம்?”

“கலியாணமா? இப்ப இரண்டு பேருக்குமிடையிலை நடக்கிறதென்ன? என்னில நம்பிக்கையில்லையா?”

“ச்சீ – அப்படி நான் நினைப்பனா? அதில்லையுங்கோ; அம்மா ஒரே கரைச்சல் இப்படி நீங்கள் இரவிலை வந்து போறது எல்லோருக்கும் தெரிவும் தானே? இரண்டு வருஷமா வாறீங்க. கேட்கிற ஆக்களுக்கு அம்மா சொல்றவ றெயிஷ்டர் முடிஞ்சுதெண்டு, றெயிஷ்டரையாகுதல் செய்து வைப்பமே?” கெஞ்சும் குரலில் கூறிய மரியா அவனுடைய தலைமுடியை விரல்களால் கோதிக் கொண்டிருந்தாள். கிறிஸ்துவுக்கு நெஞ்சு இரைந்து இடிக்கிறது. “என்ன பயம் ?” கொஞ்ச நேரம் ஒன்றும் பேசாமல் அவன் கிடந்தான். எல்லாத்தையும் சமாளிக்கலாம்.

“நீ பயப்படாதை! இன்னொரு மாசத்திலை தாலி கூறையெல்லாம் வாங்கி ரெயிஷ்டரையும், கலியாணத்தையும் ஒண்டா வைப்பம். நான் ஒரு முடிவுக்கு வந்திட்டன்.”

மரியாவுக்கு மனம் முழுக்கப் புழுகம்.

“இஞ்சேருக்கோ, இந்த லூசியா மாதா கோவிலிலை தான் கைப்பிடிக்க வேணும். சரியா?”

“ஏன்?”

“எங்கடை கலியாணம் நிறைவேற வேணுமெண்டு நானும் அம்மாவும் நேர்த்தி வைச்சிருக்கிறம்!”

“சரி, அப்படியே செய்கிறேன் மகாராணி!”

“என்ரை ராசா! மரியா இதயம் பூரித்து அவனுடைய முகத்தை இரு கைகளாலும் வருடி அணைத்துக் கொஞ்சினாள். பிறகு இரு கைகளையும் நெஞ்சில் குவித்து லூசியா மாதாவை நினைத்துக் கும்பிட்டாள்.

“அந்த வீட்டுக்கு பின்புறமாக தெருவோடு நிற்கும் ஆலமரத்தில் தூங்கிய காக்கைகள் சிறகடித்துக் கலைந்து கரையத் தொடங்கின.

“இப்ப நான் போக வேணும்!” கிறிஸ்து தன் இரு கைகளாலும் தூக்கத்தில் மொய்க்கும் கண்களைக் கசக்கி விட்டான்.

“ஓ! ஆக்கள் எழும்பமுதல் போயிடுங்கோ ! வெளிக்கிடுங்கோ! அம்மாவும் எழும்பிட்டா! எங்களுக்கு தேத்தண்ணி வைக்கிறா!”

அவன் கையூன்றி எழுந்தான். உடம்பெல்லாம் ஒரே அலுப்பு. இரவு அவன் அரையில் கட்டுவதற்காக மரியா மடித்துக் கொடுத்த சேலையை, இருட்டில் தடவி எடுத்து உடம்பில் சுற்றிக் கொண்டான். மரியா தன் நைற்றெஸ்சை எடுத்துப் போட்டுக் கொண்டு எழுந்து, அந்த அறையோடு ஒட்டிய குசுனிக்குள் போய், கிறிஸ்து முகம் கால் கழுவ ஒரு சிறு வாளியில் தண்ணீர் கொண்டுவந்து அறை வாசலில் கானுக்குப் பக்கத்தில் வைத்தாள். அவன் தலையை நீட்டி யாரும் நிற்கிறார்களோ எனப் பார்த்து விட்டு அவசர அவசரமாக முகத்தை அலம்பிக் கொண்டு, “ட்றவுசரை எடுத்து மாட்டினான். மரியா சீப்பைக் கொடுத்தாள். அவன் இரட்டிலே, உச்சியைக் கையால் தடவிப் பிடித்து முடியைச் சீவிவிட்டான்.

மரியாவுக்கு அந்நேரம்தான் சோர்வும், வயிறு தொய்வதும் தெரிகிறது. தானும் தாயும் நேற்று இரவு பட்டினி கிடந்தது ஞாபகம் வந்தது.

“உங்களிட்டைக் காசு ஏதாவது இருக்கா?”

“ஓ!” என்றவன், பாய்க்குப் பக்கத்தில் இரவு கழட்டிப் போட்ட சேட்டை எடுத்து, பொக்கட்டிலிருந்து ஐம்பது ரூபா நோட்டை எடுத்து அவளிடம் நீட்டினான். “ம் – இந்தா ”

“எவ்வளவுங்கோ ”

“ஐம்பது ரூபா!”

“எனக்கேன் இவ்வளவு காசு?”

“நீ வைச்சிரு வைச்சுச் செலவளி”

மரியா அவனின் அன்பையிட்டுப் பூரித்துப் போய், அவனை நெருங்கி அணைத்து முத்தமிட்டாள்.

“விடு! விடு!”

கிறிஸ்து சிகரட் பக்கட்டிலிருந்து சிகரட் ஒன்றை எடுத்து பற்ற வைத்துக் கொண்டு வெறும் பெட்டியை நிலத்தில் போட்டான்.

“என்னவுங்கோ அது விழுந்தது?”

“அது வெறும் சிகரட்பெட்டி!”

இப்பொழுது கொஞ்சம் முகம் தெரிகிறது. அவள் கிட்ட நெருங்கி கிறிஸ்துவின் முகத்தைப் பார்த்தவாறு நின்றாள்.

“பிள்ளை தேத்தண்ணியைக் கொண்டு போய்க்குடு!”

“பொறுங்கோ” என்றவள் குசுனிக்குள் பாய்ந்தோடினாள். அவளுடைய தாய், போத்தலுக்குள் கிடந்த சீனியெல்லாம் தட்டிக் கொட்டி தேனீரைக் கலக்கினாள். மகளிடம், தேநீர்க் கோப்பையைக் கொடுத்துக் கொண்டு மெதுவாகக் கேட்டாள்.

“கலியாணத்துக்கு என்னவாம்?”

“அடுத்தமாசம் செய்யிறதாம். முடிவாச்சொல்லிப் போட்டார்” என்று கூறிக் கொண்டே தேனீரைக் கொண்டோடிப் போய் அவனிடம் பக்குவமாகக் கொடுத்தாள். அவன் அவதி அவதியாக தேனீரைக் குடித்து விட்டு “நான் வாறன்” என்று கூறிக் கொண்டு வெளியில் வந்தான். மரியா அவனுடைய கைகளை ஒருமுறை இறுகப்பற்றி முத்தமிட்டுக் கொண்டாள்.

“கவனமாப் போங்கோ, நல்லாச் சாப்பிடுங்கோ ”

“யேசுவே! என்மேல் இரக்கமாயிரும்” என்று குசுனிக்குள் பெருமூச்சோடு ஈனமாக வந்த மன்றாட்டு, கிறிஸ்துவின் காதில் உரசிக்கொண்டு போனது.

அவன் கரையும் கருக்கலில் எட்டிக்காலடி எடுத்து வைத்து, அந்த வீட்டுபேலியைக் கடந்து தெருவில் இறங்கி, மறைந்தான். காகங்கள் கரைந்து கொண்டிருந்தன.

மரியாவின் வீட்டை விட்டு நீங்கிய கிறிஸ்துராசா கொட்டாஞ்சேனைச் சந்தியில் பஸ் ஏறி, கொள்ளுப்பிட்டியில் உள்ள தன் அறைக்கு காலை ஆறுமணிக்கெல்லாம் வந்து விட்டான். அவனுக்கு இரவு மரியாவோடு கண்விழித்ததினால் உண்டான நித்திரை வெறியும் உடலலுப்பும்.

காற்சட்டையையும், சேட்டையும் கழற்றி கை போனதிசையில் எறிந்து விட்டு சாறத்தைக் கட்டிக் கொண்டு கட்டிலில் குப்புற விழுந்ததுதான் அவனுக்குத் தெரியும். மரண நித்திரை.

“டேய் கிறிஸ்து !”

அவனுடைய சிநேகிதன் செல்வரெத்தினம் அவனுடைய முதுகில் தட்டினான். நாலைந்து முறை முதுகில் அடித்த பின்பே அவன், புரண்டு நிமிர்ந்து கண்களைக் கசக்கினான்.

“என்னடா இவ்வளவு நித்திரை? ராத்திரி என்ன சரக்கிட்டையே போனனி? முன் கதவும் பூட்டல்லை? எனக்குத் தெரியும், அதுதான் போல” செல்வரத்தினம் கட்டிலில் அவனது காலருகில் உட்கார்ந்தான். கிறிஸ்துராசா உடலை முறித்துக் கொண்டு எழுந்து சுவரோடு சாய்ந்து இருந்தவாறு இருகைகளாலும் தலைமுடியைக் கோதி முகத்தைத் தேய்த்து விட்டான்.

“ஓம் மச்சான்! இப்ப எத்தினை மணியடா?”

“எத்தினை மணியோ? பன்ரெண்டாகுது”

கிறிஸ்துராசா எழும்பி சுவரில் மாட்டியிருந்த சிறு கண்ணாடிக்கு முன்னால் சென்று நின்று, சீப்பை எடுத்து முடியை வாரிக் கொண்டு முகத்தை இரு கை விரல்களாலும் தேய்த்துத் துடைத்துவிட்டு மீண்டும் செல்வரெத்தினத்துக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான்.

“ராத்திரி நல்ல நித்திரை முழிப்புப்போல” என்றான் செல்வரெத்தினம் கைலேஞ்சியை எடுத்துக் கழுத்தைத் துடைத்துக் கொண்டு,

“டேய் மெள்ளக்கதை, வீட்டுக்காரர் நல்லமதிப்பு வைச்சிருக்கிறாங்கள் என்னிலை. கெடுத்துப் போடாதை!” கிறிஸ்துராசா வாயில் மூன்று விரல்களை வைத்துக்கொண்டு தாழ்ந்த குரலில் கூறினான்.

“என்னவாமடா உன்ரை சரக்கு?”

“அவள் என்ன சொல்றது, இருக்கிறாள் அதுசரி என்ன உன்னைக் கன நாளாக் காணேல்லை?”

“நான் எக்கவுண்டன்சி பைனலுக்குப் படிக்கிறன். உனக்குத் தெரியுந்தானே? அது தான் வெளிக்கிட நேரமில்லை. அதை விடு, நான் வந்த விஷயம் இதுதான். உங்கடை அம்மா எனக்குக் கடிதம் எழுதினவ. உன்னைக் கண்டு புத்திமதி சொல்லச் சொல்லி. உன்ரை சரக்கு விஷயம் சாடையாத் தெரியும் போல!” என்றான் செல்வரெத்தினம் சொண்டுக்குள் சிரித்தவாறு.

“என்னவாம்? எனக்கும் கடிதம் வந்திருக்கு சொல்லு!” –

“என்ன; கொழும்பில் எங்கேயும் குப்பை கூழத்தில மாண்டு போக வேண்டாமாம், நல்ல இடத்தில உனக்கு கலியாணம் பேசியிருக்காம். ஒரு லட்சம் பெறுமதியான வீடுவளவும் இருதினாயிரம் ரூபா நகை, ஐம்பதினாயிரம் டொனேசன், பெட்டையிடை அண்ணன்மார் இருண்டு பேர் அமெரிக்காவிலையாம். எனக்குத் தெரியும் அவங்கள் பெரிய ஆக்கள். கௌரவமான குடும்பம், “ என்று கூறியவன் மூக்குக் கண்ணாடியைக் கழற்றி கையில் வைத்து சேட்டு மூலையில் துடைத்துக் கொண்டிருந்தான்.

“எனக்கும் உதெல்லாம் எழுதியிருக்கு கடிதத்தில!” “பிறகென்ன செய்யவேண்டியது தானே?”

கிறிஸ்துராசா, ஒரு காலைக் கட்டிலில் மடித்துப் போட்டு, காற்பெருவிரல் நகத்தை கைவிரல்களால் நோண்டியவாறு மௌனமாகவிருந்தான்.

“என்னடா யோசனை?”

நிமிர்ந்து உதட்டில் சிறு சிரிப்பை வரவழைத்துக் கொண்டு “அதுக்கென்ன செய்வம்” என்றான் கிறிஸ்துராசா.

“என்ன ஒருமாதிரி இழுக்கிறாய். அந்த மரியாவில் தான் காதல் முத்திப் போச்சோ?”

கிறிஸ்துராசா செல்வரெத்தினத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மூக்குக் கண்ணாடியை போட்டுக்கொண்டு, அந்த தடித்த கண்ணாடிக் குள்ளால் கிறிஸ்துவைப் பார்த்து விட்டு, “என்னடா முழிக்கிறாய்?” என்றான்.

“என்னைப்பற்றி நீ என்ன நினைச்சுக் கொண்டிருக்கிறாய்?”

“என்னடா சொல்கிறாய் ஒண்டும் விளங்கேல்லை. இப்ப மரியா என்னவாம் உன்ரை முடிவு என்ன?”

“அவள் தன்னை கலியாணம் முடிக்கட்டாம்” –

“அவவோ? அந்தக் கேடுகெட்ட நாயோ?”

“ஓம்”

“உன்ரை முடிவு என்ன?”

“எனக்கு மே முதலாந்திகதி தொடக்கம் யாழ்ப்பாணக் கச்சேரிக்கு மாற்றம்”

இதைக்கேட்ட செல்வரெத்தினம் மூக்குக் கண்ணாடியைக் கழற்றி கையில் வைத்துக்கொண்டு அவனைப் பார்த்து “அப்ப மரியாவையும் கூட்டிக் கொண்டு போறியோ?” என்று கேட்டான்.

“உனக்கென்ன பைத்தியமா? இனி எங்கை அவள் என்னைப் பிடிக்கிற? இந்த வெள்ளிக்கிழமை ஐயா யாழ்ப்பாணம் போறார்” கிறிஸ்து மடக்கி வைத்த காலின் பாதத்தில் மெதுவாக தட்டிக் கொண்டிருந்தான்.

“உன்னை அவள் தேடி வந்தா? பெரிய அவமானமல்லோ?”

கிறிஸ்துராசா செல்வரெத்தினத்தின் கன்னத்தில் கைவிரல்களால் தட்டிக் கொடுத்துச் சிரித்தான் “பேயா”.

“என்னடா?” என்றான் செல்ரெத்தினம் மகிழ்ச்சியோடு.

“மரியாவுக்கு என்ரை உண்மையான பேருந்தெரியா, நான் எங்கை வேலை பார்க்கிறதெண்டும் தெரியா; எங்கை தங்கியிருக்கிறன் எண்டும் தெரியா; எல்லாம் பொய் அட்றஸ் தான் அவளிட்டைச் சொல்லியிருக்கிறன். தேடிப் புடிக்கட்டன் பாப்பம்!”

“நீ ஆள் சூரன்தான்” என்று அவனின் தோளில் தட்டிக் கொடுத்தான் செல்வரெத்தினம்.

“நான் அம்மாவுக்கு எல்லாம் எழுதிப் போட்டன். பொம்பளை பார்க்கச் சொல்லியும் எழுதியாச்சு!”

செல்வரெத்தினத்திற்கு அவனில் இன்னும் சந்தேகம் தீரவில்லை, அவனை நல்லபிள்ளையாக்க வேண்டும் என்பது இவனுடைய விருப்பம். “அப்ப மரியாவை உண்மையா விட்டிட்டியோ? இனி ஒரு தொடுசலும் இருக்காதோ?”

“நேத்து ராத்திரியோடை கை கழுவியாச்சு!”

“மாதாவறிய?”

“சத்தியமா! அந்தோனியாராணை! உனக்கென்ன பொய்யா சொல்றன்”

“வெறிகுட்! வெறிகுட்!” –

கிறிஸ்துராசா கட்டிலில் இருந்து துள்ளி எழுந்து, உடம்பை நெளித்து, கைகளை முகடுநோக்கியெறிந்து சோர்வு முறித்துக் கொண்டு “இண்டையோடை என்னைப் பிடிச்ச சனியன் தொலைஞ்சுது! இனி ஒரு புது மனிசனா வாழப்போறன். இதை இண்டைக்கு கொண்டாட வேணும் வா! இருவரும் நல்ல ஒரு ஹோட்டலுக்கு போய் நல்லாக் குடிச்சிப் போட்டு கோழி இறைச்சிப் புரியாணியும் சாப்பிட வேணும்” என்று தன் மனந்திறந்து சொன்னான்.

இது கட்டாயம் கொண்டாட வேணும் தான்.

“உன்னில் எனக்கு இப்பத்தான்ரா மதிப்பு வந்திருக்கு” என்றான், நண்பன்.

கிறிஸ்துராசா துவாயை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு, சோப்பைக் கையில் எடுத்தபடி, “பாத்றூமை” நோக்கி நடக்கையில் “இருமச்சான் வாறன் அவள் என்ரை உடம்பிலை மணக்கிறாள்டா, நல்லா ஒழுங்கா சவர்க்காரம் போட்டுக் குளிச்சிட்டு வாறன்” என்றான்.

– வீரகேசரி 1982 – விபசாரம் செய்யாதிருப்பாயாக (சிறுகதைத் தொகுதி)- விவேகா பிரசுராலயம் – முதற் பதிப்பு கார்த்திகை 1995

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *