ஒரு தாய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 14, 2023
பார்வையிட்டோர்: 1,726 
 
 

(2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காலையிலிருந்தே காமாட்சி சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருந்தான். தன்னுடைய இருப்பிடத்தைச் சுத்தம் செய்து துவைத்த துணிகனை எடுத்துப் போய்க் காயப் போட்டு, உலர்த்த துணிகளை மடித்து வைத்து விட்டுத் தலையில் எண்ணெய் வைத்து வாரிவிட்டுக் கொண்டை போட்டு, அதே கையினால் முகத்தை அழுத்தமாய்த் தேய்த்துத் துடைத்து மூன்று விரல்களால் விபூதியை நெற்றியில் பூசிக் கொனூடு வெனியே வந்து.,

கோயில் பக்கம் பார்த்துக் கைதூக்கிக் கும்பிட்டுவிட்டு மறுபடியும் உள்ளே வந்து தனது உடைமைகள் அடங்கிய அத்தச் சின்னஞ்சிறு பினாஸ்டிக் பையை எடுத்துக் கொண்டு காலில் “சிலிப்பரை” மாட்டிக் கொண்டு சாலை ஒரமாய் வந்து வீதியை இருபுறமும் பார்த்து மெல்லச் சாலையைக் கடத்து கோயிலின் எதிர்ப்புறம் இருந்த காப்பிக் கடைக்கு வந்து கடைக்காரரிடம் ஒரு காப்பிக்குச் சொல்லி விட்டு அங்கே கிடந்த நாற்காலியில் ஒடுக்கமாய் உட்கார்ந்த காமாட்சியை…

எதிர்மேசையில் அமர்ந்து காப்பி குடித்துக் கொண்டிருத்த கந்தசாமி ஒரு கனைப்புடன் அழைத்து விசாரிக்கிறார். காமாட்சிக்கு அப்போது தான் தனக்கு எதிரே ஆன் உட்கார்ந்திருக்கும் நினைவு வருகிறது. தடுமாறிப் போய் பதில் தருகிறாள்.

“வாங்க சாமி… தண்ணி சாப்பிடுறீங்களா… கோப்பிக்குச் சொல்லட்டுமா? கரிசனமாய்க் கேட்கும் காமாட்சிக்குத் தன் கையை அசைத்து வேண்டாம் என்று பதில் சொல்லி விட்டு…,

“என்ன காமாட்சி… பளிச்சின்னு எங்கேயோ கெளம்பியாச்சுபோல தெரியுதே…!

“என்ன விசேஷம்னு தெரிஞ்சுக்கலாமா?” என்றார்.

“ஆமாங்க சாமி!நேத்திக்க நம்ம பூசாரி ஐயா ஒரு சேதி சொன்னாங்க. யார்யோ வரச் சொல்லியிருக்காங்களாம்… இன்னிக்கு வந்து என்னைக் கூட்டிக்கிட்டுப் போவாங்கன்னு சொன்னாங்க அதான் குளிச்சு முடிச்சிட்டு சுத்தமா கௌம்பிட்டேன்… போற எடம் அரசாங்க நிறுவனம் பாருங்க”.

காமாட்சி விளக்கமாய்ச் சொன்னதும் அவருக்கும் ஏதோ புரிந்திருக்க வேண்டும். அவன் போக இருக்கும் இடத்தை ஓரளவு யூகித்துக் கொண்டவராய்…;

“இங்கேபாரு காமாட்சி… அந்த இடத்தில் ஏதாச்சும் ஏடாகூடமாகச் கேட்டுவைப்பாங்க… புத்தியில்லாம எதையும்  உளறிப்புட்டு வந்துடாதே ! சில நேரத்தில் படிச்சவுங்கள்லாம் எதைப்பற்றியும் கவலைப்படாம தன்னோட கடமை முடிஞ்சா போதுமின்னு வேலையை முடிச்சிகிட்டுப் போயிடுவாங்க… எதிலயும் நாமதான் முளிப்பா இருக்கோணும் பத்திரமாப் போய்ட்டு வா…”

ஏதோ உடன் பிறப்புப் போல் மனமாறக் காமாட்சிக்குப் புத்தி சொன்னார் கந்தசாமி.

வீடமைப்புக் கழகத்தில் வேலைபார்த்து ஓய்வு பெற்ற பின் கோயிலில் கூட்டிப் பெருக்கும் துப்புரவு வேலையை செய்து கொண்டு பெற்ற பிள்ளைகள் ஐந்து பேர்கள் வசதியாடு வாழ்ந்து கொண்டிருந்தும்; தனக்கு நிம்மதி தேடி இந்தக் கோயிலே புகலிடமாய்க் கொண்டு விட்டவர்தான் இந்தக் கந்தசாமி.

இவரைப் போலவே இந்த வயதான காலத்தில் ஓர் ஏகாந்தியாய்க் கோயிலில் ஒண்டிக்கிடக்கும் காமாட்சிக்கு அவ்வப்போது பேச்சுத்துணையும் இவர்தான்! கந்தசாமிக்குப் பிள்ளைகளால் எவ்வித ஆதரவும் இல்லாதது போலவே காமாட்சிக்கும் எவ்வித துணையும் சொந்தமும் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்!

அவளது கணவன் காளிமுத்து டெலிகம்ஸில் பார்த்து ஒய்வு பெற்று மனைவிக்கு மத்திய சேமநிதியை எழுதி வைத்து விட்டுச் செத்துப்போனார். ஒரு பையன் இருந்தான். அவன் தன் மனைவியின் அழகிலும் ஆடம்பரத்திலும் மயங்கிப் பெற்றவளைத் தெருவில் நிறுத்திவிட்டுப் போய்விட்டான். தகப்பன் பெயரில் இருந்த சொத்தும் அவன் தனக்கே உரியது என்று வாதாடி அதை விற்றுச் சுருட்டித் தன் பையில் போட்டுக்

புருஷன் உயிரோடு ஷந்த நேரத்தில் வீடே கோயிலாகவும் புருஷனும் பிள்ளையுமே தெய்வங்களாகவும் நினைத்துக் காலத்தைப் போக்கியவள் காமாட்சி. அவளுக்குப் புருஷன் இல்லாமல் எங்குமே தனியாகப் போன பழக்கம் கிடையாது.

வயதாகிப் போய் நோயில் விழுந்து மருத்துவமனையில் படுக்கையில் புருஷன் கிடந்த போது கூட அவள் தன்னுடைய மகனின் துணையோடு தான் வெளியே போய் வந்தாள்.

புருஷனின் மரணத் திற் குப் பின் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்து அக்கம் பக்கத்தாரின் ஆறுதலுக்குப் பின் வெளியே நடமாடத் தொடங்கினாள்

அவளுக்கென்று எந்த வேலையும் செய்யத் தெரியாது- வழக்கமாய்ப் போய்வரும் கோயிலில் பூசாரியின் சிபாரிசில் தான் சிதம்பரம் செட்டியார் வீட்டில் வீட்டுவேலையில் சேர்ந்தாள். அவர்கள் குடும்பம் சிறிய குடும்பம் என்பதால்,அங்கே வேலை குறைவாகவே இருக்கும். வேலையை முடித்துவிட்டுச் செட்டியார் வீட்டு அம்மாவுடன் கதை பேசுவதில் காலம் ஒடிவிடும்- அவர்களும் தங்களின் உறவு போலவே அவளை நினைத்ததால் அவளுக்கு வாழ்க்கையை ஓட்டுவதில் எவ்விதப் பிரச்சினையும் எழாமல் இருந்தது.

நாலைந்து வருடங்களுக்குப் பின் சிதம்பரம் செட்டியார் ஊருக்குப் போய்விட்டார் அவர்களின் உறவுக்காரரிடம் வீட்டை விட்டுவிட்டுப் போனவர்கள் காமாட்சியையும் அவர்களிடம் தொடர்ந்து வேலைபார்த்துக் கொண்டு அவர்களோடு கொள்ளச் சொன்னார்.

காமாட்சிக்குச் சங்கடமாக இருந்தது. அந்தப்புது இடத்தில் இருந்து விலகிப் போய் வேறு எங்காவது வேலை செய்யலாமா என்று நினைத்துக் கொண்டு பூசாரியிடம் போய் யோசனை கேட்டாள். பூசாரி சிறிது நேரம் யேபீசித்து விட்டு “ரெண்டு நாள் கழிச்சு வா காமாட்சி… நாளை யாராச்சும் வந்தா கேட்டுச் சொல்றேன்னு அனுப்பி வைத்தார்.

காமாட்சி கண்களில் நீர் பெருக ஆறுமுகப் பெருமானை வேண்டி நின்றாள். அதன் பின் நாட்கள் மளமளவென்று ஒடி வருடங்களும் ஒடிக் காமாட்சிக்கும் வயது அறுபதைத் தாண்டி விட்டது. கண்களில் ஒளி குறையத் தொடங்கி நடையும் தளர்ந்து அடிக்கடி சோர்ந்து உட்காரத் தொடங்கி விட்டாள். அவளால் பத்தடி தூரம் கூட துடைப்ப ம்எடுத்துப் பெருக்க வெண்கலப் பாத்திரங்களை பளிச் சென்று துலக்கி எடுக்க முடியவில்லை… வீட்டுவேலைகளையும் அவளால் தெளிவாகச் செய்ய முடியவில்லை… அடிக்கடி வயிற்று வலி வேறு ! அதிக மழையோ வெயிலோ வந்துவிட்டால் அவள் மூலையில் முடங்கி விடுவாள் அந்த வீட்டுக்குப் புதிதாகப் பணிப்பெண் ஒருவரை வேலைக்குச் சேர்த்துக் கொண்டதால் காமாட்சிக்குச் செய்து வந்த வேலையும் போய் விட்டது.

இப்போதெல்லாம் இந்தக் காமாட்சி இங்கே வருவோர் போவோரின் பார்வையில் ஒர் அனுதாபப் பொருளாகத்தான் தென்பட்டாள். எல்லோரும் அவளை ஒர் அனாதை என்ற பார்வையில்தான் பார்த்துப் பேசினார்கள். உதவியாளர்கள் சிலர் அவளுக்கு உடுத்திக் கொள்ளத் துணி கொடுத்தார்கள். இன்னும் சிலர் உண்ண உணவு கொடுத்தார்கள். ஆனால் அவளுக்கென்று ஒரு உன்னதமான உறவை, நெருக்கத்தை, சொந்தத்தைக் கொடுக்க யாரும் முன்வரவில்லை.

அவள் பெற்றுவளர்த்த ஒரே மகன் பூபதி கூட அவளை வந்து பார்க்கவில்லை. அவளும் பல நாட்களாய், ஆண்டுகளாய்ப் பிள்ளையின் முகத்தைப் பார்க்கக் காத்துக் மிடந்தாள். என்றாவது வருவான், வந்து வாய்நிறைய “அம்மா” வென்று அழைத்து மனம் குளிர வைப்பான் என்று காத்துக் மிடந்தாள்.

யார் யாரோ வந்தார்கள். எத்தனை எத்தனையோ தைப்பூசமும் வந்துபோனது. அப்போது வந்து குவியும் மக்கள் கூட்டத்தில் மகனின் முகம் தெரியுமா என்று ஏங்கிக் கிடப்பாள். பார்வை பூத்துப்போனதுதான் மிச்சம்! அவன் வந்ததாகத் தெரியவில்லை.

மகனின் நினைவு அலை அலையாய்ப் பெருகி அவளை அலைக்கழிக்க ஆரம்பித்தபின் அவளின் உடல்நிலை அதிகமாய் நலிந்து போய் விட்டது. சில சமயம் சித்தப்பிரமை பிடித்தவள் போல் ஆகிப் போவாள். அவளது நிலைமையைக் கண்டு மனம் வருந்திய ஆலயப் பூசாரி அவளுக்கு நல்லதொரு ஆலோசனையைக் கூறினார்.

“காமாட்சியம்மா… உங்களைப் பார்த்தா எனக்கே மனம் தாங்கல… உங்களுக்கு என்னால முடிஞ்ச உதவியா ஒரு உதவி பண்றேன்; நம்ம கோயிலுக்கு அடிக்கடி ஒரு தம்பி வருது அதுக்கிட்டே உங்களைப் பத்தி நிறைய சொன்னேன். உடனே வந்து கூட்டிக்கிட்டுப் போறேன்னு சொன்னிச்சி நீங்க அவர் கூட போனீங்கன்னா நிச்சயமா அமைதி கிடைக்கும்” என்றார்.

காமாட்சிக்கு வறண்டு கிடந்த தொண்டைக்கு ஈரம் கிடைத்தது போலிருந்தது. கடவுள் கடைசிக் கைகொடுக்கிறாரே என்ற ஆறுதலுடன் கோயிலை வலம் வந்து கும்பிட்டு விட்டுப் போனாள். அந்த நிம்மதியைத் தரப்போகும் புண்ணியவானின் வரவுக்காகத்தான் இப்போது இங்கே காத்திருக்கிறாள்.

கந்தசாமியின் ஆவலாசனைகனை மனதில் வாங்கிக் கொண்டு சாலையில் வண்ண நிறத்தில் வருகின்ற கார்களைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தவளுக்கு மனதில் பலவகையான கேள்விகள்!இத்தனை வருட வாழ்க்கையில் நடந்து முடிந்த அத்தனை நிகழ்வுகளையும் கட்டிப் போடப்பட்ட பசுமாடு அசைபோடுவதைப் போல ஒவ்வொன்றாக நினைத்துப் பார்க்கிறாள்.

மறைந்து போன புருஷனும், புருஷன் விட்டுப் போன துன்பங்களும் அந்தத் துன்பங்களுக்கெல்லாம் முடிசூடாமன்னனாய் விளங்கும் மகனும் அந்தப் பஞ்சடைந்த கண்கனில் வந்து வந்து போய்க் கொண்டிருந்தார்கள். வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் காமாட்சிக்கு எதிர்காலம் பூதாகாரமாய்க் கைகளை விரித்துக் கொண்டு நின்றது.

கந்தசாமி சத்தமாய்க் கூப்பிட்டார். காமாட்சி திரும்பிப் பார்க்கிறான். வாட்டசாட்டமாய் ஒரு வாலிபன் கையில் பையுடன் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான். படிய வாரிய முடியும் துல்லியமாய்த் துலங்கும் முகமும் தூய ஆடையும் அவனை ஒரு நல்ல மனிதனாய் அவளுக்கு எடுத்துக் காட்டியது. அவனைப் பார்த்த மனதில் கூட ஒர் ஆறுதல் வந்து புகுந்தது. தன்னையும் அறியாமல் அவனைப் பார்த்துக் கும்பிட்டான். பதிலுக்குக் கும்பிட்டவாறே அவனருகில் வந்து அமர்ந்தான் அவன்!

“நம்ம கோவில் பூசாரி உங்களைப் பத்தி நெறைய விஷயம் சொன்னாங்க… அது விஷயமா உங்களோட நான் பேசணும்…” என்றவனாய் முகுத்தன் தான் வந்த விஷயத்தைச் சொன்னான். காமாட்சி எழுந்து போய் அவன் கைகனைப் பற்றி முத்தமிட்டு,

“நீங்க நல்லாயிருக்கணும் தம்பி, இந்தத் திக்கற்ற பாவிக்கு அந்தத் தெய்வத்தை விட்டா வேற கெதி ஏது…? அதுதான் அந்தத் தெய்வமே உங்களை எனக்கு உதவி பண்ண அனுப்பியிருக்கு நீங்க மகராசனா இருக்கணும்” என்றாள்.

முகுந்தன் சில நிமிடங்கள் அவலோடு பேசிக் கொண்டிருந்து விட்டு அவளை அழைத்துக் கொண்டு போய்த் தன் காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டான். வழி நெடுக அவன் கேட்காமலேயே காமாட்சி தன் அவல நிலையைக் கதை கதையாய்ச் சொல்லிக் கொண்டு வந்தாள். முகுந்தனும் பொறுமையாய்க் கதையைக் கேட்டுக் கொண்டே காரை ஒட்டிக் கொண்டிருந்தான். நகர மையத்தில் இருந்த அந்த உயர்ந்த மாடிக் கட்டிடத்திற்கு அவர்கள் போனார்கள். அரசாங்க ஆதரவுடன் இயங்கிவரும் அந்த அற நிறுவனத்திற்குச் செல்ல விசேஷ அனுமதிச் சீட்டை வாங்கிக் கொண்டு இருவருமாய் உன்ளே போனார்கள் முகுந்த அங்கிருந்த ஒரு சீனப் பெண்மணியிடம் பேசிவிட்டுக் காமாட்சியை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.

வரவேற்பாளர் பகுதியில் கிடந்த சோபா நாற்காலியில் இருவரும் அமர்ந்தார்கள். காமாட்சியிடம் முகுந்தன் சொன்னான்.

“பாட்டி, நான் அவுங்கமிட்டே பேச வேண்டியதையெல்லாம் பேசிவிட்டேன். அப்புறமா தமிழ் பேசும் அதிகாரி வந்து உங்களைச் சில கேள்வி கேட்பாரு… ஆமாம்ணு சொல்லுங்க குறிப்பா சொந்தக்காரங்க இருக்காங்ளான்னு கேட்டா யாருமே இல்லேன்னு சொல்லுங்க… வீணா உண்மையைச் சொல்லி வரப் போற நன்மைய கெடுத்துக்காதீங்க” என்றான்.

காமாட்சி அதைக் கேட்டுக் கொதித்து முகுந்தனைக் கொன்று விடுவதைப் போல் பார்த்தாள்…!

“அடப் பாவி… மலைகல்லு மாதிரி என்னோட இருக்கறப்போ… நீ புள்ள இல்லேன்னு சொல்லச் சொல்றியே! இது உனக்கே அடுக்குமா !படிச்சவன்னு தானே உன்னை நம்பி வந்தேன். இப்படி என் வயித்துல நெருப்பை அள்ளிப் போடுறியே… இது உனக்கு நல்லாயிருக்கா…?”

தலையிலடித்துக் கொண்டு தரையில் உட்கார்ந்து புலம்பத் தொடங்குகிறாள். முகுந்தனுக்குத் தர்ம சங்டமாகிப் போகிறது. அவளிடம் போய் அவளருகில் உட்கார்ந்து…

“பாட்டி, எதுக்காக அழறீங்க…! இப்ப வாழ்க்கையில் படுற கஷ்டத்தைப் பார்த்து உங்களுக்குன்னு உதவி செய்ய யாராச்சும் இதுவரைக்கும் வந்தாங்களா? உங்களோட ஒரே பையன் வீடு, கார், பிள்ளைங்களோட சந்தோஷமா வாழ்ந்துக்கிட்டுத்தான் இருக்காரு, அவராச்சும் வந்து பார்க்கிறாரா…? ஒருவேளை சாப்பாடுதான் கொடுக்கிறரா? அவரு இருக்கிற வசதிக்கு உங்களை மாதிரி இன்னும் நாலு பேரை வெச்சிப் பார்க்கலாம்…ஆனா நீங்க செத்தீங்களா… பொழைச்சிங்களான்னு கூட அந்தப் பிள்ளையும் வந்து பார்க்கமாட்டேங்கிறான்.

இங்குள்ள அற நிறுவனங்கள் எல்லாமே உதவி பண்றதுன்னா யாருமே இல்லாதவங்களுக்குத்தான் செய்வாங்க; உதவி கெடைக்கும். உங்களோட பிள்ளை உயிரோட இருந்திறது, அதுவும் இவ்வளவு வசதியா வாழறது தெரிஞ்சா உங்களுக்கு எந்த உதவியும் கெடைக்காது. மறுபடியும் நீங்க நடு வீதிக்குத்தான் போயி உயிரை விடணும்…பேசாம என்கூட வந்து நான் மாதிரி சொல்லிட்டுப் போங்க…மத்ததை நான் பார்த்துக்கறேன்”.

முகுந்தன் பாட்டியின் கையைப்பிடித்துத் தூக்கினான். பாட்டியோ வெடுக்கென்று தன் கையை பிடுங்கிக் கொண்டாள்.

முகுந்தனைப் பார்த்து முறைத்தாள்.

“நான் வந்து  என்ன சொல்லணும்?” அழுத்தமாய்க்  கேட்டாள்; முகுந்தன் எச்சரிக்கையுடன் சொன்னான்.

“எனக்குப் புருஷனோ, புள்ளயோ கெடையாது. எல்லோரும் செத்துட்டாங்க… நான் யாருமே இல்லாத அனாதைன்னு சொல்லணும் பாட்டி…”

காமாட்சி முகுந்தன் முன் கண்ணகியானாள். துள்ளிக் குதித்தாள். குழிவிழுந்த கண்களில் கோபம் கொப்பனித்தது. முகுந்தன் மட்டுமல்ல… அந்த அறையே அதிரும்படி கூச்சல் போடத் தொடங்கினாள். “பாவிங்களா… ஏதோ நல்லது செய்கிறேன்… உதவி பண்றேன்னு சொல்லிக்கிட்டு வந்து பெத்த பின்ளையை செத்துட்டான்னு சொல்லச் சொல்றீங்கனே. .. இது உங்களுக்கே நல்லாயிருக்கா? நீங்கள் தருகின்ற இந்தப் பிச்சைக்காசுக்காக நான் பெத்த பிள்ளை உயிரோடு செத்துட்டான்ணு சொல்லணுமா? வேணாம் சாமி வேணாம் நான் அப்படிப்பட்ட ஈனப்பொறப்பு இல்லேய்யா… இன்னிக்கு இல்லேன்னாலும் என்னிக்காச்சும் என் பிள்ளை என்னைப் பார்க்க வருவான். அவன் என்னை இல்லேன்னு சொல்லிப்புட்டு இப்ப சந்தோஷமா இருக்கட்டும்… நான் அவனை இல்லேன்னு சொல்லி உங்கக்கிட்டே கையேந்தி இந்த உசிரைக் காப்பாத்திக்கமாட்டேன்…

நான் வர்றேன்… எனக்கு யாரும் எந்த உதவியும் வேண்டாம். இந்தத் திக்கற்ற பாவிக்கு மனுஷங்கனால உதவி இல்லேன்னாலும் அந்த மகேசன் உதவி பண்ணுவான்.. அவன் படைச்ச மண்ணுல போட்ட கட்டைதானே இது! இதைக் கரையேத்த நிச்சயம் அவன் வருவான்…திக்கற்ற பாவிகளுக்கெல்லாம் தெய்வமே துணைன்ணு சும்மா சொல்லி வைக்கல சாமி. நிச்சயமா என்னைக் காப்பாத்த நீலகண்டன் வந்தே தீருவான்”.

காமாட்சியின் குரல் மெல்ல மெல்லக் குறைந்து கொண்டே போனது. சுற்றி நின்று வேடிக்கை பார்த்த கூட்டமும் கலைந்து போனது. முகுந்தன் அப்படியே சிலையாக நின்றான்.

– ஆர்க்கிட் மலர்கள் (சிறுகதைத் தொகுப்பு) , முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2002. சிங்கை தமிழ்ச்செல்வம் வெளியீடு, சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *