ஒரு கிலோ சந்தோஷம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 5, 2013
பார்வையிட்டோர்: 12,591 
 
 

பஸ்ஸை எடுக்கப்போன டிரைவர் முருகன் சற்றுத் தொலைவில் கல்யாண சுந்தரம் தட்டுத் தடுமாறி பஸ்ஸைப் பிடிக்க வேண்டுமே என்ற பதட்டத்தில் ஓடிவருவதைப் பார்த்து நிறுத்தினான்.

“என்ன முருகா… எடுக்கலை?” என்று கேட்டபடி வந்த கண்டக்டர் பாலனிடம் “அத பார்… அய்யரு ஓடியாரரு… அதனால்தான் நிறுத்தினேன்” என்றான் புன்னகையுடன்.

அதற்குள் பஸ்ஸை அடைந்துவிட்ட கல்யாணசுந்தரம் முன் வாசல் வழியாகவே ஏறிக் கொண்டார்.

“மன்னிச்சுக்கோங்கப்பா… இன்னிக்கு கொஞ்சம் லேட்டாயிடுத்து…” என்றபடி அருகில் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு பையிலிருந்து பஸ் சீசன் டிக்கெட்டை எடுத்து கண்டக்டரிடம் நீட்டினார்.

அறுபதின் இறுதிகளில் இருக்கும் வயதான சரீரம்; நல்ல சிவப்பு. அந்தணர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று பார்த்தாலே தெரியும். போதாக் குறைக்கு நெற்றியில் பளிச்சிடும் பட்டையான விபூதி. வெள்ளை பருத்தி சட்டை. நீல நிறத்தில் சற்றே சாயம் போன கால்சட்டை. கையில் ஒரு பை. அதில் சில ஃபைல்களும், சின்ன டிபன் பாக்சும்.

ஆறரை மணிக் காலைக் கதிரவன் கிழக்கில் உதயமாகி பஸ்ஸினுள் வீசிய பொன் கிரணங்களில் கல்யாணசுந்தரத்தின் முகம் களங்கமற்ற கலசம் போல ஒளிர்ந்தது.

‘இந்தத் தள்ளாத வயதில், இத்தனை காலையில் இங்கு சாந்தோமில் இருந்து கிழக்குக்கடற்கரை சாலையில் எங்கோ இருக்கும் ஒரு கம்பெனிக்கு நாள் தவறாமல் வேலைச்குச் செல்கிறார் இந்த மனுஷன். ஞாயிற்றுக்கிழமை ஒருநாள்தான் விடுமுறை. ஆறரை மணி பஸ்ஸை அவர் காலையில் சரியாகப் பிடித்தால்தான் எட்டு மணிக்கு அவர் ஆபீஸில் இருக்க முடியும். ஆபீஸ் எட்டரையிலிருந்து ஐந்து வரை.

ஆனால், கல்யாணசுந்தரம் காலையில் அரை மணி முன்னால் போவதுபோல், மாலை அரை மணி அல்லது ஒரு மணி நேரம் கழித்துத்தான் கிளம்ப முடியும். வேலை அப்படி.

அந்தத் தனியார் நிறுவனத்தில் கெடுபிடிகள் அதிகம்.

மாநில அரசாங்கத்தில் வேலை பார்த்து ஓய்வு பார்த்து, ஓய்வூதியம் பெறும் கல்யாணசுந்தரத்தால் அவரைப் போன்ற இதர நண்பர்களின் வாழ்க்கை அமையவில்லை.

ஒரு பையனும், ஒரு பெண்ணும்தான்.

இருவருக்கும் படிப்பு அதிகம் வரவில்லை. பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுத்து விட்டார். பையன் சற்று காலம் தாழ்ந்து பிறந்தவன். இவர் வேலையிலிருந்து ஐம்பத்தெட்டு வயதில் ஓய்வு பெற்றபின்தான் படிப்பை ஏனோதானோ என்று முடித்து மிகச் சாதாரணமான ஒரு வேலையில் சேர்ந்தான். அவன் மனைவியும் அதிகம் படிக்காத பெண். வீட்டில்தான் வேலை. ஒரு குழந்தை.

கல்யாணத்தின் மனைவி கல்யாணி மாமி கெட்டிக்காரிதான். கணவனின் சம்பாத்தியத்தில் அழகாக நிர்வகித்துக் குடும்பம் நடத்துபவள். சுற்றிலுள்ள பெண்களுக்கும், மாமிகளுக்கும் ஸ்லோகம், பாட்டு என்றெல்லாம் சொல்லிக் கொடுப்பாள். அதில் கிடைக்கும் சொற்ப வருமானம் குடும்பத்தின் ஏதோவொரு செலவுக்குப் பயன்படும்.

கல்யாணம்-கல்யாணி தம்பதிகளின் பலம் அவர்கள் திருப்தி கொள்ளும் அமைதியான மனப்பான்மை. கணவன்-மனைவி-குடும்பத்தில் உள்ள பிள்ளை-பெண்-மருமகள் இவர்கள் மத்தியில் ஒரு சிறு சச்சரவுகூட வராமல் பார்த்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்துவார்கள்.

குறிப்பாக கல்யாணசுந்தரத்தின் ஆரவாரமற்ற பேச்சு எவரையுமே அவரிடம் மரியாதை கொள்ள வைக்கும்.

அவர் சேமித்து வாங்கியது சாந்தோமில் மெயின் ரோடிலிருந்து பிரிந்து செல்லும் கிளை ஒன்றின் மற்றொரு கிளைத் தெருவில் வாங்கிய ஒரு சிறிய ஒன் பெட்ரூம் ஃப்ளாட்தான்.

நான்கு பெரியவர்கள், ஒரு குழந்தை, இதர செலவுகள் இவைகளை ஈடுகட்ட கல்யாணத்தின் பென்ஷனும், அவர் மகன் குமாரின் சம்பாத்தியமும் போதவில்லை. வேலைக்குப் போவதில் ஓரோர் சமயம் ஆயாசம் மேலிடும்போது, கல்யாணத்தின் மனசிலும் ஏக்கமும் ஏற்படும். ஆனால், தன் சம்பாத்தியம் தன் குடும்பத்திற்குப் பயன்படுவதுடன், வீட்டில் வெட்டியாக உட்கார்ந்திருக்காமல் பொழுதைக் கழிக்க ஒரு வாய்ப்பாக உள்ளதே என்று திருப்தி அடைவார்.

அன்று ஆபீசை அடைந்து வேலையை ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் கல்யாணி அலுவலக எண்ணுக்குப் போன் செய்தாள். கல்யாணம் மொபைல் ஃபோன் எல்லாம் வைத்துக் கொள்ளவில்லை. அவருக்கு அந்த அளவு பேச்சுக் கொடுத்துப் பேச எவருமில்லை.

கல்யாணியும் ஏதாவது அவசியமான சமாச்சாரமாக இருந்தால்தான் போன் செய்வாள். அதிகமாக தனிப்பட்ட தொலைபேசிப் பேச்சுகளை ஆபீசிலும் அனுமதிப்பதில்லை.

“என்ன கல்யாணி…? என்ன விஷயம்?” என்றார் கல்யாணம்.

“உங்கள் நண்பர் ஜயராமன் அவர் மனைவயுடன் இன்று சாயங்காலம் நம் வீட்டிற்கு வருகிறார்களாம். நீங்கள் ஆபீஸிலிருந்து எப்போது வருவீர்கள் என்று கேட்டா…” என்றாள்.

ஜயராமன், கல்யாணசுந்தரத்துடன் ஒன்றாக அரசாங்கத்தில் வேலை பார்த்தவர். அவர் இருந்த ஸீட்டில் உபரி வருமானத்திற்கு நல்ல வாய்ப்பு. ஜயராமனும் அதை மிக நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்.

அவருக்கு வேளச்சேரியில் பெரிய மாடி வீடு. கீழே இவரும் மேலே இரண்டு மாடிகளில் ஒன்றில் ஒரு மகன் இருந்தான். மற்றொன்றை வாடகைக்கு விட்டிருந்தார். அவரின் இரண்டாவது மகன் பெங்களூரில் வேலையாக இருந்தான். மகள் திருமணமாகி மும்பையில். வசதியான, சந்தோஷமான குடும்பம். இருந்தாலும் ஜயராமன் எப்போதும் கொஞ்சம் புலம்பல் ஆசாமி. ஏதாவது குறையும், வருத்தமும், இல்லாமை என்ற ஏக்கமும் இருந்துகொண்டே இருக்கும்.

சுருக்கமாகச் சொன்னால், கல்யாணத்தின் குணத்திற்கு நேர் எதிர். ஆனால், இந்த தனிப்பட்ட குணங்கள் அவர்கள் நட்பை பாதிக்கவில்லை. அவர்தான், தன் மனைவியுடன் கல்யாணத்தைப் பார்க்க வருகிறேன் என்கிறார்.

கல்யாணம் அவரைப் பார்த்தும் பேசியும் கிட்டத்தட்ட ஏழு, எட்டு மாசங்களாகி இருக்கும்.

“என்னங்க… உங்களால் இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரம் வர முடியுமா?” என்றாள் கல்யாணி தொடர்ந்து. “அவங்க ஆறு மணிவாக்கில வரேன்னாங்க…” என்றாள்.

“ம்… ஆறு மணிக்கு நான் அங்க இருக்கணும்னா, நான் ஆபீஸிலிருந்து இன்னிக்கு நாலரைக்கே கிளம்பணும்… பர்மிஷன் கேட்டுண்டு வரேன்…” என்றார் கல்யாணம். “அப்புறம் ஏதாவது நல்ல டிபன் பண்ணி வை… ஏதாவது ஸ்வீட் நான் வரப்போ வாங்கிண்டு வரேன்…” என்றார்.

பிறகு தன் மேல் அதிகாரியிடம் சென்று உத்தரவு கேட்டார். அவரும் நல்லவர்தான். கல்யாணம் எந்த அநாவசிய சலுகைகளையுமே எதிர்பார்க்காதவர் என்பதால் “என்ன விசேஷம் சார்…?” என்றார்.

கல்யாணம், “என் பழைய ஆபீஸ் நண்பர் அபூர்வமாக வீட்டுக்கு வருகிறார் மனைவியுடன். அதற்காகத்தான்” என்றார் புன்னகையுடன்.

“சரி… போய்ட்டு வாங்க…” என்றார் அதிகாரி.

ஜயராமனும், அவர் மனைவி ஜானகியும் சொன்னபடி ஆறேகால் மணிக்கு வந்துவிட்டனர்.

முதன் முறையாக வருவதால் வீட்டை சுற்றிப்பார்த்த ஜயராமன், “என்ன கல்யாணம், வீடு இத்தனை சின்னதாக இருக்கிறது. எத்தனை சதுர அடி…?” என்றார்.

“சின்னதுதான்… 485 சதுர அடி…”

“ம்ஹும்… எங்க வீட்டு ஹாலே ஐநூறு சதுர அடி….” என்றாள் ஜானகி.
கல்யாணி இதற்கு எதுவும் பதில் தரவில்லை. கல்யாணம் மட்டும், “ஆமாம்… நான்தான் உங்க வீட்டைப் பார்த்திருக்கிறேனே… நல்ல விஸ்தாரமாக காற்றோட்டத்துடன்… நல்ல… பெரி…சாக இருக்குமே… அதோட இதை எப்படி ஒப்பிட முடியும்…” என்றார்.

ஜயராமன், ஜானகி இருவர் முகத்திலும் பெருமிதம் மிதந்தது.
பையன், பெண்களைப் பற்றிய அருமை பெருமைகளை வெகுவாக அளந்து கொட்டினர் ஜயராமனும் ஜானகியும்.

ஆனால், ஜயராமனின் ஆதார குணமான குற்றம் சாட்டும் மனம் அதோடு நிற்கவில்லை.

“பங்களூர் பையன் பெண்டாட்டி சுத்த மோசம்… போனால் ஒரு வாரம்கூடத் தங்க விடமாட்டாள்… மாப்பிள்ளை மகா கர்வி… பம்பாயில் அவங்க பக்கத்திலேயே சம்பந்தி இருப்பதால் எல்லாம் அவங்க அதிகாரம்தான்… இங்க எங்ககூட இருக்கற மகன்-மருமகள் இரண்டு பேருமே வேலைக்குப் போவதால் அவங்க வீட்டு வேலை எல்லாம் எங்க தலையில்… பேரன், பேத்திகள் எங்களை அதிகம் லட்சியம் செய்வதில்லை….” என்று பேச்சினிடையே பலப்பல குற்றம் குறைகள் உதிர்ந்தவண்ணம் இருந்தன.

ஆபீஸ் கதை பேசுகையில், “இன்றைய இளைஞர்களுக்கெல்லாம் போற போக்கில் பிரமோஷன் கிடைக்கிறது. நம்முடைய காலத்தில்தான் வருஷக்கணக்கா இழுத்தடித்துக் கொடுத்தான்…” என்று ஜயராமன் அங்கலாய்த்துக் கொண்டார்.

அதற்கு கல்யாணம், “அதனால் என்ன?” போனால் போகிறார்கள். நாம்தான் கஷ்டப்பட்டோம். இன்றைக்கு உள்ள சின்னவங்களும் நம்மைப்போல் அவதிப்படணுமா? சீக்கிரம் கிடைச்சா நல்லதுதானே… வேலை செய்ய ஒரு உற்சாகம் உண்டாகும் இல்லையா? அதை ஏன் தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கணும்? நமக்குக் கஷ்டப்பட்டு கிடைச்சது பல இன்றைய தலைமுறைக்கு சுலபமாகக் கிடைக்கிறது. அது சந்தோஷப்பட வேண்டிய சமாச்சாரம்தானே?” என்றார்.

“உங்கிட்ட சொன்னேன் பாரு… நீ ஒரு சம்சார சந்நியாசி… உன்னை ஒன்றுமே சலனப்படுத்தாது…” என்று விமர்சித்தார் ஜயராமன்.

அதற்குப் பதில் சொல்லாமல் வெறுமே சிரித்தார் கல்யாணம்.

அப்போது வேலைக்குச் சென்றிருந்த கல்யாணத்தின் மகன் குமாரும், குழந்தையை அழைத்து வரச் சென்றிருந்த அவன் மனைவி சீதாவும் ஒருவர்பின் ஒருவராக வந்தனர். இருவரும் மரியாதை தரும் வகையில் ஜயராமன்-ஜானகி இருவரிடமும் நலம் விசாரித்த பின் உள்ளே சென்று தங்கள் வேலைகளில் ஆழ்ந்தனர்.

கல்யாணத்தின் பேரன் சித்தார்த் சமர்த்தாக தன்பாட்டுக்கு விளையாடிக் கொண்டிருந்தான்.

ஜயராமன் போதாக் குறைக்கு, “நீ ரொம்ப கை சுத்தம். ஒரு பைசா லஞ்சமாக வாங்கக் கூடாதுன்னு பிடிவாதமா இருந்தே… என்ன பிரயோசனம்… இப்ப பாரு… சும்மா புறாக்கூண்டு மாதிரி ஓரிடத்தில்… போதாக்குறைக்கு இந்த தள்ளாத வயசில வேலைக்கு வேற போற… ம்ஹ்ம்… என்ன வாழ்க்கை…” என்று வெளிப்படையாகவே மட்டம் தட்டினார்.

கிட்டத்தட்டட இரண்டு மணி நேரம் கழித்து போகும்போதுகூட “நீ எனக்குத் தெரிஞ்ச வரையில் ரொம்ப நல்லவன்… ஆனா என்ன, உனக்கு ஏனோ இந்த சிரமமான வாழ்க்கை…?” என்றும் ஓர் அம்பை எய்துவிட்டு விடைபெற்றுக் கொண்டார்.

அவர்கள் போனதும் வீடு மழை பெய்து ஓய்ந்தது போல் இருந்தது. இரட்டை நாயனம் போல் ஜயராமனும், ஜானகியும் மாற்றி மாற்றி பெருமையும், சிறுமையும், மட்டம் தட்டும் பேச்சுமாகப் பேசி கழித்துவிட்டுச் சென்றதை நினைத்தபோது கல்யாணிக்கு மிக்க ஆயாசமாக இருந்தது.

“அப்பா…டீ… என்ன பேச்சு பேசறா…?” என்றாள் கல்யாணி.

கல்யாணம் பதில் சொல்லாமல் அவர்கள் விட்டுச்சென்ற டிபன் சாப்பிட்ட, காபி குடித்த பாத்திரங்களை எடுத்து சமையலறையில் சென்று கழுவச் சென்றார்.
கல்யாணி, “ஐயோ, அத வைச்சுடுங்க… நான் பார்த்துக்க மாட்டேனா….?” என்று எழுந்தாள். தொடர்ந்து,

“நீங்களும் அவர மாதிரி வேலை பார்த்தவர்தான். அவர் எவ்வளவு வசதியா இருக்கார் பாருங்க… நமக்குத்தான் அதிர்ஷ்டமில்ல…” என்றாள் சற்று வருத்தத்துடன்.

“என்ன அதிர்ஷ்டம்…?” என்றார் கல்யாணம்.

“பெரிய வீடு… கார்… வருமானம்… வசதி…”

“வாஸ்தவம்தான்…”

“அவரே சொன்னார். நீங்க நல்லவனா இருந்து என்ன சாதிச்சீங்கன்னு.”

“ம்… அப்புறம்…”

“அப்புறம் என்ன அப்புறம்… உங்கள பிழைக்கத் தெரியாதவன்னு சொல்லாம சொன்னார்.”

கல்யாணம் சிரித்தார்.

“கல்யாணி, எல்லோரையும் குறிப்பாக அவன் பிள்ளை – மருமகள் – பெண்களையே குற்றமும் குறையும் சொல்கிறவன் எனக்கு நல்லவன் என்று சர்டிபிகேட் கொடுத்திருக்கிறான்…”

“சரிங்க… அவர் வாயால சர்டிபிகேட் வாங்கி நமக்கு என்ன லாபம்… சொல்லுங்க.”

கல்யாணம் பெருமூச்செறிந்தார். பின் பேசினார்.

“கல்யாணி… நல்லவனாக இருப்பது என்பது பிரதிபலன் கருதி அல்ல. அது ஒருவர் குணம். அதன்படிதான் அவர்களால் நடக்க முடியும். நான் நல்லவனாக எனக்கு உள்ள குறைந்தபட்ச வசதிகளில் திருப்தி அடைந்து இருக்கிறேன் என்றால் அது என் குணம். ஏன்… நம் வாழ்க்கைக்கு என்ன குறைச்சல்? அவன் பேரன் பேத்தி அவர்களை லட்சியம் செய்யவில்லை என்கிறான். என் பேரன் என் மடியில் படுத்துத்தானே ராத்திரில தூங்குறான். அவன் மாப்பிள்ளை கர்வம் பிடித்தவன், மருமகள் அகராதி என்றான். நமக்கு அப்படியா… எல்லோருமே நம்மிடம் அன்பாகத்தானே இருக்கிறார்கள். நம்மை நேசிப்பவர்கள் இருக்கும்வரை வாழ்க்கையைப் பற்றி ஏன் புகார் சொல்ல வேண்டும்?

“நான் இந்த வயதில் வேலைக்குப் போவதில் சில சிரமங்கள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், ரத்த அழுத்தத்திற்காக நீங்கள் தினம் அரை மணி நடக்க வேண்டும். மனசில் அமைதிக்கு தியானம் செய், யோகம் செய், அதைப்பண்ணு, இதைப்பண்ணு… என்றெல்லாம் பணம் படைத்தவர்கள் அலையும்போது அது எதுவுமில்லாமல் நான் ஆரோக்கியமாக வேலைக்குப் போய் வருவதே சந்தோஷமில்லையா?

“மகிழ்ச்சியும், திருப்தியும், சந்தோஷமும் நம்மிடம்தான் இருக்கிறது. அதைப் பிறரிடமோ, வேறு இடத்திலோ போய்த் தேட முடியாது. நான் லட்ச ரூபாய் தருகிறேன். எனக்கு வாழ்க்கையில் திருப்தி கொடு என்று எங்காவது சென்று வாங்கி வர முடியுமா? இல்லை ஏதாவது ஒரு கடையில் போய் எனக்கு ஒரு கிலோ சந்தோஷம் கொடு என்றுதான் கேட்க முடியுமா…?” அது அவன் குணம். இது என் குணம்.

“இத்தனை நாட்களுக்குப்பின் நம்மைப் பார்க்கணும்னு மனசில தோணி வந்து பார்த்தாங்க இல்ல, அதுக்காக சந்தோஷப்படு… திருப்தி அடை… அவர்கள் சொன்ன அநாவசிய வார்த்தைகளை மறந்து விடு…” என்று சொல்லிவிட்டு,

“சரி, நான் வெளியே போய்விட்டு வருகிறேன்…” என்று கிளம்பினார் கல்யாணசுந்தரம். அப்போது வாசல் மணி ஒலித்தது.

கதவைத் திறந்த கல்யாணியிடம், “என்ன மாமி… இன்னிக்கு உங்க வீட்டுக்கு கெஸ்ட் வராங்கன்னு சுலோக கிளாஸை கான்சல் பண்ணிட்டீங்களாமே… நாளைக்குக் கட்டாயம் வருவோம்…” என்று ஆர்வத்துடன் சொன்னார்கள்.

கல்யாணி அப்போது கல்யாணத்தைப் பார்த்த பார்வையில் அவள் கல்யாணத்தின் பேச்சில் இருந்த உண்மையை உணர்ந்து கொண்டது தெரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *