போலீஸ் வேலைக்குச் சேர விண்ணப்பித்திருந்தான் மகேந்திரன். எல்லாம் சத்யவதிக்காகத் தான்.
மகேந்திரனுக்கு ஊரில் புஞ்சைக் காடு உண்டு, மக்காச்சோளமோ, பருத்தியோ விதைப்பார்கள். அவன் டிகிரி படித்திருந்தாலும் கூட ஊருக்குள் தீப்பெட்டி ஆபிஸ் போர்மேனாக இருந்து கொண்டு விவசாயம் பார்த்து பொழுதை ஓட்டுவதில் தான் தன்னிறைவாக உணர்ந்தான். அவனுக்குச் சொந்தமாக தீப்பெட்டி ஆபிஸ் எதுவும் இல்லை, சத்தியின் அப்பா வேலப்ப நாயக்கருக்கு ஊருக்குள் ஒரு தீப்பெட்டி ஆபிசும், ஒன்பது குழி புஞ்சைக்காடும், ரெண்டு குழி நஞ்சைக் காடும் இருந்தது. ஒற்றை ஆளாய் அவர் மூன்றையும் கவனிக்க ஏலாதேன்று தீப்பெட்டி ஆபிசை மகேந்திரனை போர்மேனாக்கி ஒப்படைத்திருந்தார். ஆக சத்தியின் தீப்பெட்டி ஆபிசில் தான் ரெண்டு வருசமாக போர்மேனாக இருக்கிறான்.அப்படி ஏற்பட்டுப் போன ப்ரியம் தான் இன்றைக்கு போலீஸ் வேலைக்கு விண்ணப்பம் போடுவதில் வந்து நிற்கிறது.
சத்தியின் தங்கை ரேவதி ரொம்ப கறாராகத் தான் சொல்லி விட்டாள் அவன் முகத்துக்கு நேராகவே; “இந்தா பாரு மகேந்திரா ,எங்கக்கா என்ன மாதிரி இல்லை டிகிரி படிச்சிருக்கு, கண்டிப்பா எங்க வீட்ல படிச்சு கவர்மென்ட் வேலைக்குப் போற மாப்பிள்ளையாத்தான் பார்ப்பாங்க, நீ எங்கக்காவைத்தான் கட்டணும்னு இருந்தின்னா இப்பவே ஒரு வேலைய பார்த்து வச்சிக்கோ, இப்டி தீப்பெட்டி ஆபிசு போர்மேனுக்கு எல்லாம் பொண்ணு தர மாட்டாங்க எங்க வீட்ல” என்று அவனை ரொம்ப கலக்கமூட்டி இருந்தாள்.
சத்தி மகேந்திரனோடு அதிகம் பேசியதெல்லாம் இல்லை, ரெண்டு பேரும் டிகிரி படித்தவர்கள் என்ற சலுகையில் அவன் ஏதாவது விகடன், குமுதம், நா.பார்த்தசாரதி, கல்கி, சாண்டில்யன் என்று கையில் இருக்கும் புத்தகங்களை இவளோடு பகிர்ந்து கொள்வான். கிராமத்து பெரும்பான்மை படிப்பறிவற்ற புழுக்கத்தில் மகேந்திரனின் இந்த புத்தகப் பாசம் சத்திக்கு அவன் மீது ஒரு ஈர்ப்பை உண்டாக்க ஒரு சுபயோக லக்கினத்தில் இருவரும் “அண்ணலும் நோக்கி அவளும் நோக்க ” காதல் என்றானது .
மகேந்திரன் மிக அருமையான உழைப்பாளி, நல்ல படிப்பாளி என்பதைக் காட்டிலும் அவன் சத்தியை மிக நன்றாகப் புரிந்து கொண்டவனாக இருந்தான். அவன் வேலை நேரம் போக மிச்ச நேரமெல்லாம் ஏதாவது ஒரு புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு வாசிப்பவனாய் இருந்தான்.
சத்திக்கு அப்பாவின் மூத்த தாரத்து மகன் என்ற வகையில் அண்ணன் ஒருவரும் சொந்தத் தம்பிகள் மூவருமாய் வீட்டில் நான்கு ஆண் பிள்ளைகள் இருந்தனர், அப்பாவையும் சேர்த்தால் ஐவர், இருந்தும் என்ன? ஒருவருக்கும் புத்தக வாசிப்பில் நாட்டம் இல்லை. இப்படித்தான் அவள் மகேந்திரனை கவனிக்க சந்தர்ப்பம் அமைந்தது .
சத்தி பிரமாத அழகி இல்லை, ஆனால் அவளிடத்தில் ஒரு நேர்த்தி இருந்தது, சிவப்புத் தோலும், ஒற்றை முத்துப் பதித்த அன்னப் பட்சி மூக்குத்தியுமாய் எப்போதும் சாந்தம் தவழத் தான் இருப்பாள். மையிட்ட மருண்ட கண்கள் காட்டில் வேடனின் அம்புக்குத் தப்பிய மானை ஞாபகமூட்டின, வயலுக்கும் தோட்டத்துக்கும் போய் சாயரட்சையில் வீடு திரும்பும் அம்மா வாய்த்ததால் வீட்டு வேலைகள் அனைத்தும் இவள் தலையில் விழ அத்தனைக்கும் சலிக்காது புடவையோ தாவணியோ உடுத்திய மடிப்புக் கலையாது முடித்து விட்டு முந்தானையால் அவள் கழுத்து வியர்வை துடைப்பது கூட அத்தனை நேர்த்தி என்பான் மகேந்திரன்.
கடந்த ஒரு வருடமாய் காலை பதினோரு மணி வாக்கில் மகேந்திரன் சத்திக்கு என்று பிரத்யேகமாய் மீனாட்சிப் பாட்டி கடையில் பருப்பு வடையும் செல்லப்ப நாடார் கடையில் சூடான டீயும் தருவித்து மகிழ்விப்பதை நித்ய கடமையாய் கொண்டிருக்கிறான். அதிலொரு சந்தோசம் அவனுக்கு, அவன் முகம் பார்த்து பூரித்துக் கொண்டே அதை உண்டு முடிப்பதில் அவளுக்கொரு சந்தோசம். இப்படி போஷாக்காய் வளர்த்த காதல் பீமசேனன் கிழித்துப் போட்ட ஜராசந்தனின் உடல் போல இரண்டாய்ப் பிளந்து எதிரெதிர் திசை போன மாயம் தெரிந்து தெளிவதற்குள் சத்தி தன் ஒன்று விட்ட மாமன் மகனை மணந்து ஆணொன்றும் பெண்ணிரண்டுமாய் மூன்று பிள்ளைகளுக்குத் தாயாகி இருந்தாள்.
கோவில்பட்டியில் இருந்து தேனிக்கு வாழ்க்கைபட்டு போன இந்த பத்து வருடங்களில் எப்போதாவது ஊருக்குப் போகையில் தங்கையுடன் தனித்திருக்க நேர்ந்தால், சத்தி விசாரிக்காவிட்டாலும் அக்காளின் மனமறிந்து ரேவதியே மகேந்திரனைப் பற்றி அவன் இப்போது எங்கே இருக்கிறான், என்னவாக இருக்கிறான் என்றெல்லாம் ஏதாவது தகவலைக் கசிய விடுவாள். போனசாக “இந்த அழிமாந்திரத்துல போய்ச் சிக்கிக்கிட்டு நீ மூணு பெத்துக்கறதுக்கு அவன் கூடனாச்சும் ஓடிப்போயிருக்கலாம், நான் பொறுப்புன்னேனே போனியா நீ?” என்று அங்கலாய்க்கவும் தவற மாட்டாள், அவளுக்கு அக்காவின் மீதான பாசமும் கூடுதலாக தனது சாமர்த்திய யோசனையை மறுத்ததால் நீ கண்ட அனர்த்தத்தை பாரேன் என்ற விசனமும் அதிகமிருந்தது.
சத்தி மகேந்திரன் விசயத்தில் மட்டும் அவளுக்கு பதிலே சொன்னதில்லை எப்போதும். சில நேரங்களில் துக்கம் தொண்டையை இறுக்க வலது கையை மடித்து நெற்றியின் மேல் வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு நீட்டி நிமிர்ந்து படுத்து விடுவாள், அக்கா அப்படி இருக்கையில் ரேவதி அத்தோடு மகேந்திரனைப் பற்றி பேசுவதை நிறுத்தி விடுவாள். சத்திக்கு உள்ளுக்குள் அவன் நினைப்பு ஓடிக் கொண்டே இருக்கும்.
எத்தனை முறை சைக்கிள் கடை பொன்னி முகவரிக்கு சத்திக்கு கடிதம் எழுதி இருப்பான் “சத்தி போலீஸ் ட்ரெயினிங்ல ரொம்ப அடிக்கிறாங்க சக்தி, என்னால தாங்க முடியலை, நான் ஊருக்கே வந்துரட்டுமா, நான் சொந்தமா தீப்பெட்டி ஆபிஸ் போட்டு உன்னக் கட்டிக்கிட்டு ராணி மாதிரி வச்சுக்குவேன், நீ ஒரு வார்த்த சொல்லு, போதும் நான் ட்ரெயினிங்க்கும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம்னு தூக்கி இந்தப் பெரிய ஆபிசருங்க மூஞ்சில கடாசிட்டு ஓடி வந்துறேன். உடனே பதில் எழுது சக்தி” என்று. சத்திக்கு பாவமாய் தான் இருக்கும் .
ரேவதி அவளை அவனுக்கு சாதகமாய் பதில் எழுத விடவே மாட்டாள். “என்னக்கா நீ, சுத்த விவரங் கெட்டவளா இருக்க? நம்ம வீட்ல சும்மாவே அவனுக்கு வசதி காணாதுன்னு பொண்ணு தர யோசிப்பாங்க, இதுல கையில சர்க்கார் உத்தியோகம் இருந்தானாச்சும் ஏதாச்சும் நாமளும் நாலு பேத்த விட்டு சொல்ல வைக்கலாம் “மகேந்திரனுக்கு என்ன பொண்ணக் கொடுங்க தங்கமா வச்சு காப்பாத்துவான்னு” பொறுமையா இரு இப்ப வந்துறாத வேலை ஆர்டர் கையில வந்தா தான் நமக்கு கல்யாணம்னு தெளிவா எழுதிருக்கா, அவம் பாட்டுக்கு வந்துற போறான்.” என்று தடுத்துக் கொண்டே இருந்து விட்டாள் கடைசி வரையிலும்.
மகேந்திரனுக்கு பதில் எழுதுவதில் காட்டிய அதே எதிர்ப்பின் தீவிரத்தை ரேவதி தன் அக்காவுக்கு ஒன்று விட்ட மாமன் மகன் நிச்சயிக்கப்பட்ட போதும் கூட உக்கிரமாய் காட்டினாள் அந்த சின்னப் பெண். ஆனாலும் விதி வலியது என்று நம்பித் தானாக வேண்டும் .
இவர்களைப் பெற்றவளான அழகம்மைக்கு என்ன காரணத்தாலோ மகேந்திரனை சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஒருமுறை சைக்கிள் கடை பொன்னியின் வீட்டில் வைத்து சத்தி மகேந்திரனோடு பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து விட்டு அந்தம்மாள், “எந்த நேரத்துல என் வயித்துல வந்து தலைச்ச்சனா பொறந்தியோ, ஒன்னால நாம பெத்த ஆம்பளப் பிள்ளைங்க மூணும் மருந்தக் குடிச்சு செத்தாத்தான் நீ நிம்மதியா இருப்பபோல, எந்தாயி செல்லியாத்தா இந்தப் பொட்டச்சிக்கு கண்ணத் தொறக்க மாட்டியா நீ?” என்று தலையிலடித்துக் கொண்டும் நெஞ்சில் அடித்துக் கொண்டும் தெருவெங்கும் பிலாக்கணம் வைக்க சத்தி கூசிக் குறுகிப் போனாள்.
இத்தனைக்கு ஆன பிறகு வீட்டுக்கு பெண் கேட்டு வருவதில் மகேந்திரனுக்கு கர்வ பங்கமாகி விட, அவன் எத்தனை எத்தனை ஆசையோடு இருந்தானோ அத்ததைனைக்கத்தனை பிடிவாதமாக “சத்தி நமக்கு வீட்டுப் பெருசுங்க சேர்ந்து கல்யாணம் பண்ணி வைப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்லை, நாம ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கலாம்” என்பதிலேயே நின்றான். சத்தி உள்ளுக்குள் என்ன நினைத்தாளோ யாருக்கும் தெரியாது. ஆனால் அவளால் அம்மாவின் பெரியண்ணனின் எமோசனல் ப்ளாக் மெயில்களை ஒதுக்கி விட்டு வாசற்படியைத் தாண்டி ஓரடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. நிச்சயம் சத்தி தன்னை தடுக்க ஆட்கள் இல்லா விட்டால் மகேந்திரனோடு ஓடிப் போய் நல்ல வாழ்கை வாழ்ந்திருப்பாள் என்று தான் இன்றும் ரேவதி நினைத்துக் கொண்டிருக்கிறாள்.
சத்தி அதற்குப் பிறகு மகேந்திரனை பார்த்தது மூன்று பிள்ளைகளோடு வாழாகுடியாக அம்மா வீட்டில் ரெண்டு வருஷம் காலம் தள்ள நேர்ந்த போது தான், அப்போதும் கூட இருவருக்கும் பொதுவான மூன்றாம் மனிதர்களிடம் மகேந்திரன் சொல்லி அனுப்பத் தான் செய்தான் .
“மூணு பிள்ளைங்க இருந்தாலும் பரவாயில்ல,எம் பிள்ளைகளா நினைச்சு வளர்த்துக்கறேன்,சத்திய என்ன நம்பி வரச் சொல்லுங்க, நான் காப்பாத்தறேன்” என்று.
குழந்தைகள் மூன்றும் மூன்று முத்துச் சிமிழகளாய் நெஞ்சம் நிறைத்ததில் சத்திக்கு அப்போதைய தேவை தனக்கொரு வேலையும் மாதச் சம்பளமுமாக பணமாக இருந்ததே தவிர மகேந்திரனாக இல்லை. ரெண்டு வருசங்கள் முடிந்து முடிவதற்குள் பணப் பிரச்சினை முடிந்து சத்தியின் கணவன் அவளையும் பிள்ளைகளையும் தன்னோடு தேனிக்கே கூட்டிக் கொண்டு போய் விட்டான்.
இதை அவன் எப்படிப் புரிந்து கொண்டானோ! அடுத்த சில மாதங்களில் அவனுக்கும் கல்யாணம் என்ற ஒன்று ஆனது. அதற்குப் பிறகு அவன் சத்தியை பார்க்க நேரவே இல்லை .
சாத்தூரில் அவன் வீடு சத்தியின் கடைசித் தம்பியின் வீட்டுக்கு பின்னால் தான். சொந்த வீடாம்.
படித்த படிப்பு வீணாய்ப் போகாமல் சத்திக்கும் வேலை கிடைத்து அவளும் வேலைக்கு போய் சம்பாதித்து இரண்டு மகள்களைக் கட்டிக் கொடுத்து பேரன் பேத்தி எடுத்து மகனையும் இஞ்சினியராக்கி இன்று பணி ஓய்வும் பெற்று விட்டாள் .
மூன்று பிள்ளைகளுக்கும் சென்னையில் தான் ஜாகை. கணவர் சொந்தத் தொழிலில் கை வலுக்க இப்போது சத்தியின் பாடும் தேவலாம் .
நாற்பது சவரன் நகை வைத்திருக்கிறாள், பேங்கில் அவள் பெயரில் ரெண்டு லட்சம் தூங்கிக் கொண்டிருக்கிறது,
வருடம் ஒரு முறை புருசனும் பெண்டாட்டியுமாய் விச்ராந்தியாய் இந்தியா டூர் கிளம்பி விட வேண்டும் என்ற அவளது ஆசை மட்டும் தான் இன்னும் பாக்கி, மற்ற ஆசைகள் எல்லாம் நிறைவேறி விட்டனவா என்று சமந்தமில்லாமல் சமயோசித புத்தியில்லாமல் யாரும் கேட்டு விடாதீர்கள். வெளியார் பார்வைக்கு சத்தி ஒரு தன்னிறைவடைந்த குடும்பத் தலைவி இப்போது, அவ்வளவு தான்.
மகனுக்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கிறாள், நல்ல வரன் அமைந்தால் முடித்து விடும் முனைப்பில், நாட்கள் இப்படிக் கடக்கையில் கடந்த வாரம் புதன் கிழமை கடைசித் தம்பியின் மகள் சடங்காகி இருப்பதாக தம்பி நேரில் வந்து அழைத்து விட்டுப் போயிருந்தான்.
அவளைப் பார்க்க லாலா மிட்டாய் கடையில் அல்வாவும் ,சண்முக நாடார் கடை காராசேவும் இன்னும் கண்டது கடியதென்று பழங்களும் பூக்களுமாக இரண்டு கைகளிலும் இழுக்க முடியாமல் சுமைகளை சுமந்து கொண்டு அம்மாவோடு சாத்தூர் மதுரை பை பாஸ் சாலை நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாள்.
தம்பி “நீ அங்கேயே இருக்கா நான் கார் எடுத்துட்டு வந்து கூட்டிட்டு போறேன்” என்றிருந்தான்.
புத்தம் புது மெட்டாலிக் ஆரஞ்சு நிற மாருதி ஸ்விப்ட் வந்து அவளை உரசினார் போல நின்றது.
திடுக்கிட்டார் போல நிமிர்ந்த சத்தியின் அம்மா, காரிலிருந்து இறங்கியவனைக்கண்டதும் முகமெங்கும் சிரிப்பு விரிய உரக்கச் சிரித்தவாறு:
“இதாரு நம்ம மகேந்திரனா ?!”
என்று அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு வாஞ்சையோடு பேச ஆரம்பித்து விட்டாள் .
குறிப்பு : சத்தியின் நடுத்தம்பியின் மகள் கல்யாண வயதில் நிற்கிறாள்,அவளுக்கு அமெரிக்காவில் இஞ்சினியராக இருக்கும் மகேந்திரனின் மூத்த மகன் ஜாதகம் பத்துப்பொருத்தமாம் .எல்லாம் பிறகு சத்தி தெரிந்து கொண்டது.
உள்ளுக்குள் உருகித்துடித்ததை ஜீரணிக்க அவளுக்கு ஒரு சொட்டுக் கண்ணீரும் அவனுக்கு “நல்லா இருக்கியா சத்தி? என்ற தழு தழுத்த விசாரிப்பும் நிச்சயம் போதுமானதாய் இருந்திருக்காது தான்.
ஆனால் காலம் இப்படியான இரக்கமற்ற தருணங்களை தான் வெகு பத்திரமாய் பதுக்கி வைத்து பரிசளிக்கிறது அதற்கு என்ன செய்ய!
– ஆகஸ்ட் 15th, 2011