ஒரு கடிதம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 18, 2022
பார்வையிட்டோர்: 5,207 
 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அன்று வேறு ஒரு கடிதமும் வரவில்லை . எவ்வளவோ மணியார்டர்களும், ரிஜிஸ்தர்களும், கல்யாணக் கடிதங்களும், போட்டிப் பந்தய முடிவுகளும் அந்தத் தபாலில் வந்திருக்கலாம்; வந்தும் இருக்கும். ஆனால் தபால்காரன் ஒரு சின்ன நீல உறையை எடுத்து ஜகந்நாதனிடம் கொடுத்துவிட்டு அவசர அவசரமாக அங்கிருந்து நகர்ந்துவிட்டான்; அடுத்த வீட்டுக்குள் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய காக்கிச் சட்டையின் பின்பக்கத்தில், எங்கேயோ அவன் சுவரில் சாய்ந்ததனால் திட்டுத் திட்டாகப் பட்டிருந்த மஞ்சள் வெள்ளைச் சுண்ணாம்பு வர்ணங்களைப் பார்த்துக்கொண்டே ஜகந்நாதன் இரண்டு நிமிஷம் தன் வீட்டு வாசற்படியில் சாய்ந்துகொண்டு நின்றான். அந்த அழுக்குக் காக்கியில் திட்டுத் திட்டாகப் படிந்திருந்த மஞ்சள் வெள்ளைத் தோற்றந்தான் நமது இன்றைய நாகரிகத்தின் சின்னம் என்று ஜகந்நாதனுக்குத் தோன்றிற்று. உண்மையிலேயே இன்று நமது ‘வர்ண விஸ்தாரங்கள்’ எல்லாம் அகஸ்மாத்தாக, திட்டுத் திட்டாக, நம்மீது படிந்தவைகளே; நாமே சுயப்பிரக்ஞையுடன், மனப்பண்புடன் தேடிப்பிடித்து அடைந்தவை அல்ல. இன்று நமக்கிடையே, உள்ளும் புறமும் அரசு செலுத்தியது அந்த அசட்டு அழுக்குக் காக்கி வர்ணந்தானே?

தபால்காரனுக்கு இன்னும் எவ்வளவோ வீடுகள், வீதிகள் சுற்றிவந்தாகவேணும்; எவ்வளவோ கடிதங்கள் பட்டு வாடா பண்ணியாக வேணும். நடுத்தெரு ஜகந்நாதனுக்கு ஒரே ஒரு கடிதந்தானே வந்தது? ‘அதில் என்ன, சுபச்செய்தி இருக்குமா, கெட்ட செய்தி இருக்குமா?’ என்று யோசிக்க அவன் தாமதிப்பதில்லை. அதையெல்லாம் பற்றி அவனுக்குக் கவலையே இல்லை. அவன் கண் கடிதத்தின் மேல்விலாஸத்தைப் பார்க்கும். அவன் கை தானாகவே அதை உரியவரிடம் சேர்ப்பிக்கும்; உடனே கால்கள் நகர்ந்து விடும். அவ்வளவுதான் அவன் கடமை. கடமை! கடமை என்று வார்த்தையிலேயே உணர்ச்சியில்லாமல் போய்விட்டது. கடமை என்று கருதிச் செய்யப்படும் எந்தக் காரியத்திலும் பக்தி சிரத்தையோ, உணர்ச்சியோ, உள்ள ஈடுபாடோ இருப்பது துர்லபம்!

இப்படியெல்லாம் யோசித்துக்கொண்டு நின்ற ஜகந்நாதன் மனத்தில் கசப்பு ஒன்றும் இல்லை. தனக்கு அன்றையத் தபாலில் ஒரே ஒரு கடிதந்தான் வந்தது என்பது பற்றி அவனுக்கு எவ்வித ஏமாற்றமும் ஏற்படவில்லை . அவன் என்றுமே, எங்கிருந்தும், எதையும் எதிர்பாராதவன். ஒரு விதத்தில் அவனைப் பாக்கியசாலி என்றே சொல்லவேணும். கால் ரூபாயை அனுப்பிவிட்டு அது மூணேமுக்காலே சொச்சமாகப் பெருகித் திரும்பிவரும் என்ற லக்ஷ்யத்துடன் அவன் என்றும் போட்டிப் பந்தயங்களில் ஈடுபடுகிறவனல்ல. அவன் யாருக்கும் சல்லிக்காசும் கொடுக்க வேண்டியதில்லை. அவனுக்கும் யாரும் தரவேண்டியதும் இல்லை. மேலதிகாரியின் உத்தரவை எதிர்பார்த்து நிற்க அவன் யாரிடமும் கை கட்டிச் சேவகம் செய்பவன் அல்ல; உத்தியோகமே புருஷ லக்ஷணம் என்று நம்பாத கோஷ்டியைச் சேர்ந்தவன் அவன். அவனுடைய முன்னோர்கள் தயவுடன் சேர்த்து வைத்திருந்த நிலபுலன்கள் கொஞ்சம் இருந்தன; அவை எளிதில் அழிந்துவிடக் கூடிய ஆஸ்தியல்ல; அவனும் அப்படி ஆஸ்தியை அழித்துவிடக் கூடிய பழக்கவழக்கங்கள் உள்ளவனும் அல்ல. அவனை ஒரு லக்ஷ்ய புருஷனாக்க இதெல்லாவற்றையும் விட அவனிடம் ஒரு முக்கியமான விசேஷாம்சம் இருந்தது. அவன் சமூகத்துக்கோ, சிந்தனை செய்வதற்கோ, பயந்து ஒதுங்கிப் பதுங்கிப் போகும் வாலிபன் அல்ல. அவன் படித்திருந்த படிப்பும், பெற்றிருந்த அறிவும் வீணாகிவிடவில்லை . எதைப்பற்றியும் தீவிரமாக யோசித்து, தைரியமாக மனத்தில் தோன்றுவதை வெளியிடக்கூடிய தெம்பு அவனுக்கு இருந்தது. இன்று காலை வேளையில் தபால்காரனையும், இன்றைய நமது நாகரிகத்தையும் பற்றி இப்படி அவன் சிந்திப்பதற்குக் காரணம் அவனுக்கிருந்த ஒரு பழக்கமும் அவகாசமுந்தான் என்று சொல்லலாம்.

வாஸ்தவந்தான். ஜகந்நாதன் மனத்தில் ஒருவிதமான கசப்பும் இல்லை. ஆனால் ஐயங்கார் ஹோட்டல் காபி அவன் வாயில் இன்னும் கசந்து கொண்டிருந்தது. அந்த ஹோட்டல் காபிதான் ஊரில் சிறந்தது என்று ஊரார் சொன்னதைக் கேட்டுக் கொண்டு அவன் ஒரு வாரமாக அங்கே போய்வந்து கொண்டிருக்கிறான்.

காலையில் எழுந்து பல் விளக்கிவிட்டு, ஒரு மைலுக்கு மேல் நடந்து போய்க் காபி சாப்பிட்டுவிட்டு வந்து அரை மணிக்கு மேலாகி விட்டது. எனினும் அவன் வாயிலிருந்த கசப்பும், நிஜக் காபிக்கு இல்லாத ஒரு விறுவிறுப்பும் இன்னும் மறையவில்லை. அதைத்தான் ஊரில் சிறந்த காபிக் கடை என்று சொல்லிக் கொண்டார்கள்! காலையில் நல்ல காபி கிடைக்காவிட்டால் அன்று பொழுது சரியான பொழுதாகப் போகுமா என்ற தத்துவ விசாரத்தில் சில விநாடிகள் அவன் ஈடுபட்டான். நேற்றும் முந்திய நாட்களும் காபி சுமாராகத்தான் இருந்தது. என்றாலும், அன்றுபோல அவ்வளவு மோசமாக இல்லை. காபியில் ஒன்றும் பிசகில்லை; ஐயங்கார் கடைக் காபி தினம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்; தன் நாக்குத்தான் காரணம் என்று ஜகந்நாதனுக்குத் தோன்றிற்று. ‘அந்த ஹோட்டல் காபி ஏழு நாள் சாப்பிடுவதற்குள்ளேயே இப்படிக் கசந்துவிட்டதே; இன்னும் எத்தனை நாள் அதைச் சாப்பிட வேண்டியிருக்குமோ? அவள் திரும்பிவர இன்னும் எவ்வளவு நாளாகுமோ?’ என்று ஜகந்நாதன் தன்னையே கேட்டுக் கொண்டான்.

தன் கையிலிருந்த கடிதத்தில் அந்தக் கேள்விக்கு விடை இருந்தாலும் இருக்கலாம் என்று எண்ணி அவன் கடிதத்தைப் பார்த்தான். அது அவளிடமிருந்து வந்த கடிதமல்ல; அவளுக்கு வந்திருந்தது. மணிமணியாக ஆங்கிலத்தில், “ஜயம்மாள் : ஜகந்நாதன் மேல்பார்த்து; நடுத்தெரு” என்று உறையின் மேல் விலாஸம் எழுதியிருந்தது. அந்த எழுத்தின் சாய்வும் கதியும் பெண்மையை அறிவுறுத்தின. ஜகந்நாதன் கடிதத்தைத் திருப்பித் திருப்பிக் கூர்ந்து கவனித்துப் பார்த்தான்.

தபால் முத்திரையில் சரியாகத் தெரியாத ஒரு பெயரும், பக்கத்தில் ‘கோயம்புத்தூர்’ என்ற வார்த்தையும் காணப்பட்டன. முத்திரையின் தேதி நாலு நாளைக்கு முந்தியதாக இருந்ததைக் கண்டு அவன், அது ஏதோ சின்னக் கிராமத்தில் தபாலில் சேர்க்கப்பட்டது என்று ஊகித்துக் கொண்டான்.

தன் மனைவிக்குக் கோயம்புத்தூரில் ஒரு சிநேகிதி இருந்தது ஜகந்நாதனுக்குத் தெரியும். ஆனால் இந்தக் கடிதம் அவள் எழுதியதல்ல. அவள் எழுதியதானால் குறைந்தது நாலணாவுக்காவது தபால் பில்லைகள் ஒட்டியிருப்பாள். அவளுக்குச் சின்னக் கடிதங்கள் எழுதத் தெரியாது. ஒரு புன்னகையுடன் அவன் தன் மனைவியை அதுபற்றி எவ்வளவு கேலி செய்திருப்பான் என்று ஞாபகப்படுத்திப் பார்த்துக் கொண்டான். எவ்வளவு வருஷங்கள்தாம் கலாசாலையில் சேர்ந்து படித்திருந்தாலும் வாரவாரம் நாலணாச் செலவழிக்கும் படியாக, அப்படி என்னதான் விஷயம் இருக்கும் என்று அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் கேலி செய்ததையெல்லாம் லக்ஷயம் பண்ணாமல் ஜயம் தன் சிநேகிதியின் கடிதத்தை ரகசியமாகப் படித்துவிட்டு – அதைத் – தன்னுடைய கைப்பெட்டியில் வைத்துப் பூட்டிக் கொண்டுவிடுவாள். அப்பெட்டியின் சாவியை அவள் தன் தாலிச் சரட்டில் ஒன்றுக்கு மூன்றாக முடிபோட்டுப் பத்திரப் படுத்திக் கொண்டிருந்தாள். ஆனால் அப்படியும் ஒரே ஒருதரம் அந்தச் சிநேகிதியின் கடிதத்தில் ஒரு மூலையை ஜகந்நாதன் பார்த்துவிட்டான். எழுத்துப் பெரிதாக, மண்டை மண்டையாகப் பக்கத்துக்கு எட்டுவரியும், வரிக்கு மூன்று வார்த்தையுமே இருந்தன. ‘ஓஹோ, விஷயக் கோளாறல்ல! எழுத்துக் கோளாறுதான்!’ என்று ஜகந்நாதன் அன்று தீர்மானித்துக் கொண்டான்.

அவன் கையில் அப்போதிருந்த கடிதம் அந்தப் பெண்மணி எழுதியதல்ல என்பது நிச்சயம். அதன் கனத்திலிருந்து உறைக்குள் ஒரே ஒரு காகிதந்தான் இருந்ததுபோலத் தோன்றிற்று. மனைவியோ ஊரில் இல்லை; அந்தக் கடிதத்தைப் பிரித்துப் பார்ப்பதா, வேண்டாமா என்பதுதான் பிரச்னை!

ஜயமும் தானும் குடும்பம் நடத்த ஆரம்பித்த நாட்களில் நடந்த ஒரு சம்பவம் அவனுக்கு ஞாபகம் வந்தது. ஒருவருக்கு வந்த கடிதத்தை மற்றவர் பிரிக்கலாமா என்பது பற்றித்தான் விவாதம் அன்று எழுந்தது. அவனுக்கு வந்த ஒரு கடிதத்தை ஜயம், அவன் வீட்டில் இல்லாதபோது வாங்கிப் பிரித்துப் பார்த்து விட்டாள். அந்தக் கடிதத்தில் விசேஷமாக ஒன்றும் இல்லை . யாரோ ஓர் அசட்டு நண்பன் லாகூரிலிருந்து பக்கம் பக்கமாகத் தன் பிரதாபங்களை அளந்து வீசிவிட்டு க்ஷேமம் விசாரித்து எழுதியிருந்தான். அவ்வளவுதான். அதைத் தன் மனைவி பிரித்துப் பார்த்துவிட்டதைப் பற்றி, ஜகந்நாதனுக்கு உண்மையில் கோபம் இல்லை. ஆனால் விளையாட்டாக, “எனக்கு வந்த கடிதத்தை நீ எப்படிப் பிரிக்கலாம்?” என்று போலிக் கோபத்துடன் அவளைக் கேட்டான்.

“அட பிரமாதமே!” என்றாள் ஜயம்.

“பிரமாதமோ, இல்லையோ? அதைப்பற்றி என்ன? நீ படித்தவள்தானே? பிறருக்கு வரும் கடிதத்தைப் பிரித்துப் பார்க்கக் கூடாது என்று உனக்குத் தெரியாதா?”

“கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் பிறர் என்று எண்ணக்கூடியவர் அல்ல என்று எண்ணினேன். நான் எண்ணியது தப்பாக இருக்கலாம்” என்றாள் ஜயம்.

“கடிதத்தைப் பிரித்தது தவறு. ஏதாவது பொய்ச்சாக்கு, காரணம் கண்டு பிடித்துக் கொண்டிராதே” என்றான் ஜகந்நாதன்.

“சரி, தவறுதான்; ஒப்புக் கொள்ளுகிறேன். இனி மேல் நீங்களும் எனக்கு வரும் கடிதம் ஒன்றையும் பிரித்துப் பார்க்கக் கூடாது” என்றாள் ஜயம்.

உண்மையிலேயே அவளுக்குக் கோபம் வந்து விட்டது என்று அறிந்துகொண்டான் ஜகந்நாதன். “நான் உனக்கு வரும் கடிதத்தைப் பிரித்துப் பார்த்து விட்டால் என்ன செய்வாயாம்?” என்று கேட்டு விட்டுக் கலகலவென்று நகைத்தான்.

ஆனால் ஜயம் அவன் சிரிப்பைத் தப்பாக அர்த்தம் பண்ணிக் கொண்டு விட்டாள். மனைவி பலஹீனமானவள், தான் எது செய்தாலும் சகித்துக் கொள்ள வேண்டியவள் என்ற மமதையுடன், திமிருடன் சிரிக்கிறான் என்று அவள் எண்ணினாள். கோபமாகவே பதிலளித்தாள்: “பிரித்துப் பாருங்களேன். என்ன செய்கிறேன் என்று தானே தெரியும்” என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டுப் பெண்களின் கோட்டையாகிய சமையலறைக்குள் புகுந்து கொண்டுவிட்டாள்.

விவாதம் அன்று அதனுடன் முடிந்துவிட்டது. ஆனால் மறுநாள் அவளுடைய கோயம்புத்தூர்ச் சிநேகிதியிடமிருந்து கடிதம் வந்தது. அதை எடுத்துக் கொண்டு அவன் நேரே அவளிடம் போய், “இப்போது நான் இதைப் பிரித்துப் பார்க்கப்போகிறேன். நீ என்ன செய்யப் போகிறாயோ, செய்” என்றான். அவள் தாவிக் குதித்துக் கடிதத்தை அவன் கையிலிருந்து பிடுங்கிக் கொள்ள முயன்றாள். அது சாத்தியப்படவில்லை . ஜகந்நாதன் கடிதத்தைப் பிரிப்பது போலப் பாவனை செய்தபோது அவள் முகம் குப்பென்று சிவந்துவிட்டது; முகத்தைத் திருப்பிக் கொண்டு அங்கிருந்து மெல்ல நகர்ந்துவிட்டாள். அவள் செய்கையில் லஜ்ஜையும், துக்கமுந்தான் இருந்தன. அவள் மனத்தில் பயமோ, கலவரமோ இல்லை என்று அறிந்துகொண்ட ஜகந்நாதனுக்குத் தன் மனைவியைப் பற்றிக் கொஞ்சம் பெருமையாகவே இருந்தது. பெண்மையின் எளிய கபடமற்ற ரகசியம் எதுவானாலும் அதை அறிந்து கொள்ள வேணுமென்ற ஆவலே இல்லாமல் அவன் அவளைப் பின்தொடர்ந்து போய்ப் பிரிக்காத கடிதத்தை அவள் கையில் தந்துவிட்டான்.

முகத்தில் ஆனந்தமும் பெருமையும் தவழ , கையில் கடிதத்துடன் நின்றுகொண்டிருந்த ஜகந்நாதனைக் கண்டு, மேலே துண்டை உதறிப் போட்டுக் கொண்டு மேற்கே கிளம்பிக் கொண்டிருந்த அடுத்த வீட்டு அப்புசாமி, “என்னையா ஆனந்தம் பொங்குகிறது? அகமுடையாளிடமிருந்து கடிதம் வந்ததோ?” என்று கேட்டான். அந்தக் கேள்வி ஜகந்நாதன் பிரக்ஞையில் தட்டி, அவன் பதில் சொல்ல யத்தனிக்குமுன் அப்புசாமி தெருக்கோடிக்குப் போய் விட்டான்.

கையில் கடிதத்துடன் ஜகந்நாதன் மேலும் கீழும் பார்த்தான். மணி இன்னும் ஒன்பது அடிக்கவில்லை. ஆனால் வெயில் கடுமையாகத் தகித்துக் கொண்டிருந்தது. மேல்காற்று வீசி விசிறி அடித்துத் தெருப்புழுதியையெல்லாம் மனிதர் தலையிலும் காதிலும் கண்ணிலும் வாயிலும் ஏற்றிவிடுவது என்ற லக்ஷயத்துடன் இடைவிடாது உழைத்துக் கொண்டிருந்தது. தெருவில் முனிசிபாலிடியார் தயவில் கிடந்த சிறு சிறு காகிதத்துண்டுகள் காற்றில் எழும்பிப் பறந்து கொண்டிருந்தன. புழுதித்தேர்கள் தோன்றித் தோன்றி விசுவரூபமெடுத்து ஆகாயத்துக்கும் பூமிக்குமாக நின்று ஆடிச்சுழன்று மறைந்தன. “சே! என்ன புழுதி! ஆடிக் காற்றுக்கு ஆனி மாசத்திலே என்ன வேலை?” என்று சொல்லிக் கொண்டே ஜகந்நாதன் வாசற் கதவைச் சார்த்தித் தாழிட்டுக் கொண்டு வீட்டிற்குள் போனான்.

அன்று வந்த கடிதம் இன்னமும் அவன் கையில் தான் இருந்தது. அதைப் பிரித்துப் பார்ப்பதா, வேண்டாமா என்பது பற்றி அவன் இன்னமும் ஒரு தீர்மானத்துக்கும் வரவில்லை . பிரித்துப் பார்த்தால் என்ன? ஆனால் ஜயம் அதைத் தவறாக எண்ணிக் கொண்டுவிட்டால் என்ன பண்ணுவது? கடிதத்தை மறுபடியும் தூக்கிக் கூர்ந்து கவனித்தான். என்ன விஷயம் இருக்கப் போகிறது? ஒன்றும் இராது. ஜகந்நாதன் மனத்தில் விகற்பமோ, கல்மிஷமோ, சந்தேகமோ ஒன்றும் இல்லை. தன் கிருஹஸ்தாசிரமத்துக்கு முந்திய நாட்களில் நடந்த எதுவும் தன் மனைவியின் காதுக்கு எட்டிவிடாதிருக்க வேணுமே என்று அவனுக்கு விசேஷமான பயம் ஒன்றும் இல்லை. கலாசாலையில் படித்துக் கொண்டிருக்கும் போது அவனுக்கும் காதல் லக்ஷ்யத்திலெல்லாம் நம்பிக்கை இருந்தது வாஸ்தவந்தான். அதே கலாசாலையில் அவனுடன் படித்துக் கொண்டிருந்த லீலா என்னும் பெண்ணும் அவனும் காதலர்களாக, அன்யோன்யமான அன்புள்ளவர்களாகக் கொஞ்சநாள் பழகினார்கள். அது கொஞ்சநாள்தான். லீலாவுக்கும் வேறு ஒருவனுக்கும் பின்பு கல்யாணமாகிவிட்டது. அதற்கப்புறம் லீலாவும் ஜகந்நாதனும் ஒரே ஒரு சமயந்தான் சந்தித்தார்கள்; ஆனால் அதைக் காதலர்களின சந்திப்பு என்று சொல்லுவதற்கில்லை; ஏமாற்றமடைந்த இரு லக்ஷயவாதிகளின் சந்திப்பு என்றுதான் சொல்லவேண்டும். இந்த ஏமாற்றத்தினால் அவர்கள் மனம் கசந்தோ, அமைதியில்லாமலோ போய்விடவில்லை. இதனால் அவர்களுடைய அன்பு ஆழமற்றது என்றும் ஏற்பட்டுவிடாது. அது நீடித்தவரையில் ஆழ்ந்ததாகத்தான் இருந்தது. நிறைவேறாத காதலால் அவர்களுக்குத் தோன்றிய துக்கமும் ஆழ்ந்ததுதான்; உண்மையானதுதான்.

ஆனால் அந்த ஏமாற்றத்தையும் மீறி வாழ அவர்கள் இருவருக்கும் வாழ்க்கையிலே போதிய பற்றுதல் இருந்தது. ஜகந்நாதனைப் பற்றியவரையில் லீலாவின் ஞாபகம் நாலைந்து வருஷங்கள் அவனை இடைவிடாது பீடித்தது. ஆனால் அப்பொழுதும் அந்த ஏக்கத்தைப் போற்றி வளர்ப்பதில் சாரமில்லை என்று அவனும் அவளும் ஒருவருக்கொருவர் கடிதம் எழுதிக் கொள்ளுவதைக்கூட நிறுத்திக்கொண்டு விட்டனர். இப்பொழுது யோசித்துப் பார்க்கும்போதும் ஜகந்நாதனுக்கும் அப்படி நடந்ததே சரி என்று தோன்றிற்று. கற்பாறையில் மோதிக் கொள்ளுவதனால் மண்டை உடையுமே தவிர, லாபம் எதுவும் இருக்குமோ? ஜயத்தின் வருகைக்கப்புறம் ஜகந்நாதனுக்கு லீலாவின் ஞாபகம் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய ஆரம்பித்துவிட்டது. இப்பொழுதெல்லாம் அவன் லீலாவைப்பற்றி எண்ணுவதுகூட இல்லை. இன்று ஏதோ அகஸ்மாத்தாக ஞாபகம் வந்தது.

ஆமாம். ஜயமும் அந்த லீலாவைப் போலவே ஒரு கலாசாலையில் மேல் படிப்புப் படித்தவள்தான். அவளுக்கும் அந்த நாட்களில் காதல் என்று ஒரு லக்ஷயம் இருந்திருக்கலாம். அவளுக்கும் ஒரு ‘ஜகந்நாதன்’ இருந்திருக்கலாம். ஏன் இருந்திருக்கக் கூடாது? ஆங்கிலேய பாணியில் ‘பொறாமைப் படவில்லை ஜகந்நாதன். அந்த மாதிரிப் பொறாமைக்கு ஹிந்து சமூகத்தில் இடம் கிடையாது என்பது அவன் அறியாத விஷயமல்ல. ஹிந்து சமூகத்தில் குல ஸ்திரீகள், குல ஸ்திரீ அல்லாதவர்கள் என்று இரண்டே பகுதிதான் உண்டு. ஆனால் அதைப்பற்றி இப்போது யோசிக்கப் புகுந்தால் லாபம் இராது என்று அவன் தன் சிந்தனைகளை மறுபடியும் தன் கையிலிருந்த கடிதத்தின் பக்கம் திருப்பினான். இவ்வளவு சின்ன விஷயத்தைப் பற்றி இவ்வளவு பிரமாத யோசனைகள் பண்ணுவானேன்? அவளுந்தான் ஊரில் இல்லை. கடிதத்தைப் பிரித்துப் பார்த்து ஏதாவது அவசரமான விஷயமாக இருந்தால், மனைவிக்கு உடனே தெரிவிக்கலாம்; அது தன் கடமை என்று தன் மனச்சாட்சியை மறைமுகமாகத் திருப்தி செய்து கொண்டு ஜகந்நாதன் உறையைக் கிழித்தான்.

அப்போதும் அவன் மனம் திடப்படவில்லை . உறையிலிருந்து கடிதத்தை வெளியே எடுக்குமுன் சற்று நேரம் தயங்கினான். அதை அவளுடைய சிநேகிதிகளில் ஒருத்திதான் எழுதி இருக்கவேணும். அதில்தான் பார்க்கக்கூடாது விஷயமாக ஏதாவது இருந்துவிட்டால்….? தன் சிநேகிதியைப் பரிகாசம் செய்து, பழைய ஒரு ‘ஜகந்நாதனை ‘ப்பற்றி அதில் ஏதாவது எழுதப் பட்டிருந்தாலும் இருக்கலாம். கேலியாக எழுதப்பட்டிருக்கும் ஒரு வரி போதும், அவன் மனத்தைத் துன்புறுத்த. அப்படி ஒருவர் இருந்து, அதைத் தன் கணவன் படித்துவிட்டான் என்று அறிந்து கொண்டால், அவன் மனைவியின் மனம் என்ன பாடுபடும்? இருவருக்கும் இடையே நீங்காத ஒரு திரை விழுந்துவிடும்!… ஆனால் உறையைக் கிழித்தாய்விட்டதே! படித்துப் பார்த்துவிடுவது; அதில் அப்படி ஏதாவது தன் கண்ணில் படக்கூடாத விஷயம் இருந்தால், அந்தக் கடிதம் வந்ததையோ, அதைத் தான் பார்த்ததையோ காட்டிக் கொள்ளாமல் இருந்துவிடுவது என்று அவன் தீர்மானித்தான். அப்படித் தீர்மானம் செய்வது எளிதுதான். ஆனால் அத்தீர்மானம் நடைமுறையில் சரியாக வருமா? அதைப் பற்றி ஜகந்நாதனுக்கே சந்தேகமாகத்தான் இருந்தது.

கடிதம் தமிழில்தான் எழுதப்பட்டிருந்தது. அதை வாசித்தான் ஜகந்நாதன்.

என் பிரியமுள்ள ஜயத்திற்கு,

இந்த கடிதத்தைப் பிரிக்கு முன்னே இதை எழுதியிருப்பது யார் என்று நீ அறிந்து கொண்டிருப்பாய். நீயும் நானும் சந்தித்தோ கடிதம் எழுதிக் கொண்டோ வெகுகாலமாகிவிட்டது என்றாலும், என்னையும் என் கையெழுத்தையும் நீ மறந்து போயிருக்கமாட்டாய் என்றே நான் நினைக்கிறேன். கலாசாலையில் நோட்ஸ் எழுதாமல் சோம்பேறியாகத் திரிந்துவிட்டு முழுக்க முழுக்க என் நோட்ஸையே வாங்கிப் படித்து என்னையும்விட அதிக மார்க்கு வாங்கியவள் அல்லவா நீ?

உன்னையும் என்னையும் நம் சகோதரிகள் லக்ஷயவாதிகள், குடும்பத்துக்கு லாயக்கற்றவர்கள் என்று கேலி செய்வார்களே ஞாபகம் இருக்கிறதா, உனக்கு? ஞாபகம் இருக்கும். ஆனால் நான் ஏன் இப்போது அந்தப் புண்ணைக் குத்திக் கிளறுகிறேன் என்று ஆச்சரியப்படுவாய் நீ. ‘லக்ஷயங்களை எல்லாந்தான் கட்டிப் பரண்மேல் வைத்தாகி விட்டதே! வரிந்து கட்டிக்கொண்டு அடுப்பண்டை நிற்கிறோமே இப்பொழுது?’ என்று நீ கேட்கலாம். உண்மைதான்.

எனக்குக் கல்யாணமாகிவிட்ட செய்தி உனக்குத் தெரிந்திருக்கும். என் கணவருக்குக் கல்கத்தாவில் உத்தியோகம். நான் சென்ற நாலு வருஷங்கள் கல்கத்தாவில் இருந்து விட்டு ஊர் திரும்பும்போது கோயம்புத்தூரில் செல்லத்தைப் பார்த்தேன். அவள் தான் உன் செய்திகளை யெல்லாம் சொன்னாள். உன் கணவரின் பெயரையும் விலாஸத்தையும் அவள் மூலந்தான் அறிந்து கொண்டேன்.

இப்பொழுது நான் இந்தக் கடிதத்தைக் கலாசாலை மாணவிகள் பாணியில் கேலியாக எழுத வரவில்லை . என் மனத்திலும் உள்ளத்திலும் இருப்பது போன்ற ஏக்கம் உனக்கும் இருக்கும் என்று எனக்குத் தெரியும். தமக்கையாக உனக்குக் கொஞ்சம் நான் ஆறுதலளிக்க விரும்பி இதை எழுதலானேன்.

என் வாழ்க்கையில், இந்த ஸ்வல்ப காலத்திலும், பல விஷயங்களையும் பற்றிச் சிந்திக்க எனக்கு அவகாசம் இருந்திருக்கிறது. என் சிந்தனையின் முடிவை, நான் சில நாட்களுக்குமுன் கேட்ட ஒரு ரேடியோ நாடகத்தில் வரும் நம்மைப்போன்ற யுவதி ஒருத்தியின் வார்த்தைகளில் உனக்குச் சொல்ல விரும்புகிறேன்:

‘வாழ்க்கையிலே லக்ஷயங்கள் என்று சொல்லப் படுவதெல்லாம் வெறும் பொய்களே. அர்த்தமற்ற வார்த்தைச் சேர்க்கைகள், கொள்கைகள் என்ற பெயருடன் நம்மை ஏமாற்றி நடமாடிக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக; காதல் என்ற ஒரு லக்ஷ்யத்தை எடுத்துக் கொள்ளுவோம். அது உண்மை என்று சொல்ல-அதிலும் ஹிந்து சமூகத்திலே உண்மையானது என்று சொல்ல-ஓர் ஆதாரமும் இல்லை . ஆனால் குடும்ப வாழ்க்கை என்பது நித்தியமான உண்மை. பிடுங்கித் தின்னும் குழந்தையும், குடும்பத் தொல்லைகளுமே வாழ்க்கைக்கு ரஸம் அளிப்பவை. ஹிந்து சமூகத்திலே கல்யாணத்திற்கு, ஆண் பெண் உறவுக்கு, வேறு லக்ஷயமே இல்லை . நாமாகத் தேடிக் காதலிப்பதாக எண்ணி வரிக்கும் புருஷனுக்கும், நம் பெற்றோராலோ பிறராலோ நம்மேல் சுமத்தப்படும் புருஷனுக்கும் அவ்வளவாக விசேஷமான வித்தியாசம் இல்லை. புல்லை எடுத்துப் புருஷன் என்று நிறுத்தினாலும் அது ஹிந்துக் கணவனாகக் கௌரவம் பெறுவதுடன் நில்லாமல் அப்படியே நடக்கவும் ஆரம்பித்து விடும். கிருஷ்ணமூர்த்தியானால் என்ன? லக்ஷ்மணன் ஆனால் என்ன? எந்தப் புருஷனும் சரிதான், அவன் ஒரு புருஷன் என்பதனால்.

இதுதான் நமக்கு ஏற்ற கொள்கை என்று எனக்குத் தோன்றுகிறது. நீ என்ன சொல்லுகிறாய்?

எனக்கு இரண்டு வயசில் ஒரு குழந்தை இருக்கிறது. அதற்கு ஜகந்நாதன் என்று பெயரிட்டிருக்கிறேன். உனக்கு இன்னும் குழந்தைகள் உண்டாகவில்லை என்று செல்லம் சொன்னாள். சீக்கிரம் பெற்றுக்கொள். அதுதான் நிறைவேறக் கூடிய ஒரு லக்ஷயம். நம் ஏக்கங்களை மறக்க அதுதான் சாதனம். குடும்பத் தொல்லைகளிலே , குழந்தையுடன் விளையாடுவதிலே எதையும் மறந்துவிடலாம் என்று நான் கண்டு கொண்டுவிட்டேன்.

உன் பிரிய
லீலா.

குறிப்பு:- உன் கணவரை எனக்குத் தெரியும். அவரும் நானும் கொஞ்சநாள் ஒரே கலாசாலையில் சேர்ந்து படித்தோம். அவருக்கும் என்னை ஞாபகம் இருக்கலாம்.

இந்தக் கடிதத்தைப் படித்து முடித்த பின் ஜகந்நாதனின் மனத்தில் தோன்றிய எண்ணங்களை விவரிப்பது இயலாத காரியம். அவன் சிந்தனைகள், வழக்கமாக ஒரு கட்டுக்கு அடங்கி அவன் இஷ்டப்படி எழும் தெளிய சிந்தனைகள், குழம்பித் தெளிவுபடாமல் உருவம் பெறாமல் அவனுக்கு ஒரு வேதனையை உண்டாக்கின. அந்தக் கடிதத்தை எழுதியிருந்தவள் அவனுடைய லீலாதான்; சந்தேகத்துக்கு இடமில்லை. என்ன விவேகமும் சாந்தியும் தொனித்தன அந்தக் கடிதத்தில்! உணர்ச்சிகள் அவன் உள்ளத்தில் கொந்தளித்துக் குமுறின. “உன் கணவரை எனக்குத் தெரியும். அவருக்கும் என்னை ஞாபகம் இருக்கலாம்” என்று அவள் எவ்வளவு நாஸுக்காக எழுதி இருந்தாள்!

ஒரு பெருமூச்சுடன் ஜகந்நாதன் பிரித்த கடிதத்தை மேஜைமேல் போட்டுவிட்டுக் கூடத்தில் குறுக்கும் நெடுக்கும் நடந்தான். செயலற்றவனாகச் சில விநாடிகள் பிரமித்தவன்போல் நின்றான். இந்தப் பெண்மணிகளின் உள்ளத்திலே பழமையும் புதுமையும் மோதின. அதன் பலாபலன்களைத் தற்சமயம் யார்தான் அறியமுடியும்? அதன் முடிவுகள் எப்படி உலகைப் பாதிக்கும்? இன்றைய தலைமுறையில் ஆண்களின் லக்ஷயமும் இதேபோன்றது தானே? ஆனால் அறிவாளியாகிய ஜகந்நாதனால் கூட ஒரு சிந்தனையைத் தொடர்ந்து சரியானபடி யோசிக்க அப்போது முடியவில்லை. அவன் உள்ளத்திலே மோதிய அலைகள் கட்டுக்கடங்காதவனாக இருந்தன.

வாசற்கதவை யாரோ தட்டும் சப்தம் கேட்டது. வீட்டில் ஜகந்நாதனைத் தவிர வேறு யாரும் இல்லை. “இதென்ன நியூஸன்ஸ்!” என்று சொல்லிக் கொண்டே போய்க் கதவைத் திறந்தான். வெளியே வண்டியிலிருந்து அவன் மனைவி ஜயம் இறங்கி உள்ளே வந்தாள். அவளுடைய தகப்பனார் வெளியே நின்று கொண்டிருந்தார்.

அவரை வரவேற்று இரண்டொரு வார்த்தை சொன்னான் ஜகந்நாதன். அவர் வண்டிக்காரனுக்குச் சில்லறையைக் கொடுத்து விட்டுத் தம் மாப்பிள்ளையின் பக்கம் திரும்பி, “என்ன மாப்பிள்ளை உங்களுக்கு? உடம்பு சரியாயில்லை என்று கடிதம் எழுதியிருந் தீர்களாமே! என்ன உடம்பு? உடனே போய்விடவேணுமென்று ஜயம் பிடிவாதம் பிடித்தாள். நான் கோர்ட்டிருக்கே, ஞாயித்துக்கிழமை போகலாம் என்று சொல்லிப் பாத்தேன். கேட்கமாட்டேன் என்று விட்டாள்” என்றார்.

“நான் அப்படி ஒன்றும் வரச்சொல்லி எழுதவில்லையே!” என்றான் ஜகந்நாதன்.

“அதென்னவோ! ‘அவர் உடம்பு சரியாயில்லை போலிருக்கிறது என்று நேற்றைய கடிதத்தில் எழுதியிருக்கிறார். போகத்தான் வேணும்; கிளம்பு’ என்று ஒரே அடியாகச் சாதித்து விட்டாள் ஜயம்” என்றார் அவன் மாமனார்.

எதிர்பாராத அவர்களுடைய வருகையால் ஜகந்நாதன் மேஜைமேல் தான் பிரித்துப் போட்டு விட்டு வந்த லீலாவின் கடிதத்தை மறந்து விட்டான். ஜயத்தின் கண்ணில் உள்ளே போனவுடன் அந்தக் கடிதந்தான் தட்டுப்படும். அவன் பதற்றமாக உள்ளே நுழைந்தான். கையில் கொண்டு வந்த கூஜாவைக் கூடக் கீழே வைக்காமல் ஜயம் அந்தக் கடிதத்தை எடுத்துப் படித்துக் கொண்டு நிற்பது அவன் கண்ணில் பட்டது. ஜயம் திரும்பி ஒரு விநாடி தன் கணவனைப் பார்த்தாள். அந்த விநாடியில் ஜயத்தின் முகம் அதிகமாகச் சிவந்ததா, ஜகந்நாதனின் முகம் அதிகமாகச் சிவந்ததா என்று தீர்மானிப்பது சிரமமான காரியம்.

“நீ இன்று வரப்போகிறாய் என்று எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் நான் அதைப் பிரித்துப் பார்த்திருக்க மாட்டேன்” என்று நாக்குழறச் சொன்னான் ஜகந்நாதன்.

ஜயத்துக்கு அவனை நிமிர்ந்து பார்க்கத் தைரியம் வரவில்லை. அதனால் ஜகந்நாதனுக்குக் கொஞ்சம் தைரியம் பிறந்தது. அவளை அணுகி மெதுவான, அன்பு ததும்பும் குரலில், “பெண்ணாகப் பிறந்தால் லீலா என்று பெயர் வைத்துவிடலாம்..ஆணாகப் பிறந்தால் என்ன பெயர் வைப்பது?” என்று புன்சிரிப்புடன் கேட்டான்.

ஒரு நிமிஷம் தயங்கினாள் ஜயம். அப்புறம் முகத்தைக் கவிழ்த்தபடியே, ”அதைப்பற்றி இப்பொழுது என்ன? இன்னும் நாலைந்து மாசம் இருக்கே; யோசித்துக் கொள்ளலாம்” என்றாள்.

ஜகந்நாதனின் மாமனார் ரேழியில் வந்து நின்று கொண்டு, “மாப்பிள்ளை! எனக்கு இன்று கோர்ட்டு இருக்கிறது. நான் அடுத்த ரயிலில் திரும்பவேணும்” என்று சொன்னார்.

“இரு அப்பா. ஒரு கப் காபி போட்டுத் தரேன். சாப்பிட்டு விட்டுப் போ. இன்னும் அரைமணி இருக்கே, அடுத்த வண்டிக்குத்தான்” என்றாள் ஜயம்.

– 1944, க.நா.சு. சிறுகதைகள்

Print Friendly, PDF & Email

1 thought on “ஒரு கடிதம்

  1. நீரோட்டம் போல் கதையின் நடை.கணவன் மனைவிக்கு இடையில் உள்ள அன்னியோன்யத்தை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் கா.நா.சுபரமணியன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *