வீட்டு வேலைகளை, ஒரு வழியாக முடித்து விட்டு, இந்த மாசம், “நீங்களும் நானும்’ பகுதியில் என்ன, முக்கியமான பெண்கள் பிரச்னையைப் பற்றி எழுதலாம் என யோசித்தபடி; பேப்பரும், பேனாவுமாக நான் உட்கார்வதற்காகவே காத்திருந்தாற் போல், என் கணவர் பரபரப்பாக மாடிக்கு வந்தார்.
“”ஏன் சரளா… நம்ம வீட்டில், சிரார்த்த பாத்திரங்களில், கிட்டத்தட்ட போகிணி மாதிரி பெயர் பொறித்து, ஒரு பாத்திரம் இருக்குமே அது எங்கே?” என்றார்.
கீழ் வீட்டில் உள்ள என் மாமியார் தான், இந்த புது விஷயங்களைக் கிளப்பி யிருக்க வேண்டும். நானும், என்னவோ கங்கணம் முதற்கொண்டு புளி போட்டுத் தேய்த்து, கழுவி வைத்த பழங்காலப் பெண்தான் எனினும், இன்று பல மகளிராலும், ஏன் ஆடவர்களாலும் பாராட்டிப் பேசப்படும், பெண்கள் பத்திரிகை ஒன்றின் ஆசிரியர்.
“”போகிணியாவது, ரோகிணியாவது… என்ன பெயர்… என்ன சிரார்த்த பாத்திரம்?” என்றேன் சற்று எரிச்சலுடன்.
“”அதாம்மா… இப்படி வாயகன்று, கிட்டத்தட்ட உருளி மாதிரி… உருளியும் இல்லாமல், வாணலி மாதிரியுமில்லாமல்…” என, கோணமாணலாக ஏதோ அபிநயித்துக் காட்டினார் என் கணவர்.
நான் உதட்டைப் பிதுக்கினேன்.
“”ம்ஹும்… சரி… அதற்கென்ன இப்போ?”
“”என்ன அப்படிக் கேட்டுட்ட… அதில் ப.கு.சி.கு.கை.ரா., என்று செதுக்கியிருக்குமே… பார்த்ததில்லை?” என, கேட்டார் கணவர் கைலாசம்.
“”என்னது… ப.கு.சி.கு… அப்படீன்னா?” என்று புரியாமல் ஆரம்பித்த எனக்கு, சட்டென விளங்கியது.
என் புகுந்த வீட்டில் சிரார்த்தம், அதாவது மூத்தோருக்கு, திதி கொடுக்கும் போது, பிரத்யேகமாக சமையல் செய்வதற்கென்று சில பித்தளை, வெண்கலப் பாத்திரங்கள் உண்டு. அதில் ஒரு பாத்திரத்தில், இது போல் ஏதோ செதுக்கி இருக்கும். அந்தக் காலத்தில், பாத்திரங்களில், பெயர் பொறித்துக் கொடுப்பர் சீர் வரிசையாக.
அது போல், இது ஏதோ, காலம் காலமாக என் புகுந்த வீட்டில் இருந்த பாத்திரம். என் மாமியாரும், நாத்தனார் மாலதியும் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
அதற்குள் என் கணவர், என்னை, ஒரு அற்ப ஜந்துவைப் பார்ப்பது போல் பார்த்தார்.
“”என்ன பொம்பள நீ… வீட்டில் பல தலைமுறை களாகப் புழங்கி வரும், ஒரு அபூர்வமான பாத்திரத்தைப் பற்றிக் கூடத் தெரியாமல், ஏதோ பெண்களைக் கவர, பத்திரிகை நடத்துகிறேன் என்று பீற்றிக் கொள்கிறாய்?” என்றார் உரத்தக் குரலில்.
கைலாஷுக்கு திடீரென்று, இந்த மாதிரிக் கிறுக்குகள் பிடிப்பதுண்டு. மாமியாரின் உபயமோ, கைங்கர்யமோ இதில் நிச்சயம் இருக்கும். என் பதிலைக் கூட எதிர்பார்க் காமல், அவரே மேலே தொடர்ந்தார்.
“”ப.கு.சி.கு.கை.ரா…ன்னா என்ன தெரியுமா? பத்தமடை பரமசிவ ஐயரின் குமாரன், குளத்து ஐயரின் பிள்ளை சிவராமனின் மகன், குளத்து ஐயரின் புத்திரன் கைலாசத்தின், ஒரே மகன் ராமகிருஷ்ணனுக்கு, இந்தப் பாத்திரம் சொந்தம் என்று! என் அப்பா ராமகிருஷ்ணனின் மகன் நான் கைலாசம்… ஆக, அந்த போகிணி ஆறு தலைமுறையாக, எங்கள் குடும்பத்தில் பயன்பட்டு வருகிறது. நான் ஏழாவது தலைமுறை.”
கால் காசுக்குப் உபயோகமில்லாத, இந்த மாதிரிப் பாத்திரங்களை, எங்காவது வீசி எறிவதை விட்டு, என்னவோ, பெரிய குடும்ப மரத்தின் வேரிலிருந்து, நுனி இலை வரை, என்ன பெரிய ஆராய்ச்சி என்று மனசுக்குள் தோன்றினாலும், “”சரி இருந்துட்டு போகட்டும்… அதற்கென்ன?” என்றேன்.
“”என்ன சரளா இப்படி அலட்சியமா பேசற… ஒவ்வொரு திவசத்திற்கும், அம்மா அதில்தானே பாயசம், செய்வாங்க.”
“”சரி… வேற வாங்கிக்கலாமே, அது எங்க போச்சோ,” என்றேன் நான் அலட்சியமாக.
அதற்குள் மாடிக்கு வந்த என் மாமியார், “”நல்லா இருக்கே நீ பேசறது… தலைமுறை, தலைமுறையா வர்ற சொத்து அது. போன வாரம் சிரார்த்தம் முடிஞ்”, எல்லாப் பாத்திரத்தையும் தேச்சு கழுவி வச்சபோது, நீ எங்கேயாவது, கை தவறுதலாக வச்சிட்டியா?” என்றாள் என்னிடம்.
“இதென்ன சோதனை?’ என்று, மனசுக்குள் சொல்லிக் கொண்ட நான், “”இல்லையே அம்மா… நான் வழக்கமாக வைக்கற இடத்துலதான் வச்சேன்,” என்றேன். வாஸ்தவத்தில் எனக்கு ஞாபகமில்லை.
“”என் நண்பர் நாகநாத ஐயர் இருக்காரே, அவர்தான், “அந்தப் பாத்திரம், ஆறு தலைமுறையாக ஒருத்தர் வீட்டில புழங்கறதுன்னா அது ரொம்ப அதிசயம்… அதை எடுத்து வா பாக்கலாம்…’ என்றார். அதற்காகத்தான் நான் அம்மாவிடம் போய் கேட்டேன். அந்த திவசப் பாத்திரங்களில், இதை மட்டும் காணோம்,” என்றார் கைலாஷ்.
எனக்கு இந்த சம்பாஷணை சுத்தமாக பிடிக்கவில்லை. “குளத்து ஐயராவது… பாத்திரமாவது; யார் எங்கே வைத்தார்களோ! அதில் என்ன இந்த பொழுது போகாத நாகநாத ஐயருக்கு பார்வை… அப்படி என்ன அந்த பாத்திரம், சரித்திரப் புகழ் வாய்ந்தது?’ என்று உள்ளுக்குள் பொருமிக் கொண்டு, நான் ஒன்றும் பதில் பேசாமல், “”சரி… அப்புறமா தேடிப்பார்க்கலாம்,” என்றேன் பொதுவாக.
அதற்குள் என் மாமியாரே, “”ஏண்டா கைலாஷ்… நான் தான் ஒரு வேளை, சிரார்த்தத் பலகாரத்தை மாலதி குழந்தை களுக்குக் கொடுக்கட்டும்ன்னு, அந்தப் பாத்திரத்தில் போட்டுக் சிரார்த்தத்திற்கு வந்த போது அவகிட்ட கொடுத்து அனுப்பி விட்டேனோ?” என்றாள் சந்தேகத்துடன்.
எனக்கு உள்ளூர சந்தோஷம் ஏற்பட்டது. “இருக்கலாம்… மாலதியிடம் போயிருந்தால் நல்லது தான்’ என்று நினைத்துக் கொண்டு, “”அக்காக்கு போன் பண்ணிக் கேட்கலாமே?” என்றேன்.
“”வேண்டாம்… வேண்டாம்… நானே நாளைக்கு அவவீட்டுக்கு போவேன். அப்ப கேட்டுக்கறேன். ம்ஹ்ம்… நல்லா புழங்கி வந்த பாத்திரம். அதோட ஷேப் ரொம்ப அழகாக இருக்கும்… இல்லைம்மா?” என்றார் தன் தாயிடம்.
“ம்க்கும்…’ என்று மனசுக்குள் நொடித்துக் கொண்டேன் நான்.
இந்த போகிணி சமாச்சாரத்தை, நான் அன்று இரவோடு மறந்து விட்டேன். கைலாஷும் பின், அதைப் பற்றி ஒன்றும் பேசவில்லை.
மூன்று வாரங்களுக்குப் பின். நான் ஆபீசிலிருந்து வீட்டுக்கு வந்தபோது, கீழே மாமியார் இருக்கும் இடத்தில், என் நாத்தனார் மாலதியும், அவர் கணவர் கிருஷ்ணனும் அமர்ந்து, மாமியாரிடம் பேசிக் கொண்டிருந்தனர்.
“”ஓ… வாங்க அக்கா… சவுக்கியமா?” என்று விசாரித்து, படியேறிப் போன என்னை, ஏதோ புன்னகை செய்தாற் போல், பாவனை பண்ணிய மாலதி, “”கைலாஷ் வந்திருந்தான்னா மேலேயிருந்து அவனையும் கூட்டிட்டு கீழே வா,” என்றாள்.
“”கைலாஷ் வந்துட்டாரா என்ன?” என்று கேட்டபடி, மேலே போன நான், கைலாஷ் அங்கு இருப்பதைப் பார்த்து, ஆச்சரியப்பட்டேன்.
“”என்ன… இன்னிக்கு சீக்கிரம்?” என்ற போது, “”இந்தப் பக்கமாக, ஒரு க்ளையன்டைப் பார்க்க வந்தேன். அப்புறம் லேசாகத் தலை வலிக்கிறா போலிருந்தது. அதனால், வந்து விட்டேன். சரி… சூடாக, ஒரு கப் காபி கலந்து கொடு,” என்றார்.
“”கீழே அக்காவும், மாமாவும் வந்திருக்காங்க… உங்களை கூட்டிட்டு என்னைக் கீழே வரச் சொன்னாங்க,” என்றேன்.
“”அப்படியா… சரி… காபி குடிச்சிட்டுப் போகலாம்,” என்றார்.
நாங்கள் இருவரும் கீழே போன போது, ஏதோ மாலதி, எங்கள் இருவருக்காகவே காத்திருந்தது போல் இருந்தது.
“”வா வா… இப்படி உட்கார்…” என்றாள். சோபாவில், பேப்பரால் முகத்தை மறைத்துக் கொண்டிருந்த மாமா, அதைக் கீழிறக்கி, எங்களை பார்த்து புன்னகை போல் ஏதோ செய்தார்.
“”என்ன அக்கா… என்ன விசேஷம், ரவி எப்படி இருக்கிறான்… போன் செய்தானா?” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போன கைலாஷை, கையமர்த்தினாள் மாலதி.
“”இரு… இரு …நல்லா இருக்கான், அம்மா… நீயும் வா,” என்றவள், தனக்கு அருகிலிருந்த, ஒரு பிளாஸ்டிக் பையை எடுத்தாள்.
எங்கள் அனைவர் முகத்திலும், ஒரு கேள்விக் குறி. அது ஒரு பாத்திரக்கடை பை.
அதிலிருந்து சரேல் என, ஒரு பித்தளைப் பாத்திரத்தை வெளியே எடுத்து, என் மாமியாரிடம் நீட்டினாள் மாலதி.
“”இந்தாம்மா… இத வச்சுக்கோ, அன்னிக்கு கைலாஷ், எங்க வீட்டுக்கு வந்து, நீ என்கிட்ட சிரார்த்த பலகாரத்தோடு, பரம்பரை பரம்பரையா, நம் குடும்பத்தில இருக்கிற, ஏதோவொரு பாத்திரத்தை கொடுத்துட்டதா கேட்டான். வாஸ்தவத்தில், நீ அதுமாதிரி எதையும் தரல்ல. சிரார்த்த பலகாரத்தை, ஏதோவொரு பாலிதீன் பைலதான் போட்டுத் தந்த…
“”இத பார்த்துக்கோ சரளா… அம்மா உனக்கும் தான்… எனக்கொண்ணும், இந்த வீட்டிலிருந்து பாத்திரத்தை வாங்கிட்டு போய் சேர்த்துக்கணும்கற அவசியமில்லை… எனக்கு பாத்திரத்தில் எல்லாம், அதுவும் இன்னொருத்தர் வீட்டுப் பாத்திரத்தை அபகரிக்கணும்ன்னு, பத்து சதவீத ஆசை கூட கிடையாது… தெரியுமா?” என்றாள் படபடவென்று.
எனக்கு ஒரு பக்கம் சிரிப்பு; மற்றொரு பக்கம் கோபம் வந்தது. “”உங்களுக்காவது பத்து சதவீதம் தான் அக்கா… எனக்கு நூறு சதவீதம் அந்த மாதிரி ஆசையில்லை,” என்றேன் சூடாக.
“”பாத்தியாம்மா, சரளா சொல்ற பதில… அப்ப என்கிட்ட தான், அந்தப் பாத்திரத்தைத் தந்தியா? எனக்கு எதுக்கு வீண் பழின்னு, கைலாஷ் வந்து கேட்டதுமே, அவன் கிட்ட இல்லைன்ணு சொன்னாக் கூட, நேத்திக்கு, தி.நகர் போய் தேடிப் பிடிச்சு, அவன் சொன்ன மாதிரி, இந்தப் பாத்திரத்தை வாங்கிட்டு வந்துட்டேன்; இந்தா… அதுக்கு பதிலா இத வச்சுக்கோ. ஏண்டா… இப்ப திருப்தியா?” என்றாள் மாலதி, இன்னும் படபடப்புடன்.
எனக்கு கைலாஷ் மீது எரிச்சல் வந்தது. “அந்தப் பாத்திரத்தைப் போய் மெனக்கட்டு, இந்த மனுஷன் கேட்பாரோ… இது வீண் வம்புதானே!’ என உள்ளூர பொருமினேன்.
“”அடடே… என்ன அக்கா… நீ, இதைப் பெரிய குத்தமா எடுத்துக்கிட்ட… நாகநாத ஐயர், அந்தப் பழங்காலப் பாத்திரத்தைப் பாக்கணும்ன்னு கேட்டாரேங்கறதால தான், நான் அம்மாகிட்ட கேட்டுட்டு, உன்னிடம் விசாரிச்சேன்,” என்றார் கைலாஷ்.
“”அதோட இந்த பாத்திரம் மாதிரி, கண்றாவியாக இருக்காது, நம்ம வீட்டு அந்த பழைய போகிணி…” என்றார் விடாமல்.
மாலதியின் சினம் தலைக்கேறி இருக்க வேண்டும்.
“”பார்த்தியாம்மா… நான், என்மேல பழி வேண்டாம் என, கடை கடையாக ஏறி இறங்கி, தேடிப் பிடிச்சு, ஒரு பாத்திரத்தை வாங்கிட்டு வந்தால், அதை கண்றாவி என்கிறான் இவன். ஆனா, நீயும் தெரிஞ்சுக்கோ… நான் ஒவ்வொரு தரம் வரும் போதும், என் அம்மாகிட்டயிருந்து பாத்திரமா எடுத்துகிட்டு போய், என் வீட்டில் சேர்க்கிறேன் என்று நினைச்சுடாதே,” என்றாள் மாலதி.
எனக்கு வாய்விட்டுச் சிரிக்க வேண்டும் போலிருந்தது. நான் சிரித்தால், நிலைமை இன்னும் மோசமாகி விடும் என்பதால், அமைதியாக இருந்தேன்.
என் மாமியார் தான் பதில் சொன்னார்…
“”ஏண்டி மாலதி, இதையெல்லாம் தப்பா எடுத்துக்கற… எனக்கும் வர வர மறதி அதிகமாயிடுச்”… உன்கிட்ட கொடுத்தே@னான்னு தோணிச்சு, அதைத்தான் சொன்னேன்.”
மாலதி விடுவதாக இல்லை. “”உனக்கு, <உன் பிள்ளை குடும்பம்னா ஒசத்தி… இந்த மாதிரி, பழைய பீத்தப் பாத்திரங்கள் எனக்கு எதுக்கு?” என்றாள் கோபமாக.
பேப்பர் படித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன், இந்தச் சந்தர்ப்பத்தில் உள்ளே புகுந்தார்.
“”மாலதி போதும்மா… மேல வாக்குவாதம் வேண்டாம்,” என்றார்.
“”நீங்க கொஞ்சம் பேசாம இருங்க… இது எங்க வீட்டு விஷயம். நாங்க பேசித் தீர்த்துக்கறோம்,” என்றாள் மாலதி.
“”சரி விடு அக்கா… நான் உன்கிட்ட கேட்டது தப்பா?” என்றார் கைலாஷ்.
“”தப்புத்தான்… சரியா விஷயத்த தெரிஞ்சுக்காம பேசினா… நான் இப்படி ஒவ்வொரு பாத்திரமா, இந்த வீட்டிலேயிருந்து கிளப்பிட்டு போறேன்னுதானே மத்தவங்க நினைப்பாங்க?”
மாலதி, “மத்தவங்க…’ என்று குறிப்பிட்டது, யாரை என்று சொல்லத் தேவையில்லை.
இப்போது, என் மாமியாருக்கு கோபம் வந்தது.
“”சரிதாண்டி… உன்னைக் கேட்க எங்களுக்கு உரிமையில்லையா? என்னமோ காணலையே, ஒங்கிட்ட கொடுத்திருப்பேனோன்னு அவன்கிட்டச் சொன்னேன். அவனும் உன்கிட்ட வந்து யதார்த்தமா கேட்டிருக்கான். இதைப் போய், பெரிசு பண்ணிகிட்டு; நீயே இந்த பாத்திரத்தை எடுத்துகிட்டு போடி,” என்றாள் அழுத்தமாக.
என் மாமியார் ரொம்ப பொறுமைசாலி; அதிகம் வாக்குவாதம் செய்ய மாட்டார். ஆனால், கட்டாயம் பேச வேண்டுமென்றால், நன்றாக அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் பேசுவார். அது தான் நடந்தது.
அப்புறம், ஏதோ, ஒப்புக்கு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பினாள் மாலதி.
அவர்கள் போன பிறகு நானும், கைலாஷும் மாலதியின் கோபக்கனல் காட்சியை நினைத்து சிரித்து மகிழ்ந்தோம்.
அது சரி… அந்தக் காணாமல் போன, ப.கு.சி.கு.கை.ரா., பொறித்த போகிணி என்ன ஆயிற்று என்று, உங்களுக்குத் தெரிய வேண்டாமா?
போன வாரம், கைலாஷின் அத்தை விஜயாவின் வீட்டுக்கு போன போது, அவர்கள் வீட்டு ஹாலில், ஒரு மூலையில் அந்தப் பாத்திரம், ஒரு அலங்காரப் பொருளாக மாறி கொலுவிருந்தது.
கைலாஷ் அதைப் பார்த்தவுடன், “அடேடே… அத்தை… இந்தப் போகிணி, இங்க எப்படி?’ என்று அருகில் சென்றார்.
“என்னடா இப்படிக் கேக்கற… உங்க அம்மா தான், அண்ணா சிரார்த்தத்துக்கு வந்த போது, பலகாரம் போட்டு என்கிட்ட தந்தா. இங்க வந்தபின் நிஷா, இந்தப் பாத்திரத்தைப் பார்த்து, புளிபோட்டுத் தேய்ச்சுக் கழுவி, பூத்தொட்டியாக்கி, ஹாலில் வைத்து விட்டாள். அவள் தான், இப்ப கொஞ்ச நாளாக, “இன்டீரியர் டெக்ரேஷன்’ கோர்ஸ் படிக்கிறாளே… இந்த மாதிரி பழசு, பட்டையெல்லாம், ஏதேதோ கலைப் பொருளாக்கி காசாக்கலாம், அழகுபடுத்தி வைக்கலாம் என்று அலைகிறாள்,” என்றாள் விஜயா.
கைலாஷ் மிகுந்த வாஞ்சையுடன், அந்தப் பாத்திரத்தை எடுத்து, அதில் பொறித்திருந்த எழுத்துக்களைப் படித்து, அதை பற்றி, விஜயா அத்தையிடம் விளக்க ஆரம்பித்தார்.
ஆக, அந்த பாத்திரத்தை, தன் நாத்தனாரிடம் கொடுத்து விட்டு, என் நாத்தனாரிடம் கொடுத்ததாகச் சொல்லி, ஒரு காமெடி நாடகத்தை@ய அரங்@கற்றி விட்டார் என் மாமியார்.
“”அந்த நாகநாத ஐயரை, இங்க கொண்டு வந்து காட்டுங்க. மாலதி அக்காகிட்டயும் மறக்காம சொல்லுங்க,” என்று என் கணவரிடம் சொன்னேன்.
அடுத்த இதழிலிருந்து, பழைய பாத்திரங்களின் புதிய உபயோகம் என்று, ஒரு கட்டுரை எழுதலாம் என முடிவு செய்திருக்கிறேன்.
மறக்காமல் அடுத்த மாத இதழை வாங்கி படித்துப் பாருங்கள்.
– ஜனவரி 2012