ஒப்பந்தம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 10, 2013
பார்வையிட்டோர்: 7,983 
 

“ சார் இந்தாங்க சாவி … வீட்டை ஒரு தரம் பார்த்துக்கங்க… “ முகத்தில் கடுகளவும் இனிமை காட்டாமல் சாவியை கொடுத்து விட்டு போனான் சுரேஷ்.

அவர்கள் மேல் போர்ஷனுக்கு வந்து ஐந்து மாதம்தான் ஆகியிருக்கும்.. அதற்குள் காலி செய்து விட்டார்கள்.. இந்த ஒரு வருடத்தில் மூன்று பேர் மாறிவிட்டார்கள். வாடகைக்கு குடி வருபவர்களிடம் எல்லாம் அம்மா காரணமே இல்லாமல் சண்டை பிடிக்கிறாள்…

… சார் காலையில் ஆபிஸ் கிளம்பும் போதும், வீட்டுக்கு வந்தவுடனயும் எங்க மிசஸ்கிட்ட உங்கம்மா கடு கடுன்னு மூஞ்சை காண்பிக்கறாங்க.. வாசலை சரியா கூட்டலை, மாடிப்படியை அலம்பலைன்னு..

இப்படியே வாரத்துக்கு நாலு நாள் புகார்கள். இருக்கும் வேலையில் அவனுக்கு இது வேறு தலைவலியாய் இருந்தது… என்ன செய்வதென்றே புரியவில்லை திவாகருக்கு.

அப்பா இருக்கும் போதெல்லாம் அம்மா அப்படி இல்லை. அப்பா போனபிறகு இந்த ஒரு வருடமாய்த்தான் அம்மா ரொம்ப மாறிவிட்டாள். எப்போதும் கடுகடுப்பாய் பேசி குடி இருப்பவர்களிடம் வம்பு இழுப்பதும். தண்ணீர் மோட்டார் ஸ்வீட்ச்சை ஆப் செய்து தண்ணீர் விடாமல் இருப்பதும், வண்டி விட முடியாமல் சீக்கிரமே வராண்டாவை பூட்டிக்கொள்வதுமாய் குடித்தனக்காரர்களை படாத பாடு படுத்தி கொண்டிருந்தாள்.

“ என்னங்க ‘டூ லெட் ‘ போட்டு இருபது நாளாச்சி ரெண்டு போர்ஷனுக்கும் யாரும் வந்து கேட்கலை…மாசம் சுளையா பத்தாயிரம் நஷ்டம்… உங்கம்மாவால இந்த வீட்டுக்கு யாரும் வரமாட்டேங்கறாங்க… அவங்களை கண்டிக்கவும் மாட்டீங்க.. வயசான காலத்துல இம்சை பண்ணிக்கிட்டிருக்கு…”

அம்மாவிடம் மென்மையாக ஒரீரு தடவை சொல்லிப்பார்த்தான். “ ஆமாடா எனக்கே புத்தி சொல்ல வர்றியா..? உங்கப்பா வச்சுட்டு போன வீட்லதான் நானிருக்கேன்.. உங்க கூட நான் இருக்கறது புடிக்கலைன்னா சொல்லிடுடா.. பென்ஷன் இருக்கு நான் தனியா சாப்பிட்டுக்கறேன்.. “

அதற்கு மேலும் அம்மாவிற்கு சொல்ல முடியாது. எதை சொன்னாலும் தப்பாகவே எடுத்துகொள்கிறாள். அவனை விட்டால் அம்மாவிற்கு யாரும் கிடையாது. அம்மாவை விடமுடியாது… என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருந்தான்.

மறு நாள் வீட்டு தரகரிடம், “ வாடகை ஐனூறு ரூபாய் குறைச்சு கேட்டாலும் பரவாயில்ல.. நல்ல குடும்பமா வயசான பெத்தவங்களை வச்சிருக்கவங்க பேமிலியா பார்த்து விடுங்க….”

“ என்னங்க.. எந்த பிரச்சினையும் இருக்கக்கூடாதுன்னு கணவன், மனைவி வேலைக்கு போற ரெண்டு பேரா பார்த்துதானே வீட்டை விடுவோம்.. இப்ப ஏன் நிறைய பேர் இருக்கற மாதிரி பார்க்க சொல்றிங்க.. அப்புறம் வீடு பாழாகியிடும்…”

“ மாலதி… வீடு பாழாவறதை பத்தி விடு.. பெயிண்ட் அடிச்சி மாத்திக்கிடலாம்… நம்ம நிம்மதி பாழானா சந்தோஷமா இருக்க முடியுமா? ஒண்ணை கவனிச்சியா… அம்மா இதுக்கு முன்னாடி எல்லாம் யார் வம்புக்கும் போகமாட்டா… அப்பா போன பிறகு தான் இப்படி. நீயும் நானும் வேலைக்கு போயிடறோம். நம்ம குழந்தையும் ஸ்கூலுக்கு போயிடறா. குடித்தனக்காரங்களும் காலையில் போனா இராத்திரி எட்டு மணி போல வர்றாங்க. யாரும் முகம் கொடுத்து பேசறதில்ல…அம்மா எவ்வளவு நேரம்தான் டி.வி பார்ப்பா? பொழுதுக்கும் தனிமையா இருக்கிற வருத்தம் கூட கோபமா மாறி யார்கிட்டயோ பாயறாங்க. வயசான ஆளுங்க வீட்ல இருந்தா.. பொழுது போக அம்மாவும் அவங்களோடு பேசிக்கிட்டிருப்பாங்க .. அவங்களுக்கும் ஒரு துணையா இருக்கும்.. அதான் நம்ம கண்டிஷனை மாத்திக்கிட்டேன்..”

– இக்கதை ராணி இதழில் “நிபந்தனை” என்ற பெயரில் வெளியாகியுள்ளது (செப்டம்பர் 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *