கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 8,096 
 

அன்று ஏகாம்பரம் வீட்டில் ஏகக் கூட்டம். ஏகாம்பரத்தின் மகன் ரவிக்கு மூன்று வயதாகிறது. பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். நண்பர்கள் கூட்டம். வீடு நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

ஏகாம்பரத்தின் மனைவி ஜலஜா அங்குமிங்கும் ஓடியாடி, வந்தவர்களை கவனித்து உபசரித்துக் கொண்டிருந்தாள்.

ஏகாம்பரம் அடிக்கடி ஏதோ ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டிருந்தான். ஜலஜா அவனை நெருங்கி, “என்ன யோசிக்கிறீர்கள்?” என்று கேட்டாள்.

“ஜலஜா, என்னால் தாங்க முடியவில்லை.”

“என்ன?” என்றாள் ஜலஜா.

“ஒண்ணே ஒண்ணு கொடேன்!”

“ஸ்… வேண்டாம்! பேசாமல்இருங்கள்.”

“ப்ளீஸ், ஜலஜா! ஒண்ணே ஒண்ணு.”

“இத்தனை நண்பர்கள் வந்திருக்காங்க… என்ன நினைப்பாங்க. அதெல்லாம் வேண்டாம்!”

“அவங்க என்ன நினைச்சாலும் பரவாயில்லை, ஒண்ணே ஒண்ணு…”

“ஐயோ! உங்களுக்கு வயசாகறதேயழிய… சே..!”

“அப்படி என்ன வயசாயிடுச்சு! முப்பத்தஞ்சுதானே… ஒண்ணே ஒண்ணு… ப்ளீஸ், ஜலஜா!”

“எல்லார் எதிரிலேயுமா? இங் கேயேவா? கஷ்டம்!”

“ரவிக்கு மட்டும் எல்லார் எதிரிலேயும் கொடுக்கறியே?”

“உங்கள் கேள்வி உங்களுக்கே நல்லா இருக்கா? அவன் சின்னப்பையன். நீங்க அப்படியா?”

“பரவாயில்லை, வெக்கப்படாம ஒண்ணே ஒண்ணு குடு ஜலஜா… யாரும் பார்க்க மாட்டாங்க!”

“ஒருவேளை பார்த்துட்டா என்ன பண்றது?”

“அப்போ, ஏதோ காரியமாப் போற மாதிரி அந்த சமையல் கட்டுக்குப் போயிடலாம்!”

“அய்யய்யோ..! நான் மாட்டேன். அங்கே என் சிநேகிதிகள்ளாம் நின்னுட்டிருக்காங்க. பார்த்துட்டா கேலி பண்ணுவாங்க.”

“கடவுளே! சரி… தோட்டம்?”

“ஊஹும்..! அங்கே ரவி, தன் ஃபிரண்ட்ஸோட விளையாடிக்கிட்டிருக்கான்!”

“அப்போ… கிடையவே கிடை யாதா?”

ஜலஜா, தன் கணவனின் ஆவ லைத் தணிக்கமுடியவில்லையே என்று ஏக்கத்தோடு அவனைப் பார்த்தாள்.

“ஜலஜா… அதோ பாரு! எல்லாரும் அந்தப் பக்கம்தான் பார்த்துட்டிருக்காங்க. நம்ப ரெண்டு பேரையும் யாருமே கவனிக்கலை. சீக்கிரம் ஒண்ணே ஒண்ணு கொடுத்துடு! யோசிக்காதே” என்று அவசரப்படுத்தினான் ஏகாம்பரம்.

ஜலஜாவும் துணிந்துவிட்டாள். கையிலிருந்த கம்மர்கட்டுகளிலிருந்து ஒன்றை எடுத்து, அவன் வாயில் போட்டாள். ஏகாம்பரம் ஆவல் தாங்காமல் அதை மென்று ருசித்தான்.

ஜலஜா பேசினாள்… “இதோ பாருங்க, இன்னியோட இந்த கம்மர்கட் ஆசையை விட்டுடுங்க. இத்தனை வயசுக்குப் பிறகும் கம்மர்கட் திங்கிறதை யாராவது பார்த்தா, அவமானம்!”

“அதுக்குத்தானே ரகசியமா கேட்டேன்” என்றான் ஏகாம்பரம். அவன் முகத்தில் அசடு வழிந்தது.

– ‘சோ’ விகடனில் 1970-இல் எழுதிய மூன்றாம் நவரச(!)க் கதை ( கவர்ச்சிக் கதை).

Print Friendly, PDF & Email

பார்வை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2023

தந்தை யாரோ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *