‘எப்படிங்க உங்களால இப்படி இருக்கமுடியுது? அதப்பத்தி உங்களால பேச முடியலனா உங்க தம்பிகிட்ட நா பேசுறேன். நாம எப்படிங்க சும்மா இருக்கமுடியும்? நீங்க ஒன்னும் பெரிய பணக்காரன் இல்ல. உங்களுக்கும் நாலு பிள்ளங்க இருக்கு. மூத்த பொண்ணுக்கு நிச்சயமும் ஆயிடிச்சி. கல்யாணம் பண்ணனும். அடுத்தவன் ஆஸ்திரேலியாவில் படிச்சிகிட்டு இருக்கான். எவ்வளவு செலவு இருக்கு. அது உங்க பணங்க. அத கேட்க ஏங்க இவ்வளவு யோசிக்கிறீங்க?’
காயத்ரி வைத்த கண் வாங்காமல் அவனைப்பர்த்து நின்றாள். அவள் கணவன் பதில் எதுவும் பேசாமல் மௌன சாமியாராக அமர்ந்திருந்தான். அவளுக்குக் கோபம் கோபமாக வந்தது.
‘உங்க இடத்துல நா இருந்திருந்தேனா எப்பவோ அந்தப் பணத்த நா கேட்டு வாங்கிருப்பேன். அது உங்க சொத்துங்க. உங்க அம்மா உங்க பங்காக உங்களுக்குக் கொடுத்ததுங்க. அத ஏங்க உங்க தம்பி வச்சிருக்காரு? அவருகிட்ட ஏங்க கொடுத்து வச்சிரிங்கீங்க? உங்க பேங்ல போட்டிருக்கலாமே. வட்டியாவது வரும். நீங்க ஏன்தான் இப்படி இருக்கீங்கனு எனக்குத் தெரியல.’
காயத்ரியின் குரல் முன்பைவிட வேகமாக இரைந்தது.
‘அம்மா, பேச்ச நிப்பாட்டுறீங்களா? அப்பாவுக்கு தெரியும்மா. நீங்க ஏம்மா எப்பப்பாத்தாலும் தொணதொணன்னு அதப்பத்தியே பேசிக்கிட்டு இருக்கீங்க? அவரோட பணம். அவரோட இஷ்டம்மா. நீங்க இப்படி கத்திகிட்டு இருக்குறதால அந்தப் பணம் நம்ப வீட்டு வாசல்ல வந்து ஒன்னும் கொட்டப்போறதுல்ல.’
மூத்த மகள் சந்தியா மெதுவாக முணுமுணுத்தாள்.
‘நீயும் உங்க அப்பா மாதிரியே பேசு. உங்க சித்தப்பாவ பாரு. கொண்டோ வீடு. பி.எம்.டபிள்யூ. காடி. ஒவ்வொரு பள்ளி விடுமுறைக்கும் பிள்ளங்கள கூட்டிக்கிட்டு வெளியூருக்கு போறாங்க. அத வாங்குறாங்க. இத வாங்குறாங்க. ஆனா நாம எப்படி இருக்கோம்? பக்கத்துல இருக்குற ஜோகூருக்குக்கூட போகமுடியல. எப்பக்கேட்டாலும் உங்க அப்பாக்கு ஒரே பல்லவிதான். காசு இல்ல. காசு இல்ல. நா கத்தாம என்ன செய்வேன்? ஒரு காசா ரெண்டு காசா. அஞ்சி லட்சம்டி. ரத்தமெல்லாம் கொதிக்குது. தம்பி பாவிக்கட்டும்னு கொடுத்து வச்சிருக்காராம். ஊருஉலகத்துல இப்படி யாராவது இருப்பாங்களா?’
‘அதான் இருக்காரே உங்க புருஷன்.’
அம்மாவுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்லிவிட்டு தன் அறைக்குள் நுழைந்தாள் சந்தியா.
காயத்ரியின் கிண்டலும் நக்கலுமான பேச்சுகளில் சில நேரங்களில் அதை சொல்லிவிடலாமா என்று அவன் நினப்பதுண்டு. நாளாக ஆக அவளின் இந்தப் போக்கு அவனுக்கு எரிச்சலூட்டியது. அதனாலேயே சில சமயங்களில் அதிக நேரம்கழித்தே வீடு திரும்புவான். இவன் நேரம் கழித்து வீடு வரும் போதெல்லாம் அவன் கூடுதல் நேர வேலை செய்துவருவதாகவே காயத்ரி நினைத்திருப்பாள். சில வேளைகளில் தான் பணிபுரியும் அலுவலகத்தின் மலேசியாவின் கிளை அலுவலகங்களுக்குச் செல்வதாகக் கூறி பல நாட்கள் வீட்டிற்கு வராமலேயே இருந்து விடுவான்.
காயத்ரி அவன் மேல் முழுநம்பிக்கை வைத்திருந்தாள். ஒவ்வொரு மாதமும் $1500 வெள்ளியை அவள் கையில் கொடுத்து விடுவான். வீட்டுச் செலவு, தண்ணீர், மின்சார கட்டணம் என அனைத்து செலவுகளையும் அவன் கொடுக்கும் பணத்தை வைத்துக்கொண்டு சமாளித்துவிடுவாள். திருமணமான புதிதில் வீட்டுச் செலவுக்கு மாதம் ஒன்றுக்கு $200 மட்டுமே கொடுத்தவன் இந்த 29 ஆண்டுகளில் $1500 வரை இப்போது கொடுக்கின்றான். சில மாதங்களில் கூடுதலாகவும் கொடுப்பதுண்டு.
மூத்த மகள் சந்தியாவிற்கு 28 வயதாகிறது. இந்த டிசம்பர் மாத ஆரம்பத்தில் திருமணத்தை முடித்துவிட வேண்டுமென மாப்பிள்ளை வீட்டார் முடிவாகக் கூறிவிட்டனர். திருமணத்துக்கு நிறைய செலவாகும். கணவனிடம் கூடுதலாகக் கொஞ்சம் பணம் கேட்டால்,
‘எங்கிட்ட எங்கிருக்கு? எனக்கே பத்தமாட்டுது. நா வீட்டுக்காசு கட்டனும், காடி காசு கட்டனும், ஆஸ்திரேலியாவில் படிக்கிற பையனோட படிப்பு செலவ பாத்துக்கனும், உனக்கு வீட்டுச் செலவுக்குக்குக் கொடுக்கனும்’,
என சாக்குபோக்குச் சொல்லி அமைதியாக இருந்து விடுவான். கேட்டு கேட்டு சலித்துப்போனவள் பின் அதைப்பற்றி பேச்செடுப்பதில்லை. ஆனால் சந்தியாவின் கல்யாணச் செலவை நினைத்தால்தான் அவளுக்கு வயிற்றில் புளியைக்கரைத்தது. திருமண வரவேற்பை விமரிசையாக கல்சாவில் வைக்கவேண்டும், விலையுயர்ந்த பட்டுப்புடவை, புதிய டிசைன் நகைகள் வாங்கி போட்டுக்கொள்ள வேண்டும், திருமண நிகழ்வுக்கு வருகின்றவர்களுக்கு நல்ல நினைவுச் சின்னங்கள் வழங்கவேண்டும் என பல மனக்கோட்டைகளைக் கட்டிக்கொண்டிருந்தவளுக்கு கணவனின் போக்கு பேரிடியாக விழுந்தது.
‘ஏங்க உங்க தம்பிகிட்ட இருந்து உங்க காச நீங்க வாங்கலனா, சந்தியாவோட கல்யாணத்தை கல்சாவுல நடத்த முடியாது. என்னோட மகளோட கல்யாணம் புளோக் கீழே நடக்கறத நா விரும்பல. ஸ்டென்டட்டாக இருக்காது. யாருங்க நம்மள மதிப்பா?’
அவள் கணவன் அமைதியாக இருந்தான். புளோக் கீழே கல்யாண விருந்து வச்சா என்ன குறைந்திடபோவுது. மனசுக்குள் நினைத்துக் கொண்டான். அவன் கல்யாணமும் புளோக் கீழ தான் நடந்தது. காயத்ரி அப்படித்தான். எதிலும் ஆடம்பரம். வீண் செலவு. பிறர் மெச்சிக்க வாழ ஆசைபடுபவள்.
திருமணமான புதிலில் அவள் வீட்டாரிடம் அவனைப்பற்றி பெருமிதமாகவே பேசுவாள். அவன்தான் சிறந்தவன், வல்லவன், எம்புருஷன் மாதிரி யாருமில்ல என புகழ்ந்து தள்ளுவாள். அவன் அம்மாவிற்கு ஜோகூரிலும் மலாக்காவிலும் பூர்வீகச் சொத்துகள் அதிகமாகவே இருந்தன. அம்மா இறந்த பிறகு அச்சொத்துகள் ஆளுக்கு ஐந்து லட்சமாக அவனுக்கும் அவன் தம்பிக்கும் வந்து சேர்ந்தன.
அவன் தம்பி மனோகரன் வசதியாக வாழ்கிறான். இரண்டு மாதத்திற்கு முன்புதான் ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரையோரம் ஒரு கோண்டோவை $2 மில்லியனுக்கு வாங்கினான். அந்த வீட்டின் கிரஹப்பிரவேசத்திற்குச் சென்ற போது காயத்ரி வாயடைத்துப்போனாள். வீட்டின் ஆடம்பரம் அவளைத் திக்குமுக்காட வைத்தது. ஏதோ ஒரு சொர்க்கபுரியில் தவழ்வதுபோல் உணர்ந்தாள். மனோகரின் மனைவியிடம் வீட்டில் மாட்டியிருந்த திரைச்சீலைகளின் விலையைப்பற்றி விசாரித்தாள். தரையில் விரிக்கப்பட்டிருந்த அரபு நாட்டு கம்பளத்தின் விலையைப்பற்றி விசாரித்தாள். ஐந்து கதவுகொண்ட ஐஸ் பெட்டியின் விலையைப் பற்றி விசாரித்தாள். வீட்டின் வரவேற்பரையிலும் அறைகளிலும் இருந்த அகன்ற தொலைக்காட்சிப்பெட்டிகளின் விலையையும் விசாரித்தாள்.
‘ஆமாம் உங்களுக்கு பூர்வீகச்சொத்து நிறைய இருக்குது, நீங்க ஆசைப்பட்டதெல்லாம் வாங்கலாம்’, என்றாள் ஆதங்கத்துடன்.
அன்று வீட்டிற்கு வந்தவுடனேயே, அவன் அம்மா அவனுக்குக் கொடுத்த ஐந்து லட்சத்தைப் பற்றி கேட்டு நச்சரிக்க ஆரம்பித்து விட்டாள். நான்தான் அவனை முதல்ல பயன்படுத்திக்கச் சொன்னேன் என ஒரே வரியில் பதில் சொல்லிவிட்டு போய்விட்டான்.
மனோகரன், தன் கணவனின் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்கிறான் என காயத்ரி வயிறு எரிந்து கொண்டிருந்தாள். கணவனின் சகோதரன் கொண்டோவில் வாழ தான் இன்னும் ஜூரோங் பகுதியில் ஐந்து அறை எச்.டி.பி. புளோக்கில் 15 ஆண்டுகளாக வாழ்வது அவளுக்கு மேலும் எரிச்சலை ஏற்டுத்தியது. திருமணமான புதிதில் அவளும் மூவறை வீட்டில்தான் வசித்து வந்தாள். முன்பைவிட வாழ்க்கை தரம் உயர்ந்திருந்தாலும் மனோகரனின் குடும்பம் வாழும் அளவுக்கும் வசதிக்கும் இல்லையே என மனம் குமுறினாள்.
‘இந்த வாரத்துல நானே உங்க தம்பிகிட்ட கேட்கப் போகிறேன். இனியும் என்னால பேசாம இருக்க முடியாது. உங்க காச நீங்க திரும்ப வாங்குங்க. இல்ல நா கேட்கப்போகிறேன். எனக்கு இதுக்கு மேலயும் உங்க கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல. உங்களால முடியலன பேசாம இருங்க. நான் உங்க தம்பிகிட்ட கேட்கிறேன்’.
‘என் தம்பிகிட்ட கேட்கிற வேலையெல்லாம் வச்சிக்காத. அது உன்னோட பணமில்லை. உனக்கு அதுல எந்த உரிமையும் இல்லை. அந்தப் பணம் உனக்குத் தேவையுமில்லை. மாதம்மாதம் $1500 வெள்ளி உனக்குக் கொடுக்குறேன். பத்தாத உனக்கு. ஐந்து ரூம் வீடு இருக்கு, தோயோதா எஸ்திமா கார் இருக்கு. இது போதாதா உனக்கு? இல்ல நம்ப பிள்ளைங்க சாப்பாட்டுக்கு வழி இல்லாம இருக்காங்களா? இல்ல யாருக்காவது வைத்தியம் பார்க்க பணம் இல்லாம இருக்கோமா? இல்லையே. ஏன் காசு காசுன்னு இப்படி பேயா அலையிற? உன்னோட இஷ்டத்துக்கு ஆடுற வேல எல்லாம் என்கிட்ட வெச்சிக்காத. இஷ்டம்னா வாழு, இல்லனா வெட்டிட்டுப் போ, புரியுதா?’
இதுநாள் வரை அமைதியாக இருந்தவன் இன்று கொடிய நாகமாய்ச் சீறினான். இது நாள் வரையில் அவன் இப்படி கோபப்பட்டு காயத்ரி பார்த்ததே இல்லை. அதிர்ச்சியில் ஒன்றுமே பேசாமல் விறுவிறுவென்று தன் அறைக்குப் போய்விட்டாள்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, அவன் வீட்டை விட்டு கிளம்பினான். அம்மாவிடம் சண்டை போட்டுக்கொள்ளும் போதெல்லாம் அப்பா இப்படி கிளம்பிப் போவதைப் பல தடவை சந்தியா பார்த்திருக்கிறாள். வீட்டு உடையில் இருந்த அவளின் அம்மாவும் திடீரென வேறு உடை உடுத்திக்கொண்டு அறையிலிருந்து வெளியே வந்தது சந்தியாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
‘அம்மா எங்கமா கிளம்பிட்டீங்க?’
அறக்கப் பறக்க கலவரத்தோடு தென்பட்ட அம்மாவைக் கேட்டாள்.
‘ம் .. ஆ.. எனக்கு முக்கியமான வேலை இருக்கு. சோறு, கறி எல்லாம் இருக்கு. சுட வைத்து சாப்பிடுங்க. வெளிய போய் வாங்கி சாப்பிடாதீங்க தெரியுதா!’
சொல்லிவிட்டு வெளியேறினாள் காயத்ரி.
சாலைக்கு வந்தவள் ஒரு டக்சியை நிறுத்தி,
அந்தச் சில்வர் கலர் காரான தோயோதா எஸ்திமாவை பின் தொடரச் சொன்னாள். அவளுக்குத் தெரியும். அவள் கணவன், மனோகரின் வீட்டுக்குத்தான் செல்வானென்று. இவளிடம் சண்டை போட்டுக்கொண்டு கோபித்துக்கொள்ளும் போதெல்லாம் அவன் தன் தம்பி வீட்டுக்குச் செல்வதாகத்தான் கூறியிருக்கிறான். இன்று கணவனுக்குத் தெரியாமல் அவனைப் பின் தொடர்ந்து செல்லவேண்டும் என முடிவெடுத்துவிட்டாள். கணவனுடன் வராமல் தனியாக அவன் பின்னாலேயே வருவதால் மனோகரனுக்குப் புரிந்து விடும். ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் வந்திருக்கிறாளென்று. இன்று என்ன நடந்தாலும் சரி தன் கணவனுக்குச் சேர வேண்டிய அந்த ஐந்து லட்சத்தைப் பற்றி கேட்டே ஆகவேண்டும் என மனசுக்குள் தீர்க்கமாய் முடிவெடுத்துக்கொண்டாள்.
முன்னால் சென்றுகொண்டிருந்த எஸ்திமா, ஈஸ்ட் கோஸ்ட்டுக்குச் செல்லும் விரைவுச்சாலையில் செல்லாமல் அருகில் இருந்த கிளை சாலையொன்றில் நுழைந்தது.
காயத்ரிக்கு வியப்பாகவும் குழப்பமாகவும் இருந்தது. அது ஒரு தரைவீடுகள் அடங்கிய புதிய குடியிருப்புப் பகுதி. அவள் கணவன் ஓட்டிச்சென்ற கார் ஒரு வீட்டின் முன் நின்றதும், அந்த வீட்டின் தானியங்கி கேட் மெதுவாகத் திறக்க ஆரம்பித்தது. காயத்ரியின் மனம் திக்திக் என வேகமாய் படபடத்தது. உடம்பெல்லாம் வியர்க ஆரம்பித்திருந்தது.
அவள் கணவன் காரிலிருந்து இறங்குவதற்கும் வீட்டிலிருந்து ஒரு சிறு குழந்தை ஓடிவந்து அவன் கால்களைக் கட்டிக்கொள்வதற்கும் சரியாக இருந்தது. அக்குழந்தையைப் பார்த்ததும் அவன் முகமெல்லாம் புன்னகைப் பூக்களால் நிறைந்தது.
வீட்டின் வாசற்படியில் ஓர் இளம்பெண்ணின் உருவம் நிழலாடியது. சிவப்பு வண்ண டீ சட்டையும் குட்டையான ஸ்கேர்ட்டும் அணிந்திருந்தாள். அருகில் வந்தவள் தோள்மீது கைபோட்டு, அவளை அணைத்துக் கொண்டும் குழந்தையைத் தூக்கிக்கொண்டும் அவன் வீட்டினுள் நுழைந்தான்.
சில விநாடிகளுக்குள் அந்த மூன்று மாடி தரைவீட்டின் விலையுயர்ந்த வாசற்கதவு மூடிக்கொண்டது. தானியங்கி கேட்டும் தானாக மூடிக்கொள்ள மெல்ல நகர்ந்தது, அந்தச் சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த காயத்ரியின் பார்வையில் மங்கலாய்த் தெரிந்தது.
this story will contineu…