ஐந்தும், ஆறும்

0
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 5,229 
 
 

“சந்தியா, உங்கம்மா சொன்னது ஞாபகம் இருக்குல்லே. சும்மா அழுதுக்கிட்டு இருக்கக்கூடாது. சரியா? சின்ன சின்ன வேலை வேணா செய்யி. பத்து நாளுக்கு மெஸ்ல இருந்து சாப்பாடு வரும். நேரத்துல சாப்பிடு. டேப்ளட்ஸ் மறக்காம போட்டுக்கிட்டு நல்லா தூங்கு.. என்கிட்ட டூப்ளிகேட் சாவி இருக்கு. புரூட்ஸ், ஜூஸ் ப்ரிஜ்ல இருக்கு.. டாண்ணு அஞ்சு மணிக்கு வந்துடரேன். சரியா? நைட்க்கு மாவு இருக்கு. இட்லியோ தோசையோ செஞ்சிக்கலாம்” அருண் சொன்னதற்க்கு எல்லாம் தலையை ஆட்டிவிட்டு கதவைச் சாத்திட்டு, திரும்புபோது, எதிரில் இருந்த போஸ்டரைக் காணவில்லை. அருண் எடுத்துவிட்டிருப்பார்.

பாண்டிபஜாரில் ஆசையாய் வாங்கிய போஸ்டர். ஏழெட்டு குழந்தைகள், வரிசையாய் உட்கார்ந்திருக்கும். கைகள் என்னையறியாமல் அடி வயிற்றைத் தடவின. மூக்கால் சாணுக்கு வந்து விழுந்த நாற்பது நாள் ரத்த பிண்டம்! என் குழந்தை ஆணோ பெண்ணோ முதல் வாரிசு. கண்ணில் முட்டிக் கொண்டு வந்தது கண்ணீர். வந்தது. சமாளித்துக் கொண்டு எழுந்தால், சோபாவில் கிடந்த துணிகளை மடித்து அலமாரியில் வைத்தேன்.

அருண் ஓரளவு வீட்டை சுத்தமாகவே வைத்திருந்தார். ஜன்னலை திறக்கவே மாட்டாரா? திறந்ததும் மூன்றாவது மாடி, காற்று சுகமாய் அடித்தது.

போன் அடித்தது. அம்மா! கேட்டதற்கு பதில் சொல்லிவிட்டு போனை வைத்தேன்.

சமையலறை கைத்துடைக்கும் துணியை அலசிவிட்டு, காயப்போட பால்கனி கதவை திறக்கும்பொழுது, விருட் என்று ஒரு காக்கா பறந்து போனது. அந்த வேகத்தில் அங்கு சாய்த்து வைத்திருந்த ஒட்டடை கொம்பு கீழே விழுந்தது. அதை நிமிர்க்கும் பொழுதுப் பார்த்தால், தேங்காய் நாரால் ஆன அந்த ஒட்டடை கொம்பில் பாதி நாரைக் காணவில்லை.

கொடியில் துணியைப் போட்டுவிட்டு, காக்காகள் கரையும் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தால், பக்கத்தில் இருந்த அத்தனை தென்னை மரங்களிலும் புதியதாய் நிறைய கூடுகள். ஒரு கூடு மட்டும் நன்றாக தெரிந்தது. இது என்ன சீசனா?

என்னை மறந்து சுவாரசியமாய் பார்த்துக் கொண்டு இருந்தேன். ஆணுக்கும் பெண்ணுக்கும் நன்றாக வித்தியாசம் தெரிந்தது. பெண்ணுக்கு கொஞ்சம் சோகையான நிறம். எல்லா உயிரினங்களிலும் ஆண்தானே அழகு!

போன் சத்தம், அருணாக இருக்கும். அருணேத்தான். காக்கா கதையை ஆரம்பித்ததும், அருண் சிரிப்பது கேட்டது. வழக்காமான அறிவுரைகள்., கொஞ்ச நேரம் தொலைக்காட்சி, புத்தகம் என்று நேரத்தைப் போக்கிவிட்டு. சாப்பிட்டு விட்டு, மாத்திரைப் போட்டுப் படுத்தால், கண்ணை திறக்கும்பொழுது மணி அஞ்சாயிருந்தது.

அருண் வரும்பொழுது, நல்லவேளையாய் வெளிச்சம் இருந்தது. கையைப் பிடித்து இழுத்துக் கொண்டுப் போய் காக்கா கூடுகளைக் காட்டினேன். கூட்டை பார்க்க வேண்டுமே, பஞ்சு, சுள்ளிகள், ஒயர் பிறகு ஒரு ஹேங்கர் கூட தொங்கியது. துணி உலர்த்தும் கிளிப் கூட இருந்தது.

“வேடிக்கைப் பார்க்கிறென்னு சும்மா நிக்காதே சந்தியா. வீக்னஸ்ல காலு வலிக்கும்” தலையை ஆட்டினேன்.

மறுநாள் பார்த்தால் பால்கனியில் ஒரு நாற்காலி. அருணின் அக்கறை, மனசுக்கு இதமாய் இருந்தது. கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு அவ்வப்பொழுது பார்க்க, பார்க்க சுவாரசியமாய் இருந்தது.

சாயந்தரமானால் இவைகள் போடும் சத்தம் காதை பிளக்கும். இரண்டே நாட்களுக்கு பிறகு பார்த்தால் இந்த பக்கம், அந்த பக்கம் நகராமல் இருபத்திநாலு மணி நேரம் அடைக்காத்துக் கொண்டிருந்தது தாய். சில சமயம் தந்தையும் உட்காந்திருக்கும். லேசான சாம்பல் நிறத்தில் முட்டைகள் கண்ணில் பட்டன.

ஒரு நாள் பார்த்தால், சின்ன சின்ன சிவப்பு செப்பு வாய்கள். உடம்பே தெரியாமல் வாயைமட்டும் திறந்துக் கொண்டு செக்க சிவந்த வாய்கள். உள்ளே எத்தனை உருப்படிகள் என்று மட்டும் என்னால் கணக்கிட முடியவில்லை. அப்பனும் ஆத்தாளும் அப்படி என்னதான் பிள்ளைகளுக்கு கொண்டு வருமோ! நாள் முழுவதும் போகும் வரும், எதையாவது கொண்டு வந்து ஊட்டிக் கொண்டேயிருந்தன. அதைக் கொடுப்பதற்குள் ஒன்றுக்கு ஒன்று முண்டிக் கொண்டு ஓரே தள்ளுமுள்ளு.

சில நாளில், குஞ்சுகள் கொஞ்சம் பறவை உருவத்துக்கு வந்திருந்தன. ஒருநாள் பார்க்கிறேன், ஒன்று தட்டுதடுமாறி வெளியே வந்து தென்னம் ஓலையில் வந்து அமர்ந்திருந்தது. ஓலையோ வழுக்கிறது. மற்ற மரக்கிளை என்றால் உட்கார செளகரியமாய் இருக்கும். தென்ன ஓலையோ கீழ் பக்கமாய் சரிந்து இல்லையா இருக்கும்? இந்த குஞ்சு சர் என்று சருக்கிவிட்டு, திரும்ப தடுமாறிக்கொண்டு நடந்து மேலே போனது. அதன் உடம்பும் நீரில் நனைந்ததுப் போல ஈரமாய் இருந்தது.

கீழே விழுந்து வைக்குமோ என்ற பயத்தில் எனக்கு பதட்டமாய் இருந்தது.

போதாக்குறைக்கு அதன் உடன்பிறப்புகள் வேண்டாம், வேண்டாம் என்று சொல்லுவதுப் போல அடித்துக் கொண்டு கத்தி தீர்த்தன. கீழே விழுந்துவிட்டால் தாய் திரும்ப சேர்த்துக் கொள்ளாது என்று பாட்டி சொன்னது ஞாபகம் வந்து என் வயிற்றை கலக்கியது. நல்லவேளையாய் ஓரே அட்டம்ண்ட்தான், திரும்ப கூட்டுக்குப் போய் விட்டது அந்த வாலு. இரண்டு நாள் கழித்துப் பார்த்தால் வெளியே ரெண்டு நிக்குதுங்க! பழைய வாலு இந்த முறை ஸ்டடியாய் நின்றிருந்தது. புதுசுங்களுக்கு ஓரே தடுமாட்டம். மற்றவை வழக்கப்படி பத்திரமாய் கூட்டுக்குள் இருந்து கூச்சலிட்டுக் கொண்டு இருந்தன. கர்ருன்னு என்று ஒரு சத்தம். திரும்பிப் பார்த்தால் ஆத்தாவும் அப்பனும் இன்னும் சிலதுக்கூட ஒரு தென்ன ஓலையில் வரிசையாய் உட்கார்ந்திருந்தன. வாத்தியாருங்க போல! இந்த சிக்னலைக் கேட்டதும், இந்த வாலு சிறகை படபடவென்று அடித்துக் கொண்டது.

சினிமா கிளைமாக்ஸ் மாதிரி ரெண்டு நிமிடம் எந்த சத்தமும் இல்லை, சட்டுன்னு இது வீர்ன்னு பறந்து பக்கத்துவீட்டு மொட்டை மாடி சுவரில் போய் உட்கார்ந்தது. கொஞ்ச நேரம் கழிச்சி அதே மாதிரி விருட்னு ஒரு டைவ், திரும்ப பழைய எடத்துக்கு.

என்னாமா டிரெயின் கொடுக்குதுங்கன்னு என்னால ஆச்சரியத்த அடக்க முடியல! திரும்பி பார்க்கிறேன் இன்னும் ரெண்டு தள்ளாடிக்கிட்டு வரிசையா நிக்குதுங்க, தென்ன ஓலை வழுவழுன்னு இருக்குமில்லையா அதுதான் வழுக்குது பாவம்!

அருண் கிட்ட, இந்த கதைங்களைச் சொன்னதும், “சே! விடியோ காமிரா இருந்தால் பிடிச்சிருக்கலாம்.” அங்கலாய்த்ததும் சரி என்ற அளவில் அவை அடிக்கும் லூட்டிகள் அத்தனை சுவாரசியமாய் இருந்தன.

அடுத்து அடுத்த நாளும் டிரெயினுங் தொடர்ந்தது. இப்ப இன்னும் கொஞ்ச தூரமாய் போயிட்டு வந்துதுங்க. பெருசுங்க கண் பார்வையிலதான் அத்தனையும். ஆனா எல்லாம் வெளிய வந்தாலும் ஒண்ணு மட்டும் வெளியே வராம கத்திக்கிட்டு கெடந்தது. கொஞ்சம் நோஞ்சான் போல தெரிஞ்சுது. மழையில நனைஞ்சா மாதிரி எப்போதும் இருக்கும்.

ஒரு நாள் நான் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே, மொதல்ல வெளிய வந்த வாலு அப்படியே வானத்துல சிறகடிச்சி பறந்துப் போச்சு. புது கேர்ல் பிரண்டு, புது வாழ்க்கைன்னு அதோட வாழ்க்கையைப் பார்த்துக்கிட்டு போயிடுச்சுப் போல!

ரெண்டொருநாள் கழித்து, துணி எடுக்க பால்கனிப் போறேன், ஒரு பெரிய பறவை! பார்த்தா கருடனா, பருந்தான்னு தெரியல, கூடு பக்கத்துல உட்கார்ந்து இருந்துச்சு. அந்த நோஞ்சான் குஞ்சு தவிர மத்ததெல்லாம் வெளியே! குஞ்சுங்க கதறுதுங்க, அதைவிட அப்பனும் ஆத்தாளும் கிடந்து தவிக்குதுங்க. கதறிக்கிட்டே கூட்ட சுத்தி சுத்தி பறக்குதுங்க. அப்ப, அந்த பெரிய பறவை அலகுல குஞ்சு தலையில ஒரு கொத்து கொத்திச்சு. என் கையும், காலும் நடுங்க ஆரம்பிச்சுது.

பால்கனியில் இருந்து கையில் கிடைத்த துணிக்குப் போடும் கிளிப்புகளை வீசு எறிஞ்சேன். அதுக்குள்ள அந்த குஞ்சு தலையில நாலு வாட்டி போட்டுடுச்சு. நான் ஒட்டடைக் கொம்பை எடுத்து தட்டியதும் அந்த பறவை பறந்தோடியது.

அப்பனும், ஆத்தாளும் குஞ்ச பொறட்டி போட்டுதுங்க. ஆனா அந்த ஒத்த குஞ்சு அப்படியே கெடக்கு. மத்துங்க மெளனமா ஓலைல ஒக்காந்திருக்குதுங்க. பெத்தது ரெண்டு சுத்தி சுத்தி வருதுங்க, அலகால அத தொடுதுங்க, கதறலா கீச்சுகீச்சு சத்தம் என் கண்ணுல தண்ணியே வந்துடுச்சு.ப்ளூ கிராஸ்க்கு போன் போடலாமா, காக்காகுஞ்சுக்கு எல்லாம் வைத்தியம் பார்ப்பாங்களான்னு யோசனையா இருந்துச்சு. மத்தவைகளும் சுத்தி உட்கார்ந்துக்கிட்டு ஓரே ஓலம்.

அப்புறம் எல்லாம் வந்து கிளையில அங்கங்க ஒக்காந்துதுங்க. அவைகளின் மெளனம், குஞ்சு செத்துப் போச்சுன்னு எனக்கு புரிஞ்சிப் போச்சு. அப்ப பெருசு ஒண்ணு பறந்துப் போய் செத்த குஞ்சு தலைய கொத்த ஆரம்பிச்சுது. மத்ததுங்களும் சேர்ந்துக்கிச்சுங்க. சில குஞ்சுகளுக்கு ஆத்தாவும், அப்பனும் அத எடுத்து ஊட்டவும் ஆரம்பிச்சுதுங்க. என்னால பார்க்க முடியலை! அவ்வளவுதானா! இதுதான் ஐந்தறிவு ஜென்மங்களுக்கும் ஆறறிவு மனுஷங்களுக்கும் இருக்கிற வித்தியாசமா? நான் அப்படியே நின்றிருந்தேன்.

“பெல் அடிச்சிப் பார்த்தும் கதவ தெறக்கலே. இந்த நேரத்துல என்ன தூக்கம்ன்னு பயந்துட்டேன். டூப்ளிகேட் சாவிய போட்டு திறந்தா, காக்கா குஞ்சுகளைப் பார்த்துக்கிட்டு இருக்கே? சந்தியா……….., நீ ஆஸ்பிடலில மூணு நாளு இருந்த இல்லே, அந்த எக்ஸ்பென்சஸ் கிளைம் பண்ணலாமாம். மிஸ்கேரேஜ் ஆனதுக்குக்கூட ரீ எம்பர்ஸ்மெண்ட் இருக்குன்னு தெரியாது. இந்த எடத்துல சைன் பண்ணு” சில தாள்களை நீட்டியதும் என்னால் தாங்க முடியவில்லை.

வேகமாய் அவர் கையில் இருந்த பேப்பர்களை பிடுங்கி கிழித்து எறிந்ததும், அதிர்ந்துப் போன அருண், ” என்ன ஆச்சுமா?’ என்று என்னை உலுக்க, நான் அப்படியே அவர் மீது சாய்ந்து அழ ஆரம்பித்தேன்.

யுகமாயினி,
பிப்ரவரி, 2008

– ராமசந்திரன் உஷா (பிப்ரவரி 2008)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *