அன்று வங்கியில் நல்ல கூட்டம்.
”சார்…! கீழே பாருங்க… ஐநூறு ரூபா நோட்டு ஒன்றைத் தவற விட்டுட்டீங்களே…”
பென்சன் பணம் இருபதாயிரத்தை எண்ணிக்கொண்டிருந்த சந்திரசேகர், உடனே பரபரப்பு தோன்றினாலும், சட்டென சுதாரித்துத் திரும்பி அவனை ஏறிட்டார். மனதிற்குள்…
”இப்படி எத்தனை பேரை பற்றிக் கேள்விப்பட்டிருப்பேன்… ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை தானாகவே தவற விட்டுவிட்டு, அதை எடுக்க குனியும்போது மொத்த பணத்தையும் அபேஸ் பண்ணத் திட்டமா…?” என்று நினைத்தவாறே,
”என்னுடையது இல்லே தம்பி இது…” என்றவாறே நகர்ந்தார்.
மனது அவனைத் திட்டியது.
வீட்டினுள் நுழைந்தவுடன்… மனைவியுடன் நடந்ததைக் கூறியபடி பணத்தைக் கொடுத்தார். எண்ணிப் பார்த்த மனைவி,
”ஐயோ…! நீங்க நிஜமாகவே ஏமாந்துதான் போயிருக்கீங்க… இதுல… பத்தொன்பதாயிரத்து ஐநூறு தான இருக்கு… நீங்களும் உங்க முன் ஜாக்கிரதையும்…!”
”ஙே” என்று விழித்தார், சந்திரசேகரன்…
– வாணி (செப்ரெம்பர் 2010)