கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 10, 2023
பார்வையிட்டோர்: 2,965 
 
 

காயத்ரி காலிங் பெல் தொடர்ந்து ஒலிக்கவே, அடுப்பை அணைத்து விட்டு கதவை நோக்கி விரைந்தாள். குழந்தைகள் எங்கே விழித்துக் கொண்டு விடுமோ என்று.

‘‘யாரது இருங்க வர்றேன்’’ என்று குரல் கொடுத்த படி சென்றாள்.

கதவு திறந்ததும் பார்த்தால் இஸ்திரி கடைக்காரர் மனைவி சுத்த பட்டிக்காடு காலிங் பெல்லை அழுத்திக் கொண்டே நின்றிருந்தாள். கதவு திறந்த ஓசை கேட்ட பின்தான் நிறுத்தினாள். காய்த்ரிக்குப் பற்றிக் கொண்டு வந்தது. அவள் மற்றொரு கையில் மடக்காமல் இஸ்திரி போட்ட துணிகளை வைத்திருந்தாள். நாலு சட்டை காலு பேண்ட் அவ்வளவு தான்.

காயத்ரியைப் பார்த்தவுடன், கள்ளமில்லாமல் பல் தெரிய சிரித்தாள். பல் பளிச் சென்றிருந்தது. கண்கள் அதை விட பளிச்சென்றிருந்தது. வழிய வழிய எண்ணெய் தடவி நுனி வரைரிப்பனில் இறுக்கிக் கட்டிய சடையை, பந்து போல சுற்றித் தலை உச்சிக்குக் கொஞ்சம் கீழே பிச்சாடை போட்டிருந்தாள்.

கருத்த ஒல்லியான எலும்பு துருத்திய தேகம். ருவிக்கை சிவப்புக் கலரில் தோளிலிலிருந்து சற்று தொள தொளத்து இறங்கியிருந்தது. வளையமும் பூக்களும் என்ன டிசைன் என்று கண்டு பிடிக்க முடியாத எல்லா டிசைன்களும் இருந்த மெல்லி வாடாமல்லி வண்ணத் துணிச் சீலையைச் சுற்றியிருந்தாள்.

அவள் உயரம் குறைவாக இருந்தாலும், ஒல்லியாக இருந்தால் உயரமாகத் தெரிந்தாள். நாற்பது வயதுக்கு மேலே இருக்கும் ஆனால் முப்பது வயதிற்குள் தான் என நினைக்கும் படி இருந்தாள்.

‘‘என்ன வெங்கம்மா ஊரிலிருந்து இப்பத்தான் வந்தியா. எத்தன தடவ சொல்றது. காலிங் பெல்லைத் தொட்டு அழுத்திக்கிட்டே இருக்காதுன்னு. அழுத்திட்டு கையை எடுத்திடணும் சொல்லி இருக்கனில்லை’’ என்றாள் காயத்ரி கொஞ்சம் கோபம் தணிந்து.

‘‘அட நீங்க ஒண்ணுமா தா அந்த அஞ்சாம் நெம்பர் ஊட்ல அந்தச் சுட்சியை அழுத்திட்டு எடுத்தா வரவே மாட்டங்கறாங்க. எம்புட்டு நேரமா நிக்கறது. இப்படி அழுத்தினா தான் காதே கேட்கறது, அவிங்க போலப் பல ஊட்ல இப்படித்தாம்மா. அதனால தான்…….. இழுத்தாள்.

‘‘சரி, சரி கொண்டா….. நானே கொண்டாந்து பணத்தைத் தாரேன். நீ மறுபடி வராதே’’ என்று அனுப்பி வைத்தாள்.

எல்லாச் சட்டையும் பல நீல வண்ணத்தில் கட்டம் போட்டு இருந்தது. சில நேர்க்கோடு, சில குறுக்குக் கோடு, சில சதுர கட்டங்கள் என….. சரியாக இருக்கிறதா என்று எண்ணிப் பார்த்தாள்.

‘தம்பி இந்தப் புளு கலர்ல இருந்து என்றைக்குத் தான் மாறுவானோ’ என்று நினைத்தபடி, தம்பியின் சூட்கேஸில் அடுக்கி வைத்தாள். வெண்ணந்தூரிலிருந்து பாஸ்போர்ட் எடுக்கும் விசயமாக அவள் தம்பி மூர்த்தி சேலம் வந்திருந்தான்.

துபாயில் அவள் கண்வன் ரகுநாதன் பணிபுரிகிறான். பி.இ., முடித்த கையோடு மூர்த்திக்கும் ஒரு வேலை ஏற்பாடு செய்து தருவதாகக் கூறியிருந்ததால், அது தொடர்பான வேலையைச் சென்றியிருக்கிறான்.

கணவனை நினைத்ததும் பெருமூச்சு அவளையறியாமல் வந்தது. நந்தினி பிறந்து ஆறு மாதத்தில் துபாய் சென்றவன் தான் இப்போது நந்தினிக்கு இரண்டு வயது. மகன் சந்தனுவிற்கு நான்கு வயது. நடுவில் ஒரே ஒரு முறை நந்தினிக்கும் சந்தனுவிற்கும் முடி எடுப்பதற்காக வந்திருந்தான். அந்த ஒரு வாரம் கடைகளுக்கும், அழைப்பிற்கும், கோவில் சார்ந்த சடங்குகளுக்குமே அலைய வேண்டியதாகி விட்டது.

காது குத்திய குழந்தையை இரவு முழுவதும் சமாதானப் படுத்துவதற்கே சரியாகப் போய் விட்டது. அழுதழுது நந்தினி மடியிலேயே சேலை முந்தானையைப் பிடித்த படி உறங்கி விட்டாள். சிறிது அசைந்தாலும், திடுக்கிட்டு பயந்து அழ ஆரம் பித்துவிடுவாள் என்பதால் அப்படியே சுவரில் சாய்ந்து உறங்கியது நினைவிற்கு வந்தது. இரகுநாதனும் மகன் அருகில் படுத்து அலுப்பில் உறங்கி விட்டான்.

அடுத்த இரண்டாவது நாளே கிளம்ப வேண்டி இருந்ததால், அடுத்தடுத்து அவனுக்குரிய பொருட்களை வாங்குவதற்கும், அடுக்குவதற்குமே சரியாகப் போய்விட்டது. ஆசையாக ஒரு வார்த்தை சுடப் பேசாததும், கையைப் பற்றிச் சிறிது நேரம் உட்காராததும் நினைவிற்கு வந்து கண்களில் நீர் தளும்பியது. 

இதோ இப்போது தம்பி மூர்த்தியும் கிளம்பப் போகிறான். அவனுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது ஒரு வகையில் ஆறுதல் என்றாலும், இன்னொரு வகையில் பெற்றோரையும், மாமியார் மாமனார்களையும் குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பு அவள் தலையில் விழுந்திருந்தது.

‘கையைப் பர்ஸில் விட்டால் பணம் இருக்கு. ஆனால் சமயத்திற்குக் கை கொடுக்க யாரிருக்கா’ நினைவலைகளில் சிக்கித் தவித்தாள்.

காயத்ரி வீட்டைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டாள். அந்த வீடு ரகு அனுப்பித் தந்த பணத்தில் வாங்கியது. ஒரு அரசு அதிகாரி இடமாறுதலாகி சேலம் வந்திருந்த போது கட்டியது. ழுத்து வருடத்திற்குப்பிறகு இப்போது ஓய்வு காலத்தில் சொந்த கிராமத்திற்குச் சென்ற போது, அந்த வீட்டை விற்று விட்டுச் சென்று விட்டார். பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு என்பதால், அருமையாகப் பராமரித்திருந்தார்கள். புது வீடு போலவே இருந்தது.

காயத்ரிக்கு அந்த வீட்டைப் பார்த்தவுடன் பிடித்துப் போய் விட்டது. பத்து வருடத்திற்கு முன் கட்டிய வீடு போலவே இல்லை. முன் பக்கம் நிறைய இடம் விட்டு மையத்தில் இருபது அடிக்கும் பாதை விட்டு, இருபக்கம் பல வித மரம் செடிகளை வளர்த்திருந்தார்கள். வெளியே கேட் தற்ற முடியாத அளவிற்குக் கனமாக அமைத்து இருந்தார்கள். கீழே மூன்று படுக்கையறை கொண்ட வீடாக இருந்தது தான் காயத்ரியைக் கவர்ந்தது. ஒவ்வொரு அறையிலும் கழிவறை இருந்தது. சமையலறை தான் சிறியது போல தோன்றியது. மீதி இடத்தில் டைனிங் டேபிள் அடைத்துக் கொண்டது.

ரகுவை வீட்டைப் பார்க்கச் சொல்லி பலமுறை அழைத்தும் அவனால் வர இயலவில்லை. அவள் பெற்றோரை முன் வைத்து வாங்கச் சொல்லி விட்பின் மூர்த்திதான் அந்தச் சமயத்தில் அலையாய் அலைந்து காயத்ரி பெயரில் வீடு பதிவு செய்ய உதவிகளை வீட்டின் பின்புறமும் பத்தடி விட்டு சுற்றுச்சுசூழல் இருந்தது. வசதியான வீடுதான். ஆனால் கணவன் வறாமலே, ஊரிலிருந்து மாமனார் மாமியாரை அழைத்து வந்து வீடு புண்ணியத் தனம் செய்தாள். கணவனுக்குப் போட்டோ அனுப்பி வைத்தாள்.

பின்னால் நட்டு வைத்து வேப்பங்கன்று தளதளன்னு ஓங்கி உயர்ந்திருந்தது. மருதாணி மரமும் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. மருதாணியைப் பார்க்கும் போதெல்லாம் ஆசையாய் வரும். மருதாணி வைத்துக் கொண்ட நாள்களெல்லாம் நினைவிற்கு வந்து பாடாய் படுத்தும்.

மருதாணிதான் அவளும் இரகுவும் சந்திப்பதற்குக் காரணமாக இருந்தது. வலசையூரில் இருந்த பெரியம்மா வீட்டுக்கு அக்கா திருமணத்திற்காகப் போயிருந்தது போது, காயத்ரி கல்லூரியின் இறுதி ஆண்டுப் படித்துக் கொண்டு இருந்தாள். ஒரு வாரம் முன்னதாகவே சென்று விட்டாள். பெரியம்மா பெண் ரமணிக்கு எல்லா உதவிகளையும் செய்தாள். பலமுறை வலசையூர் சென்றிருப்பதால், அந்த ஊர் அவளுக்கு அத்துபடி.

டைலர் கடைக்கு, பொட்டு கடைக்கு, பூக் கடைக்கு, துணிக் கடைக்கு என எல்லா கடைகளுக்கும் பெரியம்மாவும் காயத்ரியுமே சென்று வந்தார்கள். பெரிய பெரிய பைகளில் பொருட்களை வாங்கிக் கொண்டு வருவதும், அதைப் பிரித்து உரிய இடத்தில் வைப்பதுமாக பொழுது போனதே தெரியவில்லை. வலசையூர் பிள்ளையார் கோவில் தெரு மையப் பகுதி என்பதால், சாலையில் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டேயிருக்கும்.

பழைய காலத்து ஓட்டு வீடு. நடுவில் படிக்கட்டு இருபுறமும் சன்னல் கம்பிகள் பதித்த வீடு சன்னல் வழியாக, ஓரத்தில் கட்டப்பட்டிருந்த நீண்ட திண்டில் காலைத் தொங்கப் போட்டுக் கொண்டு வேடிக்கைப் பார்ப்பது காயத்திற்கு மிகவும் பிடித்த விசயம். ஆங்கிருந்த படியே நாலு முழ பூவையும் கட்டி விடுவாள். நுல்ல காற்று வீசும் சன நடமாட்டத்தைப் பார்த்த படி வேலை செய்வது களைப்பைத் தராது. ஒரு கிலோ பூண்டைக் கூட முறத்தில் எடுத்து வந்து திண்டில் அமர்ந்து உறித்து விடுவாள். 

அப்படி அமர்ந்து முருங்கைக் கீரை உறித்த போது தான் மருதாணி நினைவிற்கு வந்தது. அடடா, கல்யாணப் பெண்ணுக்கு மருதாணி வைக்கணுமே.

‘பெரியம்மா பெரியம்மா’ என்று அழைத்த படி உள்ளே சென்றாள்.

உரலில் எதையோ ஆட்டிக் கொண்டிருந்த பெரியம்மா நிமிர்ந்து பார்த்தாள். பல நாள் தூக்கமிழந்த கண்கள், ஓட்டிப் போன கன்னங்கள், வாடிப் போயிருந்த முகம் வார மறந்த தலை என மிகவும் சோர்வாகக் காணப்பட்டாள்.

‘‘என்ன காயத்ரி. ஏன் இப்படி அரக்க பரக்க வர்றே’’ என்றாள்.

‘‘பெரியம்மா முக்கியமான ஒண்ணை மறந்துட்டம்’’ என்ன?

‘‘அக்காவுக்கு மருதாணி வைக்கணும்ல. அப்புறம் நாளைக்கு மருதாணி கூட வைக்கலியான்னு மாப்பிளை வீட்ல நினைக்கமாட்டாங்க’’ என்றாள்.

‘‘அட ஆமா எப்படி மறந்தோம். நல்ல வேளை காயத்ரி. அப்புறம் பொண்ணுக்கு மாப்பிள்ளை பிடிக்கல, அதனால தான் மருதாணி கூட வைக்கலன்னு பெரிய பிரச்சனையாய் போயிடும். நீ என்ன பண்ணு இந்தா நம்ம தெருவுக்குப் பின்னால தெருவுல வடக்கால மஞ்சள் பெயிண்ட் அடிச்ச வீட்டுல பின் தோட்டத்தில் மருதாணி மரமிருக்குது. ஒரு மஞ்சப் பையை எடுத்துட்டுப் போயி கொஞ்சம் பறிச்சிட்டு வரயா’’

‘‘நானா? தனியாவா? ‘‘காயத்ரி மிரண்டாள். ‘‘ஒண்ணும் பயமில்லை. அது நம்ம பங்காளிங்க வீடு தான். உங்கன பெரியப்பாவுக்கு ஒரு வகையில் தூரத்து சொந்தம். உங்க அம்மால யெல்லாம் நல்லாத் தெரியும். அந்த வீட்டில அம்மாக்கண்ணுனு ஒரு வயசான அம்மா இருக்குது. அவிங்க கிட்டச் சொல்லிட்டு கொஞ்சம் பறிச்சிட்டு வந்திடுமா’ என்றாள் கெஞ்சலாக.

காயத்ரி வேறு வழியின்றி மஞ்சப் பையை எடுத்துக் கொண்டு இளம்பினாள். பெரியம்மா வீட்டுப் பின் பக்க தெருவிற்கெல்லாம் அவள் போனதேயில்லை. ஒரு வழியாக மஞ்சள் பெயிண்ட் அடித்த வீட்டைக் கண்ட பிடித்து விட்டாள். இரண்டு மூன்று வீடுகள் இருந்தாலும், நல்ல அகலமான வீடு தான் பெரியம்மா சொன்ன வீடுன்னு முடிவு செய்து, வெளியே நின்று கூப்பிட்டாள்.

கால் தான் கடுத்ததே தவிர, யாரும் வரவில்லை. காலிங் பெல் அடித்தாள். எந்தப் குரலும் ஆளும் வரவில்லை. திரும்பப் போய் விடலாமா என யோசித்தாள். சிறிது நேரம் பொறுத்தம் பார்த்தாள். அந்த வீட்டின் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் நடந்து பார்த்தாள்.

எதிர் வீட்டிலிருந்து யாரோ குரல் கொடுத்தார்கள். ‘‘யாரது’’

காயத்ரி பயந்து போனாள். பெரியம்மா பெயரைச் சொன்னாள். மருதாணி தேவை பற்றிச் சொன்னாள்.

‘‘ஓ கல்யாணக்காரங்க வீடா, உள்ள வயசான அம்மா தான் படுத்திருப்பாங்க. சரியா காது கேக்காது நீ பக்க வாட்ல இருக்கிற சந்து வழியா, பின் தோட்டத்துக்குப் போலாம். வேணுங்கறத பறிச்சிக்க. யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க’’ எதிர் வீட்டு பருத்த வயதான பெண்மணி வழி காட்டினாள்.

‘‘அம்மா நீங்களும் கொஞ்சம் கூட வாங்கலேன். எனக்கு பயமா இருக்கு’’ என்றாள்.

‘‘ஒரு பயமும் இல்ல. வாசலை அப்படியே விட்டுட்டு வர முடியாது. நான் இங்கையே இருக்கறேன். நீ போயி பறிச்சிட்டு வா. எல்லாம் நம்ம வீடு தான்.’’ என்றாள்.

காயத்ரி வேறு வழியின்றி பக்கத்து சந்து வழியாக உள் நுழைந்தாள். கீழே இருந்த இளைகளை எல்லாம் வெட்டி விட்டிருந்தார்கள். காயத்ரி வேறு வழியின்றி எக்கி எக்கி பறிக்க ஆரம்பித்தாள். இரண்டு கிளை தான் பறித்திருப்பாள். கீழான கிளைகள் வெட்டப்பட்டிருந்ததால் உயரமாக இருந்த்தில் பறிக்க, அங்கிருந்த பித்தளைக் குடத்தைக் கவிழ்த்து வைத்து அதன் மேல் ஏறிப் பறிக்கலாம் என அதைக் கையில் எடுக்கப் போனாள்.

‘‘யாரும்மா நீ’’ என்று ஒரு அதிகாரக் குரல். காயத்ரி வெல வெலத்துப் போனாள். நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. பேந்த பேந்த முழித்தாள்.

சத்தம் வந்த இடத்தில் ஒரு இளைஞன் நின்றிருந்தான். கை வைத்த பனியன் போட்டிருந்தான். நகரத்து இளைஞன் போல தோற்றம். முகம் சாந்தமாகத் தான் இருந்தது. குரல் தான் கடு கடு வென்று,

அவள் முழிப்பதையும், கையிலிருந்த மஞ்சள் பையையும் பார்த்தான்.

‘‘மருதாணி வேணுமா’’ என்றான். காயத்ரிக்குக் கண்ணில் நீர் முட்டிக் கொண்டு வந்தது. தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.

‘‘சரி சரி நேத்து தான் கீழயிருக்கிற கிளையெல்லாம் வெட்டினேன். நேத்து வந்திருந்தா பாதி மரமே கிடைச்சிருக்கும்’’ என்றபடி கையை நீட்டினான்.

காயத்ரி ஊமையாகி விட்டதால், பையை நீட்டினாள். அவன் அவளைச் சட்டை செய்யாமல் மரக்கிளையை வளைத்து, சடசட வென பல கிளைகளை முறித்தான். பக்கத்திலிருந்த தேங்காய் நார் கயிற்றில் கட்டிக் கீரைக் கட்டு போல அவளிடம் கொடுத்தான்.`

அவ்வளவு தான். காயத்ரி அதை வாங்கிக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் ஓடி வந்து விட்டாள். 

அவளுக்கு, அக்கா கல்யாணத்தில் மொய் எழுதும் வேலை.  பெரும்பாலும் எழுதியாயிற்று இன்னும் ஓரிருவர் தான்.

‘‘என்ன மருதாணி நல்லா சிவந்துச்சா’’ குரல் வந்த திசையில் நிமிர்ந்து பார்த்தாள்.

நேற்று மருதாணி ஒடித்துக் கொடுத்தவன் தான் புன்னகையோடு நின்றிருந்தான்.

தன்னையறியாமல் கைகளை வரித்துக் காட்டினாள். செக்குச் செவேலேன்று சிவந்து, அவள் விரல்கள் மிக அழகாகி இருந்தன. உள்ளங்கையில் வட்ட வடிவ பொட்டு போன்று சிவந்திருந்த பகுதியில், ஒரு சிவப்பு ரோஜோவை வைத்தான்.

அவள் சுதாரிக்கும் முன்பே, வெற்றிலையில் மொய் பணம் வைத்து, ரோஜா பூ பக்கத்தில் வைத்தான்.

அந்தக் கணம் அவள் தன்னை மறந்தாள். இதழ்களின் புன்னகை மலர அவன் அங்கிருந்து அகன்று விட்டான்.

அதற்குப் பிறகு, அவர்கள் அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. பெரியம்மாவுடன் தான் பெரும்பாலும் வெளியே கிளம்பினாள். என்றாலும் வழியில் எப்படியாவது அவன் எதேச்சையாகத் தட்டுப் பட்டுக் கொண்டிருந்தான். பதினைந்து நாள் போனதே தெரியவில்லை.

ஊருக்குப் போக வேண்டும் என்று அம்மா தொண தொணக்க ஆரம்பித்து விட்டாள். ‘இன்று கிளம்பலாம்’ அம்மா சொன்னதிலிருந்தே மனம் நைய ஆரம்பித்து விட்டது.

வேறு வழியில்லை. கல்லூரிக்குப் போக வேண்டும். வந்த வேலை முடிந்தது. பெரியம்மா வீடு பழைய நிலைக்கு வந்து விட்டது. உறவினர்கள் வருகை, விருந்து எல்லாம் முடிந்து விட்டது. கையிலிட்ட மருதாணி கூட மறைய ஆரம்பித்து விட்டது.

‘‘காயத்ரி மேல படிக்கிறியா’’ என்றார் அப்பா. உடனடியாக தலையாட்டினாள். அதே கல்லூரியில் எம்.ஏ., இரண்டு வருடம் சேர்ந்த நாள் தான் நினைவிற்கு வருகிறது. அதற்குள் டிகிரி வாங்கியாகி விட்டது. அவன் நினைவுகள் எப்போதாவது வந்து இம்சை செய்யும்.

அன்று பெரியப்பா வந்திருந்தார்.  என்னம்மா படிப்பெல்லாம் முடிஞ்சுதா. இல்ல அவ்வைப் பாட்டி மாதிரி படிச்சிக்கிட்டே இருக்கப் போறியா’’ என்றார்.

அவள் அப்பாவை நிமிர்ந்து பார்த்தாள். ‘‘நீ போயி பெரியப்பாவிற்கு டீ போட்டு எடுத்திட்டு வாம்மா’’ என்றார். உள்ளே போகும் போது, ‘‘அந்த சாதகம் பொருந்தி வருதுங்க. பையனைப் பத்தி விசாரிச்சீங்களா’’ என்ற குரல் தொடர்ந்தது.

‘‘அட அது நம்ம இராமனோட புள்ளைங்க சென்னையில போயி பி.இ., படிச்சிருக்கானாமா. அங்கியே வேலை. உங்க ஊட்டுக்காரம்மாவுக்கு நல்லா தெரியும். ரமணி கல்யாணத்துல புள்ளைய பார்த்துருக்கான். புடிச்சி போச்சி. அப்பத்தான் வேலைக்குப் போக ஆரம்பிச்சதினால, ரெண்டு வருசம் போகட்டுமின்னு, இப்ப பொண்ணு கேட்டு வந்திருக்காங்க, என்றார்.

காயத்ரிக்கு நிலை கொள்ளவில்லை. அவனாக இருக்குமா? இல்ல வேற யாராவதா? அவன் பேரு கூட தெரியாதே. ஐயோ கடவுளே இது அவனாகத் தான் இருக்கணும் என்று வேண்டிக் கொண்டாள்.

அவள் குரலைக் கடவுள் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறார். அவனே தான். அவளைப் பற்றி விசாரித்த படியே தான் இருந்திருக்கிறான். அவள் படிப்பு முடியட்டும்னு காத்திருந்திருக்கிறான். சென்னையில் நல்ல வேலை. இரண்டு பேரில் இவன் இளையவன்.

அவன் அப்பா புகையிலை வியாபாரம் செல்கிறார். வலசையூரிலிருந்து குடிபெயர்ந்து சென்னைக்குப் போய் ஆறு வருடங்கள் ஆகிறது. மூத்தவனுக்குத் திருமணம் வருடங்கள் ஆகிறது. ஒரு வயதில் குழந்தை இருக்கிறது. மூத்தவன் பள்ளிக் கூட ஆசிரியராக சென்னையில் வேலை பார்க்கிறான். இளையவனுக்குப் படிப்பிற்கு மூத்தவன் தான் உதவி வருகிறான்.

அப்பா எல்லாவற்றையும் விசாரித்துவிட்டார். பின் பெண் பார்க்கச் சம்மதித்தார். காயத்ரிக்கு அவனைத் தன் வீட்டில் மீண்டும் பார்க்கப் போகிறோம் என்ற நினைப்பும், அவன் தான் மாப்பிள்ளை என்பதும் சிறகடிக்க வைத்துக் கொண்டிருந்தது.

அதே புன்னகை மாறாத கண்கள். இன்னும் தோள் பட்டை அகலமாகி கம்பீரமாக இருந்தான். காயத்ரியைப் பார்த்து அவள் கண்களில் எதையோ தேடினான். ஒரு கணம் தான் காயத்ரி அவனை நிமிர்ந்து பார்த்தது. அதற்குள் வேர்த்து விறுவிறுத்து விட்டது. தொடர்ந்து விருந்து, சடங்கு நலுங்கு என நாட்கள் நகர்ந்தன. ஒரு நல்ல நாளில் ரகு காயத்ரியின் கையைப் பிடித்தான்.

நான்கு வருடங்கள். அவள் வாழ்வில் மறக்கவே முடியாத அற்புதமான நாட்கள். ரகு அதிகமாகப் பேச மாட்டான். ஆனால் அவனுடைய ஆழமான காதலை காயத்ரி உணரும் தருணங்கள் பல சந்தர்ப்பங்களில் அமைந்தன. ஒவ்வொரு நாளும் இனிமையும் கலகலப்புமாகக் கழிந்தது.

படிப்புக் கடனும், கல்யாணக் கடனும் ஒரு புறம் இருந்தே வந்தன. அவனுடைய அண்ணன் லோன் போட்டு வீடு வாங்கியதிலிருந்து, அதைப் போய் பார்த்து விட்டு வந்த நாளிலிலிருந்து, ரகுவிற்கு பணப்பித்து பிடித்துவிட்டது. அவனுடைய துபாய் நண்பன் வழிகாட்ட, பார்த்த வேலையை விட்டு விட்டு, சேலத்திலிருந்துத் துபாய் சென்று விட்டான். 

காயத்ரியின் நிலை தான் சொல்லும் நிலையிலில்லை. அவளுக்குத் துளி கூட விருப்பமில்லை. ஆனால், எதிர் கால குழந்தைகளின் நலனைக் காரணம் காட்டி கிளம்பி விட்டான். தனித்து கொடும் வெயிலில், பாலை நிலத்தில் விட்ட மான் குட்டி போல மாறிப் போனாள்.

பணம் அனுப்பிக் கொண்டு தான் இருந்தான். ஒரு குறையும் அவனைச் சொல்ல முடியாது. ஆனால் வாங்கிய வீட்டைப் பார்க்கவும், வசிக்கவும் இல்லாமல் அடுத்த இலக்குகளை காரணங்கள் காட்டி, துபாயில் தங்க ஆரம்பித்திருந்தான். இரண்டு வருடம் தான் என்றவன் இப்போதும் இன்னும் இரண்டு வருடங்கள் தான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறான்.

போதாததற்கு மூர்த்திக்கும் ஆசை காட்டி அவனையும் அழைத்துக் கொண்டிருக்கிறான்.

‘‘என்னக்கா வேப்பமரத்து கீழயே ரொம்ப நேரமா உட்கார்ந்திருக்கிற. இன்னொரு புத்தராகணும்னு ஆசையா’’ என்றபடி தோட்டத்திற்கு வந்தான் மூர்த்தி.

‘‘எனக்கு ஞானம் வந்து என்ன பிரயோசனம் வர வேண்டியவங்களுக்கு வரணுமே’’

‘‘என்னக்கா நீ இப்ப பணம் இல்லன்னா எதுவுமில்லை. இந்த வீடு, பிள்ளைங்க படிப்பு, சோபா, பிரிட்ஜ் இதெல்லாம் அத்தான் இங்கிருந்திருந்தா வாங்க முடியுமா? கடனைக் தான் அடைச்சிருக்க முடியுமா?’’ என்றான். 

‘‘ஆனா சந்தோசமா இருந்திருப்பமுல்ல’’ என்றான்.

‘‘என்னது. அக்கா இதெல்லாம் இல்லாம இருந்து அத்தான் கடனோட உன்கூட இருந்திருந்தா தினமும் சந்தோசம் வந்திருக்காது. சண்டை தான் வந்திருக்கும்.’’

‘‘உன் மண்டை. உனக்கு தெரிஞ்சது அவ்வளவு தான்’’ 

‘‘இப்ப உனக்கு என்ன குறை? ரமணியாக்காவ பாரு. இன்னும் வாடகை வீடு. வாய்க்கும் வயித்துக்கும் போதாத வாழ்க்கை.’’

‘‘ஆமா, ஆனா அத்தான் அக்காவ நல்லா வச்சிருக்காருல்ல இதுவரைக்கும் இனுக்குப் புனுக்குனு ஒரு சங்கதி வந்திருக்குமா’’

‘‘ஆமா நீ தான் மெச்சிக்கணும் அங்க மீனாட்சி ஆட்சியில்ல நடக்குது’’

‘‘போடா. ஆனா அத்தானுக்கு அந்த ஊருல நல்ல மதிப்பிருக்குது. அவரு சொன்னா தான் கோயில் விழாவுல கூட எடுபடுது. என்ன சுயநலமில்லாத மனுசன். பொது விசயத்தை எத்தனை எடுத்துச் செய்யறாரு. லட்சக்கணக்குல பணம் கைல புரளுது. ஆனா, தனக்குன்னு அஞ்சு காசு எடுத்துக்காத நல்ல மனசு. ஆனா அவரு கடையில பெருசா வருமானமில்ல. 

‘‘மீனாட்சி அக்கா அத குறையாவே எடுத்துக்கறது இல்ல. அவரோட நல்ல மனசே அவளோட மனச நிறைச்சிருச்சி,’’

‘‘இப்ப என்னங்கற பணம் தேவையில்லங்கறயா’’

‘‘உனக்கும் உன் அத்தானுக்கும் ஒண்ணும் புரியாது. பேசி என்ன பிரயோசனம். சரி வா சப்பாத்தி எடுத்து வைக்கறேன்’’ என்றபடி உள்ளே சென்றாள்.

‘‘ஒண்ணுமே புரியல, உலகத்துல. என்னமோ நினைக்றே….. எதுக்கு என்ன திட்டறே’’ என்று பாட்டு பாடிய படியே மூர்த்தி பின் தொடர்ந்தான்.

காயத்ரி சிரித்து விட்டாள்.

‘‘சரி பாரு. உன் சூட்கேசுல அயர்ன் பண்ண துணியெல்லாம் வைச்சிருக்கிறேன். நானு சாப்பாடு எடுத்து வச்சிட்டுக் கடை வீதி வரை போயிட்டு, வரேன்” எனக் கிளம்பினாள்.

ஏதோ நினைத்தவளாய், “மூர்த்தி …. பிள்ளக ரெண்டும் நல்லா தூங்குதுங்க முழிச்சா கொஞ்ச நேரங்கழிச்சி சப்பாத்தி எடுத்துக் குடுத்திடு. கார்டூன் படம் போட்டுவிடு. நான் சீக்கிரம் வந்திடறேன்’’ என்றாள்.

‘‘சரிக்கா. சீக்கிரம் வந்திடு சின்னத சமாளிக்க முடியாது என்னை மாட்டி விட்டுடாதே’’ என்றான் கெஞ்சலாக. 

‘‘பார்க்கலாம், பார்க்கலாம். தனியா இருந்து பாத்தா தான தெரியும்’’ என்றபடி கிளம்பினாள்.

 தெருவே வெறிச் சோடியிருந்தது. முழுவதும் அரசு ஊழியர்கள், வேலைக்குச் செல்பவர்கள் இருக்கும் பகுதி அது. சில வீடுகளுக்கு முன் கூர்க்காக்கள் இருந்தார்கள். சுற்றுச் சுவரைத் தாண்டி அதுவும் தெரியாதளவிற்கு உயரமான மரங்கள். அசோக மரங்கள், மே பிளவர் மரங்கள், புங்க மரங்கள், வேப்ப மரங்கள் நிறைந்த வீடுகள். வீட்டுக்குள் குளுமையை அவை தருகின்றனவோ இல்லையோ வீதிக்குள் சருகுகளைத் தந்து கொண்டிருந்தன. நெடுக இரு பக்கம் சுற்றுச் சுவர்கள் இருந்ததால், காற்று தெருவிற்குள் மண்ணைச் சுருள வைத்துக் கொண்டிருந்தது.

புடவை படபடக்கத் தெருவிற்குள், கடைசியிலிருந்த இஸ்திரி கடை நோக்கிப் போனாள். அங்கு வழக்கமான தாத்தா இல்லை. புதிய ஆள் இருந்தான். இருபத்தைந்து வயதிற்குள் இருக்கும். பக்கத்தில் காலையில் துணி கொடுத்த பெண் நின்று கொண்டிருந்தாள். ஓரமாகப் பல மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன, இஸ்திரி வண்டியில் ஓரமாக இடதுபுறம் துணிகள் இஸ்திரி போடப்பட்டு மடித்து வைக்கப்பட்டிருந்தன. வலது புறம் மிகக் கனமான இரும்பு இஸ்திரி பெட்டி, ஒரு பிரமனை மீது வைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து கங்குகள் பக்க ஓட்டைகள் வழியே தெரிந்தன. இப்போது தான் கரியை மாற்றியிருப்பான் போல. அந்த ஆள் வியர்வையில் நனைந்திருந்தான்.

‘‘அம்மா இந்தாங்க காலையில் கொண்டு வந்தீங்கல்ல’’ அதுக்கான பணம் என்று அந்தப் பெண்ணிடம் நீட்டினாள்.

‘‘அவளோ தயங்கிய படியே எவ்வளவுன்னு தெரியலயேம்மா. ஐயா புது வண்டி வாங்கப் போயிருக்காரு. நுhளக்கு வாங்கிடறேனே’’ என்றாள்.

‘‘புது வண்டியா ….. ஸ்கூட்டரா’’

‘‘அவள் வெட்கத்துடன் இல்லீங்கம்மா. இஸ்திரி பெட்டி வண்டி தான். இதோ இந்தத் தம்பியும் எங்க தொழிலுக்கு வந்திடுச்சி அதான் அதுக்கும் அந்தக் கடைசியில ஒரு கடையப் போட்டுக் கொடுக்கலாம்னு’’

‘‘உங்களுக்குப் பேட்டியா  நீங்கலே ஒரு கடை வைக்கப் போறீங்களா’’

‘‘போட்டி இல்லீங்கம்மா. இப்ப முதல்ல மாதிரி இல்லம்மா. துணிக ரொம்ப வருது. எங்க ஓட்டுக் காரரால தேக்க முடியல. தம்பியும் பிகாமோ, பிரவோ என்னவோ படிச்சிட்டு பல வேலைக்குப் போச்சி எதுவும் சரி வரல. ஜயா தான் இங்க வந்திடு. நான் கடை வச்சுத் தாறேனு இட்டாந்திருக்காரு’’

‘‘அப்படியா இன்னொரு கடை போடற அளவுக்கு துணி சேருதா. பரவாயில்லையே. தம்பி யாரு’’ என்றாள்.

அந்த இளைஞனே குறுக்கிட்டு, ‘‘அக்கா இந்தக் கடைகார்ருக்கு நான் சித்தப்ப மவனுங்க எம். ஏ., படிச்சிருக்கேன். நிலையான வேலை கிடைக்கல. இங்க வந்திடுனு சொன்னத வேதவாக்கா எடுத்திட்டு வந்திட்டனுங்க’’ என்றான்.

‘‘இந்த வேலய முதல்லயே நீ செஞ்சிருக்கியாப்பா’’ என்றாள் வியப்போடு.

 ‘‘கையி பார்த்தா கண்ணு செய்யுதுங்க. எங்க ஐயா கூட முதல்ல விவசாயந்தான் செஞ்சாரு. மழைத் தண்ணி இல்ல. இந்தத் தொழிலுக்கு வந்தாரு. வீட்டுலயே அவரு சட்டையவே நாலஞ்சு தடைவ இஸ்திரி போட்டுப் போட்டுப் பாப்பாராம். தானா கத்துக்கிட்டு இத்தன வருசத்த ஓட்டிட்டாரு’’ என்றான்.

‘அப்படியா’ என்றாள் ஆச்சரியத்தோடு. 

‘‘இவ்வளவு படிச்சிட்டு இந்த வேலை செய்யுறியேப்பா’’ என்றாள்.

‘‘தொழில்ல எனக்கா பெரிசு சிறிசு. சொந்த ஊர்ல வேலை செய்யற தெல்லாம் கௌரதைப் பார்க்கக் கூடாதுல்ல’’ என்றாள்.

அவள் கை லாகவமாக அதன் போக்கில் இயங்கிக் கொண்டிருந்தது. சட்டையைத் திருப்பிப் போட்டான். தண்ணீர் தெளித்தான். பின்னர் இஸ்திரி பெட்டி மேல் தண்ணீர் தெளித்தான். அது ஸ்ஸ்ஸ் என்று ஓசை யெழுப்பியது. மிகக் கனமான பெட்டியைத் தூக்கும் போது, அதன் கைப்பிடி சத்தம் எழுப்பியது. அந்த இடமே சூடாக இருந்தது. அவளுக்கு வேடிக்கையாக இருந்தது அவன் பேச்சு. அவன் சொல்வதும் நியாயம் தானே. பெருமூச்சு விட்டாள்.

அங்கிருந்த அம்மா, ஒரு இரகசியத்தைத் தன் போக்கில் போட்டு உடைத்தாள்.

‘‘அம்மா ஐயா வந்த புதிதில தம்பி சொல்ற மாதிரி தான்,  இந்தத் தொழில பத்தி ஒண்ணும் தெரியாது. அங்க ஊருல இருந்து இங்க ஒருத்தரு வந்து வேல பாத்தாரு. ஒரு கையெழுத்து விசயமா அவர பாக்க இவரு அப்பல்லாம் வருவாரு. ஆனா வந்தா சட்டுனு பாக்க முடியாது. நாள் கணக்கா காத்துக்கிடக்கணும். எங்க வீட்டு திண்ணை மாதிரி இங்க ஏது. சாலையில நிக்க வேண்டியது தான். அப்பத்தான் இஸ்திரி பெட்டிக் காரருகிட்ட பேச்சு கொடுத்துக்கிட்டே காத்துக் கிடந்திருக்காரு. அந்த இஸ்திரி பெட்டிக்காரருக்கு பசங்க எல்லாம் படிச்சி வாத்தாயாரா போகவே, எங்க ஐயா கிட்ட சொல்லிருக்காரு. ஏம்பா விவசாயமில்லன்னு நாய் படாதபாடு படறியே. இத தான் செய்யலாமில்லனு கேட்டிருக்காரு. இவருக்கும் சரின்னு தோணிருக்கு. உடனே இதா இந்த வண்டிய விலைக்கு வாங்கி கடை போட்டுட்டாரு. ஆனா புதிசா வந்த இவர யாரும் நம்பி துணியத் தரல. இவரு சட்டையவே தினமும் எடுத்துட்ட வந்து இஸ்திரி போடுவாரு. நாலஞ்சு நாளைக்கப்புறம் யாரோ துணிய தர்றாங்கன்னு சனங்க கொடுக்க ஆரம்பிச்சாங்க. இப்ப இப்பிடி இன்னொரு கட வைக்கிற மாதிரி இருக்குது’’ என்றாள் பெருமையோடு .

“சரி சரி எங்கிட்ட சொல்ற மாதிரி யாருகிட்டயும் சொல்லிடாதீங்க’’

‘‘இல்லம்மா. உங்கள இன்னைக்கு நேத்தா பழக்கம். நாலஞ்சு வருசமா பழக்கமில்ல’’

‘‘சரி சரி இந்தா இந்த ஐம்பது ரூபாவ வை. ஐயாகிட்ட கேட்டுட்டு நாளைக்கு மீதிய வீட்டுக்கு வரும் போது தந்திடு’’ என நீட்டினாள்.

அந்த அம்மாவும் வாங்கி அந்த இளைஞனிடம் தர அவன் இழுப்பறையில் வைத்தான்.

‘‘சரிப்பா. நல்லா உன் கடையிலயும் நிறைய துணிங்க சேர்ந்து இன்னொரு கடை வைக்க என்னுடைய வாழ்த்துக்கள்’’ என்றாள்.

ஆவன் கூச்சத்தோடு ‘சரி’ என்றான். காயத்ரி சிறிது தூரம் நடந்து, அங்கிருந்த பேருந்தில் ஏறி சூப்பர் மார்க்கெட் சென்றாள்.

 பில் போடும் கவுண்டர் அருகில் ஐஸ்கிரீம் பெட்டி அவளுக்கே ஆசையாக வந்தது. வீட்டுக்கு வாங்கிப் போவதற்குள் உருகி விடுமே. சரி ஆட்டோவில் சீக்கிரமாகப் போய் விடலாம் என்று நினைத்து வாங்கிக் கொண்டாள்.

 சூப்பர் மார்க்கெட் வாசலிலேயே ஆட்டோ நின்றிருந்த ஏறிக் கொண்டாள். பைகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டாள். ஐஸ்கிரீம் பையை மட்டும் தனியாக மடியில் வைத்துக் கொண்டாள்.

‘‘ஆட்டோ, கொஞ்சம் சங்கர் நகர் நாலாவது குறுக்குத் தெரு, சீக்கிரம் போப்பா’’ என்றாள். அவனும் சீக்கிரமாகவே வேகமாகக் கிளம்பினாள் ‘ஐஸ்கிரீம் உருகி விடக் கூடாதே’ என்று காயத்ரி பதைப்பாக இருந்தது.

இதோ மெயின் ரோடு வந்துவிட்டது. இன்னும் இந்த வேகத்தில் போனால் பதினைந்து நிமிடத்தில் வீடு வந்து விடும். ஐசுகீரீமைப் பார்த்துக் குழந்தைகள் துள்ளிக் குதிப்பதை நினைத்து இதழ்களில் சிரிப்பு மலர்ந்தது. மூர்த்திக்கும் பிடித்த ஐஸ்கிரீம் தான் வாங்கியிருந்தாள்.

சட்டென்று ஆட்டோ டிரைவர் பிரேக் போட்டு நின்றார். ஒரு வண்டி உரசிய படிச் சென்றது வேகமாக, அந்த அதிர்ச்சியில் காயத்ரி முன்னாலே தள்ளப்பட்டு விட்டாள். சீட்டில் வைத்திருந்த பைகள் கீழே உருண்டு பொருட்கள் விழுந்தன. நல்ல வேலை ஐஸ்கிரீம் மடியில் இருந்ததால் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

‘என்னப்பா என்ன ஆச்சு’ என்றாள். கலவரத்தோடு கேட்டுக் கொண்டிருக்கும் போதே ‘டமார்’ என்று ஒரு சத்தம். டிரைவர் இறங்கிப் பின்பக்கம் ஓடினார். பின்பக்க சன்னல் வழியாகப் பார்த்தாள். அங்குப் பைக்கில் வேகமாக வந்து உரசிய ஒரு இளைஞன் எதிரில் வந்த இன்னொரு வண்டியில் மோதி கீழே கிடந்தான். ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. கீழே சிதறிய பொருட்களைப் பொருட்படுத்தாமல், ஐசுகிரீம் பையைச் சீட்டில் வைத்துவிட்டு இறங்கி பின்பக்கமாக வேகமாகச் சென்றாள்.

ஒரு ஆட்டோ கவிழ்ந்து கிடந்தது. இன்னொரு பக்கம் கொஞ்சம் தள்ளி பைக் கீழே கிடந்தது. சக்கரம் மேலே தூக்கியபடி இருந்ததால் படுவேகமாகச் சுழன்று கொண்டு இருந்தது. இளைஞன் சாம்பவுண்ட் சுவரில் மோதி சாக்கடைக் கருகில் விழுந்து கிடந்தான். இவள் ஆட்டோவில் வந்த டிரைவர், கவிழ்ந்து கிடந்த ஆட்டோ டிரைவரை மேலே தூக்கி விட முயற்சித்துக் கொண்டிருந்தார். அதற்குள் கூட்டம் கூடி விட்டது. இளைஞனுக்குக் காலில் பேண்ட் கிழிந்து, இரத்தம் பரவிக் கிடந்தது. எழு முயற்சித்துக் கொண்டிருந்தான். யாரோ பைக்கை அணைத்து நிறுத்தினார்கள். சிலர் ஆட்டோவை நிமிர்த்தினார்கள். காயத்ரிக்குக் கண் முன் நடந்த விபத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்து இருந்தாள். தூரத்தில் இருந்த டீக்கடைக்குச் சென்று ஜக்கில் தண்ணீர் வாங்கி வந்தாள். தகவல் தெரிந்து டீக்கடையிலிருந்து சில பேர் அவள் பின் ஓடி வந்தார்கள்.

ஒரு வழியாக இளைஞனைத் திட்டித்தீர்த்தார்கள். அவனோ பரிதாபமாக, ‘பிரேக் ஒயர் கட் ஆயிடுச்சிங்க. வண்டி என் கட்டுப்பாட்டில இல்ல’ என்றான் அழாக் குறையாது. உண்மையில் அடி அவனுக்குத் தான் அதிகம் கசமுசாவென்று ஆளாளுக்குக் கத்தினார்கள். காயத்ரிக்கு தலை வழிப்பது போல இருந்தது. கூட்டி இருந்து விலகி வந்தாள்.

நேரம் போனதே தெரியவில்லை குழந்தைகளும் மூர்த்தியும் நினைவிற்கு வந்தார்கள். கூடவே ஐசுகிரீம் ஐயய்யோ. தன் ஆட்டோவை நோக்கி ஓடினாள். அங்கு ஐசுகிரீம் வைத்திருந்த கவரிலிருந்து வழிந்து சீட்டெல்லாம் பரவி கீழே சிதறிக் கிடந்த பொருட்களையெல்லாம் நனைத்து மண்ணோடு கலந்திருந்தது.

தன் ஆட்டோ டிரைவரைத் தேடினாள். அவன் தன் சக தொழிலாளிக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருந்தான். இப்போதைக்கு வர மாட்டான்.

காயத்ரி ஐசுகிரீமையும், கூட்டத்தையும் மாறிமாறிப் பார்த்தாள். தானும் ஐசுகிரீமும் ஒன்று தான் என்று ஏனோ அவளுக்குத் தோன்றியது.

‘கையில் ஊமன்….’ என்று எப்போதோ படித்த பாடல் நினைவிற்கு வந்தது.

ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்த போது, மூர்த்தி மிகவும் களைத்துப் போயிருந்தான். அவனைப் பார்த்தவுடன் கோபித்துக் கொண்டான். நடந்ததைச் சொன்னவுடன் தான் சமாதானமானான்.

‘‘நந்தினி ஒண்ணுமே சாப்பிடலை. ஹார்லிக்ஸ் தான் போட்டுக் கொடுத்தேன். சந்தனுவுக்கு நீ வச்ச குழம்பு புடிக்கலை. சப்பாத்தியில தேனைத் தடவி ரோல் பண்ணிக் குடுத்தேன். சமத்தா ரெண்டு சப்பாத்தி சாப்டுட்டான். ஒரு போனைப் பண்ணியிருந்தா நான் வந்து கூப்டிட்டு வந்திருப்பனுல்ல’’

‘‘எப்பவும் தனியாவே சமாளிச்சிப் பழக்கமாயிருச்சா. அதான் தோணலை அதுவுமில்லா ரெண்டு குழந்தைகளையும் சமாளிச்சி எப்படி நீ வர முடியும். அதான் எதுவும் சொல்லல’’ என்றாள்.

‘‘சரி சரி. நீ மதியம் எதுவும் செய்யாத. நான் ஹோட்டல்ல எதையாவது வாங்கிட்டு வந்திடறேன். மதியமாவது நல்ல சாப்பாடு சப்பிடலாம்’’ என்றான். அவன் கிண்டலாகச் சொன்னாலும், ஆறுதலாக இருந்தது. ‘‘நந்தினிக்குச் சப்பாத்தி ஊட்டுகிற வேலைய பாடு. வாயவே தொறக்க மாட்டேங்கறா. அழற போது பாரு ஊருக்கே கேட்கும்” என்றபடி குழந்தையைக் குறும்பாகப் பார்த்துச் சிரித்தான்.

நந்தினி ஒன்றும் புரியாமல், பதிலுக்குச் சிரித்து வைத்தது.

சந்தனு சமத்தாக்க் குட்டி சைக்கிளில் வலம் வந்து கொண்டிருந்தான். 

‘ஊரில் போய் மத்த வேலையெல்லாம் பாக்கணும்’ என்றபடி மூர்த்தி அன்று மாலை கிளம்பி விட்டான்.

சந்தனு டிவி பார்த்த படியே சோபாவில் அப்படியே தூங்கி விட்டான். அவனை எடுத்து பெட்ரூமில் போட்டு விட்டு வந்தாள். நந்தினியைச் சந்தனுவின் சைக்கிளில் அமர வைத்திருந்தாள். சந்தனுவைப் போல சைக்கிள் ஓட்ட முயற்சித்துக் கொண்டிருந்தாள். ஹேண்டில் பாரை இப்படியும் அப்படியுமாக திருப்பிக் கொண்டிருந்தாள். பெடலில் காலை அழுத்த இன்னும் தெரியவில்லை. நந்தினியருகிலேயே சப்பணமிட்டு காயத்ரி அமர்ந்து கொண்டாள். மணி இரவு பத்து ஆகிறது. இன்னும் நந்தினிக்குத் தூக்கம் வர வில்லை. ஆனால் காயத்ரிக்குத் தூக்கமாக வந்தது. வேறு வழியில்லை. உட்கார்ந்தபடியே சைக்கிள் சக்கரத்தை முன்னும் பின்னும் நகர்த்தி மகளுக்கு ஓட்டக் கத்துக் கொண்டிருந்தாள்.

ஒரு வழியாக நந்தினி ஓய்ந்து, சைக்கிளில் இருந்து இறங்கி மடியில் அமர்ந்து விட்டாள். அப்பாடா. நந்தினியை தூக்கிக் கொண்டு படுக்கறை சென்றாள்.

அவளைப் படுக்க வைத்துவிட்டு போர்வையைப் போர்த்துவிட்டு, சந்தனுவைப் பார்த்தாள். எப்போதும் ஒரு களித்தப் படுத்து தூங்குபவன், இன்று கவிழ்ந்து படுத்து, தலையணைக்குள் வலதுகையை விட்டபடி, வலது காலை சற்று வளைய வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தான்.

இப்படித்தான் ரகுநாதன் உறங்குவான் அப்படியே அச்சு அசலாக அவனைப் போலவே அவன் மகன் உறங்கிக் கொண்டிருக்கிறான். காயத்ரிக்குத் தூக்கம் தொலைந்து போனது. ரகுநாதனின் நினைவுகள் அலை கழித்தன. போனில் சாயந்திரம் பேசிய போது கூட, எப்போதும் வழக்கமான விசாரிப்புகள்தான். மனதைத் திசை திருப்ப சன்னலருகில் வந்து நின்றாள். ஞாயிற்றுக் கிழமையாதலால் அனைத்து வீடுகளும் உறக்கத்தில் இருந்தன. ஒரு நாயின் ஓசை கூட எங்கும் இல்லை. தொலைபேசி இரைச்சலும் இல்லை. அவளுக்குப் பற்றிக் கொண்டு வந்தது. 

அவளுக்குள் இருந்த அமைதிதான் தொலைந்து போயிருந்தது. மதியம் ஆட்டோவில் வீணாக உருகி வழிந்த ஐசுகிரீமின் பிசுபிசுப்பு ஏனோ நினைவிற்கு வந்தது. ரகுராம் வாங்கிக் கொடுத்திருந்த விலை உயர்ந்த டி.வி, பிரிட்ஜ், அடுப்பு, ஓவன், ஜன்னல் கண்ணாடிகள் எல்லாவற்றையும் உடைத்தும் போட வேண்டுமென்று ஆவேசம் வந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *