ஏமாற்றம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 20, 2012
பார்வையிட்டோர்: 14,983 
 
 

கணேசன் விழுந்தடித்துக் கொண்டு சாமியார் மண்டபத்தை அடைந்த போது, தியாகராஜன் வந்திருக்கவில்லை. அவனே அரை மணி லேட் என்றால் தியாகு அவனை விட மோசமாக இருக்கிறானே என்று சுற்று முற்றும் பார்த்தான். தியாகுவின் சுவடே காணோம். மண்டபத்தைச்சுற்றி மரங்களும் கொடிகளும் செடிகளும் ‘ பசேல் ‘ என்று பரவிக் கிடந்தன. சாமியார் மண்டபத்துக்கு இடது புறமும், வலது புறமும் வயல்கள் வீசிக் கிடந்தன. காற்றில் ஆடிய நெற் பயிர்களின் பச்சை கண்ணை வந்து அடித்தது. சாமியார் மண்டபத்தில் .காலை ஒன்பது, ஒன்பதரை மணி வரை அப்படி ஒரு ஆள் நடமாட்டம் இருக்கும். மண்டபத்தின் உள்ளே இருந்த பெரிய கிணற்றிலிருந்து பம்ப் செட் மூலமாக காலை வேலைகளில் வயல்களுக்கு நீர் பாய்ச்சுவார்கள். பம்ப் செட்டுக்குச் சற்றுத் தள்ளி ஒரு பெரிய நீர்த்தொட்டி கட்டப்பட்டிருந்தது. அதில் விழுந்து வெளியேறும் நீரிலும், மண்டபத்தின் உள்ளிருந்து, வயலுக்குப் போவதற்காகக் கட்டப்பட்டிருந்த அகன்ற சிமென்ட் வழிகளிலும், உட்கார்ந்து, தலை முங்கி, உருண்டு என்று சிறியவர்களும் பெரியவர்களும் குளித்து ஆட்டம் போடுவார்கள். பத்து மணிக்கு மேலே நாலில் இரண்டில் யாராவது வந்து அரைத் தூக்கம் போட்டு விட்டுப் போவார்கள். பெரும்பாலும் அமைதியாக இருக்கும் இடம் என்று தியாகு அவனுக்கு இந்த இடத்தைப் பார்த்துக் கொடுத்திருந்தான்.இந்தக் குளிர்ச்சியிலும் அமைதியிலும் முங்கி, வேறு எண்ணம் ஏதுமில்லாமல் படிப்பில் முழுக் கவனத்தையும் செலுத்த முடியும் என்று இங்கே வர கணேசன் ஒத்துக் கொண்டான். வருகிற ஜூனில் மறுபடியும் அரியர்ஸை. எழுத வேண்டும். அவனுக்கு எந்தக் காலத்திலும் பிடிக்காத விஞ்ஞானத்தையும் கணக்கையும் அவன் படித்தே ஆக வேண்டும் என்கிற அவனது அப்பாவின் பிடிவாதத்தால் அவனுக்கு இந்த நிலை. அவன் முதல் தடவை புகுமுக வகுப்பு பரிட்சை எழுதி முடித்து, ரிசல்ட் வருவதற்கு முன்பாகவே அவன் அப்பா இஞ்சினியரிங் காலேஜ், மெடிகல் காலேஜ் என்று பணத்தைக் கட்டி அப்ளிகேஷன் எல்லாம் வாங்கி வைத்தார். அவர் ஆசை அவருக்கு. ஆனால் அவனுக்கு விதித்திருந்தது என்னவோ ஜூன் மாதத்தில், மெடிகல் காலேஜ் அல்ல, சாமியார் மண்டபம்தான்.

தியாகராஜனும் கணேசனும் சிறு வயதிலிருந்து நண்பர்கள். ஒன்றாம் வகுப்பிலிருந்து சேர்ந்து படித்தவர்கள். எப்போதும் ஒருவர் கழுத்தை ஒருவர் பற்றித் தொங்கிக் கொண்டே அலைவார்கள். தியாகுவுக்கு படிப்பு சரியாக வரவில்லை என்று அவன் எட்டாம் கிளாஸ் பெயிலானதும் அவன் தந்தை படிப்பை நிறுத்தி விட்டார். அவனும் விட்டது சனியன் என்று ஊர் சுற்றுவதே தன் தொழில் என்பது போல் திரிந்து கொண்டிருந்தான். தினமும் காலையிலும் மாலையிலும் எம்டன் ஐயாவின் தேகப் பயிற்சி சாலைக்குப் போய்விடுவான். ஆளைப் பார்க்க வேண்டுமே, நீங்கள். பதினெட்டு வயசுக்கு, ஆள் பார்க்க இருபது, இருபத்திரண்டு வயது நிரம்பியவன் போல் இருப்பான். கை கால்கள் எல்லாம் நீள நீளமாக , அழுத்தமான சதைப் பிடிப்புடன், தினவெடுத்த காளை போலத்தான் வளைய வருவான். தெருவில் அவன் வரும்போது, எதிர்ப் படும் பெருசுகள், எங்கே, சண்டியர் வெளிய கிளம்பியாச்சா என்று சிரித்தபடியே கேட்பதுண்டு. நாளடைவில் அந்தப் பெயரே அவனுக்கு நிலைத்து விட்டது.

பெண்களை சைட் அடிக்க அவன் கூட நடந்து போக கணேசனுக்கு கொஞ்சம் கூச்சமாகத்தான் ஆரம்பத்தில் இருந்தது. கணேசன் கொஞ்சம் நெருங்கலான ஆசாமி. நெடு நெடு என்று இருப்பான் சதைப் பிடிப்பு அந்த உடலில் எங்கே என்று தேடிப் பார்க்க வேண்டும். அதனால் வாட்டசாட்டமாக வரும் தியாகுவுடன் கூட நடந்து செல்வது கணேசனுக்கு உள்ளூர ஒருவித தாழ்வு உணர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் நாளடைவில் தியாகுவுடன் நடந்து போகும் போது அவனுக்குப் பெண்களிடமிருந்து கிடைத்த வரவேற்பைப் பார்த்து கணேசன் பிரமித்து விட்டான்.அவர்கள் நடந்து சென்ற ஒவ்வொரு தெருவிலும், தியாகுவைப் பார்த்துப் பேச அல்லது ஒரு புன்னகையை எறிய இரண்டு மூன்று பெண்கள் இருந்தார்கள். இது அவரவர் வயதின் வேகத்தில் எழுந்த இயல்பான உணர்ச்சி என்று மற்றவர்கள் கண்டும் காணாதது போல இருந்தார்களா அல்லது சண்டியரின் பலத்தை எதற்கு அனாவசியமாக சீண்டிப் பார்க்கவேண்டும் என்று பயந்தார்களா என்று திட்டவட்டமாகத் தெரியவில்லை.

கணேசன் மண்டபத்தின் வாசலுக்கு வந்து எதிரே ஓடும் சாலையின் இடது பக்கமும் வலது பக்கமும் பார்த்தான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தியாகராஜனின் உருவம் தென்படவில்லை. சாமியார் மண்டபத்தின் முகப்பில் இருந்த பெரிய ஆலமரத்தின் அடியில் வருவோர் போவோர் வணங்குவதற்காக பிள்ளையார் சிலை இருந்தது. அதை ஒட்டி பெரிய சாக்குப் பையைப் போட்டு தினமும் வெள்ளரிக்காய் வியாபாரம் செய்யும் பெண்ணும் இன்னும் வந்திருக்கவில்லை. அவள் சில நாள் சீக்கிரமே வந்து விடுவாள். சில நாள் வர மாட்டாள். அவள் இருந்தால், தியாகு இந்தப் பக்கம் வந்தானா என்று கேட்டிருக்கலாம்.

தியாகுவும், கணேசனும் அன்று ஜகதா தியேட்டரில் மத்தியான ஷோ போவதாக இருந்தார்கள். அதனால்தான் கணேசன் படிப்பதற்கு என்று புத்தகம் எதுவும் எடுத்துக் கொண்டு வரவில்லை.தியாகுவுக்கு எம்டன் ஐயாவின் தேகப் பயிற்சி சாலையில் ‘வாத்தியார்’ வேலை கிடைத்ததைக் கொண்டாட என்று இருவரும் சினிமாவுக்குப் போகத் தீர்மானித்திருந்தார்கள். இப்போதே ஒரு மணி ஆகி விட்டது. இங்கிருந்து தியேட்டர் ரெண்டுங்கெட்டான் தூரத்தில் இருக்கிறது.பஸ்சுக்காக காத்திருக்கும் நேரத்தில், நடந்து போய் விடுவது உத்தமம். ஆனால் அதற்கும் இப்போதே கிளம்பினால்தான் நினைத்தது நடக்கும். சனியன் பிடித்த தியாகு எங்கே ஒழிந்து விட்டான்?

கணேசன் மறுபடியும் மண்டபத்தின் உள்ளே சென்றான். உலகம் அமைதியாக இருந்தது. ‘இன்னிக்கி சினிமாவுக்கு போனாப் போலதான்’ என்று விரக்தியாக நினைத்துக் கொண்டு கணேசன் மண்டபத்துத் தரையில் உட்கார்ந்தான். வாகாக இல்லை என்று உடம்பைச் சற்று பின்னுக்குத் தள்ளி சுவற்றில் சாய்ந்து கொண்டான். இன்னும் ஏன் தியாகு வரவில்லை என்று மனது அலைந்தது. சொன்ன நேரத்துக்கு வருபவன் என்று அவனுக்குப் பேர். இதற்கு முன் இரண்டு தடவைதான் தியாகு சொன்ன பேச்சைக் காப்பாற்ற முடியாமல் தவறி விட்டான்.அந்த இரண்டு முறையும், அதற்குக் காரணமாகஇருந்தது ஜமுனாதான். ஆனால் இன்று அவன் இன்னும் வராமல் இருப்பதற்குக் காரணம் ஜமுனாவாக இருக்க முடியாது.இப்போதுஅவள் கப்பலூரில் அவள் வேலை பார்க்கும் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் இருப்பாள்.இன்று காலை அவள் பாக்டரி பஸ்ஸில் ஏறிப் போவதை கணேசன் பார்த்தான்.

ஜமுனாவும் தியாகுவும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள் என்பது கணேசனுக்கு முதலில் தெரிந்திருக்கவில்லை. ஜமுனாவின் வீடு அவன் இருக்கும் தெருவில், அவன் வீட்டிலிருந்து மூன்று வீடு தள்ளி இருந்தது.இரு குடும்பத்துப் பெரியவர்களின் நட்பு, சிறியவர்கள் நடுவே சகஜ நிலையை வளர்த்தது. ஜமுனாவும் அவனும் சிறு வயதில் ஒன்றாக விளையாடி இருக்கிறார்கள்.படிக்கும் போதும் இந்த சிநேகிதம் தொடர்ந்தது . தனக்கு ஜமுனாவுடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டு விட்டது என்று தியாகு திடீரென்று ஒரு நாள் கணேசனிடம் சொன்னான். தன்னிடம் இது பற்றி ஏன் முன்னமே சொல்லவில்லை என்று கணேசன் தியாகுவைக் கோபித்துக் கொண்டான். அதற்கு தனது வெட்கமும், ஜமுனாவின் மனது பற்றித் தெளிவாகத் தெரியாததும் தான் காரணம் என்று தியாகு இறைஞ்சும் குரலில் சொன்னான்.

ஜமுனாவின் மனது பற்றி தியாகு சொன்னது சரிதான் என்று கணேசன் ஒப்புக் கொண்டான். அவள் தியாகுவை விடப் படித்தவள். அது போக, வேலை அவள் கைவசம் இருந்தது.பார்க்க அவள் நன்றாக இருப்பாள். கறுப்பும் இல்லாமல் பொன்னிறமும் இல்லாமல் ஒரு கலவை அவள் உடலில் கலந்திருந்தது. அந்த நிறத்தின் தனி வீச்சோ, முகத்தின் கவர்ச்சியோஏதோ ஒன்று பார்ப்பவரை வசியப் படுத்தும் சக்தி படைத்திருந்தது. அதில்தான் தியாகு மயங்கிக் கீழே விழுந்திருக்க வேண்டும் என்று கணேசன் நினைத்தான். தியாகுவிடம் ஜமுனாவைக் கவர்ந்த அம்சம் எதுவாக இருக்கக் கூடும் என்று அவனுக்குப் பிடிபடவில்லை. அவனுடைய உடம்பா? இல்லை. தான் அப்படி நினைப்பது மிகவும் தவறு. அதுவும் ஜமுனாவைச்சிறுமைப் படுத்தும் விதத்தில் சிந்தனை வரக்கூடாது. அவனுக்கு ஜமுனாவை ரொம்பப் பிடிக்கும். பெண்களின் மனமே கதைகளிலும் சினிமாக்களிலும் சொல்லப் படுவது போல ஒரு புரியாத புதிர்தான் போலிருக்கிறது. இருந்தாலும் நாளை தியாகுவின், படிப்பு வேலை இரண்டும் குறுக்கே வந்து விழுந்து அவன் வாழ்க்கையைக் கெடுத்து விடத் துணிந்தால்?

ஆனால் தியாகு இதுவரை ஜமுனவுடன் பழகியது ,பேசியது பற்றியெல்லாம் கணேசனிடம் கூறியதில் இருந்து, அவர்கள் இருவரும் உண்மையான அன்புடன்தான் பழகியிருப்பதாக அவனுக்குத் தோன்றிற்று. தியாகு ரொம்பவும் வெள்ளை மனசு படைத்தவன். இல்லா விட்டால் இம்மாதிரி அந்தரங்க விஷயங்களைப் பற்றி யாராவது பேசுவார்களா?–

காற்று உல்லாசமாக வீசிற்று. அதில் மயங்கியோ, உடல் அலுப்பிலோ கணேசன் தரையில் படுத்துத் தூங்கி விட்டான்.

தூக்கம் கலைந்த போது, தியாகு அவன் கண்களுக்குத் தெரிந்தான். அவன் உலுப்பித்தான்தன் தூக்கம் கலைந்தது என்று உணர கணேசனுக்கு சில கணங்கள் பிடித்தன. கைக் கடிகாரத்தைப்பார்த்தான். இரண்டே கால் என்றது. ஒரு மணி நேரம் தூங்கி விட்டேனா என்று எழுந்து கொண்டான்.

தியாகு அப்போதுதான் குளித்து விட்டு வந்தவன் போலிருந்தான்.

“தியாகு, என்னடா ஆச்சு? என்னை வரச் சொல்லிட்டு நீ பாட்டுக்கு கம்பி நீட்டிட்டே?உடம்பு கிடம்பு சரியில்லையா?” என்று கேட்டான் கணேசன்.

“என்னைப் பார்த்தா உடம்பு சரியில்லாதவன் மாதிரியா இருக்கேன் ?” என்று பதிலுக்கு தியாகு கேட்டான்.

“இல்ல, நீ வரலியே, அதனாலே எங்கயாவது போகறபடி ஆயிடுச்சோன்னு.. ”

“நான் இங்கதான் இருந்தேன்.”

“என்னது?”

“ஆமா. சொன்னபடி பனிரெண்டு மணிக்கு நான் இங்க வந்திட்டேன் .”

கணேசன் சிரித்தான். “அடேயப்பா, என்ன உடான்ஸ்! நான் வரதுக்கு அரை மணி லேட் ஆச்சுதான். அதுக்காக நீ யானைய நெல்லு வரப்புக்குள்ள மறைக்கிற சாமர்த்தியத்தை என் கிட்டே காமிக்க வேணாம்.”

“இல்ல, நான் இங்கதான் இருந்தேன்” என்றான் தியாகு, கணேசனை நேரடியாகப் பார்க்காமலே.

“தியாகு, நானும் வந்ததிலேர்ந்து அங்கே இங்கேன்னு கண்ணைச் சுழட்டிப் பாத்துப் பாத்து கண்ணு வலியே வந்திட்டது. வாசலுக்குப் போய் நின்னு பாத்தேன். அந்த வெள்ரிக்கா விக்கற பொண்ணு இருந்தா அவளைக் கேட்டு பாத்திருக்கலாம்னா இன்னிக்கின்னு பாத்து அவ வரலே”

“அவ எங்கூடன்னா இருந்தா !” கணேசன் வாயடைத்துப் போய் தியாகுவைப் பார்த்தான்.

தியாகு கணேசனை இன்னும் நேரடியாகப் பார்க்கவில்லை. கண்கள் அங்கும் இங்கும் அலைந்தன.

“என்னடா சொல்றே?” என்று கணேசன் அவனை உலுக்கினான்.

தியாகு உடனடியாக ஒன்றும் சொல்லாமல் தரையில் உட்கார்ந்து கொண்டான்.

கணேசனுக்கு புரிந்தது மாதிரியும் இருந்தது. முழுதும் புரியாதது மாதிரியும் இருந்தது.

அந்தப் பெண் தியாகுவைப் பார்க்கும் போதெல்லாம் வம்புக்கு இழுப்பதை கணேசன் கவனித்து இருக்கிறான். அவர்களைப் பார்க்கும் போது வெள்ளரிக் காய்களை எடுத்துக் கொடுப்பாள். ‘மாடக்குளம் கம்மாயில விளைஞ்சது. கடிச்சு பாரு. ஐஸ் க்ரீம் மாதிரி உள்ளே போகும்’ என்பாள். பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ள மாட்டாள். எப்போதும் வாயில் வெற்றிலையும் சிரிப்பும் பொங்கிக் கொண்டிருக்கும். முகம் ‘புரு புரு’வென்றிருக்கும். அவளா?

“சொன்னபடி பன்னெண்டு மணிக்கு வந்திட்டேன். இங்க யாரும் இல்ல. அவ மட்டுந்தாஇருந்தா. ‘இன்னிக்கு வேபாரம் எல்லாம் ஆச்சு’ன்னு சொல்லிகிட்டே எழுந்து நின்னு சோம்பல் முறிச்சா. எனக்கு வாயில சனி. ‘ஏன் ரவைக்கு தூங்கலியா’ன்னேன் ‘ஏன், என்னப் பாத்தா எப்படி இருக்குன்னு?ன்னு கேட்டா. ‘இல்ல, வெள்ளரிகாய வளைக்கிற மாதிரி உடம்ப போட்டு இந்த பாடு படுத்துறையே’ன்னேன். ‘ஏன் என்னைய பாத்தா உனக்கு நான் விக்கற காய்தான் கியாபகத்துக்கு வருதோ’ன்னா. உதட்ட மடிச்சுகிட்டு, கண்ணுல அப்பிடி ஒரு குசும்பு. ‘வெள்ளரிக்கான்னா சும்மா கிடக்குதா என்ன, அப்பிடி ஒரு பளபளப்பு, கடிச்சு திங்கணும் போல’ன்னேன் ‘சரி, அப்ப கடிச்சு தின்னுரு’ன்னா. சொல்லிகிட்டே அப்படியே என் பக்கத்தில வந்திட்டா . எனக்கு ஒரு மாதிரி ‘வெல வெல’ன்னு ஆயிடிச்சு. உன் பேரே சொல்லி கேட்டேன் நீ இன்னும் வரலியான்னு. அவ பதில் ஒண்ணும் சொல்லாம பம்ப் செட் பக்கம் போனா. ‘சரி, நா ஊட்டுக்கு போகோணும். மழையில நனஞ்சிரப் போகுதேன்னு, நாலஞ்சு கூடைய உள்ளேபோட்டிருக்கேன். பம்ப் செட்டு ரூமுக்குள்ள இறங்கி எடுத்து குடுத்துரு’ன்னா ‘சரி’ன்னு பம்பு செட்டு கதவ தொறந்து படில எறங்கி கீழே போனேன். தரேல இருந்த கூடைய எடுத்துட்டு திரும்பினா என் முகத்துக்கு எதிர நிக்கறா. என்னன்னு கேக்க நா வாயத் திறக்கறதுக்குள்ள அவ வாய வச்சு மூடினா. என்னைய இறுக்க கட்டி பிடிச்சுகிட்டுஅமுக்கரா. விடு விடு’ங்கிறேன் . காது, மூக்கு, கண்ணு, உதடுன்னு ஒண்ணு விடாம என்னமா கடிச்சு….! அம்மா.. அம்மா…..அவள ஒத்தக் கையால கோழிக் குஞ்ச விசிர்ற மாதிரி தூக்கி அலாக்கா எறிய அர நிமிசம் ஆகாது. ஆனா உடம்பு கேக்க மாட்டேங்குது. வாய் வேணாம்,வேணாம்னு சொல்லி கிட்டே இருக்கு. ஆனா கையி அவ இளுக்கற பக்கமெல்லாம் போகுது. எனக்கு பிடிக்கலே. ஆனா பிடிச்சிருக்கு. ஒவ்வோரு தடவையும் தள்ளி உடறேன். அவ மேல மேல வந்து விளுந்துகிட்டே இருக்கா. அப்பிடி மேலே வந்து விளறது எனக்கு பிடிச்சிருக்கு. அதுக்காகவே தள்ளி விட்டுக்கிட்டே இருக்கேனோன்னு…ஆனா பொம்பளைக்கு இவ்வளோ பலம்,சக்தி இருக்குன்னு இன்னிக்கித்தான் தெரிஞ்சிகிட்டேன். ”

கணேசனுக்கு பேச்சு எழவில்லை. தியாகுவின் வார்த்தைகளினால் அவனுள் ஏற்பட்ட கற்பனையின் உக்கிரத்தைத் தாங்க முடியவில்லை. பரிதாபம், கோபம்,ஏமாற்றம், பொறாமை என்று உணர்ச்சிகள் எல்லாம் முண்டியடித்துக் கொண்டு கணேசனின் மனதைப் பதற அடித்தன. ஜமுனாவின் உருவம் நினைவில் திடீரென்று வந்து சென்றது. தியாகுவின் முகமும் குரலும் உடைந்து கிடந்தன.

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலே” என்றான் கணேசன்.

“எனக்கு உன்னை விட்டா யாருகிட்டயும் இதை போய் சொல்ல முடியாது. உன்னையும் பாக்காம கொஞ்ச நாள் எங்கயாச்சும் போயிரலாமான்னு தோணிச்சு. ஆனா இதை மனசுக்குள்ள அடச்சு வச்சுக்கிட்டு அதுவரைக்கும் போராடிக்கிட்டு இருக்க முடியாதுன்னுதான் இப்ப உன்கிட்ட வந்து கொட்டிப்பிட்டேன்.”

“சரி, போகலாம் வா” என்று கணேசன் எழுந்தான். தியாகு நகரவில்லை.

“இல்ல, நான் கொஞ்ச நேரம் இங்கியே இருக்கேன். நீ போ” என்றான் தியாகு.கணேசன் அவனை வற்புறுத்தியும் தியாகு அசைந்து கொடுப்பவனாக இல்லை.. கணேசன் அவனிடம் விடை பெற்றுக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.

அன்று இரவும் அதற்கு அடுத்த இரண்டு நாட்களும் கணேசனால் தியாகுவைப் பார்க்க முடியவில்லை. வீட்டில் கேட்டால் வெளியே போயிருக்கிறான் என்றார்கள். எம்டன் ஐயா இடத்திலும் அவனைக் காண முடியவில்லை.

இரண்டு நாட்களும் கணேசனின் மனம் அலைபாய்ந்தது. அலையை நிறுத்தி, கதவைத் திறந்து கொண்டு வரிசையாக ராகு, கேது, சனி என்று பெரிய முனிகள் எல்லோரும் வந்து வரிசையாக சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டார்கள். கூடவே பூரான், தேள். நட்டுவாக்கிளி, நாகம், மலைப் பாம்பு, கீரி, தேனீ என சிறு முனிகள் வந்து நின்றன. நட்ட நடுவில் யாக சாலையின் தீ பெரிய, சிறிய முனிகளால் மூட்டப்பட்டது. பொறாமை நெய்யை ஊற்ற ஊற்ற நெருப்பு பற்றிக் கொண்டு எரிந்தது. நேரம் ஆக ஆக தீ உயரே உயரே எழுந்தது. ஜுவாலையின் தகிப்பு தாங்க முடியாமல் வாய் தவித்தது. எங்கேயாவது துப்பி விட மாட்டோமா என்று கணேசன் பரபரத்தான்.

அப்போது ஜமுனா அவன் எதிரே வந்தாள். அவன் தியாகுவைத் தேடி விட்டு திரும்பிக் கொண்டிருந்தான். மணி ஐந்திருக்கும்.

“எங்கே உங்க ஆளு?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.

“எங்க ஆளா, உங்க ஆளா?”

“சரி , எங்க ஆளுதான். ரெண்டு நாளா இந்தப் பக்கமே தலைய காணமே ?”

“தொங்கப் போட்ட தலைய நிமித்த முடியலையோ என்னமோ?” அடக்க மாட்டாமல் வாயிலிருந்து வார்த்தை குதித்து வெளியே துள்ளி விழுந்தது.

“என்னது?”

ஜமுனாவின் பார்வையை கணேசனால் எதிர் கொள்ள முடியவில்லை.

“ஒண்ணுமில்ல. சரி, வரட்டா? அப்புறமா பாக்கலாம்” என்று நகர முற்பட்டான். மனது உள்ளுக்குள் நடுங்கிற்று. “நில்லு” என்றாள் ஜமுனா. அவள் குரலில் தென்பட்ட கடுமை அவன் காலைக் கட்டிப் போட்டது.

“சொல்ல வந்தத முழுசா சொல்லு” என்றாள். அவள் குரல் கட்டளையைப் போல் ஒலித்தது.

கணேசன் தன்னையே சபித்துக் கொண்டான். அதே சமயம் உள்ளூர ஒரு புளகாங்கிதம் ஓடியது போல் உணர்ந்தான்.

“வேண்டாம். என்ன தொந்தரவு பண்ணாத” என்றான் கணேசன்.

“இப்ப என்ன சொல்லணும்னு வந்தயோ, அதெ சொல்லப் போறயா இல்லையா?” என்றாள் ஜமுனா. “நீ இனிமே என் முகத்தில முழிக்கணும்னு நினச்சா இப்பவே சொல்லு. இல்லாட்டா நா போறேன்.”

“சரி, வேண்டாம்னு பாத்தேன். ஆனா நீ பிடிவாதமா இருக்கே. என் தப்புதான். வாயை மூடிகிட்டு இருந்திருக்கணும். தவறிப் போச்சு. இப்ப கூட இப்படியே நீ விட்டுரலாம். ஆனா நீ கேக்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறே” என்று கணேசன் அவள் முகத்தைப் பார்த்தான்.

அவள் விட்டுக் கொடுப்பவள் போல் தோன்றவில்லை. அவன் முகத்திலிருந்து பார்வையைத் திருப்பவில்லை. அவன் பேசட்டும் என்று காத்திருப்பவள் போல் ஒன்றும் பேசாமல் நின்று கொண்டிருந்தாள்.

கணேசன் குரலைத் தாழ்த்திக் கொண்டு “ஆமாம்.தலை குனிவான விஷயம்தான் நடந்திருச்சு. பாவம் தியாகு. கலங்கிக் கிடக்கான். நானும் அவனை பாத்து ரெண்டு நாள் ஆச்சு. அவ அப்படி அவன சகதில தள்ளி விடுவான்னு எதிர்பார்க்கல” என்றான்.

“யாரு அவ?” என்று ஜமுனா கேட்டாள். அவள் முகம் கல்லைப் போலிருந்தது.அவள் உணர்வுகளைத் தெரிந்து கொள்ள முடியவில்லை.

“சாமியார் மடம் வாசல்ல உட்கார்ந்துகிட்டு இருப்பா, வெள்ளரிக்காய கூறு போட்டுக்கிட்டு வித்திட்டு இருப்பாளே.”

“உங்க சண்டியரு மாட்டிகிட்டாருன்னு என்ன நம்பச் சொல்ற!”

கணேசன் விழித்தான். இவள் என்ன சொல்கிறாள்? தியாகு குற்றவாளி என்றா? அவன் உள்ளம் துள்ளிற்று. ஜமுனா தலை குனிந்து உட்கார்ந்திருந்தாள்.

“ஜமுனா , நீ சொல்றது ஒரு விதத்தில சரிதான். அவன் நினைச்சிருந்தா, சீ களுதேன்னு தூக்கி எறிஞ்சிருக்கலாம். ஆனா அவதான் என்மேல பாஞ்சு கெடுத்திட்டான்னு புலம்பறான். உன்னை ஒரு நிமிஷம் அவன் நினைச்சு பார்த்திருந்தா இதையெல்லாம் நடக்க விட்டிருப்பானா?” என்று உணர்ச்சி வசப்பட்ட குரலில் கேட்டான்.

ஜமுனா ‘விருட்’டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அந்தக் கூரிய பார்வையின் உஷ்ணத்தைத்தாங்க முடியாதது போல கணேசன் தலையைக் குனிந்து கொண்டான்.

“இதெல்லாம் நடந்துகிட்டு இருந்தப்ப நீயும் கூடதான எல்லாத்தையும் பாத்துக்கிட்டே இருந்திருக்கே” என்று ஜமுனா கோபமான குரலில் கேட்டாள்.

கணேசன் அன்று சாமியார் மடத்துக்குப் போய் தியாகுவின் வருகைக்காக காத்திருந்ததையும், அதற்குப் பின் நடந்தவற்றையும் ஜமுனாவிடம் சொன்னான். தியாகு அன்று ‘மாட்டிக்’ கொண்ட போது அது பற்றித் தனக்கு எதுவும் தெரியாத நிலையில் இருந்ததைச் சொன்னான். தனக்குத் தெரிந்ததெல்லாம் தியாகு தன்னிடத்தில் சொன்னது மூலம்தான் என்று சொன்னான்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, ஜமுனா அவனிடம் எதுவும் பேசாமல் அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

ஒரு வாரம் சென்றது. கணேசன் தினமும் இரண்டு தடவை காலையிலும் மாலையிலும் தியாகுவைத் தேடிச் சென்று, பார்க்க முடியாமல் திரும்பினான். ஜமுனாவையும் பார்க்க முடியவில்லை. அவள் தியாகுவைப் பார்த்திருப்பாளோ?அவனிடம் இந்த விஷயத்தைக் கேட்டிருப்பாளோ? அன்று அவள் பேசியதைப் பார்த்தால், தியாகுவின் மீது நம்பிக்கை இழந்து விட்ட மாதிரித்தான் இருந்தது. எந்தப் பெண்ணால் இந்த மாதிரி அநியாயத்தைப் பொறுத்துக் கொள்ள முடியும்? ஒரு சமயம், தியாகு அவளைப் பார்க்க வந்து, அவள் அவனைப்[ பார்க்க மறுத்து… ஜமுனா நான் சொன்னதை தியாகுவிடம் சொல்லி , அவன் வெகுண்டு தன்னைப் பார்க்க மறுத்துக் கொண்டிருக்கின்றானா? கேள்விகள் அவனைத் துளைத்துக் கொண்டிருந்தன.

ஒரு நாள் மாலை வீட்டில் குளித்து விட்டு தலை சீவிக் கொண்டிருந்த போது அவன் அம்மா வந்து தியாகு வந்திருக்கிறான் என்றாள். உள்ளே உட்காரச் சொன்னதுக்கு பரவாயில்லை என்று வாசலிலேயே நின்று கொண்டிருப்பதாக சொல்லி விட்டுப் போனாள்.

கணேசன் அவசரமாக உடை மாற்றிக் கொண்டு வாசலுக்கு வந்தான். அவனைப் பார்த்ததும் தியாகு வாசலிலிருந்து நகர்ந்து தெருவுக்குச் சென்றான். கணேசன் அவனைப் பின் தொடர்ந்து சென்று அவனருகில் நின்றான்.

“எங்கடா ஒரு வாரமா காணோம்? எங்கினாச்சும் வெளியூரு போயிருந்தியா?”

“இந்த மூஞ்சிய வச்சுகிட்டு எந்த ஊருக்கு போறது? நீ தினைக்கும் வீட்டுப் பக்கம் வந்ததா சொன்னாங்க” என்று சொல்லியபடி மேலே நடந்தான்.

“ஆமா. உன்னதான் பாக்க முடியலே” என்றான் கணேசன். மேலே என்ன பேசுவது என்று அவனுக்குத் தெரியவில்லை. அவர்கள் சீனிவாசா மில்ஸ் பஸ் நிறுத்தத்தின் அருகே இருந்த கல் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டார்கள். மேற்கே திருப்பரங்குன்றத்து மலை உச்சி தெரிந்தது. கணேசன் அதைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டான். ஒரு ஐந்தாம் நம்பர் பஸ் வந்து ஸ்டாப்பில் நின்ற எல்லோரையும் அள்ளிக் கொண்டு சென்றது. மாலைக் காற்றும் மங்கும் அந்தியின் ஒளியும் தவிர அவர்களுடன் வேறு யாரும் அங்கே இல்லை .

“கணேசா, நீ இப்பிடி செய்வேன்னு நான் கனவுல கூட நினைக்கலடா” என்றான் தியாகு. அவன் குரல் உணர்ச்சி வசப் பட்டதாலோ என்னவோ, கனத்து இருந்தது.

இந்தக் கணத்தை எதிர்பார்த்து கணேசன் ஏற்கனவே வெகுவாக வியர்த்திருந்தான். அவன் தியாகுவின் கையைப் பிடித்துக் கொண்டு “ஸாரிடா!” என்று தழதழத்தான்.

“செய்யறத எல்லாம் செஞ்சிட்டு அப்புறம் எதுக்குடா இந்த எழவெடுத்த வார்த்த?”

கணேசன் பதில் எதுவும் சொல்லாமல் உட்கார்ந்திருந்தான்.

“எவ்வளோ நம்பிக்க வச்சு உங்கிட்ட வந்து சொன்னேன். என்னால உள்ள வச்சுகிட்டு தாங்க முடியாதுறா கணேசான்னுதானே உங்கிட்ட வந்தேன். இப்பிடி நீ பின்னால வந்து கால வாரி விட்டு என்னைய அமுக்கி போடுவேன்னு கொஞ்சம் கூட நினைக்கலே” என்றவன் கணேசனின் முகத்தைப் பார்த்து “ஏண்டா இப்பிடி செஞ்சு போட்டே?” என்று ஆத்திரமாகக் கேட்டான். கணேசன் பதிலளிக்கவில்லை. தியாகுவின் கோபம் அடங்கும் வரை மௌனம்தான் சரி என்று அவனுக்குத் தெரியும். அது தவிர குற்றவாளியான அவன் தியாகுவிடம் என்ன பதில் அளித்து விட முடியும்? பொய்யைத் தவிர?

“ஆனா நீ என்ன நெனச்சு பண்ணினையோ, அது நடக்கல. அதில்லாம நீ என்ன நடக்க வேண்டாம்னு நெனச்சியோ , அது நடந்திருச்சு” என்றான் தியாகு.

தியாகு என்ன சொல்கிறான் என்று புரியாமல் கணேசன் ‘திரு திரு’வென்று முழித்தான்.

அவன் முகத்தைப் பார்த்து தியாகுவுக்கு கோபம் மறைந்து விட்டது.

“சரி, இப்ப சும்மா முளிச்சு என்ன பிரயோசனம்? போன வாரம் நீ ஜமுனாவ பாத்து பேசிட்டு போனேல்ல , அன்னிக்கு நானும் அவளைப் போயி பாத்தேன். ஆனா அப்ப அன்னிக்கு சாயந்திரம் நீங்க ரெண்டு பேரும் பாத்து பேசிகிட்டது எனக்கு தெரியாது. நா போன போது ஆறு மணி இருக்கும். சாமியாரு மண்டபத்தில நடந்தது எல்லாத்தையும் ஜமுனாகிட்ட சொல்லிடறதுன்னுதான் போனேன். அதுக்கு அப்புறம் அவ முகத்துல முளிக்க முடியாதுன்னு தெரிஞ்சி கிட்டேதான் போனேன். ஆனா என்னயப் பாத்து மொகங் கொடுத்து பேசல. ரெண்டு நாளா தொரே எங்க போனே, சொல்லக் கூட முடியலையான்னு ரொம்ப கோவமா இருந்தா. அவள சமாதானப்படுத்துறதுக்கே அரை மணி ஆச்சு. நா என் விசயத்த எடுக்கலாம்னு வாய தெறக்கறேன்…” என்று நிறுத்தினான் தியாகு. பிறகு சட்டைப் பையிலிருந்து ஒரு சார்மினாரை எடுத்து பற்ற வைத்துக் கொண்டான். ஒரு இழுப்பு இழுத்து விட்டு, சிகரெட்டை கணேசனிடம் நீட்டினான்.

கணேசன் வாங்கி ‘தம்’ இழுத்தான். தியாகு என்ன சொல்ல வருகிறான் என்று புரியாத நிலையில் சிகரெட்டின் மணம் இதத்தைத் தருவதாக இருந்தது.

“நா பேசறதுக்கு முன்னாடி அவளே சொல்ல ஆரமிச்சிட்டா. உன் பிரண்டு கொஞ்ச நேரத்துக்கு முந்தி உம்மேல இல்லாத கதை எல்லாம் கட்ட ஆரமிச்சிட்டான்னு ”

“என்னது?”

“ஆமா. நீ என் மேல இருக்குற பொறாமையினாலே என்னை பத்தி மோசமா அவ கிட்டே சொன்னேன்னு சொன்னா.சே,சே, அப்படியெல்லாம் அவன் பேசமாட்டான். உங்கிட்ட என்ன சொன்னான்னு கேட்டேன்.”

கணேசனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

“சாமியார் மடத்து வாசல்ல வேபாரம் பண்ணிக்கிட்டு இருந்தவளோட நீ போயிட்டேன்னு வாய் மேல பல்லு போட்டு பேசறான். நீ என்னடான்னா அவனை போயி சிநேகிதன்னு கொண்டாடிகிட்டு இருக்கே. எனக்கு வந்த கோபத்துல அவன் மூஞ்சில காறி துப்பணும்னு இருந்திச்சுன்னு கோபமா கத்துறா. ”

கணேசன் கையில் இருந்த கர்சீப்பால் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டான்.

“சரி, சரி, விடுங்கிறேன். நிறுத்த மாட்டேங்கறா. அவனுக்கு எப்பவும் என் மேல ஒரு கண்ணு. ஒரு நா இல்லாட்டி ஒரு நா அந்த முளிய பிடுங்கத்தான் போறேங்கிறா. இவ்வளவு நாளா உனக்காகத்தான் அவன் அடிக்கற கூத்தை எல்லாம் கண்டுக்காம இருந்தேன். கடேசீல உன் அடிமடிலேயே கை போடப் பாக்குறான். ‘தூ’ன்னு தெருவில துப்புறா.”

கணேசனுக்கு ஜமுனாவைக் கொன்று விட வேண்டும் போல் மனதுக்குள் ஆத்திரம் பொங்கிற்று. உண்மையைச் சொன்ன தன்னைத் தூக்கிலிட விரும்பும் ஜமுனாவின் அகங்காரம் அவனுக்கு எரிச்சலை உண்டாக்கிற்று.

“ஜமுனாவ நான் சமாதானப் படுத்தல. ஏன்னா நீ சொன்னேன்னு அவ சொன்னதை என்னால முளுங்கவே முடியல. இவ்ளோ வருசமா உங்கிட்ட பளகியும் உன்னைய நா சரியா புரிஞ்சிகலேங்கிறது எனக்கு பெரிய ஏமாத்தமா ஆயிருச்சு. நீ ஏன் இப்படி பண்ணினே? நா ஒரு நா கூட உனக்கு ஒரு கஷ்டம் குடுக்கலையே. அப்படி ஏதாவது ஆகியிருந்தாலும் நீ பழி வாங்கினேன்னு ஒரு காரணம் இருக்கும். ஜமுனா சொல்லுற மாதிரி நீ பொறாமை பிடிச்சு அலைஞ்சா இப்பிடி பண்ணினே?”

சாலையில் விளக்குகள் எரியத் தொடங்கின.சில் வண்டுகளின் ரீங்காரம் சுற்றியிருந்த அமைதியைப் பெரிதாக்கிக் காட்டின.

கணேசனின் பதிலை எதிர்பாராது, தியாகு மீண்டும் பேசினான். “இனிமே உன் முகத்திலேயே முளிக்கக் கூடாதுன்னுதான் அப்ப நினச்சன். என்னப் பேச விடாம ஜமுனா அவளே பேசிகிட்டு இருந்தா. நா என்ன சொல்லறதுக்குன்னு அவ கிட்ட போனேனோ அதெ சொல்லவே முடியலே. என் மேல அவ வச்சிருக்குற நம்பிக்கைய பாத்தா, நான் உண்மயா நடந்தத சொன்னா கூட அவ நம்ப மாட்டான்னு எனக்கு உறுதியாயிடுச்சு.”

கணேசன் அவன் கையைப் பிடித்துக் கொண்டு “நா பெரிய பாவம் பண்ணிட்டேன்” என்றான் . “நீ என்னைய ஏமாத்தினதை விட, அவ இப்படி ஒரு கண்மூடித் தனமான வெறியில என் கிட்ட ஏமாந்துக்கிட்டு இருக்கறதை என்னால தாங்க முடியல. உனக்கு நா சொல்றத புரிஞ்சிக்க முடியுமான்னு எனக்கு தெரியல. ஆனா இந்த ரெண்டு பக்க இடில நா நொறுங்கி போயிட்டேன். இப்ப நடந்துகிட்டு, பேசிகிட்டு, உக்கார்ந்துகிட்டு, தெனமும் குளிச்சு டிரெஸ் போட்டுகிட்டு நடமாடிக்கிட்டு இருக்கறேதெல்லாம் தியாகு இல்ல. இது வேறே ஏதோ ஒண்ணு.நீ எனக்கு துரோகம் செஞ்ச மாதிரி நா ஜமுனாவுக்கு பண்ண முடியாது. அவ நம்பிக்கையே எனக்கு ஒரு சுருக்கு கயிறு மாதிரி இருக்கு.” என்று தியாகு முகத்தை கைகளுக்குள் புதைத்துக் கொண்டான்.

அவர்களிடையே கனத்த மௌனம் நிலவிற்று. இப்போது எதிப் புறம் இருந்த வயல்களில், தவளைகள் ‘க்ராக்’ ‘க்ராக்’ என்று சத்தமிட்டுக் கொண்டிருந்தன.

“மள வரும் போல இருக்கு, சரி, போலாம்” என்று தியாகு எழுந்தான். கூடவே கணேசனும்.

“நீ வீட்டுக்கு போ. நான் பசுமலைக்குப் போயிட்டு போணும்” என்று தியாகு விடை கொடுத்தான். இருவரும் எதிரெதிர் திசையில் நடந்தார்கள்.

மறுநாள் கணேசன் தியாகுவை எவ்வளவோ முயன்றும் பார்க்கமுடியவில்லை அதற்கு அப்புறம் அவன் அவனை எப்போதும் பார்க்கவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *