கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 7, 2016
பார்வையிட்டோர்: 10,996 
 

சுற்றிலும் திடீரென இருள் சூழ்ந்தது போலாகிவிட்டது எனக்கு. டாக்டர் அப்போதுதான் சொல்லிவிட்டு போனார்.. என் அம்மா இறந்து விட்டார்கள் என்று. முதல் நாள் இரவில் இருந்து .. இன்று மதியம் வரை வெறித்த பார்வையுடன் தன் நினைவு இன்றி ஒய்வு எடுப்பது போல் இருந்தவள் இப்போது இறந்தவள் .. எட்டு மாதங்களாக டிமென்ஷியா என்ற நோயினால் தன்னையே மறந்து என்னிடமும் என் மனைவி, எனது மகள் மற்றும் மகனோடு தன இறுதி நாட்களை கழித்தவள்.. இனி எங்களோடு இல்லை..அழுகையும்.. அவளை காப்பாற்ற முடியாமல் போன இயலாமையும் சேர்ந்து என்னை அலைக்கழிக்கத் தொடங்கிய நேரம் .. அவள் வாழ்க்கையின் பல பரிமாணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வலம் வந்தன.

வாழ்ந்து கெட்ட குடும்பம் என்பார்களே .. அதுதான் என் தாய் வந்தடைந்த வீடு. பெரிய கூட்டுக் குடும்பம் .. வறுமையும் கூடிய குடும்பம்.. தன் பங்கிற்கு வந்த நாளில் இருந்தே அப்பளம் இட்டு விற்பது, மாடு வளர்த்து பால் வியாபாரம் செய்வது, சீட்டு கட்டி கஷ்டப் பட்டது, இட்லி சுட்டு கடைக்கு கொடுத்தனுப்பி காசு பார்க்க முயன்றது.. என்று அவளால் முடிந்த வரை அத்தனை கண்ணிய முறைகளிலும் உழைத்து ஓடாகிப் போனவள்.. நெறி பிழறா வேதாந்த வழி சென்ற மாமனார், படு அமைதியான மாமியார், பொறுமையின் சிகரமான ஏழை வாத்தியார் கணவர். ஏழு பிள்ளைகள் பெற்று என்னை மட்டுமே மிச்சமாய் பெற்று .. வாழ் நாள் எல்லாம் வாழ்வுடன் போராடியவள் .. நிரந்தரமாய் அமைதி இன்று கொண்டவள் … அவளை நாடி வந்த உறவினராகட்டும்.. வறியவர் ஆகட்டும் .. எவ்வளவு பேர்களுக்கு சளைக்காமல் இருப்பதைப் பகிர்ந்து தந்து அன்னமிட்ட கை.. இன்று அசைவின்றி …

ஏன் இவளுக்கு மட்டும் இறைவன் இப்படி ஒரு சாவை தந்தான் .. தான் யார் என்பது தெரியாது.. எங்கள் யாரையும் தெரியாது.. தனக்கு வேண்டியது செய்து கொள்ளத் தெரியாது.. நாம் எது சொன்னாலும் புரியாது..சுவற்றை பார்த்து யாரிடமோ பேசிக்கொண்டு இருப்பாள் ஒரு நேரம்.. நாற்பது ஐம்பது ஆண்டுக்கு முன் நடந்த ஏதோ ஒரு நிகழ்வை இப்போது நடப்பது போல் பேசி கொண்டு இருப்பாள் ஒரு நேரம்.. என் மனைவியை ” எக்கா” , ” தா அண்ணீ” என்று அழைப்பாள் ஒரு நேரம்.. சுருண்டு கிடப்பாள் ஒரு குழந்தையை போல பல நேரம்..

அவளை இந்த எட்டு மாதமும் குழந்தையை போல வைத்து பாதுகாத்த என் மனைவி என்றும் நான் வணங்க வேண்டிய இன்னொரு தாய் என்பதை எனக்கு உணர்த்தி விட்டு சென்றாள் என் தாய்.. காலையில் அவளை எழுப்பி காபி தந்து, எண்ணையிட்டு தலை சீவி, காலைக்கடன் கழிக்க வைத்து பின் குளிப்பாட்டி, பவுடர், விபூதி பூசி விட்டு, சாப்பாடு ஊட்டி, பின் மாத்திரை போட்டு படுக்க வைத்து, பின் தன் கடமைகளுக்கு திரும்புவாள்.. இது எட்டு மாதமாக நடந்து வந்த இறைவனின் விளையாட்டு . ..

ஏன்… இவளுக்கு ஏன் இந்த நிலை தந்தாய்..

சட்டென்று ஒரு மின்னல் தோன்றி மறைந்தது என் மனதில்.. அது…கணவரை இழந்த என் அம்மாவுக்கு நான் என்னதான் நல்ல அந்தஸ்தில் இருந்தாலும் தன் பாரம்பரியமான வீட்டை விட்டு வந்து இருப்பது என்பது முடியாத காரியம்.. அதனாலேயே நானோ என் மனைவியோ எவ்வளவு சொன்னாலும், வெளியூரில் இருக்கும் என் வீட்டுக்கு வந்தால், பத்து நாட்களுக்கு மேல் தங்க மாட்டாள் .. உடனே ஏதோ லீவு போட்டு விட்டு வந்து விட்டவள் போல் திரும்ப வேண்டும் என்று அடம் பிடிப்பாள். … யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது என்ற பிடிவாதம் முன் நான் தோற்று போய்க் கொண்டே இருந்தேன்..

அவளுக்கு தானே பொங்கி சாப்பிடும் தெம்பு உள்ளவரை நானும் அரை மனதுடன் அவளை ஊருக்கு அனுப்பி வைப்பேன். பிறகு நாள் கிழமை என்று எதையாவது சொல்லி அவளை கூட்டி வந்துவிடுவேன்..மறுபடியும் கிளம்பி விடுவாள். இப்படியாகவே இருபத்து ஐந்து ஆண்டுகள் ஓடின…

முடியாத காலத்தில் அவள் இதே வழக்கம் கொண்டு இருந்தால் மூன்று வேளை.. இல்லை.. இல்லை.. ஒரு வேளை கூட சமைக்காமல்.. தனியாக.. துவண்டு போய் பசித்தே மயங்கி இறந்து போயிருப்பாளோ.. அன்னமிட்ட கை.. தன்னை மறந்து கொஞ்ச நாள் தான் வாழட்டுமே .. தன் பிள்ளைக்கே பிள்ளையாய் மாறட்டுமே.. என்று எண்ணி இந்த நிலை தந்திருப்பானோ. இறைவன்.. எங்கோ மனதில் ஆறுதலாய் ஒரு காற்று வீசுவது போலிருந்தது..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *