கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 29, 2024
பார்வையிட்டோர்: 3,487 
 
 

“வா கோபு !”

உள்ளே நுழைந்த கோபுவைப் பார்த்ததும் முகம் மலர்ந்து வரவேற்றார் பங்கஜம் மாமி.  கோபுவிற்கு எதிர் வீடு. தனியாக இருக்கும் மாமிக்கு தன்னால் முடிந்த அளவு அடிக்கடி ஒத்தாசைகள் செய்வான் கோபு. நேரம் கிடைக்கும்போதெல்லாம் கடை கண்ணிக்குப் போய் மாமிக்குத் தேவையான சாமான்கள் வாங்கி வந்து கொடுப்பான். பங்கஜம் உள்ளம் குளிர்ந்து ஏதாவது பணம் கொடுத்தால் வாங்க மறுத்து விடுவான்.

“மாமி, புத்தி தெரிஞ்ச நாள்லேர்ந்து எனக்கு அம்மா யார்னு தெரியாது. போட்டோ பார்த்துதான் தெரிஞ்சிக்கிட்டேன்.  அதனால்  உங்களை என் அம்மா ஸ்தானத்திலேர்ந்து பார்க்கிறேன். ஏன், என் அம்மாவாகவே ஏத்துண்டிருக்கேன். அம்மாவுக்கு செய்யற பணிவிடைகளாகத்தான் நான் நினைச்சிக்கிறேன். தயவுசெய்து அதுக்கு விலை பேசாதீங்கோ!”

கண்கலங்கியபடி கோபு ஒரு நாள் சொன்னதும் ஆடிப்போனார் பங்கஜம்.  இரத்த சம்பந்தமே இல்லாத ஒருவன் தாய் பாசத்திற்கு அதுவும் தந்தையும் இல்லாத பட்சத்தில்  இப்படி ஏங்குவது கண்டு நெகிழ்ந்து போனார். அதை அடிக்கடி நினைக்கும் போதெல்லாம் சிலிர்ப்பும் ஏற்படும்.

அன்று வந்த நோக்கத்திற்காக வாய் திறந்தான் கோபு.

“மாமி! ஒரு வேலையா ஆச்சாரிக்கிட்டப் போயிருந்தேன். 108 ஸ்படிகங்கள் வெள்ளி கம்பியில் கோர்த்து மாலை செய்யச் சொல்லியிருந்தேளாமே!  பண்ணிட்டார். கூலிக்
கூட மொத்தமா அட்வான்ஸா கொடுத்துட்டேளுன்னு  உங்கக் கொடுக்கச் சொல்லித் தந்தார் ஆச்சாரி.. இந்தாங்க!”  கோபு நீட்டிய மாலையை முறுவலிப்புடன் பெற்றுக்கொண்டார் பங்கஜ மாமி.

“ரொம்ப  தேங்ஸ்டா கோபு!  தனியாளாய் நான் லோல் பட்டுண்டிருக்கற  சமையமெல்லாம் நீயாக வந்து ஒத்தாசை செய்யறே. அது நான் செஞ்ச புண்ணியம்!”

“பரவாயில்ல மாமி! அந்தப் பக்கம் போகவேண்டிய வேலை இருந்தது. அதனால உங்க மாலைய வாங்க முடிஞ்சுது…” என்றவன் தொடர்ந்தான். “அப்புறம்…மெயின் ரோடுல இருக்கே காமதேனு முதியோர் இல்லம்….”

“ஆமா..வயசான ஸ்திரிகளுக்காக நடத்தப்படறது! எனக்குத் தெரிஞ்சவா ரெண்டு பேர் அங்கதான் இருக்கா. பெத்தப் பிள்ளைகளால கைவிடப்பட்டு அந்த இல்லத்தில சேர்க்கப் பட்ட தாய்மார்கள் எத்தனையோ பேர்..பாவம்! நெனைக்கும்போதே மனசுக்கு  கஷ்டமாயிருக்கு” நெஞ்சு நிறைய ஆதங்கத்துடன் கூறினார் பங்கஜ மாமி.  முகத்தில் வயோகதிகத்துடன் கூடிய வேதனையின் ரேகைகள் நிறையவே காணப்பட்டாலும்,  ஒரு விதத்தில் அவர்களின் நிலைமையை எண்ணி மனதில் ஆசுவாசமும் ஏற்பட்டது.

கோபு தொடர்ந்தான்.

“அங்க ஒரே கூட்டம் மாமி! என்னன்னு விசாரிச்சுப் பார்த்தேன். இன்னிக்கு அன்னையர் தினமாம்! அதனால அங்க சேர்ந்திருக்கிற தங்கள் அம்மாக்களுக்காக கையில பழங்களோட அவங்க மகன்கள் அந்த முதியோர் இல்லத்துக்கு வந்து  விசிட் பண்ணியிருக்காங்க!

“என்னவொரு அவலம் பார்த்தீங்களா மாமி! அம்மாவை தங்களோட வச்சுக்க மாட்டாங்க. முதியோர் இல்லத்தில சேர்த்திட்டு என்னிக்காவது ஒருநாள் போய் பார்க்கறது… வயசான காலத்தில பெத்த மகனோட அரவணைப்புக்காக ஒவ்வொரு தாயின் மனசு எப்படி ஏங்கித் துடிக்கும்! இதை ஏன் மகன்கள் உணரமாட்டேங்குறாங்க?”  அங்கலாய்த்தான் கோபு.

மாமி முகத்தில் புன்னகை “கோபு! ஒருவிதத்தில அவாளோட தாய்மார்கள் அதிர்ஷ்டக்காரான்னு சொல்லுவேன்”.

மாமி சொன்னதைக் கேட்ட கோபு  திடுக்கிட்டான். “ஹூம்! நாலு சுவத்துக்குள்ளே இருந்துக்கிட்டு லோல் படறத காண சகிக்கல்ல.  அதோடு,  அங்க கிடைக்கிறத தலையெழுத்தேன்னு  சாப்டுட்டுட்டு அக்கடான்னு கிடக்கறாங்க.  அவங்களோட நிலைமையை நினைக்கறபோது எனக்கே நெஞ்சு பத்திக்கிட்டு எரியறது. நீங்க இப்படி சொல்றேளே மாமி?”  

“ஆமாம்டா! உள்ளூர்லயே மகன்க இருக்கா. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில போய் பார்க்கறா. பேசறா. அது அங்க இருக்கறவாளுக்கு கொஞ்சம் ஆத்ம திருப்தியைக் கொடுக்கிறது.  மனதளவில் சந்தோஷத்தையும் கொடுக்கறது. ஆனா நான்….”  பங்கஜத்தின் குரல் பிசிரியது. சற்று  இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்.

“என் ஒரே பையன் நன்னாப் படிச்சான். அமெரிக்காவுல வேலை. சரின்னு ஒத்துக்கிட்டேன். ஆனால், தன்னோட வேலை பார்க்குற பெண்ணையே கல்யாணம் செய்துகிட்டான். வருஷம் மூணு ஆகறது. இன்னும்  வந்து என்னை எட்டிப் பார்க்கல்ல.  இந்த மூணு வருஷத்தில அவன்  ஃபோன் வீடியோ கால்ல பேசினத விரல் விட்டு எண்ணிடலாம்.  மாசா மாசம் டாலர்ஸா அனுப்பறான். அவ்வளவுதான். நான் பிக்கல் பிடுங்கல் இல்லாம சுதந்திரமாகத்தான் இருக்கேன். ஆஸ்தி அந்தஸ்துக்கு குறைவுமில்லே. என்ன பிரயேஜனம்?. பெத்த மகனோடும்  மருமகளோடும் ஒட்டி உறவாடி பேசும் கொடுப்பினை எனக்கில்லாமல் போயிடிச்சே!” மூக்குறிஞ்சியபடி தொடர்ந்தார் . “ஆனால் முதியோர் இல்லத்தில் இருக்கறவா நாலு சுவற்றுக்குள்ளே இருந்தாலும் எப்பவாவது   தங்கள் மகன்களோட நேருக்கு நேர் பேசுற கொடுப்பினை இருக்கு. அவாளோட அருகாமை கிடைக்கிறது. அதனால ஆத்ம திருப்தி கிடைக்கிறது.  இந்த விஷயத்தில் அவா கொடுத்து வைத்தவாதான் கோபு!”

மாமியின் ஏக்கம் கோபுவிற்குப் புரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *