தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 19, 2014
பார்வையிட்டோர்: 9,281 
 

விசுவிசுத்த வேப்ப மரக்காற்று உடம்பை ரம்மியமாய்த் தாலாட்டியது. இருமருங்கிலும் வேப்ப மரங்களும் அதற்கு வாத்திச்சி போல் நடுநாயகமாய் ஆலமரமும், அதன் அடியில் இடுப்பு பெருத்த திடலுமாய், அந்த இடமே அழகாய், களையாய் வரித்திருந்தது.

விசுவிசுத்த வேப்ப மரக்காற்று உடம்பை ரம்மியமாய்த் தாலாட்டியது. இருமருங்கிலும் வேப்ப மரங்களும் அதற்கு வாத்திச்சி போல் நடுநாயகமாய் ஆலமரமும், அதன் அடியில் இடுப்பு பெருத்த திடலுமாய், அந்த இடமே அழகாய், களையாய் வரித்திருந்தது. ஆலமரத்து அத்தாச்சியின் சடையைப் பற்றிக் கொண்டு பொடிசுகள் ஊஞ்சலாட, வேப்ப மரத்து நிழலில் அமர்ந்திருந்த அவர்களைப் பெற்றவர்கள், சுள்ளி பொறுக்கி அவர்களின் கணுக்காலில் விளாசினார்கள்.

பவானி சமுக்காளம் விரித்துக் கிடக்க தலையாரி, நாட்டாமை, சொல்லாளி, கணக்கர் ஆகியோர் அதில் வந்து அமர்ந்து கொண்டார்கள். வேப்ப மரத்து நிழலில் கிடந்த நார்க்கட்டில்களில், ஊர் பெரிய தனக்காரர்கள் அமர்ந்து கொள்ள, பொது சனங்கள் மரநிழலில் துணி விரித்து அமர்ந்து கொள்ள, ஊர் கிணற்றுத் தண்ணீர் வழங்கப்பட, ஐதீகப்படி ஆளுக்கொரு மிடறு குடித்து, பஞ்சாயத்து நடைமுறையைத் துவக்கி வைத்தார்கள்.

“”எல்லை காத்த சாமிக்கு வந்தனம்… நம்ம வயலூர் கிராமத்துல இது நாத்தொட்டு எம்புட்டோ பேர்களுடைய வழக்குகளும், தீர்ப்புகளும் நம்ம பாட்டான், முப்பாட்டன் காலந்தொட்டு கேட்டுதேன் வந்திருக்கோம். ஆனால் இப்போ என்னைக்கும் இல்லாத கணக்கா, நம்ம ஊர் வழக்கத்திற்கும் புதுசு… அதுக்காகத்தான் பஞ்சாயத்தே…”

தலையாரி செருமிக் கொண்டு சொன்னார். கூட்டம் பொதுவாய் அமைதியாய் இருந்தது.

“”வண்டிக்குப் பழுது வந்தா சரியாக்கலாம்… இங்கே மாடேயில்ல பழுதுபட்டு நிக்குது… ஊருக்கெல்லாம் நல்லது கெட்டதுகளைச் சொல்லித் தர வாத்தி இன்னைக்கு, ஊருக்கு ஒரு நல்லது வரும்போது சிலிப்பிட்டு நின்னா நல்லாவா இருக்கு?”

கண்ணாடியைக் கழற்றி, கதர்ச் சட்டை நுனியில் துடைத்துக் கொண்ட சுந்தரம் வாத்தியார் தன் பக்கத்தில் அமர்ந்திருந்த ஊர் சனங்களைத் திரும்பிப் பார்த்தார். அத்தனை பேர் கண்களிலும் அவர் மீது அன்யோன்யம் அற்ற பகைமை பொங்கி வழிந்தது. மென்மையாய் தனக்குள் சிரித்துக் கொண்டார்.

இந்த பூமிக்கும் அவருக்குமான தொடர்பு பிறப்பில் வந்ததில்லை. இருபத்து மூன்று வயதில் இங்கு வாத்தியார் வேலைக்கு வந்து, சுலோசனாவைக் கைப்பிடித்து, நான்கு பிள்ளைகளைப் பெற்று அவர் வாழ்வோடு இயைந்து கடந்து இருப்பதுதான் வயலூர்.

“”என்ன சுந்தரம் வாத்தி… சும்மா உட்காந்திருக்கீரு… ஏதாவது பேசுமய்யா”

“”எத்தினி தரம் சொன்னாலும் என் வார்த்தை ஒண்ணுதான். நான் என்னோட வயலை விக்கிறதா இல்லை”

“”என்னவே பேசுரீரு… கரித்துணிய தந்து முகந்துடைக்கச் சொன்ன கதையாயில்ல இருக்கு. மொத்தமா குடுத்தாத்தான் எடுத்துக்குவேன்னு சொல்றான் கம்பெனிக்காரன். அவன் சொல்றது நியாயம்தான. நடுவுல உம்ம நிலமிருக்கு. அத விட்டுப்புட்டு எப்படிவே அளக்கறது? ” கணக்கர் கணக்காய் கேட்க கூட்டத்தினர் ஆமோதித்தனர்.

ஆலமர உச்சியில் இருந்து காகம் ஒன்று, யார் மீதும் படாமல் நடுவில் எச்சமிட்டுப் பறந்தது.

“”இதப் பாருங்க சுந்தரம் வாத்தியார். உம்மை யாரும் வற்புறுத்த இயலாது. ஆனா நீர் மாட்டேன்னு சொல்றதுக்கு எதுனா காரணம் வேணுமில்லயா? இன்னும் சொல்லப் போனா. அந்த இடத்தைத் தந்தா உமக்கு கணிசமான காசு கிடைக்குமோனோ… அதைக் கொண்டு உம்ம புள்ளைங்க கையில தந்துட்டு நிம்மதியா இருமேய்யா”

குருக்கள் ஆலோசனை சொன்னார்.

சுந்தரத்தின் நெஞ்சுக் குழியில் அவர்களுடைய வார்த்தை இடறி விழுந்தது. வறண்ட பூமியின் இயல்பு, அங்கிருந்த மக்களின் மனசுக்குள்ளும் வந்திருந்தது. அந்த வலியை அவரால் தாங்கவே இயலவில்லை.

இருபது வருடங்களுக்கு முன்பாக இந்த ஊரின் நிலைமையும் இன்றிருப்பது போலவா இருந்தது? நஞ்சையும், புஞ்சையும் முப்போகம் விளைந்து விளைச்சல்கார பூமியாய் பெருமிதமாய் நெஞ்சு நிமிர்த்தி நின்ற நாட்கள் அவை…

காலம் எப்போதும் ஒரே பாதையில் பயணப்படுவதில்லை. அதன் ஏற்ற இறக்கம் நிலையானதென்றாலும், அதன் போக்கில் பயணப்பட எப்போதும் மனிதர்கள் பின் வாங்கியதில்லை. ஆனால் இப்போதுதான் முதன்முறையாகப் பின் வாங்குகிறார்கள்.

இரண்டு மூன்று முறையாய் வானம் பொய்த்துப் போனது உண்மைதான். ஒரிருமுறை அடாது மழை பொழிந்து பயிர்கள் நாசமானதும் கூட நிஜம்தான். அதற்காக விவசாயமே வேண்டாமென எங்ஙனம் முடிவு செய்திட முடியும்?

கம்பெனிக்காரன் என்று சொல்லப்படும் நுழைந்த அன்றுமுதல் வயலூருக்கே சனி பிடித்தது.

“”இதப் பாருங்க வைத்தியலிங்கம். நீங்க ஊருக்கு நாட்டாமை. அதான் பொதுவா உங்ககிட்ட விசயத்தைச் சொல்றோம். சேட்டிலைட் சிட்டினு சொல்லப்படற மாதிரி நகரத்தை அமைக்கிற முயற்சியில நாங்க இருக்கோம். ரொம்பவும் நவநாகரீகமான வீடுகள், காம்ப்ளெக்ஸ், கார்ப்பரேட் பேக்டரீஸ், பேங்க்ஸ் இன்னும் நீங்க அறிந்திடவே இயலாத அற்புதமான தொழில் நுட்பம் இது. உங்க ஊர் மட்டுமல்ல, பழங்காநத்தத்தைச் சேர்ந்த,எட்டு கிராமத்தை தேர்ந்து எடுத்து இருக்கோம். உங்களுக்கு நல்ல லாபகரமான தொகையைத் தர நாங்க உசிதமா இருக்கோம். ஒருவேளை நீங்கள் எல்லாம் இதுக்கு சம்மதிக்காட்டி, இடப்பக்க ஓரத்தில இருக்கிற உங்க கிராமத்தை விட்டுட்டு வலது புறமுள்ள இன்னொரு கிராமத்தைத் தேர்ந்தெடுப்போம். நீங்கதான் உங்க ஜனங்களிடம் பேசி சம்மதிக்க வைக்கணும்”

கம்பெனிக்காரனின் இந்த வார்த்தைகளில் தான் மொத்த கிராமமே மயங்கிக் கிடந்தது.

“”எம்புட்டு நல்ல யோசனை முதலியார். எம்மோட வீட்டையும் வயலையும் தந்து தொலைச்சா ஒரு கோடியோ, ரெண்டு கோடியோ வரும். மதுரையில என் மச்சினன் ஜவுளி வியாபாரம் பண்றான். அவன்ட்ட சொல்லித்தான் ஏதாவது வகைச்சல் செய்ய சொல்லணும்”

“”யம்மாடி… கோடி ரூவா… ரெண்டு பொட்டப் புள்ளைகளையும் கட்டித் தந்துட்டு வட்டி வகைச்சல் பார்த்துட்டு, கடைசிக் காலத்தைக் காலாட்டிட்டு தள்ளிடணும்”

“”எடம் மட்டும்தானா கம்பெனிக்காரன் எடுத்துக்குவான். நாலு வண்டி மாடு இருக்கு. அதை அவன் எடுத்துக்கமாட்டானா?”

ஆளுக்காள் பிரச்னை இருந்தது. அத்தனையையும் கடந்து வருகின்ற ஒற்றைப் பாதையாய் அவர்கள் கம்பெனிக்காரனை நம்பிக் கொண்டிருந்த வேளையில்தான், வாத்தியார் பலமாய் மறுத்து தலையாட்ட ஊரே ஆடிப் போனது.

“”இதப்பாரும் சுந்தரம், நான் உமக்கு அண்ணன் முறை. விதை நெல்லைப் பொங்கித் திங்கிற விதியத்த நிலைக்கு நாம வந்து நாளாச்சு. இன்னும் எம்புட்டு நாளைக்குத்தான் ஏக்கருக்கு இம்புட்டுனு அரசாங்கத்துகிட்ட நஷ்ட ஈடு கேட்டுட்டு நிக்க. சாணியலியும், சகதியிலயும் நம்ம புள்ளைகளும் சீப்படணுமா?”

தங்கமுத்து அண்ணாச்சி சொன்னபோது, சுந்தர வாத்தியாருக்கு கண்ணீர் கண்ணில் முட்டியது. அமர்ந்திருந்த நார்க்ட்டிலில் இருந்து எழுந்து நின்றார். தோளில் கிடந்த துண்டை எடுத்து முகம் ஒற்றி துடைத்துக் கொண்டார். தம்முடைய சனங்களை கண்களாலேயே ஆராய்ந்தார். பின் மிக மெதுவாகச் சொன்னார்:

“”எல்லாரும் மன்னிக்கணும். அதுக்கு முன்னாடி எல்லாரும் எம் பேச்சை ஒரு நிமிசம் கவனிக்கணும். ஊருக்கெல்லாம் நல்லது சொன்ன வாத்தியார், இப்ப உங்களுக்குக் கெடுதல் விளைவிக்க வந்த மாதிரி நினைச்சு நீங்க பேசுறீங்க. நிமிச நேரம் கண்ணை மூடி யோசிங்க. இந்த சுந்தரம் வாத்தி, இந்த மண்ணை காப்பாத்தற பிரயாசையால்தான் நான் பேசிட்டு இருக்கேன்னு உங்களுக்குப் புரியும்”

எல்லாரும் அலட்சியமும் அவநம்பிக்கையுமாய் முகம் திருப்பி அவரைப் பார்த்தனர்.

“”உதவாமப் போன ஆகாயத்தைப் பார்த்திருக்கிறோம். ஆனா உதவாமப் போன பூமின்னு இந்த உலகத்துல எதுவுமே இருக்காது. இருக்கவும் முடியாது. ஒரு காலத்துல பட்டணத்து நாகரிகத்துக்கும் படாடோபத்துக்கும் ஆசைப்பட்டு கூட்டம் கூட்டமா நம்ம மக்கள் நகரத்துக்குப் போனாங்க. அப்பத்தான் விவசாயபூமி குலை நடுங்கிப் போச்சு. கறவை மாட்டை மடியறுக்கிற மாதிரித்தேன், நம்ம விவசாய நிலத்தை கட்டிடம் கட்ட விக்கிறது. அதுக்கு எல்லாரும் கட்சி கட்டி நிக்கிறது என்னால தாங்கவே முடியல”

அவருடைய கண்களில் இத்தனை நேரம் தேங்கி நின்ற கண்ணீர் முத்துகள் பட்டென்று உருண்டு தெறித்தது.

“”என்ன அப்புச்சி சொல்லுத நீ… நாகரீகமும் உசந்த வாழ்க்கையும் பட்டணக்கரை மனுசங்கதான் அனுபவிக்கணும். நம்ம மாதிரி நாட்டுப்புறத்தான் எல்லாம், மேல் சொட்ட சொட்ட வேத்துக்கிட்டு, சட்டை கூட போடாம வெயில்ல காய்ஞ்சு, மழையில நனையனுமாக்கும். என்னவே உம்முடைய நியாயம்? இதப்பாரு வாத்தியாரு வியாக்யானம் பேசி, எம்மை வேதனைப்படுத்தறதை விட்டுட்டு ஊரோட ஒட்டி வாழ பழகு சாமி”

சொல்லாளி வெடுக்கென்று சொல்லவும், அத்தனை பேர் முகமும் ஒரு கணமும் நாட்டாமையையே பார்த்தது. தூரத்து ரயிலொன்று விட்டுப்போன புகை காற்றில் கலந்து வந்து நாசியை இம்சித்தது.

“”என்ன சுந்தரம் எல்லாரும் சொல்றத கேட்டீர்ல? உம்ம முடிவு என்னன்னு பட்டுனு சொல்லிப்புடும். ஆனா எல்லாருக்கும் சாதகமான ஒரு முடிவைத்தான் நீர் எடுக்கணும். தாயாப் புள்ளையா பழகிட்டோம். உம்மை நோக்கி கடுகான முடிவை எடுக்கும்படி எம்மைச் செய்துடாதீரும்” கரகரப்பேறிய கடுகடுப்பான குரலில் அவர் கூறியபோது கூட்டம் தலையாட்டி ஆமோதித்தது.

சுந்தரம் கண்களை மூடிக் கொண்டார். ஆழ்ந்து மூச்சிழுத்து வேப்ப மரக்காற்றை சுவாசித்துக் கொண்டார்.

“”முடிவெடுக்கவா நாட்டாமைக்காரய்யா… முடிவல்ல இது ஆரம்பம். ஒத்தை மனுஷனா நான், ஊரை எதிர்த்து நின்னு போராடுற ஆரம்பம். நாலு பேர் உரக்கச் சொன்னா தப்பும் சரியானதாகிடும்னு எல்லாரும் நினைக்கிறீங்க. இப்போ நம்முடைய பிரச்னையும், அதைத் தீர்க்க வர்ற பணமும் நமக்குப் பெரிசா தெரியுது. வெவசாயம் செத்துப் போனா இந்த உலகத்தோட வாழ்வாதாரமே செத்துப் போகும். இந்த உலகமே சுயநலமா மாறினாலும், வெவசாயம் பாக்குறவங்க மட்டும் சுயநலமா மாறவே கூடாது. அதோ நிழல் மரமா ஓங்கி நிக்கிற வேம்பும், ஆலும் யார் நட்டதுன்னு நமக்குத் தெரியுமா? அதை நட்டவன் நமக்காக நட்டு வச்சுட்டு போயிருக்கான். நாம அதோட பயனை அனுபவிக்கிறோம். அந்தப் பெருமனசுதான் ஒவ்வொரு விவசாயிக்குள்ளும் இதுநா மட்டும் இருந்தது. இப்ப நீங்க விவசாயத்தை விட்டுட்டு போகப் பாக்குறீங்க. இப்பிடி எல்லாரும் போக ஆரம்பிச்சா குடிக்கக் கஞ்சி கிடைக்காது. அதால என்னோட நிலத்தை நான் விக்கிறதா இல்லை” என்றார் உறுதியாக.

“”இதுதான் உம்ம முடிவா? முடியாது ஓய்… ஊர் கிணத்து தண்ணியக் குடிச்சு சத்தியம் பண்ணியிருக்கீர்… ஊர் கட்டுமானத்துக்கு உட்படறேன்னு. அதை மீறினா எல்லைச் சாமி சும்மா விடாதுய்யா ”

நாட்டாமைக்காரர் ஓங்காரமாய்ச் சொன்னார். அதே வீராப்பும் வீரியமும் வாத்திக்குள்ளும் முட்டி மோதி முளைத்தது.

“”அப்படியா நானும் உம்மோட வார்த்தைக்குக் கட்டுப்படறேன். யாருக்கும் கட்டுப்படாட்டியும் இந்த ஊரு எல்லைகாத்த சாமிக்குக் கட்டுப்பட்டுத்தானே ஆக முடியும்? வடக்கால இருக்குற என்னோட வயக்காடு முழுக்க, எல்லைசாமிக்குக் காணிக்கையாத் தர்றேன். சாமி நிலத்தை எப்பிடி விற்க முடியும்? எனக்கு இந்த ஊர் நிலத்தையெல்லாம் கம்பெனிக்காரன்கிட்ட விக்காமத் தடுக்க வேற வழி தெரியலை”

அவர் யாருடைய பதிலுக்கும் காத்திராமல் விடுவிடுவென நடக்கத் தொடங்கினார். வயலூரின் வயல்களைச் சாகாமல் காப்பாற்றிய தெளிவு அவரிடம். ஊரே ஸ்தம்பித்து நின்றது.

– எஸ்.பர்வீன்பானு (மார்ச் 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *