எல்லாவற்றுக்கும் ஒரு வழி உண்டு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 24, 2023
பார்வையிட்டோர்: 1,683 
 
 

நானும் பட்டா மாறுதலுக்குக் கொடுத்து ஆறு மாதம் ஆகிறது. எந்த வித முன்னேற்றமும் இல்லை. எத்தனையோ முறை தாசில்தார் ஆபிஸ்க்கு போயாயிற்று. நடந்து நடந்து கால் வலிதான் பலன். எப்போது போனாலும், “கொஞ்ச நாள் ஆகும்.எப்ப கிடைக்குமென்னு சொல்ல முடியாது” என்பதுதான் பதில்.

எனது மனதில் நடந்தவை நினைவுக்கு வந்தது.

நான் இருக்கும் லஷ்மி விலாசம் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டி இருபது வருடம் ஆகி விட்டது. பிளாட் என்பதால் யாருக்கும் இது வரை பட்டா வழங்கவில்லை. யாரும் அதற்கு முயற்சி எடுத்துக் கொள்ளவுமில்லை.

லஷ்மி விலாசம் குடியிருப்பில் நான்கு பிளாட்டுக்கள் இருக்கின்றன. மாடியில் இரண்டு பிளாட்டுகள், கீழே இரண்டு … நான் கீழே இருக்கும் ஒரு பிளாட்டில் வசிக்கிறேன்.

அப்போது மாடியில் வசிக்கும் ராமன் என் வீட்டுக்கு வந்தார்.

”விஷயம் தெரியுமா? வருகிற ஞாயிற்றுக் கிழமை சிறுவர் பூங்காவுக்கு அருகேயுள்ள விளையாட்டு மைதானத்தில் பட்டா சம்பந்தமா ஒரு கூட்டம் நடக்கவிருக்கிறது. எல்லாரும் மனுவை எழுதி அவர்களுடைய பத்திரங்களை இணைத்துக் கொடுக்க வேண்டும் “ என்றார்.

”நிலத்துக்கும் தனி வீட்டுக்கும்தான் பட்டா அவசியம். அடுக்கு மாடி குடியிருப்பில் இருப்பவர்களுக்கு பட்டா தேவையில்லை. பட்டா இல்லாமலேயே அவர்கள் பழைய பட்டாவை வைத்து வீட்டை விற்கலாமென்றுதான் நினைத்திருந்தேன்”.

“நடைமுறைகள் இப்போது மாறி வருகிறது போலும். அதுக்கு ஏற்ற மாதிரி நாமும் செயல்படுவோம்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

நான் உடனே பீரோவைத் திறந்து பத்திரங்களை எடுத்தேன். இங்கு ஒன்று சொல்லியாக வேண்டும். நான் எப்போது பத்திரப் பதிவு செய்தேனோ அன்று வாங்கி வைத்த ஒரிஜினல் பத்திரத்தை இப்போது தான் எடுத்தேன். அதுக்கு முன் எடுக்க வேண்டிய அவசியம் எனக்கு வரவில்லை.

என்ன தேடறீங்க? என் மனைவி நீலாம்பரியின் குரல்.

“பிளாட்டுகளுக்குப் பட்டா கொடுக்கப் போறாங்களாம். அதுக்கு மனு கொடுக்க பத்திரங்களை எடுத்து பார்க்கிறேன்.”

அதிர்ஷ்டவசமாகப் பத்திரம் தாய் பத்திரம் எல்லாவற்றுக்கும் ஜெராக்ஸ் காப்பி இருந்தது.

ஞாயிற்றுக் கிழமை வேகமாக வந்து விட்டது.

அன்று பிளாட்டில் வசிப்பவர் அனைவரும் ஒன்று சேர்ந்து பட்டா பெறுவதற்காக எங்கள் மனுவைக் கொடுத்து விட்டு வந்தோம்.

மனு கொடுத்ததை மறந்து விட்டோம். இரண்டு மாசம் கழித்து பட்டா ரெடி என்று குறுஞ்செய்தி வந்தது. அது மட்டுமல்ல. ஒரு வாரம் கழித்து நடக்கும் விழாவில் இரண்டாயிரம் பேருக்குப் பட்டா வழங்கப்படும் என்றும் அறிவிப்பு இருந்தது. அந்த விழாவில் கலந்து கொண்டு எங்கள் பிளாட்டிலுள்ளவர்கள் அனைவரையும் பெயர் அறிவித்தது பட்டா வழங்கினார்கள். நானும் என்னுடைய பட்டாவை வாங்கிக் கொண்டேன்.

பட்டாவில் என் தந்தை பெயர் தவறாகப் போட்டிருந்ததை பார்த்து அதிர்ந்தேன். நடராசன் மகன் முரளி என்பதற்குப் பதிலாக நாகராசன் மகன் முரளி என்று தவறுதலாகப் போட்டிருந்தது. ஆங்கிலத்தில் “டி” க்கு பதிலாக “ஜி” டைப் ஆகியிருந்தது. எனக்குப் பக்கென்று ஆனது. பிழை சிரியதானலும் திருத்த வேண்டுமல்லாவா? அங்கிருந்தவரிடம் என்ன செய்வது என்று கேட்டேன். நாளைக்கு தாலூக்கா ஆபிஸ் வந்து தாசில்தாரைப் பார்த்து திருத்தம் செய்து கொள்ளுங்கள் என்று பதில் கூறினார்.

என் மனதில் ஒரே கலவரம். வீட்டுக்கு வந்து பத்திரங்களைப் பார்த்தால் அதில் தந்தை பெயர் நாகராஜன் என்றிருந்தது.

”நீங்கள் எதையும் சரியாகப் பார்க்காமல் வாங்கி வைத்து வீட்டீர்கள். உங்கள் தவறுதான். உடனே அட்வகேட்டைப் பார்த்து அப்பா பேரைச் சரி செய்யப் பாருங்கள்” என்றாள் நீலாம்பிகை அதிருப்தியுடன்.

மனதில் சிறிது கூட சந்தோஷமில்லை. ஏன் தான் இந்த பட்டாவை இப்போது கொடுத்தார்களோ என்றிருந்தது எனக்கு.

அட்வகேட்டை மொபைலில் தொடர்பு கொண்டு கேட்டேன்.

அவர் ரெக்டிபிகேஷன் பத்திரம் பண்ணலாம். அதற்கு விற்பவரும் வாங்குபவரும் கையெழுத்துப் போட வேண்டும். என்றார்.

பில்டரை தொடர்பு கொண்டு விற்பவர் எங்கிருக்கிறார் என்று விசாரித்ததில் அவர் தற்சமயம் உயிருடன் இல்லை என்று தெரிந்தது. அவருடைய வாரிசுகள் யாரும் இந்தியாவில் இல்லை. எல்லாரும் அமெரிக்காவில் இருக்கிறார்கள் என்று சொன்னார்.

வேறு வழி இருக்கிறதா என்று அட்வகேட்டிடம் கேட்டேன்.

“பதிவு செய்த பத்திரத்தில் திருத்தம் செய்வதென்றால் சுலபமல்ல. ரொம்ப மெனக்டெனும். ஒரு வழி இருக்கிறது. ஒரு அபிடேவிட் தயார் செய்து அதைப் பதிவு பண்ணிடலாம். ஒண்ணுமில்லாத்துக்கு இது பரவாயில்லை.”

நான் ”சரி” என்றேன். எனக்கு வேறு வழி தெரியலை.

அட்வகேட் டிராப்ட் காபியைத் தயார் செய்து சப் ரெஜிஸ்டிராரிடம் காண்பித்துக் கேட்டதில் அவர் பதிவுச் செய்ய ஸ்டாம்ப் டுடி இரண்டு லட்சம் கட்ட வேண்டுமென்றார்.

எனக்குத் தலையில் இடி விழுந்தது போலாயிற்று. நீலாம்பிகையோ பேசாம வீட்டை விற்கப் பாருங்க. இவ்வளவு பணம் நம்ம கிட்டே இல்லையே என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.

எனக்கு என்ன செய்வதென்று தெரியலை. வேறு ஒரு அட்வகேட் கிட்ட போய் கேட்டேன். அபிடேவிட் பதிவு செய்ய முடியும். ஆனால் கொஞ்சம் பணம் செலவு ஆகுமென்றார்.

”அபிடேவிட் பத்தி கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்களேன்.”

”பத்திரத்தில் தவறு நேர்ந்து விட்டது என்று ஒரு டிக்ளரேஷன் தருவது. இது புக் 4 ல் பதிவு ஆகுமாம். விற்பனைப் பத்திரங்கள் புக் 1ல் பதிவு ஆகும்.”

நான் தலையை ஆட்டினேன். பத்திரம் பதிவு ஆனால் போதுமென்றிந்தது எனக்கு.

அவர் குறிப்பிட்ட நாளில் பதிவு அலுவலகம் சென்றேன்.

அங்கிருந்த ரிஜிஸ்டிரார் ஒரு மேடம். பத்திரத்தை ஒரு முறை பார்த்து விட்டு ”இந்தப் பத்திரத்தை இப்போது பதிவு செய்ய முடியாது” என்றார். அட்வகேட் அவரிடம் விவாதித்த பிறகு, ”நான் பெண்டிங் வைப்பேன். எனக்கு மேலே உள்ள ஆபிஸரிடம் கேட்டு விட்டுத் தான் பதிவு செய்ய முடியும்” என்றார். பத்திரத்தில் கையெழுத்துப் போட்டு கை பதிவு எடுத்தவுடன் ”நாளைக்கு வந்து பாருங்க.” என்றார்.

அடுத்த நாள் போனபோது ரிஜிஸ்டிரார் மேடம் தந்தையாரின் இறப்பு சர்ட்பிகேட்டும் வாரிசு சான்றிதழும் கேட்டார்கள்.

அதிர்ஷ்டவசமாக இரண்டும் கைவசமிருந்தன. அவற்றின் நகலைக் கொடுத்தேன். அடுத்த நாள் வரச் சொன்னார்கள். அதன்படி போனேன்.

அபிடேவிட் பதிவு செய்து கொடுத்து விட்டார்கள்.

உடனே ஒரு மனு எழுதி அபிடேவிட் காபியையும் இணைத்து பட்டாவில் தந்தை பெயரை மாற்றக் கோரி தாசில்தார் அலுவலகத்தில் தாக்கல் செய்தேன்.

தாசில்தார் பெயர் ஏகாம்பரம். காரணத்தை அவரிடம் சொன்னேன். அவர் செவி கொடுத்து கேட்கலை : மனுவைத் தொடக் கூட இல்லை. அவர் சாதகமான பதிலைக் கூறாதது எனக்கு மிக்க வருத்தத்தை அளித்தது.

சர்வேயரை பார்க்கலாமென்றால் அன்று அவர் வரவில்லை. மூன்று நாள் முயன்ற பிறகு சர்வேயரைப் பார்த்தேன். அவர் ஆர் டி வோ அனுமதி வந்தால் திருத்தம் செய்ய முடியும் என்று கூறினார். அடிக்கடி தாசில்தார் ஆபீஸ் போய் வந்தேன். ஆறு மாசம் ஆகியும் எந்த முன்னேற்றமும் இல்லை.

இந்த சமயத்தில் எனக்கு முட்டி வலி வந்து நடக்கச் சிரமப் பட்டேன். துன்பங்கள் வரும்போது சேர்ந்து வரும் என்பது இயற்கை நியதி போலும். இரவில் உறக்கம் சரியாக வருவதில்லை.

ஒரு நாள் தினமலரில் பட்டா வழங்குதல் பற்றி ஒரு செய்தி படித்து அதிர்ந்தேன்.

”கிருஷ்ணகிரி சமத்துவபுரத்தில் பட்டா பெற 17 ஆண்டுகளாக மக்கள் தவம்.“ பட்டா பெறுவதற்கு இவ்வளவு காலமா என்று வியப்பு உண்டாயிற்று. திருத்தம் செய்து எனக்குப் பட்டா கிடைக்க எவ்வளவு காலம் ஆகுமோ என்று தெரியலை. ஆனால் அப்படியே விட்டு விடவும் முடியாது.

ஏனெனில் எழுபதை நெருங்கி விட்டேன்.. தீடிரென்று எனக்கு ஏதாவது ஆகி விட்டால் வீட்டை விற்பதிலோ அல்லது செட்டில்மெண்ட் செய்வதிலோ பிரச்சனை உண்டாகுமென்று நீலாம்பிகைக்கு பயம். அவள் ஆலோசனைப்படி பிளாட்டை விற்கலாமென்று முயற்சி செய்தேன். நான் வசிக்குமிடம் கடைவீதிக்குப் பக்கத்தில் இருப்பதால் வீடு நல்ல விலைக்குப் போகும். எப்படியும் ஐம்பது இலட்சம் குறையாமல் கிடைக்கும்.. என் நண்பர் ஒருவரிடம் வீட்டை விற்கப் போவதாகக் கூறினேன். அவருடைய தங்கைக்கு வீடு வேண்டும் என்று டோக்கன் அட்வான்ஸ் பத்தாயிரம் கொடுத்து பத்திரத்தை வாங்கிப் போனார். இரண்டு மாதம் கழித்து ”பட்டாவில் உங்கள் தந்தையார் பெயர் சரியாக இல்லை, அதனால் வாங்க இயலாதென்று சொல்லி விட்டார்.

இன்னொருவர் அது போல் பத்திரத்தை வாங்கிக் கொண்டு போய் ஒரு மாதம் கழித்து, ”பாங்கிலே லோன் கிடைக்கலை. பட்டாவில் சிக்கல்” என்று சொன்னார்.

பேப்பரில் பார்த்து பட்டா ஏஜண்ட் ஒருத்தரைத் தொடர்பு கொண்டேன். அவர் நிறையச் செலவு ஆகும் என்றார். எவ்வளவு என்றேன். அதைக் கேட்டுத் தான் சொல்ல வேண்டும். சிக்கல் நிறைய இருந்தாலும் பணமும் அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்குமென்றார். அவரைப் பார்த்தாலே கமர்சியல் என்று தோன்றியதால் அவரிடம் போய்ச் சிக்கிக் கொள்ள வேண்டாமென்று வந்து விட்டேன்.

மேலும் நாலைந்து நபர்கள் வந்தார்கள்.. எல்லாரும் லோன் போடறவங்க. பாங்க் லோன் வாங்கும் நபர்களுக்கு வீட்டை விற்கப் போவதில்லை என்று சொல்லி அனுப்பி விட்டேன்.

வீட்டுத் தரகர் ஒருவர் இரண்டு ஆட்களை கூப்பிட்டுக் கொண்டு வந்து விலை பேசினார். விலை குறைத்துக் கொடுக்கக் கூட நான் தயார். ஆனால் பட்டாவில் தந்தை பெயரில் தப்பிதமிருப்பதால் எவ்வளவு முயன்றும் கைக்கு வந்தது நழுவிப் போயிற்று. ஏனெனில் வாங்க விரும்புகிறவர்கள் யோசித்தார்கள்.

இந்தப் பிரச்சனைக்குத் தீர்வே இல்லையோ என்று எனக்குத் தோன்றியது. கப்பல் கவிழ்ந்தது போல் நான் தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டேன். நான் சோகமாய் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து என் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரி தனலட்சுமி என் மனைவியிடம், ”என்னம்மா ஐயாவுக்கு உடம்பு சரியில்லையா? ஏன் அப்படி உட்கார்ந்திருக்கிறார் ?” என்று கேட்டாள்.

அவள் கேட்டதும் நனவுலகத்துக்கு வந்தேன்.

தனலட்சுமி என் வீட்டில் சமீபத்தில்தான் ஒரு மாதமாக வேலைக்கு வர ஆரம்பித்திருக்கிறாள். சுறுசுறுப்பான வேலைக்காரி. வீட்டு வேலை செய்வது அவளுக்கு மெயின் வேலை என்றால் வீடு விற்பது வாடகைக்குப் பார்த்துக் கொடுப்பது அவளுக்குப் பார்ட் டைம் வேலை.

நீலாம்பிகை அவளிடம் வீடு விற்கப் பட்டாவில் பிரச்சனை இருக்கு என்று அதைப் பற்றி விவரித்தாள்.

”இது பத்தி யாராவது கவலைப் படுவார்களா? இது சின்ன விஷயம் ! என் கிட்டே விட்டுடுங்க. கொஞ்சம் பணம் செலவு ஆகும். எவ்வளவு என்பதை பிறகு கூறுகிறேன். . பதினைந்து நாள் டைம் கொடுங்க. நான் முடிச்சு தரேன். ஆனால் ஒரு கண்டிஷன்….

கவலையோடு இருந்த எனக்கு அவளிடமிருந்து வந்த பதில் வயிற்றில் பால் வார்த்தது போல் இருந்தது. திகைப்போடு அவளிடம் கேட்டேன்.

”தனலட்சுமி நீ என்ன சொல்றே? உன்னாலே முடியுமா? நிஜமாதான் சொல்றியா?”

”என்னாலே முடியும். என் கிட்டே பொறுப்பை ஒப்படைச்சுட்டு நீங்க நிம்மதியா இருங்க.”

”எதோ கண்டிஷன்னு சொன்னாயே….?”

”நா தான் வீட்டை விற்றுக் கொடுப்பேன். என்னுடைய கமிஷன் ஒரு பர்செண்ட். அதுக்கு சம்மதமானால் பட்டாவில் பிழையைச் சரி செய்யும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன்.”

தனலட்சுமி சாமர்த்தியக்காரிதான் என்று நினைத்துக் கொண்டே நீலாம்பிகையைப் பார்த்தேன். ”கொடுத்துடுங்கோ” என்று சைகையால் காட்டினாள்.

”சரி தனலட்சுமி. நீ எனக்குப் பட்டாவை மாற்றி வாங்கிக் கொடு. நீ சொன்ன கண்டிஷனுக்கு நான் ஒத்துக் கொள்கிறேன்” என்று கூறி விட்டு உள்ளே சென்று அலமாரியிருந்து மனுவின் நகலை எடுத்து வந்து ”இறைவா நீதான் ஒரு வழி காண்பிக்க வேண்டும்” என்று மனதிற்குள் பிரார்த்தனை செய்து விட்டு அவளிடம் கொடுத்தேன்.

அவள் போன பிறகு நீலாம்பிகை, ”நீங்க ஆறு மாசம் முயற்சி செய்தும் முடியாததைத் தனலட்சுமி எப்படியாவது சீக்கிரம் முடித்து விடுவாள் பாருங்கள். அவள் சாதாரண வேலைக்காரி கிடையாது. . இரண்டு சக்கர வாகனத்தில் வருவாள். வாட்ஸ் அப்பில் தினந்தோறும் ஸ்டேடஸ் போடுவாளாக்கும்” என்றாள்.

”எப்படியாவது முடித்துக் கொடுத்தால் சரி. இப்போதுதான் என் மனம் நிம்மதியாக இருக்கிறது” என்றேன்.

ரொம்ப நாள் கழித்து அன்றிரவுதான் நான் நிம்மதியாக உறங்கினேன்.

இரண்டு நாள் கழித்து தனலட்சுமி என்னிடம் பத்து ஆயிரம் ரூபாய் வாங்கிப் போனாள்.

நாட்கள் விரைந்து ஓடின. இரண்டு வாரம் கடந்து பதினைந்து நாட்கள் ஆகிவிட்டன. அன்று மாலை தனலட்சுமி வரும்போதே மலர்ந்த முகத்துடன் பட்டா ரெடி என்று கூறிக் கொண்டே வந்தாள்.

”நா தான் உங்களுக்கு வீட்டை விற்றுக் கொடுப்பேன். இந்தாங்க திருத்தி அமைக்கப் பட்ட பட்டா” என்று என்னிடம் ஒரு பேப்பரைக் கொடுத்தாள். அது என் தந்தை பெயர் மாற்றி எழுதப்பட்ட இணைய வழி பட்டா.

அதில் என் தந்தை பெயர் நடராஜன் என்று சரியாக இருந்த்து. சில நொடிகள் என் கண்கள் இமைக்க மறுத்தன. என்னுள் மறைந்திருந்த மகிழ்ச்சி என் முகத்தில் வெளிப்பட்டது.

”பிரமாதம் !” என்று உரத்த குரலில் சொன்னேன்..

சமையலறையிலிருந்து காபியுடன் வந்த நீலாம்பிகை, ”ரொம்ப தேங்ஸ் தனலட்சுமி. இந்தா இந்த காபியைக் குடி” என்றாள் மகிழ்ச்சியுடன்.

”எப்படி உன்னாலே முடிஞ்சது தனலட்சுமி” என்று வியப்புடன் கேட்டேன்.

’நா குடியிருக்கிற வீட்டுக்குப் பக்கத்திலே ஒரு தாசில்தார் வீட்டில் வேலை செய்யறேன். அவர் உதவியால் பட்டாவில் பிழை திருத்தம் செய்ய முடிந்தது.”

“அப்படியா, ரொம்ப சந்தோஷம்.. அந்த தாசில்தார் பெயர் என்ன?”

“அவர் பெயர் ஏகாம்பரம்.”

நான் மலைத்து போனேன்..

”பிரச்சனைகள் நிலைப்பதில்லை. எல்லாவற்றுக்கும் ஒரு வழி உண்டு..” என்னும் அனுபவ பாடத்தை கற்றுக் கொடுத்ததற்கு நன்றியோடு அவளை நோக்கினேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *